BY SAVUKKU · JUNE 29, 2018
26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார். இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது இயல்பு. ஆனால் தேய்மானம் குறையும் என்ற அளவுக்கு ஒரு முதல்வர் பேசும் அளவுக்கு ஏன் செல்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
சேலத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து, சக பத்திரிக்கையாளர்கள் இருவரை அழைத்தபோது, அவர்கள் வருகிறேன் என்று வாக்களித்தார்கள். 26 ஜுன் அன்று, திருவண்ணாமலையில், 8 வழிச் சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறை கைது செய்து, செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டு, பல மணி நேரம் கழித்து விடுவித்த செய்தி வெளியானதும், வருகிறேன் என்று கூறிய அந்த இரண்டு பத்திரிக்கையாளர்களுமே, கடைசி நிமிடத்தில் இந்த கைதுகளை சுட்டிக்காட்டி வர இயலாது என்று கூறியதோடு, என்னையும் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.
திட்டமிட்டபடி நான் மட்டும் தனியாக சேலத்துக்கு கிளம்பினேன். அதிகமாக விளைநிலங்கள் பாதிக்கப்படும் பகுதியாக அறியப்பட்ட, பகுதியான குப்பனூர் பகுதிக்கு சென்றேன். 16 மே 2018 அன்று முதன் முறையாக செய்தித்தாளில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிக்கையில் 21 நாட்களுக்குள், இந்த நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கையை பார்த்த உடனேயே, கிராம மக்கள், உடனடியாக மனு எழுதி தங்கள் எதிர்ப்புகளை வருவாய் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
முதலில் வருவாய்த் துறை அதிகாரிகள் வருகை தந்தது, ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்துக்கு. அந்த 21 நாட்கள் முடிந்த 6 ஜுன் அன்றே அதிகாரிகள் அளவு கற்களை நட வருகின்றனர்.
உடனடியாக கிராமத்தினர் ஒன்று கூடி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே எப்படி நீங்கள் கற்களை நட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் விளை நிலங்களில் கற்களை நட வரவில்லை. அரசு நிலத்தில்தான் கற்களை நட வந்துள்ளோம் என்று பம்மிய அதிகாரிகள், உடனடியாக மதியம் 2 மணிக்கு தண்ட்டோரா போட்டு, அன்று மாலை 5 மணிக்கே கூட்டம் என்று அறிவிக்கின்றனர்.
கிராமத்தினர் அனைவரும் கூடி, சுமார் 40 பேர், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று மனு எழுதி ஆர்டிஓ மற்றும் தாசில்தாரிடம் அளிக்கின்றனர். இது நடப்பது ஜூன் 6 அன்று. இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. அந்த விவகாரங்கள் குறித்து, குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் பேட்டியளிக்கிறார்.
8 ஜுன் அன்று காலை 4 மணிக்கு, நாராயணன், ரவி, பழனியப்பன், முத்துக்குமார், பழனியப்பன், கந்தசாமி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இதில் ரவி, பழனியப்பன், கந்தசாமி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் காலை 7 மணிக்கு விடுவிக்கப்படுகின்றனர். கிராம மக்கள் ஒன்று கூடி, நாராயணன் மற்றும் முத்துக்குமார் வைக்கப்பட்டிருந்த அம்மாபேட்டை காவல் நிலையத்தை நோக்கி செல்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறுகிறன்றனர். மதியம் 2 மணிக்கு நாராயணன் மட்டும் விடுவிக்கப்படுகிறார்.
அது வரை நாராயணனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணை என்னவென்றால், எந்த நக்சல் இயக்கத்தோடு அவருக்கு தொடர்பு ? யார் அவருக்கு ஹேன்ட்லர் (தொடர்பாளர்), இடது சாரிகள் இயக்கத்தில் அவருக்கு என்ன பொறுப்பு உள்ளிட்டவை.
முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. என்ன வழக்கு தெரியுமா ? காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடிபோதையில் முத்துக்குமார், நான் ரவுடி டா என்று கத்தியவாறே, பேருந்து கண்ணாடிகளை உடைக்க முற்பட்டபோது, அவர் கைது செய்யப்பட்டார் என்பதே அந்த வழக்கு.
அளவு கற்கள் நடுகையில் அந்த இடத்தில் இருந்த வெங்கடேஷ் பேசுகையில், “ஒவ்வொரு நாளும் மிகுந்த அச்சுறுத்தலிலேதான் வாழ்கிறோம். எங்கள் வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்பதை காவல்துறையினர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு எழுதினால் கூட, அதில் என்ன இருக்கிறது என்பதை முன்னதாகவே கூற வேண்டும் என்று காவல் துறையினர் நிர்பந்திக்கிறார்கள்.
கடந்த வாரம் அளவுக் கற்கள் நட வந்தபோது கூட, எங்களில் யாரையுமே பேச விடவில்லை. யாராவது பேசினால், இது உன் நிலமா ? நிலத்தின் சொந்தக்காரர் மட்டுமே பேச வேண்டும் என்று கூறி, வேறு யார் பேசினாலும், உடனே காவல் துறையை வைத்து, கைது செய்து ஜீப்பில் ஏற்றி விடுகிறார்கள். அளவு முடிந்ததும் ஜீப்பில் இருந்து இறக்கி விடுகிறார்கள். இது என்ன ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா ?” என்றார்.
அவரே தொடர்ந்து “திருவண்ணாமலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அது ஒரு அரங்கக் கூட்டம். முதலில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தை காவல்துறை மிரட்டி ரத்து செய்த்து. அந்த ஊரில் இருந்த பல திருமண மண்டபங்களை அணுகினோம். காவல்துறை மிரட்டல் காரணமாக அனைவரும் மறுத்து விட்டனர்.
பிறகு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள், ஷாமியானா போட்டு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஷாமியானா போடும்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இறுதியாக திருவண்ணாமலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடைபெற்றபோது, கூட்டத்துக்கான இடம் மாற்றப்பட்டது தெரியாமல், கிராமத்தினர் 25 பேர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு வந்தனர். வந்த 25 பேரையும் காவல் துறை கைது செய்தது. எங்கள் கூட்டம் முடிந்ததும், நாங்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்னரே, அந்த 25 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஏன் இத்தகைய நெருக்கடி நிலை போன்ற சூழலை அரசு உருவாக்குகிறது ? அப்படி இந்த திட்டத்துக்கு என்ன அவசரம் ?” என்றார் வெங்கடேஷ்.
அரசு கையகப்படுத்த இருந்த நாராயணனின் நிலம் மற்றும் வீட்டின் நேர் வழியே 8 வழிச் சாலை செல்கிறது. சாலையின் இரு மருங்கிலும் 4 சென்ட்டுகள் நிலம் மட்டுமே அவருக்கு மிஞ்சும். பசுமை கொஞ்சும் சோலையாக இருக்கிறது அந்த நிலம். கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகள் கட்டிப் போடப்பட்டிருந்தன. தென்னை மரங்கள் காற்றோடு சேர்ந்து ஒயிலாக ஆடிக் கொண்டிருந்தன.
எங்களுக்கு இந்த வீடும் நிலமும் மட்டுமே வாழ்வாதாரம் என்றார் நாராயணன்.
நாராயணனின் வீட்டுக்கு அருகே இருப்பவர் எஸ்.கே.கிருஷ்ணன். இவர் வயது முதிர்ந்த நாடகக் கலைஞர். இவருக்கு நிலம் போகிறதே என்ற பிரக்ஞை இல்லை. இந்த இடத்துக்கு இவர் வந்த்து எழுபதுகளில். சேலம் இரும்பு உருக்காலைக்கு இடம் எடுக்கப் போகிறார்கள் என்று பயந்துபோய் அதனருகே இருந்த இவரது பல ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு, குப்பனூர் கிராமத்தில் நிலம் வாங்கி இருந்து வருகிறார்.
தற்போது இந்த இடமும் போகப் போகிறதே என்பதை விட, அவருக்கு தனது பழைய நாடகங்களைப் பற்றி பேசுவதில் அத்தனை ஆர்வம். கஞ்சமலை காவியம், என்று அவர் எழுதி நடித்த 68 நாடகங்களைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். தற்போது திரைப்படத்தில் பிரபலமாக உள்ள ரோபோ சங்கரின் தந்தையும், இவரும் ஒன்றாக நாடகம் போட்டவர்கள்.
அவரிடம் உங்கள் நிலம் எவ்வளவு போகிறது என்று கேட்டபோது, “எல்லாம் போகிறது. அதோ அந்த கிணறில் பாதி போகிறது” என்றார். பாதி கிணறை வைத்து என்ன செய்வீர்கள் என்றதற்கு, சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் நாடகக் கதைக்கே வந்து விட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் பேசுகையில், “நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் இல்லை. வளர்ச்சித் திட்டங்கள் அவசியமே என்பது எங்களுக்கும் தெரியும். நாம் இப்போது அமர்ந்து பேசும் இந்த இடத்தில்தான் 8 வழிச்சாலை வருகிறது. இந்த இடத்திலிருந்து 500 மீட்டரில்தான், சேலம்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, 4 வழிச் சாலையாக மாற்ற ஒரு வருடம் முன்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தற்போது உள்ள சாலையின் இரு மருங்கேயும் நிலத்தை கையகப்படுத்த கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பகுதியில் கடைகள் மற்றும் வீடுகள் வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
அவர்களில் பலர் நிலத்தை கையகப்படுத்த சம்மதம் தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்தெந்த கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்பது கண்டறியப்பட்டு அந்த கட்டிடங்களில் எண் பொறிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டுகளை கடந்தும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேயில்லை.
நாம் இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டரில் இருக்கும் சாலையை அகலப்படுத்துவது எளிதான காரியம்தானே ? அதை விடுத்து எதற்காக விளைநிலங்களை அழித்து புதிய சாலையை உருவாக்குகிறார்கள் ?” என்று கேள்வி எழுப்பினார் செல்வராஜ்.
அவரே தொடர்ந்து, தற்போது அமைய உள்ள 8 வழிச்சாலைக்கு வலது புறம், 600 மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல தேவைகளுக்கு சாலையை கடந்துதான் வர வேண்டும். 8 வழிச் சாலை அமைக்கப்பட்டால், இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மஞ்சவாடி அருகே அமையப் போகும், அடிப் பாலம் வழியாகத்தான் சாலையை கடக்க வேண்டும். தற்போது இது வெறும் 500 மீட்டர்.” என்றார்.
நாராயணனின் தந்தை செவத்தராஜன், “புது ரோடு போட்டு, ஆயிரக்கணக்குல வண்டிங்க போச்சுன்னா, ரோடுக்கு ரெண்டு பக்கமும் எப்படி விவசாயம் செய்ய முடியும் ? இந்த புகையில் மகரந்தச் சேர்க்கையே நடைபெறாதே. பிறகு எப்படி விவசாயம் செய்ய முடியும் ?” என்றார்.
ஆச்சாங்குட்டப்பட்டியில் வசிப்பவர் சிலம்பரசன். இவர்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. செழிப்பாக விளையும் பூமியில் நெல் பயிரிடுகிறார்கள். எங்களிடம் கிணறு இருக்கிறது. நாங்கள் போர் கூட போடாமல் கிணற்று நீரில்தான் விவசாயம் செய்கிறோம் என்று பெருமையோடு கூறினார். இவர்களின் வீடு, சேலம்-திருப்பத்தூர் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது.
“நாங்க வளர்ச்சி வேண்டாங்கல சார். இதோ இந்த ரோட்டை அகலப்படுத்துறதுக்கு என்ன சார் கேடு இவங்களுக்கு. தெனமும் லாரிக்காரன் கன்னா பின்னான்னு வேகமா போயி அடிக்கடி ஆக்சிடன்ட் ஆகுது. இந்த ரோட்டை 4 வழிச்சாலையா போட்டா, எங்க வீடு அடிபடும். ஆனா பரவாயில்ல. எங்களுக்கும் அந்த ரோடு உபயோகமா இருக்கும்.
வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்றாங்களே. சென்னையில இருந்து மதுரை வரைக்கும் 4 லேன் இருக்கு. பெங்களுர் வரைக்கும் 4 லேன் இருக்கு. இந்த ரோடுங்க பத்து வருசத்துக்கு மேல இருக்கு. என்ன சார் தொழில் வளந்துடுச்சு இந்த பத்து வருசத்துல ? ” என்றார்.
அவர் சொல்வது உண்மைதானே ? இந்த சாலைகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றன. என்ன தொழில் வளம் பெருகி விட்டது தமிழகத்தில் ? 1996-2001 திமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூரில் உருவான தொழிற்சாலைகளுக்கு பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரே ஒரு தொழிற்சாலைகள் கூட தமிழகத்தில் உருவாகவில்லை. பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலை தவிர்த்து. அந்த தொழிற்சாலையும் ஆ.ராசாவின் முயற்சியால் உருவானது. இந்த 18 ஆண்டுகளில் உருவாகாத எந்த தொழிற்சாலை இந்த புதிய 8 வழிச் சாலையால் உருவாகப் போகிறது ?
சிலம்பரசனின் தாயார் அமுதா பேசுகையில் “6 தலைக்கட்டா விவசாயம் பாத்துக்குட்டு இருக்கோம் தம்பி. எங்களுக்கு விவசாயத்தை தவிர எதுவுமே தெரியாது. என் கையைப் பாருங்க எப்படி காப்பு காய்ச்சி கிடக்கு. இதுதான் எங்களுக்கு தொழில். இதுதான் எங்களுக்கு தெய்வம். இதை எப்படி தம்பி நாங்க விட்டுட்டுப் போக முடியும்.
அரசாங்கம் இயற்கை விவசாயம் பண்ணுங்கன்னு சொல்லுது. நாங்களும் இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதை விட்டுட்டு போங்கன்னு இப்போ அரசாங்கமே சொன்னா அது என்ன நியாயம் ? ” என்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் போதுமான இழப்பீடு வழங்கப்படும். கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறுகிறாரே என்பதை சுட்டிக்காட்டியதும் அமுதா ”அந்த அம்மா விவசாய நிலம் கொஞ்சம்தான் இருக்கு. எல்லா விவசாயிகளும் இதுக்கு ஒத்துக்குறாங்கன்னு கூசாம பொய் சொல்லுது. நாங்க அத்தனை பேரும் இந்த திட்டத்தை எதுக்குறோம். எங்களை மாதிரி விவசாயிங்க ஒரு நாளும் நிலத்தை விட்டுக் குடுக்க மாட்டாங்க.
அந்த அம்மா சொல்றபடி, விவசாயிகள் தாங்களாவே நிலத்தை தர்றாங்கன்னா எதுக்காக 500 போலீசோட வர்றாங்க. தனியா வர வேண்டியதுதானே ?” என்றார்.
தொடர்ந்த அமுதா, “அதிகாரிங்களை கேட்டா, எந்த நிலம், எவ்வளவு நிலம் தேவைப்படுதுன்றதை தெரிஞ்சிக்கறதுக்காகத்தான் நாங்க கல்லு நடுறோம்னு சொல்றாங்க. எந்த நிலம்னே தெரியாம பேப்பர்ல எப்படி நிலத்தை பத்தி விளம்பரம் குடுத்தாங்க. சர்வே நம்பர் உட்பட, எது அரசு நிலம், எது தனியார் நிலம்னு தெளிவா விளம்பரம் குடுத்துருக்காங்க. நிலம் எதுன்னு தெரியாமத்தான் விளம்பரம் குடுத்தாங்களா” என்று கேள்வி எழுப்பினார் அமுதா.
சேலம் மாவட்ட நில ஆர்ஜித வருவாய் அதிகாரி நில உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ள சுற்றறிக்கையின்படி, சேலம் 8 வழிச் சாலைக்கான நில ஆர்ஜிதம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், 10 ஜுலை 2018, காலை 10 மணிக்கு, வாழப்பாடி வட்டம், அயோத்தியாப்பட்டினம், கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நில ஆர்ஜிதம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டமே 10 ஜுலை அன்றுதான் நடைபெற உள்ளது.
ஆனால் எட்டப்பர் எடப்பாடி எதற்காக 80 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டது என்று சட்டப்பேரவையில் கூசாமல் பொய் சொல்கிறார் ?
அடுத்து ஒரு கிராமத்துக்கு சென்றபோது, அவர்கள் புதிதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள்.
சேலம்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரகன் செருப்புத் தொழிற்சாலை, திமுக பிரமுகரின் எஸ்ஆர்எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் மன்னர்பாளையத்தில் அதிமுக பிரமுகரின் க்ரஷர் தொழிற்சாலை ஆகியவை இடிபடாமல் தடுப்பதற்காகவே விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்றார்.
பாரகன் செருப்புத் தொழிற்சாலை சேலத்திலிருந்து திருப்பத்தூர் செல்கையில் சாலையின் வலதுபுறம் அமைந்துள்ளது. தற்போது 8 வழிச் சாலைக்காக பாரகன் தொழிற்சாலையின் நேர் எதிரில் உள்ள ஒரு தனியார் தோட்டம் மற்றும் வன நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அது வரை, இச்சாலையின் இடதுபுறம் வரும் 8 வழிச்சாலை, சரியாக, அச்சநாங்குட்டப்பட்டி வந்ததும், சாலையின் வலதுபுறம் சரியாக விளைநிலங்களின் ஊடே திரும்புகிறது.
இந்தத் தகவலை சொன்னவர், மற்றொரு தகவலையும் கூறினார். சேலத்திலேயே பிரபலமான சாகோ தொழிற்சாலை வரலட்சுமி ஸ்டார்ச் இன்டஸ்ட்ரீஸ். 1984ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது இந்நிறுவனம். சேலத்திலேயே நம்பர் ஒன் சாகோ நிறுவனம் இதுதான். இந்த நிறுவனத்தை எடப்பாடி பழனிச்சாமி தனது பினாமி மூலமாக வாங்கி விட்டதாக தெரிவித்தார் அவர். இத்தகவலை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்னர், இந்நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொடர்பாக பெரிய சிக்கல் எழுந்தபோது விஷயம் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது நிர்வாகத்துக்கு சாதகமாக தொழிலாளர்கள் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார் என்ற தகவலை, இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவர் உறுதி செய்தார்.
இந்த வரலட்சுமி சாகோ தொழிற்சாலை அடிபடாத வகையில் 8 வழிச்சாலைக்கான பாதை திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சேலத்திலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது வரலட்சுமி சாகோ தொழிற்சாலை. அத்தொழிற்சாலையில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, பேச மறுத்தார்கள்.
சேலம் திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது. 23 நவம்பர் 2017 அன்று, மாநில நெடுஞ்சாலைகள் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த சாலையை மேம்படுத்துவதற்காக 22 கோடி நிதியை கேட்டு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பராமரிப்புக்காக 22 கோடியை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, இச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையில்லை.
அந்த சாலையில் பாப்பிரெட்டிப்பட்டியை நோக்கிப் பயணிக்கையில் வழி நெடுக, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 8 வழிச் சாலைக்காக அளவீடு செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, வெறும் 60 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே கையகப்படுத்தப் படப்போகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது பச்சைப் பொய் என்பது. அந்த சாலையில் இருமருங்கிலும் வனமே உள்ளது. அது மலையடிவாரம். அந்த மலையை ஒட்டித்தான் 8 வழிச் சாலைக்கான பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரி கிராமத்துக்கு சென்றேன். பாரப்பட்டி, பூலாவரி, பிஞ்சிக்காடு ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
பிஞ்சிக்காடு கிராமத்தில் உள்ளவர் லட்சுமி. அவருக்கு அரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளது. அதன் அருகிலேயே வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.
அச்சநாங்குட்டப்பட்டியைப் போல இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை.
லட்சுமி அவருக்கு உள்ள அந்த நிலத்தில் அரளிப் பூ பயிரிட்டுள்ளார். அதில் மாதம் 8 ஆயிரம் வருமானம் வரும் என்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். அந்த வருமானம் போதுமா என்று கேட்டால், இரவு நேரத்தில் பூ பறிப்பேன். பகலில் கோல மாவு அரைக்கும் வேலைக்கு செல்வேன் என்று கூறினார்.
அவரது வீடு நிலம் முழுமையாக போகப் போகிறது என்பது அவருக்கு தெரிகிறது. ஆனால் அது குறித்த கோபம் அவரிடம் இல்லை. ஏன் கோபம் வரவில்லை என்றால் “என்னா சார் பண்றது. கவுருமென்டு எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும் ?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
லட்சுமியின் வீட்டுக்கு நேரெதிரே 65 வயதான சித்த நாயக்கரின் நிலம் மற்றும் வீடு இருக்கிறது. அவரின் நிலத்தில் கால் பகுதி 8 வழிச் சாலைக்காக எடுக்கப்பட்டு விடும். அவருக்கு ஒரே ஒரு மகன். என்னை பார்த்ததும் “என்னய்யா சாப்புட்றீங்க” என்று வெள்ளந்தியாக கேட்டார். உங்கள் நிலத்தில் கால் வாசி போய் விடும் என்று கூறியதும், “அதான் மீதி நெலம் இருக்குல்ல. அதுல வெள்ளாம பண்ணுவேன்” என்றார். நீங்கள் நிற்கும் இடத்தின் அருகே சாலை வரப் போகிறது. அந்த சாலையை நீங்கள் கடக்க முடியாது. எதிர் புறம் செல்ல வேண்டுமென்றால், 4 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்று கூறியதும் அவருக்கு அதிர்ச்சி. ”என்னய்யா சொல்றீங்க. அதுக்கு எதுக்கு 4 கிலோ மீட்டர் போகணும்” என்றார். தடுப்புச் சுவர் அமைக்கப்படும் உங்களால் சாலையை கடக்க முடியாது என்றதும் அவர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
உங்க எம்எல்ஏகிட்ட கேட்டீங்களா என்று கேட்டதும், ”அவங்க கால்ல கூட விழறேன்னு சொல்லிப் பாத்துட்டேன். அரசாங்கம் சொன்னா கேக்கணும்னு சொல்லிட்டாங்க” என்றார். ”உங்க கால்ல கூட விழறேன். ஏதாவது பண்ணுங்க” என்றார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சென்ற பல கிராமங்களில் இருந்தவர்களில் ஒருவரிடம் வெளிப்படையாக கேட்டேன். எப்படியும் அரசாங்கம் உங்க நிலத்தை எடுத்துக்கத்தான் போகுது. என்ன பண்ணுவீங்க என்றதற்கு, “சார். இது எங்க உயிரு. இதை எடுக்க விடவே மாட்டோம்“ என்றார். தூத்துக்குடியில நடந்தது மாதிரி சுடுவாங்க. என்ன பண்ணுவீங்க என்றேன். “எத்தனை பேரை சார் சுடுவாங்க. இத்தனை கிராமத்துல உள்ள அத்தனை பேரையுமா சுடுவாங்க. சுடட்டும் சார். எங்க பொணத்து மேல ரோடு போடட்டும். என் உயிரு போனாலும் இந்த நெலத்தை எடுக்க விடவே மாட்டேன்“ என்றார். அந்த கிராமத்தின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்த காரணத்தை நான் சொல்லவேண்டியதில்லை. இன்றே காவல்துறையினர் அந்த கிராமத்தில் திடீர் நக்சலைட்டுகளை கண்டுபிடிப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த 8 வழிச்சாலை திட்டம் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மக்கள் விரோத திட்டம். இத்திட்டத்தை எதிர்ப்பதற்காக, என் முழு உழைப்பையும் நான் செலவிடுவேன். இந்த மக்களோடு நான் என்றும் நிற்பேன்.
எடப்பாடி பழனிச்சாமியைப் போன்ற எத்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த எத்தர்களைப் பற்றித்தான் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
யார் கொள்ளைக்காரன் என்பதை சொல்லவும் வேண்டுமா ?
ஸ்டெர்லைட்டுக்காக நடந்த உயிர்பலியின் துயரம் மறைவதற்குள், அடுத்த வாழ்வாதாரப் பிரச்னைக்காகப் போராடுவதற்குத் தயாராகியிருக்கின்றன, தமிழகத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள். `சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து `நிலமும், வீடும், கால்நடைகளும் போன பிறகு வாழ்க்கை என்ன வாழ்க்கை?’ என்னும் கேள்வியுடன் போராடும் விவசாயிகளிடம், தங்களின் வழக்கமான அதிகார அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது காவல்துறை.
நில உரிமையாளர்களில் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே நிலத்தைத் தருவதற்கு மறுத்துவருவதாக அரசுத்தரப்பு தகவல் அளிக்கும் நிலையில், களத்தில் விவசாயிகளின் மனநிலை, வேறுவிதமாக இருக்கிறது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, காளியாப்பேட்டை, மாளகாப்பாடி, எம்.தாதம்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, மஞ்சவாடி இருளப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் பேசியபோது, மண்ணைக் காப்பாற்றத் துடிக்கும் அவர்களில் ஒருவர்கூட, எவ்வளவு அதிகமான தொகைக்கும் நிலத்தைத் தரத் தயாராக இல்லை என்பது புரிந்தது.
நிலங்களின் ஒவ்வொரு மூலையிலும் நட்டுவைக்கப்பட்டிருக்கும் கறுப்புக் கொடிகள், விவசாயிகளின் மனக்கசப்பைச் சொல்லிக்கொண்டிருந்தன. அரியனூர் தொடங்கி மஞ்சுவாடி கணவாய் வரையிலான 37 கிலோமீட்டர் தூரமும், செழித்து வளர்ந்திருக்கும் பாக்கும், தென்னையும், நெற்பயிரும்தான் தங்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்துகிறார்கள்.
சென்ற 21-ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா இருளப்பட்டி பகுதியில் நிலங்களை அளவீடு செய்து கல் நடுவதற்கு வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ``கல் நட வேண்டாம்'' என்று கேட்டிருக்கிறார் நிலத்தின் உரிமையாளர் சந்திரகுமார். வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்துகொண்டே இருக்கையில், தன் மீதும் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துவிடுவதாக எச்சரிக்கை செய்திருக்கிறார் சந்திரகுமார்.
நம்மாழ்வாரை ஆதர்சமாகக் கொண்டவரான சந்திரகுமாரைச் சந்தித்து, ``அளவீடு நடத்த சம்மதித்தீர்களா?'' என்று கேட்டோம்.
``எரிஞ்சு சாவணும்கிற மனநிலையிலதான் இருந்தோம். சும்மா அரசாங்கத்தை மிரட்டுறதுக்காக இதை நாங்க சொல்லலை. எந்த ஒரு பச்சையும் கொடியும் வளரணும்னா ஒரு விதை வேணும்” பக்கத்தில் நிற்கும் மரத்தைக் காட்டி, ``யார் போட்ட விதையாலோதானே இந்த மரம் நிழல் குடுக்குது. எங்களையே எரிச்சிக்கத் தயாராதான் இருந்தோம். இந்தத் திட்டத்தை நிறுத்துறதுக்கு நாங்களே விதையா இருந்துட்டுபோறோமே” என்றவர் சமநிலை இழந்து பதற்றமடைந்தார்.
தேற்றிப் பேசவைத்ததும், ``காலையில 5 மணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளும் போலீஸ்காரங்களும் வந்தாங்க. நில அளவீட்டுக்கு போலீஸ் எதுக்கு வருது? இந்த மாவட்டத்துல, ஒரு விவசாயிகூட நிலத்தைக் கொடுக்கத் தயாரா இல்லை. நாங்க என்ன திருட்டு நிலத்தையா வெச்சிருக்கோம்? எங்கக்கிட்ட எதையும் கலந்து பேசாம, இது என்ன கூத்து? காலையில 5 மணிக்கு பேட்டரி அடிச்சிக்கிட்டு வந்து, நில அளவீடு செய்ற இந்த அரசாங்கத்தை நாங்க எப்படி நம்புறது?” என்றார் சந்திரகுமார்.
வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அவர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதாகவும், மாடுகளை வைத்துத் தாக்க முயன்றதாகவும் தன்மீது மூன்று வழக்குகள் பதிந்திருப்பதாகச் சொல்கிறார் சந்திரகுமார். இவரின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து போலீஸார் அச்சுறுத்துவதாகக் கூறுகிறார்கள், சந்திரகுமாரின் உறவினர்கள்.
``போலீஸ்காரங்க என்னைக் கூப்பிட்டு, நான் தமிழ்நாட்டையே அவமானப்படுத்திட்டேன்னு சொல்றாங்க. விவசாயிங்க தீக்குளிச்சுச் செத்தா, உங்களுக்கு என்ன அவமானம்? நாட்டோட தலைநகரத்துல, விவசாயிங்க அம்மணமா ஓடினப்ப, அதை நினைச்சு உங்களுக்கு அவமானமா இல்லையா? என் நிலத்தை, என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க நான் போராடினா, உங்களுக்கு அவமானமாத் தெரியுதா? விடியற்காலையில நிலத்தை அளவீடு செஞ்சுப் புடுங்கிட்டுபோற அரசுதான் குற்றவாளி. மிரட்டி மிரட்டி நிலத்தை அளவீடு செஞ்சுட்டாங்க. ஆனா, என் நிலத்தை என் உயிர் போனாதான் என்கிட்டேருந்து வாங்க முடியும்” என்றார்.
சேலம் 8-வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஏன் கை விடவேண்டும்? நித்தியானந்த் ஜெயராமன் ஆகிய நான் ஒரு விவசாயியாக இருந்தால் எழுதும் கடிதம் இது.
சேலம்-சென்னை நகரங்களை இணைக்கதான் அமைக்கவிருக்கும் 8 வழி நெடுஞ்சாலைக்கென திருவண்ணாமலை மாவட்டத்தில் 1306 ஹெக்டேர்கள் (3227 ஏக்கர்கள்) பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தப் போவதாக ஜூன் 11, 2018 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கெஜட் அறிவிப்பின் மூலமாக, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தைப் பின்பற்றி, அறிவித்தது.
நிலங்களை கையகப்படுத்துவதற்காக அவை அளக்கப்பட்டு சுற்றாய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடைபெற்ற கைதுகளின் மூலமாகதான் பல விவசாயிகள் இந்தத் திட்டம் பற்றி அறிந்தனர். இந்தத் திட்டத்தின் சாதகபாதகங்கள் குறித்து எந்தவித தகவல்களும் அவர்களிடத்தில் இல்லை என்று துணிந்து கூறலாம்.
நான் விவசாயியாக இருந்து எனது நிலம் கையகப்படுத்தப்படுமேயானால் அறிவுக்கு ஒவ்வாத வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகளை பெரும் ஏமாற்றமளிப்பதாகவே உணர்வேன். ஆனால், எனது ஏமாற்றம் என்பது முக்கியமல்ல. இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறேன் என்பதை அடுத்த 21 நாள்களுக்குள் நான் மாவட்ட சிறப்பு வருவாய்த் துறை அதிகாரியிடத்தில் தெரிவிப்பதும், எனது ஆட்சேபனைகளை தெளிவுற முன்வைப்பதும்தான் முக்கியமாகும்.
நான் விவசாயியாக இருந்தால் இத்தகைய கடிதத்தைதான் எழுதுவேன்.
அன்பு அரசாங்கத்துக்கு
சேலம் - சென்னை நகரங்களை இணைக்க நீங்கள் அமைக்கவிருக்கும் 8 வழி பசுமை நெடுஞ்சாலைத் திட்டத்தினால் நிலத்தை இழக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் நானும் ஒருவன். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள கெஜட் அறிக்கை S.O. 2377(E) )க்கு எனது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் கடிதம் இது.
ஒரு விவசாயிக்கும் அவரது நிலத்துக்கும் உள்ள உறவு பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இதுகுறித்தோ, விவசாயியின் நிலம் அபகரிக்கப்பட்டால் அவரின் ஒரு பகுதி செத்து விடும், அவரும் அவரின் குடும்பமும் முன்போல இருக்க வாய்ப்பில்லை என்பது குறித்தோ நான் பேசப்போவதில்லை. நிலம் என்பது எக்காலத்துக்குமானது. நீங்கள் வழங்கவிருக்கும் இழப்பீடு, அது எவ்வளவு கணிசமானதாக இருந்தாலும், வெகு விரைவில் கரைந்து விடும்.
அண்மையில் நிலத்தை மாசுப்படுத்தியதற்காக ஒரு பெரும் தொழிற்சாலை பூட்டப்பட்டப்போது பலர் வேலைவாய்ப்பை இழந்துவிடுவர் என்றும் இந்தியாவின் செம்புத் தேவைகள் (copper needs) இனி எவ்வாறு நிறைவேற்றப்படும் என்றும் சிலர் அங்கலாயித்தனர். நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்படும்போது பலரின் பிழைப்புக்கு இடம் இல்லாமல் போகும் என்று கணக்கிட்டுப் பார்க்க உங்கள் திட்டத்தில் இடமில்லை என்பதை அறிவேன். தொழில் வளர்ச்சிக்கும் கட்டுமான அடிப்படைகளை தயாரிக்கவும் விளைநிலங்கள் கையகப்படுத்தும்போது இந்தியாவின் உணவுத் தேவைகளை யார் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கவலையோ அங்கலாய்ப்போ உங்களுக்கு இருக்காது என்பதும் எனக்குத் தெரியும்.
நீங்கள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் இவைக் குறித்தெல்லாம் நான் இங்கு பேசப் போவதில்லை. அப்படியே பேசினாலும் குடியானவன் ஒருவனின் உணர்ச்சிவயப்பட்ட பிதற்றுதல்களாகவே அவற்றை நீங்கள் கொள்வீர்கள். எனவே, நிலத்தை கையகப்படுத்த நீங்கள் மேற்கொண்டுள்ள வழிமுறையானது அடிப்படையிலேயே சட்டத்துக்குப் புறம்பானது, ஏமாற்று வேலையானதாக உள்ளது என்பது குறித்து மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.
8 வழிச் சாலையை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கீழ்க்கண்ட 10 காரணங்களுக்காக நான் ஆட்சேபிக்கிறேன்.
1. இந்தத் திட்டம், அதன் ஒழுங்கமைவு (alignment) சாதகபாதகங்கள் குறித்து எனக்கு எந்த புரிந்துணர்வும் (awareness) வழங்கப்படவில்லை. இந்தத் திட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில், இதற்காக நான் எனது நிலத்தை வழங்கிவிட வேண்டும் என்பது மட்டுமே எனக்கு சொல்லப்பட்டது.
2. இந்தத் திட்டம் எத்தகைய சமூக, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து எந்த புரிந்துணர்வும் எனக்கு வழங்கப்படவில்லை. எனது நிலத்தின், எனது கிராமத்தின் ஒரு பகுதியை மட்டும் இந்தத் திட்டம் கைக்கொண்டாலும், திட்டத்தின் ஒழுங்கமைவு எல்லைகளுக்கு அப்பாலும் இதன் சமூக, சுற்றுசூழல் பாதிப்புகள் இருக்கக்கூடும்.
3. இந்தத் திட்டத்துக்கான இயலுமை ஆய்வு /சாத்தியக்கூறாய்வு (feasibility study) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த இயலும் என்ற முடிவுக்கு ஏமாற்றுவாதங்களை முன்வைத்தே (malafide intent) அது வந்தடைந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு, அதைச் செயல்படுத்தத் தேவையான காலநேரம், இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஆகியவற்றை தவறான அடிப்படைகளில் இந்த ஆய்வு நியாயப்படுத்தியுள்ளது.
4. இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக நிறைவேற வேண்டுமானால் சமூகரீதியாகவும் சூழலியல்ரீதியாகவும் அது சாத்தியப்படக்கூடியதாக இருக்க வேண்டும். காரணம் சமூக எதிர்ப்பும் ஏற்பும்தான் குறிப்பிட்டத் திட்டம் நிறைவேறுமா அல்லது ஒன்றுமில்லாமல் போகுமா என்பதைத் தீர்மானிக்கும். இந்தத் திட்டத்துக்கான நிதித்தேவை, இதன் பொருளாதார, தொழில்நுட்ப நியாயங்கள் ஆகியன குறித்த கறாரான மதிப்பீட்டின் அடிப்படையில்தான் இயலுமை ஆய்வறிக்கை அமைந்துள்ளது என்றும், இத்திட்டத்தின் சூழலியல் பாதிப்பு, முதல்கட்ட சமூகபாதிப்பு குறித்த தொடக்கநிலை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அதுவுமே சமூக, சூழலியல்ரீதியாக இது மேற்கொள்ளத்தக்கத் திட்டம்தான் என்பதை உறுதி செய்துள்ளது என்றும் இயலுமை அறிக்கை தவறாக அறிவித்துள்ளது.
5. கிராம அளவில் என்னைப் போன்ற நிலத்தை இழக்கவிருக்கும் விவசாயிகளுடன் பொது கலந்தாய்வுகள் (consultations) மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மாவட்ட அளவில் இதன் சமூக பாதிப்பு குறித்த மதிப்பீடு செய்யப்படுகையிலும் இத்தகைய கலந்தாய்வுகள் நடைபெற்றன என்றும் இயலுமை அறிக்கை தவறாக குறிப்பிடுகிறது. இந்தக் கலந்தாய்வுகள் குறித்த விவரங்கள், குறிப்பாக அவை நடைபெற்றதாகச் சொல்லப்படும் கிராமங்களின் பெயர்கள், கலந்தாய்வு நடத்தப்பட்ட தேதிகள் ஆகியன குறித்த எந்தத் தகவல்களும் வழங்கப்படவில்லை.
6. என்னையோ என் கிராமத்தைச் சேர்ந்த பிற விவசாயிகளையோ யாரும் அணுகவில்லை, எங்களைக் கலந்தாலோசிக்கவுமில்லை, இந்தத் திட்டம் குறித்த எங்களின் கருத்துகளை யாரும் கேட்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருப்பார்களேயானால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஏன், எதன் அடிப்படையில் எதிர்க்கிறோம் என்பது குறித்த தகவல்கள் திட்ட அறிக்கையில் பதிவாகியிருக்கும்.
7. இந்தத் திட்டத்தின் ஒழுங்கமைவானது மிகப் பொருத்தமானது என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாக இயலுமை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய முடிவுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாகக் கொள்ள முடியாது. காரணம், மாற்று ஒழுங்கமைவுத் திட்டங்கள் குறித்த கறாரான ஆய்வும், இருக்கக்கூடிய மாற்றுவழிப் பாதைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளோ விவரங்களோ திட்ட அறிக்கையில் இடம் பெறவில்லை.
8. நிலங்களைக் கையகப்படுத்தல், மாற்று வசிப்பிடங்களை வழங்குதல், நிவாரணம் வழங்குதல் குறித்த மத்திய சட்டம் 2013-ன் கீழ் அல்லாது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. நிலவுரிமையாளன் என்ற வகையில் எந்தத் திட்டத்தின் கீழ் எந்த அதிகாரத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு முக்கியமல்ல. கைக்கொள்ளப்படும் வழிமுறையானது மனிதத்தன்மை வாய்ந்ததா (humane), மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறதா (participatory), திட்டம் சம்பந்தமான தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றனவா (informed), ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாம் நடைபெறுகிறதா (transparent) என்பனதான் முக்கியம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சட்டம் 2013 ஆனது மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், சமூக, சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகளை முன்வைப்பதாக உள்ளதால் மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப்படுதலுக்கு இடமளிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்கீழ் நடைபெறும் இந்த நிலக் கையகப்படுத்துதல் என்பது மனிதத்தன்மை வாய்ந்த, மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய, தகவல்களைப் பகிர்ந்தளிக்கும், ஒளிவுமறைவற்ற வழிமுறைகளை உள்ளடக்கியதல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 14 (Article 14) இங்கு மீறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்துதல் என்பது சூழலியல் பாதிப்புகள், சமூக பாதிப்புகள் ஆகியவற்றை மதிப்பிட தேவையான வழிமுறைகளை பின்பற்றவில்லை, சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை, அதாவது உரிய தகவல்களை வழங்கி அதன்மூலமாகப் பெறப்படும் ஒப்புதலை, பெறவில்லை. எனவே, மத்திய சட்டம் 2013 வரையறுத்துள்ள குறைந்தபட்ச நிபந்தனைகளுக்குக் கூட உட்படாததுடன் இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 14ஐ மீறுவதாகவும் உள்ளது.
9. இந்தத் திட்டத்தின் இயலுமையை தீர்மானிக்கவும், மத்திய சட்டம் 2013-ன் படியும் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் சூழலியல் தொடர்பான பாதிப்புகள் குறித்த பொது விசாரணயின்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இத்தகைய பொது விசராணை நடைபெற வேண்டுமானால் மேற்கூறிய பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
நெடுஞ்சாலை திட்டங்களின் சூழலியல், சமூகப் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டு முறைகள் என்ற தலைப்பிட்ட வெளியீடு ஒன்றை இந்தியச் சாலைகள் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சட்டபூர்வமாக பின்பற்ற வேண்டிய இந்த வழிகாட்டு முறைகள் (legally binding) குறித்த இந்த வெளியீடு கூறுவதாவது: சூழலியல் பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வின் முக்கிய இலக்குகளில் ஒன்று “சூழலியல் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்திலிருந்து குறிப்பிட்ட திட்டம் சரியா தவறா என்பதை அறிய தேவையான தகவல்களை வழங்குவதாகும்”. இத்தகைய மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள தவறினால் நிலம் கையகப்படுத்துதல் என்பது சட்டரீதியாக செல்லாததுடன், அமுலில் உள்ள சட்டங்களின் நற்விளைவுகளை திட்டத்தினால் பாதிக்கப்படுவோருக்கு வழங்க மறுப்பதற்கு ஒப்பாகும்.
10. இந்தத் திட்டமானது பொது நலனுக்கு ஏற்றது, மாற்றுவகை திட்டங்கள் சாத்தியப்படாதவை, இந்தத் திட்டம் மட்டுமே சாத்தியக்கூறு வாய்ந்தது என்பன குறித்து நம்பத்தகுந்த வகையிலான வாதங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை. தவறாகவும், ஏமாற்றும் எண்ணத்துடனும் தயாரிக்கப்பட்ட இயலுமை அறிக்கையின் அடிப்படையில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த காரணங்களினால் நிலத்தை கையகப்படுத்தும் வழிமுறைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
இப்படிக்கு,
நித்தியானந்த் ஜெயராமன்
சேலம் மாவட்டத்தில், 8 வழி பசுமைச் சாலைக்கு நில அளவைசெய்து முடித்துவிட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்தால் இந்த 8 வழிச் சாலையை நிறுத்த முடியும்? தம் நிலங்கள் பறிக்கப்படுவதை எப்படித் தடுக்க முடியும் என்ற கையறு நிலையில், கடவுளே கதியாக கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் வெளிப்பாடாக, சேலம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் குள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து, 8 வழிச் சாலையைத் தடுத்துநிறுத்த வேண்டும் என மனு கொடுத்தனர். அப்போது, முருகேசன், பழனியம்மாள், பார்வதி ஆகியோருக்கு ஆக்ரோஷமாக சாமி வந்தது. ஊர் மக்களைப் பார்த்து, '' டேய்... நீங்க யாரும் பயந்துக்க வேண்டாம். உங்க நெலத்தை எடுக்க முடியாது. நான் நெலத்த விட மாட்டேன்'' என்று அருள் வாக்கு கூறினர்.
இதுகுறித்து அங்கிருந்த அரவிந்த் என்பவரிடம் பேசினோம். '' நாங்க இந்த ஏரியாவில் காலங் காலமா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த 8 வழிச் சாலையால் எங்க கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் பறிபோகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. முட்டுக்கல்லும் போட்டுட்டு போயிட்டாங்க. நாங்க இந்த வீட்டையும் நிலத்தையும் விட்டுட்டு எங்க போவதென்றே தெரியவில்லை.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்களையும் சிறையில் அடைத்து விடுகிறார்கள். எங்களுக்கு அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கு பலம் இல்லை. கடவுள்தான் இந்த 8 வழிச் சாலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். எங்க பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஒரு வேளை சாப்பிடாமல் பயபக்தியோடு இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால், கேட்ட வரங்களையெல்லாம் தரும்.
அதனால், எங்க ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து, எங்க குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்தோம். பெரியாண்டிச்சி அம்மன் முருகேசன், பார்வதி, பழனியம்மாள் மீது இறங்கி, `8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்க விட மாட்டேன். பயப்படாமல் இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறது. இது எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. பெரியாண்டிச்சி அம்மன் சொன்ன மாதிரி செய்தால் நல்லாயிருக்கும்'' என்றார்.
`சேலம் டு சென்னை 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன்’ என்று பேசியதால் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், இன்று சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் ஜாமீன் வழங்கியுள்ளார்.
சேலம் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அதைச் சுற்றியுள்ள 570 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்கு கடந்த மாதம் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தும்பிப்பாடி மாரியம்மன் கோயில் அருகே விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேசினார். அப்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கு மட்டுமல்ல 8 வழிச் சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன் என்று பேசியுள்ளார்.
இதையடுத்து, சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த 17-ம் தேதி சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு, ஓமலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டார். மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரித்த ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் நிராகரித்தது. அதையடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராஜ், மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருக்கிறார்.
இது குறித்து மன்சூர் அலிகானின் வழக்கறிஞர் மாயன் கூறுகையில், ``கடந்த 22-ம் தேதி ஓமலூர் தாலுகா நடுவர் நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுத்ததை அடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருக்கிறது. விசாரணையின்போது ஆஜரானால் போதுமானது என்று தெரிவித்திருக்கிறது. இது எங்கள் தரப்பினருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.
திருவண்ணாமலையில், பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுமைச் சாலைக்காக சேலம் முதல் சென்னை இடையிலான ஊர்களில் நில அளவைப் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அனைவரது எதிர்ப்பையும் மீறி, சில இடங்களில் அளவைப் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இன்று, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சே.நாச்சிப்பட்டு மற்றும் மண்மலை ஆகிய கிராமங்களில் நில அளவைப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிலத்துக்குச் சொந்தமானவர்கள் தவிர வேறு யாரும் அருகில் வரக் கூடாது என போலீஸாரின் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது, மணிகண்டன் என்ற விவசாயிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் அளவைப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைத் தடுக்க, விவசாயி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. காவல்துறையினர் சற்று அசந்த நேரத்தில், தனது நிலத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மணிகண்டன். உடனடியாக அவரைப் பின் தொடர்ந்து குதித்த காவலர்கள், விவசாயியை மீட்டனர்.
அடுத்த 5 நிமிடங்களில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் துறையினர் இந்த இருவரையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மேலும், பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில விவசாயிகள் அதே இடத்தில் சாலை மறியில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விவசாயிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, சிறையில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டதைக் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் கண்டித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடியதால் கடந்த 19-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் வளர்மதியின் பிணை மனுவினை சேலம் நீதித்துறை நடுவர் கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதி, சென்னை வடபழனியில் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பட வெளியீட்டு விழாவில் பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நடந்து 3 மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வடபழனி காவல்நிலைய குற்ற எண்.240/2018-ன் கீழ் 153, 505(1)( b) இ.த.ச வின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்கு பதியப்பட்டு 2 மாதம் கழித்து, கடந்த 8 நாள்களாகச் சிறையிலிருக்கும் வளர்மதி, 27-ம் தேதி வடபழனி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 28-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்யும் அரசைக் கண்டிக்கிறோம். வளர்மதி உட்பட அனைவரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
சேலம் டு சென்னை, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள், தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் படம்பிடித்த கேரள செய்தியாளர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
பசுமைச் சாலை குறித்து விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 20-ம் தேதி, திருவண்ணாமலையில் மணிலா ஆலையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த சி.பி.எம் மாவட்டத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை போலீஸார் அடாவடியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைதுசெய்தனர். அதன்பிறகு அந்தக் கூட்டம் திருவண்ணாமலை சி.பி.எம் அலுவலகத்தில் நடந்தது. அதில், 5 மாவட்ட விவசாயிகள் ஒன்றுசேர்ந்து பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 மாவட்ட நிலங்களிலும் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். அதன்படி, இன்று பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களின் வீடுகளிலும் நிலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல, திருவண்ணாமலையில் உள்ள சி.பி.எம் அலுவலகம் மற்றும் எதிரே உள்ள மரங்களில் கறுப்புக்கொடியை ஏற்றினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். இதைப் படம்பிடித்த தீக்கதிர் பத்திரிகையாளர் ராமதாஸ், ஆனந்தன் மற்றும் கேரள மாத்ருபூமி செய்தியாளர் அனுப்கேஷ், முருகன் ஆகியோரைத் திருவண்ணாமலை போலீஸார் அடாவடியாகக் கைதுசெய்தனர். இதைக் கண்டித்து செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிப்பு தெரிவிக்க, கேரள ஊடகத்தினர் மூன்று பேரை மட்டும் விடுவித்தது. அதேபோன்று, செங்கம் அருகே பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்த விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தில்லிபாபு, செங்கம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே சென்னை டு சேலம் இடையே அமையவிருக்கும் எட்டு வழிச்சாலைக்குத் தேவையான நில எடுப்பு அளவீடு பணி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி அரூர் அடுத்துள்ள வேடகட்டமடுவில் தொடங்கி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வழியாக மஞ்சவாடி கணவாய் வனப்பகுதி வரை 24-ம் தேதியுடன் முடிவடைந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் 53 கி.மீட்டர் தூரம் பயணிக்கும் பசுமை வழிச்சாலைக்காக 70 மீட்டர் அகலத்துக்கு வனப்பகுதி, விவசாய நிலங்கள், கோயில்கள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சிறுசிறு கிராமங்கள் உள்ளிட்ட நிலப்பகுதிகளை அளவீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுமை வழிச்சாலைக்காக அளவீடு பணிகளை முடித்துள்ள மாவட்ட நிர்வாகம், அடுத்தகட்டமாக 53 கி.மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலத்துக்கான இழப்பீடு வழங்க விவசாய நிலங்களின் பரப்பளவு அதற்கு அரசாங்கத்தின் மதிப்பீடு தற்போதைய வெளி மார்க்கெட் மதிப்பீடு, நிலத்தில் உள்ள கிணறு மற்றும் போர்வெல், வீடுகள், மரங்களின் மதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அளவீடு பணிகளை முடித்ததுடன் இழப்பீடு வழங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு விவசாயிகள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், 2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்புக்காக ரூ.1.65 கோடி செலவில் 25 அறைகள் கொண்ட அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, பசுமை வழிச்சாலைக்காக இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. மலைவாழ் மக்களின் பெரும் முயற்சியில் கொண்டுவரப்பட்ட இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட இருப்பது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சேலம் வரை சுமார் 277 கி.மீ. தொலைவுக்கு 10,000 கோடி செலவில் பசுமைச் சாலை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு இந்தச் சாலை அமையும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. இதனால் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்தரமேரூர் ஆகிய மூன்று தாலுகாவில் உள்ள 42 கிராமங்கள் வழியாக 59 கி.மீ. தொலைவிற்கு இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை பறக்கும் சாலையாகவும், மண்ணிவாக்கத்திலிருந்து தரைவழியாகவும் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இடையிடையே பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தில் தொடங்கும் 8 வழிச்சாலை கரசங்கால், படப்பை, பாலூர், குருவன்மேடு, அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் வழியாகத் திருவண்ணாமலை மாவட்டத்தை அடைகிறது. இந்தச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 600 அடி அகலத்திற்குக் கற்கள் நடப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏரி, குளங்கள், விவசாயக் கிணறுகள் எனப் பல்வேறு நீர்நிலைகள் தூர்க்கப்படும் அபாயம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ தொலைவு இந்தச் சாலை செல்வதால், அப்பகுதியில் அதிக அளவு பாதிப்புகள் இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் அளவில் காடுகள் அழிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேருவிடம் பேசினோம். “சேலத்திற்கு எட்டுவழிச்சாலை அமைக்கும் அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டு இந்தச் சாலை அமைக்கப்பட ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இந்தச் சாலை அதிவேக சாலையாக அமைக்கப்பட உள்ளதால், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புசுவர் அமைக்க உள்ளனர். இதனால் சாலையை கடப்பது சவாலாக இருக்கும். சாலையைக் கடக்க வேண்டும் என்றாலோ, அதே சாலையில் திரும்ப வர வேண்டும் என்றாலோ பல கி.மீ. செல்ல வேண்டியிருக்கும். கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லமுடியாது. சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாகவும், வேலூர் வழியாகவும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சேலம் செல்ல முடியும். பிறகு எதற்கு இந்தப் பசுமைச் சாலை?
விவசாயிகளுக்கு எவ்விதமான அறிவிப்பும் கொடுக்காமல் அதிகாரிகள் நிலத்தைக் கையகப்படுத்தி வருகிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைக் காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள். 2013ல் அறிவித்துள்ள நிலஎடுப்பு மசோதாவின்படி நிலம் எடுக்கும் பகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். 80 சதவிகித மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்த விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு சர்வாதிகாரிகள் போல அரசாங்கம் செயல்படுகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிலங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும், மத்திய அரசும் இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு கொடுத்திருக்கிறோம். சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பசுமைச் சாலை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தோம். அப்போது பா.ஜ.க பிரமுகர்கள் "காசு கொடுக்கிறார்கள் வாங்கிக் கொண்டு அமைதியாகச் செல்லுங்கள். மாவோயிஸ்ட்டுகள் எல்லாம் உள்ளே வருகிறார்கள்" என எங்களைப் பார்த்து சொன்னார்கள். போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்க நினைக்கிறார்கள் அவர்கள். பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பசுமைச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூன் 26ம் தேதி தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். ஜூலை 6ஆம் தேதி எட்டு வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் செய்ய உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எங்கள் போராட்டம் நடைபெறும்.” என்கிறார் ஆதங்கமாக.
மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் பேசினோம், “42 கிராமங்களில், 59.10 கி.மீ. தொலைவிற்கு இந்தச் சாலை செல்லும் எனச் சொல்லி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிக அளவு கிராமங்கள் வருகின்றன. செங்கல்பட்டு தாலுகாவில் 6 கிராமங்களே வருகின்றன. மக்கள் போராட்டம் செய்யப் போவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து 3A அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அதன்பிறகே நிலம் கையகப்படுத்துவது குறித்துத் தெளிவாக சொல்லமுடியும்” என்கிறார்.
வளர்ச்சி என்ற பெயரில் ஒரு பக்கம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு சாலைகள் போடப்படுகின்றன. இன்னொருபக்கம் சாலை வசதி வேண்டும் என பல குக்கிராமங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அந்தப்பகுதிகளும் இந்தியாவில்தானே இருக்கின்றன!
சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு சேலத்தில் 36.3 கி.மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நில அளவை கடந்த 18-ம் தேதி சேலம், தருமபுரி எல்லைப் பகுதியான மஞ்சவாடி கணவாய் பகுதியில் தொடங்கியது. விவசாயிகளின் கதறலும் கண்ணீருக்குமிடையே இன்று (25.6.2018) சேலம் கஞ்சமலை அடிவாரப் ப்குதியான அரியாரில் அளவைப் பணி நிறைவு பெற்றது.
இன்று காலை பூலாவரி புஞ்சைக்காடு பகுதியில் நில அளவை செய்யப்பட்டது. அப்போது சக்திவேல், செல்விக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, வீடு ஆகியவை பறிபோவதாகத் தேம்பி அழுதார் செல்வி. ''இப்பத்தான் இந்த வீட்டை பல லட்ச ரூபாய் செலவு செய்து பார்த்துப் பாத்துக் கட்டினோமே. 8 வழிச் சாலைக்கு எங்க காடு, வீடு எல்லாமே எடுத்துட்டு போறாங்களே. நாங்க 20 குடும்பத்துக்கு வேலை கொடுத்து வாழ வைத்தோம். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை.
எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை வந்தது. வீட்டை இடித்தால் என் கணவர் இறந்துபோயிடுவேன்னு சொல்றாரே? நான் என்ன செய்வேன். கெளரவமாக வாழ்ந்த எங்களை நடுரோட்டில் நிறுத்திட்டாங்களே’’ என்று தரையில் படுத்துக்கொண்டு அழுதார். நாங்க இந்த நிலத்தைக்கூட சேர்த்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுருங்கன்னு சொன்னால் கேட்க மாட்டேங்கிறாங்களே என்று கண்ணீர்விட்டார். அவர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கும்போதே வீட்டுக்கு முன் முட்டுக் கல் நடப்பட்டது. உடனே பாய்ந்துபோய் முட்டுக்கல்லைப் பிடுங்கி எறிந்தார் செல்வி.
அதையடுத்து முத்துலட்சுமி, மோகனசுந்தரம், மணிமேகலை ஆகியோர் கீழே உக்கார்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள். அப்போது முத்துலட்சுமி, ''இந்த ஒரு தென்னை மரத்தைக் காப்பாற்ற நாங்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம். நம் தோட்டத்து காய்களை சாப்பிடுபவர்களுக்கு யாருக்கும் எந்தத் தீங்கும் வரக் கூடாது என்று நம்மாழ்வார் முறைப்படி இயற்கை விவசாயம் செய்து இந்த மரத்தையும் மண்ணையும் பாதுகாத்து வந்தோம். இப்ப பறிச்சுட்டு போறாங்களே. முதல்வர் பெரும்பாலான விவசாயிகள் தாமாகவே முன் வந்து நிலங்களைத் தருகிறார்கள் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறாரே?. இதுதான் முதல்வருக்கு அழகா!. இந்த நில அளவை செய்யும் இடத்துக்கு வந்து பார்க்க கூடாதா?'' என்றார்.
முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரின் உதவியாளர் ஆத்துகாட்டு சேகருக்குச் சொந்தமான 70 சென்ட் நிலம் இந்தத் திட்டத்துக்காக அளவை செய்யப்பட இருந்தது. அவருடைய காட்டில் அளவை செய்ய கால் வைக்கும்போது, அதிகாரிகளைத் தடுத்து தாசில்தாரை வரச் சொன்னார். பின்னர், `எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிலம் எடுக்கலாம்?’ என்று சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தாசில்தார், ''செய்தித்தாள்களில் அறிவிப்பு கொடுத்தோம். தனிப்பட்ட முறையில் கருத்துக் கேட்புக்குப் பிறகு கொடுப்போம்'' என்றார். ஆனால், அவர் முட்டுக்கல் போடக் கூடாது என்று மறுத்ததை அடுத்து அடுத்த காட்டில் முட்டுக்கல் நட்டு அளவையைத் தொடர்ந்து ஒருவழியாக நில அளவைப் பணியை நிறைவு செய்துவிட்டார்கள்.