வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
நாகூர் ரூமி
கடந்த மூன்று நாட்களாக இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இன்று முடித்தேன். அந்த வாசிப்பு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த வித்தியாசம் முதலில் மொழி சார்ந்தது. ஒரே படைப்புக்குள் இரண்டு மூன்று விதமான -- ஆனால் பொருத்தமான -- மொழி நடை கொடுக்க முடிந்திருக்கிறது என்ற வியப்பு சார்ந்த வித்தியாசம் அது. இதை இரா. முருகனின் சாதனைகளில் ஒன்று என்று சொல்வேன்.
கதை என்று பெரிசாக ஒன்றுமில்லை. இது ஒரு வரலாற்று நாவலும் இல்லை. ஆனால் முற்றிலும் கற்பனையான ஒன்று என்றும் சொல்லிவிட முடியாது. நிகழ் காலத்தில் வாழும் ஒருவன் தனது வேர்களைக் காண முயலும் பாவனையாக நாவல் உருப்பெற்றுள்ளது. இதில் பல விஷேஷங்கள் உண்டு.
Back to the Future என்று ஒரு திரைப்படம் வந்தது. காலயந்திரம் ஒன்றில் ஏறிக்கொண்டு அதன் நாயக நாயகியர் அதில் பயணித்து கடந்த காலத்துக்குள்ளும் எதிர்காலத்துக்குள்ளும் நுழைந்து பார்ப்பதை விவரிக்கும் படம். அதே போன்ற ஒரு நாவல்தான் அரசூர் வம்சம்.
அரசூர் என்ற சொல்லே ஒரு குறியீடாக எனக்குப் படுகிறது. ராஜபரம்பரை வாழ்ந்த ஊர் என்பதாக எடுத்துக்கொள்ள முடியும். அரசர்கள் ஆண்ட ஊர் அரசூர். எனவே இதை ஒரு representative தலைப்பாக, அல்லது ஊராக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, கேரளா என்று இரண்டு மாநிலங்களிலும் மாறி மாறி நிகழ்ச்சிகளை நடத்திச் செல்கிறது நாவல்.
நமது முன்னோர்களை, அவர்களது வாழ்க்கையை மறுபடியும் ஒரு திரைப்படம்போல் பார்க்கவும் பதிவு செய்யவும் முடிந்தால் எப்படியிருக்கும் ? அதுதான் இந்த நாவல்.
மொழி

இந்த நாவலின் தனிச்சிறப்பு இதன் மொழிதான். தமிழின் பரிமாணங்களை அது சுட்டுகிறது. பார்க்க முடிகிறது. இந்த நாவல் முழுவது விரவியிருப்பது பிராமண பாஷை. அதிலும் கலப்பில்லாத சுத்த பிராமண பாஷை. இதற்கடுத்தபடியாக, நம்பூதிரிகள் பயன்படுத்தும் மலையாள பிராமண மொழி. மூன்றாவதாக ஜமீந்தார் அல்லது ராஜா பயன்படுத்தும் மொழி. இந்த பாத்திரங்கள் ஒவ்வொருவரும் பேசும் மொழி தனியானது. மற்றவர்கள் பேசும் மொழியிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. இந்த வேறுபாட்டை சரியாகக் கொடுப்பதென்பது சாதாரண காரியமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. அதிலேயே ஊறித்திளைத்திருக்க வேண்டும்.
எனது பல கதைகளில் நான் நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால் பக்கம் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் மொழியைப் பயன்படுத்தியிருப்பேன். காரணம் நான் அவர்களிலிருந்து வருபவன். என் ரத்தத்திலும் எலும்பு மஜ்ஜைகளிலும் இருக்கும் மொழி அதுதான். அதைக் கதையில் கொடுப்பதற்கு நான் எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. தொடங்கிவிட்டால் போதும். அது தானாகப் பிரவகிக்கும்.
அதைப் போன்ற அனுபவத்தில் தோய்ந்த மொழியைத்தான் இந்த நாவல் எனக்குக் காட்டுகிறது. இந்த மொழியில் உயிர் இருக்கிறது. உணர்ச்சிகள் இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அடையாளப்படுத்துவதில் பிரதான பங்கு அவர்களின் மொழிக்கு உண்டு. ஒரு சமுதாயத்தினரின் கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் அவர்களுடைய மொழி பிரதிபலிக்கிறது. அதைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமுதாயத்தினரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது போதாது.
இந்த வகையில், தி.ஜானகிராமன், லா.ச.ரா. புதுமைப் பித்தன் போன்றவர்கள்கூட நாவலில் செய்யாத ஒரு சாதனை இந்த நாவலில் சாத்தியமாகியிருக்கிறது என்று நான் சொல்வேன். சமகாலத்தில் நம்மோடு வாழும் எழுத்தாளர்களின் பலத்தை அங்கீகரிக்க வேண்டியதும் மதிக்க வேண்டியதும் நமது கடமை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில் இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி மிகமிக சிலாகிக்கத்தக்கது. நம்முடைய கவனிப்புக்குரியது.
சில உதாரணங்கள்.
'எல்லோரையும் போலக் கல்யாணத்துக்கும் காதுகுத்துக்கும் நவக்கிரஹ ஹோமத்துக்கும் போய் நாலு காசு பார்க்காமல் இப்படி சதா சர்வ காலமும் தகனம், கல் ஊன்றுதல், பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பனம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம் என்று அலைவானேன் ? ' -- திவசப் பிராமணனாகவே காலம் கழிக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் ஒருவரின் நினைப்பு இது.
'அதோடுகூட, சின்ன வயசுப் பையன்களோடு இழைய வருகிற ஸ்திரிகளையும், ஒரு புஞ்சிரி பொழிந்த மாத்திரத்தில் புளகாங்கிதமடைந்து விசேஷத்துக்கு வந்த பெண்குட்டியை சதா ஸ்மரித்துக்கொண்டு அலைகிற குட்டன்மாரையும், போதும் நிறுத்தணும் என்று சமிஞ்கையாச் சொல்லி விலக்க வேண்டியிருக்கிறது. ' -- இது மலையாள பிராமணத் தமிழ்.
மலஜலம் கழித்தல்கூட அந்த சமுதாயத்தினரின் பிரத்தியேக பாஷையிலேயே சொல்லப்படுகிறது:
'காமாட்சி விசர்ஜனத்துக்காக கையில் செம்பொடு தோட்டத்தில் கழிப்பறைக்குப் போயிருக்கிறாள். '
'புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக்கொள்ள வந்தபோதே... '
'விசர்ஜனம் ', 'பிரம்ம செளசம் ' ஆகிய சொற்கள் மலஜலம் கழிப்பதற்கான வெறும் இடக்கரடக்கலாக (euphimism) எனக்குப் படவில்லை. இவற்றின் பின்னால் சில நம்பிக்கைகள் உள்ளன. அவை என்ன என்பதை அறிந்தவர்கள் எடுத்துரைத்தால் நல்லது.
முக்கியமான இடங்களிலேனும் இந்த பாஷைக்கு அருஞ்சொற்பொருள் மாதிரி ஏதாவது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் இதில் எனக்குள்ள ஒரே வருத்தம்.
ஒரு ராஜா, அவருடைய ராணி, சேடிப்பெண், ராஜாவுக்கு நிகழ்காலத்தை அறிமுகப்படுத்தும் பனியன் சகோதரர்கள் -- என்ன வித்தியாசமான பெயர்! -- புகையிலை வியாபாரம் செய்து பணக்காரர்களாகிவிட்ட சுப்பிரமணிய அய்யர், சங்கரன், சாமிநாதன், சுப்பம்மாக் கிழவி போன்றோர் அடங்கிய பக்கத்து வீட்டு பிராமணக் குடும்பம், கேரளாவில் மூன்று தலைமுறையாகச் சமையல் செய்து பிழைக்கும் கிட்டாவய்யன், அவன் மனைவி சினேகாம்பாள், அவளுடைய பறக்கும் அப்பா வயசன், ஈமக் கிரியைகள் செய்து பிழைக்கும் சுந்தரகனபாடிகள் என சில குடும்பங்களைச் சுற்றிச் செல்கிறது நாவல்.
இந்த நாவலில் வரும் ராஜா உண்மையில் ஒரு ராஜாவே அல்ல. வெறும் ஜமீந்தார்தான். அதுவும் பிரிட்டிஷ்காரனிடம் -- துரைத்தனம் -- மானியம் பெற்று அதில் ஜீவனம் நடத்துபவர். அந்த மானியத்தில் அவருக்குக் கிடைக்கும் சாப்பாடு என்ன என்கிறீர்கள் ? கேப்பைக் களியும் புளிக்குழம்பும் ! ஆனாலும் ராஜா. இந்த பின்னணியில் அவருடைய சொல்லும் செயலும் பிரத்தியேக அங்கதச் சுவையை வழங்குகின்றன.
'யானை மாதிரிப் பிளிறிக் கொண்டு வரும் ஒரு ராட்சச இரும்பு யந்திரம் ' என்று ஆஸ்டின் கார் வர்ணிக்கப்படுகிறது. யானை அம்பாரி, பல்லக்கு ஊர்வலம் என்று ராஜா போலவே வாழ்ந்துவிட்ட ஜமீந்தாரின் மனம் காரையும் மிருகமாகவே பார்க்க வைக்கிறது.
மாந்திரீக யதார்த்தம் (Magical Realism)
தமிழில் மாந்திரீக யதார்த்தத்தை சிறப்பாகச் செய்யக் கூடிய இரண்டு பேர்களில் இரா.முருகன் ஒருவர் என்பது என் கருத்து. (இன்னொருவர் ஜீ.முருகன்). கற்பனையும் யதார்த்தமும் கைகோத்துக் கொண்டு, ஏன், கட்டியணைத்துக் கொண்டு கட்டிலில் கிடப்பதுதான் மாந்திரீக யதார்த்தம்.
இந்த நாவலில் பல இடங்களில் இது பயன்படுத்தப் படுகிறது. சோழிகளில் இறந்த முன்னோர்கள் வந்து பேசுதல், வயசன் என்ற கிழவர் பறந்து செல்லுதல், இறந்த ஆவிகளோடு உயிரோடு இருக்கும் சாமிநாதன் கூடுதல், வெளவால் சுப்பம்மாக் கிழவியை புணர முயற்சித்தல் என.
திவசச் சோறு சாப்பிடவந்து, 'நான் உனக்கு நூறு இரு நூறு வருஷம் முந்தினவடா கழுதே ' என்று சொல்லும் ஒரு முதிர்கன்னியின் ஆவியோடு மொட்டை மாடியில் கூடிக்கொண்டிருக்கும்போது நடக்கும் தீ விபத்தில் செத்துப் போகிறான் சாமிநாதன்.
சோழிகளை உருட்டிப் போடும்போது முன்னோர்கள் அதிலிருந்து பேசுகிறார்கள் என்ற கற்பனை ரொம்ப அழகானது. மஹாபாரதம், பகடை, சோழி, மங்காத்தா, டாரட் கார்டுகள் என சோழிக்கும் அதையொத்த விைளையாட்டுகளுக்கும் ஒரு புராதனம் உண்டு. அந்த புராதனத்தை நாவலாசிரியர் மிகச்சரியாகப் பயன்படுத்துகிறார். சோழிகளை உருட்டும்போது அதிலொன்று உருண்டு வாசல் பக்கம் ஓடி அதிலிருந்து நம் முன்னோர் பேசினால் இனி நமக்கு அது ஆச்சரியமாக இராது என்றே தோன்றுகிறது.
இந்த நாவலின் மாந்திரீக யதார்த்தக் கூறுகளில் முக்கியமானது முன்னோர்கள் சோழிகளில் பேசுவதும், சுப்பம்மாக் கிழவி வாயில் வந்து பாடுவதும். அவள் பாடுவது பூராவுமே அடுத்தவரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்துவதாகவே இருக்கும்.
'பட்டப் பகலில் கதவையெல்லாம் மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துக்கொண்டு கயிற்றுக் கட்டிலை இழுத்துப்போட்டுக் கவிழ்ந்து படுத்துக் கலவி செய்யும்போது கட்டில் கால் முறிவது பற்றி சுப்பம்மாக் கிழவி பாடிக்கொண்டிருப்பது உள்ளே இருந்து கேட்டது '. (இப்படிப் பாட்டாய்ப் பாடி, பாடாய்ப் படுத்தும் கிழவிகள் எங்கள் சமுதாயத்திலும் உண்டு)!
வக்கிர சமுதாயம்
மாந்திரீக யதார்த்தம் மூலமாகவும், அதற்கு வெளியிலும் இந்த நாவலில் காட்டப்படும் முன்னோர்களின் சமுதாயம் ஒரு வக்கிரம் பிடித்த சமுதாயமாக உள்ளது. எதைப்பார்த்தாலும் வக்கிரமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இறப்புகூட அவர்களுக்கு பாலுணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாவலில் தொடர்ந்து வரும் அடி நாதமாக, உள் இழையாக இது உள்ளது.
ஒரு வக்கிரத்தில்தான் நாவலே துவங்குகிறது.
'குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள். ராணி சொன்னாள் '.
இதுதான் முதல் அத்தியாயத்தின் துவக்கமே. ராணியின் ஆறுதலுக்காக வயசான ராஜ அவள் தலையை வருடுகிறார்.
'சிகைக்காயும் வாசனைப்பொடியுமாக தொடுவதற்கு இதமாக இருந்தது அவளுடைய முடி. இப்படியே அவளை உள்ளே அழைத்துப்போய்க் கூடினால் வம்சம் விருத்தியாகக் கூடும். ' என்று நினைக்கிறார்.
கேரளாவில் பெண்கள் மேல்துண்டு அணிவதில்லை என்று கேள்விப்பட்டதை ராணியிடம் சொல்கிறார். அவள் அதை அநியாயம் என்று சொல்கிறாள். அவர் அதை ஆமோதித்தாலும், 'மலையாளக் கரைக்கு ஒரு தடவையாவது போய்ப்பார்த்துவிட்டு வர உத்தேசித்திருந்தார் '.
தூண்களைப் பார்த்தால் அவருக்கு தனக்கு போகம் சொல்லிக்கொடுத்த செண்பகவல்லியின் தொடைகள் ஞாபகம் வருகின்றது.
ராஜாவின் மாமனார் புஸ்தி மீசைக்கிழவன் இறந்ததும் அவருக்கான ஈமச்சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிழவனை துடைத்துக் கொண்டிருக்கும்போது, 'ஏ மருது, தாத்தனை இடுப்புக்குக் கீழே அழுத்தித் துடைக்காதே. பொங்கிப் பூரிச்சு எளுந்துடுவாரு. அப்புறம் குழிக்குள்ளே உடம்பு போகாது ' என்று ஒரு 'கமண்ட் ' வர அனைவரும் சிரிக்கிறார்கள்.
ஒரு கிழவி வந்து பிணத்தை மடியில் போட்டுக்கொண்டு அழுகிறாள். அப்போது ஒருத்தன், 'அப்பத்தா, போதும் எழுந்திரு. தாத்தன் மறுபடி எழுந்தா நீ மாங்கா கடிக்க வேண்டிப் போகும் ' என்கிறான். மறுபடியும் சிரிப்பலை.
சுப்புராம வாத்தியாரின் வசவும் திட்டும் சங்கரனுக்கு ஞாபகம் வருகிறது. 'உங்கப்பன் கோமணத்தை அவுத்த நேரம் ராவு காலம்டா பிரம்மஹத்தி. எட்டு மாகாணி ரெண்டா ?எந்தத் தேவிடியாப் பட்டணத்துலே ? ' என்று அவர் கேட்பாராம்.
சங்கரனுக்கு அவர் கேள்விக்கான பதில் தெரிந்த காலத்தில் அவன் நினைத்துக்கொள்கிறான் : 'எட்டு மாகாணி அரை என்று அரை என்று அவரிடம் சொல்லவேண்டும். கொட்டக்குடி தேவிடியாளின் அரைக்கட்டு மனதைப் போட்டு இம்சைப் படுத்துவதையும் சொல்லலாம். அவருக்குக் காது கேட்பதில்லை இப்போது '.
சுப்பம்மாக் கிழவியை விட்டுவிட்டுப் போன புருஷன் காசிக்குப் போய் கோசாயிகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறான். 'நீண்டு தரையைத் தொடும் ஆண் குறியை ஊன்றியபடி ' அவன் நின்று கொண்டிருப்பதாகத் தகவல் வருகிறது.
இதை மாந்திரீக யதார்த்தத்திலும் சேர்க்கலாம். யார் யாரை விட்டுப் பிரிந்தாலும், எப்போதும் பிரியாமல் 'நின்று கொண்டிருப்பது ' 'அது 'வாகத்தானிருக்கும் என்ற உட்குறிப்பு ரசிக்கத்தக்கது.
சுப்பம்மாக் கிழவியும் தனக்கு இளமை வந்துவிடுவதாகவும், ஓடிப்போன தன் கணவன் வெளவால் ரூபத்தில் வந்து தன்னைப் புணர்வதாகவும் கற்பனை செய்து கொண்டு கிடக்கிறாள். நடந்ததை மற்றவர்களிடம் அவள், 'என்னை இங்கே தொட்டு இப்படி விரிச்சு ' என்று விளக்கத் தொடங்குகிறாள். கல்யாணி அம்மாள் சுப்பம்மா நெகிழ்த்திய உடைய அவசர அவசரமாகச் சரிசெய்கிறாள்.
'அவர்களுக்கு யார் மேலும் மதிப்புக் கிடையாது. சாமுத்ரி மகராஜாவே வந்தாலும் நாலு அடி தாண்டி அந்தாண்டை நிற்க வைத்து, அம்பலத்தில் சந்தனத்தை விரலால் சுண்டிக் கையில் விழ எறிவார்கள். வெய்யில் தாழ அம்பலத்தில் இருந்து திரும்பும்போது வெடி வழிபாடு நடத்தும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மூத்திரம் ஒழிக்க உட்கார்ந்துவிட்டு, லிங்கத்தைப் பிடித்த பிடி நழுவாமல் நாட்டுத் துப்பாக்கி போல் நீட்டிக்கொண்டு அப்படியே குளத்தில் இறங்கிச் சுத்தம் செய்து கொள்வார்கள். அங்கே குளிக்கிற ஸ்திரிகள் பார்த்துத் தலை கவிழ்ந்து கொள்ள, யாதொன்றையும் சட்டை செய்யாமல் கெளபீனத்தை முடிந்துக்கொண்டு மெல்லக் கரையேறுவார்கள் ' -- இது நம்பூதிரிகள் பற்றிய தகவல். எவ்வளவு நுட்பமான தகவல்!
புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணக் குடும்பத்தின் சாமிநாதன் எப்போது பார்த்தாலும் கிராமஃபோனில் -- 'பழுக்காத்தட்டு ' என்று நாவலில் சொல்லப்படுகிறது. இந்த சொல்லை எங்கிருந்து ஆசிரியர் பிடித்தார் என்று தெரியவில்லை! -- சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அதை ஒப்பாரிப்பாடல் என்றே ராஜாவும் மற்றவர்களும் வர்ணிப்பதிலிருந்து அது அகார சாதகத்தில் துவங்கும் ஹிந்துஸ்தானி சங்கீதமாக இருக்கலாம் என்ற குறிப்பு கிடைக்கிறது. அதைக் கேட்கும்போது கேட்பவர்க்க்கு என்ன நிகழ்கிறது ?
'பூணூலைக் காதில் இடுக்கிக்கொண்டு அவர் (சுப்பிரமணிய அய்யர்) விசர்ஜனம் செய்ய உட்காரும்போது கிளர்ச்சி ஏற்படுத்தி ஸ்கலிதத்தை உண்டாக்குகிறது அந்த சங்கீதம் ' என்கிறது நாவல்!
சாதாரணமாகப் பேசும்போதுகூட படுப்பது பற்றிய படிமத்தை ஒதுக்கிவிட்டு அவர்களால் பேசமுடியவில்லை. 'என்னவாக்கும் எல்லோரும் ஆத்தை மட்ட மல்லாக்க திறந்து போட்டுட்டு எங்கே போய்ட்டேள் ? '
'அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல் இருக்கு தெரியுமா ? '
'கீழே ஒன்னா ரெண்டாடா என்றான் மருதையன் '.
ஆசிரியரின் நுட்பமான கிண்டலுக்கு மூதாதையரின் நம்பிக்கைகளும் தப்பவில்லை. யந்திரம் செய்கிறார் ஜோசியர் அண்ணா. ஆனால் 'மூலைக்கு ஒன்றாக தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்த சதுரத்தகடு ஒன்னரை அடி நீள அகலத்தில் முடிந்தது '.
ராஜா அமர்வதற்கு இருக்கை போட உத்தரவு கொடுக்கிறார். 'காரியஸ்தன் உள்ளே போய் ஆசனம், ஆசனம் என்று ஆசனவாய் தெறிக்கக் ' கத்துகிறான்.
ஆனால் இதெல்லாம் ஒரு சமுதாயத்தவரின் மனநிலையைக் காட்டுகிறதேயல்லாமல் நகைச்சுவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதில் படைப்பாளி வேண்டுமென்றே செய்ததாக எங்குமே படவில்லை.
ஒரு இடத்தில், 'பாட்டுப் பெட்டியும் நூதன வாகனமும் உனக்குத் தேவையில்லை. மலையாளக் கரையில் போய் முலை தெரியக்காட்டி நடக்கிற சுந்தரிகளைப் பார்ப்பதும்தான். அவர்கள் எல்லோருக்கும் கண்ணுக்குள்ளும் மனதிலும் உறைந்து கிடக்கும் அவமானவும் ஆத்திரமும் உனக்குத் தெரியாது. அது உன்னைச் சுட்டுப் போடும். உடம்பு பஸ்பமாகிப் போவாய் ' என்று முன்னோர்கள் ராஜாவை எச்சரிக்கும்போது, இந்த சமுதாயத்தினரைப் பற்றிய சித்தரிப்பில் இருக்கும் யதார்த்தத்தின் நிச்சயத்தன்மை உறுதிப்படுகிறது.
உன்னிப்பான கவனிப்பு
ஒரு நல்ல எழுத்தாளனின் கவனம் அபாரமானது. அவன் பார்வையில் இருந்து வாழ்வின் நுணுக்கமான அசைவுகள் எதுவுமே தப்புவதில்லை. பாரசீகத்திலிருந்து வரும் இசைக்கலைஞர்களைப் பற்றிய ஒரு வர்ணனை இது :
'வயிற்றில் நிறையத் தக்கவைத்துக் கொண்டு அபான வாயு வெளியேற்றும்போது அதில் நூதனமான இசையை உண்டாக்கிக் காட்டுகிற வித்துவான்கள் அவர்கள்.
யமகம், பின்முடுகு, முன்புடுகு, திரிபு என்றெல்லாம் எழுத்தெண்ணிக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண என்று நீட்டி முழக்கிப் பாடி சிருங்கார ரசம் துளும்பப் பதம் பிரித்துப் பொருள் சொல்லும் வித்துவான் '.
'பணம் ? பணமிருந்தால் காலத்தில் முன்னாலும் பின்னாலும் போய் நினைத்ததை வாங்கி உபயோகித்து சுகித்து இருக்கலாம் ' என்ற வரிகளில் ஒரு கவிதைத் தன்மை இருக்கிறது.
'கிழவி தொங்கத்தொங்க வளர்த்த காதில் ' என்று சொல்லும் இடமும், 'ஒற்றை வேட்டியோடு நடக்கிறது ஆசாரஹீனம். கெளபீனத்தைச் சேர்த்தால் இரண்டு வஸ்திரம் ' என்ற இடமும் நல்ல உதாரணங்கள்.
ஒரு கட்டுக்கோப்பான சமுதாயம் சில காரணங்களினால் சிதைகிறது. அந்தக் காரணங்கள் எவை ? முக்கியமாக அது பொருளாதாரமாக இருக்கிறது. புனித தோமையன் செய்த அற்புதங்களினால் பிராமணர்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார்கள் என்பது ஒரு விளிம்பு நிலை யதார்த்தமே. அப்படி மாறியவர்கள் விழுக்காடு மிகமிகக் குறைவு. கிட்டாவய்யன் ஜான் கிட்டாவய்யனாக கிறிஸ்தவக்கு மாறுவதற்கு பணம்தான் காரணம். இது ரொம்ப சூசகமாக நாவலில் இறுதியில் சொல்லப்படுகிறது.
மதமாற்றம், ஜாதிக்கு ஒவ்வாத வியாபாரம் செய்தல் இவற்றுக்கெல்லாம் ஒரு சமுதாயம் எப்படி உட்படுகிறது, இந்த மாற்றங்களினூடே மாறாததாக எது இருந்து வந்துள்ளது என்பதையெல்லாம் அப்படி மாறிய சமுதாயத்தினரின் மொழியிலேயே சொல்கிறது இந்த நாவல்.
சங்கரன் பகவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊஞ்சலில் அவளோடு கூடுகிறான். ஆனால் அவனுக்கு அது சாமிநாதன் அதே ஊஞ்சலில் ஆவியோடு கூடியமாதிரி இருக்கிறது.
எல்லாம் பழுக்காத்தட்டு போல சுழன்று சுழன்று மறுபடி மறுபடி நிகழ்ந்தபடி இருக்கும்
என்று நாவலின் இறுதியில் வரும் வரிகள் நாவலின் மையத்தைச் சுட்டுவதாக நான் நினைக்கிறேன்.
இந்த சுழற்சியில் முதலே முடிவாய், முடிவே முதலாய் ஆகிறது. அதனால்தான் நாவலின் கடைசி அத்தியாயத்தில் அரசூர் பற்றி எழுதிவிட்டேன் என்று ஆசிரியர் சொல்லும்போது, 'என்னத்தை எழுதினே போ, இப்பத்தானே ஆரம்பிச்சே ' என்று முன்னோர்கள் பதில் சொல்கிறார்கள்.
அரசூர் வம்சம். இரா.முருகன். கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, டிசம்பர் 2004. பக்கங்கள்464. விலை ரூ 175/-
சங்கரன் சிரித்தான்.
வியாபாரத்துலே சகுனமாவது ஒண்ணாவது.
உள்ளே இருந்து ஐயணை உமி எடுத்துவந்து கணக்குப் புத்தகத்தில் தூவினான்.
வேறே பக்கத்துலே எழுதுங்க சாமி.
இவனை அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்தான் சங்கரன்.
முப்பது சிப்பம் உள்ளே தனியா இருக்கு. எடுத்திட்டுப் போய் தொண்டிக்கு ஏத்தி அனுப்பிடு.
நாலு பக்கம் தள்ளிப் புதுக் கணக்காக சிப்பத்துக்கு ஒண்ணே காலணா வீதம் பதிந்து எழுதினான்.
ராவன்னாமானா தெக்கூர் வகையில் பற்று ரெண்டு ரூபா ஐந்து அணா ஆறு காசு. முன்பணம் வாங்கிய வகையில் ஒரு ரூபா எட்டணா. நிலுவை.
கூட்டெழுத்து. இவன் எழுதியது புரியாமல் போன வாரம் பரசுராமன் எழுத்துக் கூட்டிப் படிக்க முயற்சி செய்து சிரித்தது நினைவு வந்தது.
அம்பலப்புழையில் இருந்து வந்தவன் அவன். சுப்பிரமணிய அய்யரின் தமக்கை மகன்.
அம்மாஞ்சி. என்னடா இது. அம்மாஞ்சிக் கணக்கா இருக்கேடா. இப்படி எழுதியா இங்கே ஒப்பேத்தறேள் ?
அம்பலப்புழையில் மலையாளத்தில் நிறுத்தி நிதானமாக எழுதிக் கணக்கு வழக்கு வைக்க நாயர்கள் உண்டாம். ரூபாய் அணா பேச்சே இல்லை. சக்கரம் தான் எல்லாம்.
அவன் நம்பூத்திரி போல, தரவாட்டு நாயர் போல எல்லாம் பேசிக்காட்டினான். ஹ ஹ என்று புரண்டு வர மாப்பிள்ளைமார் என்ற துருக்கர்கள் பேசும் மலைப்பிரதேச மலையாளத்தையும் வெகு வினோதமாக உச்சரித்தான்.
சாமி. ஆச்சு முப்பது சிப்பமும் வண்டியேத்தியாச்சு. வீட்டுலே விசேசம்னாரு அய்யா. வெத்திலை பாக்கு வாங்கிட்டு ஓடிவந்துடறேன்.
ஐயணை வேகுவேகுவென்று தலையில் முண்டாசை இறுக்கிக் கொண்டு நடந்தான்.
உதிரியாக இனிமேல் யாராவது புகையிலை வாங்க வரலாம். வெய்யில் நேரத்தில் வருவது குறைச்சல் தான். வெய்யில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் கடையில் கூட்டம் இருக்கும்.
சங்கரன் கணக்கு மேசைக்குப் பக்கமாக மல்லாக்கப் படுத்தான். அவன் மாரில் கவிழ்ந்தவள் அவனை விட வயதானவள். கண்ணும் மாருமாக கை இரண்டும் அவளை வளைக்க எழுந்தன.
கண்ணில் தூக்கம் கவிந்து வந்தது.
புகையிலை வாடையும் தேயிலைத் தோட்ட வாடையுமாக சுற்றிச் சூழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் சபேசய்யரோடு கடையில் உட்கார்ந்திருப்பது போல் பிரமை சங்கரனுக்கு.
அவன் படகேறி அங்கே போய்த் திரும்பி இந்த ஆவணி அவிட்டத்துக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.
ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் தரையைத் தேய்த்து சங்கரனுக்குப் பதிமூன்று வயதானபோது சுப்பிரமணிய அய்யர் அவனை யாழ்ப்பாணத்துக்குத் தன் தம்பி சபேசய்யர் வசம் இருந்து வியாபாரம் பழக அனுப்பி வைத்தார்.
சபேசய்யரும் புகையிலை வியாபாரத்தில் தான் மும்முரமாக இருந்தார். இரண்டாம் தலைமுறைப் புகையிலை வியாபாரிகள் அடுத்த தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.
சபேசய்யர் தன்னை சபேசன் பிள்ளை என்று கடல் கடந்த இடத்தில் சொல்லிக் கொண்டார். பூணூலைக் கழற்றி வைத்ததோடு அவனையும் கழற்றச் சொன்னார். அவன் சங்கரலிங்கமானான்.
பிராமணர்கள் சைவப்பிள்ளைமார்களுக்குக் காரியஸ்தர்களாக இருந்த பிரதேசம் அது. அவர்கள் பேச்சிலும் பிராமணக் கொச்சை அழிந்துபோய் ஊர்ப் பேச்சோடு ஒன்றாகப் போயிருந்தார்கள்.
சங்கரய்யரை விட சங்கரலிங்கம் எல்லா விதத்திலும் தோதாக இருக்கும் என்று யோசனை சொன்ன சபேசய்யரால் அவன் பேசுகிற விதத்தை மட்டும் கடைசிவரை மாற்ற முடியவில்லை.
அவரோடு மலைப் பிரதேசத்துக்குப் பிரயாணப்பட வேண்டி வந்தது.
பசுமை விரிக்கும் தேயிலைத் தோட்டங்கள். குடியேறி வந்த இந்தப் பக்கத்துக் காரர்கள். வெற்றிலை மென்று துப்பும் பழக்கத்திலிருந்து மீளாதவர்கள். உழைத்த களைப்புத் தெரியாமல் இருக்க கள்ளை மாந்திப் போதை தலைக்கேற ஏற்றப்பாட்டு பாடுகிறவர்கள். ஏற்றமும் கமலையும் வயலும் இனி ஆயுசுக்கும் அவர்களுக்குத் திரும்ப அனுபவமாகாது என்று சங்கரனுக்குப் பட்டபோது அவனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.
ஆனாலும் அவன் புகையிலை விற்க வந்தவன். இருக்கிற பழக்கம் போதாதென்று இதுவேறே. வாயில் அடக்கிப் பழகினால் திரும்பத் திரும்ப அதக்கி மென்று சாறை விழுங்கி லகரி ஏற்றி ஆசுவாசத்தைத் தரக்கூடிய வஸ்து.
சிப்பம் சிப்பமாக விற்றான். கங்காணிகளோடு உடன்பாடு செய்துகொண்டு அவர்கள் மூலம் நிரந்தரமாக வருமானத்துக்கு வழிசெய்து விட்டுத் திரும்பினான்.
சங்கரலிங்கம் பிள்ளைவாள். சபாஷ்.
சபேசன் பிள்ளை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து நாலு வருஷம் சென்று ஊருக்கு அனுப்பியபோது இங்கே புதுவீடு எழும்பி இருந்தது.
பக்கத்திலே ஜமீந்தார் கிரஹத்தை இக்கினியூண்டாக்கிவிட்டுச் சடசடவென்று உயர்ந்த காரைக் கட்டடம். நீள நெடுக வெள்ளைச் சுண்ணாம்பும் செம்மண் காவியுமாக அந்தஸ்தாக நின்ற வீடு.
ஜமீந்தார் மாளிகையின் கருங்கல் வனப்பு இல்லாவிட்டாலும் உயரம் காரை வீட்டை எடுப்பாக்கிக் காட்டியது.
சுப்பிரமணிய அய்யர் அக்ரஹாரத்தில் இருந்த பழைய வீட்டை வேதபாடசாலை ஆக்கி இருந்தார். லாஹிரி வஸ்து விற்றுக் காசு சேர்ப்பதற்குப் பிராயச்சித்தமாக அதைச் செய்திருந்தார்.
வீடு முழுக்கச் சுற்றி வந்து மாடிக்கு வந்தான் சங்கரன்.
பெரியம்பி உள்ளே இருக்கான். பார்த்துட்டு வா. மத்த நாள்னா நன்னாப் பேசுவான். பழகுவான். அவனைப் பார்க்க முன்னூறு நானூறு வருஷம் கழிச்சு இருக்கப்பட்டவன் எல்லாம் வருவான். வாசல்லே இருந்து மாடிக்குப் போறதுக்கு தனிப் படிக்கட்டே அவனுக்காகத்தான். ஆனா இன்னிக்குப் பவுர்ணமி. யாரும் வரமாட்டா. நீ போய்ப் பாரு. என்ன, கொஞ்சம் அவஸ்தையா நடந்துப்பான். அவன் போக்குலே விட்டுடு. நாளைக்குச் சரியாயிடுவான்.
சுப்பிரமணிய அய்யர் அவன் மாடிப்படி ஏறும்போது சொன்னார்.
தமையன் சாமிநாதனா அது ? சாமிநாத ஸ்ரெளதிகளாகக் கம்பீரமான குரலில் ருத்ரமும் சமகமும் சொல்லிக் கொண்டு மடத்தில் வேதவித்தாக இருக்க வேண்டியவன் ஒட்டி உலர்ந்த தேகமும் குத்திருமலுமாக இருட்டு அறைக்கு நடுவே நக்னமாக நின்று சுயமைதுனம் செய்தபடி சிரிக்கிறான். பின்னால் ஒரு வினோதமான பெட்டியிலிருந்து ஒப்பாரி ஒலிக்கிறது.
வம்சமே அழியறது பாருடா அம்பி.
தரையில் விந்துத் துளிகளைக் காலால் மிதித்து அரைத்து அரைத்துத் தேய்த்தபடி சாமிநாதன் நகர்ந்துவர, சங்கரன் அவசரமாக வெளியே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
அவனுக்கு மனம் முழுக்க வேதனை கவிந்து வந்தது. அடைத்த அறைக்குள்ளிருந்து இன்னும் சத்தமாக ஒப்பாரிப் பாட்டு வந்தபோது பெருங்குரலெடுத்துக் கூடவே அழ வேண்டும் என்று தோன்றியது.
சங்கரனைப் போல் சராசரி இல்லை சாமிநாதன். ஞான சூரியன் என்பார் சுப்பிரமணிய அய்யர் தன் சீமந்த புத்திரனைப் பற்றிப் பெருமையாக.
சாம வேதத்தை ஊன்றிப் படித்துக் கிரஹித்து ஸ்ருதி மாறாமல் ஓதி ஸ்ரெளதிகளாக அங்கீகாரம் வர ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்கு மனம் புரண்டு போனது.
சங்கரன் ஏட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சுவடி தூக்கிப் போன கடைசி வருடம் அது.
வீட்டு விசேஷத்துக்காக இறங்கி வந்த மூத்த குடிப் பெண்டுகளில் கன்னி கழியாமலே இறந்து போயிருந்த யாரையோ சாமிநாதன் மந்திரத்தால் கட்டிப் பகல் நேரத்தில் கூடியதால் சாபம் ஏற்பட்டதாக சுப்பம்மாக் கிழவி ஒருதடவை பாடியபோது வீட்டில் எல்லோரும் அதை நிறுத்தச் சொன்னார்கள்.
பாதி புரிந்தும் புரியாமலும் சங்கரன் படகேறி சபேசய்யரைத் தேடிப் போனான் அப்புறம்.
கன்னி கழிந்த அந்த மூத்தகுடிப் பெண் வீட்டில் நடந்த அடுத்த விசேஷத்தின் போது, சுப்பம்மாள் நாக்கில் இருந்து எல்லோரையும் காதுகேட்கச் சகிக்காத வார்த்தைகளால் வைது தீர்த்து இறங்கிப் போனதோடு வீட்டையும் மாற்றி இங்கே வந்து விட்டார் சுப்பிரமணிய அய்யர்.
இந்த வீட்டிலும் அந்த மூத்த குடிப்பெண்ணின் சாபம் சூழ்ந்திருந்ததாகத் தோன்ற மற்ற முன்னோர்களைக் கூப்பிட்டுப் பேசி அவள் அடுத்த ஜன்மம் எடுத்து இதையெல்லாம் மறக்க நடவடிக்கை எடுத்தாள் அவர்.
அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த சிசுவுக்கும் சேர்த்து இந்தக் கடைத்தேற்றுதலைச் செய்ய வேண்டி வந்ததால் பத்து இருபது நாள் தொடர்ந்து நீண்ட சடங்குகள் காரணமாக ஏகமாகச் செலவானதாகச் சபேசய்யர் சங்கரனிடம் ஒருதடவை சொன்னார்.
மூத்தகுடிப் பெண்ணின் உபத்திரவம் இல்லாமல் போனதோடு சாமிநாதனுக்கு அவள் ஆசிர்வாதத்தால் வெள்ளைக்கார தேசத் தர்க்கம், தத்துவம், விஞ்ஞானம் என்று எல்லாம் கூடி வந்தது. ஆனாலும் அவள் கருவில் இருந்து அழிந்த சிசு சபித்துப் போட்டதில் பவுர்ணமிகளில் அவன் ஸ்திதி மோசமாகி விடும்.
திரும்பி வந்த தினத்தில் சாமிநாதனைப் பார்த்துவிட்டு சங்கரன் வெளியே வர, எதிரே புகையிலை அடைத்த இருண்ட அறை. கதவைத் திறந்து உள்ளே போனான்.
ஈரமும், வாடை கவிந்தும் இருந்த இருட்டில் தேயிலைத் தோட்டங்களை நினைத்துக் கொண்டான் சங்கரன். அங்கே கேட்ட ஏற்றப்பாட்டுக்களை நினைவில் கொண்டு வர முயன்றபடி அறையில் மேற்கு வசத்தில் இன்னொரு கதவு மூலம் வெளியே வந்தான்.
முன்னால் நிமிர்ந்து பார்க்க கூரை வேயாத மொட்டைமாடி உசரமாக நின்றது.
வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறினான்.
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.
குனிந்து பார்க்கலாமோ.
பார்த்தான்.
அந்தக் கண் இரண்டும் சங்கரனின் மார்பைத் துளைத்துப் போனதுபோல் இருந்தது.
கழுத்தில் தாலி இருக்கிறது. கல்யாணமான ஸ்திரி. தன்னை விட வயதானவளாக இருக்கக் கூடும்.
அவள் கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். சங்கரன் அவசரமாகக் கீழே இறங்கியபோது மை தீற்றிய அந்தக் கண்களும் கூடவே வந்தன.
இது நித்தியப்படி வழக்கமாகிப் போனது.
அதாவது மாதத்தில் மூன்று நாள் சங்கரன் மாடி ஏறுவதில்லை. மற்றப்படி கடைக்குப் போகிற நேரத்தை இதை உத்தேசித்துக் கவனமாக மாற்றிக் கொண்டான் சங்கரன்.
என்ன, ஒரு அரை மணிக்கூறு தாமதித்தால் என்ன போச்சு ? ராத்திரி திரும்பி வர நேரம் பிடிக்கிறதில்லையா ?
குனிந்து பார்க்கலாமோ. பெண்டுகள்.
அம்பி வெய்யில்லே மொட்டை மாடியிலே என்ன பண்ணிண்டு இருக்கே ? ஜபம் பண்றியா ?
சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தபோது பரசுராமனும் கைப்பிடிச் சுவர் ஏறி மேலே வந்தான் போன வாரம். அன்றைக்குப் பகலில் அவன் அம்பலப்புழை திரும்ப உத்தேசித்திருந்தான்.
மேலே இருந்து இரண்டு ஜோடிக் கண்கள் பார்த்தது தெரிந்த ராணி அப்புறம் பார்வையை உயர்த்தவே இல்லை.
அம்பி, நீ அம்பலப்புழைக்கு வாயேன்.
பாதித் தூக்கத்தில் பரசுராமன் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.
போகலாம். அங்கே மாடி இருக்குமோ.
(தொடரும்)
அத்தியாயம் பத்தொன்பது
ராஜா நாற்காலி போட்டுத் திண்ணையில் குந்தி இருந்தார். எதிர்த் திண்ணையில் கேதத்துக்கு வந்தவர்கள் அவருடைய மூத்த மைத்துனனுக்குத் தலையில் பரிவட்டமாக லேஞ்சி கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான்.
புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான்.
அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும் வைத்திருக்கிறவன். எல்லாம் அவன் கட்டிய புலியடிதம்மம் பெண்பிள்ளை கொண்டு வந்தது. ராஜாவுக்கு அவள் எதோ உறவு முறையில் சகோதரமாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவருக்கு புலியடிதம்மம் சம்பந்தம் வாய்த்திருக்கும். சட்டமாக நிலத்தில் வேலையாட்களை விரட்டிக் கொண்டு, தோப்பில் தேங்காய் பிடுங்கிப் போடுவதைக் கணக்குப் பண்ணிக் கொண்டு முழங்காலுக்கு மேலே கட்டிய ஒற்றை வேட்டியும் மேலே தறித் துண்டுமாக நின்றிருப்பார்.
அரண்மனையில் உட்கார்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதை விட உசத்தியா என்ன அதெல்லாம் ?
இல்லை என்று உறுதியாகத் தலையசைத்து எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருந்த மொட்டையனைக் கனிவோடு பார்த்தார் அவர்.
எல்லோருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் அவர்.
கட்டலாமா ?
யாரோ கேட்டார்கள். மொட்டையன் தலையை ஆட்டுகிறான். உருமால் தலையில் ஏறுகிறது. வந்தவன் துக்கம் ஏற்பட்டது போல் முகத்தை வீங்க வைத்துக் கொண்டு எழுந்து கொட்டகையில் இட்டலி தின்னப் போகிறான்.
காலையிலிருந்து இதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது அலுப்புத் தட்ட ஆரம்பித்தது ராஜாவுக்கு. எழுந்து கொஞ்சம் காலாற நடமாடி விட்டு வந்தால் என்ன ?
செம்மண் நிறத்தில் அலையடித்துக் கொண்டிருந்த நல்ல தண்ணி ஊருணி மனதில் வந்தது. ரம்மியமான பிரதேசம். போன தடவை இங்கே வந்தபோது புஸ்தி மீசைக் கிழவன் ஜீவியவந்தனாக இருந்ததால், ஒரு சாயங்கால வேளையில் குதிரையில் ஆரோகணிக்க வைத்துக் கூட்டிக் கொண்டு போய் வெகு வினோதமாகக் காட்டினான் அந்த நீர்நிலையை.
முரண்டு பிடிக்கும் குதிரையும், லகானைப் பிடித்தபடி கூடவே வந்த சிப்பாயும், ஊருணிக்குப் பக்கம் அனுமார்சாமி கோவிலும் அங்கே சுக்காக உலர்ந்த வடைகளைக் சணல் கயிற்றில் கட்டி சாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகக் கொடுத்த கன்னட பாஷை பேசும் குருக்களும் நினைவில் வரத் தவறவில்லை.
எச்சில் படாமல் விண்டு வாயிலிட்டு வடைகளை ருசித்துக் கொண்டு, ஊருணியில் தண்ணீர் தூக்கிப் போன படி இருந்த பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு இருட்டும் வரை உட்கார்ந்திருந்த அந்த இடத்துக்கு இன்னொரு முறை போய் வந்தால் என்ன என்று ராஜா யோசித்தார்.
தொரெ
குனிந்து வணங்கி ஒரு பணியாள் தாம்பாளாத்தில் வாழை இலை பரத்தி அதன் மேல் எதையோ வைத்து இன்னொரு இலையால் மூடிக் கொண்டு வந்து நீட்டினான்.
மேல் இலையை மெல்லத் தூக்கிப் பார்த்தார் ராஜா. லட்டு உருண்டை நாலும் கார சேவும்.
வக்காளி, சாப்பிட வச்சே ஒழிச்சுடுவானுங்க போல இருக்கே. அதுவும் முழுச் சைவமான பதார்த்தங்கள். எண்ணெய்ப் பலகாரங்கள். நொடிக்கொரு தரம் இப்படித் தின்றால் ஊரில் இருக்கப்பட்ட ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் சந்ததியாவது விருத்தியாவது. வைத்தியன் மூத்திரக் கொல்லையில் இடது கையால் பறித்த கண்ட பச்சிலையையும் சாறு பிழிந்து பவ்யமாக வணங்கிக் குடிக்கக் கொடுப்பதை விழுங்குவதை விட மயானம் போவதே மேல்.
அந்தத் தட்டை நீட்டியவன் நீட்டியபடியே குனிந்து நின்றிருந்தான். வேண்டாம் என்று மறுக்கவும் மனம் இல்லாமல் ராஜா ஒரு லட்டை எடுத்து உதிர்த்து அசை போட ஆரம்பித்தார். கூட அந்த அனுமார்சாமி கோவில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு வண்டியை உடனே சித்தம் பண்ணுங்கள். நல்ல தண்ணி ஊருணிப் பக்கம் போய் வர வேணும்.
ராஜா நேராகப் பார்த்துக் கொண்டு உத்தரவு செய்தார். யாராவது செய்து விடுவார்கள் என்று தெரியும்.
மூன்று லட்டு உருண்டைகளும் கால் வீசை கார சேவும் வாயில் அரைபட்ட பிறகு பின்னால் சத்தம் கேட்டது.
சாவுத் தீட்டு இருக்கும் போது சாமி கோவிலுக்கு யாராவது போவார்களா ? உங்களுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது ?
ராணிதான். பக்கத்தில் குனிந்து சொல்லவே, காதை உஷ்ணம் தகித்துப் போட்டது.
அது எனக்குத் தெரியாதா என்ன ? கோயிலுக்குள் எல்லாம் போக மாட்டேன். அந்த ஊருணிக் கரையில் கொஞ்சம் லாந்தி விட்டு வந்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்டம் தேய்ந்து போயிடுத்து பெண்ணே.
சின்ன மைத்துனனின் பிள்ளைகள் அதற்குள் குதிரை வண்டியைச் சித்தம் பண்ணிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தார்கள்.
விரசா வந்துடுங்க. துஷ்டிக்கு வந்தவர்கள் ஒருத்தொருத்தராக் கிளம்புவார்கள் இனிமேல். சொல்லிக் கொண்டு போக முடியாதில்லையா ? கண்ணசைத்து உங்களின் மேலான உத்தரவு இல்லாமல் அவர்களெல்லாம் பிரயாணம் கிளம்புவது உசிதமாக இருக்காதே.
பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது.
'லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ '
மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான்.
தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச் சேர்ந்த தாக்கல் வந்தபோது கழிச்சல்லே போற நான் என்ன ஏதுன்னு கூடக் கேட்க முடியாம மயக்கம் போட்டுச் சுருண்டு கெடந்தேன். சாமி சத்தியமா, நம்ம குலதெய்வம் சத்தியமா.
மொட்டையன் முன்னால் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான் முக்கால் கிழவன் ஒருத்தன். அவனுக்கும் வசதியாக ஒரு இடத்தைப் புஸ்தி மீசையான் தான் போய் விழுந்த இடத்தில் பிடித்து வைக்கலாம்.
பெரியண்ணே, மாமன் சொல்றது நிசம்தான். பாவம் ரொம்பத் தளர்ந்து போயில்லே வந்திருக்காரு. பாரு.
ராணி சமாதானம் செய்து வைக்கப் போனாள்.
உனக்குத் தெரியாது தங்கச்சி. இந்தாளு மருதையிலே சீமைச் சாராயம் அடிச்சுட்டு மேல மாசி வீதி முச்சூடும் இடுப்புலே துணி தங்காமே உருண்டுட்டுக் கிடந்தானாம். கேதம் சொல்லப் போனவங்க சொன்னாங்க.
மொட்டையன் இல்லாத மீசையை நீவிக் கொண்டான். உலகத்தின் துக்கமெல்லாம் மொத்தமாகத் தன்மேல் கவிந்தது போலவும் அதைக் கொஞ்சம் நகர்த்திக் கூடத் தோ:ள் கொடுக்க யாரும் முன்னால் வரவில்லை என்ற ஆதங்கத்தோடும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது.
ஐயோ யாரோ பொரணி பேசற தாயோளி சொல்லியிருக்கான் அப்படி. மருதையாவது மானாமருதையாவது. கொல்லையிலே போய்க் குத்த வைக்கவே உடம்பிலே சக்தி இல்லே. பாரு, வைத்தியனையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்.
வந்த கிழவனோடு அவசரமாக வந்து ஒட்டிக் கொண்ட வைத்தியன் கெச்சலாக, சுறுசுறுப்பாக இருந்தான். இவனிடம் சிட்டுக் குருவி லேகியம் இருக்கா என்று கேட்கலாமா என்று ராஜா ஒரு வினாடி யோசித்தார்.
வண்டிக்காரன் கும்பிட்டுக் கொண்டே நிற்க, குதிரை அலைபாய ஆரம்பித்திருந்தது. அதை நிறுத்திப் பிடித்திருந்தவர்கள் ராஜா எப்போது வண்டி ஏறுவார் அடுத்த வேலைக்குப் போகலாம் என்று காத்திருந்தார்கள்.
வம்பு வழக்கைத் திரும்பி வந்து வேடிக்கை பார்க்கலாம் என்று உத்தேசித்து ராஜா வண்டியேறினார். இவன்கள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இதையே வைத்து நடுராத்திரி வரை அடித்துக் கொள்வார்கள்.
அவர் ஊருணிக் கரைக்கு வந்தபோது இடமே அமைதியாக இருந்தது. ராஜா தண்ணீருக்கு வெகு பக்கத்தில் ஆலமரத்தடி மேடையில் உட்கார்ந்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசையிலும் பார்த்தார்.
செம்மண் தண்ணீர். மரம். கோவில். மேலே எவ்விப் பறக்கும் காக்கைகள். தரையில் தத்தும் மைனா, கிளி, குருவிகள். எல்லாம் இருந்தது. தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் எங்கே ?
ஒருத்தர் கூடவா இல்லை ? ஊரோடு காணாமல் போனார்களா ? இல்லை தான் வருவது தெரிந்து, தூர்த்தன் வருகிறான். துன்மார்க்கன் வருகிறான். ஓடிப் போய் ஒளிந்துகொள் என்று கண்ணுக்கு மறைவாகப் போனார்களா ?
அவர் உள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டதுபோல் சேவகன் முன்னால் வந்து வணங்கி புத்தி என்றான்.
என்னடா பயலே ?
இன்னிக்குக் கோயில்லே பிரதோசமாம். சனம் எல்லாம் அங்கேதான்.
இந்தக் களவாணிகளுக்கு ராஜாவின் நினைப்பு எல்லாம் அத்துப்படி.
அவர் மெளனமாகப் புன்சிரித்தபோது காலடியில் ஏதோ ஊர்கிற மாதிரி இருந்தது. அவசரமாகக் காலை மேலே ஏற்றிக் கொள்ள, ஒரு செருப்பு தண்ணீருக்குள் விழுந்தது.
அடடா நல்ல தண்ணி ஊருணிக்குள்ளாற விழுந்துடுச்சே.
கவலைப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தார் அவர்.
எத்தனை வீர சாகசக் கதைகளில் படித்திருக்கிறார். ராஜ விசுவாசியான வீரர்கள் உயர்ந்த மலைகளில் இருந்தும், அருவியின் நீர்ப்பெருக்குக்கு இடையிலும், பாலைப் பிரதேசங்களிலும் உயிரைத் துச்சமாக மதித்து அரசனின் குறிப்பறிந்து பணியாற்றுவது வழக்கமில்லையோ.
இவன்களுக்கு ஒரு செருப்பை ஊருணிக்குள் கைவிட்டு அளைந்து எடுக்கக் கூடத் துப்பில்லை. போதாக்குறைக்கு எஜமானனையே குற்றம் சாட்டுகிற மாதிரிப் பேச்சு வேறு.
தேர்ந்தெடுத்து நாலு வசவுகளைச் சொன்னார். அதெல்லாம் கலந்து எழுந்து காற்று கெட்ட வாடை அடிக்க ஆரம்பித்தபோது திரும்ப வண்டியேறினார். இன்னொரு கால் செருப்பைச் சுமந்து கொண்டு லொங்கு லொங்கென்று வண்டியோடு கூட ஓடி வந்தவனை அவர் லட்சியம் செய்யவே இல்லை.
சாவு வீட்டில் விளக்கு வைத்து, கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவே இருக்கிறவர்களை எங்கோ பார்த்த நினைவு ராஜாவுக்கு.
கொலைச் சிந்து பாட வந்தவர்கள். புஸ்தி மீசைக் கிழவனைக் கூடத்தில் கிடத்திக் குளிப்பாட்ட நீர்மாலை எடுத்து வந்தபோது வாசலில் நின்று மரியாதையாகக் கும்பிட்டவர்கள்.
யாரோ எடுத்து வந்து ஓசையில்லாமல் பின்னால் நகர்த்திய மெத்தை வைத்த ஆசனத்தில் ராஜா ஆரோகணித்தார். நாலைந்து தீப்பந்தங்கள் இலுப்பை எண்ணெய் வாடையோடு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, கொலைச் சிந்துப் பாடகர்கள் பாட ஆரம்பித்தார்கள்.
வந்தனம் ஐயாமாரே
வாருமம்மா தேவியரே
சாமித்துரை புண்ணியவான்
சீமைத்துரை ஆவதற்கு
பல்லக்கு பரிவட்டம்
பாங்கான தப்புக் கொட்டு
நல்ல தண்ணி நீர்மாலை
நாக்குலேதான் வாக்கரிசி
எல்லாமும் கவுரதையாய்
எசமான்கள் செய்துதந்து
வழியனுப்பி வச்சாரே
வமிசம் செழிக்க வாழ்த்துவீரே.
ஐயாமார் எல்லாம் அவனுக்கு முன்னால் கால் மடித்து உட்கார்ந்திருந்தார்கள். தேவியர் எல்லோரும் முற்றத்தின் விளிம்புகளில் பாதி மறைந்தும் மறையாமலும் வெகு அழகோடு அமர்ந்திருந்தார்கள். தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் எல்லோருமே அப்சரஸ்களாக ராஜாவுக்குத் தெரிந்தபோது புஸ்தி மீசைக்காரனின் ஆசைநாயகியான காது வளர்த்த கிழவி நான் கூடவா என்று சிரித்து வாயில் புகையிலைக் கட்டையை அடக்கிக் கொண்டாள்.
யாரோ முன்னால் குந்தியிருந்த பாட்டுக்காரன் காதில் ஓதிவிட்டு வர அவன் சங்கடமாகப் பார்த்தான். இன்னும் நாலு பேர் எழுந்தார்கள். எல்லோரும் சின்ன வயசு. அவர்களும் பாட்டுக்காரனிடம் ஏதோ கேட்டார்கள்.
அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு புராணக்கதை சொல்ல ஆரம்பித்தான்.
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா.
கச்சு அகற்றிப் பழம்போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்.
கொட்டி முழக்கினார்கள். ராஜாவுக்குக் கொஞ்சம் பசியெடுத்தது.
நிறுத்துலே.
சாயந்திரம் பரிவட்டம் கட்ட மன்றாடியவன் எழுந்து சத்தம் போட்டான்.
இதெல்லாம் இப்போ வேணாம். மொதல்லே கொலைச் சிந்து. அப்புறம் மத்ததெல்லாம். சம்பிரதாயத்தை மீறக்கூடாதுன்னேன். என்ன நான் சொல்றது ?
அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் மைத்துனன் மொட்டையன் ஆமா ஆமா என்று பலமாகத் தலையாட்டினான். எழவெடுத்தவன்கள் சமாதானமாகப் போய்விட்டார்கள். ராஜாவுக்கு எரிச்சல் வந்தது.
ஆமாமா, கொலைச் சிந்துதான் பாடணும் அப்பூ.
துரைத்தனத்தார் போல் சட்டமாகச் சொன்னாள் காது வளர்த்த கிழவி. ராஜாவுக்குள் பிரம்மாண்டமாக ஒரு பசி எழுந்து கொண்டிருந்தது.
தொரே ஒத்தச் செருப்பை என்ன பண்ணனும்னு உத்தரவாகணும்.
சேவகன் காதருகே குனிந்து வேண்டிக் கொண்டான்.
சுட்டு எடுத்துட்டு வாடா. பிச்சுத் தின்னுக்கறேன்.
ராஜா சொன்னது பக்கத்தில் கேட்டிருக்கும்.
சரி பெரிசுங்க சொல்றபடிக்குக் கொலைச் சிந்து மொதல்லே. பொட்டைப் புள்ளைங்க எல்லாம் சாப்பிட்டுப் படுத்தப்புறம் நடுராத்திரிக்கு ரிசிபத்தினி கதை.
மைத்துனனில் பிள்ளைகளில் ஒருத்தன் சத்தமாகச் சொல்ல இளவட்டங்கள் ஏக ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
பாட்டுக்காரர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் குரலில் சலிப்பு குடியேறி இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியபோது, சமூகம் ஆகாரம் பண்ண வர உத்தரவாகணும் என்றார்கள் யாரோ இருட்டில் பின்னால் குனிந்து.
காயடிக்கப் பட்டவனாக இருந்தாலும் அவன் வம்சம் நாலு தலைமுறை வாழட்டும் என்று மனதில் நினைத்தபடி ராஜா எழுந்தார்.
தாது வருசப் பஞ்சம் வரப்போவுதுன்னு வரப்போவுதுன்னு சோசியன் சொல்றான். அது வரும்போது நாம இருப்போமோ இல்லாம மண்ணோட மண்ணா மக்கிப் போவோமோ தெரியலைங்க தொரகளே, தொரசானிகளே. வர்ற கதையைச் சொல்ல நமக்கு வார்த்தை போதாதுங்க. போன கதையைச் சொல்றோம். செவி கொடுக்க வேணும்.
ஒற்றை தப்பட்டை அடக்கி ஒலிக்க குரல் வேண்டுகோளாக எழுந்து வரப் போகும் சுவாரசியத்தைக் கோடி காட்டி, உக்காருங்க என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார்த்தியது எல்லோரையும்.
நூறு வருசம் முந்தி தரணியெல்லாம் காஞ்சு போன ஜனங்கள் பசியோடு பரிதவிச்சுச் செத்த கொடும் பஞ்சம் ஒண்ணு வந்தது.
கொலைச் சிந்துக்காரர்கள் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அது எப்போ ஏற்பட்டிருக்கும் ? ராஜா யோசனை பண்ணிப் பார்த்தார். நினைப்பு எல்லாம் இட்டலி, தோசை, கறிச்சோறு என்றுதான் போனது.
ராஜா உள்கட்டில் உட்கார்ந்தபோது இலை நிறையச் சோறைப் பரிமாறி வாழைக்காயைக் கறியாக்கி வைத்து, புளிக்குழம்பையும் மேலே புத்துருக்கு நெய்யையும் போதும் போதும் என்று கைகாட்ட நிறுத்தாமல் ஊற்றினான் சமையல் காரன். அரண்மனை சமையல்காரனை விடச் சுத்தமாக இருந்தான். அய்யனாக இருப்பானோ ? மாரில் நூலைக் காணலை. அவன் யாராவது வேணுமானாலும் இருந்து போகட்டும். மணமும் ருசியுமாகச் சமைத்திருக்கிறான். அது போதும்.
பிரும்ம குலக் கன்னியகையும் கூடப் பிறந்தவனும் பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போய் பாழுங்கிணத்துலே விழுந்து உயிரை விட்ட சரித்திரம் இது. கல் மனசையும் கரைக்கும் கதையிதனைக் கேட்பீரே எஜமான்களே.
திரும்ப தப்பட்டைகள் உச்சத்தில் முழங்கின. ராஜாவுக்குத் திருப்தியாக இருந்தது. பழுக்காத் தட்டில் ஒப்பாரிப் பாட்டு கேட்கக் கொடுத்து வைக்காத குறைச்சலை கொலைச் சிந்துப் பாடகர்கள் நீக்கி விட்டிருந்தார்கள்.
மழையில்லை தண்ணியில்லே
மரமில்லை செடியில்லே
வானம் பார்த்து வானம் பார்த்து
வாயழுத வயல்காடு
கட்டாந் தரையாச்சு
கரையெல்லாம் கத்தாழை.
அவன் பாட்டுக் குரலை மீறிக் கொண்டு திடாரென்று இன்னொரு குரல் எழுந்தது.
ஆமடா. மழையில்லை. தண்ணியில்லை. கட்டாந்தரையாக் காடு. பஞ்சம் பிழைக்க நான் தான் ஊரை விட்டுக் கிளம்பினேன். பாழும் கிணத்துலே தவறி விழுந்தேன். உசிரை விட்டேன். இப்போ வந்திருக்கேண்டா. பக்கத்துலே தான் இருக்கேன். சாமாவுக்குப் பொண்டாட்டிடா நான். சாமிநாத சிரவுதிகள் தெரியுமா ? ஆத்துக் காரன் பெயரைச் சொல்லக் கூடாதாமே. சொன்னா என்ன ? அவனும் அல்பாயுசிலே போவானோ ? போகட்டுமே. நான் போகலியா என்ன ? ஆனாக்க, கேட்டுக்கோடி எடுபட்டவளே. நீ பாக்கச் சொன்னே. என் கொழுந்தன் பாத்தான். அம்புட்டுத்தான். வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.
ராணி குரல் அது.
ராஜா சாப்பிட்டது தொண்டையில் அடைக்க அங்கேயே நின்றது.
(தொடரும்)
சாஸ்தா ப்ரீதி கழிந்து இலையும், பூவும் பழமும் மஞ்சள் அட்சதையுமாக இரைபட்ட கூடத்தில் சங்கரன் காத்திருந்தான். ஓரமாக அதிரசத் துணுக்கை இழுத்துப் போன கட்டெறும்பும், தூரத்தில் கொல்லையில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கும், நேரம் தப்பிக் கள்ளுக் குடித்த யாரோ உரக்கப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் நடந்து போனதுமாக மதியப் பொழுது ஊர்ந்து கொண்டிருந்தது.
நேற்றைக்கே இங்கே வந்தாகி விட்டது. தெலுங்கர் வீட்டு மச்சில் சங்கரனுக்கு எல்லாச் செளகரியங்களோடும் இருப்பிடம் ஒழித்துக் கொடுத்தார்கள். சுப்பிரமணிய அய்யர் சகலரோடும் மலையாளத்தில் பேசப் பிரயத்தனப் பட்டுக் கொண்டு அந்த வாசல் திண்ணையில் குற்றாலத் துண்டைக் காற்றாடப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கல்யாணி அம்மாள், தெலுங்கு மாமியின் கீர்த்தனங்களைக் கேட்கவும், கூடவே மெல்லிய குரலில் பாடவும் ஆரம்பித்தது இன்னும் ஓயவில்லை.
சுந்தர கனபாடிகள், சுப்பம்மாள், ஜோசியர் அய்யங்கார் என்று ஒரு பெரிய பட்டாளமே அங்கங்கே தூரத்து, நெருக்கத்துச் சொந்தக் காரர்கள் வீட்டில் இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் முன்னாலேயே வந்து தங்கியிருந்தார்கள்.
எல்லோரும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக இந்தப் பெண் பார்த்தல் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. முந்தாநாள் சாயந்திரம் தெலுங்குக் கார வீட்டு மாடியில் வைத்துப் பரசுராமனிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பகவதிக் குட்டியைப் பார்த்தாகி விட்டது.
பாட்டு சொல்லிக் கொள்ள மூக்கும் முழியுமாக வந்த அவளை யார் என்று யாரும் சொல்லாமலேயே சங்கரனுக்குப் புரிந்து போனது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டுத் தோற்றத்தில் பகவதிக் குட்டி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து தம்பூரா மீட்டிக் கொண்டிருந்தது தெரிந்த போது இருட்டு கவிய ஆரம்பித்து விட்டது.
அவள் குரலையாவது கொஞ்சம் கேட்கலாம் என்றால், பாட்டு வாத்தியார் தான் விடாமல் பாடிக் கொண்டே இருந்தார். அந்த அழகான பெண்ணுக்கு யுத்தத்துக்குப் போக சகல முஸ்தீபும் செய்து கொடுப்பது போல் என்னத்துக்கு அவர் அடாணா ராகத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. சாயந்திரத்துக்குப் பொருத்தமாக ஒரு வசந்தா, தாபத்தோடு கெஞ்சி அழைக்கும் ஒரு கமாஸ், கம்பீரமான குதிரை பாய்வது போல ஒரு கல்யாணி. எல்லாமே சங்கரனுக்குப் பிடித்த ராகம் தான்.
அடாணா பிடிக்காது என்றில்லை. பால கனகமய பாடினால் சீராம நவமியும் பானக நைவேத்தியமும் தான் நினைவு வருகிறது. கன்னத்தில் போட்டுக் கொண்டு தரையில் நெற்றிபடக் கும்பிட்டு எழ மட்டுமா சங்கீதம் ?
கொட்டகுடித் தாசி கூளப்ப நாயக்கன் காதல் கிரந்தத்துக்கு எல்லாம் நூதனமாக மெட்டமைத்து அபிநயம் பிடிக்கிறாளாம். சங்கரனுக்கு அதெல்லாம் காணக் கொடுத்து வைக்கவில்லை. நாலு தெருவும், செம்மண் பொட்டலும் கடந்து, உடையான் அம்பலம் ஊருணிக்கரை மேட்டில் ஏறி அந்தப் பக்கம் இறங்கினால் கொட்டகுடி. எல்லோரும் போகலாம். சங்கரனும் தான். ஆனாலும் புகையிலைக்கடை அய்யன் என்னத்துக்குத் தாசி குடில் பக்கம் வருகிறான் என்று பேச்சு எழும்.
நாலு காசு கொடுத்துப் புகையிலை வாங்குகிறவன் தூர்த்தனாக இருக்கலாம். துன்மார்க்கனாக இருக்கலாம். கொட்டகுடித் தாசி ஸ்தனம் தோளில் இடிக்கும்படி நெருங்கி உட்கார்ந்து அவள் கொக்கோகத்தை இலை மறை காயாகவோ இல்லாமலோ அபிநயம் பிடிக்கும்போது அவள் ரவிக்கையின் வியர்வை வட்டங்களையும், வெற்றிலையால் சிவந்த உதடுகளையும் முலைக் குவட்டையும் உன்னிப்பாகப் பார்த்து ரசிக்கலாம். அப்புறம் சங்கரன் கடைக்கு வந்து ஒன்றுக்குப் பத்தாக தான் ரசித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.
சங்கரன் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அனுபவிக்கிறதாகவும் தெரியாமல், வேண்டாம் என்று ஒதுக்கியதும் தெரியாமல் தன் பாட்டுக்கு வேலையைப் பார்க்க வேண்டும். அப்போது தான் அந்தஸ்து.
அவன் வந்தவனோடு தோளில் கை போட்டுக் கொண்டு கொட்டகுடித் தாசி வீட்டுக்குள் நுழைந்தால், நாளைக்குப் புகையிலை வாங்க வரும்போது மரியாதையில்லாமல் நிற்பான். எல்லா உரிமையோடும் கடன் சொல்லிப் போவான்.
ஜாகை எல்லாம் வசதியா இருக்கா ?
துரைசாமி அய்யன் யாரையோ கேட்கிறான். சங்கரன் கொட்டகுடித் தாசி பற்றிக் கடன்காரன் வாய் வார்த்தை சொல்வதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
உங்களுக்குத்தான் ரொம்ப அலைச்சல். க்ஷீணம்.
அதெல்லாம் ஒண்ணுமில்லே. இங்கே சவுகரியத்துக்கு என்ன குறைச்சல் ? ராஜ உபசாரம் கெட்டது போங்கோ.
சுப்பிரமணிய அய்யர் சங்கரனின் மடியில் மெல்லத் தட்டி அவனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தபடி, பெண்வீட்டாரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சங்கரன் ஒரு வினாடி திகைத்து அப்புறம் எல்லோரையும் பார்த்துப் பொதுவாகச் சிரித்து வைத்தான். கொட்டகுடித் தாசியை இத்தனை தூரம் கட்டியிழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.
ஒவ்வொருவராக வந்து சேரக் கூடம் நிறைந்து களைகட்டிக் கொண்டிருந்தது. தெலுங்கு மாமி ரா ரா ராஜகோபாலா என்று தேனாகப் பாட ஆரம்பித்திருந்தாள்.
இப்பவே கல்யாணக் களை வந்துட்ட மாதிரி இருக்கு.
பரசுராமனிடம் ஜோசியர் ஐயங்கார் சொன்னபடி பஞ்சாங்கச் சுவடிகளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.
எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். சபையில் ஜாதகப் பரிவர்த்தனையாகி, எல்லாம் பொருந்தியிருக்கிறது என்று அவர் அறிவித்தபிறகு தான் மற்ற சுபகாரியம் எல்லாம் தொடங்கும்.
பொண்ணை அழச்சுண்டு வரலாமே.
சுப்பம்மாள் சொன்னாள். சுந்தர கனபாடிகளின் அகத்துக்காரி ராகுகாலம் கழிஞ்சாச்சோ என்று கேட்டாள்.
அது போய் ஒரு நாழிகை ஆச்சே.
ஜோசியர் சொன்னபோது, சிநேகாம்பாளும், விசாலாட்சியும் கூடத்திலிருந்து மெல்ல எழுந்து உள்ளறைக்குப் போனார்கள். பகவதிக்குத் தலையில் தாழம்பூ வைத்துப் பின்னி, உச்சந்தலையில் சூடாமணி வைத்து நேர்த்தியாகச் சிங்காரம் செய்து கொண்டிருந்த அண்டை அயல் பெண்டுகள் முகம் பார்க்கும் கண்ணாடியை எல்லாத் திசையிலும் திருப்பி அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தர்கள்.
ஆச்சாம்மாடி எச்சுமி ? ஏண்டி கோமதி, பொண்ணை சபைக்கு அழைச்சுண்டு போகலாமா ?
கொஞ்சம் பொறுங்கோ சாலாச்சி மன்னி. சின்னதா ஒரு சாந்துப்பொட்டு கன்னத்திலே வச்சுட்டாப் போதும். காவிலே யட்சிதான். எங்க கண்ணே பட்டு திருஷ்டி விழுந்துடும் போல இருக்கு.
ஐயோ, ஒண்ணும் வேணாம்டா. ஏற்கனவே நான் கோரம். இதுலே கன்னத்துலேயும் மூக்கிலேயும் எல்லா வர்ணத்தையும் ஈஷிண்டு போய் நின்னா வந்தவா எல்லாம் ஒரே சாட்டமா ஊரைப் பாக்கப் போயிடுவா.
பகவதி சிரிக்கும்போது விசாலாட்சிக்குக் குழந்தை போல் தெரிந்தாள். அவள் கல்யாணம் கழிந்து வந்தபோது செப்பு வைத்து விளையாடுவதை நிறுத்திச் சிற்றாடைக்கு வந்த குழந்தை. அப்புறம் விசாலாட்சிக்கு வயதானாலும், பகவதி இன்னும் அப்படியே தான் குழந்தையாகவே இருக்கிறாள்.
பாவாடை தாவணி இல்லாமல், முதல் தடவையாக ஜரிகைப் புடவையைக் கட்டியிருந்த பகவதி நிமிஷத்துக்கு ஒரு தடவை கொசுவத்தை இழுத்துச் சரிபார்த்துக் கொண்டாள். இது இடுப்பில் சரியாக இருக்க, கூடத்துக்குப் போய் எல்லோரையும் நமஸ்கரிக்க வேண்டும். அப்புறம் ஓரமாக உட்கார்ந்து, அவர்கள் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது தரையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பாடும்மா என்று சொன்னதும் நன்னு பாலிம்ப பாட வேணும்.
பகவதிக்கு ஓமனத் திங்கள் கிடாவோ பாட வலிய இஷ்டம். இறையும்மன் தம்பி என்கிற கொட்டாரக்காரன் பாடின கிருஷ்ணனாட்டப் பாடல் அது. நிறுத்தி நிதானமாகப் பாடும்போது நேரம் உறைந்து போகும். வாழ்க்கை முழுக்க அதைப் பாடிக் கொண்டு, கேட்டுக் கொண்டு, சாயந்திரம் அக்ஷர ஸ்லோகம் சொல்லிக் கூட்டுக்காரிகளோடு விளையாடிக் கொண்டு, க்ஷேத்ரத்தில் ஆட்டக்களி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.
அதெல்லாம் முடியாது. பாண்டிச் சீமையில் எங்கோ ஒரு அடுப்படியில் ஒதுங்க சீக்கிரம் வேளை வாய்க்கப் போகிறது.
மூத்ரம் ஒழிக்கணும்னா ஒழிச்சுட்டு வந்துடுடா கொழந்தே. அப்புறம் மணிக்கூறுக்கு ஏந்திருக்க முடியாது.
விசாலாட்சி அவள் கன்னத்தை வருடியபடியே சொன்னாள்.
பகவதி வேண்டாம் என்று தலையாட்டினாள்.
கிளம்பலாமா ?
சிநேகாம்பாள் கீச்சுக் குரலை அடக்கிக் கொண்டு கேட்டது என்னமோ மாதிரி பிசிறிட்டுச் சிதறியது.
சிநேகா அக்கா, நீங்க எப்பவும் போல கீச்சிடுங்கோ. அதுதான் சுபாவமா இருக்கு. இப்படிக் குரலை மாத்திண்டு பேசினாக் குழந்தை பேடிச்சுப் போய் அரையை நனைச்சுண்டுடுவா. அப்புறம் பொடவை வேறே மாத்தியாகணும்.
பகவதி எச்சுமியின் முதுகில் பலமாக ஒன்று வைத்தாள்.
உக்காந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுக் குந்தமா ஆகிட்டேடி நீ. வலி பிராணன் போறது கடன்காரி.
எச்சுமி சந்தோஷமாகச் சிரித்து அவளைத் தோளைப் பிடித்து எழுப்பி விட்டாள்.
மெல்ல அடி வச்சு வாடி குழந்தே. பொடவை தடுக்கறதுன்னா கொஞ்சமா உசத்திப் பிடிச்சுக்கோ.
அதுக்காகத் தொடை தெரிய ஒரேயடியா வழிச்சுக்காதேடி பகவதி. அதெல்லாம் ஆம்படையான் பாத்தாப் போதும்.
கூட்டுக்காரியைச் செல்லமாக அடிக்கப் பகவதி கை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள்.
ஒழிக்கறவா எல்லாம் எனக்குப் பின்னாலே வாங்கோ.
கலகலப்பாக ஒரு கூட்டம் கூடத்தை நோக்கி நகர்ந்தது. மத்தியில் பகவதிக் குட்டி.
சங்கரன் நிமிர்ந்து பார்க்க, பகவதிக் குட்டியின் மை தீட்டின கண்கள் சுவாதீனமாக மனதுக்குள் நுழைந்து அங்கே இருந்த புகையிலைச் சிப்பங்களையும், கணக்குப் பேரேட்டையும் ஒதுக்கித் தள்ளின. கொட்டகுடித் தாசி இன்னும் உள்ளறைக்குள் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே போனாள்.
மாமாவை நமஸ்காரம் பண்ணிக்கோ அம்மா.
வரிசையாகக் கால்கள். நகம் பிளந்தும், பித்த வெடிப்போடும், மஞ்சள் ஏறியும், ஆணிக்குத்து புறப்பட்டுப் புரையோடியும்.
ஒரு ஜதை வயிரம் பாய்ந்த கருத்த கால்களும் அங்கே உண்டு. அந்த ஆகிருதிக்குச் சரியான தோளும், கடுக்கனும், கட்டுக் குடுமியுமாக இருக்கப்பட்ட மனுஷ்யன்.
பகவதிக் குட்டிக்கென்று விதிக்கப்பட்டவன். பட்டவர்.
எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் செய்தாள் பகவதி.
தனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ
சுப்பம்மாள் கன குஷியாக ஆரம்பிக்க, ஜோசியர் அகத்துக்காரியும் கல்யாணி அம்மாளும் அவள் வாயை அவசரமாக வெள்ளைத் துணி கொண்டு பொத்தினார்கள்.
பெண்ணகத்துப் பெண்டுகள் கொஞ்சம் மிரண்டு கொஞ்சம் சிரித்து கொஞ்சம் விலகி உட்கார, ஜோசியர் கை காட்டி அமர்த்தினார்.
மாமி நித்ய சுமங்கலி. இவா பரம்பரையிலே ஏழு தலைமுறை சுமங்கலிகள் அவளோட சதா இருக்கா. எல்லோரையும் அனுக்ரஹிக்கறது தான் அவாளோட ஜோலி. அப்பப்ப அவாளுக்கும் சந்தோஷம் எல்லையில்லாமக் கரை புரண்டு போயிடும். தீர்க்க சுமங்கலிகள் சந்தோஷப் படறதை விட கிரஹத்துக்கு சகல செளபாக்கியமும் கொடுக்கற விஷயம் வேறே உண்டா என்ன ?
சுப்பம்மாள் இப்போது வாய்க்கட்டை நெகிழ்த்தி விட்டுக் கொண்டு வாரணமாயிரம் பாட ஆரம்பித்தாள். ஸ்மார்த்தர்கள் வீட்டில் பாடும் வழக்கம் இல்லை இந்தப் பாசுரம் எல்லாம். ஆனாலும் மூத்த குடிப்பெண்டுகளுக்குப் பிடித்த பாட்டு. எல்லோருக்கும் அது பிடித்துத் தலையாட்ட வைக்க அதிக நேரம் செல்லவில்லை.
கனாக் கண்டேன் தோழி நான்.
சுப்பம்மாள் குரல் இழைந்தபோது விசாலாட்சி மனதில் தேக்கி வைத்த எல்லாச் சுமையும் கரையக் கண்ணீர் விட்டுக் கொண்டு நின்றாள். பகவதிக்கு வேறு ஏதோ உலகத்தில் அடியெடுத்து வைத்தது போல் இருந்தது. அவளுக்குப் புரிந்த பாஷையில் அவளுக்குப் புரிந்த வார்த்தைகளை நயமாகக் கோர்த்த அந்தப் பாட்டு நாள்ப்பட்ட சிநேகிதி போல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.
பொண்ணு ஒரு பாட்டுப் பாடினா கேக்கலாம்.
சுந்தர கனபாடிகள் ஒற்றைத் தும்மலைச் சிரமத்தோடு ரெட்டையாக்கியபடி சொன்னார்.
மாடியிலிருந்து வயசன் மிதந்து கொண்டு தெருத் தாண்டிப் போனபோது பகவதிக் குட்டி நன்னு பாலிம்ப பாட ஆரம்பித்திருந்தாள்.
(தொடரும்)
இது விரமிச்சாத்தான் நமக்குத் தொடங்கலாம்.
படார் படார் என்று வானத்தில் சீறிப்பாயும் வாணங்கள் சில வினாடி அறைக்குள் பிரகாசத்தை விசிறியடித்துச் செல்ல, எம்பிராந்திரி சலித்துக் கொள்கிறான்.
வெடிவழிபாட்டுக்காரன் விந்தி விந்தி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தின் முன்னால் வெடிக்குழாயும் கையுமாக நடந்து போகிறான். துண்டித்துப் போன கால் விரலையும், அது கூடவே வளர்ந்த இன்னும் நாலு விரல்களையும் வைத்துப் போஷித்த சம்புடம் கோயில் துவஜஸ்தம்பம் தாண்டிய புதர்க்குழிக்குள்ளிருந்து காணாமல் போய்விட்ட விசனம் அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்க பிஷாரடி வைத்தியர் வீட்டு அடைத்த கதவைப் பார்த்தபடிக் கடந்து போகிறான் அவன்.
நாதசுவரக்காரன் ஆலாபனையாக ஏதோ சுவரத்தை எடுத்து வீட்டு வாசலில் நின்று விஸ்தாரமாக ஊத, இது வேறே இன்னொரு சல்யம் என்கிறமாதிரி பிஷாரடி சிரிக்கிறார்.
மாப்பிள்ளை அழைப்போட போய்ச் சாப்பிட்டு வந்து சாவகாசமா வச்சுக்கலாமே.
எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொல்ல, எம்பிராந்திரி எரிந்து விழுகிறான்.
சதா போஜனம் தான் நினைப்பெல்லாம் நமக்கு. ஒரு சாஸ்திரத்தை யுக்திபூர்வமா பரீட்சிச்சுப் பார்க்க நமக்கு சந்தர்ப்பம் கிட்டியிருக்கு. பிரயோஜனப்படுத்திக்க வேணாமா அதை ?
எடோ, பப்படமும் பிரதமனும் சோறும் கறியுமாச் சாப்பிட்டு வந்து சாஸ்திரப் பரிசீலனை செய்யக்கூடாதுன்னு யார் சொன்னது ?
சிநேகிதன் சிரிக்கிறான்.
எம்பிராந்திரிக்கும் விருந்துச் சாப்பாடுக்கு எழுந்து போக ஆசைதான். ஆனாலும், அவன் அப்படி எழுந்து போகும் பட்சத்தில் இந்தக் காரியம் இன்னும் தள்ளிப் போகுமே என்ற விசாரம் கட்டிப் போடுகிறது.
எல்லாம் அரசூர் ஜோசியர் வரவோடு ஆரம்பித்தது.
கல்யாண கோஷ்டியில் ஒருத்தராக வந்து இறங்கிய அவர் வெகுவான துன்பத்தோடு கூடி இருந்தார். அரசூர் அரண்மனையில் அவர் நிறுத்திய மகாயந்திரம் ஒருக்களித்துச் சாய்ந்ததில் ஏற்பட்டது அது.
மலையாள பூமிக்குள் அவர்கள் வந்த வாகனங்கள் நுழையும்போது அதிகாலை உறக்கத்திலிருந்து அவரை எழுப்பி உட்கார்த்தி வைத்து தேவதைகள் புகார் செய்ததில் தொடங்கிய கஷ்டம்.
ஏண்டா சோழியா, நீ பாட்டுக்கு பின்னம்புறத்து மண்ணைத் தட்டிண்டு விட்டுட்டே சவாரி. அங்கே எங்களை உக்கார வச்ச ஸ்தலம் என்னமாப் போயிருக்கு வந்து பாரு. போதாக்குறைக்கு ஏழெட்டு பிடாரிகள் அந்தச் சுப்பம்மாக்கிழவி கிட்டே நீ பணம் பிடுங்கிண்டு கொடுத்த தகட்டுலே இருந்து ஏறிண்டு அழிச்சாட்டியம் பண்றா. ஒரு நியாயம் வேணாம் ?
அவர்கள் ஏக காலத்தில் இரைய ஜோசியர் அரண்டு போய் அரையை நனைத்துக் கொள்ளாத குறையாகத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.
மேளதாளத்தோடு குப்புசாமி அய்யனும் தம்பிமார்களும் அரசூர் வரனையும் குடும்பத்தையும் வெற்றிலை பாக்கும், பருப்புத் தேங்காயும் பழமுமாய் எதிர்கொண்டு வரவேற்றுக் கொண்டிருக்க ஜோசியர் அய்யங்கார் பலர் கண்ணில் படுகிற கூச்சமே அற்றுப்போய் மரத்து நிழலில் மூத்திரம் போய்க் கொண்டிருந்தார்.
ஓய் ஓய் பிராமணரே, இங்கெல்லாம் அசுத்தம் பண்ணக்கூடாது. சுகாதாரத்துக்குக் கேடு வர்த்திக்கும் இப்படி எல்லாம் பண்ணினால்.
சின்ன எம்பிராந்திரி அவரைப் பார்த்து இரைந்தது மேளச் சத்தத்தில் அமுங்கித்தான் போய்விட்டது. அவனை நிமிர்ந்து பார்த்த ஜோசியர் கண்ணில் ஆழப் பாய்ந்திருந்த பயம் எம்பிராந்திரியை யோசிக்க வைத்தது.
ஆலப்பாட்டுக் கிழவனுக்கு தேக உபாதையால் உடம்பு லேசாகிப் பறந்து கோயில் கொடிமரத்தை நனைத்தமாதிரி இந்தப் பிராமணனுக்கு ஏதோ மனக் கிலேசம். இல்லாவிட்டால் இப்படிப் போதம் கெட்டுப் பொது இடத்தில் குத்த வைக்க மாட்டான்.
இவன் குப்புசாமி அய்யன் குடும்பத்தவர்கள் கண்ணில் பட்டால் மந்திரம், பரிகாரம் என்று இழுத்துக்கொண்டு போய் இவனும் நாளைக்குப் பறக்க ஆரம்பித்து விடலாம். மூட ஜனங்கள். இவர்களைப் புத்தி தீட்சண்யத்துக்கும் மெய்யான விக்ஞானத்துக்கும் கைபிடித்து அழைத்துப் போகாவிட்டால் இங்கே இன்னும் நாசம்தான் ஏற்படும்.
அவன் ஜோசியரைக் கையைப் பிடித்துக் கூட்டிப் போனது பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு.
பாஷையும் அரைகுறையாகப் புரிய, சொல்வதும் கோர்வையாக வராமல் அய்யங்கார் ஏதோ பரபரவென்று பேசியபடி இருந்தார். பிஷாரடி வைத்தியர் அவர் நாடியைப் பிடித்துப்பார்க்க, சுவாசமும் மற்றதுமெல்லாம் சாதாரண கதியிலே தான் இருந்தது.
இவர் ஏதோ மனக் குழப்பத்தில் இருக்கிறார். கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும் என்று சொல்லி வைத்தியர் அபின் கலந்த திரவத்தைக் கண்ணாடிக் குடுவையில் கலக்கினார்.
சின்ன எம்பிராந்திரி அதை ஆசை ஆசையாகப் பார்த்தான். அந்தக் கண்ணாடிக் குடுவைக்குள் இருந்து விக்ஞானம் அவனை அழைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு உலகம் முழுக்க நேர்படப்போவது இந்த அறிவால்தான். பிஷாரடி வைத்தியர் போல் மருத்துவம் படிக்க அவன் சீக்கிரம் கொல்லத்துக்குப் போகப் போகிறான். தகப்பனார் எம்பிராந்திரி சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும்.
ஜோசியர் அய்யங்கார் பிஷாரடி வைத்தியர் கிரஹத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, குப்புசாமி அய்யன் மனையில் பந்தக்கால் நாட்டி, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் கிரகத்தில் காலை போஜனத்துக்கான ஏற்பாடுகளைச் சித்தமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
துரைசாமி அய்யன் ஒரு பெரிய பாத்திரத்தோடு வந்து சேர்ந்தான்.
இது காப்பியாக்கும். இங்கெல்லாம் புதுசாப் பழக்கமாயிண்டு வரது. அதிகாலையிலே சாப்பிட்டா புத்தி தீட்சண்யமாகுமாம். உடம்பு வலுவேறுமாம். ஏதேதோ சொல்றா. பெரியவா இஷ்டப்பட்டா பானம் பண்ணலாம்.
சங்கரனுக்கு அப்பாடா என்று இருந்தது. வைத்தியும் கோமதி மன்னியும் அவனோடு சந்தோஷமாக ஆளுக்கு ஒரு குவளை வாங்கி அதை ருஜித்துச் சாப்பிட, பெரியவர்களும் என்னதான் இருக்கு இந்த அமிர்தத்துலே, குடித்துத்தான் பார்ப்போமே என்று குவளைக்காகக் கையை நீட்டினார்கள்.
சுந்தர கனபாடிகள் மாத்திரம் குளிக்காமல் பல்லில் பச்சைத் தண்ணீர் படாது என்று கண்டிப்பாகச் சொல்லிக் குளிக்கக் கிளம்பினார். அவருக்கும் குளித்து விட்டு வந்து இதைக் குடித்துப் பார்க்க ஆசைதான். ஆனால் அதுவரை பாத்திரத்தில் பானம் இருக்க வேண்டுமே ?
ஜோசியர் எங்கே திடும்னு காணாமப் போய்ட்டார் ? அவரையும் கூட்டிண்டு ஸ்நானத்துக்குக் கிளம்பலாம்னு பார்த்தேன்.
அவர் சொன்னதும்தான் அண்ணாசாமி அய்யங்காரைக் காணோம் என்று எல்லோருக்கும் உறைத்தது.
அவர் வழியிலேயே நல்ல தூக்கத்தில் வண்டியிலிருந்து கீழே எங்கேயாவது தவறி விழுந்து விட்டாரோ என்று சுகஜீவனம் கரம்பக்காடு கிருஷ்ணய்யர் சந்தேகத்தைக் கிளப்ப, அச்சானியமாப் பேசாதேடா கிருஷ்ணா என்றார் சுப்பிரமணிய அய்யர். ஏற்கனவே ஏகப்பட்ட கஷ்டம். விபத்து. நஷ்டம். அதுக்கும் மீறி நல்ல காரியம் எல்லாம் நடக்க ஆரம்பித்திருக்கிறது.
அதற்குள் சின்ன எம்பிராந்திரி வந்து ஜோசியர் உடம்பு சுகவீனமாகி வைத்தியர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்து ஒருவாய் காப்பி குடித்துப் போனான். இந்தப் பானம் மெய்யான அறிவு வளர்ச்சிக்கு உபயோகமானது என்று வைத்தியர் கருத்துச் சொல்வதாகவும் யாரும் கேட்காமலேயே தகவல் சொல்லிப் போனான் அவன்.
ஜோசியர் அப்போதிலிருந்து வைத்தியர் வீட்டில் தான் கம்பளியைப் போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவர் சொன்னதை எல்லாம் ஒருவாறு கிரகித்துக் கொண்டு பிஷாரடி வைத்தியர் தன் சிஷ்ய வர்க்கத்தைக் கூட்டி அறிவித்தது இப்படி இருந்தது -
இந்த மனுஷ்யன் அவனூரிலே ஏதோ செப்புத் தகட்டை முளையடித்துப் பொருத்தி ஒரு உத்யானவனத்திலே நிறுத்தியிருக்கிறானாம். க்ஷேத்ர கணிதத்தில் விற்பன்னனான இவன் அந்தத் திறமையை உலகம் விக்ஞான பூர்வமாக முன்னேறப் பிரயோஜனப்படுத்தாமல் தேவதையைப் பிடிப்பது, அதைத் தகட்டில் ஏற்றி நிறுத்துவது என்ற மூட நம்பிக்கைகளில் பிரயோகித்திருக்கிறான். இப்போது அந்தத் தகடு என்ன காரணத்தாலோ சரிந்து போனதாக அவனுக்குத் தெரிந்திருக்கிறது. யாரோ ஒருத்தரோ இல்லை ஒரு சிறிய கூட்டமோ யோசித்ததில் உண்டான கதிர்கள் இவனை அடைந்து இது விஷயம் தெரிய வந்தது யுக்தி பூர்வமான நிகழ்ச்சிதான். அந்தத் தகடு திரும்ப இவன் வைத்தபடிக்கே நிமிரும்வரை இவன் ஆரோக்யக் குறைவோடும் மனசில் பீதியும் அதன் மூலம் கூடுதல் அசெளகரியமுமாகவே இருப்பான்.
ஆனாலும் தேவதைகள் உண்டு. அவர்கள் தான் என்னிடம் வந்து முறையிட்டார்கள்.
ஜோசியன் பலமாக ஆட்சேபித்தபோது சின்ன எம்பிராந்திரி அவனுக்குத் தகுந்த தர்க்கபூர்வமான பதில் கொடுக்க வாதங்களை அடுக்க ஆரம்பிக்க, ஜோசியனுக்குப் பின்னால் இருந்து பிஷாரடி வைத்தியர் சைகை காட்டினார்.
அவன் புத்தி பேதலித்து இருப்பதாகவும் அவன் பேசுவதை லட்சியம் செய்யவேண்டாம் என்றும் அவனைப் பேச விடும்படியுமாகவும் அது இருந்தது.
நீங்கள் யாதொண்ணுக்கும் கவலைப்பட வேணாம். எல்லாம் தானே சரியாகப் போகும். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
பிஷாரடி வைத்தியன் இன்னொரு குடுவை திரவத்தைக் கலக்க, எம்பிராந்திரி பிரியத்தோடு அதைச் சிறிய சோதனைச்சாலை விளக்கின் மேல் தூக்கினாற்போல் இடுக்கி கொண்டு பிடித்துச் சூடு படுத்தினான். அவன் முகத்தில் பெருமையும் திருப்தியும் நிரம்பி வழிந்த தருணம் அது.
கல்யாண வீட்டில் நிச்சயதார்த்தப் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதாக, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். நல்ல இட்டலியும், இஞ்சியும், கொத்தமல்லியும் சேர்த்து விழுதாகச் சேர்ந்தரைத்த சம்மந்தியும் காலை விருந்துக்காகத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்தான் அவன் வந்தது.
அபின் கலந்த மருந்தை இன்னொரு குப்பி மாந்தி அய்யங்கார் திரும்ப உறக்கத்தில் வீழ, யுக்திவாதிகளின் குழு கல்யாண வீட்டுக்குப் போனது அடுத்து. விக்ஞான சிந்தனைகளுக்கும் இட்டிலி மற்றும் கொத்தமல்லிச் சம்மந்திக்கும் எந்தவிதமான தர்க்கபூர்வமான மோதலும் இல்லை என்று சொல்லி பிஷாரடி வைத்தியர் காலைச் சாப்பாட்டுக்கு நடந்தபோது மற்றவர்களுக்கும் அது சரியென்று பட்டது.
போகும் வழியிலேயே யோசித்து வைத்தபடி, ஜோசியர் திரும்ப எழுந்தபோது ஆகாரம் கொடுக்கவும், அப்புறம் அவரை அரசூரிலே யாரையாவது தன் நினைப்பு மூலம் செயல்பட வைத்து யந்திரப் பக்கம் கூட்டி வரச் செய்து அதைத் திரும்ப நிறுத்தி வைப்பது என்றும் முடிவானது.
இந்த யோசனை கொடுத்த தெம்பில் அந்தக் குழு உற்சாகமாகக் கல்யாண வீட்டாரோடு கலந்து பழகியதோடு சங்கரனுக்கும் ஊருக்கு வந்த மாப்பிள்ளைக்கான வரவேற்பு உபசாரப் பத்திரத்தைக் கல்யாணப் பந்தலில் வாசித்து அளிக்க வேண்டும் என்று தீர்மானமும் செய்து கொண்டு திரும்பி வந்தது.
ஆனால் அய்யங்கார் எழும்பி உட்கார்ந்தபோது விஷயம் அத்தனை சுலபமாக இல்லை.
இலைப்பொதியில் கல்யாண வீட்டில் இருந்து கட்டி எடுத்து வந்த இட்லி பதினாலையும் அவர் ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித்து வயிற்றைத் தடவிக் கொண்டு மலங்க மலங்க விழிக்க, பிஷாரடி நினைப்புக் கதிர்கள் தத்துவத்தை அவருக்கு விளக்க ஆரம்பித்தார்.
க்ஷேத்ர கணிதமாக இதைச் சொன்னால் புரிந்து கொள்ள எளுப்பமாக இருக்கும் என்றார் அய்யங்கார். அது முடியாத பட்சத்தில் தான் ஸ்நானம் செய்து வந்து மடியாக உட்கார்ந்து தியானம் செய்தபின்னால் காதில் ஓதினால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.
அவர் அந்தப்படிக்கே குளித்து மடி வஸ்திரத்தோடு வர, யுக்திவாதிகள் குழு மறுபடியும் வைத்தியர் வீட்டில் கூடியது. நாலு வேளையும் ஊர்க் கல்யாணத்தில் சாப்பிட்டுக் கொண்டு இப்படி விக்ஞான ஆராய்ச்சி நடத்தத் துணைபோய் உலகம் செழிக்க முன்கை எடுப்பதில் அவர்கள் எல்லோருக்கும் பரம திருப்தி.
ஜோசியர் குளித்து வந்த சுறுசுறுப்பில் பிஷாரடி வைத்தியர் சொன்னதில் சரிபாதிக்குப் புரிந்தது என்று திருப்தியாகத் தலையசைத்தார்.
இந்த மனுஷர் இப்போது பருமனான, பெரிய மீசை வைத்த ஒரு நடு வயசுக்காரனை நினைக்கிறார்.
பிஷாரடி வைத்தியர் உற்சாகமாகச் சொன்னார். ஜோசியரின் மூச்சுக் காற்று படும் நெருக்கத்தில், விக்ஞானத் தேடல் மேன்மையுற அதைச் சகித்தபடி அவர் அமர்ந்திருந்ததால், ஜோசியரின் நினைப்புக் கதிர்களை அவரால் முழுக்க உள்வாங்கி அதை அதி வீர்யத்தோடு கடத்தி விட முடிகிறது என்றார் அவர்.
காலைக் கடன் கழிக்க வல்லாரை லேகியம் சாப்பிட்டுக் கொல்லைக்குப் போன ராஜா தன்னையறியாமலேயே நாலடி பின்னால் எடுத்து வைத்தார் அப்போது.
ஏனடா களவாணி, நான் அற்பசங்கைக்குப் போகும்போது என்ன எழவிற்குத் தடுத்து நிறுத்திக் கூப்பிடறே ? உன் அக்காளைக் காட்டெருமையும் அப்புறம் கழுதையும் கலக்கட்டும் என்று சமையற்காரனை வைதார் அவர். அவன் கூப்பிட்டுத்தான் பின்னால் திரும்பி வந்ததாக நினைத்த அவர் திரும்ப நடக்க, சமையற்காரன் நெத்திலிக் கருவாடை இன்னும் தீய்த்து அதில் எச்சில் உமிழ்ந்தான். ராஜாவுக்குக் காலை ஆகாரத்தோடு கொடுக்க அவன் சமைத்துக் கொண்டிருந்தது அது.
அந்த வர்த்தமானங்களை வைத்தியர் ஆதியோடந்தமாக யுக்திவாதக் குழுவுக்கு அறிவிக்க, அங்கே பலத்த சிரிப்பு நிலவியது. அப்புறம் ஒரு பிராமணக் கிழவி, புகையிலைக் கடைக்கு மூக்குத் தூள் வாங்க வந்தவன், எருமை மாட்டைக் கறக்க உட்கார்ந்த ஸ்திரி, கடைத் தெருவில் மாட்டைக் கிடத்தி லாடமடிக்கிறவன், மயிலிறகு எண்ணெய் விற்கிறவன் என்று ஜோசியர் யார் யாரையோ பகல் முழுதும், இப்போது ராத்திரியிலும் நினைத்து அவர்களை நாலடி நடக்க வைப்பதற்குள் அவருடைய கவனம் கலைந்து போகிறது.
ஜானுவாச ஊர்வலம் பிஷாரடி வைத்தியர் வீட்டைக் கடந்து போனபோது அவர் திரும்பவும் அந்தப் பிராமணக் கிழவியை முழுக் கவனத்தோடு நினைக்க, அவள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றாள். அரண்மனைப் பக்கம் நடக்க ஆரம்பித்தபோது வாணவேடிக்கைக் காரன் வேட்டுப் போட, அவள் மூத்தகுடிப் பெண்டுகளே, இப்படி என்னை வாசலுக்கும் உள்ளுக்கும் அலைக்கழிக்கிறது நியாயம்தானா என்று குறைச்சல் பட்டபடி வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்.
கல்யாண வீட்டில் சதுர்க்கச்சேரி நடக்க ஆரம்பித்த சத்தம். சுநாதமாக எழுந்த அந்தச் சலங்கைச் சத்தமும், மிருதங்கச் சத்தமும் யுக்திவாதிக் குழுவை வாவா என்று பிடித்து இழுத்தது.
யுக்தி வாதம் இருக்கட்டும். எங்கேயும் ஓடிவிடாது. நிரம்பின ஸ்தனபாரமும், உருண்ட தோளுமாகப் பெண்கள் நிருத்தமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் தூங்கறேன். நீங்க சாப்பிட்டு வாங்கோ என்றார் ஜோசியர் இன்னொரு குப்பி திரவத்தை பிஷாரடி வைத்தியரிடம் யாசித்தபடி.
அவருக்கு அபின் வாசனை பிடித்துப் போயிருந்தது.
(தொடரும்)
:)
படிச்சிட்டு விமர்சனம் கொடுங்க.
அடுத்தது ஜெமோவோட அனல்காற்று ஏத்திடலாமா?