பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள்

277 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
May 17, 2013, 4:43:27 AM5/17/13
to panbudan


-எம்.கார்த்தி
படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்

தீபாவளி என்றதுமே நாம் எல்லோருக்கும் இனிப்புக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது, விதவிதமாக வெடிக்கும் பட்டாசுகளும், வானத்தில் போய் வெடித்து கலர் கலராக பூக்கும் வண்ண வெடிகள்தான். எல்லோரையும் குதூகலப்படுத்தும் இந்த பட்டாசு தயாரிப்புகளின் பின்னனியில் உள்ள அதிரவைக்கும் உண்மைகளையும், உயிர் இழப்புகளையும் பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயம் நமக்கு பட்டாசு வாங்கவே மனம் வராது. ஆம்... கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பட்டாசு விபத்தில் 200 பேர் பலியாகியிருக்கின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பட்டாசு தொழிலின் உள்ள நிசர்சனத்தையும், பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வேதனையும் சொல்வதுதான் இந்த மினி தொடர்..

சிவகாசியில் பட்டாசு பிறந்த கதை

வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பிரதானம். வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான். சிவகாசியை சேர்ந்த காகா சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவர்தான் கடந்த 1923 ஆம் ஆண்டு சிவகாசியில் முதன் முதலில் தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்தவர்கள். அதுவரை இந்தியாவில் பட்டாசு என்றாலே என்னவென்று தெரியாத நிலை. சீனா மட்டும்தான் அப்போது பட்டாசு தொழிலில் கொடி கட்டி பறந்தது. வறண்ட பூமியான சிவகாசியில் இருந்தால் பிழைக்க முடியாது என்று நினைத்த பள்ளி நண்பர்கள் சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவரும் பிழைப்புக்காக கொல்கத்தா சென்றனர். அங்கு தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். பிறகு அவர்களது பார்வை பட்டாசு தயாரிப்பு மீது திரும்பியது. 

சீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், குளிர் பிரதேசமான சீனாவில் பட்டாசுகளை காய வைப்பதற்கு நாள் கணக்கில் நேரம் விரயமாவதை கண்டனர். அவர்களுக்கு அப்போதுதான் அந்த ஐடியா பிறந்தது. வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் பட்டாசு தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர்.

முதன் முதலாக அவர்கள் தயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். பிறகு என்ன சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிப்பு தொழில் சக்கை போடு போட ஆரம்பித்தது. அடுத்தடுத்து இவர்களது வாரிசுகளும் இதே பட்டாசு தொழிலில் இறங்க, இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம். ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

எப்படி கிடைக்கிறது லைசென்ஸ்? 

ஒரு பட்டாசு ஆலையை தொடங்குவதற்கு கட்டடங்கள் தரச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று ஆகியவற்றை பெற்று, மாவட்ட வருவாய் அலுவலருக்கு (டி.ஆர்.ஓ) விண்ணப்பிக்க வேண்டும். டி.ஆர்.ஓ., அந்த இடத்தை ஆய்வு செய்து பட்டாசு தயாரிப்பதற்கு மூலப்பொருளான சல்ஃபர் எனப்படும் வெடி உப்பை பயன்படுத்த லைசன்ஸ் வழங்குவார். 15 கிலோ சல்ஃபர் வரை டி.ஆர்.ஓ., லைசென்ஸ் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த லைசென்ஸை 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். டி.ஆர்.ஓ., லைசென்ஸை அடிப்படையாக கொண்டு 200 கிலோ சல்ஃபர் பயன்படுத்திக்கொள்ள சென்னையில் உள்ள இணை முதன்மை வெடி பொருள் அலுவலரும், 200 கிலோவுக்கு மேல் நாக்பூர் முதன்மை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலரும் லைசென்ஸ் கொடுக்கிறார்கள். ஆனால் எல்லா பட்டாசு ஆலைகளுக்கும் அடிப்படை லைசென்ஸ் டி.ஆர்.ஓ., லைசென்ஸ்தான். அதுபோல் பட்டாசு சில்லரை விற்பனைக்கும் டி.ஆர்.ஓ.,தான் லைசென்ஸ் வழங்க வேண்டும்.

டி.ஆர்.ஓ., லைசென்ஸ் கொடுப்பதோடு சரி. முறையான கண்காணிப்போ.. விதிமுறை மீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் பட்டாசு ஆலைகள், அதிகாரிகளுக்கு பணம் காய்க்கும் மரம் என்பதால்தான்..

கண்ணா லட்டு திங்க ஆசையா?

பட்டாசு ஆலை லைசென்ஸ் விவகாரத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை என்று 5 துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏதாவது பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது என்றால் இந்த அதிகாரிகளுக்கு கொண்டாட்டம் தான். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விபத்து ஏற்பட்டதும் காயம்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களை மருத்து வமனைக்கு கொண்டு செல்ல ஆர்வம் காட்ட மாட்டார்கள். முதலில் அவர்கள் தொடர்பு கொள்வது வருவாய்த் துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரைத்தான். வெடி விபத்து சம்பவத்தில் இருந்து தங்களை தப்புவிக்கவும், திரும்பவும் லைசென்ஸ் பெறவும் உரிய தற்காப்பு ஏற்பாடுகளை செய்வது தான் இவர்களின் முதல் வேலை.  பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மூலம் லட்சக்கணக்கில்  வருமானம் வரும் என்பதால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து என்று கேள்விப்பட்டதுமே அதிகாரிகள் மனசில் ஓடுவது எல்லாம் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற நினைப்புத்தான்.

அப்பட்டமான விதிமீறல்கள் 

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அறையில் மட்டும்தான் வெடி மருந்தை கலக்க வேண்டும், பாம்,அணுகுண்டு, லெட்சுமி வெடி போன்ற வீரியமான வெடிகளை அதற்கென அனுமதி பெற்ற ரூம்களில்தான் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு ரூமிலும் கீழே ரப்பர் விரிப்புகளை விரித்திருக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் செல்போனை பயன்படுத்தக்கூடாது, போர்மென் மூலம்தான் வெடி மருந்து கலவை தயாரிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால் நிஜத்தில் இந்த விதிமீறல்கள் எல்லாம் அப்பட்டமாக காற்றில் பறக்க விடப்படுகிறது என்பதுதான் உண்மை. 

பட்டாசு தொழிலை சீர்குலைக்கும் கான்ட்ராக்ட் முறை

சிவகாசியில் பட்டாசு தொழில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் வெடி விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது.  தொழிலாளர் களை கான்ட்ராக்ட் முறையில் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது, பட்டாசு ஆலைகளில் உள்ள ரூம்களை குத்தகைக்கு விடக்கூடாது என்பது பாதுகாப்பு விதிமுறைகளின் முக்கிய அம்சம். ஆனால் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த பட்டாசு தொழிலில், இந்த இரு விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டதுதான் கடந்த 20 ஆண்டுகளாக கொத்துக்கொத்தாக மடியும் உயிர் இழப்புகளுக்கு காரணம்.

திசை மாறிய பட்டாசு தொழில்

பட்டாசு ஆலையை பொறுத்த வரை திரி தயாரிப்பது முதல் வெடி மருந்து கலப்பது உள்பட அனைத்து வேலைகளும் முன்பு பட்டாசு ஆலைகளுக்குள்ளேயே பாதுகாப்பான முறையில் நடந்து வந்தன. அவ்வப்போது சின்ன சின்ன விபத்துக்கள் நடந்தாலும், பெரிய அளவில் உயிர்ப்பலி இல்லை. ஆனால் கடந்த 20  ஆண்டுகளாக பட்டாசு தொழில் திசை மாறி விட்டது. கொள்ளை லாபத்துக்கு ஆசைப்படும் பட்டாசு ஆலை அதிபர்கள், பட்டாசுகளுக்கான திரி மருந்து சுற்றுவது, வெடிகளில் திரி சொருகுவது, குழாய்களில் வெடி மருந்து அடைப்பது வரை இப்போது எல்லா வேலைகளையும் வெளியில் கான்ட்ராக்ட் கொடுக்கிறார்கள்.  பாதுகாப்பாக பட்டாசு ஆலைகளில் செய்ய வேண்டிய பட்டாசு தயாரிப்பு வேலைகளை, வெளியே குடிசைத்தொழில் போல் கான்ட்ராக்ட்காரர்கள் எந்த வித விதிமுறையும் இன்றி சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். அதனால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலிகளும் ஏற்படுகிறது.

 

ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் சம்பளம். இவ்வளவு பட்டாசுகளை தயாரித்தால் போதும் என்ற ரீதியில் பட்டாசு தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்ட சின்ன பட்டாசு ஆலை அதிபர்கள் கொண்டு வந்ததுதான் இந்த லேபர் கான்ட்ராக்ட் முறை. (இதற்கு என்று தனியாக கான்ட்ராக்ட்காரர்கள் இருக்கின்றனர்) அதாவது ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு எவ்வளவு பட்டாசு தயாரித்து கொடுக்கிறார்களோ அதற்கு ஏற்ப சம்பளம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் கூலிக்கு பட்டாசு தயாரிக்க முடியும் என்றால் அதற்கும் ஓ.கே.தான். இப்படி அநியாயமாக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தொழிலாளர்கள், அவசர அவசரமாக பாதுகாப்பு வசதி இன்றி பட்டாசுகளை தயாரிக்கும் ஆபத்தான  வேலை தான் பல வெடி விபத்துக்களும், உயிர் இழப்புகளுக்கும காரணம்.

திடீர் முதலாளிகள்

பட்டாசு ஆலைகளில் ரொம்ப நாள் வேலை பார்த்த அனுபவம் காரணமாக போர்மென்கள், சூப்பர்வைசர்கள் இந்த லேபர் கான்ட்ராக்ட்காரர்களாக உருவெடுக்கின்றனர்.சின்ன பட்டாசு ஆலை அதிபர்களை அணுகும் அவர்கள், உங்களுக்கு தேவையான பட்டாசு ரகங்களை தயாரித்து கொடுக்கிறேன் என்று சொல்லி ஆர்டர் பிடிப்பார்கள். கொள்ளை லாபத்துக்கு ஆசைப்படும் பட்டாசு ஆலை அதிபர்கள், பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை அள்ளிக் கொடுத்து, "இந்த டீல் நல்லா இருக்கேன்னு" ஓகே என்று சொல்வார்கள். லேபர் கான்ட்ராக்ட்காரர்கள் நலிந்த நொடித்து போன பட்டாசு ஆலைகளில், சில ரூம்களை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து லீசுக்கு எடுத்து கான்ட்ராக்ட் முறையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்து இரவு, பகலாக  பட்டாசுகளை தயாரிப்பார்கள். இதுபோன்ற சூழலில் திடீரென்று விபத்து ஏற்பட்டு ஏராளமான உயிர் சேதம் ஏற்படுவதுண்டு.

இதற்கு ஒரு பரிதாபமான உதாரணம்...கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் 40 பேரை காவு வாங்கிய வெடி விபத்துதான். முதலிப்பட்டி ஓம் சக்தி பயர் ஓர்க்ஸ்சின் உரிமையாளர் விருதுநகரை சேர்ந்த முருகேசன். பட்டாசு ஆலை நலிவடையவும், திருத்தங்கல்லை சேர்ந்த லேபர் கான்ட்ராக்ட்காரர்  பால் பாண்டி அந்த பட்டாசு ஆலையில் இருந்த சில ரூம்களை குத்தகைக்கு எடுத்து அதில் 200க்கு அதிகமான தொழிலாளர்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி, ராப்பகலாக பட்டாசுகளை தயாரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஃபேன்சி ரக வெடிகளுக்கான மணி மருந்து தயாரிக்கும் போதுதான் திடீரென்று விபத்து ஏற்பட்டு 40 பேரை காவு வாங்கிய துயர சம்பவம் நடந்தது. இந்த சம்வத்திற்கு பிறகு இன்னமும் பல இடங் களில் இப்படி ஆபத்தான முறையில் பட்டாசு தயாரிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்த உயிர்காவுகளுக்கு காரணம் என்ன? என்பதை நாளை பார்க்கலாம்...




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
May 17, 2013, 6:51:08 PM5/17/13
to panbudan
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2


-எம்.கார்த்தி
படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்

பட்டாசு தொழிலில் கான்ட்ராக்ட் லேபர் முறைக்கு மாறியதால் ஏற்படும் விபரீதங்களை பற்றி பார்த்தோம். இனி, ஏதோ சோறாக்கி, குழம்பு வைப்பது போல் வீடுகளில் சர்வ சாதாரணமாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்படும் விபரீதங்களை பார்க்கலாம்.

குடிசை தொழிலான பட்டாசு தொழில்

வெடிகளில் சொருகப்படும் கரி மருந்து திரியைத்தான் வெளியே கான்ட்ராக்ட் கொடுத்து வீடுகளில் தயாரித்து, அதை பட்டாசு ஆலைகள் வாங்கிக் கொள்ளும் அபாயங்கள் மட்டும்தான் இதற்கு முன் நடந்து கொண்டிருந்தன. இப்போது, அதற்கும் ஒரு படி மேலே போய் அணு குண்டு, லட்சுமி வெடி, போன்ற வீரியமான வெடிகளை எல்லாம் வெளியே கான்ட்ராக்ட் கொடுத்து வீடுகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சிறிய பட்டாசு ஆலைகள் அதிபர்கள், தொழிலாளர் பற்றாக்குறையாலும், கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திலும் இந்த அபாயத்தில் இறங்குகிறார்கள்.

இதன்படி கான்ட்ராக்ட்காரர்கள், பட்டாசு ஆலைகளில் வேலை பார்ப்பவர்களிடம் இதை வீடுகளில் ரெடி செய்து கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள். (இதற்கு என்று ஆள்பிடிக்க தனியாக புரோக்கர்கள் இருக்கிறார்கள்) வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில் எல்லாம் வீடுகளில் அணு குண்டுகள், லட்சுமி வெடி, குருவி வெடிகள் தயாரிக்கும் வேலைகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டு வெம்பக்கோட்டையில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறு அறையில் அணு குண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள். பெரிய அளவில் உயிர் சேதங்கள் நடந்த தகவல் மட்டுமே ' வெளிச்சத்துக்கு' வரும் ஒருவர் பலி என்றால் விஷயம் அப்படியே அமுக்கப்பட்டு விடும். வறட்சியான வானம் பார்த்த கரிசல் காட்டு பூமியில் காலம் தள்ளும் இந்த தொழிலாளர்கள், கூடுதல் வருமானம், பலியானவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் சில லட்சங்கள் நிதி உதவி ஆகியவற்றினால் விபத்து பற்றி வெளியே வாய் திறக்க மாட்டார்கள்.

உயிர் பறிக்கும் ஃபேன்சி ரகம்


பட்டாசு தொழிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பை இருந்ததை விட, இப்போது மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக பலியாவதற்கு முக்கிய காரணமாக ஃபேன்சி ரக பட்டாசுள்தான் என்கின்றனர் இந்த தொழிலை நன்கு அறிந்தவர்கள்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யூ.,வின் பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் தலைவி மகாலட்சுமியிடம் கேட்ட போது, ''வானத்தில் போய் வெடித்து கலர் கலராய் நட்சத்திரங்களை சிதற விட்டு மாய ஜாலம் காட்டும் வெடி வகைகள்தான் ஃபேன்சி அயிட்டம். அணுகுண்டு, ஆட்டோ பாம் போன்ற பெரிய சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை விட இந்த ஃபேன்சி ரகங்களை தயாரிப்பதில்தான் ரிஸ்க் ஜாஸ்தி.

ஃபேன்சி ரக வெடிகளை தயாரிப்பதற்கு முக்கியமான மூலப்பொருள் மணி மருந்து. ஃபேன்சி ரக வெடிகளை மேலே போய் வெடிக்க வைப்பதற்கு உந்து சக்தியாக இருப்பது இந்த மணி மருந்துதான். ஸ்டான்சியம் நைட்ரேட்( சிவப்பு கலர் கொடுக்க) பேரியம் நைட்ரேட் (பச்சை கலர்) சோடியம் ஆக்சைலேட், கரி மருந்து, சல்ஃபர், வெடி உப்பு, அலுமினிய பவுடர் ஆகிய வேதி பொருள்களின் கலவைத்தான் இந்த மணி மருந்து.

வித விதமான கலர்களை கொடுப்பதற்கு சிவப்பு வெடி உப்பு, பச்சை வெடி உப்பு, நீலக்கலர் வெடி உப்பு என்று எவ்வளவு கலர் வேண்டுமோ அதற்கு ஏற்ப வெடி மருந்தை இதில் சேர்ப்பார்கள். மணி மருந்து கலவை ரொம்பவும் ரிஸ்க் என்பதால்தான் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலியும் அதிகம்.

மணி மருந்து கலவை தயாரிக்கும்போது அனுபவசாலியான போர்மென்கள் மேற்பார்வையில் தனி அறையில் வைத்து தயாரிக்க வேண்டும். மணி மருந்து கலவை தயாரிக்கும்போது அதில் சிறு இலை பட்டால் கூட அது எளிதில் வெடித்து விடும். சூரியனின் வெயில்தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பு காலை 7 மணி முதல் 10 மணிக்குள் மணி மருந்து கலவையை தயாரித்து சரியான வெப்பத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வளவு ரிஸ்க் என்பதால் மணி மருந்து கலவை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கூலி கொடுக்கிறார்கள்.

சில மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்கிறார்கள். சில நேரங்களில் இந்த மணி மருந்து கலவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலையில் 'கட்டிங்' போட்டு விட்டு இந்த வேலையை செய்யும் போது கவனக்குறைவால் வெடி விபத்துக்கள் நடந்த சம்பவங்களும் உண்டு.

மணி மருந்து காய்வதற்குள் அதில் சின்ன கல் விழுந்தாலோ, வெயில் அதிகரித்தாலோ எளிதில் தீப்பற்றி வெடித்து விடும் அபாயம் இதில் உண்டு. சமீபத்தில் சிவகாசி நாராயணபுரத்தில் ரத்னா பட்டாசு ஆலையில் காலை 10.30 மணிக்கு ஒரு மரத்தடிக்கு கீழே மணி மருந்து கலவை தயாரிக்கும் போதுதான் கொளுத்தும் வெயில் காரணமாக மணி மருந்து கலவை வெடித்து சிதறி 10 பேர் பலியாகினர். கொள்ளை லாபம் தரும் இந்த ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதில்தான் பட்டாசு ஆலைகளுக்கு இடையே போட்டி.

வானத்தில் மாயஜாலம் காட்டி வித விதமான கலர்களை அள்ளி தெளிப்பதற்காக மணி மருந்து கலவையில் அளவுக்கு அதிகமான வீரியமான கெமிக்கலை கலக்கிறார்கள். இதனால் மணி மருந்து கலக்கும் போது திடீர் உராய்வு ஏற்பட்டு விபத்து உண்டாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வெடி விபத்துக்களில் மணி மருந்து கலக்கும் போது ஏற்பட்ட விபத்துதான் அதிகம். பெரிய பெரிய பட்டாசு ஆலை அதிபர்களின் கொள்ளை லாபத்துக்கும், பேராசைக்கும் கொத்துக் கொத்தாய் தொழிலாளர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். எனவே பட்டாசு தொழிலில் ஃபேன்சி ரக வெடிகள் தயாரிப்பதற்கு தடை விதித்தாலே ஒரளவு விபத்தையும், உயிர் இழப்பையும் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

பண ஆசை

குட்டி ஜப்பானான சிவகாசியில் தீப்பெட்டி, அச்சகம், பட்டாசு என்று பல தொழில்கள் இருந்தாலும் மற்றவற்றை விட பட்டாசு தொழிலாளர்களுக்குத்தான் சம்பளம் ஜாஸ்தி. ஏனென்றால், ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என்று அவர்களுக்கு வரையறை கிடையாது. எவ்வளவு வெடிகளுக்கு மருந்து அடைக்கிறார்களோ, திரி சுற்றுகிறார்களோ, அதற்கு ஏற்றபடி சம்பளம். எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு ராப்பகலாக வேலை செய்கிறார்கள். விபத்தையும் விலைக்கு வாங்கி உயிரையும் விடுகிறார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு பட்டாசு ஆலைகள் 2 லட்சமும், அரசு 2 லட்சம் வரையும் இழப்பீடு வழங்குகிறார்கள். அதனால்தான் இந்த பகுதியில் மாற்று தொழில் இல்லை என்ற நிலையில் பட்டாசு தொழில் ஆபத்து என்று தெரிந்தும் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆகியவை காரணமாக தொழிலாளர்கள் இந்த ஆபத்தான தொழிலை தொடர்ந்து செய்கிறார்கள்.

 
தடை செய்யப்பட்ட கெமிக்கல்களை பயன்படுத்துதல்

ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கான மணி மருந்து வெடி கலவை எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது தற்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் குறைந்த விலை என்பதால் தடை செய்யப்பட்ட வீரியம் அதிகம் உள்ள கெமிக்கலையும் கலக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா. இது தொடர்பாக மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் தலைமை துணை இயக்குனர் ஏ.பி.சிங்கிடம் கேட்ட போது, ''ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க ஒருசில பட்டாசு ஆலைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிக லாபம் கிடைப்பதால் எல்லா பட்டாசு ஆலைகளும் விதிமுறைகளை மீறி ஃபேன்சி ரகங்களை தயாரிக்கின்றனர். அதுபோல் வானத்தில் போய் மத்தாப்பூ மாதிரி கலர்க்கலராய் வெடிப்பதற்கும், சடசடவென்று சத்தம் கொடுத்து வெடிக்க வைக்கவும் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் போது சில வேதியியல் பொருள்களை சேர்க்கின்றனர்.

 

குறிப்பாக ஃபேன்சி ரகத்திற்கான மணி மருந்து கலவையின் போது ' பிஸ்மத் டிரை ஆக்சைட்' என்ற கெமிக்கலை கலந்தால் அது உராய்வு ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் மணி மருந்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும். இதன் விலை கிலோ ஆயிரத்து 500 ரூபாய். ஆனால், ஒரு கிலோ 150 ரூபாய் என்பதால் செந்தூரம் என்ற சிவப்பு வெடி உப்பை இதில் கலக்கின்றனர். இது விஷத்தன்மை மற்றும் வீரியம் கொண்ட கெமிக்கல். இதை நாங்கள் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளோம். ஆனால், குறைந்த விலை என்பதால் பல பட்டாசு ஆலைகள் இந்த செந்தூரத்தை மணி மருந்தில் கலக்கின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமாரின் நாராயணபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் 8 பேர் பலியான விபத்தில் மணிமருந்து கலவையில் 'செந்தூரம்' என்ற சிவப்பு வெடி உப்பை பயன்படுத்தியதுதான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றார்.

 
ஊழலில் திளைத்து கிடக்கும் அரசு அதிகாரிகள்

வருவாய்த்துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவைகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கித்தான் பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் பெற முடியும். இதில் ஒரு லைசென்ஸுக்கு மாவட்ட வருவாய் அலுவலருக்கு 15 ஆயிரம், கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட செக்க்ஷனுக்கு 3 ஆயிரம், தீயணைப்பு துறைக்கு 10 ஆயிரம், போலீஸுக்கு 10 ஆயிரம், சுகாதாரத்துறைக்கு 10 ஆயிரம், தொழிலாளர் நலத்துறைக்கு.50 ஆயிரம், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு 50 ஆயிரம் என மிகப்பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்கள். லைசென்ஸ் புதுப்பிக்க இதை விட ரேட் கொஞ்சம் கம்மி.

 
எரிந்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம்

பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் மளமளவென்று லஞ்ச ரேட் உயர்ந்து விடும். பட்டாசு ஆலை அதிபர்கள் தங்களை ' தப்புவிக்க'  விபத்து நடந்த அன்று இரவே பணப்பட்டுவாடாவில் இறங்கி விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அத்தனை துறைக்கும் அள்ளி வீசுவதற்கு லட்சங்களை ரெடிமேடாக கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள் ஆலை முதலாளிகள். அப்புறமென்ன, வெடி விபத்து பரபரப்பு அடங்கிய கொஞ்ச நாளில் மீண்டும் மடமடவென்று பட்டாசு தயாரிக்கும் வேலை ஆரம்பமாகி விடும்.

வரி ஏய்ப்பு

லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தும் அப்படி என்னதான் இந்த பட்டாசு தொழிலில் லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆமாம் பாஸ், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்

இந்த பட்டாசு தொழிலில் புழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா. உண்மைதான். உதாரணத்துக்கு ஒன்று. சிவகாசி பட்டாசு ஆலையில் தயாராகும் 10 ஆயிரம் வாலா என்ற சரவெடியின் அடக்க விலை வெறும் ஆயிரம் ரூபாய்தான். பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசு ஏஜென்ஸிக்கு கை மாறும் போது அதன் விலை 3 ஆயிரம் ரூபாய். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி செல்லும் போது அந்த 10 ஆயிரம் வாலா வெடியின் விலை 7 ஆயிரம் ரூபாய். எத்தனை மடங்கு லாபம் என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

சிவகாசி பட்டாசு தொழிலில் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால், நிஜத்தில் பட்டாசு தொழில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக தொழில் அறிந்தவர்கள் சொல்கின்றனர். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பட்டாசு ஆலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக கட்டுவதில்லை. அதுசரி, மீண்டும் மீண்டும் விபத்துகள் நடந்து உயிர்களை குடிப்பதற்கு லஞ்சம் மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றனவா?

அதுபற்றி நாளை பார்க்கலாம்...

 பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 1 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க 

 

ஸ் பெ

unread,
May 20, 2013, 12:09:13 AM5/20/13
to panbudan
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 3

 -எம்.கார்த்தி


படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்

 


முதலிப்பட்டி வெடி விபத்தை தொடர்ந்து விதிமுறை மீறல்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் தொடர்பாக 300 பட்டாசு ஆலைகளில் இதுவரை அதிரடி ஆய்வுகள் நடத்தியுள்ளனர்.

 

ஆனால் பாழாய்போன லஞ்சம் இதிலும் மூக்கை நுழைத்து விடுகிறது. பிறகென்ன...? "அளவுக்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைத்திருக்கிறீர்கள், தொழிலாளர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிக்கவில்லை" என்று ஏதாவது விதிமுறை மீறல்களை சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் விதித்து வசூல் செய்து பாக்கெட்டை நிரப்பும் ஆயுதமாகத்தான் இந்த ரெய்டு நடவடிக்கைகள் இருக்கிறது. இதுவரை அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஏழாயிரம் பண்ணை பாண்டியன் பயர் ஒர்க்ஸ், வெம்பக்கோட்டை ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் உள்பட 3 பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ் மட்டுமே நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
போட்டுக்கொடுக்கும் பெரிய பட்டாசு ஆலைகள்

சிவகாசியில் பெரிய பட்டாசு ஆலைகளை விட இப்போது சின்ன பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சின்ன ஆலைகளின் தயாரிப்புகள்  பெரிய நிறுவனங்களின் பட்டாசுகளுக்கு இணையாக இருப்பதால் இவற்றின் விற்பனையை பதம் பார்க்கிறது. எனவே பெரிய நிறுவனங்கள் தொழில்போட்டி காரணமாக அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு சின்ன ஆலைகளை குறி வைத்து சிக்க வைப்பதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பியிருக்கிறது. பெரியது, சின்னது என்று இரண்டுக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டியினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி பீதியோடு காத்திருக்கிறது.

 
எவ்வளவு பேர் செத்தாலும் 3 ஆயிரம் ரூபாய்தான் அபராதம்

பட்டாசு தொழிலில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் வெடி விபத்துக்களில் 200க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.ஆனால் வெடி விபத்துக்களில் எவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் இ.பி.கோ 304 பிரிவின் கீழ் 'விபத்து ' என்று வழக்குப் பதிவு  செய்யப்படும். பிறகு அஜாக்கிரதையாக செயல்பட்டு, விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலையின் லைசென்ஸ்தாரர், ஃபோர்மென், மேனேஜர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதற்காக நீதிமன்றத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை 3 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமே. இதனால்தான் பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துக்கள் குறித்து ஆலை அதிபர்கள் 'கண்டு கொள்வதில்லை.

 

எனவே பட்டாசு ஆலைகளில் உயிர் இழப்பு ஏற்பட்டால் ஆலை அதிபர் மற்றும் ஃபோர்மேன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்ற குரல், பல்வேறு தரப்பிலும் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் கூட விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டால் ஆலை அதிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஆலை அதிபர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

 
சாட்டையை சுழற்றும் மத்திய, மாநில அரசுகள்

பட்டாசு விபத்துகளுக்கு பேன்சி ரக வெடிகள் தயாரிப்புத்தான் முக்கிய காரணம் என்பதால், இப்போது மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதாவது பேன்சி ரகம் தயாரிக்கும் பட்டாசு ஆலைகளில் இப்போது ஒவ்வொரு 'அறை'க்கும் இடையே இடைவெளி 15 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டதும் தீ மளமளவென்று பிற 'அறை' களுக்கு பரவி உயிர் இழப்பு அதிகரிக்கிறது. எனவே ஒவ்வொரு அறைக்கும் இடையே 40 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

அதுபோல் ஒவ்வாரு அறைகளுக்கும் இடையே சிமிண்ட் ரோடு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 15 மீட்டர் தூரத்தை 40 மீட்டர் தூரமாக்க வேண்டுமானால் பிற பட்டாசு 'அறைகள்' இடிபடும். அதனால் ஒரு பட்டாசு ஆலையில் 20 அறைகள் இருந்தால் அவற்றின் எண்ணிக்கை 10 ஆக குறையும்.

மேலும் சிமிண்ட் ரோடு அமைப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் என்று சொல்லி பட்டாசு ஆலைகள், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது இப்போது நிலுவையில் இருக்கிறது. பட்டாசு ஆலைகளை, இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்க முடியாமல் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

 
பேன்சிக்கு தடை

மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் ஒரு பக்கம் பேன்சி ரக வெடிகள் தயாரிப்புக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என்றால், மற்றொரு பக்கம் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உயிர் இழப்புக்களுக்கு முக்கிய காரணமாக விளங்கும் பேன்சி ரக வெடிகள் தயாரிப்புக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பேன்சி வெடிக்கு தடை விதித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

அதே நேரம் சீனாவில் இருந்து பேன்சி ரக வெடிகள் அதிக அளவில் இறக்குமதியாகும் என்று பட்டாசு ஆலைகள் இதற்கு எதிர்ப்பு கொடி காட்ட தொடங்கியிருக்கின்றனர்.

இன்னும் பல பகீர் தகவல்களை நாளை பார்க்கலாம்...

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க

ஸ் பெ

unread,
May 20, 2013, 12:09:40 AM5/20/13
to panbudan
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 4


 -எம்.கார்த்தி


படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்


 
முதலிப்பட்டி பட்டாசு வெடி விபத்தில் 40 பலியான சம்பவத்தின் வேதனை மறைவதற்குள் 2013ம் ஆண்டு தொடங்கிய 5 மாதங்களுக்குள் இதுவரை சிவகாசி பட்டாசு ஆலைகளில்  13 வெடி விபத்துகள் ஏற்பட்டு 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பேர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தமிழ்நாடு பட்டாசு உரிமையாளர் சங்கத்தலைவர் விஜயக்குமாருக்கு சொந்தமான நாராயணபுரம் ரத்னா பயர் ஒர்க்ஸ்சில் கடந்த ஏப். 28 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை விதிமுறையை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்தததும், தடை செய்யப்பட்ட ' செந்தூரம்' என்ற வேதியியல் கெமிக்கல்லை கொண்டு பேன்சி ரக பட்டாசுகளின் மூலப்பொருளான மணி மருந்தை தயாரிக்கும்போதுதான் வெடி விபத்து ஏற்பட்டது என்று உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது. உளவுத்துறை ரிப்போர்ட்டை படித்த முதல்வர் ஜெயலலிதா மூடு அவுட் ஆகினாராம்.

அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் ஜெயலலிதா

நாராயணபுரம் விபத்தில் 8 பேர் பலியான துயர சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் அடுத்தடுத்து விளாம்பட்டி அருகே மீனாட்சி பயர் ஓர்க்ஸ்சில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். அதுபோல் செங்கமலநாச்சியார்புரத்தில் நடந்த மற்றொரு பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியாகினர். அடுத்தடுத்து நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். சட்டசபை கூட்டத்தொடரின் போது பட்டாசு ஆலைகளில் நடந்த வெடி விபத்துக்களும், கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் பற்றியும் எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தன.

மேலும் பட்டாசு ஆலைகளின் விதிமுறை மீறல்களை தடுக்க வேண்டிய அதிமுக அரசின் அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு சாதகமாக நடப்பதினால்தான் உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளன என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தின.

உடனே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் சட்டசபையில், "வெடி விபத்துகளுக்கு காரணம் மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரின் அலட்சிய போக்குத்தான்" என்று பதில் சொல்லி எதிர்கட்சிகளின் தாக்குதல்களை சமாளித்தார். இதையடுத்துதான் முதல்வர் ஜெயலலிதா பட்டாசு ஆலை விபத்துக்கள் விவகாரம் குறித்து சீரியஸாக எடுத்துக்கொண்டார். சிவகாசி பட்டாசு ஆலைகளில் என்ன தான் நடக்கிறது; ஏன் இத்தனை உயிர் இழப்புகள்; அதிகாரிகள் ஒழுங்காக செயல்படுகிறார்களா? என்று விசாரித்ததோடு, பட்டாசு ஆலைகளின் விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர் ஷீலா

பாலாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகளிடம் சீறி விழுந்தாராம்.

 
வேகம் எடுத்த அரசின் நடவடிக்கைகள்

பட்டாசு ஆலை தொடர்பான விபத்துக்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பான அதிகாரிகளின் ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் அதுவரை ஏதோ பெயரளவுக்குத்தான் நடந்து கொண்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா தலையீட்டுக்கு பிறகு பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக அதிகாரிகளின் நடவடிக்கைகள் இப்போது தடதடக்க தொடங்கியுள்ளது. மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் ரெய்டு நடத்தி, விதிமுறை மீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு இதுவரை 36 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த போலீஸ் எஸ்.பி.

முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டுக்கு பிறகு பட்டாசு ஆலைகளின் வெடி விபத்து தொடர்பாக போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதுவரை பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு எவ்வளவு உயிர்கள் பலியானாலும் போலீஸை பொறுத்த வரை, நாம் ஏற்கனவே கூறியபடி அது இ.பி.கோ., 304 என்ற செக்ஷனின் கீழ் விபத்து என்று வழக்கு பதிவு செய்யப்படும். பட்டாசு ஆலை லைசென்ஸ்தாரர் மற்றும் ஃபோர்மென், மேனேஜர் ஆகியோர் மீது பெயரவில் இந்த வழக்கு பதிவு செய்யப்படும். பிறகு கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று அவர்கள் சுதந்திரமாக வெளியே உலா வருவார்கள். வழக்கம் போல் பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி ஜரூராக நடக்கும்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இப்போது நராயணபுரம் வெடி விபத்து சம்பவத்துக்கு பிறகு விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன், பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை மீறியதால் விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்புகள் ஏற்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் பட்டாசு ஆலையின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே பட்டாசு ஆலை அதிபர்கள் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

கலக்கத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள்

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற எஸ்.பி. மகேஸ்வரின் அதிரடி அறிவிப்பு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் எஸ்.பி.யின் இந்த புதிய அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று சிவகாசியில் நேற்று அதிரடியாக ரோடு மறியிலில் ஈடுபட்டனர். ஆனால் எஸ்.பி. மகேஸ்வரன் விடாப்படியாக அறிவிப்பை வாபஸ் பெற முடியாது. பட்டாசு உரிமையாளர்கள் விபத்து ஏற்படாத வகையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாய்வது உறுதி என்று சொல்லவும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வாய் அடைத்து போய் விட்டனர்.

 
கறார் காட்டிய அமைச்சர் செல்லப்பாண்டியன்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சிவகாசியில் கடந்த 18 ஆம் தேதி பட்டாசு விபத்தை தடுப்பது தொடர்பான பட்டாசு உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்தது.

அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வைகைச்செல்வனும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லப்பாண்டியன், ஒவ்வொரு முறையும் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிர்பலி அதிகமாகும் போது முதல்வர் ஜெயலலிதாவிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் இருப்பதற்கு சின்ன உதாரணம். தமிழ்நாடு பட்டாசு உரிமையாளர்கள் சங்க தலைவர் விஜயகுமாருக்கு சொந்தமான நாரயணபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் விடுமுறை நளான ஞாயிற்றுக்கிழமை ஆலை திறக்கப்பட்டு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது.

அப்போது மணி மருந்து கலக்கும் போதுதான் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட செந்தூரம் என்ற வேதியியல் பொருளை கலக்கும் போதுதான் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது எல்லாம் அப்பட்டமான விதிமுறை மீறல்கள்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைக்கு லீவு விட்டிருந்தால் அந்த 8 அப்பாவி தொழிலாளர்கள் உயிரை விட்டிருக்க வேண்டியதிருக்காது.

எனவே இனிமேல் விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளை இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது" என்று அவரது பேச்சில் அனல் பறந்தது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.

பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிர் இழப்பை தடுக்க முடியுமா? நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு உயிர்பலியை தடுப்பதில் என்ன பிரச்னை என்பது பற்றி நாளை பார்ப்போம்...!

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 3 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 

ஸ் பெ

unread,
May 20, 2013, 4:55:25 PM5/20/13
to panbudan
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

-எம்.கார்த்தி


படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்


சிவகாசி பட்டாசு ஆலையில் நடக்கும் விதிமுறை மீறல்களை தடுத்து உயிர் பலிகளை தடுக்கவே முடியாதா? பதில் சொல்ல வேண்டிய அதிகாரிகள் என்னதான் செய் கிறார்கள்? நிர்வாக ரீதியாக அவர்களுக்கு என்ன பிரச்னை என்று பார்ப்போம்...

 
750 பட்டாசு ஆலைகளை கண்காணிக்க ஒரே ஒரு தாசில்தார்


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சிவகாசியில் முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. தீப்பெட்டி தொழில் வேகமாக வளரத்தொடங்கியது. பிறகு நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது, அவற்றை கண்காணிப்பதற்கு என்று சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு என்று ஒரு தனித்தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்ற இரண்டு பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, இப்போதுவரை அது நீடிக்கிறது. தீப்பெட்டி தொழிலுக்கு பிறகு சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பும் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை, இப்போது 750 யை தாண்டி விட்டது. ஒரே ஒரு தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோரால் அத்தனை தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

வாகனம் இல்லாத தாசில்தார்

தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தாருக்கு புதிய பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்கு வதற்கு முன்பு ஆலையை ஆய்வு செய்வது, விதிமுறை மீறல்கள் நடக்கிறதா என்பதை பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று கவனிக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், இந்த தாசில்தாருக்கு போக்குவரத்துக்கு ஒரு மொபெட் கூட அலுவலகத்தில் இல்லை. சொந்தமாக அவர் வைத்துள்ள டூ வீலர்தான் அவருக்கு துணை. பிறகு எப்படி இவ்வளவு பட்டாசு ஆலைகளை அவர் கண்காணித்து லைசென்ஸ் கொடுத்தார், விதிமுறை மீறல்களை கண்டுப்பிடித்தார் என்பது எல்லாம் அவருக்கே வெளிச்சம்.

கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் 40 பேர் பலியான சம்பவத்தை பார்வையிட வந்த வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பட்டாசு விபத்து பற்றி ஆய்வு செய்தபோதுதான் ஜீப்பே இல்லாமல் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் பணியாற்றிய லட்சணம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்புறம்தான், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இவருக்கு புது ஜீப் வழங்கப்பட்டது.

 
200 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு தனித்தாசில்தார்

சிவகாசி பட்டாசு ஆலைகளின் வெடி விபத்தில் கொத்துக் கொத்தாய் மனித உயிர்கள் பலியாவதை கண்டு மனம் கலங்கிப்போன, இதற்கு முந்தைய விருதுநகர் கலெக்டர் பாலாஜி, விபத்துக்களை தடுப்பது தொடர்பாக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில்,"பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய சிவகாசியில் ஒரு தனி தாசில்தார் மட்டுமே இருக்கிறார். ஆண்டு தோறும் பட்டாசு ஆலைகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வசதியாக 200 ஆலைகளுக்கு ஒரு தனி தாசில்தார் என்று 3 தாசில்தார்கள் 100 தொழிற்சாலைக்கு ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும். அப்போதுதான் பட்டாசு தொழிற் சாலைகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்த முடியும்" என்று கூறியிருந்தார். அரசுக்கு அனுப்பிய அந்த அறிக்கை, இப்போது உயர் அதிகாரிகளின் மேஜையின் ஓரத்தில் ' பாய் போட்டு படுத்து தூங்கிக்கொண்டிருப்பதாக தகவல்!

பட்டாசு தொழில் குறித்த தீவிர ஆய்வு தேவை

கலெக்டர் பாலாஜி பட்டாசு விபத்து பற்றி அரசுக்கு அனுப்பிய அந்த முக்கியமான எச்சரிக்கை ரிப்போர்ட்டில்,"பட்டாசு தொழிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. அரசுக்கும் வணிகவரித்துறை மூலம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் வழங்குவது, கண்காணிப்பது போன்ற முக்கியமான பணிகளில் வருவாய்த்துறை மட்டுமின்றி வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை என்று பல துறைகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.

 

இந்த துறைகளின் மத்தியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. எனவே பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்க வருவாய்த்துறை மட்டுமின்றி பிற துறை அலுவலர்களை கொண்டு பட்டாசு தொழில் மற்றும் அதன் விபத்துக்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தி இந்த தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டும். தீவிர ஆய்வு பணியை முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், ஆய்வு நடத்தி இஷ்டம் போல் இயங்கும் இந்த பட்டாசு தொழிலை வரைமுறைப்படுத்தினால் மட்டுமே அப்பாவி தொழிலாளர்களின் உயிர் இழப்புக்களை தடுக்க முடியும். இல்லையென்றால் பட்டாசு தொழிலில் விபத்துக்களையும், உயிர் இழப்புக்களையும் தவிர்க்க முடியாது" என்று மேலும் கூறியிருந்தார். ஆனால் அந்த ரிப்போர்ட்.டை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினருக்கும் இதே நிலைமைதான்

மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 80 ஆலைகள் மட்டுமே வருவாய்த்துறையின் மாவட்ட வருவாய் அலுவலரின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மீதமுள்ளவை நாக்பூரில் உள்ள மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இந்த அலுவலகத்தின் துணை தலைமை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் சிவகாசியில் இயங்கி வருகிறது. துணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 அலுவலர்கள் மட்டுமே இங்கே பணியாற்றி 600 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணித்து வருகின்றனர்."போதிய அலுவலர்கள் இல்லாததால் எங்களால் முழுமையாக பட்டாசு ஆலைகளை கண்காணிக்க முடிவதில்லை" என்று உண்மையை ஒத்துக்கொள்கின்றனர் இந்த அதிகாரிகள்.

பட்டாசு விபத்து: இபிகோ 304


பட்டாசு தொழில் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை விபத்து ஏற்பட்டு எத்தனை பேர் உயிரை விட்டாலும் போலீஸ் தரப்பில் இபிகோ 304 விபத்து என்று வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலையின் போர்மென், மேனேஜர் ஆகியோரை கைது செய்வார்கள். வழக்கம் போல் பட்டாசு உரிமையாளர்கள் எதையாவது கொடுத்து தப்பி விடுவார்கள்.

இப்போதைய நவீன காலத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டும் பணி நடக்கும் போது திடீரென்று சரிந்து விழுந்தால் கட்டடப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தின் உரிமையாளர், இன்ஜினியர் ஆகியோர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அதுபோல் ஒரு சட்டத்திருத்தம் பட்டாசு தொழிலுக்கும் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக கொலை முயற்சி மற்றும் உயிர் இழப்புக்கு காரணமாக இருத்தல் போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால்தான். ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் போர்மென்கள் விபத்து ஏற்படாத வகையில் ஜாக்கிரதையாக பட்டாசு தயாரிக்க முனைப்பு காட்டுவார்கள்.

 
உயிர் இழப்புகளின் எண்ணிக்கை பட்டியல் கூட இல்லை

பட்டாசு ஆலைகளில் இதுவரை நடந்த விபத்துக்கள் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை குறித்த பட்டியல், இந்த ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் வருவாய்த்துறையினரிடமோ, மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடமோ இல்லை. வருவாய்த்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் விபத்துக்களில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது. இதோ கடந்த 10 ஆண்டுகளில் 178 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்கள் ஏற்பட்டு இதில் 200 பேருக்கு மேல் பலியாகியிருக்கின்றனர். 171 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்கிறது அந்த புள்ளி விபரம். மனித உயிர்கள் மீது இவர்கள் காட்டும் அக்கறைக்கு இது ஒன்றே நல்ல உதாரணம்.

 
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது

பட்டாசு ஆலைகள் விபத்து தொடர்பாக கலெக்டர் ஹரிகரனிடம் பேசினோம். ''ஃபேன்சி ரகங்கள் தயாரிக்கும்போது என்ன மாதிரியான கெமிக்கல்கள் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக தடை செய்யப்பட்ட செந்தூரம் என்ற வேதியியல் பொருளை பயன்படுத்துகின்றனர். அதுபோல் வானத்தில் அதிக உயரத்தில் போய் வெடிக்க வேண்டும் என்பதற்காக சி.என். காட்டன் ஆயில் என்ற தடை செய்யப்பட்ட கெமிக்கலை கலக்கின்றனர். 

வருவாய்த்துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் லைசென்ஸ் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால், பட்டாசு ஆலையில் தினமும் என்ன கெமிக்கல் கலக்குகிறார்கள், அனுமதி பெற்ற வெடிகளை மட்டுமே தயாரிக்கிறார்களா என்பதை பக்கத்தில் இருந்து யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் மாவட்டத்தில் 750 ற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தினமும் அவற்றை கண்காணிப்பதற்கு போதிய அலுவலர்கள் இல்லை. 

பட்டாசு தொழிலை செய்ய அரசு லைசென்ஸ் கொடுக்கிறது. நம்மை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிலாளர்கள் உயிர் முக்கியம் என்று நினைத்து ஒவ்வொரு ஆலை அதிபர்களும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட கெமிக்கலை பயன்படுத்தாமல் இருப்பதும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறாமல் இருப்பதும் ஆலை அதிபர்களின் கையில் தான் இருக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்லுவார்கள். அதுபோல்தான் பட்டாசு தொழிலும்" என்றார்.

 பிணங்களை அடகு வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமா?  இனி, பட்டாசு ஆலை அதிபர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை: புதிய தொடர் நாளை...

Reply all
Reply to author
Forward
0 new messages