புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்...........

7,325 views
Skip to first unread message

Kandavel Rajan

unread,
Feb 6, 2010, 1:14:54 PM2/6/10
to tamil2friends, thamizh...@googlegroups.com, panbudan, muththamiz

3.1.1 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வகைமையும் 
 

கவிதைக்குரிய விளக்கங்களாக முதல்பாடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். அவற்றுள் பல புதுக்கவிதைக்கும் பொருந்துவன. புதுக்கவிதையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தமிழ்மரபு தாண்டிய, இக்காலப் புறவுலகக் கவிதைகளும், கவிதைக் கோட்பாடுகளும் காரணமாக அமைந்துள்ளன. ஆகவே புதுக்கவிதையை விளக்க, அதனைப் பற்றிய மேல்நாட்டார் சிந்தனைகளையும் அவற்றை வரவேற்றுப் பயன்படுத்திய தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும் தொகுத்துப் பார்க்க வேண்டும்.
 

3.1.1.1 புதுக்கவிதை - விளக்கம்  
 

மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை வேறுபடுவதை வெளிப்படையாகக் காட்டுவது புதுக்கவிதையின் யாப்பை மீறிய வடிவமைப்பே ஆகும். அதுபற்றிப் பின்னர்க் காண்போம். புதுக்கவிதையின் உள்ளடக்க வேறுபாடு அல்லது புதுமை பற்றி முதலில் காணலாம். கவிதை காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை நமது மரபு எதிர்க்கவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, முன்பில்லாத வேறுவகைப் படைப்பை ‘விருந்து’ எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர். தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் பேராசிரியர் எனும் உரையாசிரியர் “சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்குமாற்றானே செய்யுள் செய்க” (தொல். செய்யு.80) எனக் கூறியிருப்பதையும்,
 

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

(நன்னூல்,462)
 

எனப் பவணந்தியார் கூறியிருப்பதையும் கருதிப்பார்க்க வேண்டும். 
 

 புதுமை  
 

ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு ‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார் (T.S. எலியட் நூற்றாண்டு விழா மலர், மீட்சி, ப.7). “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்று பாரதி சொன்னவாறு எல்லா வகையிலும் புதுமைகளை ஏற்றுப் படைக்கவேண்டும் என்பது புதுக்கவிதையாளர்களின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். தொழிற்புரட்சி, உலகப் போர்கள், அறிவியலின் வளர்ச்சி, மனித உளவியலின் தோற்றம் எனும் இவற்றால் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியம் பெரும் மாறுதல்களை அடைந்தது. இலக்கியம் - கவிதை நிகழ்காலத்தின் எதிரொலிப்பாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றனர். ‘தன் காலத்தில் உயிரோடிருப்பவனே கலைஞன்’ என்ற T.S. எலியட், ‘கவிதை ஒரு புதிய அனுபவத்தை, பழைய அனுபவத்தின் புதிய புரிதலை, சொல்லத் தெரியாதிருந்ததைச் சொல்ல வேண்டும்’ என்றார். ஈழத்து மகாகவி “இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் திலங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட்டுகள்” கவிதையாக வேண்டும் என்றார் (மகாகவி கவிதைகள், ப.3). இவ்வாறு சிந்தனைகளும் கருத்துகளும் மாற்றமடைய நேரும்போது, காலம் காலமாக மனிதன் ஏற்றுப் போற்றிவந்த பல மதிப்பீடுகள் சரியத் தொடங்கின. மதம், கடவுள் பக்தி, ஒழுக்கம், கற்பு போன்ற மதிப்பீடுகளில் புதிய பார்வைகள் தோன்றிக் கவிதைகளில் இடம் பெற்றன. 
 

 புறவயமும் அகவயமும்  
 

எது புதுக்கவிதை? என்பதற்கு ஒருமித்த விடை கூற முடியாத நிலை ஏற்பட்டது. சிலர் கவிதைப் பொருள் புறவயமானதாக (Objective), வெளிப்படையானதாக, வாழ்வின் அப்பட்டப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்றனர். ‘உண்மை பருமையானது’ (Truth is concrete) என்றார் ஹெகல் எனும் அறிஞர் (பிரம்மராஜன், மீட்சி, நவ.1985). ஜெர்மனியக் கவிஞர் பிரெக்ட் போன்றோரின் கவிதைகளில் இத்தகைய புறவயத் தன்மை அமைந்திருந்தது. முன்பு காணப்படாத அரசியல் கவிதைகள் பிறந்தன. மார்க்சியச் சிந்தனைகளைச் சொல்லும் கவிதைகள் புறவயத் தன்மை கொண்டவை. நடப்பியல் (Realism) இயற்கையியல் (Naturalism) எனும் இலக்கியக் கோட்பாடுகள் புறவயத் தன்மையை விளக்குவன. இதற்கு நேரெதிராக வேறு சிலர் அகவயத் தன்மை கொண்ட கவிதைகளைப் படைத்தனர், ஆதரித்தனர். மனித மனத்தின் உள்ளாழ்ந்த மூலைகளுக்குள் கவிதையைக் கொண்டு சென்றனர். ‘எதிர் பாராதவை, முன்தீர்மான மற்றவை, முன் எதிர்நோக்க முடியாதவை, சொல்ல முடியாதவை எல்லாம் கவிதைக்குள் வரவேண்டும், நிழல்களைப் பேசும் கவிஞனே அதிக உண்மைகளைப் பேசுகிறவன்’ என பால் செலான் எனும் ஜெர்மானியக் கவிஞர் கூறினார். மனப்பதிவியல் (Impressionism), வெளிப்பாட்டியல் (Expressionism), மிகை நடப்பியல் (Surrealism) என்பன போன்ற இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த கவிதைகள் பெரும்பாலும் அகவயத் தன்மை கொண்டனவே. இவ்விரு பிரிவினரும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். தமிழ்க் கவிதையிலும் இந்த முரண் உண்டு. 
 

 கவிதைப் பொருளில் சுதந்திரத் தன்மை  
 

இந்த விதமாக உள்ளடக்கத்தைப் பாகுபடுத்திக் கொள்வதை எதிர்ப்போர் பலர். கவிதையின் உள்ளடக்கம் இன்னதாகத்தான் இருக்கவேண்டுமென யாரும் கவிஞனுக்குக் கட்டளையிட முடியாது. எப்பொருளும் கவிப்பொருளாகலாம். அது மனித வாழ்வின் வெளிப்படையான, சமூக நிகழ்வுகள், உணர்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம். மனித அகத்தின் அசைவுகளை உள்ளுணர்வுகளை, மனித வாழ்வின் வெளிப்புலப்பாடற்ற பகுதிகளைப் பற்றியதாகவும் இருக்கலாம். ‘சொல்லப்பட்ட பொருள் அல்ல, சொல்லியிருக்கும் விதம்தான் கவிதை’ (Poetry is not the thing said but a way of saying it) என்றார் A.E. ஹூஸ்மன் (Name and Nature of Poetry, Writers on Writing, ப. 21). இதுதான் புதுக்கவிதையின் உள்ளடக்கம் பற்றிய சரியான கோட்பாடு. இன்னவைதாம் கவிதைக் குரிய பொருள்கள் என்றிருந்த மரபை உடைத்துப் பிறந்ததுதான் புதுக்கவிதை. படைப்பாளிக்குக் கவிதையின் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் முழு உரிமை உண்டு. இந்தச் சுதந்திரம் காரணமாக, நிகழ்காலத் தன்மையையும், கவிஞனின் தனித்தன்மையையும், முரண்பட்ட பல்வேறு சிந்தனை மோதல்களையும் மரபுக்கு மாறான புதுவிதமான அழகியலையும் புதுக்கவிதை கொண்டிருக்கிறது. ‘கசடதபற’ எனும் இலக்கிய இதழில் (இதழ் எண் 6) சார்வாகன் எனும் எழுத்தாளர் ‘புதுக்கவிதை’ எனும் தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவற்றை இங்குக் காணலாம். ‘ஒரு பக்கம் அழகு, புதுமாதிரியான அழகு, ஒரு பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு, காதல், தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவல், சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே குடைந்தெடுத்து ஆராயும் நேர்மை, பாலுணர்ச்சி, பொங்கல், ரேஷன், காந்தியம், கம்யூனிஸம், அறச்சீற்றம், ஸ்வதரிசனம், காலை, இரவு, நிலா வர்ணனைகள், கனவு மயக்கநிலைகள், ஞானம், உபதேசம், இறுமாப்பு, மன மாறுதல்’ - என ஒரு நீண்ட பட்டியலைப் புதுக்கவிதை உள்ளடக்கமாகக் காட்டியிருக்கிறார். இன்றைய வாழ்வின் அனைத்து நிகழ்வுகள், கருத்துகள், உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், தனித்தனிக் கவிஞர்களின் தனித்தனிப் பார்வைகளின் விகற்ப வெளியீடாகவும், புதுக்கவிதை அமைந்திருப்பதைக் காட்டுகின்றனர் திறனாய்வாளர்கள். க. நா. சுப்ரமணியம் ஐரோப்பியப் புதுக்கவிதைகள் பற்றிக் கூறும் போது, தமிழ்ப் புதுக்கவிதை ‘இன்றைய வாழ்க்கைச் சிக்கலை முழுமையாக எதிரொலிக்க வேண்டும்’ என்றும் ‘இன்றைய புதுமைகளைத் தொட்டு நடக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார். புதுக்கவிதைகளில் இத்தன்மை நிறைந்துள்ளது. கவிதை, சாதாரணங்களில் இருக்கின்ற அசாதாரணங்களைச் சுட்டிக் காட்டுவது. ‘நாம் அறிந்த பொருள்களை அறியாத பொருள்கள் போல ஆக்கிக் காட்டுவது’ எனும் ஷெல்லியின் (A Defence of Poetry, Writers on Writing, ப. 20) கருத்து புதுக்கவிதைக்குப் பொருந்துவது.
 



 எதிர்ப்புக் குரலும் அங்கதமும்  
 

புதுக்கவிதையில் மேலோங்கித் தெரிவது எதிர்ப்புக் குரல். முன்பிருந்து நிலவிவரும் கருத்துகளையும், சமகாலத்தில் தோன்றியுள்ள கருத்துகளையும் எதிர்த்துக் குரல் எழுப்புவது எல்லாக் காலப் படைப்புகளிலும் காணப்படுவதுதான். கள்ளுண்ணுதல், பரத்தையொழுக்கம் என்பன போன்ற, இயல்பாக ஏற்கப்பட்டிருந்த நடைமுறைகளை வள்ளுவர் எதிர்த்ததை அறிவோம். சமயவாதிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதன் சாட்சியங்களாக இலக்கியங்கள் உள்ளன. ஆன்மீகச் சார்பான மூட நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்த சித்தர் பாடல்களை அறிவோம். இம்மரபில் புதுக்கவிதை வேறு எந்தக் காலக் கவிதையையும் விட மிகுந்த தீவிரத் தன்மையுடைய எதிர்ப்புக் குரல்களை எழுப்புவது. இவ்வகையான புதுக்கவிதைக்கு வழிவகுத்தவர் பாரதியே ஆவார். ‘சோதிடம் தனை இதழ்’, ‘கொடுமையை எதிர்த்து நில்’, ‘தையலை உயர்வு செய்’, ‘புதியன விரும்பு’, ‘வெடிப்புறப் பேசு’, ‘ரௌத்திரம் பழகு’, ‘வேதம் புதுமை செய்’, (புதிய ஆத்திசூடி) ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ எனப் பலவகையிலும் தமிழ்க் கவிதையில் எதிர்ப்பியக்கத்தை அவர் தொடங்கிவைத்தார். புதுமைப் பித்தனின் கதைகளும் கவிதைகளும் மற்றொரு தூண்டுதல் ஆகும். புதுக்கவிதையில் கேட்கும் எதிர்ப்புக் குரல்கள் நிறுவன எதிர்ப்பு, மதிப்பீடுகளின் மீதான எதிர்ப்பு, சமூகப் பழக்கவழக்கங்களின் மீதான எதிர்ப்பு, சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றின் மீதான எதிர்ப்பு, அனைத்துவகை ஒடுக்கு முறைகளின் மீதான எதிர்ப்பு எனப் பல. கவிதையின் இன்றைய போக்குகளுள் ஒன்றையொன்று எதிர்க்கும் தன்மையையும் கவிதைகளில் காணலாம். இன்றைய கவிதையின் வலுவான எதிர்ப்புக் குரல்கள் என்று சொல்லத் தக்கவை பெண்ணியக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் ஆகும். இத்தகைய எதிர்ப்புக் குரல்களை மரபெதிர்ப்பு எனக் கொள்ளக்கூடாது; மரபு மாற்றம் - மரபு வளர்ச்சி எனக் கொள்ளவேண்டும் எனத் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். 
 

தமிழ்ப் புதுக்கவிதையில் அரசியல், சமூக அங்கதங்கள் நிறைந்துள்ளன. இன்றைய வாழ்வின் சிக்கல்களை எதிரொலிக்க விரும்புகிற புதுக்கவிஞன், முன்னோர் வாழ்வின் மதிப்பீடுகளை எள்ளலுக்கு உள்ளாக்குகிறான். இராமன், கண்ணன் போன்ற கடவுளரும், மன்னர்களும் தப்புவதில்லை. இன்றைய வாழ்வின் பல்வேறு துறைகளையும் சார்ந்த தலைவர்களும் அங்கதப் படுத்தப்படுகின்றனர். 
 

 நுட்ப அனுபவங்கள்  
 

இனி, புதுக்கவிதையின் முக்கியமான இயல்பு ஒன்றைப் பார்ப்போம். ‘அகவயக் கவிதை’ என்பது பற்றி முன்னர்ப் பார்த்தோம். அகவயம்-புறவயம் எனும் பிரிவினை இல்லாமலே, கருத்துகளின், சிந்தனைகளின், உணர்வுகளின் அடியாழத்தைத் தொட்டுக் காட்டுவது புதுக்கவிதை. பிரமிள் போன்றோர் கவிதைகளில் அவரே சொன்னதுபோலப் “பாழாம் வெளியும் படைப்பை வரைய ஓர் சுவர்” ஆகிறது. ‘அதீதம் - காலாதீதம்’, ‘மீபொருண்மை வியப்புகள்’ (Metaphysical Perplexities) நிறைந்துள்ளன (கைப்பிடியளவு கடல், பக்.19,15). அபி, கவிதையில் ‘அக நடப்பியலை’ (Inner Realism) முதன்மைப் படுத்துகிறார். “கவிதை பாவனையின் அனைத்து வாசல்களிலும் நுழைந்து வெளியேறுவது; நிர்ணயங்களுக்கும் துல்லியங்களுக்கும் உடன்படாதது; தெளிவு என்னும் பகட்டில் மயங்காதது; இருளின் தீட்சண்யத்தில் கண்திறப்பது; உள் வெளி பேதங்களை ஒழித்துவிடுவது; மௌனத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பது” எனப் புதுக்கவிதையை விளக்கும் அபி, “கவிதைதான் தன் போக்கில் கவிஞனை உருவாக்கிச் செல்கிறது” எனக் கவிதையின் தன்னியக்கத்தை வற்புறுத்துகிறார் (புதிய பார்வை, பேட்டி,1996). உளவியல் அறிஞர் யுங், “படைப்பாளி என்பவன், அவனிடமிருந்து கலைப்படைப்பு வெளியேறித் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிப்பவன்” (C.G. Jung,Collected Works) என்று சொன்ன கருத்தை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். க.நா.சு.வும் சி.சு.செல்லப்பாவும், மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட வேண்டும். அதுதான் ‘அகம்’ என்றனர். சங்க அக இலக்கியம் அத்தகையதே. ஆகவே பொருள் வெளிப்பாட்டு முறையிலும் வடிவிலும் புதுக்கவிதை சங்க இலக்கியத்தை நெருங்கியதாக இருக்கவேண்டும் என்றனர், இன்றைய கவிதையில் இத்தகைய நுட்பம் சில கவிஞர்களிடம் செழிப்பாக அமைந்துள்ளது. 
 

 பிற கலைத் தொடர்புகள்  
 

புதுக்கவிதையின் மற்றொரு சிறப்பியல்பு ஓவியம், சிற்பம், இசை போன்ற பிற கலைகளுடன் அதற்கு ஏற்பட்டுள்ள தொடர்பாகும். கலைகள் மட்டுமன்றி உளவியல், தத்துவ இயல், அறிவியல், அரசியல், சமூகவியல் போன்ற அறிவுத் துறைகளும் புதுக்கவிதை உள்ளடக்கத்தில் இணைகின்றன. கவிதையைப் பிற கலைகளிலிருந்து தனித்துப் பார்க்காமல் மொத்தமாகக் கலை என்று பார்க்கும் மேனாட்டுப் போக்கு அங்குள்ள கவிதைகளில் இருப்பது போலவே இங்கும் எதிரொலித்தது. ஓவியத்துக்கு என்றே உருவான மனப்பதிவியல், வெளியீட்டியல் போன்ற இலக்கியக் கோட்பாடுகள் கவிதைக்கும் உரியவையாகின. கலைகள், அறிவியல் தொடர்பான தகவல்கள், செய்திகள் மட்டுமன்றி அவையே கவிப்பொருளும் ஆயின. தமிழ்ப் புதுக்கவிதைத் தொகுப்புகளில் நவீன ஓவியங்கள், சிற்பங்களின் புகைப்படங்கள் கவிதைகளுக்கருகில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அவ் ஓவியங்கள் கவிதைப் பொருளை உள்ளீடாகக் கொண்டு அமைந்திருப்பதும் காணலாம். ஐன்ஸ்டீன் - அணுகுண்டு - மக்கள் அழிவு தொடர்பான ஒரு கவிதைக்கு E = Mc2 என அறிவியல் சூத்திரமே தலைப்பாக அமைந்துள்ளது. இசை, நடனம் போன்ற கலைத்தொடர்புகள் சிலப்பதிகாரக் காப்பியத்தில் நிறைந்திருப்பதையும், நாயன்மார் ஆழ்வார் பாடல்கள் இசையில் அமைந்திருப்பதையும், பிற்காலத்தில் பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனை இலக்கியங்களில் இசை-நாடகக் கலைகள் இணைந்திருப்பதையும் நமது மரபிலும் காணலாம். புதுக்கவிதை அக்கலைகளின் நவீன வடிவங்களைத் தன்னகத்தில் கொள்கிறது. 
 

 நாட்டுப்புற வாழ்வியல்  
 

எளிய சிற்றூர்ப் பகுதி வாழ்க்கை மரபுக் கவிதைகளில் பெரும்பாலும் சொல்லப்பட்டதில்லை. ஆனால் புதுக்கவிதைகள் பல நாட்டுப்புற வாழ்வியலைப் படம் பிடிக்கின்றன. அம்மக்களின் தொழில், வழிபாடுகள், சடங்குகள், கலைகள், அங்கு நிலவும் முரண்கள், வறுமை, அறியாமை எனப் பலவும் கவிதைகளில் அடங்குகின்றன. இதற்கு இன்று பெருமளவுக்கு வளர்ந்து பெருகியுள்ள உரைநடை இலக்கியத்தின் தொடர்பே காரணம் ஆகும். 
 

 புதுக்கவிதையில் செய்தி (Message)  
 

வாழ்விலிருந்து பிறக்கும் இலக்கியம் வாழ்வுக்கு ஏதேனும் செய்தி சொல்வதாக இருக்கவேண்டும் எனச் சில இலக்கியக் கோட்பாட்டாளர்கள் வற்புறுத்துவர், தமிழ்ப் புதுக்கவிதைகளுள் அவ்வாறு செய்தி தெரிவிப்பவையும் உண்டு. எந்தச் செய்தியும் தெரிவிக்காமல் ஒரு நிகழ்வை, கருத்தை, உணர்வை, அனுபவத்தை மட்டும் சொல்லிச் செல்லும் கவிதைகளும் உண்டு. இடதுசாரிக் கருத்துப் போக்குடையவர்கள் செய்தி சொல்லப்பட்டிருக்க வேண்டும் என வற்புறுத்துவர். அவர்களுள் சிலர் அது ‘பிரச்சாரமாக’ இல்லாமல் கலை நயத்துடன் சொல்லப்பட வேண்டும் என்பர். இவ்விரு வகைகளிலும் அமைந்த கவிதைகள் தமிழில் உள்ளன. வானம்பாடிக் கவிதைகள், கவிஞர் இன்குலாப் போன்றோரின் கவிதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பழந்தமிழ் மரபில் நீதி இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் என்பன இத்தகையவை. கவிதைக்குச் செய்தி சொல்லியாகவேண்டும் எனும் கடமை இல்லை எனவும் ஒருசாரார் கூறுகின்றனர். ‘கவிதை தன்னை வெளிப்படுத்துவதை விட வேறு பொறுப்புகளை ஏற்க வேண்டியதில்லை. அது மதத்திற்கோ தத்துவத்திற்கோ பதிலி இல்லை’ என்றார் T.S. எலியட் (Writers on Writing, ப.30). டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் (Tadeusz Rozewicz) எனும் கவிஞர் ‘My Poetry’ எனும் தலைப்பில் தம் கவிதை பற்றிக் குறிப்பிடுகிறார். தம் கவிதை “ எதையும் விளக்குவதில்லை, எந்தத் தியாகங்களையும் செய்வதில்லை. எந்த நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை, தன் சொந்தத் தேவைகளுக்கே கீழ்ப்படிகிறது” என்கிறார் (உலகக் கவிதை,ப.99). “கவிதை எதையாவது போதிக்கிறது என்றால் அது மனித நிலையின் அந்தரங்கமான தனிமையைத்தான்” என்கிறார் ஜோஸப் பிராட்ஸ்கி, “கவிதை, உண்மையை ஒரு பொருளாகக் கொண்டிருப்பதில்லை; அது தன்னைத்தான் கொண்டிருக்கிறது” என்றார் பிரெஞ்சுக் கவிஞர் பாதலேர் (Writers on Writing, ப.31). இந்த வாதத்தை ஏற்று அமைந்த புதுக்கவிதைகளும் தமிழில் மிகுதி. செய்தியே கவிதையில் முக்கியமானது எனும் கருத்து மாறிப்போனது.




 புரிந்து கொள்ளல்  
 

புதுக்கவிதைகள் பல சிக்கலானவையாக, புரிந்துகொள்ள முடியாதவைகளாக உள்ளன என்பது ஒரு பொதுக் கருத்து. நவீன வாழ்வின் பல இறுக்கமான, சிக்கலான தன்மைகளை உள்ளடக்கியிருப்பதால் கவிதைகள் சிக்கலாக உள்ளன எனக் காரணம் காட்டுகின்றனர் திறனாய்வாளர். பல்வேறு அறிவுத்துறைத் தகவல்கள் அத்துறைக் கலைச் சொற்களுடன் கவிதையில் இடம் பெற்றிருப்பதாலும் அவற்றை அறிந்திராத பொது வாசகர்க்குக் கவிதை புரிவதில்லை. தொன்மம், வரலாறு ஆகியவற்றின் தொடர்பும் புரிந்துகொள்ள முடியாமைக்குக் காரணம். எனினும் இத்தகைய கவிதைகள் காட்டும் குறிப்பீடுகளை அறிந்து கொண்டால் (நாம் முன்பு பார்த்த E = Mc2 போன்றவை) கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இல்லை என்றாகும். இத்தகைய முயற்சிகளையும் மீறிச் சில கவிதைகள் புரிவதில்லை. 
 

இன்றைய கவிஞர்களுள் சிலர் மிகவும் தனித்தன்மையான பார்வை கொண்டவர்களாக உள்ளனர். கவிதையில் இதுவரை சொல்லப்படாத தெளிவற்ற உணர்வுகளை அவற்றின் பிறப்பிடத்திற்கே சென்று தொட்டுக் காட்டுகின்றனர். பிரமிள், அபி போன்றவர்களின் கவிதைகளில் இத்தகைய உள்ளாழ்ந்த தன்மைகளைக் காணலாம். பருப்பொருள் உலகுக்கு அப்பாற்பட்டு நுண்ணிலைகளை, அருவ நிலைகளைக் (Abstractions) கவிதையில் அவர்கள் உணர்த்தும்போது கவிதைக்கு இருண்மை இயல்பு சேர்கிறது. வாசகன் புரிந்துகொள்ளத் தவிக்கவேண்டியுள்ளது. கவிஞர்களைக் குறைசொல்வதை விட, வாழ்வின் மறுபுறத்து இயல்புகளைப் புரிந்துகொள்ள வாசகன் மேலும் முயலவேண்டும் என அவனை ஊக்குவிப்பதே சரியானது. இத்தகைய கவிதைகளைச் சொல்லுக்குச் சொல் பொருள் பார்த்துப் புரிந்து கொள்ள முயலாமல் - பொழிப்புரை தேடாமல் - கவிதையின் மொத்த உணர்வு தனக்குள் ஏற்படுத்தும் அசைவுகளை, தனக்கு உண்டாக்கும் அனுபவங்களை நன்றாகக் கண்டு அதுவே கவிதையின் பொருள் என வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞன் என்ன நினைத்தானோ அதையே வாசகன் கண்டடைய வேண்டும் என்பதில்லை என்பதுதான் உலக முழுவதும் இன்று உருவாகியுள்ள கவிதைக் கோட்பாடு. மொழிவழியாக வந்துள்ள பிரதி (Text) யில் ஊடுருவிச் செல்லும் வாசகமனம் பல்வேறு விதமாகக் கவிதையை அலசித் தேடும் தேடல், நீடித்த அத்தேடலில் அவனுக்குள் உருவாகும் அனுபவம் இவையே கவிதையின் உட்பொருள். ‘கவிதையின் பொருள் கவிதையின் சொற்களில் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. அதுவும் நம் பக்குவம், அனுபவம் மாறமாற மாற்ற மடையும். ஒரு குறிப்பிட்ட காலம், வெளி, மன நிலைகளில் ஒருவனின் உணர்வை இன்னொருவன் பெறுவது ஒரு போதும் நடவாத காரியம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது’ என மா. அரங்கநாதன் (பொருளின் பொருள் கவிதை,பக்.71-74) கூறுவது பொதுவாக எக்கவிதைக்கும் பொருந்துமாயினும் மேற்குறித்த அருவக் கவிதைகளுக்கு முற்றிலும் பொருத்தமானதாகும். இவ்வகையில், படிக்கிற வாசகர் எவ்வளவு பேரோ, அவ்வளவு பொருள் கவிதைக்கு உண்டு. 
 

 புதுக்கவிதையின் வடிவம்  
 

புதுக்கவிதை தோன்றிய காலத்தில் அதற்கு உண்டாகிய எதிர்ப்பு பெரும்பாலும் அதன் வடிவம் சார்ந்ததே ஆகும். மரபான யாப்பு வடிவங்களைத் துறந்து வசனம் போல அமையும் ஒரு வடிவில் புதுக்கவிதை பிறந்தது. பாரதியின் வசன கவிதைகள் வடிவத்தில் உரைநடையாகவும் பொருளில் கவிதையாகவும் அமைந்திருப்பதைக் கண்டதாலும் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனுடைய வசன கவிதைத் தாக்கத்தாலும் உரைநடை வடிவத்திலேயே கவிதை அமையலாம் எனக் கவிஞர்கள் துணிவு பெற்றனர். ஆயினும் அது வழக்கமான, முழுமையான உரைநடையன்று. உரைநடையின் எளிமை, தெளிவு, பேச்சுத்தன்மை, நேரடித்தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, உரைநடையின் வாக்கிய அமைப்பில் செறிவு செய்து கவிதைக்குரிய வடிவம் உருவாக்கப்படுகிறது. ‘ புதிய படிமங்கள், பேச்சுமொழி, ஒரு கவனச்செறிவு, செறிவற்ற பல வரிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சொல், படிமம்’ இருப்பதே கவிதைக்கு ஏற்றது என்பது T.S. எலியட் கருத்து (Writers On Writing). புதுக்கவிதைக்கு வடிவம் உண்டா எனச் சிலர் வினவுகின்றனர். நல்ல புதுக்கவிதைகளின் அமைப்பைக் கொண்டே கவிதையின் வடிவம் பற்றி உறுதிசெய்யலாம். ‘உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் கருத்து. சில கவிதைகள் யாப்பிலக்கணத்தில் வற்புறுத்தப்பட்டுள்ள மாதிரியில் இல்லாத எளிமையான எதுகை, மோனை, இயைபுத் தொடைகள் கொண்டுள்ளன. சில கவிதைகள் நாட்டுப்புறப் பாடல் சந்தங்களைப் பெற்றுள்ளன. சில கவிதைகள் ஆசிரியப்பா வடிவத்தை நெகிழ்ச்சி செய்து வடிவமைந்துள்ளன. ஞானக்கூத்தன் அறுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தச் சந்தங்களைச் சிற்சில மாற்றங்களுடன் புதுக்கவிதைக்குப் பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான புதுக்கவிதைகள் உரைநடை வடிவில், கருத்துக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு வரியமைப்பைப் பல்வேறு விதமாக அமைத்துப் படைக்கப்பட்டவை. எடுத்துச் சொல்லும் முறையும், வரியமைப்பில் ஏற்படும் நிறுத்தங்களும், புதிய படிமங்களும், குறியீடுகளும், கவிதையின் தொடக்கம் முடிவு ஆகிய அமைப்புகளும், பொருள் போக்கை - உணர்வுப் போக்கைத் தடுக்காத ஒலி நயங்களும் புதுக்கவிதையின் வடிவாக ஏற்கப்பட்டுள்ளன. 
 

இனிப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் காணலாம்.
 

3.1.1.2. தோற்றமும் வளர்ச்சியும்  
 

கவிதை காலந்தோறும் புதிய கருத்தோட்டங்களையும், புதுப்புதுப் பார்வைகளையும் ஏற்று வளர்வது. இலக்கியம் என்றாலே அது இலக்கண வரம்புகளுக்கு உட்பட்ட செய்யுள் வடிவம்தான் என்றிருந்த ஒரு மரபு. உரைநடை செல்வாக்குப் பெறத் தொடங்கிய போது, கேள்விக்குள்ளானது. இது முதலில் மேலைநாடுகளில் நடைபெற்ற ஒரு படைப்பாக்கப் புரட்சி. கருத்துகளையும், பார்வைகளையும் மாற்ற முற்பட்ட படைப்பாளிகள் பழைய கருத்துகளை மட்டுமன்றி அவற்றைத் தாங்கிநின்ற பழைய வடிவங்களையும் புறக்கணித்தனர். Verse Libre என்னும் பெயரில் பிரான்சு நாட்டிலும், New Poetry என ஆங்கில நாட்டிலும் உருவாகிய முயற்சிகள் உலகின் பிற பகுதிகளிலும் பரவின. Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’ ‘லகு கவிதை’ ‘விடுநிலைப்பா’ என்றும், அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன. 1959இல் புதுக்கவிதை என முதலில் பெயர் வழங்கியவர் தமிழின் சிறந்த திறனாய்வாளரும், புதினப் படைப்பாளியும் ஆகிய க.நா.சுப்பிரமணியம் ஆவார். 
 

 தமிழில் புதுக்கவிதை - பாரதியின் வசன கவிதைகள்  
 

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு வித்திட்டவராகப் பாரதியைத்தான் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான கவிதைகளை யாப்பிலும், புதிய சந்த யாப்புகளிலும் எழுதிய பாரதியைப் புதுக்கவிதையின் முல முன்னோடியாகக் குறிப்பிடுவது எவ்வாறு? இதற்குப் பாரதி கவிதையின் உள்ளடக்கங்களே விளக்கம் தர வல்லவை. தமிழ்க் கவிதையில் அதற்கு முன்பு இல்லாத புதுப்புதுக் கருத்துகளும் புதிய பார்வைகளும் பாரதி கவிதைகளில் இடம்பெற்றன. அரசியல், தேசிய இயக்கம், மொழியுணர்வு, பெண்ணுரிமை போன்றவைகள் தமிழ்க் கவிதைக்கு முற்றிலும் புதியவை. ஆன்மிகப் பார்வையிலும் கண்ணன் பாட்டு புதுமையானது; பாஞ்சாலி சபதம் அமைப்பிலும் பொருளிலும் புதுமை வாய்ந்தது. பல காலமாக ஏற்கப்பட்டிருந்த பத்தாம்பசலிக் கோட்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும், சாதி சமய வேறுபாடுகளையும் வன்மையாக எதிர்த்த வகையில் பாரதியின் கவிதை இன்றுவரை புதுமை மங்காதது. ‘புதியன விரும்பு’ ‘தேசத்தைக் காத்தல் செய்’ ‘தையலை உயர்வுசெய்’, ‘கொடுமையை எதிர்த்து நில்’, ‘கற்பை இரு பாலார்க்கும் பொதுவில் வைப்போம்’ என்றெல்லாம் வெடிப்புறப் பேசிய பாரதியின் கவிதைதான் உள்ளடக்க அளவில் தமிழின் முதல் புதுக்கவிதை என வேண்டும். 
 

வடிவ அடிப்படையிலும் பாரதியே முதன்முதலாகச் சோதனை செய்து பார்த்தவர். காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்புகளில் பாரதி படைத்த வசன கவிதைகளே புதுக்கவிதைக்கு வடிவ முன்னோடிகள் ஆகும். உபநிடதங்களின் கவித்துவ அழகுகொண்ட தத்துவத்தில் திளைத்த பாரதி அவற்றைத் தமது தனிப்பார்வையில் எடுத்தளித்தவையாக அவற்றைக் கருதலாம். அவற்றை வசன கவிதையாகப் படைக்கலாம் என்ற உந்துதலைத் தந்தவர் முன்பு நாம் பார்த்த அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன். விட்மனின் புரட்சிகரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த Free Verse எனும் வசன கவிதை வடிவம் அவருக்குக் கைகொடுத்தது. இதனை உணர்ந்த பாரதி ஆன்மிக எழுச்சியை, ‘தத்துவக் கருத்துகளை’ தமக்கு அனுபவம் ஆகிய முறையில் வெளியிட ஏற்ற வடிவமாக வசன கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 
 

வேதம், கடல், மீன், புயற்காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பலதோற்றம்.
உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.

 

(பாரதியார் கவிதைகள், ப.589) 
 

‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்வம் அஸி’ என்னும் உபநிடத மகா வாக்கியங்கள் உணர்வு பொங்கும் கவிதை வாக்கியங்களாக இங்கு வெளிப்பட்டுள்ளன. 
 

காற்றே உயிர் - அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.

 

(பாரதியார் கவிதைகள், ப.614) 
 

காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் தத்துவமே எனினும் பாரதி சொல்லும் விதத்தால் அது நெஞ்சில் புதுவிதமாகப் பூக்கிறது. இத்தகைய வசன கவிதை முயற்சியில் பாரதி தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளிலேயே ஈடுபட்டிருந்திருக்கிறார். வாழ்நாள் மேலும் இருந்திருந்தால் வசன கவிதையின் அடுத்தடுத்த படிநிலைகளை அவர் வளர்த்துக் காட்டியிருக்கக் கூடும்.




 பிச்சமூர்த்தியும் பிறரும்  
 

பாரதிக்கு அடுத்துப் புதுக்கவிதை முயற்சியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ந. பிச்சமூர்த்தி. ‘மணிக்கொடி’ இதழில் 1934இல் பிச்சமூர்த்தி எழுதத் தொடங்கினார். செறிவாகவும் தெளிவாகவும் அறிவு பூர்வமான பார்வையில் கருத்துகளை அலசவும் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் அவருக்கிருந்த இயல்பான அறிவுத் திறம் அவர் கவிதையில் பளிச்சிட்டது. 
 

நாங்களோ கலைஞர்
ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம்.
முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.
கீழுல கேழும் தயங்காது இறங்கி
ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்.
அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்
 
 

(ந. பிச்சமூர்த்தி கவிதைகள், ப. 14) 
 

என்னும் வரிகளில் தமது கவிதை இயக்கத்தின் போக்கை அழகாக வெளிப்படுத்துகிறார் பிச்சமூர்த்தி. அவர் கவிதைகளில் வாழ்வின் முரண்களும், இயற்கையோடு மனிதன் கொள்ளத்தக்க உறவு இணக்கமும் முதன்மை பெற்றன. தத்துவமும் எளிய வெளிப்பாடு கண்டது. உணர்ச்சிக் கூறு மட்டுமின்றி அறிவுக் கூறும் கவிதையில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் வசன கவிதை சற்றுச் செறிவடைந்தது. பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து அவருடைய நண்பர் கு.ப.ராஜகோபாலனும், க.நா.சுப்ரமண்யமும் புதுக்கவிதை எழுதத் தொடங்கினர். பின்னர் வல்லிக்கண்ணனும் புதுமைப்பித்தனும் இவ்வரிசையில் இணைந்தனர். இவர்களது படைப்புத் தொடங்கிய காலம் 1937க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். புதுமைப்பித்தனைத் தவிர மற்றவர்களிடம் வசன கவிதைத் தன்மையே மிகுந்திருந்தது. 
 

வாழ்க்கை ஒரு வெற்றி, ஒரு துடிப்பு
ஒரு காதற்பா, ஒரு இசை
மண்ணின் மாய மோனையில் பிறந்து
அரைத்தூக்கத்திலும் அதிசயத்திலும் அது உதிக்கிறது
கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு

 

(சிறிது வெளிச்சம், கு.ப.ரா.) 
 

என்னும் வரிகளில் அழகுணர்ச்சியில் திளைப்பவராகக் காட்சி தரும் கு.ப. ராஜகோபாலன் பெண்மையின் மாபெரும் சக்தியையும் தம் கவிதைகளில் படம் பிடித்தவர். 
 

கவிதை பற்றிய புதுமைப்பித்தனின் பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. சந்தலயம், சீர், அடியமைப்பு, ஒழுங்கு ஆகியவைகளைத் துறக்க அவர் விரும்பவில்லை. கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்தவை, அவருடைய கதைகளில் காணப்படும் சமூக அங்கதம், எள்ளல், கண்டனம் ஆகியவைகளே. பின்னர் இக்கூறுகள் ஞானக்கூத்தன், மீரா போன்ற கவிஞர்களிடம் வளர்ச்சி கண்டன. மதிப்பீடுகளைத் தயக்கமில்லாமல் தூக்கி எறிந்துவிடும் புதுமைப்பித்தனின் துணிச்சல் பிற்காலக் கவிஞர் பலரிடமும் ஏதாவது ஓர் அளவில் கலந்துவிட்டிருக்கிறது. இவ்வகையில் புதுமைப்பித்தனின் கவிதை அளவில் குறைவானதே ஆனாலும் புதுக்கவிதைக்கு, அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டிய ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 
 

பாரதிதாசன் போன்றார் கற்பனையின் உச்சியில் நின்று சுவையூறிக் காதல் கவிதைகள் படைத்த சமகாலத்தில்தான் அந்த உன்னதப் படுத்தலுக்கு எதிராகக் காதலின் இன்றைய நடப்பியல் அதிர்ச்சியைப் படைத்துக் காட்டினார் புதுமைப்பித்தன். 
 

வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்

 

(புதுமைப்பித்தன் படைப்புகள், 2ஆம் தொகுதி, ப.204) 
 

என மற்றொரு மதிப்பீட்டின் சரிவையும் அவரது கவிதை சொடுக்கிக் காட்டுகின்றது. 
 

புதுமைப்பித்தனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த க. நா. சுப்ரமண்யம் ‘சூறாவளி’ என்னும் பெயரில் தாம் தொடங்கிய வார இதழில் தமது முதல் கவிதையை வெளியிட்டார். அதன் பின்னர் க. நா. சு. எழுதிய கவிதைகள் சிலவற்றில் புதுமையான சில பார்வைப் பொறிகள் தென்பட்டன என்பது உண்மை. ஆனால் வடிவத்தில் பெரும்பாலும் வசன கவிதையாகவே அவை அமைந்தன. க. நா. சு. வும், சி. சு.செல்லப்பாவும் புதுக்கவிதைக்கு அளித்த பங்கீடு அவர்கள் கவிதைகள் மூலமாக அன்றி அவர்களது கட்டுரைகள் மூலமாகவே என்பதுதான் உண்மை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., க.நா.சு., புதுமைப்பித்தன் ஆகியோர் கட்டுரைகள் மூலமாகவும் பத்திரிக்கைகளின் நிகழ்ந்த விவாதங்களில் கலந்து கொண்டும் வசனகவிதை-புதுக்கவிதை தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர். மணிக்கொடி, தினமணி, சூறாவளி, கலாமோகினி, நவசக்தி, கிராம ஊழியன், சிவாஜி, கவிக்குயில் போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளையும், அவை தொடர்பான விவாதங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. 
 

இந்தக் காலக்கட்டத்தில் வசன கவிதை-புதுக்கவிதை முயற்சிகள் அதிகம் கவனிப்புக்கு உட்படாதவைகளாகவே இருந்தன. 30களின் இறுதியில் தொடங்கி ஈழத்திலும் சில புதுக்கவிதை முயற்சிகள் நடைபெற்றன எனவும் விரைவில் அவை ஆதரவு குன்றிச் சோர்வடைந்தன எனவும் வல்லிக்கண்ணன் தமது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலில் எடுத்துக் காட்டுகிறார். 
 

 எழுத்து காலக்கட்டம்  
 

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் புதுக்கவிதை ஓர் இயக்கமாகவே உருவெடுத்துப் பெரும் வளர்ச்சி காணத் தொடங்கியது சி.சு. செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ மாத இதழ் மூலமாகத்தான். 1959 முதல் 1969 வரை வெளிவந்த இந்த இதழ்தான் புதிய இலக்கியத்துக்கும் திறனாய்வுக்கும் பெரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது. சில ஆண்டுகள் எழுதாமல் இருந்த ந.பிச்சமூர்த்தியுடன், தி.சொ.வேணுகோபாலன், எஸ்.வைத்தீஸ்வரன், நகுலன், பசுவய்யா, சி.மணி, தருமு சிவராமு (பிரமிள்) இரா.மீனாட்சி போன்ற புதிய கவிஞர்களும் சேர்ந்து கொண்டனர். புதுக்கவிதைகளை மட்டுமன்றிப் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளையும், மேல்நாட்டுப் புதுக்கவிதைக் கோட்பாடுகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது ‘எழுத்து’. T.S. எலியட், எஸ்ரா பவுண்டு, மரியான் மூர், கம்மிங்ஸ் போன்றவர்களைப் பற்றி ஆங்கிலம் தெரியாத தமிழ் வாசகர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. எதிர்ப்புக்கிடையே புதுக்கவிதைக்கு ஆதரவும் பெருகவே புதுக்கவிதை ஓர் இயக்கமாக மாறிற்று. எழுத்து இதழில் பல்வேறு வகையான புதிய பார்வைகள் தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகம் ஆயின. தனிமனித உளவியல், மனச்சிக்கல்கள், உளைச்சல்கள் கவிதைகளில் இடம் பெற்றன. இவை அக்காலத்திலும் அதற்குப் பின்பும் எதிர்ப்புக்கு உட்பட்டன. ஆயினும் இலக்கியத்துக்குப் புதியவை என்பதாலும், எந்த உள்ளடக்கமும் இலக்கியத்தின் தொடுதலுக்கு அப்பாற்பட்டது அன்று என்பதாலும், இத்தகைய கவிதைகள் ஏற்பும் பெற்றன. மனம்-அகம் தொடர்பான இக்கவிதைகளைப் புதுவகையான ‘அகத்துறைக் கவிதைகள்’ எனப் புதுக்கவிதையாளர் குறிப்பிட்டனர். 
 

 சிந்தனைப் போக்கிலும் வெளியீட்டு முறையிலும் வளர்ச்சி
 

உளவியல் அறிஞர் பிராய்டின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் உளவியல் துறையைத் தாண்டி இலக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தின. மேனாட்டு இலக்கியம் மட்டுமன்றித் தமிழ் இலக்கியமும் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு உண்மைகளின் தாக்கம் பெற்றது. சி.சு.செல்லப்பா ‘புதுக்குரல்கள்’ முன்னுரையில் "மென்மையானதும் சிக்கலானதும், கூட்டுக் கலப்பானதும், திட்டமான எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களைச் சொல்லும் முயற்சி, கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப்பதிவுகளையும் மாறுபடும் இனம் தெரியாத ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கையும் தெரிவிக்கும் முயற்சி" என அகவுலகக் கவிதைகளின் போக்கைத் தெளிவுபடுத்துகிறார். எழுத்து இதழில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் திரட்டி 1962இல் ‘புதுக்குரல்கள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார் சி.சு.செல்லப்பா. இதுவே தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு ஆகும்.




‘எழுத்து’ கவிதை இயக்கத்திலிருந்துதான் புதுக்கவிதையை இனம் காட்டும் பல்வேறு கருத்துக்கள் தோன்றி விரிந்தன. கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கின்றது. கவிதை வரலாறாக, மதத்தின் குரலாக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை காணும் - என்று பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் அமைப்பு உள்ளடக்கம் குறித்த தமது கருத்தோட்டத்தை வெளிப்படுத்தினார். "ஒரு அப்பட்டமான வெளியீடும் உள்ளடக்கப் புதுமையுமே புதுக்கவிதை. ஓசையினால் வெளிப்படும் உணர்ச்சியைக் களைந்து சொல்லால் வெளிப்படும் உணர்ச்சியோடு புதுக்கவிதை தோன்றியிருக்கிறது" இவை பிரமிள் கூறியவை. க.நா.சுப்பிரமணியம் தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு மீள் பார்வையில் பார்த்து ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்தார். "புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலும் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றைய புதுமைகள் எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும், அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும், எல்லாவற்றிற்கும் மேலாக, இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன" (மயன்கவிதைகள், முன்னுரை, ப.14). இந்த இறுதிச் சொற்றொடர் கவனிக்கத் தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பழையதாகிய சங்க இலக்கியத்தின் நெகிழ்வான ஆசிரியப்பா அமைப்பும், ஆற்றலும், அலங்காரமில்லாத அழகும், எளிய நேரிய வெளிப்பாடும் புதுக்கவிதையாளர்க்கு மிகவும் உவப்பானவையாக இருந்தன. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கில் மிகப்பழைய சங்க இலக்கியத்தின் மீதான புதிய நாட்டம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 
 

உலக அளவில் இன்றைய புதிய கவிதைக்கு முன்னோடிகளாகிய பாதலேர், ரிம்போ, மல்லார்மே (பிரான்சு), வால்ட் விட்மன் (அமெரிக்கா) ஆகிய இவர்கள் எல்லாம் தமது இடைக்கால மரபைத் தாண்டி ஒரு பழைய மரபை ஆதாரமாக வைத்து இன்றைய பேச்சு வளத்தின் அடிப்படையில் புதுக்கவிதை செய்ய முயன்றதை எழுத்து இயக்கப் புதுக்கவிதையாளர்கள் சுட்டிக் காட்டினார்கள். T.S. எலியட் தமக்கு நெருங்கிய காலத்துப் படைப்புலகை விட்டு 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி ஆங்கில நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு, பேச்சுச் சந்தத்துக்கு இசையக் கவிதை படைத்ததை அவர்கள் சுட்டிக் காட்டினர். (மயன்கவிதைகள், முன்னுரை, பக்.14-15) இத்துடன் நில்லாமல், சி.சு. செல்லப்பா சங்க இலக்கியத்துக்குத் திரும்பிச் சில சங்கக் கவிதைகளை அதே ஆசிரிய வடிவில் இன்றைய மொழியில் தரும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். சி.மணி தம் கவிதைகளில் சங்கத் தமிழ் நடையை இடையிடையே நிறுத்திக் காட்டினார். 
 

 எழுத்து இதழுக்குப் பின்னர்  
 

க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’, சேலத்திலிருந்து வெளிவந்த ‘நடை’, ‘கணையாழி’ இலங்கை இதழ் ‘மல்லிகை’ போன்றவை புதுக்கவிதை வளர உதவியவை. 1970இல் தோன்றிய ‘கசடதபற’ இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. இடதுசாரிக் கருத்துகள் கொண்ட கவிதைகளுக்குத் ‘தாமரை’ இடமளித்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தை கவிதைக் கோட்பாடாகக் கொண்டு ‘வானம்பாடி’ எனும் விலையிலாக் கவிமடல் 1971இல் தோன்றியது; இயக்கமாகவே வளர்ந்தது. மேலும் ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘சதங்கை’, ‘தெறிகள்’ போன்ற பல இதழ்கள் மூலம் புதுக்கவிஞர்கள் பலர் ஊக்கம் பெற்று எழுதினர். ஞானக்கூத்தன், கலாப்ரியா, நா. காமராசன், சிற்பி, இன்குலாப், மேத்தா, புவியரசு, தமிழன்பன், மீரா போன்ற பலப்பல கவிஞர்களின் கவிதைகளால் தமிழ்ப் புதுக்கவிதை உலகம் விரிவுகண்டது, இதழ் அல்லது இயக்கம் சாராத அப்துல் ரகுமான், அபி போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. 1980களுக்குப் பின்னர் ‘மீட்சி’, ‘கனவு’, ‘விருட்சம்’, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற பல இதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றின. கவிஞர்கள், எண்ணிக்கையும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் பெருகின. ஆத்மாநாம், தேவதேவன், சுகந்தி சுப்ரமணியன், பிரம்மராஜன், பழமலை, சுகுமாரன், எம்.யுவன், யூமாவாசுகி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், மாலதி மைத்ரி போன்ற தனித்தன்மை மிக்க கவிதைப் படைப்பாளிகள் பலர் தமிழ்ப் புதுக்கவிதையை வளப்படுத்தியவர்கள் ஆவர். ஈழத்தைச் சார்ந்த வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம், சேரன், சோலைக்கிளி, மு. பொன்னம்பலம், அ. யேசுராசா, எம். ஏ. நுஃமான் எனப் பல கவிஞர்கள் புதுக்கவிதையில் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களே! இன்று எழுதிவரும் கவிஞர்களின் முழுப்பட்டியலைத் தரப் பாட அளவு இடம் தராது. ஆகவே உங்கள் வாசிப்பில் நீங்கள் சந்திக்க நேரும் எந்தப் புதுக்கவிஞரையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள். 
 

புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றி இதுவரை நாம் பார்த்தவற்றிலிருந்து புதுக்கவிதை 1930களில் வசன கவிதையாகத் தோன்றி, தொடக்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே கையாளப்பட்டு, அறுபதுகளுக்குப் பின்னர் வடிவத்தில் செறிவடைந்து புதுக்கவிதையாகி, மிகப்பலரும் ஏற்றுப் போற்றும் கவிதை வகையாக வளர்ந்துவிட்டதையும், இன்ன பொருள் என்றில்லாமல் எல்லாப் பொருளையும், இன்ன முறை என்றில்லாமல் எம்முறையிலும் வெளிப்படும் தன்மையைப் பெற்றிருப்பதையும் அறிந்தோம். இனிப் புதுக்கவிதையின் வகைமை பற்றிக் காண்போம்.



3.1.1.3. வகைமை  
 

நம் தமிழ் மரபுக் கவிதைகளில் அகம், புறம். நீதி, சமயம், காப்பியக்கதை போன்ற பொருள் அடிப்படையிலான வகைமை இருப்பதை அறிந்திருப்பீர்கள். சில பொருள்கள் சில குறிப்பிட்ட யாப்பு வடிவங்களில் (நீதி இலக்கியம் - வெண்பா; கோவை இலக்கியம் - கட்டளைக் கலித்துறை; பிள்ளைத் தமிழ் - ஆசிரிய விருத்தம்; காப்பியம் - விருத்தம், ஆசிரியம்) அமைந்திருப்பதையும் அறிவீர்கள். ஆகவே கவிதையை வகைப் படுத்துவதில் கவிதைப் பொருளுக்கும் வடிவத்துக்கும் பங்கு உண்டு என உணரலாம். புதுக்கவிதையும் இவ்வாறே பொருளாலும் வடிவாலும் வகைப்படுத்தக் கிடக்கிறது. புதுக்கவிதை வடிவம் யாப்பற்றது என்பதனால் வடிவாலான வகைமை குறைவு. அந்த வடிவங்களுள் சில ஜப்பானிய, மேல்நாட்டுக் கவிதை வடிவங்களைப் பின்பற்றியவை; சில தமிழ் மரபின் சாயை கொண்டவை. இனிக் கவிதை வகைகளைக் காண்போம். 
 

 சமூக உணர்வுக் கவிதைகள்  
 

தனிமனித உணர்வுகள் அல்லாத, சமூகச் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள், அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கவிதைப் பொருளாகக் கொண்டவற்றை ஒரு வகைப்பாட்டில் அடக்கலாம். இவ்வகையில் வருவன பெரும்பான்மையும் பொருளாதார அடிப்படையில் தாழ்நிலையில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் ஆகியோரின் வாழ்நிலைகளைச் சொல்வன. இவை பெரும்பாலும் மார்க்சியத் தத்துவத்தில் கால் கொண்டவை. இவற்றுள் வெளிப்படையான பிரச்சார முழக்கங்களும் உண்டு. எ-டு. வானம்பாடிக் கவிதைகள், இன்குலாப் கவிதைகள் போன்றவை. பிரச்சாரமின்றி இக்கருத்துகளை மீரா போன்றோர் வெளியிட்டுள்ளனர். மார்க்சிய எல்லைக்கு வெளியிலிருந்தே பேசுவோரும் உண்டு. ஆத்மாநாம் முதலிய பல கவிஞர்களிடம் இவ்வியல்பைப் பார்க்கலாம். 1980களுக்குப் பின்னர்ச் சமூக உணர்வு - தனிமனித உணர்வு எனும் பாகுபாடு மறைந்து மிகப்பெரும்பாலான கவிஞர்களிடம் ‘தானும் சமூகமும்’ ‘தானும் பிறரும்’ எனும் உணர்வே கவிதையாயிற்று. 
 

 தனிமனித உணர்வுக் கவிதைகள்  
 

புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் இத்தகைய ஒரு பாகுபாடு இருந்தது. இவ்வகைக்குச் சுட்டிக் காட்டக் கூடிய எடுத்துக் காட்டுகள் இருந்தன. S. வைத்தீஸ்வரன், தி.சொ.வேணுகோபாலன், நகுலன், பசுவய்யா போன்றோர் கவிதைகளில் இத்தன்மையைக் காண முடிந்தது. அடுத்துவந்த காலத்தில் பிரமிள், அபி, தேவதேவன், அப்துல் ரகுமான், ஆனந்த், தேவதச்சன் எனத் தொடரும் ஒரு நீண்ட பட்டியலில் இத்தகைய கவிதைப் படைப்பாளிகளைக் காணலாம். தனிமனித உணர்வு என்பது சமூக உணர்வுக்கு, முற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானது என்ற கருத்தும் கண்டனமும் மறைந்து போய்விட்ட இந்நாளில் இந்த இருவித வகைகளும் பொருளற்றவை; வரலாற்றுப் பதிவாக மட்டுமே காணக்கிடைப்பவை என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 
 

 அங்கதக் கவிதை, எதிர்கவிதை, அபத்தக் கவிதை  
 

நம் தமிழ் மரபில் மரபான நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான கருத்தோட்டங்களைச் சித்தர்களின் பாடல்களில் காணலாம். ‘நட்டகல்லைத் தெய்வமென்று சொல்லலாமா’ என்று கேட்ட சித்தர் ஒருவகையில் அங்கதக் கவிதை படைத்தவரே. வள்ளுவர், சீத்தலைச் சாத்தனார் போன்றோரிடம் அங்கதம் செயல்பட்டது. புதுக்கவிதையில் அங்கதத் தன்மை பெருகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் சம பங்கு ஏற்பதை அப்துல் ரகுமான், “வௌ்ளி விழா மண்டபத்தில் விடுதலைத் தேவதையைப் பாண்டவர்களும் துரியோதனாதிகளும் பங்குபோடும் வேளையில்” எனத் தொன்மத் துணைகொண்டு அங்கதம் செய்தார். சரியான ஆடையின்றிக் குளிரில் விறைத்து இறந்துபோன ராஜம் என்ற சிறுமியைப் பற்றி எழுதும் இன்குலாப் “பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத்தான் பரமாத்மாவும் பட்டாடை கொடுப்பான்; ராஜத்திற்கு ஒரு பருத்தியாடை கொடுப்பானா?” எனக் கேட்பது நெஞ்சைத் தொடும் அங்கதம். ஞானக்கூத்தனின் ‘பரிசில் வாழ்க்கை’ என்ற கவிதை இன்றைய அரசியல்வாதியின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவது. ‘யெதிரெதிர் உலகங்கள்’ கவிதையில் கவிஞனுடன் பண்டிதனை ஒப்பிட்டு அவர் செய்த அங்கதம் பாராட்டுக் குரியது. மீராவின் ‘ஊசிகள்’ தொகுப்பு முழுமையும் அங்கதக் கவிதைகளே. இவர்கள் அனைவருக்கும் முன்னோடியான புதுமைப் பித்தனின் கவிதைகளில் எள்ளலும், நையாண்டியும் குத்திக் காட்டலும் மிகுந்திருந்தன. எதிர்கவிதை, அபத்தக் கவிதை என்பன வழக்கமான ‘கவிதை’க்கே எதிரான கவிதைகள். இவற்றை அ - கவிதை (கவிதை அல்லாதவை) எனச் சொல்வதும் உண்டு. கவிதைக்கு இயல்பான அழகியலை ஒதுக்கிவிட்டு, ‘எல்லாம் சரி’ எனும் மனநிலையையும் எதிர்த்துக்கொண்டு பிறப்பவை இத்தகைய கவிதைகள். ‘என்னை நோக்கி ஒருவர் வந்தார். எதைப் பற்றிக் கேட்கப் போகிறார் என்ற எண்ணத்துடன் எதிர்பார்த்து நிற்கையில் என் அருகில் வந்ததும் வேறுபுறமாகத் திரும்பிப்போனார்’ என வரும் கவிதையில் ஒரு அபத்த நிலை அமைந்திருப்பதைக் காணலாம். வேறு ஒரு கவிதையில், வந்தவர், ‘ராமச்சந்திரனா?’ என்று கேட்கிறார். ‘ராமச்சந்திரன்’ என்று இவர் பதில் சொல்கிறார். ‘எந்த ராமச்சந்திரன்’ என்று அவர் சொல்லவும் இல்லை, இவர் கேட்கவும் இல்லை எனக் கவிதை முடிகிறது. இதுவும் ஓர் அபத்த நிலை. நகுலன், ஞானக்கூத்தன், சி.மணி ஆகியோரிடம் இத்தகைய கவிதைகளுக்கு எடுத்துக் காட்டுகள் காணலாம். 



 தலித்தியக் கவிதை  
 

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வு, உரிமைகள், அவர்களின் சிறப்பான கலைகள் ஆகியவற்றை உரத்து எடுத்துச் சொல்லும் இலக்கிய வகைமையைத் தலித் இலக்கியம் என்பர். தலித் கவிதைகள் பெரும்பாலும் தலித் கவிஞர்களாலும் சிறுபான்மை வேறு இனம் சார்ந்த கவிஞர்களாலும் படைக்கப்படுபவை. பாரதியின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” எனத் தொடங்கும் கவிதை தமிழ்ப் புதுக்கவிதையில் தலித்தியத்துக்கு மூலமுத்தான கவிதை எனலாம். “பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை” என்ற பாரதியின் முழக்கம் இன்றைய தலித் கவிதைகளில் எதிரொலிக்கிறது. கிணற்றில் மின்சாரம் பாய்ச்சித் தலித் குழந்தைகளைக் கொன்ற மேல்சாதியினரைக் கண்டித்து “மனுஷங்கடா - நாங்க மனுஷங்கடா” என்று இன்குலாப் பாடிய உணர்ச்சி நிரம்பிய பாடல் தலித்மேடைகள் பலவற்றில் பாடப்பட்டது. 
 

 பெண்ணியக் கவிதை  
 

பெண்ணியம் என்பது இன்று சமூக, அரசியல், இலக்கியத் துறைகளில் நன்கு அறிமுகமானது. பாரதியே பெண்ணியத்தைத் தொடக்கி வைத்தவர் என்பதை நாம் அறிவோம். இரா.மீனாட்சி, சுகந்தி சுப்ரமணியன் ஆகிய இரு கவிஞர்களும் பெண்ணிலை வாதத்தைச் சற்று அடங்கிய தொனியில் எழுதினர். அவர்களுக்குப் பின் இப்போது எழுதிவரும் பெண் கவிஞர்களான சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை, கனிமொழி போன்ற பலரும் பெண்ணியத்தின் பரிமாணங்களை விரிவு செய்துள்ளனர். ஒடுக்கப்படும் ஏழைப் பெண், குடும்ப பாரத்துள் அழுத்தப்படும் நடுத்தர வர்க்கப் பெண் ஆகியோரது வாழ்வுரிமை, பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், கற்பு என்பதைப் பெண்ணின் சிறையாக வடிவப்படுத்திய ஆணாதிக்கத்திற்கு எதிரான குரல், பெண்ணின் உடலியல் சார்ந்த இயல்பான வேட்கைகள் போன்றவை மனத்தடையின்றி இவர்களின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இக்கவிதைகளின் கூற்றுமுறையைப் ‘பெண் மொழி’ என்று கூறுகின்றனர். மனத்தடையற்ற இவ்வித வெளிப்பாடுகள் சில கடுமையான விமரிசனங்களுக்கு ஆளாவதும் காண்கிறோம். 
 

 வடிவம் சார்பான வகைகள்  
 

தமிழ்க் கவிதை மரபில் காப்பியக் கவிதை, சிற்றிலக்கியக் கவிதை போன்ற வடிவம் சார்ந்த வகைகள் உண்டு என அறிவோம். புதுக்கவிதையிலும் வடிவம் சார்ந்த சில வகைகள் உள்ளன. சற்று நீண்ட கவிதைளைக் (பத்துப்பாட்டு போல உள்ளவை) குறுங்காவியம் என வகைப்படுத்துகின்றனர். பிரமிளின் ‘கண்ணாடியுள்ளிருந்து’, ஞானியின் ‘கல்லிகை’ சி. மணியின் ‘பச்சையம்’, ‘நரகம்’, ‘வரும்போகும்’ போன்றவை குறுங்காவியங்கள். வேறு ஒரு வகையில் ஒரே பொருள் தொடர்ச்சியுடைய தனித்தனிக் கவிதைகளின் (தொடர்கவிதைகள்) தொகுப்பையும் (எ-டு ‘தேவதேவனின் குளித்துக் கரையேறாத கோபியர்கள்’, கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’) குறுங்காவியங்கள் எனலாம். சிலவற்றை ‘நெடுங்கவிதைகள்’ எனும் பெயரில் வகைப்படுத்தியுள்ளனர். ராஜ சுந்தரராஜனின் ‘உயிர்மீட்சி’, ‘முகவீதி’ போன்றவை தொடர்கவிதைகள். அபியின் ‘மாலை’ தொகுப்பு முற்றிலும் புதுவிதமான ஒரு நவீன காவியம் எனச் சொல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சிற்பி கதைக்கவிதைகள் சிலவற்றைப் படைத்துள்ளார். ‘மௌனமயக்கங்கள்’ எனும் தொகுப்பு ஒரு கதைக்கவிதையாகும். புதுக்கவிதையில் ஜப்பானிய ‘ஹைகூ’ வடிவமும் இடம் பெறுகிறது. அறிவுமதி, அப்துல் ரகுமான், மித்ரா, தமிழன்பன் போன்ற கவிஞர்கள் ஹைகூ வடிவக் கவிதைகள் படைத்துள்ளனர். 
 

 புலம்பெயர்ந்தோர் கவிதை  
 

இன்றைய தமிழ்க் கவிதைக்குப் புதுவரவான ஒரு வகை இது. ஈழத்திலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வெளிநாடுகளில் சென்று வாழும் ஈழக்கவிஞர்கள் தாங்கள் வாழும் இடங்களில் (பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து) சில இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுடைய இடப்பெயர்ச்சி உணர்வுகளை, வாழ்நிலைகளைக் கவிதைகளாகப் படைத்துள்ளனர். இவையும் நம் கவனத்திற்குரிவையே.




--
உதவி செய்தல்தான் உறவின் துவக்கம்.  அங்கே உண்மையிருப்பின் உறவு பலப்படும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

வில்லன்

unread,
Feb 6, 2010, 1:20:09 PM2/6/10
to thamizh...@googlegroups.com, tamil2friends, panbudan, muththamiz
மாம்ஸ், இதை யாராச்சும் படிப்பாங்கனு நம்பறிங்களா.


Reply all
Reply to author
Forward
0 new messages