பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி

30 views
Skip to first unread message

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 29, 2008, 5:00:26 AM9/29/08
to panb...@googlegroups.com
தருமி - அறிமுகம்
 
மனிதர்களின் தேடல்களும் அவர்களது வாழ்க்கை தரும் அனுபவங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடியவை.  அடுத்த மனிதனின் துயரம் கண்டு உணர்வுபூர்வமாக நாமும் அதில் பங்கு கொள்ள முடியும்போதுதான் மனிதனின் சுயம் வெளிப்படுகிறது. மனிதனின் சுயத்தை வெளிப்படுத்த அவனுக்குள் இருக்கும் குழந்தை எப்போதும் புன்னகைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு நமக்குக் குழந்தை உள்ளம் வேண்டும் அந்த உள்ளம் எழுத்துக்களிலும் வெளிப்பட வேண்டும்
அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரரான தருமி ஐயாதான் இந்த வாரம் நமது நட்சத்திரம்.
 
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் உறங்கி விடாத உற்சாகத்துடன் எழுதும் இளைஞர்.  கடந்த காலத்தையும் இந்தக் காலத்தையும் அதனதன் நெறியோடு சீர்தூக்கி வாழ்க்கையை அனுபவிக்கின்றவர்.  புதிய தலைமுறையைப் புறக்கணிக்காமல் பழையவைகளைக் கழித்து விடாமல் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு நண்பனிடம் உரையாடும் பாணியில் மிக இலகுவாக தனது நினைவலைகளை நம்மோடு பங்கு கொள்ள வரும் தருமி ஐயாவின் இயற்பெயர் சாம் ஜார்ஜ்.  மனைவியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.  இரண்டு மகள்கள். 'நண்டும் சிண்டுமாக' மூன்று பேரக் குழந்தைகள். வசிப்பது மதுரையில். இதோ தருமி ஐயாவின் அறிமுகம் அவரது மொழியிலேயே ...............
 

 

ஒரு மணி நேர வகுப்பென்றால் முழுதாக 60 நிமிடமும் பாடத்தை மட்டும் பேசிவிட்டு, மணியடித்ததும்  முடித்துவிட்டுச் செல்லும் நல்ல ஆசிரியனாக இல்லாமல், எதையும் பேசலாம் என்பதோடு, ஆண்டுமுடிந்து செல்லும்போது ஒவ்வொரு மாணவனிடமும் என் முத்திரை ஏதோ ஒன்றைப் போட்டு அனுப்ப வேண்டுமென நினைக்கிற ஆசிரியனாக 37 வருடம்…. 

 

வகுப்பு மட்டும் போதாது என்பதாக நினைத்து தனி மாணவர் குழுக்களை  அமைத்து மரத்தடியில் அமர்ந்து எதையும் பேசலாம்; பேச வேண்டும் என களம் அமைத்துக் கொடுத்து என்னென்னவொ பற்றியெல்லாம் பேசி விட்டு  பேச வைத்துவிட்டு … ஓய்வு பெற்ற பின் சின்னாட்கள்வரை  'பழைய நினைப்புடா பேராண்டி' என்பதாக  பழகி வந்த பழைய வழி இல்லாமல் போனதால் ஏதோ ஒரு சூன்யம் கவ்வ …

 

நல்லநேரத்தில் வந்ததுதான் வலைப்பதிவுகள். நினைத்ததையெல்லாம் பேசிப் பழகியவனுக்கு அதையே எழுதுவதற்கு இப்போது பெரிய களம். மாணவர்களிடமிருந்து  கற்றுக் கொண்டதுபோலவே இங்கும் தொடர்ந்து பாடம் பயில்கிறேன். நடு நடுவே வாத்தியார் புத்தியையும் காண்பிப்பதற்கும் வசதி. வேறென்ன வேண்டும்.

 

ஆனாலும் முதலிரண்டு ஆண்டுகளில் எழுதியது போல் இப்போது எழுதுவதில்லை. சட்டி காலியாகிவிட்டதா இல்லை அந்த அளவு நேரம் தருவதில்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இருந்தும் தொடருவதாகத்தான் எண்ணம், ஆசை.--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"

முதலாமாண்டு நிறைவு விழா

http://panbudan.blogspot.com/

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 29, 2008, 4:22:45 PM9/29/08
to panb...@googlegroups.com
அந்த காலத்தில … 

விலைவாசி அன்றும் இன்றும் … 1 
- தருமி

அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.  

ஆனா இப்போ நான்  கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும்.  உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு  கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா. 

இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம். 

அது என்னவோ அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகை வாங்குறவங்க கல்கண்டு பத்திரிகையையும் சேர்த்தே வாங்குவாங்க. ஏறக்குறைய மாதத்துக்கு ரெண்டு தடவையாவது வீட்டுக்கு வர்ர அண்ணன் ஒருத்தர் வாங்குற கல்கண்டுதான் நான் முதலில் வாசிக்க ஆரம்பித்த புத்தகம். துணுக்குச் செய்திகள் நிறைய இருக்கும். அதில் எத்தனை உண்மை இருந்திருக்குமே தெரியாது; ஆனா படிக்க படிக்க ஆர்வமா இருக்கிறமாதிரி துணுக்குகள். பாருங்களேன் இன்னும் என் நினைவில் இருக்கு ஒரு துணுக்கு. அதாவது மோட்டார் சைக்கிளில் வேகமா ஒருவர் போக, பக்கத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து துருத்திக் கொண்டிருந்த தகரம் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் தலையை அப்படியே துண்டித்து விட்டதாம். ஆனாலும் தலையில்லாத அந்த உடலோடு மோட்டர் சைக்கிள் பல மைல் தூரம் சென்றதாம்!  

'அந்த கரிய இருளில் கருப்பு நிற ப்யூக் கார் ஒன்று அந்த நீண்ட சாலையில் விரைந்து கொண்டிருந்தது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் கத்திபோல் இருளைக் கிழித்து …. ' இப்படியாகப் போகும் தமிழ்வாணனின் கதைகள். சங்கர்லாலும், மாணிக்கமும், கத்திரிக்காயும், மாதுவும், இந்திராவும், துணைக் கமிஷனர் வஹாபும் ரொம்ப வேண்டியவர்களாக , நெருக்கமானவர்களாக பலகாலம் இருந்தார்கள். 

அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை.  அதாவது அப்போதிருந்த demonstrator  என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ'  இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்க மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை ரூமுக்கு வந்ததும் பெட்டை தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான். 

பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன்.  அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது இன்றுவரை ! 

75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?   

படம்: 1

1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்பட்டியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு (எல்லாம் நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!  

படம் 2:
அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 85 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88படம் 3 :

அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)

சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 75 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!
 

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Sep 30, 2008, 4:25:38 PM9/30/08
to panb...@googlegroups.com

அந்த காலத்தில … 

ரயில் பயணங்களில் … 

- தருமி

இன்றைக்கும் கூட மதுரை புகைவண்டி நிலையத்தைத் தாண்டி ஓவர் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும்போது புகைவண்டிகள் வரும்போதும் கிளம்பும்போதும் அடிக்கும் அந்த மணிச்சத்தம் கேட்கும்போதெல்லாம் அடுத்த ரயில் பயணம் எப்போது என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது. அது என்னவோ இன்னும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குது. விமானத்தில் போகும்போது கூட (அப்புறம் எப்படி நாங்க அமெரிக்காவுக்கெல்லாம் விமானத்தில் போயிருக்கோம் அப்டின்றதைச் சொல்றது ..) விமானத்தில் ஏறி ஓரிரு மணி நேரத்தில் செமையா போர் அடிக்க ஆரம்பிச்சிருது. அது என்ன, ஒரு ஆட்டம், குலுக்கல் இல்லாமல் நின்றுகொண்டு இருப்பதுபோலவே மணிக்கணக்கில் இருந்தால் போரடிக்காதா என்ன? ஆனா ரயிலில் பாருங்கள் .. ஓடும் சத்தம் ஒரு தொடர்ந்த B.G.M. போல் நம் கூடவே எப்போவும் வர, எப்பவும் மனுஷங்களுக்கு மத்தியில் இருக்கிறோம் அப்டின்ற நினைப்போடுதான் இருக்கணும் – ஒட்டுக் குடித்தனம் மாதிரி. ஊரும் உலகமும் நம் கூடவே பயணம் வரும். பகலோ இரவோ எந்தப் பயணமாயிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு உண்டு. விமானப் பயணத்தில் everybody is an island  அப்டின்ற உணர்வுதான் இருந்தது. 

இப்போதே ரயில் பயணத்தில் இவ்வளவு ஆசையென்றால் சின்ன வயதில் கேட்க வேண்டுமா என்ன. வருடத்திற்கு இரண்டுதடவை – கிறிஸ்துமஸ் லீவு, அடுத்து கோடை விடுமுறை என இருமுறை – நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் கிளம்பி போவதே ஒரு திருவிழா மாதிரிதான். அப்போதெல்லாம் இரவுப் பயணத்தைவிட பகல் பயணமே வாய்த்தது.  

காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு! இப்போவெல்லாம் முன்னமே சீட், பெர்த் எல்லாம் வாங்கிக்கிட்டு செளகரியமா போய் பழகியாச்சு. அப்போவெல்லாம் அதெல்லாம் ஏது? கூட்டமா இருந்தா சிகப்பு சட்டை போட்ட ஆளுககிட்ட கொஞ்சம் காசு கொடுத்து 'பெர்த்' வாங்கிடலாம்; அதாவது, மேலே சாமான்கள் வைக்கிற இடத்தில துண்டு போட்டு காசு வாங்கிட்டு நமக்குக் கொடுப்பாங்க. அப்போ ரயில்களில் மூன்று வகுப்புகள் இருக்கும். முதல் இரண்டைப் பத்தி எதுவும் தெரியாது; நினைத்தும் பார்த்ததில்லை. ரயில் பெட்டிகளிலும் பல மாறுதல்கள். ரொம்ப சின்னப் பையனாக இருந்த போது சீட்டுகள் இப்போ மாதிரி குறுக்காக இல்லாமல் நீளவாட்டில் இருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் ரொம்ப முன்னால்தான். அதுக்குப் பிறகு இப்போதுள்ளது மாதிரி ஆகிவிட்டது.  ஆனால் ஜன்னல்களுக்குக் கம்பிகள் ஏதும் இருக்காது. துண்டைப் போட்டெல்லாம் இடம் பிடிக்க முடியாது. ஆட்களே ஜன்னல் வழியே புகுந்து இடம் போடணும். அதுவே ஒரு ஹீரோ வேலைதான். அந்த ஜன்னல்களை மூடும் கதவெல்லாம் இப்போவெல்லாம் மேலிருந்து கீழே வருவதாகத்தானே இருக்கின்றன. அப்போவெல்லாம் கீழிருந்து மேலே வரும்படி இருக்கும். அதை சரியாகப் பொறுத்த தனித் திறமையே வேணும். 

ரயில் வண்டிகளின் மின்விசிறிகளில் ஏதும் மாற்றமில்லையோவென இப்போதும் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் தோன்றுகிறது. ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே இருப்பது மட்டுமில்லாமல், அந்த விசிறிகள் எப்போதுமே அபார வேகத்தில்தான் சுற்றுகின்றன.  அன்றைக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். அப்போதெல்லாம் விசிறிகள் நம் இஷ்டத்துக்குத் திருப்பி வைத்துக் கொள்ளலாம். அதில் தான் பெரிய ட்ராமா, சண்டை எல்லாம் நடக்கும். அவரவர் இஷ்டத்துக்கு, வசதிக்கு ஏற்றாற்போல் அதை திசை திருப்புவார்கள். பல சமயங்களில் might is always right என்ற தியரி வேலை செய்யும். இல்லையென்றால் வெள்ளைச் சட்டை, ஓரிரு ஆங்கில வார்த்தைகளால் தங்களை மேல்மட்ட ஆட்களாகக் காண்பித்துக் கொள்பவர்களின் இஷ்டத்துக்கு அது வளையும்.  ஆனால் ராத்திரி எப்படியும் ஒரு சண்டை வரும். சாமான்கள் வைக்குமிடத்தில் எப்படியும் ஆட்கள்தான் இருப்பார்கள். ஒருவர் தூங்கியதும் எதிர்ப் பக்கத்தில் இருப்பவர் மெல்ல தன் பக்கம் மின்விசிறியை இழுத்துக் கொள்ள, இவர் தூங்கி அவர் முழித்ததும் மெல்ல அவர் தன்வழிக்கு இழுக்க … கதை தொடரும். 

இரண்டு மூன்று மணி நேரப் பயணம் முடிந்து ரயிலில் இறங்குபவர்களைப் பார்த்தாலே பாவமாயிருக்கும். நிச்சயமா சட்டையெல்லாம் கரி படர்ந்து, கண்ணெல்லாம் ரத்தச் சிவப்பாகி, தலைமுடியெல்லாம் கலைந்து ஒரு பெரிய போராட்டம் முடிந்து வருபவர்கள் போல்தான் எவரும் தோற்றம் தருவார்கள். ஏனென்றால், எல்லா ரயில்களும் கரிவண்டிகள்தான். அப்போ வச்ச பேருதான் "புகை வண்டிகள்" ! எவ்வளவு பொருத்தம் ! வண்டியில் எங்கு உட்கார்ந்து எழுந்தாலும் கார்மேக வண்ணனாகத்தான் எல்லோரும் மாறணும். எங்கும் எதிலும் கரிதான். ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்தவர்களுக்கு இன்னொரு போனஸ்; கண்கள் எல்லாம் கரிவிழுந்து செக்கச் சிவப்பாய் ஆகிவிடும். வாழ்க்கையே போராட்டம் என்பது போல் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு போராட்டமாக அமைந்துவிடும்.  

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எப்படியும் அங்குமிங்குமாய் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் தொங்கும். எங்கும் எந்த இடத்திலும் மக்கள் உட்காரத் தயங்குவதில்லை; அது பாத்ரூம் பக்கமாக இருந்தாலென்ன, நடைபாதையாயிருந்தாலென்ன. சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். இப்பவும் பொது ரயில் பெட்டிகள் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுபோல் பொது ரயில் பெட்டிகளில் பயணித்தது நாளாகிவிட்டது. 

ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது. 

ஏறக்குறைய கொஞ்சம் வசதியான மக்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம்  கையோடு கொண்டுவருவது ஒரு பித்தளை கூஜா. ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் இந்தப் பயணங்களில் கட்டாயமான ஒரு வேலை எந்த நிறுத்தத்தில் நின்றாலும் இறங்கி ஓடிப் போய் அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதுதான். இப்போவெல்லாம் நீங்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க, எதிரில் இருக்கும் எனக்கு இல்லையென்றால் நான் உங்களிடம் தண்ணீர் ஓசி கேட்க முடியுமா? அப்போவெல்லாம் வேண்டுமாவென்று கேட்டுகொடுத்தது நினைவில் இருக்கிறது, கூஜாவைத் திறந்து அதனுள்ளேயே இருக்கும் சிறு தம்ளரில் மக்கள் தங்கள் பரோபகாரத்தைக் காண்பிப்பார்கள். 

அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கென்று போனால் முதலில் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கும் கரும்பலகையைத்தான் பார்க்க வேண்டும். அதில்தான் ஒவ்வொரு ரயிலும் எத்தனை நிமிடங்கள் காலதாமதமாக வரும் என்பதை எழுதி வைத்திருப்பார்கள். அதுவும் எல்லாம் நிமிடக் கணக்குதான் – ரயில் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும்! ரயில்கள் தாமதமாக வருவதுதான் அப்போதைய நடைமுறை. சரியான நேரத்துக்கு ஒரு ரயிலும் வந்ததாகச் சரித்திரம் இருக்காது. அதை வைத்துக் கதை – அனேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான் – உண்டு. ஆச்சரியமாய் ஒரு நாள் ஒரு ரயில் சரியான நேரத்து வர, எல்லோரும் வண்டி ஓட்டுனருக்கு மாலை போட்டார்களாம். அவரோ ரொம்பவே வெட்கப் பட்டு 'இந்த ரயில் நேற்று சரியாக இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டிய வண்டி' என்றாராம். 

மதுரையிலிருந்து ஊருக்குப் போக ரயிலில் போய் அதன்பிறகு பஸ், ஒத்தை மாட்டு வண்டி என்று கிராமத்துக்குப் பயணம் தொடரும். திரும்பி மதுரை போகும்போது ரயில் பயணத்திற்குப் பிறகு ஜட்கா பயணம். இதில் ஊருக்குப் போகும் பஸ் பயணம் ஒரு தனி ரகம்தான். ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும். வெளிப்பக்கம் அதற்குக் காற்றடிக்க கையால் சுற்றக்கூடிய  துருத்தி ஒன்று இருக்கும். பெரிய ஊர்களில் பஸ் நின்றவுடன் சின்ன பசங்க ஓடி வந்து அந்த துருத்தியைச் சுற்ற ஓடிவருவார்கள் - கிடைக்கும்  காசுக்காக. 

மதுரையில் இறங்கியதும் ஜட்கா வண்டிக்காகக் கட்டாயம் ஒரு பேரம் நடக்கும். எப்போதும் எனக்கு வண்டிக்காரர் பக்கத்தில் முன்னால்தான் இடம். ரொம்ப நாள் வரை ஒரு விஷயம் எனக்குப் புரிந்ததே இல்லை. ஒத்தை மாட்டு வண்டியானாலும் சரி, இரட்டை மாட்டு வண்டியானாலும் சரி, மாட்டின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரர் கையில் இருக்கும். அதை இழுத்து மாட்டை அல்லது மாடுகளை கன்ட்ரோல் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜட்கா வண்டிகளில் ஒரு கையில் வைத்திருக்கும் கயிற்றின் சிறு அசைவுகளை வைத்தே குதிரையைக் கன்ட்ரோல் செய்வது ரொம்ப நாட்களுக்குப் பிறகே புரிந்தது. அது புரிவதற்கு முன்பு எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பது எப்படி குதிரை "தானாகவே" சரியான ரோட்டில் செல்கிறது என்பதுதான். ஒருவேளை குதிரைக்கு மதுரையில் எல்லா இடமும் தெரிந்திருக்குமோ? அதோடு நாம் பேரம் பேசும்போதே போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டு தானாகவே போகிறதோ என்று அதி புத்திசாலித்தனமாக நினைத்திருந்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கம்தான்! சரி விடுங்க, யார்ட்ட உங்ககிட்ட மட்டும்தானே சொல்கிறேன். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதிரை வண்டிப் பயணம்

 

 

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Oct 2, 2008, 12:50:00 AM10/2/08
to panb...@googlegroups.com

அந்த காலத்தில …

எனது "ஜாவா மஹாத்மியம்"...

- தருமி

ஜாவா எனக்குத் தண்ணி பட்ட பாடு. பிறகு என்ன, கொஞ்சமா, நஞ்சமா.. 22 வருஷத் தொடர்பு என்றால் சும்மாவா? மேலே சொல்வதற்கு முன்பே ஒரு முக்கியமான சேதி. ஜாவா என்றதும், software கில்லாடிகளாக நிறைந்திருக்கும் இந்த வலைஞர்களில் பலர் நான் 'ஜாவா'ன்னு சொன்னது JAVA என்று நினைத்திருக்கலாம்.. இல்லை..இல்லை.. நான் சொல்லவந்தது - JAWA, 1966 மாடல், 250 c.c., Made in Czechoslovakia (இப்போ அந்த நாடே இல்லையோ?!), MDA 2107, என்னிடம் வந்தபோது 'சிகப்பழகி'; பின் எனக்குப் பிடித்தவாறு 'கறுப்பழகி'யாக மாறியவள். 1970 அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் 'அவள்' கைப்பிடித்தேன் - I mean its 'handlebar' ! அப்போது நான் ஒரு bachelor. ஆனால், 1992-ல் -22 ஆண்டுகள் என் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்ட'அவள்' என்னைவிட்டுப் பிரியும்போது எனக்கு இரு வளர்ந்த குழந்தைகள். அந்தப் 'பிரிவு' என்னைவிட என் மகள்களை மிகவும் பாதித்தது. சின்னவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. 
 
தஞ்சையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நல்ல மூடில், உள்ளூரில் வேலை பார்த்தால் ஒரு பைக் வாங்கிக்கொள் என்று அப்பா permission கொடுக்க, என் நல்ல நேரம் அமெரிக்கன் கல்லூரியில் 1970-ல் வேலை கிடைத்த உடனே அப்பாவை அனத்த ஆரம்பித்தேன். நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்தது 'சித்தாள்' வேலை; அதாவது, அப்போதெல்லாம், கல்லூரிகளில் லெக்சரர் மட்டுமல்லாமல், tutor/demonstrator என்ற போஸ்ட்டும் உண்டு. ஒரே தகுதியிருப்பினும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதால், சில பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அந்தப் பதவிகளே கிடைத்து, பின், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்காய் தவமிருந்து லெக்சரர் பதவி உயர்வு பெறவேண்டும். அது ஒரு சோதனைக்காலம். நான் சேர்ந்தது அப்படி 'சித்தாள்' வேலையில்தான். அப்பாவுக்கு இது ஒரு சாக்காகப் போய்விட்டது. 'பார்க்கிற வேலை என்னவோ சித்தாள் வேலை; இதில் பைக்கில் போய் இறங்கினால் ரொம்ப நல்லாவே இருக்கும்; போ..போ... பிறகு பார்த்துக்கொள்ளலாமென' சொல்ல மனம் உடைந்து, தாடி இல்லாமல் சோகம் காட்டி, பிறகு பயங்கர பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து அப்பாவைச் சரிக்கட்டினேன். 
 
மனம் மாறிய அப்பா அவருக்குத் தெரிந்த நண்பரிடம் இருந்த ஜாவா பைக்கை எனக்காக வாங்கி, ஒரு சனிக்கிழமை இரவு 'வண்டியை நாளைக்கு எடுத்துக்கொள்' என்று அதன் சாவியைக் கொடுத்தபோது ஒரே 'ஜிவ்'தான். ஏனென்றால், அப்போது மொத்தமே மூன்றே மூன்று வகை பைக்குகள்தான். புல்லட் 350 சி.சி.- அப்போது விலை 4,500 ரூபாய்; அந்த வண்டியைப் பார்க்க ஆசை ஆசையாகத்தான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் யானை நினனவுதான் வரும். அடுத்தது ஜாவா 250 சி.சி. - விலை 3,500. பார்க்கும்போது வரும் நினைவு: முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் அழகுக் குதிரை. முன்றாவது, ராஜ்டூத் 150 சி.சி. விலை 2,500. சரியான எருமை மாடு மாதிரி நிற்கும். பிடிக்காது. 'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500. 
 
அதுவரை வண்டி நன்றாக ஓட்டத்தெரியாது. தஞ்சையில் தங்கியிருந்த லாட்ஜில் வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த அடுத்த அறை நண்பருக்கு அளிக்கப்பட்டிருந்த 'எருமைமாடு'- அதாங்க, ராஜ்தூத்தை அவர் வெளியூர் செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம். அந்த அனுபவம் மட்டுமே உண்டு. அடுத்த நாள், நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று, நான் படித்த மரியன்னை பள்ளியில் இருந்த என் குதிரையை எடுத்துக்கொண்டு நேரே ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குச் சென்றோம். நட்ட நடு மைதானத்தில் வண்டியை நிப்பாட்டிவிடு நண்பர் 'தம்' அடிக்க உட்கார்ந்து விட்டார். சரி வண்டியை எடு என்றார். ஸ்டார்ட் செய்தேன்; கியர் போட்டேன்; நாலைந்து சுற்று சுற்றினேன். அவ்வளவுதான், உனக்கு ஓட்டத் தெரிந்துவிட்டது என்று சொல்லி நண்பர் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு அப்பாவிடம் நல்ல சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார். 
 
ஏழுமணிக்கு முந்தி எப்பவுமே எழுந்திருக்காத நான் அடுத்த சில நாட்களுக்கு ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குதிரையை நன்றாகத் துடைத்து, அப்போதெல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமலிருந்த (இப்போது அங்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து ஒரே மக்கள் கூட்டம்தான்) வைகை நதிக்கரையின் ஓரமாக இருக்கும் சாலையில் சைலன்சர் இல்லாத வண்டியை ஓட்டிப் பழகினேன். கொஞ்சம் தைரியம் வந்த உடன் கல்லூரிக்கு ஓட்டிப்போனது; போகும் வழியில் எல்லோருக்கும் நடப்பது போலவே, போலீஸ்காரரைப் பார்த்ததும் வண்டி நின்றுபோனது - எல்லாமே நினைவிலிருக்கிறது. இப்போ பைக் ஓட்டுபவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, இந்தக்காலத்து பைக்குகள் எல்லாமே கையாலேகூட ஸ்டார்ட் செய்யமுடியும். ஆனால், புல்லட், ஜாவா பைக் இரண்டுக்குமே செம உதை கொடுக்கவேண்டும். கொஞ்ச காலம் வரை இடது கால் பெருவிரலில் எப்பவுமே ரத்தக்காயத்தோடேயே அலைந்தேன். ஷூகூட போடமுடியாது. 
 
எப்போது கோடை விடுமுறை வருமெனக் காத்திருந்தேன். விடுமுறையும் வந்தது.
சொந்தஊருக்கு பைக்கிலேயே செல்ல முடிவு செய்திருந்தேன். 130 மைல்கள். ஊருக்குள் நுழைந்ததும் பைக் பின்னாலேயே ஒரு பெருங்கூட்டமாகச் சின்ன பசங்கள் எல்லோரும் ஓடிவர வீடுவந்து சேர்ந்தேன். என் அப்பம்மாவிற்குப் பெருமை பிடிபடவேயில்லை; திருஷ்டிதான் சுற்றவில்லை. நான் வீட்டுக்குள் வந்த பிறகும் சின்னப் பிள்ளைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. அப்போது எங்கள் ஊர் பக்கம் நானே பைக் எதுவும், யாரும் ஓட்டி வந்தும் பார்த்ததில்லை. பசங்க கூட்டத்திலிருந்து பைக்கைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அன்று ஊருக்குப் போனதால் என் வண்டிக்குப் புதுப் பெயர் ஒன்று கிடைத்தது. பசங்க எல்லோரும் வண்டியைச் சூழ்ந்துகொண்டும், நான் போகும்போது பின்னாலேயே கூட்டமாய் ஓடி வந்தும், 'டக்கு மோட்டார் ...டக்கு மோட்டார்' என்றார்கள். அந்தப் பெயர் மிகவும் பிடித்ததால் 'Darling Duck' என்று நாமகரணம் சூட்டினேன். ஆனால், இந்தப் பெயரைக் கடைசியில் மாற்றும்படியானது. என்ன பெயர், ஏன் அந்தப் பெயர் என்பதைப் பிறகு சொல்கிறேன். 
 
நான் பைக் வாங்கியபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், ஏழு பைசா !. Fill tha tank எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்! கால் கீழேயே பாவாது; துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான். எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த நண்பரும் ஜாவா வைத்திருந்தார். இரண்டுபேருமாகச் சேர்ந்தே தனித்தனி பைக்கில் சுற்றுவோம். 'சர்க்கஸ்காரங்க மாதிரில்ல சுத்துறாய்ங்க'ன்னு மற்ற நண்பர்கள் அடிச்ச கமெண்ட் ரொம்ப பெருமையா இருந்திச்சு. ஆனா, கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டின்னு வந்தப்புறம் இந்த நிலை மாறிப்போச்சு. எங்கள் கல்லூரி slang படி நான் ஒரு 'ஒத்தை மாட்டு வண்டி'; அதாவது, தங்கமணி அப்போது வேலை பார்க்கவில்லை; நான் மட்டுமே 'தனி மாடாக' வண்டியை இழுத்தாகணும். வாங்கும் சம்பளம் இழுத்துப் பிடித்து 'வண்டி'யை ஓட்டுவதற்கே சரியாக இருக்கும்; இதில் பைக் வேறு. அதுக்கு ஊத்தணுமே, பெட்ரோல். நிலைமை ரொம்ப 'டைட்' ஆன பிறகு, சம்பளம் வாங்கியதும் போடற பெட்ரோல் முதல் பத்து நாளைக்கோ ஒரு வாரத்துக்கோ வரும்; குடும்பத்தோடு போகவேண்டிய கடமைகளை இந்த நாட்களுக்குள் முடிப்போம். பிறகு, அடுத்த பத்து நாட்களில் அவசரத்தேவைகளுக்கு மட்டும். கடைசி பத்து நாட்களுக்கு 'நடராஜா செர்வீஸ்'தான். முதல் வாரம் 'பெட்ரோல் வாரம்'; கடைசி வாரம் 'பஸ் வாரம்'. த்சொ, த்சொ... ஐயோ, பாவம் இந்த மனுஷன் அப்டின்னு யாரும் நினைச்சீங்கன்னா, இன்னும் ஒரு விஷயம் சொல்லணும். நான் பைக் வாங்கும்போது ஏறத்தாழ 150 ஆசிரியர்கள் இருந்த எங்கள் கல்லூரியில் இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையே பன்னிரெண்டே பன்னிரெண்டுதான்! நான் பதின்மூன்றாவது ஆள். என்ன பண்றது; அப்போ கல்லூரி வாத்தியார்கள் நிலைமை அவ்வளவுதான். 
 
அதோடு இப்ப எல்லாம் ரோட்ல போகும்போது அங்கங்கே இருசக்கர வாகனங்களைக் 'கூறு கட்டி' வைத்து விற்கிறார்கள். நீங்கள் வண்டி ஒன்று வாங்கலாமா என்று ஒரு கனவு கண்டால்கூட அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு ஆள் வந்திடும்- 'சார், வண்டி வாங்கலையோ, வண்டி' என்று கூவிக்கொண்டு. ஆனால், அப்போதெல்லாம் வண்டிகள் வாங்க ஆட்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். இயலாமை ஒரு பக்கம்; அதைவிட இதெல்லாம் தேவையில்லை என்ற மனப்பாங்கு அதிகம். It was out and out a luxury item! பைக்குகள் வாங்க ஆள் கிடையாது; ஆனால், ஸ்கூட்டருக்கு மட்டும் கொஞ்சம் போட்டி உண்டு. அதுவும் demand-supply விதிகளால்தான்! அப்போது இருந்த வண்டிகள்: லாம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட லாம்ப்ரெட்டாவும், வெஸ்பாவும்தான். அதிலும், இந்த வெஸ்பாவுக்கு ஏக டிமாண்ட்; அதிலும், குறிப்பாக 'chetak' என்று ஒரு மாடல். அடேயப்பா, அந்த வண்டி வச்சிருந்தா அவர்மேல்தான் எத்தனை பொறாமைக்கண்கள். அப்போது, டாலரில் கொடுத்தால் இந்த வண்டி உடனே கிடைக்கும். எங்கள் கல்லூரியிலிருந்து அமெரிக்காவிற்கு வருஷத்திற்கு ஒருவராவது போய் வருவதுண்டு. போய் வந்தவர்கள் வந்த வேகத்தில் செய்வது ஒரு chetak வாங்குவதுதான். ஒரு chetak கல்லூரிக்குள் வந்து விட்டால் அதைச் சுற்றி ஓரிரு வாரங்களுக்காவது அப்பப்போ ஆசிரியர் கூட்டம் வேடிக்கை பார்க்க நிற்கும். டாலர் இல்லாமல் சாதாரண முறையில் வாங்க வேண்டுமானால், ரூபாய் 500 கட்டிவிட்டுக் காத்திருக்கவேண்டும் - எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? Just for 6 years! கையில் காசு இருந்தாலும் காத்திருக்கவேண்டும். அதிலும் சிலர் ஒரு வியாபாரம் செய்வதுண்டு. 500 ரூபாய் கட்டிவிட்டு, 6 ஆண்டுகள் கழித்து வண்டி அலாட் ஆனதும் அதை 'பிரிமியத்துக்கு' விற்று விடுவதுண்டு. கட்டிய 500 ரூபாயுடன் மேலும் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்துவிடுவார்கள். இப்படி வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் உண்டு; ஆனாலும் இந்த வியாபாரம் வெற்றி நடை போட்டு வந்தது. இப்படி ஒரு காலத்தில் பார்த்துவிட்டு, இப்போது தெரு முனைகளில் வண்டிகளை நிப்பாட்டிகொண்டு, ' கூவி கூவி ' விற்பதைப் பார்க்கும்போது... என்னமோ போங்க..எனென்னமோ நடக்குது நாட்டிலன்னு நீட்டி முழக்கணும்போல தோன்றும். 
 
ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது என் 'டார்லிங் டக்'கை. எப்போதுமே ரொம்ப தொல்லை கொடுத்ததேயில்லை. ஏதோ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அதுபாட்டுக்கு ஓடியது. குடும்பத்தில் ஒரு நபர் மாதிரிதான். ஜாவா + தோளில் ஒரு ஜோல்னா பை + கழுத்தில் அடிக்கடி ஒரு காமிரா - இதுதான் ரொம்ப நாள் என் அடையாளமாக இருந்தது. வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn! டார்லிங் டக்கில் பல இடங்களுக்கும் பயணம் - தனியாக, குழுவாக. எனக்கும் இளம் வயசு; என் பைக்குக்கும் இளம் வயசு. ஊர்சுற்ற கேட்கணுமா, என்ன? ஒரு முறை தஞ்சை பயணம். வேலைபார்த்த இடத்தில் பழைய நண்பர்களைப் பார்க்கலாமென ஒரு பயணம். காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டேன். திருமயம் என்று நினைக்கிறேன். அந்த ஊரிலுள்ள கோட்டையைத் தாண்டியதும் கண் முன்னே நீ...ண்...ட நெடுஞ்சாலை; நல்ல சிமெண்ட் சாலை; கண்ணுக்கெட்டிய தொலைவு உயிரினம் ஏதும் காணோம்; வேறு வாகனங்களும் இல்லை. ஒரு ஆசை; டார்லிங் டக்கின் முழு 'பலத்தையும்' டெஸ்ட் செய்துவிட ஆசை. த்ராட்டிலைத் திருகினேன்; முழுவதும் திருகியபிறகு அதன் முழுத் திறனில் வண்டி சென்றபோது - வண்டி அப்படியே மிதப்பதுபோல உண்ர்ந்தேன்; வண்டி தரையைத் தொட்டு செல்வதுபோலவே தோன்றவில்லை; மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை. இப்போது காரில்கூட எழுபதைத் தொட்டால் பயம் வந்துவிடுகிறது. 
 
ஏறத்தாழ பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒருவனே கையாண்டதாலோ என்னவோ டார்லிங் டக் நல்ல கண்டிஷனில் இருந்துவந்தது. அதன் பிறகு, நண்பர்களாக மாறிவிட்ட என் பழைய மாணவர்கள் - அதில் பலரும் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டிருந்தனர் - பைக்கை 'ஆத்திர அவசரத்திற்குக்' கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது. அதுவும் சிலர் மதுரைக்கு வந்தால் என்னோடு இருப்பதே அதிக நேரமாயிருக்கும். அவர்களுக்கு எப்படி இல்லையென்பது. அப்படி நாலைந்து நண்பர்கள். வயசும் ஆகிப்போச்சு. எல்லாமாகச் சேர்ந்து பைக் இப்போது சல சலக்க ஆரம்பித்துவிட்டது. டார்லிங் டக் என்ற பெயரை மாற்றிவிட்டு புதுப்பெயரைச் சோகமாகச் சூட்டினேன் - 'கண்ணகி' என்று. ஏன் தெரியுமா? கண்னகி சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரையை வலம் வந்தாளல்லவா, சிலம்பல்லவா கைகளில்; ஜல்..ஜல் என்று சத்தம் வந்திருக்கணுமே. என் பைக்கும் இப்போது சல சலவென மதுரையம்பதியின் தெருக்களை வலம் வருகிறதல்லவா, அதனால்தான். 
 
1992. 'கண்ணகி'யை விற்றுவிட்டு வேறு வண்டி வாங்க முடிவெடுத்தேன்; மனைவிக்கும் முக்கியமாக மகள்களுக்கும் இந்த முடிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிறந்த போதிலிருந்தே இருந்துவந்த தொடர்பல்லவா? ஆனாலும் விற்றுவிட முடிவு செய்து, நான் வாங்கிய அதே 2,500 ரூபாய்க்கு வாங்கியவர் வந்து வீட்டிலிருந்து MDA 2107-யை / டார்லிங் டக்கை / கண்ணகியை எடுத்துச்செல்லும்போது மனதை என்னவோ செய்தது. பக்கத்தில் இருந்த சின்ன மகளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Oct 3, 2008, 9:23:55 AM10/3/08
to panb...@googlegroups.com

அந்த காலத்தில …

என் முதல் (போன்) காதல்
- தருமி


இது நடந்தது என் 14-15 வயசில. அந்தா இந்தான்னு 50 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்மளும் என்னைக்காவது ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..

அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.

நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.

அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ... அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.


என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் காதல்.

அதுக்குப் பிறகு 80-களின் ஆரம்பத்தில் ஒரு நண்பன் தனக்குக் கிடைத்த தொலைபேசி இணைப்பை அவனுக்கு வேண்டாமென்பதால் நீ வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்டபோது 'போன் வச்சிக்கிற அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை; அதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். அதன்பின் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்துவிட்டு ஆறு ஆண்டுகள் காத்திருந்த பின் 90-களின் நடுவில் வீட்டுக்கு போன் வந்தபோது … அடேயப்பா! என்ன சந்தோஷம்; எல்லோரையும் அழைத்து விருந்து போடாத குறைதான்!


ஆனால், இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Oct 4, 2008, 12:42:32 AM10/4/08
to panb...@googlegroups.com

அந்த காலத்தில …

அது ஒரு நயா பைசா காலம்…

- தருமி

இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: 'அணாவுக்கு நாலும்'பான்; அஞ்சு கேளு'. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே 'பிச்சுக்கோ' என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.

 
சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த "கண்ணி"ன்ற வார்த்தைக்கு யாராவடது அர்த்தம் சொல்லுங்களேன்.)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை 58 டாலருக்கு அவரு காசுல எவ்வளவுன்னு கணக்குப் பண்ண அவரு மண்டையை உடச்சிக்கிட்டடு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு 448-ன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னதும் மனுஷன் அசந்திட்டார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? 'இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க' அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?) இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா?
 

இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு 'டாண்'ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.

 
அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.

 
நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் படையப்பா படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த 'பக்தன்' போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா பள பளன்னு ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.

 
அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு 25 பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 25 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.

 
இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, 'இன்னும் 40 பைசா கொடு' என்று கேட்கவும் முடியாமல், விட்டுட்டுப் போகவும் முடியாமல் இருப்பது இன்றைய பிரச்சனை!

Ahamed Zubair A

unread,
Oct 4, 2008, 1:00:51 AM10/4/08
to panb...@googlegroups.com
நன்றி தருமி ஐயா,
 
அப்படியே டைம் மெஷின்ல பின்னாடி போய்ட்டு வந்த மாதிரி இருக்கு..
 
நன்றிகள் பல பண்புடன் நிர்வாகிகளுக்கு..
 
அன்புடன்,
சுபைர்
//இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, 'இன்னும் 40 பைசா கொடு' என்று கேட்கவும் முடியாமல், விட்டுட்டுப் போகவும் முடியாமல் இருப்பது இன்றைய பிரச்சனை!//

பண்புடன் ஆண்டு விழா குழுவினர்

unread,
Oct 5, 2008, 1:12:39 AM10/5/08
to panb...@googlegroups.com
இன்று …
- தருமி

வேகமாக வளரும் அறிவியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் புதிய சமூக விளைவுகள், வாழ்வியல் மாற்றங்கள் – எல்லாமே மிக வேகமாக நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. என் வயதுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! இந்த வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆச்சரியங்களை உணர்ந்து அனுபவிப்பதில் யார் அதிர்ஷ்ட சாலிகள் என்று அவ்வப்போது மனதில் ஒரு எண்ணம் எழுவதுண்டு. முதிய வயதில் இருக்கும் என் போன்றோரா, இளம் வயதில் இருப்பவர்களா, இல்லை என் பேரப்பிள்ளைகள் போல் இன்னும் எதிர்காலத்தை நோக்கி நடப்பவர்களா – இவர்களில் யார் இந்த நித்தம் நித்தம் அரங்கேறும் அதிசயங்களைக் கண்டு அதிசயித்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள்?

Alvin Toffler எழுதி பிரபலமடைந்த Future Shock என்ற நூலில் இப்போது நடைபெறுவது knowledge explosion – அதைத் தொடர்ந்து வருவது பெரும் மாற்றங்கள். வரப்போகும் இந்த பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் நாளைக்கு நமக்குக் கிடைக்கக் கூடிய அதிர்ச்சிகளையே Future Shock என்றார். இன்றைய குழந்தைகள் இன்று நடக்கும் மாற்றங்களைப் பற்றியேதும் அறியார்கள் . நடுவயதினருக்கோ இதில் பெரியதாக ஏதும் வியப்பிருக்காது. ஆனால் என் போன்றோருக்கு இந்த மாற்றங்கள் தரும் வியப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் :

அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள் அந்தக் கருப்புத் தொலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டே பேசுவார்கள். ஆனால் எண்பதுகளின் கடைசிகளில் handset வந்தபோது ஆஹா என்றிருந்தது; ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் போனை எடுக்கக் கூட தேவையில்லாமல் பக்கத்திலேயே handset என்பதே ஆச்சரியாக இருந்தது. தொன்னூறுகளின் நடுவில் கைத்தொலைபேசியைப் பார்த்து நான் வாய் பிளந்து நின்றிருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தொலைபேசி இணைப்பு இருந்தது. RPG Cellular..? கறுப்பாக நீளமாக 'கொம்பு' வச்சுக்கிட்டு, பணக்கார மக்களின் அந்தஸ்தைக் காண்பிக்கும் பொருளாக இருந்தது. கிசுகிசுவில்கூட கைப்பேசியின் மகத்துவம் வந்தது நினைவுக்கு வருது. சரத்குமார் ஒரு நடிகையுடன் அப்படி பேசிக்கொண்டேயிருந்தாராம். நிமிடத்துக்கு இரண்டு பேருக்கும் ஏழேழு ரூபாய் .. எந்த தயாரிப்பாளரின் பணமோ? என்று விசனப்பட்டு பத்திரிகைகளில் ஒரு கிசுகிசு! ஆ.வி.யில் ரெண்டு மூட்டை பருத்திக் கொட்டையும், ரெண்டு மூட்டை புண்ணாக்கும் அனுப்பிவிடு என்று கைத்தொலை பேசியில் மாடுகளை மேய்த்துக் கொண்டே ஒருவர் பேசிக்கொண்டு போவது ஜோக்காக வந்திருந்தது. Toffler சொன்னதுபோல் அன்று அதிசயமாக இருந்தது; இன்று அவையெல்லாம் சாதாரணம் என்பதாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

ஆனால் என் பேரப்பிள்ளைகளுக்கு இதில் எந்த பிரமிப்பும் இல்லை. நடுவயதினருக்கும் இந்த வளர்ச்சிகள் அப்படிஒன்றும் பெரும் பிரமிப்பையோ ஆச்சரியத்தையோ தந்திருக்காது. ஆனால் பதின்ம வயதுகளில் போனை அருகில் வைத்துக் கூட பார்க்காத என் போன்றவர்களுக்கு http://dharumi.blogspot.com/2007/01/195.html அதைப் பற்றி இங்கு பார்க்கலாமே.

இந்த தொலைபேசிகளின் வளர்ச்சியின் பிரமாண்டம் புரியும். இன்னும் இதைப்பற்றி நிறையச் சொல்லலாம். அந்தக் காலத்தில் – அப்படி ஒன்றும் ரொம்ப வருஷங்களுக்கு முன்புகூட இல்லை – 80-கள் வரையிலும் தொலைபேசி இணைப்புக்கு ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் "எங்க ஊரில்" என்று அமெரிக்கா சென்ற நண்பர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது உண்மை. இப்போது நம்மூரிலேயே over the counter என்றாகிவிட்டது.

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை…? சின்ன வயதில் பார்த்த கார்கள் – அப்போதெல்லாம் அவைகளுக்குப் பெயர் பிளசர் கார் – எல்லாமே அயல்நாட்டு இறக்குமதிகள். வகை வகையாக இருக்கும். Buick, Hillman, Plymouth, Chevrolet, Morris Minor, நடு நடுவே Landmaster …. அதே மாதிரி மோட்டார் சைக்கிள்களில் Norton, Red Indian, B.S.A.… விதவிதமாக இருந்ததால் தூரத்தில் வரும்போதே அது என்ன கார் / மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடித்து சொல்வது என்று ஒத்த வயதினரோடு விளையாடியது உண்டு. அப்படி இருந்தது கொஞ்ச காலம்தான். அதன் பிறகு பல காலத்துக்கு Ambassador, Fiat, Standard என்று கார்களில் மூன்றுவகை மட்டும்; மோட்டார் சைக்கிள்களில் Bullet, Jawa, Rajdoot என்று மூன்றுவகை மட்டுமே என்று சுருங்கி, இப்போதோ நித்தம் ஒரு மாடல். வெள்ளையும் கறுப்பும் மட்டுமே கார்கள் என்பது போய் இப்போது வண்ண மயம்தான். Simply riots in colours.

அட .. கார்களை விடுங்கள்.. சாதாரண பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் வழக்கமான மரக்கலர் பென்சில்களைத் தவிர மஞ்சள் கலரில் நாங்கள் பார்த்திருப்போம். இப்போது .. கணக்கேது. வெளிநாட்டிலிருந்து, அதாவது அமெரிக்காவிலிருந்து (அந்தக் காலத்தில் foreign என்றாலே அமெரிக்காதானே!) நண்பர்கள் வந்தால் BiC என்று ஒரு ball point பேனா; அதன் பின் கொஞ்ச காலத்துக்கு ஸ்கெட்ச் பேனாக்கள், அடுத்து highlight pens என்று கொடுப்பதற்கு என்றே வாங்கி வருவார்கள். அடேயப்பா .. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நண்பன் ஒரு Reynolds ballpen வாங்கி வந்து கொடுத்ததோடில்லாமல் ஒரு demo வேறு காண்பித்தான். அப்படியே செங்குத்தாக பேனா முனையைக் கீழே போட்டாலும் எழுதும் என்று செய்து காண்பித்தான். பார்த்த உடனே எனக்குப் பெரிய கவலை. இப்படிப்பட்ட நல்ல பேனா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய use & throw-வாக இருக்கிறதே என்று. 'அங்கெல்லாம் அப்படித்தான்; ஒரு தடவை பயன்படுத்திட்டு நாங்க தூரப் போட்டுவிடுவோம்' என்றான். சே! ஃபாரின்னா ஃபாரின்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அடேயப்பா! முதன் முதல் மலேசியாவில் இருந்து வந்திருந்த ஒருவரிடம் ரொம்ப யோசித்து, தயங்கி, பேரம் பேசாமல் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு Parker Fountain பேனாவை விலை பேசி வாங்கியது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. Parker பெயருக்கே ஒரு மரியாதை. அப்படி ஒரு ஃபாரின்மோகமும் பல வருஷங்கள் இருந்தது. அந்த மாயையில் தோன்றியவைதான் ஊருக்கு ஊர் அயல்நாட்டுப் பொருள் விற்கும் பர்மா பஜார் என்ற பெயரில் இருக்கும் கடைகள். ஆனால் இப்போது வெறுமனே திருட்டு சினிமா சிடிக்கள் மட்டுமே அங்கே பெரிதாக விற்கின்றன.

ஆனாலும் அயல்நாட்டு மோகம் நமக்கு இன்னும் குறையவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறது. நமது சினிமா படங்கள் மட்டும் உலகத்தரத்தில் வர வேண்டுமென நினைக்கிறோம். அந்த "தரம்" மட்டும்தான் இன்னும் கிடைக்கவில்லை; மற்றபடி அயல்நாட்டுப் பொருட்கள்தான் இப்போது எல்லாமே அப்படியே, அல்லது உள்நாட்டு பொருளாகவோ கிடைத்து விடுகின்றனவே. இப்போதெல்லாம் என்ன வாங்கி வர வேண்டும் என்று அங்கிருந்து பிள்ளைகள் கேட்டால்கூட சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று ஆகிவிட்டது .. Toffler சொன்ன global village இதுதானோ… ?

டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் அடிப்படையாக அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று: variations are the raw materials for changes. இன்று அந்த விதவிதமான விஷயங்கள் கண்முன்னால் விரிகின்றன. வீட்டுக்கே பசுவோடு, வைக்கோலால் செய்த கன்றுக்குட்டியுடனே வந்து அங்கேயே கறந்து பால் கொடுத்திட்டு போனாங்க .. இப்போ அந்த பால்தான் எத்தனை எத்தனை விளம்பரங்களோடு, விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. குடிக்கிற தண்ணியில்கூடத்தான் எத்தனை எத்தனை விதம்! இந்தக் காலத்துப் பசங்க 'ஃபிகர்' என்பதுபோல், அந்தக் காலத்தில் நாங்க வயசுப் பொண்ணுகளை "கலர்" என்போம். காரணம் பசங்க அனேகமாக வெள்ளைச் சட்டை; அப்படியே கலர் சட்டையாக இருந்தால் ரொம்ப வெளிர் நிறங்களில்தான். பொண்ணுக மட்டும்தான் பல வண்ண உடைகளில் இருப்பார்கள். காரண இடுகுறிப் பெயர் !!

இப்படி அனைத்திலும் varieties …

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதான் என்று டார்வின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
Reply all
Reply to author
Forward
0 new messages