அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
நன்றி: உயிரோசை.காம்
ஜெயகாந்தன் ஒருதடவை 'இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்' என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.
நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.
நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.
உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.
அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.
நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, 'இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி' என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, 'நான் இன்னைக்கு அவன் சைட்ல' என்று சொல்லிக்கொண்டே வருவான்.
மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.
நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.
தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.
பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.
ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.
அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.
அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், ('அது அத்தனை லேசுன்னு நினைக்காத..' என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.
நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.
ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.
திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, 'இன்னும் இருக்குல' என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.
எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.
நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.
போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.
எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, 'நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்' என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?' 'உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா' என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.
அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.
உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.
மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.
அது
பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.
நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.
பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.
நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.
இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ -
அந்த மரணமென்னும் மிருகம்.
நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.
தலைப்பைப் பார்த்த உடன் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
எனும் புத்தகம் நினைவிற்கு வருகிறது. கிழக்கு பதிப்பகத்தின் பல
புத்தகங்களில் இந்த கால விவரங்கள் சொதப்பலாகவே அமைந்து விடுகின்றன.
கிழக்கு பதிப்பகத்தின் "ஸ்டாலின்" புத்தகத்தில் ஒரு வரி இன்னமும்
நினைவிலிருக்கிறது. ஸ்டாலின் முதன் முதலில் லெனினை பார்க்கும் தருணம்
அது. "திரும்பிப் பார்க்கிறார். எதிரில் லெனினை முதன் முதலாய்
பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப் போய் நின்று விட்டார்". ஏறக்குறைய
இதே முறையில்தான் புத்தகம் முழுதும் எழுதப்படிருக்கின்றது.
அதனாலேயே சில சமயம் அது புனைவா அல்லது ஒரு மனிதரின் சரிதையா எனும்
சந்தேகம் ஏற்பட்டது.
இந்த புத்தகம் என்ன விதமாய் எண்ணங்களை ஏற்படுத்தும் என்று தெரிய வில்லை.
ஆனால் இது போன்றவற்றிற்கு எல்லாம் ஏதேனும் டெம்ப்ளேட்
வைத்திருக்கிறார்களா என்று தெரிய வில்லை. அத்தகையதோர் உணர்வுதான்
ஏற்படுகின்றது.
//ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம்
ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும்
ஏற்படுத்தப்பட்டிருக்கும். //
நக்கீரன் தான் செய்த புரட்சிகளில் ஒன்று என்று மார்தட்டிக்
கொண்டிருக்கும் ஒரு செயல். :)
இருப்பினும் வீரப்பனையும், ஆட்டோ சங்கரையும் ஒரே அளவுகோலில் வைக்க
முடியாது என்று நினைக்கிறேன்.
ராமையாவின் குடிசை
- ஹரன் பிரசன்னா
நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த 'ராமையாவின் குடிசை' என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.
ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.
தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.
01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.
05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.
06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.
07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து 'குருதிப்புனல்' நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.
08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.
09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.
10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.
11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.
14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.
15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.
16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.
ஏற்கனவே பத்ரி தன்னுடைய பதிவில் சொல்லி இருந்தது போல செங்கொடி,
கம்யூனிஸ்டுகளின் வாசம் அதிகமாய் வீசுவது கூட இதற்கு ஒரு காரணமாய்
இருக்கலாம். சில விஷயங்களை அமைப்பு ரீதியாய் வெளிப்படுத்தாமல் பொதுவான
முறையில் பரவலாக்க வேண்டியிருக்கிறது.
இ.சௌந்தரராஜனின் குருதிப்புனலின் மீது கம்யூனிஸ்டுகள் காட்டமான
விமர்சனத்தை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களுடைய குற்றச்சாட்டுகளில்
ஒன்றாக இ.சௌ பல உண்மைகளை மறைத்து விட்டார் என்றும், சற்றே மிதவாதமாய்
எழுதி விட்டார் என்றும் சொல்கின்றனர். சம்பவம் குறித்து பல எதிர்வினைகளை
கம்யூனிஸ்டுகள் பதிவு செய்திருக்கின்றனர். சோலை சுந்தர பெருமாள் எழுதிய
"செந்நெல்" நாவல் கம்யூனிஸ்டுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களாலும் மிகுந்த
வரவேற்பு பெற்ற ஒன்று.
பெரியாரின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாடுக்களில் மிக முக்கியமான ஒன்று
கீழ்வெண்மனி குறித்து ஏன் பெரியர் பலமான எதிர்வினையாற்ற வில்லை என்பதே.
1968ல் அண்ணாதுரையின் காலகட்டத்தில் இது நடந்திருப்பதால் காங்கிரசோ வேறு
இயக்கங்களோ எக்காரணம் கொண்டும் இதை வைத்துக் கொண்டு மீண்டும் வந்து
விடக்கூடாது என்பதாலும், தன்னுடைய நெடுநாள் கனவுகளுக்காக இது போன்ற சில
சமரசங்களைச் செய்து கொண்டார் என்று பெரியாரின் தொண்டர்கள் இது குறித்து
கூறி இருக்கின்றனர்.
இதில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று பிரச்சினையின் சூத்திரதாரி
கோபாலகிருஷ்ண நாயுடு வெளியே வந்த போது அவரை வரவேற்றவர்களில் ஒருவர்
கருப்பையா மூப்பனார். நில உச்சவரம்புச் சட்டத்தை கடுமையாக எதிர்த்த
நிலப்பிரபு தனது சக நிலப்பிரபுவின் மீதான பாசத்தின் வெளிப்பாடு. எது
எப்படியாயினும் கீழ்வெண்மனி நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையின்
மிச்சமிருக்கும் சான்றுகளில் ஒன்று.
லக்கி,
இந்தாளுது 'காற்று காற்று உயிர்' படிச்சேன். நல்லாத்தான் பயங்காட்டுறாரு.
அது நல்ல நாவல் நந்தா சார்.. பாலகுமாரன் நாவல்ல அது ஒரு மாஸ்டர் பீஸ்
:-))))))
- Ramki
On Nov 26, 12:36 pm, "ramesh vaidya" <ramevai...@gmail.com> wrote:
> தலைவா,
> அது இந்திரா பார்த்தசாரதி.
> இந்திரா சௌந்தரராஜன் ஒரு மொக்கை.
>
> 2008 நவம்பர் 26 12:12 அன்று, நந்தா <medianan...@gmail.com> எழுதியது:
> > மிச்சமிருக்கும் சான்றுகளில் ஒன்று.- Hide quoted text -
>
> - Show quoted text -
'ஒரு நண்பனின் கதை இது'- ஹரன் பிரசன்னா
பூனையின் உயிர்த்தெழுதல்
- ஹரன் பிரசன்னா
எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.
ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.
முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.
ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.
ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.
ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து 'புஸி பாஸ் பாஸ்' என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், 'பூனை செத்துக் கிடக்குது.'
என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் 'என்னாச்சுப்பா' என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு 'செத்துப்போச்சா' என்றான். என் மனைவி உடனே 'சாகலை. நாளைக்கு வரும்' என்று சொல்லி வைத்தாள்.
மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் 'அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே' என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், 'பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை' என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் 'ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத' என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.
பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.
லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.
வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.
நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், 'வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.' அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். 'அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க' என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். 'பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.' 'எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு' என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.
பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.
வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். 'எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.
பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் 'பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
மாமஸ்,
கலக்கியிருக்கீங்க!
நீங்க எவ்ளோ பெரிய ஆளானுல் இணையத்துல மாம்ஸ்ஸுன்னுதான் கூப்புடுவேன்.
இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், :) ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter 'அறிவியல் கட்டுரை/கதை' will be referred as 'எழவு') எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, - முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.
என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.
அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. 'ஒரு ஊர்ல ஒரு' என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் 'ஒரு ஊர்ல ஒரு' இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த 'எழவிலும்' நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.
ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.
விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.
நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். 'தாயோளி' என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.
மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. 'நல்லா பாத்தியா' என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.
மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)
திடீரென மேத்யூ சொன்னார், 'நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?' என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் 'எழவு' எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)
சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் 'ரணகளம் ரத்தபூமியாக' மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.
மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.
மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. :) பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.
மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.
இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. 'இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு' என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.
மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.
மேத்யூவிடம் சொன்னேன். 'உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.'
'அப்படியா?'
'ஆம், 'சண்டை போடு' என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்' என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.
மேத்யூ ஆச்சரியம் பொங்க, 'என்ன செய்தாய்' என்றார்.
'நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது' என்றேன்.
இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.
ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?
-- சீவன், 24-11-2108
(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)