விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன் (40)
2321 மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ (41)
2322 கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம் (42)
2323 சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனம் மேய பூமி அதனைத் தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு (43)
2324 உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி (44)
2325 புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை (45)
2326 மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் (46)
2327 நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ (47)
2328 நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்?
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று? (48)
2329 செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து (49)
2330 சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் (50)
2331 அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து (51)
2332 எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று (52)
2333 முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள் (53)
2334 தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்
பெண் அகலம் காதல் பெரிது (54)
2335 பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம் (55)
2336 நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன்பொலிவு? (56)
2337 பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
2338 தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
2339 வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று 59
2340 பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக்
குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
2341 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர் 61
2342 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
2343 தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
2344 இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
2345 அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
2346 காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
2347 ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து 67
2348 பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
2349 வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் 69
2350 புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு 70
2351 களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71
2352 குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங் குமரர் கோமான் இடம் 72
2353 இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம் 73
2354 நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்
தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74
2355 சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு 75
2356 பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76
2357 ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப் போது நங்கட்கு அரண் 77
2358 அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே
ஓது கதி மாயனையே ஓர்த்து 78
2359 ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று 79
2360 நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80
2361 நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
ஓராது நிற்பது உணர்வு? 81
2362 உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி? 82
2363 இனி அவன் மாயன் என உரைப்பரேலும்
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் 83
2364 உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
கண்டார்? உகப்பர் கவி 84
2365 கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய்
செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில்? 85
2366 எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல
கார் வானம் காட்டும் கலந்து 86
2367 கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
அந்தி வான் காட்டும் அது 87
2368 அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து 88
2369 முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89
2370 சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்? 90
2371 மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் 91
2372 மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறைசெய்து என் நெஞ்சே நினை 92
2373 நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93
2374 உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து (94)
2375 புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து (95)
2376 வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த
அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித் தாமரை ஆம் அலர் (96)
2377 அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை? (97)
2378 இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு (98)
2379 தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு (99)
2380 சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண்
தேன் அமரும் பூமேல் திரு (100)