பிடித்த கதாநாயகிகள்!

726 views
Skip to first unread message

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:30:12 AM11/10/11
to panb...@googlegroups.com
சண்டே இந்தியன் பத்திரிக்கையில் வெளிவந்த பிடித்தமான தமிழ் சினிமா நாயகிகள் குறித்து இலக்கியவாதிகளின் பார்வை.. இங்கும் பகிர்விற்கு....

***

அபூர்வமான துளசி

சீனு ராமசாமி | Issue Dated: அக்டோபர் 17, 2011


ரேவதி


நான் சின்னவயதில் வசித்து வந்த திருநகர் பகுதியில் முதல்முறையாக கலைவாணி என்று ஒரு தியேட்டர் திறந்தார்கள். அந்த தியேட்டருக்கு எல்லாரும் போர்வையோடு போனார்கள். ஏனெனில் அதுதான்  முதல் ஏசி தியேட்டர்.
அப்போதுதான் புதுமைப்பெண் ரிலீஸ் ஆனது. அதையொட்டி பாரதிராஜாவும் ரேவதியும் அந்தத் தியேட்டருக்கு வந்தார்கள். கூட்டத்துக்கு நடுவில், கருப்பாக ஒல்லியாக ஒரு நபர் ஷூ போட்டு ஷர்ட்டை இன்பண்ணி நடந்துவந்தார்.  பின்னாடியே விரலைப் பிடித்து தியேட்டருக்குள் ரேவதியை கூட்டி வருகிறார். இவர் இயக்குநர் பாரதிராஜா என்று சொல்கிறார்கள். பாவாடை தாவணியில் ரேவதி திரைக்கு முன்பு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்றார். அவர்கள் பேசி முடித்துவிட்டு போனவுடன் புதுமைப் பெண்ணைத் திரையிட்டார்கள். அதற்குப் பிறகு செல்வி என்ற படம் பார்க்கிறேன். நாய் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கும். அந்தப் படத்தை 15 முறை பார்த்திருப்பேன்.
 
மதுரையில் தொழிற்சாலைகளை விட தியேட்டர்கள் அதிகம் இருக் கும். அங்கு வாழ்கிற ஒவ்வொரு வரிடமும் நடிகர், நடிகைகளின் சாயலைப் பார்க்க முடியும். மதுரையில் உள்ள பெண்களிடமும் அவ்வப்போது திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளின் சாயல் கள் வந்துபோய் கொண்டிருக்கும்.  எனது பால்யத்தில் ரேவதியும் பெண் களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் ஆதிக்கம் செலுத்துபவராக இருந் தார். ஏனெனில் பெண் கதா பாத்திரங்களைச் சுற்றி இயங்குகிற படங்களில் அவர் அதிகமாக நடித்தார்.

மண்வாசனையின் முத்துப்பேச்சி கதாபாத்திரம் என் மனதை விட்டு நீங்காதது. துறுதுறுப்பும் குழந்தைத்தனமும் மாறாத தெற்கத்தி மண்ணின் சாயலுடைய பெண்ணாக அவர் அந்தப் படத்தில் வருவார். ஒரு மரத்துக்குப் பின்னால் நின்று முகத்தின் பாதியை கையால் மறைத்தபடி கள்ளமற்ற சிறுமியைப் போல அவர் வந்து நின்ற கோலம், இன்னும் என் பால்யத்தின் கலையாத சித்திரமாகத் தொடர்ந் திருக்கிறது. எனது சித்தி எனக்கு முன்பே மண்வாசனை படத்தைப் பார்த்துவிட்டு வந்து கதையைச் சொல்லிவிட்டார். என் பாட்டி மட்டும்தான் ஒரு படத்தை மூன்று முறை பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் அந்தப் படத்தை புதிதாகப் பார்ப்பதுபோல அழுது, சிரித்துப் பார்ப்பார் எங்கள் பாட்டி.

அதற்குப் பிறகு வந்த ஆண்பாவம் படம் மதுரையையே கோலாகலமான திருவிழா வாக்கியது. தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர்கள் எல்லாரும் அத்தனை குதூகலத்துடன் வெளியே வந்தனர். இத்தனைக்கும் அந்தப் படத்தில் ரேவதி ஓர் ஊமைப்பெண். ஆனால் ஊமை என்ற குறையின் வலி பார்வையாள னுக்குத் தெரியாமலேயே எல்லாருக்கும் பிடித்த பெண்ணாக மிக இயல்பாக நடித்திருப்பார். பாண்டியராஜன் என்ற புதிய நடிகருடன் ஒரு பெரிய நடிகையாக இருந்த ரேவதி தயங்காமல் நடித்தார். இன்றுகூட அந்த நிலை சாத்தியமாகவேயில்லை.

 கொஞ்சம் விவரம் புரியத் தொடங்கியபோது புன்னகை மன்னன் படம் மூலமாக என் பருவத்தின் கதாநாயகியாக ரேவதி முடிசூட்டிக் கொண்டார். சிலகாலம் அல்ல, பலகாலம் மௌன ராகம் மற்றும் பல படங்களினூடாக அவருடன் சிறை வாழத் தொடங்கினேன். மௌனராகம் ஐரோப்பியப் படங்களின் மௌனத்தை இந்திய நகர்ப்புற வாழ்க்கைப் பின்னணியில் அதன் அழகியலுடன் சொன்ன படம்.  நிர்ப்பந்தம் காரணமாக திருமணம் முடிந்த நிலையில், தனது முந்தைய காதலை இயல்பாகக் கணவனிடம் சொல்லும்,  கதாபாத்திரம் அது. அக்காலத்தில் அது புதுமையானது. சற்று விலகினால் தடம்மாறிவிடும். அந்த கதாபாத்திரத்தை தமிழ் மக்கள் விரும்பி ரசித்தார்கள். முன்பகுதியில் குறும்பும் பின்பகுதி யில் அழுத்தமுமாக வாழ்ந்த ரேவதியின் முகம்தான் அந்த கதாபாத்திரத்தை அனைவரையும் ஏற்கவைத்தது.

ஓரளவு சினிமா குறித்த புரிதல் ஏற்பட்ட பிறகு நான் பிரமித்த படங்களில் ஒன்று மறுபடியும்.  அப்படத்தில்தான் ரேவதி இன்னொரு பரிணாமத்திற்குச் செல்கிறார். காதல் மணம் செய்த கணவன் நிலைமாறிய பிறகு, இன்னொரு பெண்ணோடு வாழச் செல்லும்போது கைவிடப்படும் நிலையில் வெளிப்படுத்தும் உணர்வுகள், பேச்சற்ற விசும்பல், மௌனமான அழுகை ஆகிய வற்றை அழகாக வெளிப் படுத்துவார். விருந்து ஒன்றில் துக்கம் தாளாமல் ஒரு கிளாஸ் மதுவைக் குடித்துவிட்டு மனம் தளர்ந்து பேசுவார். அந்த மாதிரியான ஒரு நிலையில் ரேவதி முழுமையாக பெண்மையின் கம்பீரத்துடனேயே தனது விரக்தியை... கைவிடப்பட்ட நிலையை அவர் வெளிப்படுத்துவார். மறுபடியும் படம்தான் எனக்கு பாலு மகேந்திராவை அறிமுகம் செய்தது. பின்னர் அவரிடம் வேலை செய்யும் போது துளசி கதாபாத்திரத்தைக் குறித்த பேச்சில் துளசியின் கதா பாத்திரம் அவர் மனைவி அகிலா அம்மாவின் சாயலில் உள்ளதாகச் சொன்னேன். அவரும் அதை ஒப்புக்கொண்டார்.
 
ரேவதி மென்மையாகவும் அதேவேளையில் வலிமையாகவும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங் களில் வெளிப்பட்டவர். ரேவதிக்கு எளிமையான தெற்கத்திப் பெண்ணின் தோற்றம் உண்டு. கொஞ்சம் எடுப்பான பல், குள்ள மான உருவம், அகன்ற கண்கள், நீளமான முகம் ஆகியவை அவரை நமது பக்கத்து வீட்டுப் பெண் என்ற நெருக்கத்தை ஏற்படுத்துவது.
தேவர் மகனில் வேப்ப எண¢ ணெய் தேய்த்த பஞ்சவர்ணமாக எளிமையான  மதுரைப் பெண்ணாக சோபித்திருப்பார் ரேவதி.  அந்தப் படத்தில் அவர் பேசும் பேச்சு எங்கள் ஊர் பெண் பேசுவதுபோலவே இருக்கும். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அரிவாள் மீசையும் வெள்ளையும் சொள்ளை யுமாக கமல் பக்கத்தில் அமர்ந் திருக்க, முகத்தில் அச்சத்தையும், வெட்கத்தையும் தேக்கிவைத்துக் கொண்டு ரேவதி உட்கார்ந்திருப்பார். பெரிய பண்ணையார் வீட்டில் திடீரென்று மருமகளாகிவிட்ட ஏழைப் பெண்ணின் தவிப்பை வேறு யாராவது இத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்க முடியுமா? தெரியவில்லை. இஞ்சி இடுப்பழகா என்ற அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் ரேவதியின் நாணம் ததும்பும் முகம் நமது கண்ணில் வந்துபோகும்.

 ஆனால் தமிழில் அவர் நடித்த படங்கள் பலவற்றில், மிகையான ஒப்பனைகளில் கதாநாயகனின் ஆளுமை நிழலுக்குள் சிக்கியவராக நாம் அவரை வீணடித்திருக்கிறோம். ஒரே மாதிரியான கதாபாத்திரங் களை  ஒரு தேர்ந்த நடிகையை ஏற்கச்செய்யும்போது அவருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த விபத்து ரேவதிக்கும் நடந்துள்ளது.

மறுபடியும் படத்தில் அவரின் கதாபாத்திரம் துளசி. அந்த துளசியைப் போன்றே அபூர்வமான நடிகை ரேவதி.



--
- senshe

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:31:12 AM11/10/11
to panb...@googlegroups.com

சாதித்த தமிழ்ப்பெண்

மாலன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

ஸ்ரீதேவி


ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போதெல் லாம் சில நினைவுகளும் கடந்து போகும். அப்போது அது கமலஹாசன் வசித்த வீடாக இருந்தது. அது நட்சத்திரமாக அவர் அரும்ப ஆரம்பித்திருந்த நாட்கள். ஆனால் எங்களுக்கு இடையில் இலக்கியம்தான் பாலமாக இருந்தது.

அன்று நான் போனபோது அவர் வீட்டு மொட்டைமாடியில் ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கீழே தரைத் தளத்தில் சுந்தரமூர்த்தி, கமல் முகத்தில் எதையோ பூசிக் கொண்டிருந்தார். வழக்கமான புன்னகையுடன் வரவேற்ற கமல், எதிரே பழைய சோபா ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஓர் இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். அவர் ஸ்ரீதேவி. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடி வந்துவிட்ட எட்டாம் கிளாஸ் பெண்ணைப் போலிருந்தார். கிராமத்துப் பெண்ணைப் போலப் பாவாடை தாவணி அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த குதி உயர்ந்த செருப்பு அவரது உயரத்தை ஊகிக்க வைத்தது. முகத்தில் சற்று கனமாகவே பூசியிருந்த பான் கேக்கால் நிறத்தைக் கணிக்க முடியவில்லை. இன்னும் குழந்தைத் தனம் மிச்சமிருந்த முகத்திற்கு மூக்குத்தி பொருத்தமாக இல்லை. கண்ணில் ஒரு மிரட்சி இருந்தது.


நான் அவரை நேரில் சந்தித்தது அது ஒருமுறைதான். அப்போது அவர் என்னிடம் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்று முடிச்சைத் திரையில் பார்த்த போது, அந்தப் பெண்தானா இது என்று அசந்துபோனேன். ‘கமல், உங்களுக்கு இரண்டு சவால்கள் காத்திருக்கின்றன! என எழுதினேன். ஒன்று ரஜினி. ஒன்று ஸ்ரீதேவி.

ஆனால் கமலும் ரஜினியும் செய்ய முடியாத ஒன்றை அவர் பாலிவுட்டில் நிகழ்த்திக் காட்டினார். அதாவது தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் அங்கு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சிவகாசிக்கு அருகில் உள்ள மீனம்பட்டியில் பிறந்த ஒரு தமிழ்ப் பெண், நிகழ்த்திய இந்த சாதனைக்குப் பின் அவரது அழகு மட்டுமல்ல திறமையும் காரணமாக இருந்தது.


இப்போது போலில்லாமல் எழுபதுகளின் மத்தியிலும் எண்பதுகள் வரைக்கும் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படும் கறிவேப்பிலை களாக மட்டுமல்லாமல், நடிக்க வேண்டிய கட்டாயமும் கதாநாயகி களுக்கு இருந்தது. நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் பேசும் கண்ணாம்பாக் கள் விடைபெற்றுப் போய் விட்டாலும்கூட, சாவித்திரியும் தேவிகாவும் நிறைய அழுது பிழிந்து உலர்த்திப் போயிருந்த வெள்ளித் திரையில் ஈரம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அந்த நேரத்தில்தான் ஸ்ரீதேவி அறிமுகமா கிறார் (குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கந்தன் கருணை, நம் நாடு இவற்றை விட்டுவிடலாம்). அப்போது அவருக்கு வயது 13!  முதல் படமான மூன்று முடிச்சே சவால் நிறைந்த பாத்திரம்தான். முதல் பாதியில் அந்தாதிக் கவிதை (‘ஆடி வெள்ளி தேடி உன்னை') பாடும் கல்லூரி மாணவியாகவும் மறுபாதியில் வில்லனைப் பழிவாங்கும் சிற்றன்னையாகவும் பாலசந்தரால் செதுக்கப் பட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து தனக்கென வித்தியாசமான ஒரு பாணியை (கவர்ச்சி + திறமை) வைத்துக் கொண்டு ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியவர். கமல்-&ஸ்ரீதேவி, ரஜினி-ஸ்ரீதேவிப் படங்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளின் இருக்கை களையும் கல்லாப் பெட்டிகளையும் நிறைத்தன. பொட்டிலிருந்து புடவை வரை அணிவது எப்படி என்பதைப் பார்ப்பதற்காக (மடிசாரிலிருந்து குட்டைப் பாவாடை வரை எல்லா உடைகளும் ஸ்ரீதேவிக்குப் பொருந்தின) பெண்களும், சிரிக்கும் கண்களைப் பார்ப்பதற்காக ஆண்களும் தியேட்டர்களுக்குப் படையெடுத்தார்கள். தாங்கள் வார்த்து வைத்துள்ள பாத்திரங் களுக்கு உயிர் கொடுக்கக்கூடியவர் என்ற நம்பிக்கையில் நட்சத்திர இயக்குநர்கள் பாரதிராஜா (சிகப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே) பாலசந்தர் (வறுமையின் நிறம் சிகப்பு) பாலுமகேந்திரா (மூன்றாம் பிறை) மகேந்திரன் (ஜானி) அவரை அழைத்தார்கள். ஸ்ரீதேவி விரைவிலேயே தமிழ் சினிமா வரலாற்றின் இன்னொரு அத்தியாயம் ஆனார். 

தமிழ்த் திரை உலகில் இளம் நாயகர்களோடு (ஸ்ரீதேவி அறிமுகமாகும்போது கமலின் வயது 23, ரஜினியின் வயது 26) ஜோடி போட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில் தெலுங்கு அவரை என்.டி. ஆர், நாகேஸ்வர ராவ் ஆகிய மூத்த நாயகர்களோடு நடிக்க அழைத்தது. கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதும் தக்க வைத்துக்கொள்வ தும் ஒரு சவால்தான்.

இந்திக்குப் போன பதினாறு வயதினிலே (சோல்வா சாவன்) அவரை பாலிவுட்டிற்கு அழைத்துப் போயிற்று. அதற்கு முன் இந்தியில் ஜூலியில் நடித்திருந்தாலும், அந்தப் பட வெற்றியின் எல்லாப் புகழும் லட்சுமிக்கே என்றாகியிருந்தது. சோல்வா சாவனை சூப்பர் ஹிட் என்று சொல்லமுடியாது. ஆனால் ஸ்ரீதேவியை பாலிவுட் தக்கவைத்துக் கொண்டது. ஆனாலும் ஸ்ரீதேவி அங்கே தனது தமிழ் அடையாளத் தைத் தக்கவைத்துக்கொண்டார். வைஜயந்தி மாலாவிலிருந்து, அசின் வரைக்கும் தென்னிந்தியா விலிருந்து பம்பாய் போன நடிகைகள் இந்தி ரசிகர்களிடம் இமேஜைத் தக்க வைத்துக்கொள்ள தாய்மொழி அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் வரலாறு.

ஃபெரோஸ்கானின் ஜான்பாஸ் படத்தில் 10 நிமிடங்கள் மாத்திரமே வரும் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்புக்கொண்ட போது, அது பாலிவுட் முழுக்க ஆச்சரியக் குறிகளைப் பரப்பியது. ஏனெனில் அப்போது தோஃபா, நாகினா, மிஸ்டர் இந்தியா, சால்பாஸ் என்று அடுத்தடுத்து அவரது சூப்பர்ஹிட்கள் வெளியாகி அவர் பாலிவுட்டின் அதிக சம்பளம்  பெறும் நடிகையாக ஆகியிருந்தார். காசு மட்டுமல்ல, புகழும் உச்சத்தில் இருந்தது. திரையில் கூட சாகடிக்கப்படமுடியாத நட்சத்திரமாக இருந்தார் (பாசிகர் படத்தில் கதாநாயகியை ஷாருக்கான் கொலை செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீதேவியைக் கொல்வதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் அந்தப் பாத்திரத்தை வேறு ஒருவருக்கு மாற்றினார்கள்) அபூர்வ ராகங்களில் ரஜனியை சாகடிக்க முடிந்தது. சிவாஜியில் முடிந்ததா?
அந்த நேரத்தில் பத்து நிமிட கௌரவ வேடத்தில் அவர் நடிக்க ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்? டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரிடம் ஸ்ரீதேவியே புதிரை உடைத்தார். “நானும் முதலில் நடிக்கவேண்டுமா எனத்தான் நினைத்தேன். ஆனால் ஃபெரோஸ் என்னிடம் தமிழில் பேசி வேண்டுகோள் விடுத்தார். மறுக்க முடியவில்லை. அவர் தமிழ் பேசியது ஆச்சரியமாக இருந்தது” எனப் பேட்டியில் சொல்லியிருந்தார்.

அந்தப் படத்தில் 10 நிமிடமே வந்தாலும் அதில் ஸ்ரீதேவி தோன்றும் ஒரு பாடல் காட்சி பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலும் பாடல் காட்சிகளுக்காக நினைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. நினைவோ ஒரு பறவை (சிகப்பு ரோஜாக்கள்) சின்னஞ் சிறு வயதில் (மீண்டும் கோகிலா) சிப்பியிருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு) ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும் (ஜானி) இப்படி நிறைய உதாரணங்கள்.    


ஸ்ரீதேவியின் நடிப்புத் திறமையை அறிந்து அவரை ஸ்பீல் பெர்க் ஜுராசிக் பார்க்கில் நடிக்க அழைத்ததாக ஒரு துணுக்கு பத்திரிகை அலுவலகங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. அது உண்மை தானா என ஓர் உதவி ஆசிரியரிடம் கேட்டேன். “உண்மைதான் சார். ஆனால் அவர் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்” என்றார். “ஏன்?” என்றேன். இந்திப் படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார். கால்ஷீட் ஒதுக்கமுடியாத நிலை” என்றார். உதவி ஆசிரியர் சற்றுத் தயங்கி ஸ்பீல் பெர்க்கின் அழைப்பை நிராகரித்த இன்னொருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் சார் என்றார். ‘‘அட, அது யார்?"
 சற்றுத் தயங்கி, 'நான்தான்!' என்றார். தொடர்ந்து “பெரிய வேஷம்தான். ஆனாலும் மறுத்து விட்டேன் என்றார்.”
“அப்படியா! என்ன வேஷம்?'
“டைனோசர் வேஷம்தான்'

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:31:24 AM11/10/11
to panb...@googlegroups.com

என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...

வீ.எம்.எஸ். சுபகுணராஜன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

கே.ஆர்.விஜயா

நாளொன்றுக்கு ஒரேயொரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துபோகும் மதுரை விமானத்தளத்தில், ஒரு தனியார் விமானம் ஒரு படப்பிடிப்பு தொடர்பாக வந்துள்ளது என்று அறிந்து, அதைக் காணச் சென்றிருந்தேன். மாலைச் செய்தி இதழ்கள் அது ‘புன்னகை அரசி’ கே.ஆர். விஜயா அவர்களுக்குச் சொந்தமானது என்ற தகவலை வெளியிட்டிருந்தன. விசாரித்ததில் திண்டுக்கல் தொழில் அதிபரிடமிருந்து அந்த விமானத்தை வாங்கியிருக்கிறார் என்பது அறியக் கிடைத்தது. தமிழ் சினிமா நட்சத்திரங்களிலேயே சொந்த விமானம் வைத்திருந்த ஒரே நபர் கே.ஆர். விஜயா மட்டுமே.

இன்றைய சைஸ் ஜீரோ நடிகைகளுக்கு இணையான ஒடிசலான உடம்போடு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் கே.ஆர். விஜயா. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘கற்பகம்’(1963) திரைப்படத்தில்தான் அவர் அறிமுகமானார். இரு நாயகியர் நடித்த திரைப்படத்தில் இறந்துபோகும் முதல் மனைவியின் பாத்திரம் அவருக்கு. கலங்கி நிற்கும் கணவர் ஜெமினியை ‘மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா' என்று ஆவி ரூபத்திலும் வந்து ஆறுதலும், அரவணைப்பும் தரும் பாத்திரம் அது. அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்த மலையாளி நடிகையாக அறியப்பட்டிருந்தாலும், அவரது தந்தை ஆந்திரத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் சொல்கிறது விக்கிப்பீடியா. அவரும் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் பணியாற்றியவர் என்றும் பதிவு செய்கிறது. தாய்வழிப் பூர்வீகம் கேரளம் என்றபோதும் கே.ஆர். விஜயா வளர்ந்தது பழனி நகரில்தான். அவரது தாயாரும், அவரைத் தொடர்ந்து இருவரும் (சில காலங்கள்) கரகக் கலைஞர் களாக  இருந்தனர் என்றும் பேசப்படுவதுண்டு. அறிமுகம் 1963 என்றபோதும் ‘திலக' நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புக்காக அவர் சில காலம் பொறுத்திருக்க வேண்டி யிருந்தது. அதுவரை நடிகர் நாகேஷ், முத்துராமன் ஆகியோருடன் சர்வர் சுந்தரம் திரைப்படத்திலும், ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களோடு அவர் இணைந்தது ‘செல்வம்’ (1966) திரைப்படத்தில். இந்த இணை அநேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தவர்களின் பட்டியலில் முன்னுரிமை பெறும் வாய்ப்புக்கொண்டது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ‘விவசாயி’(1967) திரைப்படத்தில் நடித்திருந்தபோதும், அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தொடரவில்லை.


அது அந்தக் காலகட்ட தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இரு திலகங்களில் யாராவது ஒருவருடன் தான் நாயகியர் தொடர்ந்து நடிக்க வேண்டும். அணி மாறுவது அவ்வளவு சுலபமல்ல. அநேகமான சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர். நாயகிகள், அவரால் கைவிடப் பட்டவுடன் சிவாஜி அணிக்கு மாறுவது வழக்கம். இது சரோஜா தேவிக்கு அறுபதுகளின் இறுதியிலும், ஜெயலலிதாவுக்கு எழுபதுகளின் நடுவிலும் நிகழ்ந்தது.

‘புன்னகை அரசி' என்று மட்டுமே பிரபலமாக அறியப்பட்டிருந்தாலும், கே.ஆர். விஜயா அவர்களுக்கு வாய்த்த மற்றொரு சிறப்பு அவரது ‘பேசும் கண்கள்’. பல்வரிசையின் கவர்ச்சியில் கவனிக்கப்படாமல் போனது அவரது கண்கள். திருமணமும், பிள்ளைப்பேறும், அதன் உப விளைவான பூசலான உடலும் கதாநாயகியாக வலம்வர தடையாக இல்லாமல்போனது இந்தக் கண்களால்தான். அநேகமாக எங்கள் தலைமுறையினரின் ‘திரட்சியான’ பெண்களின் மீதான கவர்ச்சியும், அவர்கள் ‘தாங்கிய’ பாத்திரங்களின் வலிமையும் அதைச் சாத்தியமாக்கியிருக்கக்கூடும். ஆனால் அந்நாள் நாயகியரின் கண்களும், முகபாவங்களும், இந்நாள் நாயகியரின் இடை களையும், உடைகளையும் வென்று விடும் வல்லமைகொண்டிருந்தன. கேரளத்தின் பிரபலம் ஷீலாவுக்கும், பின்னாள் ‘பெட்ரூம்’ கண் நாயகி சிலுக்குவுக்கும் இடைப்பட்டது கே.ஆர். விஜயா அவர்களின் பெரிய விழிகள். அவற்றின் அசைவுகள் ஒரு நாட்டியத் தாரகையின் கண் வீச்சை ஒத்திருக்கும். நடன அசைவுகளில் சற்று நளினம் குன்றிய தனது குறையை தனது கண்களால் நிறைவு செய்தவர் அவர். தேர்ந்த நடன அசைவுகள் தெரிந்த ஜெயலலிதா வுக்கு மாற்றாக வந்த விஜயாவை ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படத்தில் ‘தேடினேன் வந்தது’ மற்றும் ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக’ பாடல்களில் அவரது கண்கள் மற்றும் முக பாவங்களைக் கொண்டு மட்டுமே நிறைவு செய்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். தேடினேன் வந்தது பாடலின் இன்னொரு சிறப்பு, ஸ்ரீதர் அவர்களின் காட்சியமைப்பு. பாடல் முழுக்க விஜயாவின் குளோஸப்கள் நிறைந்திருக்க, சிவாஜி அநேகமான நேரங்களில் Profile ல் காட்டப் படுவார். காட்சியின் ஒரு பிரேமில் அருகாமைக் காட்சி வைத்தாலும் அதை ‘தனதாக்கிக்' கொள்ளும் அந்த நடிப்பு ஆளுமையைக் கரைகட்டி நிறுத்தி இருப்பார் ஸ்ரீதர்.

ஆனால் அதே பாவங்கள் சிவாஜியுடன் இணைந்து அதன் உச்சத்தை அடைந்த ‘திரிசூலம்' படமே என்னை, சிவாஜி மற்றும் கே.ஆர். விஜயா ஆகியோரின் மானசீக ரசிக மனோபாவத்திலிருந்து அதிர்ச்சியளித்து பிரித்தது என்பதும் உண்மை.


நானூறுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் கே.ஆர். விஜயா, தென்னிந்திய மொழிப்படங்கள் தவிர்த்து நடித்தது ஒரே ஒரு இந்திப்படம் மட்டுமே. பாரதிராஜாவும், மகேந்திரனும் இன்ன பிறரும் தமிழ்த்திரையின் முகவிலாசத்தில் புதிய தேஜஸை உருவாக்கிவிட கே.ஆர்.விஜயா போன்றோரின் இருப்பு பதற்றத்திற் குள்ளானது. ஏனைய நடிகையர் ஓய்வை நோக்கி வேகமாக நகர்ந்துவிட, இவர் மட்டும் பெண் பிரதானப் பாத்திரங்களைக் கொண்ட மேயர் மீனாட்சி போன்ற சமூகப் படங்களிலும், ஆதிபராசக்தி, தேவி ஸ்ரீகருமாரியம்மன், நம்ம வீட்டு தெய்வம் போன்ற அவதாரப் படங்களின் மூலம் தனக்கென ஓர் இருப்பை உருவாக்கிக்கொண்டார். பெண்களை மையப் பாத்திரங்களாகக் கொண்ட திரைப் படங்களின் முதல் நாயகி இவராக இருக்கக்கூடும். அந்த வகை திரைப்படங்களில் நாயகர்கள் இன்றைய நாயகியர்போல ‘வந்து போனதும்’ உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தசாவதாரம் திரைப்படத்தில் கே.ஆர். விஜயா அவர்களை, ஒரு சாலையோரக் காட்சியொன்றில் ஒரு துணை நடிகருக்கான வாய்ப்பு வழங்கப் பட்டு, காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு வலியா, வேதனையா, கோபமா என்று இனம் பிரிக்கமுடியவில்லை. கமல்ஹாசன் அவர்களே, நீங்கள் அவர்களுக்குச் செய்திருப்பது கௌரவமா அல்லது அவமரியாதையா? ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ பாடலை யு -டியூபில் பார்த்து என்னை சமன் செய்து கொள்கிறேன்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:31:47 AM11/10/11
to panb...@googlegroups.com

காலம் பரிசளித்த மகத்துவம்

சி.மோகன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

சரோஜாதேவி


ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை. என் இளம் பிராயம் கறுப்பு- வெள்ளைத் திரைப்படக் காலமாக அமைந்த தென்பது காலம் எனக்களித்த பரிசு. கறுப்பு வெள்ளைத் திரைப் படங்களும் அவற்றின் அற்புதமான பாடல்களும், ஆடிப்பாடிய அழகு தேவதைகளும் என் நினைவுகளின் சேகரக் கிடங்குகளில் சேர்மானமாகியிருக்கும் பொக்கிஷங்கள்.

திரைப்படங்களுடன் பெரும் அபிமானத்தோடு உறவுகொள்ளும் காலமென்பது, பத்து முதல் இருபது வரையான பத்தாண்டுக் காலம். என்னுடைய இப்பிராயத்தில் தமிழ்த் திரையுலகம், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடைய ஆளுகையில் இருந்தது. அவர்களோடு இணைந்து நாயகிகளாக நடித்த சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, தேவிகா ஆகியோரே இன்றளவுக்கும் என் மனதுக்கு இதமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், என் அபிமானம் அதிகமாக சாய்ந்திருந்ததும், சாய்ந்திருப்பதும் சரோஜாதேவியின் பக்கம்தான். என் வளரிளம் பருவத்தில் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திர நாயகி சரோஜாதேவி. காலம் பரிசளித்த மகத்துவம். என் கால யுவன்களையும் யுவதி களையும் முழுவதுமாக வசப்படுத்தியிருந்த பைங்கிளி.

தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி (பின்னாளில் தன் காலத்திற்கேற்ற அம்சங்களோடு அந்த பிம்பத்தில் கச்சிதமாகப் பொருந்தியவர் சிம்ரன். அன்று சரோஜாதேவி; இன்று சிம்ரன் என்று கொண்டாடுவதற்கான என் மன அமைப்பு இதன் வழி வெளிப்படுவதாகவே தோன்றுகிறது). இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.

பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.

சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.
காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.
ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.

தமிழில் அதிகமான படங்களில் மாணவியாக நடித்தவர் இவராகத் தான் இருக்கக்கூடும். அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள்.

அக்காலகட்டத்துப் படங்களில் சரோஜாதேவி அணிந்த விதவிதமான காதணிகளை மட்டுமே கொண்ட ஒரு கண்காட்சிக் கூடத்தை நிர்மாணிக்கலாம். மேலும், இவர் உடுத்திய ஆடைகள்தான் எத்தனை வகை. பாவாடை – தாவணி, சேலை – ஜாக்கெட் (ஜாக்கெட்டில் விதவிதமாய் பல்வேறு வடிவங்கள்), முழு நீள கவுன், அரை கவுன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், சுடிதார், பைஜாமா, பேன்ட், விதவிதமான மேலாடைகள், சட்டை, டி-சர்ட் என எல்லாமே இவர் உடலில் அழகுற, பாந்தமாய்ப் பொருந்தின.

அதுபோன்றே கணக்கற்ற சிகையலங்காரங்கள். விதவிதமாய் ஸ்கார்ப் அணிந்ததும், அழகழகாய் ரிப்பன்கள் சூடியதும் இவர்தான். இரட்டைச் சடை போட்டு, அதையும் இரண்டாக மடித்து அவற்றில் ரிப்பன்களைப் பூ வடிவில் சூடிச் சுடர்ந்தார். அவர் கொண்ட எண்ணற்ற அழகுக் கோலங்கள், தமிழ்ப் பெண்கள் சமூகத்தையும் அழகுபடுத்தின. தமிழ்த் திரையுலகம் இவரை விதவிதமாய் அழகுபடுத்திப் பார்த்தது. இவர் தமிழ்ச் சமூகத்தை விதவிதமாய் அழகுபடுத்தினார்.

அபிநய சரஸ்வதியாக தன் இருபதாவது வயதில் (1958) சரோஜாதேவி கன்னடத்திலிருந்து தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர் தமிழ்த் திரையுலக்கு அளித்த பெரும் கொடையாக இந்நிகழ்வு அமைந்தது. எம்.ஜி.ஆர் முதன்முதலாக தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார். கறுப்பு  – வெள்ளைப்படமான நாடோடி மன்னனின் பிற்பாதியில் சரோஜாதேவி அறிமுகமா வதிலிருந்து படம் வண்ண மயமாகும். தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய நட்சத்திரம் மங்காத வண்ணமாய் ஒளிவீசத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில், தன் கொஞ்சும் தமிழாலும் அழகாலும் நடிப்பாலும் கன்னடத்துப் பைங்கிளியாகத் தமிழ் மனங்களில் சிறகடித்தார்.

பெங்களூரில் அவருடைய இல்லத்தில் தமிழ்த் தொலைக்காட்சி சேனலொன்று சமீபத்தில் எடுத்த நேர்காணலின் போது அவர் வெளிப்படுத்திய ஆதங்கமிது: “எனக்கு முன்பெல்லாம் சென்னையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நான்கு வீடுகள் எப்போதும் இருந்தன. அவர்களில் எவரும் இப்போது இல்லை. நெஞ்சில் நினைவுகளோடும் கண்களில் கண்ணீரோடும் நான் மட்டும் தனியாக இருந்து கொண்டிருக்கிறேன்."
 
இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.
என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:32:15 AM11/10/11
to panb...@googlegroups.com

எரிந்த நட்சத்திரம்

எஸ்.ராமகிருஷ்ணன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

சாவித்திரி


நவராத்திரி திரைப்படம் சிவாஜி ஒன்பது வேறுபட்ட வேஷங்களில் நடித்துள்ளதற் காக இன்றும் பேசப் படுகிறது, அந்த ஒன்பது வேஷங்களுக்கும் இணையாக நடித்த சாவித்திரி, தன்னை உருமாற்றிக் கொள்ளாமல் ஒரே படத்தில் ஒன்பது விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை சினிமாவுலகம் கொண்டாடவேயில்லை, குறிப்பாக அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து நிகழ்வு இருக்கிறது, அதில் ராணி வேஷம்கட்டி வந்து கேலியும் கிண்டலும் துள்ளலுமாக ஆடிப்பாடும் சாவித்திரியின் நடிப்பு அபாரமானது, இது சாவித்திரியின் ஒரு தனித்துவம் என்றால், ‘எனையாளும் மேரி மாதா’ எனப்பாடும் மிஸ்ஸியம்மா பட சாவித்திரி முகத்தில் கசியும் கருணையும் அன்பும் இன்னொரு பரிமாணம். தேவதாஸ் படத்தில் துடுக்குதனமாக பேசும் சாவித்திரி இறுதிக்காட்சியில் நம்மை கலங்கடித்துவிடுகிறார். இப்படி மிகையற்ற, இயல்பான நடிப்பின் அடையாளமாகவே சாவித்திரி என் நினைவில் பதிந்துபோயிருக்கிறார்.

சமீபத்தில் சாவித்திரிக்கு ஆந்திராவிலுள்ள விஜயவாடாவில் சிலை அமைத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் என்.எஸ். கிருஷ்ணன் எம்ஜிஆர், சிவாஜி என புகழ்பெற்ற நடிகர்களுக்கு சிலைகள் இருக் கின்றன. நான் அறிந்தவரை நடிகை கள் எவருக்கும் சிலையில்லை. கவர்ச்சி நடிகைகளுக்கு கோவில்கட்டுவது, சிலை வைப்பது உலகெங்கும் இருக்கிறது. ஆனால் உடற்கவர்ச்சியைப் புறந்தள்ளி தனது நடிப்பால் மட்டுமே புகழ்பெற்ற சாவித்திரிக்கு சிலை வைக்கப்பட்டிருப்பது மகத்தானது. அப்படிக் கொண்டாடப்பட வேண்டிய சகல தகுதிகளும் அவருக்கிருக்கிறது.
 
நடிகை என்றாலே ஆடிப்பாடுவது, விதவிதமான உடையணிந்து கொண்டு நாயகனைக் கொஞ்சிப் பேசிக் காதலிப்பது என்ற பிம்பத்தைச் சிதறடித்தவர் சாவித்திரி. தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 318 படங¢களில் நடித்துள்ள சாவித்திரி, தயாரிப்பு இயக்கம் பாடல் என்று சினிமாவின் பன்முகக் கலைஞராக விளங்கினார்.

சாவித்திரியின் நடிப்பை நான்கு விதமாக அடையாளப்படுத்தலாம், ஒன்று தேவதாஸில் வரும் பாரூ போன்ற துடுக்கத்தனமும் வம்பும் கேலியுமான பெண்; மற்றது பாசமலரில் வருவது போன்ற பாசமும் அன்பும் திருமணத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளுக் காக வருந்தும் பெண் பாத்திரம், மூன்றாவது தன் விருப்பம்போல சுற்றித்திரிந்து தெரிந்தவர்  தெரியாதவர் எவரோடும் இயல்பாக கலந்து பேசி உலக அனுபவத்தை அறிந்துகொள்ளும் நவராத்திரியில் வரும் கதாநாயகி போன்ற பிம்பம், அடுத்தது தாயன்பின் அடையாளம் போன்ற புனித பிம்பம், அது பிராப்தம் படத்தில் வரும் சின்னம்மா அல்லது புராணப்படங்களில் வரும் கடவுளான சக்தியாக இருக்கலாம். இந்த நான்கு வகைப்பாட்டிற்குள் சாவித்திரியின் அத்தனை படங்களும் அடங்கி விடுகின்றன. இந்த ஒவ்வொரு வகை யிலும்  அவர் மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனைகள் செய்திருக்கிறார்.

பாசமலர் திரைப்படம் இன்றைக்கும் அண்ணன் தங்கை உறவிற்கான ஓர் அடையாளச் சின்னம் போலிருக்கிறது. தேவ தாஸை தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நடிகையாக இவ்வளவு வித்தியாச மான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சாவித்திரி ஒருவரே. நிமிர்ந்த நடையும், ஆண்களை நேர்நின்று பார்க்கும் பார்வையும், கண்களாலே பேசும் அழகும், தெளிவான உச்சரிப்பும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் அவரைத் தனித்துவமிக்க நடிகையாக்கியது.

நாடக நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு இரண்டு திரைப்படத் துறைகளிலும் உன்னத நிலை பெற்று தன்னோடு நடித்த ஜெமினிகணேசனை பலரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தை இயக்கி தயாரித்து, அதன் தோல்வியாலும் குடும்ப வாழ்வின் கசப்பாலும் குடியில் வீழ்ந்து தன்னை அழித்துக் கொண்டவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை  காவியத்துயரம் கொண்டதாகவே இருக்கிறது.

நடிப்பிற்கு வெளியே  சாவித்திரி காட்டிய ஈடுபாடுகள் முன்னு தாரணமாகப் பேசப்பட வேண்டியவை. சாவித்திரியின் நூறாவது படமான ‘கொஞ்சும் சலங்கை’யில் நாதஸ்வரம் வாசித்த காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இசைக்கு ரசிகையாகி, அவரைப் பாராட்டியதோடு காருகுறிச்சி கோவில்பட்டியில் புதிய வீடுகட்டி குடிபோனபோது அந்த விழாவில் கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறியவர் சாவித்திரி.

காருகுறிச்சியார் இறந்துபோனதும் அவருக்காக கோவில்பட்டியில் சாவித்திரியும் ஜெமினியும் ஒரு நினைவுச்சிலை அமைத்தி ருக்கிறார்கள். கவனிப்பாரற்று போய் இன்று தூசியடைந்து நிற்கிறது அச்சிலை. அதில் நாதசுர கலாநிதி காருகுறிச்சி அருணாசலம் அவர் களின் ஞாபகார்த்த திருவுருவச் சிலை அன்பளிப்பு ஜெமினி கணேஷ் -&  சாவித்திரி (9.7.67) என்ற கல்வெட்டு காணப்படுகிறது. மகாகவி பாரதி பிறந்த எட்டய புரத்தில் பெண்கள் குடிதண்ணீருக் காக கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்து, தனது சொந்தச் செலவில் சாவித்திரி ஒரு குடிநீர் கிணறு அமைத்து தந்திருக்கிறார். ஆந்திரா வில் தனது சொந்த ஊர் மாணவர் களின் கல்விக்காக பெரிய பள்ளிக் கூடம் ஒன்றினையும் கட்டித் தந்திருக்கிறார், அதைவிடவும் தனது நகைகள் யாவையும் இந்தியா பாகிஸ் தான் யுத்த நிதிக்காக பிரதமரிடம் கொடையாகத் தந்தவர் சாவித்திரி.

சாவித்திரிக்குப் பிடித்த விளை யாட்டு சதுரங்கமும் கிரிக்கெட்டும், நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டில் அவரும் சிவாஜியும் ஆளுக்கொரு கிரிக்கெட் மட்டையுடன் நிற்கும் புகைப்படத்தைக் கண்டு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா என்று ஊரே ஆச்சரியத்துடன் பேசியது நினைவில் இருக்கிறது தனது பிள்ளைகள் ஆங்கிலப் படங்களைக் காணவேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பதினாறு எம்எம் திரைப்பட அரங்கு ஒன்றை அமைத்தவர் சாவித்திரி. அவருக்குப் பிடித்தமான நடிகை ஷெர்லி மெக்லைன், இவரது பாதிப்பை சாவித்திரியின் நடிப்பில் நன்றாகவே உணரமுடிகிறது.

சாவித்திரியின் அகத்துயரை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று சந்திரபாபுவை குறிப்பிடுவார்கள், காரணம் அவரும் அது போன்ற மனநெருக்கடியில் இருந்தவர். இருவருமே சொந்தப் படம் எடுத்து தோல்வியை அடைந்தவர்கள், கூடுதலாக திருமணவாழ்க்கையில் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள். ஆகவே அவர்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உருவானது. சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் சாவித்திரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகரின் சோகப்பாடல்கள் தமிழ் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் சந்திரபாபுவின் தீராத மனத்துயரமும் அதை மெய்யுருக அவர் பாடும்விதமுமே.

சினிமாவில் ஒளிரும் உன்னத நட்சத்திரமாக இருந்த சாவித்திரி தன்னைக் கொண்டாடிய கலை உலகம் திடீரென தன்னைப் புறக்கணிப்பதையும். வஞ்சகமாக தனது வீடு கார் உள்ளிட்ட சகலவசதிகளையும் பறித்துக் கொண்டதையும் எண்ணி உள்ளுக்குள் கண்ணீர்வடித்தபடியே இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் அவரைச் சந்திக்க பார்வையாளர் களே வருவது கிடையாது என்ற நிலை உருவானது, கையில் காசில்லை, கடன்சுமை கழுத்தைப் பிடிக்கிறது, குடிப்பழக்கம் உடலை சிதைத்து விட்டிருக்கிறது. அது போன்ற சூழலில் ஆறுதலாகப் பேச யாருமில்லாமல் வீட்டின் அருகில் உள்ள ரிக்ஷா ஒட்டுபவர்களை அவராகத் தேடிப்போய் புழுதியில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை கேள்விப்படும் போது மனதில் சொல்லமுடியாத பாரம் உருவாகிறது.


தமிழ் சினிமாவில் எம்ஆர் ராதாவிற்கு இணையாக உடல்மொழியைப் பயன்படுத்தியவர் சாவித்திரி ஒருவரே.  குறிப்பாக பகடியான குரலில் அவர் பேசும் முறை அற்புதமான ஒன்று. ஈவா பெரூன் என்ற நடிகையைப் பற்றிய Evita என்ற ஆலன் பார்கர் படத்தில் ஈவா இறந்துபோனதற்கான அற்புத மான துயரப்பாடல் ஒன்றிருக்கிறது. அதில் She didn’t say much, but she said it loud என்ற வரி உள்ளது, அந்த வரி சாவித்திரிக்கும் பொருத்த மானதே.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:32:54 AM11/10/11
to panb...@googlegroups.com

துணிச்சலின் முகம்

நாசர் | Issue Dated: அக்டோபர் 17, 2011

ராதிகா


உலக சினிமாவிலேயே நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டதில்லை. இந்தியா மிகப் பழைமைவாதப் பார்வை கொண்ட நாடென்பதால் இங்கேயும் நடிகைகளுக்கான இடம் என்பது சமமாக இல்லை. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அதை மீறியும் சில நடிகைகள் வெறும் கவர்ச்சிப்பொருளாக இல்லாமல் பல்வேறுபட்ட குணாதிசயங்களால் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். அறியப்பட்டிருக்கிறார்கள்.  பானுமதி அம்மாவைப் பற்றிச் சொன்னால் அவர்கள் சிறப்பான நடிகை. நன்றாகப் பாடுவார்கள்; எழுதுவார்கள் என்ற எல்லா சிறப்புகளையும் தாண்டி தன்னிலையை விட்டுக்கொடுக்காத அவர்களுடைய இயல்புதான் எனக்கு சிறப்பாகப்படுகிறது. அதுதான் என் மனதில் நிற்கிறது.  ஒரு கதாநாயகி கதாநாயகனைச் சார்ந்திருக்க வேண்டும் என்கிற விஷயத்தை மீறியவர் அவர். இதுதான் பானுமதியின் சிறப்பு.

அதேபோல் சாவித்திரி அம்மாவைப் பார்த்தோமெனில், சினிமாவுக்கான உடல் அமைப்பு கிடையாது. கொஞ்சம் குண்டான உடல், வட்டமான முகம், பளீர் என்று கண்கள். ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தமிழகத்து வீடுகளில், குடும்பத்தில் ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டார். நான் கூட அவதாரம் படம் பண்ணும்போது அப்படத்தின் கதாநாயகன் சொல்வான்:  “எனக்கு அம்மா இல்லை. ஆனால் சாவித்திரி அம்மா படத்தைப் பார்க்கும்போது அவங்கதான் என்னோட அம்மான்னு தோணும். அதனால் அவங்க படத்தைச் சேர்த்து வெச்சிருக்கேன்” என்று சொல்லும் காட்சியை எடுத்தோம். ஆனால் அந்தக் காட்சி திரையிடும்போது இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு சாவித்திரி நம்மிடம் தாக்கம் செலுத்தியவராக இருந்தார்.மற்றொருவரைச் சொல்ல வேண்டுமானால் டி.ஆர்.ராஜகுமாரி. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் தமிழ் திரையுலகின் வட, தென் துருவங்களாக இருந்தபோது அவர்களைச் சார்ந்த கதாநாயகிகள் மட்டுமே தொடர்ந்து நீடித்திருப்பார்கள். அது அக்காலத்தின் கட்டமைப்பு.  அந்த இருவரும் விட்டுச்சென்ற இடைவெளியில் எந்தக் கதாநாயகரும் பெரிய நட்சத்திரங்களாக அப்போது உருவெடுக்கவில்லை. இந்த காலகட்டம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்வேன். அப்போதுதான் புதுமாதிரியான சினிமாக்கள் வரத்தொடங்கின.  மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ருத்ரய்யா போன்றவர்கள் வந்து எதார்த்தத்துக்குப் பக்கத்தில் சினிமாவைக் கொண்டுவந்தனர்.  இவர்கள் வந்த பிறகுதான் கதாபாத்திரங்கள் எதார்த்தமாக, நடைமுறைரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்பவர் களாக வருகிறார்கள். பளபளப்பும் மினுமினுப்பும் குறைகிறது. கதைக்கேற்ற கதாபாத்திரங்களின் இயல்புக்கேற்ற நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள். சிவப்பாக, பொன்னிறமாக நடிகர் நடிகைகள் இருக்கவேண்டும் என்ற மாயையும் உடைக்கப்பட்டது. ஒப்பனை இல்லாத கருப்புத் தேகங்கள் அப்போதுதான் திரையில் தோன்றின. அருணா, விஜயசாந்தி, ராதிகா, ஷோபா போன்ற பல எதார்த்த முகச்சாயல் உடைய நாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் ரேவதி, ஷோபா, ராதிகா ஆகியோருக்கு சினிமா நடிகைகளுக்கேயுரிய கவர்ச்சி, உடல்கட்டு இருந்தது என்று சொல்லமுடியாது. அவர்களுக்கான அழகு என்பது அவர்களது உள்மனதின் அழகுதான். உடல் அழகை மீறி அறிவுத்திறனும், ஆளுமையும்தான் அவர்களை அழகாக வெளிப்படுத்தியது.

ராதிகா தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் அவர்களுக்கு தமிழ் தெரியாது. சினிமா நடிப்பும் தெரியாது. எம்.ஆர்.ராதாவின் பேத்தி என்பதால் மட்டும் நடிப்பு ரத்தத்தில் பாய்ந்துவிடும் என்று நாம் சொல்லமுடியாது. ராதிகாவின் அசாத்தியமான அறிவுத்திறனை நடிப்பு என்ற வெளிப்பாட்டு முறையில் செலுத்தி, அதன்மூலம் அபாரமான நடிப்புத்திறனை அவர் கைக்கொண்டார்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் புதுமுகமாக இருந்தாலும், அவர் கண்களில் சிரிப்பில் குறும்புத்தனம் தெரியும். எத்தனைதான் பயிற்சி பெற்ற நடிகராக இருந்தாலும் முதல் படத்தில் காமிரா முன் நிற்கும் போது சின்ன பதற்றம் இருக்கும். அந்தப் பதற்றம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை.

அவரது முதல் படத்திலேயே இயக்குநர் பாரதிராஜாவை மிஸ்டர் பாரதிராஜா என்றுதான் கூப்பிட்டிருக்கிறார். அதை அவர் மரியாதையாகவே நினைத்து கூப்பிட்டார். தமிழ் சினிமாவில் இன்றும் இப்படி யாரும் யாரையும் அழைத்துவிட முடியாது. மிகப்பெரிய கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் ராதிகா, நான் முன்பு சொன்ன பானுமதியைப் போலவே தன்னிலையை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர், தைரியமானவர்.

அதே காலகட்டத்தில்தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளும் கிடைத்தன. பெரிய புரட்சியாளர்களாக பெண்கள் சித்தரிக்கப்படாவிட்டாலும், பெண் கதாபாத்திரங்களைச் சுற்றி கதைகள் சொல்லப்பட்டன. ராதிகாவுக்கு தனது நடிப்புத்திறனை, புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த அந்தப் படங்கள் வாய்ப்பாக அமைந்தன. ராதிகாவின் நடிப்பு எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கமல் நல்லா நடிப்பார் என்பது போன்றது.

எல்லாவற்றையும் மீறி அவர் தைரியசாலி என்பதுதான் எனக்கு அவர் மேல் உள்ள ஈர்ப்பு. நான் அவருடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதில் பிரதானமான படம் எனில் ஜீன்ஸை சொல்வேன். அவருடன் நடிக்கும் போது கொஞ்சம் முன் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். நடிப்பு என்பது நாம் மட்டும் நன்றாக நடித்துக்கொண்டு போகும் சமாச்சாரம் இல்லை. நம்முடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து ஒரு காட்சியை மேம்படுத்துவது முக்கியமானது. ஒரு காட்சியை எடுப்பதற்கு முன்பு ராதிகா, பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாட்டாகவே இருப்பார். ஆனால் காமிரா முன்னால் வந்துவிட்டால் அவர் ஒரு ராட்சஸியாக நிற்பார். அவர்களின் விளையாட்டுத்தனத்தை  வேடிக்கை பார்த்துவிட்டு ஷாட்டுக்குத் தயாராகாமல் போனால் நாம்தான் ஒன்மோர் கேட்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஆழ்மனத்தில் நடிப்பதற்கான ஒத்திகையைப் பார்த்துக்கொண்டே இருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அவர்களின் மனோபலத்தைச் சுட்டிக்காட்டுவது அது. நடிப்புப் பட்டறைகளில் மாணவர்களுக்கு நடிகன் எப்படி மனோதைரியத்தோடு இருக்கவேண்டும் என்று வியந்து சொல்லும் நிகழ்ச்சி இது. ஜீன்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக தயாராகிக்கொண்டு இருந்தோம். எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆயிரம் துணை நடிகர்களுடன் அந்த காட்சிக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தன. பிரசாந்த், ஐஸ்வர்யாராய் என முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறோம். ஏனெனில் அன்றைக்கு எடுக்கப்படும் காட்சியோடு படம் முடிவுக்கு வரவேண்டிய கட்டம். அந்தக் காட்சி எடுக்கப்படும்போது, ராதிகாவுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. வெளியே போய் பேசுவார். உள்ளே வருகையில் அவர் முகத்தில் ஒரு கலக்கம், பதற்றம் கூடும். இப்படி அடிக்கடி தொலைபேசி அழைப்பு வருகிறது. நான் ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் என்ன ஆச்சு, ஏதாவது உதவி தேவையா என்று கேட்கிறேன்.

ராதிகா சடாரென்று என் கையைப் பிடித்துக்கொண்டார். ஆணுக்குக் கூட அத்தனை வலு இருக்காது. என் எலும்பு நொறுங்கிவிடும்போல இருக்கிறது. அவரது குடும்ப வாழ்க்கை உடைந்துபோய் கணவர் பிரிவதாக அன்றுதான் அறிவிக்கிறார். அவரது பொருளாதார நிலையும்  கேள்விக்குள்ளான தருணம் அது. இதுதொடர்பான விஷயம்தான் அவரைப் பதற்றப்படுத்தியுள்ளது. அதை என்னிடம் கூறிவிட்டு கலங்கி அமர்ந்திருக்கிறார்.  ராதிகா கலங்கி நிற்பார் என்பது என்னால் கற்பனை செய்யமுடியாத ஒன்று. நானும் என்ன செய்வது என்றறியாமல் உட்கார்ந்திருக்கிறேன்.

அப்போது உதவி இயக்குநர் வந்து ஷாட் ரெடி என்கிறார். ஒரே ஒரு பெருமூச்சுதான் விட்டார். சட்டென்று எழுந்து கலக்கமே இல்லாமல் ரெடி என்று காமிரா முன்னால் சென்றுவிட்டார். அந்தக் காட்சியில் நான் சரியாக நடிக்க முடியாமல் திணறுகிறேன்.  நான் டைரக்டரிடம் ஒன்மோர் கேட்கிறேன். அப்போது ராதிகா, “யேய் பாய், பிரச்னை எனக்குடா...உனக்கில்லை. ஒழுங்கா நடி” என்கிறார். ராதிகா தொடர்ந்து நன்றாகவே நடித்தார்கள். நான் இரண்டு மூன்று முறை டேக் வாங்கித்தான் அந்த ஷாட் பூர்த்தியானது.

 ராதிகாவுக்கு அப்போது இருந்த நெருக்கடிக்கு அவருக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்துக்கு இப்பிரச்னையை இயக்குநரிடமோ தயாரிப்பாளரிடமோ சொல்லி இன்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் ராதிகா அதைச் செய்யவேயில்லை. இதுதான் நடிகையாக அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியையும் கடமையுணர்ச்சியையும் காண்பிக்கிறது.
இன்று சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் இளம் நடிகர்கள், ‘ரொம்ப டென்ஷனா இருக்கு’ என்று சொல்லிக்கொண்டு போய்விடுகிறார்கள். ராதிகா எந்தக் காலகட்டத்திலும் தனது தொழிலைத்தான் தனது அடையாளமாக வைத்திருந்தார்.
தமிழ் சினிமா கதாநாயகிகள் வரிசையில் அவருக்கு முக்கியமான இடம் கிடைத்திருப்பது எனக்கு ஒன்றும் ஆச்சரியமாக  இல்லை. இன்னொரு நிகழ்ச்சியையும் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம். பொதுவாகவே தமிழ் பத்திரிகைகளின்  விற்பனை குறைவாக இருந்த காலகட்டம் அது. தமிழ் சினிமா தொடர்பாக ஏதாவது பரபரப்பாக எழுதினால்தான் விற்பனையைக் கூட்டமுடியும் என்ற நிலையில் ஒரு பத்திரிகையில் பாரதிராஜா எப்படி படப்பிடிப்பு நடத்துவார் என்று கேலிச்சித்திரம் ஒன்றை கடுமையான கிண்டலுடன் மூன்று பக்கம் வெளியிட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு நகர்த்திய ஒரு இயக்குநரை இப்படியா சித்தரிப்பது என்று சினிமா உலகில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து பிலிம் சேம்பர் திரையரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே பத்திரிகையில் ஒரு நடிகையின் கதை என்ற பெயரில் தமிழில் அப்போது நடித்துக்கொண்டிருந்த எல்லா நடிகைகள் பற்றியும் கேவலமாக சித்தரித்து ஒரு தொடரும் வெளியாகிக் கொண்டிருந்தது.

பிலிம் சேம்பர் அரங்கில் நாங்கள் எல்லாரும் கூடியிருந்தோம். கூட்டம் 6 மணிக்குத் தொடங்கவேண்டும்.  ஆனால் எல்லாரும் வருவதற்கு தாமதமாக 7 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. அப்போதுதான் ராதிகா உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழையும்போதே ஒரு வசையுடன் வந்தார். “ஆறு மாதமாக நடிகைகள் பத்தி கிழிகிழின்னு கிழிக்கிறான். யாருமே கண்டிக்கவில்லை. ஆனால் இந்த கார்ட்டூன்தான் முக்கியமான விஷயம் சார். நாம் மீட்டிங்கை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.


அதற்குப் பிறகு மிகப்பெரிய மௌனம் அரங்கில் நிலவியது. ஒரு கார்ட்டூனுக்காக வெகுண்டெழுந்து கண்டிப்பவர்கள், சகநடிகையைப் பற்றி எழுதும்போது அதைக் கண்டிக்க நாதியில்லை என்பதை அவர் வெளிப்படையாக அங்கே தெரிவித்துவிட்டார். இச்சூழ்நிலையில் அந்தக் கூட்டத்தின் நோக்கமே மாறிப்போய் ஒட்டுமொத்தமாக அந்தக் கூட்டத்தின் கோணத்தையே மாற்றிவிட்டார்.  ஊடகங்கள் சினிமாத்துறையினரை எப்படிக் கருதுகிறார்கள் என்பதாக அந்தக் கூட்டத்தில் எல்லாரும் பேசத்தொடங்கினார்கள்.  ராதிகா அந்தளவு தைரியமானவர்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:40:39 AM11/10/11
to panb...@googlegroups.com

இறுதிவரை கதாநாயகி

அசோகமித்திரன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

வைஜயந்திமாலா


ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக வைஜயந்தி மாலா அதிகம் எழுதப் படவில்லை.
அவருடைய சமகாலத்திய நடிகைகளாக லலிதா, பத்மினி, ராகினி, பானுமதி, சாவித்திரி போன்றவர்களைக் கூறலாம். ஒரு வியக்கத்தக்க தகவல், வைஜயந்திமாலா ஒருத்திதான் தமிழ்ப் பெண். மற்றவர்கள் வேற்று மொழிக்காரர்கள். இன்றும் தமிழ்ப் படங்களில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள், அநேகமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் வேறு மொழிக் காரர்கள். இன்று குரல் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் பானுமதியும் பத்மினியும் சாவித்திரியும் பக்கம் பக்கமாகத் தமிழ் வசனங்களை அவரவர்கள் மொழியில் எழுதி மனப்பாடம் செய்தார்கள். மிக நன்றாகவே நடித்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஒரு தமிழ் டைரக்டர் தமிழ் மூச்சு, தமிழ் உயிர், தமிழ் மண் என்று ஒரு திரைப் படத்தில் அவராகவே பேசியிருக் கிறார். ஆனால் அவருடைய கதாநாயகிகள் பெரும்பாலும் வேறு மொழிக்காரர்கள். அவருடைய கதாநாயகர்களில் ஒருவர் தெலுங்கர்; இன்னொருவர் மலையாளம்.

இந்தச் சூழ்நிலையில் வைஜயந்திமாலா தமிழ்ப் பெண்ணாக இருந்தும் அதிகத் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அவரை அணுகவே பயப்படுவது போல தமிழ்த் தயாரிப்பாளர்கள் அவரை அமர்த்தவில்லை. ஏவிஎம், ஜெமினி தவிர்த்து மூன்று வேறு படங்களில் மட்டும் நடித்தார். ஒன்று, ‘பாக்தாத் திருடன்’, இன்னொன்று ‘பார்த்திபன் கனவு’. ஜெமினியுடன் தேன்நிலவு. ‘பாக்தாத் திருடன்’ படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.. ஏன் அது இன்று யார் நினைவிலும் இல்லை? எம்ஜிஆர் நடித்த சுவடே இல்லாமல்போன வேறு படங்களும் உள்ளன. அதில் ஒன்று கண்ணாம்பா எடுத்தது. ‘தாலி பாக்கியம்’ கண்ணாம்பா அவர்களுக்கு தாலி, வீடு, வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்தும் விட்டார்.

என்னுடைய நண்பர்  ‘பாக்தாத் திருடன்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட சாதனத்தின் எல்லாப் பிரிவுகள் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்தவர். அவர் ‘திருடன்’ பற்றியும் பேசமாட்டார். கதாநாயகி வைஜயந்திமாலா பற்றியும் பேசமாட்டார்.
வைஜயந்திமாலா இன்று எழுபது வயதைத் தாண்டியும் ஆண்டுக்கு ஒரு நடன நிகழ்ச்சியாவது அவரே பங்குபெற்று நடத்தி வருகிறார். அவர் வேறு மொழிகளில் நடித்த ஒரு படமும் சோடை போகவில்லை. திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார், பிரதீப் குமார், பால்ராஜ் சகானி, அசோக்குமார் என பலதரப்பட்ட நட்சத்திர நடிகர்களோடு நடித்து அப்படங்களில் முக்கியத்துவமும் பெற்றார். ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கமுடியாது என்று ஏற்பட்டவுடன் அவர் நடிப்பிலிருந்து விலகி, நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டும் அவ்வப்போது நடத்தினார்.

வைஜயந்திமாலா தோற்றம், நடன ஆற்றல் ஆகியவற்றுக்கே முன்னணி நடிகையாக இருந்தார். இந்தியில் அவருடைய சமகாலத்தைய நடிகைகளாக விளங்கிய நர்கிஸ், மதுபாலா, வஹிதா ரஹ்மான், நூதன் போன்றோர் பலமுறை ஆண்டின் சிறந்த நடிகையாக முன்மொழியப்பட்டு இருமுறை மூன்று முறை தேர்வும் பெற்றார்கள். வைஜயந்திமாலா ஒரே ஒருமுறை துணைக் கதாநாயகி விருதுக்காக முன்மொழியப்பட்டுத் தேர்வும் பெற்றார். ஆனால் அவர் அவ்விருதை ஏற்கவில்லை. ‘தேவதாஸ்' படத்தில் சந்திரமுகி வேடத்தில் நடித்த அவர், தானே கதாநாயகி என்று வலியுறுத்தினார். ஆனால் நடுவர்கள் அப்படிக் கருதவில்லை. சங்கடந்தான். தமிழ் ‘தேவதாஸ்' படத்தில் கூடப் பார்வதி வேடத்தில் நடித்த சாவித்திரியைத் தான் அனைவரும் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டார்கள். சந்திரமுகி வேடத்தில் நடித்த லலிதாவை அல்ல.

தமிழ் வரையில் ‘வாழ்க்கை’ என்ற படம் அடைந்த வெற்றியை ‘பெண்’, ‘அதிசயப்பெண்’ ஆகிய படங்கள் பெறவில்லை. ‘வாழ்க்கை’ படத்தில் பலர் சிறப்பாக நடித்திருந்தார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், சாரங்கபாணி தவிர மிகச்சிறிய பாத்திரங்களில் நடித்தவர்களும் விசேஷ கவனம் பெற்றார்கள். இசை இன்னொரு வெற்றி அம்சம். பல பாடல்கள் இந்திப் பாடல்களின் கலப்படமற்ற பிரதிகள். ஆனால் அந்தப் பாடல்களுக்காக ரசிகர்கள் பலமுறை படத்தைப் பார்த்தார்கள். அந்த நாளில் (1949&ல்) பாடல்கள் திரைப்படம் வெளியாகிச் சிலகாலம் கழித்தே வெளியிடப்படும். இசைத் தட்டுத் துறையிலும் ஏவிஎம் முதன்மை நிறுவனமாக இருந்தது. வர்த்தகரீதியாக அவர்கள் ஏகபோகமாக நடந்துகொண்டார்கள் என்று சில இசைத்தட்டு நிறுவனங்கள் கூறின. ஆனால் திரைப்படங்களில் பல வெவ்வேறு அம்சங்களை இணைத்து வெற்றி ‘ஃபார்முலா’ கண்ட ஏவிஎம் சட்டரீதியாக இசைத்தட்டு வெளியிடுதலிலும் நல்ல திறமையை வெளிக்காட்டியது.

வைஜயந்திமாலா, ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக விளங்காத தற்கு ஒரு காரணம் பம்பாய்த் திரைப்படத்துறை அவருக்குக் கொடுத்த முக்கியத்துவம் தெற்கே கிடைக்கவில்லை. பத்மினி ஓரிரு இந்திப் படங்களில் நடித்தாலும் பிரதானமாகத் தமிழில்தான் இயங்கினார். சரோஜாதேவி, ஜமுனா போன்றோர்கூடச் சென்னையில் தயாரிக்கப்பட்ட ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார்கள். ஜெமினி ஸ்டூடியோ வைஜயந்திமாலாவுக்கென்றே விசேஷ நடனக் காட்சிகளை ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சேர்த்திருந்தது. ‘ஜிந்தகி’ என்ற இந்திப் படத்தில் கதாநாயகிப் பாத்திரமே ஒரு நடன நாடகப் பெண்தான். இப்படம் தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ என்ற தலைப்பில் வேறு நடிக நடிகையரோடு தயாரிக்கப்பட்டது. இந்திப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாக நடித்திருந்தாலும், படம் வெற்றியடையாததால் வைஜயந்திமாலாவுக்கு பாராட்டுகள் கிட்டவில்லை. அவருடைய நடிப்புக்கென்று விருதும் பாராட்டும் கிடைத்தது பிமல்ராய் டைரக்ட் செய்த ‘தேவதாஸ்’ படத்துக்குத்தான். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!

வைஜயந்திமாலாவின் இளமைப்பருவம், அவ்வளவு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. தாய், தந்தையர் பிரிந்துவிட்டனர். வைஜயந்திமாலாவின் பாட்டியாகிய யதுகிரி அம்மாள்தான் அவளை வளர்த்து, நடனம் பயிற்றுவித்து, முதல் திரைப்படப் பிரவேசமே கதாநாயகியாக நடிக்க வழி செய்தவர் என்பார்கள். வைஜயந்தி மாலாவின் காவலராக யதுகிரி அம்மாளைத்தான் பலகாலம் மக்கள் அறிந்தார்கள்.

ஆனால் ஒருகட்டத்தில் வைஜயந்திமாலா அவருடைய பாட்டியையும் பிரிய நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவருடைய திருமணம் நடந்தது. மணமகன் ஒரு மருத்துவர். டாக்டர் பாலி. அந்நிய மொழிக்காரர். முதல் மனைவி இறந்துபோனதாகக் கூறுவார்கள். வைஜயந்திமாலா -&பாலி திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்க வேண்டும். பாலி மறைந்துவிட்டார். ஒரு மகன் இருக்கிறான். எம்ஜிஆரைக் கடைசிவரை கதாநாயகனாகவே விளங்கியவர் என்று கூறுவார்கள். வைஜயந்திமாலா கதாநாயகியாகவே திரையில் பிரவேசித்து கதாநாயகியாகவே இறுதிப்படம் வரை தோன்றினார்.

திரைப்படங்கள் போல மனித அனுபவத்தில் வேறெதுவும் பரபரப்பூட்டுவதில்லை. அதேபோல நினைவிலிருந்து விலகிவிடுவதும் இல்லை. இன்று பழைய படங்களைப் பார்க்க நிறைய வசதி இருக்கிறது. ஆனால் பழைய படங்களைப் பார்ப்பவர்கள் அவர்கள் இளமைக் காலத்தில் அப்படங்களைப் பார்த்துப் பரவசமடைந்தவர்கள். இது நடிக நடிகைகளுக்கும் பொருந்தும். வைஜயந்திமாலா அவருடைய தமிழ்த் திரைப்படங்களை விட ஒரே ஒரு நடன நிகழ்ச்சிக்காகச் சிறிது காலம் நினைவில் இருப்பார். அது ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் அமைந்த போட்டி நடனம். அதில் பத்மினி அவர்கள் தோற்றுப் போகும் நிலையில் இருக்கும்போது போட்டி தடைப்படுகிறது. போட்டியில் வைஜயந்திமாலா சிறப்பாகத்தான் நடனமாடினார். அப்படத்தில் அவருடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் விசேஷமாக இருக்கும்.

சமீபத்தில் வைஜயந்திமாலா அவருடைய மகனுடன் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது புகைப்படத்துடன்கூடிய செய்தியாக வந்தது. முதலமைச்சரும் நடனமாடிய படிதான் திரைப்படத்தில் கதாநாயகியாகப் பிரவேசித்துக் கதாநாயகியாகவே விலகினார். இருவரின் சந்திப்பு மரியாதை நிமித்தம் என்றாலும், இருவருக்கும் பல பழைய நினைவுகள் வந்திருக்கும். அவர்களுடைய இளமைக்காலத் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கும் பல நினைவுகள் தோன்றியிருக்கும்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:41:21 AM11/10/11
to panb...@googlegroups.com

மெல்லிய பூங்காற்று

ஜெயமோகன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

சரிதா


இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப் படத்தைப் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது  எனக்கு 19 வயது. கல்லூரி இறுதிவகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டு கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று, ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக் குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட் டின் கடும் வறட்சியைப் பற்றிய அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஆரம்பித்த சில கணங்களுக்குள் பாலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரிய சென்று கொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க்குடங்களுடன் வெறும் கால்களுடன் சரிதா, அந்த முள்பரவிய வெற்று நிலத்தில் நடந்துகொண்டே இருந்தார். அவர் நடந்து நடந்து கண்முன் விரித்த அந்த நிலத்தில் வெடிப்புகள் வாய்திறந்து தண்ணீர் தண்ணீர் என்று முனகிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். வழியில் ஒருவன் சாக்கடை நீரை அள்ளிக்குடிக்க முற்படுகையில் சரிதா அவனைத் தடுத்து, சின்னமூக்கைச் சுளித்துச் சிரித்து, ‘இந்தா குடி' என நீரை அவனுக்கு ஊற்றுவார்.

என்னை நெகிழச்செய்த அந்தக் காட்சியை எத்தனையோ ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கிறேன். எந்த வறட்சியிலும் வறளாத கருணை ஒன்றை அது அடையாளம் காட்டியது. உண்மையில் படத்தின் மையமே அதுதான். வறண்ட மண்ணுக்கும் வறட்சியை அறியாத மனங்களுக்கும் இடையேயான போராட்டம். அந்தப் படம் முழுக்க சரிதா தென்தமிழ்நாட்டின் கிராமத்துப் பெண்ணாகவே தெரிந்துகொண்டிருந்தார். கொசுவத்தை சுழற்றிச் செருகும் அழகு, கையை கண்மேல் வைத்து வானை நோக்கி ஏங்கும் துயரம், கண்ணீர் படர்ந்த பெரிய கண்களில் தெரிந்த சீற்றம். அன்று சரிதாவுக்காகவே அந்தப் படத்தை ஏழு முறைக்குமேல் பார்த்தேன்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ஊடகவியல்துறை கே.பாலசந்தரின் ஆக்கங்கள் பற்றி ஒரு கருத்தரங்கை ஏற்பாடுசெய்தது. அதில் நான் அவரைப் பற்றி பேசவேண்டும் என்று நண்பர் வசந்த் கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எனக்குப் பிடித்த கே.பாலசந்தரின் படங்களைப் பார்த்தேன். என் மனதில் முதலிடத்தில் இருந்த 'தண்ணீர் தண்ணீர்'தான் முதலில். பழைய குறுவட்டு ஓடி சிவந்த காட்சிகள் தெளிந்து சரிதா, அந்த காய்ந்த மண்ணில் நடக்க ஆரம்பித்ததும் நான் மீண்டும் அதே உணர்ச்சிகளுக்கு ஆளானேன். அந்தப் படத்தின் எவ்வளவோ விஷயங்கள் பழைமையாகிவிட்டன. இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள்... ஆனால் சரிதாவின் அந்த கனிவும் ஏக்கமும் சீற்றமும் அதே நுட்பங்களுடன் அதே உத்வேகத்துடன் இருந்தது.

அது என் கடந்தகால ஏக்கமா என்ற ஐயம் ஏற்பட்டது. நாற்பது தாண்டும்போது இளமைக்கால கட்டம் தனி ஒளிகொள்ள ஆரம்பிக்கிறது. நான் அருகே அமர்ந்து படம்பார்த்த என் மகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக தமிழ்ப் படங்களை ரசிக்காதவர்கள் என் பிள்ளைகள். படம் முடிந்ததும் மகன் உணர்வெழுச்சியுடன் சொன்னான் ‘நல்ல படமா இல்லையான்னு சொல்லத் தெரியல்ல அப்பா. ஆனா பாத்து முடிக்கிறப்ப ஒரு பயங்கரமான ஆவேசம் வருது' நான் சொன்னேன் ‘அதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அது நினைச்ச உணர்ச்சிய உண்டுபண்ணுதே'

அவனே சரிதா பற்றி ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் நல்ல மலையாளப் படங் களில் ஏற்கெனவே சரிதாவைப் பார்த்திருந்தான். படத்தைப் பற்றி மேலும் பேசும்போது அவன் சொன்னான் ‘அந்தக் கிராமத்துப் பொண்ணு நல்லா நடிச்சிருக்கா அப்பா... நான் புன்னகையுடன் அது சரிதா.. என்றேன். ‘யாரு? காதோடு காதோரம் படத்திலே நடிச்சாங்களே அவங்களா? மீண்டும் படத்தின் குறுவட்டை எடுத்துப்பார்த்து ‘அட ஆமா’ என்றான் ‘தெரியவே இல்ல அப்பா...அப்டியே அந்த மண்ணில நிக்கிற முள்ளுசெடி மாதிரி இருந்தாங்க அவங்களும்'

கடும் விமர்சனங்கள் கொண்ட அடுத்த தலைமுறையிடமிருந்து வரும் பாராட்டு. ஒருவேளை சரிதாவுக்குக் கிடைக்கச் சாத்தியமான அதிகபட்ச அங்கீகாரமும் அதுவாக இருக்கலாம். இருபத்தைந் தாண்டுகளுக்கு முன் நான் சரிதாவின் ரசிகனாக இருந்தேன் என்று சொன்னேன். தனிப்பட்ட முறையில் நான் இரண்டே நடிகர்களுக்குத்தான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வேன். அவர்கள் என்ன நடித்தாலும் அது எனக்குப் பிடிக்கும். சரிதாவை விட்டால் மலையாள நடிகர் திலகன். அவர்கள் நடிப்பதையறியாத நடிகர்கள். எந்த கதாபாத்திரத்திலும் மிகச்சாதாரணமாக கலந்துவிடும் ஆன்மா கொண்டவர்கள். அக்கதாபாத்திரத்துக்கு வெளியே கொஞ்சம்கூட நீட்டிநிற்கும் அகந்தையோ ஆளுமையோ இல்லாதவர்கள்.

சரிதாவின் முந்தைய படங்களை உண்மையில், நான் அதன்பின்னர் தான் பார்த்தேன். தப்புத்தாளங்கள், பொண்ணு ஊருக்குப் புதுசு, மௌனகீதங்கள், வண்டிச்சக்கரம், மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களை சரிதாவுக்காக பலமுறை பார்த்திருக்கிறேன். பிற்காலப்படங்களில் சரிதாவின் நடிப்பை மிகைப்படுத்தும் காட்சிகளை இயக்குநர்கள் அளித்து மிகையாகவே நடிக்கவும் செய்திருந்தார்கள். ஆனால் அவற்றையும் மீறி அப்படங்களில்கூட அவரது நடிப்பு நுட்பங்களும் மெருகும் கொண்டதாக இருந்தது
நடுவே சில ஆண்டுகள் நான் திரைப்படங்கள் பார்க்கவில்லை. மீண்டும் எண்பதுகளின் இறுதியில் மலையாளப் படங்களில் புதியதாக சரிதாவின் நடிப்பைக் கண்டு கொண்டேன். இன்னும் முதிர்ச்சியும், இன்னும் அடக்கமும், இன்னும் நுட்பங்களும் செறிந்த சரிதா. இன்னும் ஆழமான, இன்னும் யதார்த்தமான கதாபாத்திரங்கள். ஜோஷி இயக்கிய ‘சம்பவம்’ சிபி மலையில் இயக்கிய ‘தனியாவர்த்தனம்’ பரதன் இயக்கிய ‘காதோடு காதோரம்’ போன்ற படங்களில் தெரிந்த சரிதா நான் மறக்கமுடியாத முகம்.

வழக்கமான பார்வையில் ஒரு கதாநாயகிக்கான தோற்றம் கொண்டவர் அல்ல சரிதா; குள்ளமான, குண்டான, கரிய பெண். நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒத்துவராத சின்ன உதடுகளும் சின்ன மூக்கும் கொண்ட வட்டப் ‘பம்ளிமாஸ்’ முகம். ஆனால் சரிதா அளவுக்கு எந்த நடிகையும் துல்லியமான முகபாவங்கள் வழியாக கதாபாத்திரத்தின் அகத்தைக் காட்சிப்படுத்தியதில்லை.
எந்த அம்சம் சரிதாமேல் அத்தனை பெரிய ஈர்ப்பை உருவாக்கியது? நான் அன்றுவரை திரையில் கண்டிருந்த எல்லா நடிகைகளும் செயற்கையான நளினங்களையும், செயற்கையான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள். சரிதாவின் அசைவுகளும் சிரிப்பும் பேச்சும் எல்லாமே மிகமிக சகஜமானவையாக இருந்தன. அது உருவாக்கிய ஆச்சரியத்தை இன்று சொல்லிப் புரியவைப்பது கடினம்.

அன்றைய கதைகள் பெண்களைச் சார்ந்தவை. பெண்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடிப்பதற்கானவை. சரிதா, அத்தகைய கதாபாத்திரங் களைக்கூட மிக அடக்கமாகவும் நுட்பமாகவும்தான் வெளிப்படுத்தி யிருந்தார். மிகையாக நடித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவானவை. மிக அசட்டுத்தனமான, சம்பிரதாயமான கதாபாத்திரங்களில்கூட முகபாவனைகளின் நுட்பங்கள் வழியாக தனி அழகை சரிதாவால் உருவாக்க முடிந்திருக்கிறது என இப்போது தோன்றுகிறது.
பலவகையிலும் சரிதாவை எஸ்.ஜானகியிடம்தான் ஒப்பிடவேண்டும். திரைப்பாடலுக்குரிய கணீர்க்குரல் இல்லாத ஜானகி, கடும் முயற்சியால் தனக்கென இனிய குரலை உருவாக்கிக்கொண்டார் என்பார்கள். சரிதாவும் அப்படியே, தோற்றத்தின் எதிர்மறை அம்சத்தை நடிப்பால் வென்றவர் அவர்.

மலையாளத்தின் எல்லா வகையான வட்டார உச்சரிப்புகளையும், சாதிய வேறுபாடுகளையும் துல்லியமாக தன் பாடல்களில் கொண்டுவர முடிந்த பாடகி என எஸ்.ஜானகி யைச் சொல்லலாம். சரிதாவும் அப்படியே. இந்த அளவுக்கு நுட்பமாக மலையாளப்பெண்களின் வெவ்வேறு வகையான உடல்மொழியை முகபாவனை களை நடித்துக்காட்ட சரிதாவால் முடிந்ததை சாதனை என்றே சொல்லவேண்டும். அதேசமயம் தமிழில் மலையாளச்சாயலே இல்லாமல் அப்பட்டமான தமிழ்ப் பெண்ணாகவே அவர் காட்சியளித்தார். ஆனால் எஸ்.ஜானகியைப்போலவே சரிதாவும் தெலுங்கர்.

வேறெந்த கலைஞர்களைவிடவும் தமிழில் திரைக்கலைஞர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் சாதனையாளர்கள் எளிதில் மறக்கப்படுவதும் திரைத்துறையிலேயே. சரிதா தமிழ்த் திரையின் சாதனைக் கலைஞர்களில் ஒருவர். அந்த அங்கீகாரத்தை அவருக்கு அளித்து எழுதப்பட்ட குறிப்புகளை நான் கண்டதில்லை.  சரிதாவின் நடிப்பு அவருக்குப் பின்னால் வந்த எல்லா கதாநாயகிகளிலும் ஒரு பாதிப்பைச் செலுத்தியிருக்கிற தென்றே நினைக்கிறேன். இயல்பான சரளமான நடிப்பே உண்மையான நடிப்பு என்பதை தமிழ்த் திரைப்படத்தின் திருப்புமுனைக் காலகட்டத்தில் வந்து தமிழ் ரசனைக்கு முன்னால் நிறுவிக்காட்டியவர் அவர்.
திரைச்சீலைகளை நடனமிடச் செய்தபடி கடந்து செல்லும் மெல்லிய பூங்காற்றுபோல தமிழ்த் திரை வழியாக கடந்து சென்றவர்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:41:47 AM11/10/11
to panb...@googlegroups.com

ஆட்டிப்படைத்த மாயம்

சாரு நிவேதிதா | Issue Dated: அக்டோபர் 17, 2011

சில்க் ஸ்மிதா


பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின.  அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம்.  காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்?  “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.”  இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, “அவர்கள் அனுபவிக்க நினைத்தது, ரத்தமும் சதையுமாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஜமீலாவுடன் அல்ல;  தொலைக்காட்சியில் தெரியும் ஜமீலாவின் நிழலுடன்” என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால், ஜமீலா அனுபவரீதியாக உணர்ந்து கூறியதைத்தான்  ஃபிரான்ஸைச் சேர்ந்த பிரபலமான பின்நவீனத்துவ சிந்தனாவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard)  தன்னுடைய Simulacra and Simulation என்ற நூலில் Hyperreality என்ற கருத்தாக்கமாக முன்வைக்கிறார்.   சுருக்கமாகக் கூறினால், எதார்த்தத்துக்குப் பதிலாக, அதன் இடத்தை பிம்பங்கள் எடுத்துக் கொள்வதே ஹைப்பர் ரியாலிட்டி.

தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளில் பிரதானமாக இருப்பது சினிமா என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.  அந்த சினிமாதான் தமிழர்களுக்கான பிம்பங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பங்களில் மிக முக்கியமானவர் சில்க் ஸ்மிதா (1960-&96).  ஆந்திராவின் ஏழ்மையான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வசதியில்லை.  அதனால் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, ஆந்திராவிலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் சினிமா ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 16. இதேபோல், கிராமத்தில் சிறுவயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்து, பிறகு சினிமாவில் சேர்ந்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ராக்கி, ஜெயா பாதுரி.  இதை இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் பல நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.  
ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே இருந்த மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த விஜயா, நடிகர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட  விஜயாவின் வாழ்க்கையில் அதிரடித் திருப்பம் ஏற்படுகிறது.  வண்டிச் சக்கரம் என்ற படத்தில் விஜயா சாராயம் விற்கும் பெண்.  பெயர் சிலுக்கு. பிறகு அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடுகிறது. 
 
அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்தார்.  புகழின் உச்சத்தில் இருக்கும்போது தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இன்றளவும் நம்புகிறவர்கள் உண்டு.  புகழின் உச்சாணியில் இருந்த சிலுக்குவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தபோது அந்த சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட யாரும் இல்லை என்பது இன்னொரு துயரமான விசித்திரம். இதிலும் பல நடிகைகளின் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.  பர்வீன் பாபி, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை. பாலிவுட்டின் செக்ஸ் ஸிம்பலாகக் கருதப்பட்டவர். தத்துவ ஞானி யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் சிநேகிதி.  என்னுடைய எக்ஸிஸ் டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலுக்கு டெபொனேர் பத்திரிகையில் வெளிவந்த பர்வீன் பாபியின் ஒரு பேட்டிதான் அடிப்படையாக இருந்தது. அந்தப் பேட்டி வந்த ஆண்டு 1972.  அப்படிப்பட்ட பர்வீன் பாபி 2005-&ல் இறந்தபோது அவரது சடலமும் Unclaimed body (Token No. 62) -ஆகத்தான் கிடந்தது. மேலும், சிலுக்கு பிரபலமான பிறகு தன் சொந்த பந்தங்கள் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. அவருடைய மூத்த சகோதரர், சிலுக்கு சாகும்போதுகூட லாரி டிரைவராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில் இன்றளவுக்கும் வேறு யாரும் இல்லை. ஒருமுறை இந்திரா காந்தி “யார் இந்த சில்க்?” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.   பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.  இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்கூடத் தொட முடியவில்லை.  அன்றைய கதாநாயக நடிகர்கள்கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க்.  இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்தால், தமிழ்ச் சமூகத்தை மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும். 

ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.  அங்கே முக்கால்வாசிப் பெண்கள் சில்க் ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.  அவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு மாநிலம் தனது கனவுக் கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?


உலகில் பாலியல் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்று நினைக்கிறேன். என் வாசகர் ஒருவர் இருந்தார். வயது 60. அவர் நீண்ட நாட்களாக யோசித்து, தயங்கி, பிறகு சற்றே துணிச்சல் பெற்று ஒருநாள் தன் மனைவி தனியாக இருக்கும்போது முத்தமிட்டார்.  உடனே அந்தப் பெண்மணியும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.  “உங்கள் புத்தகங்களைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்” என்று பிறகு அவர் என்னிடம் வருத்தப்பட்டார். 
அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது.  அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு.  அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க்.  முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள்.  இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophilia செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு பேச்சு உண்டு.  ஒரு பிரபலமான நடிகை பல நாட்கள் கோமாவில் இருந்த போது, அந்த மருத்துவமனையின் வார்ட்பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை அந்த நடிகையின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் என்று அங்கே பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். 

ஹைப்பர்ரியாலிட்டி என்பது எதார்த்தம் அல்ல; ஆனால் எதார்த்தத்திலிருந்து முழுதும் அந்நியமானதும் அல்ல. அதே சமயம், அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு.  Hallucinatory resemblance என்கிறார் பொத்ரியார்.  தமிழ்நாட்டை சுமார் 20 ஆண்டுகள் இந்த மாயத்தன்மையினால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால் ஒருவேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக்கூடும்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:42:29 AM11/10/11
to panb...@googlegroups.com

நடிக்காத நாயகி

இயக்குநர் வஸந்த் | Issue Dated: அக்டோபர் 17, 2011

லட்சுமி


கொஞ்சம் பின்னோக் கிப் பார்த் தால் எங்கள் ஊர் தேவகோட்டையில் பழைய தியேட்டர், புது தியேட்டர் என்று சொல்வார்கள். அதற்கு லட்சுமி, சரஸ்வதி என்று பெயர்கள் உண்டு. பழைய தியேட்டரில் ஜீவானாம்சம் என்று ஒரு படத்தை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அதில் நடித்த நடிகையை எனக்குப் பிடித்ததாகவும் வீட்டில் கேலிசெய்வார்கள். அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா? என்று கலாட்டா செய்திருக்கிறார்கள். ஏன் அவரை உனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அந்த நடிகை லட்சுமி. அவரது முதல்படம் ஜீவனாம்சம்.

இப்படி முதலில் எனக்கு அறிமுகமான நடிகை லட்சுமி.  அப்போது இயக்குநர் கே. பாலசந்தருடைய படங்கள் ரொம்பவும் பிடிக்கும். பின்னாளில் அவர் என் குருநாதரானார். அவருடைய படங்கள் என்றால் உடனே பார்த்துவிடுவேன். ஜெய்சங்கரையும் பிடிக்கும். அவருடைய படம் என்பதால் பிறகு புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில்  நூற்றுக்கு நூறு என்ற படத்தை பார்க்கப்போனேன். லட்சுமியைப் பார்த்த பிறகு அவர் எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி ஆகிவிட்டார். அப்படத்தில் லட்சுமியைச் சுற்றியிருக்கிற அத்தனை பாத்திரங்களும்  ஜெய்சங்கரை சந்தேகப்படுவார்கள். லட்சுமி அவரது காதலி. படம் முடியும் வரையில் அவரைச் சந்தேகப்படவே மாட்டார். அவர் நல்லவர்... அவர் நல்லவர் என்ற ஸ்தானத்திலேயே இருப்பார். குட்நெஸ் என்பது எனக்கு அப்செஷன், ஒரு சிண்ட்ரோம். கடைசிவரையில் குட்னெஸை அவர் நம்பியது பிடித்திருந்தது. இலக்கியத்திலிருந்து அதை ஒப்பிட்டு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்ல முடியும். ஜஸ்டிஸ் ஜகநாதன் நாவலைப் படிக்கும்போது ஓர் உணர்வு வரும். ஹீரோ நல்லவர்,  தவறே செய்திருக்கமாட்டார் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியும். அது தான் கடைசிவரை இருக்கணும், அவர் தவறே செய்திருக்கக்கூடாது என்று வாசிப்பவர் மனநிலை யிலேயே படிப்போம். எழுத்தாளர் புகுந்து குழப்பிவிடக்கூடாது என்று நினைப்போம்.  அதேமாதிரியே கதை முடியும்போது ஒரு திருப்தி வரும். அதே திருப்தி நூற்றுக்கு நூறு படத்தில் கிடைக்கும்.

அதன்பிறகு லட்சுமி படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஜெய்சங்கருடன் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். வாரா வாரம் வெள்ளிக்கிழமை படம் பார்ப்பேன். ஜெய்சங்கர், லட்சுமி நடித்த கல்யாணமாம் கல்யாணம் ஒரு நல்ல காமெடிப் படம். அக்கரைப் பச்சை ரொம்ப ரொம்ப பிடித்த படம். ஒரு சிறந்த நடிப்புக் கலைஞராக அவரை உணர்ந்தது என்றால் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில்தான்.  தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இன்றும் நான் நினைக்கிற படம் அது. அந்தப் படத்தில் லட்சுமியின் நடிப்பு... அது நடிப்பே கிடையாது, வேறு ஏதோ ஒன்று. நடிப்பதே தெரியாத மாதிரி நடிப்பார். அது அவருடைய ப்ளஸ் பாயிண்ட்.  தமிழ் சினிமாவில் மெலோடிராமா கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே அவர் அப்படி நடித்தது கிடையாது. மிகவும் இயல்பாக நடிப்பார்.

அப்படத்தில் வரும் மழை காட்சியில் அவர் ஒப்புக்கொண்டாரா மறுத்தாரா என்பதே தெரியாது. அந்த மாதிரி இயக்குநர் செறிவாக எடுத்திருப்பார். லட்சுமியும் மிக அற்புதமாக நடித்திருப்பார். படத்தில் ஒய்.ஜி.பார்த்தசாரதி அவ்வளவு முயற்சி எடுத்திருப்பார். ‘கங்கா டிபன் எடுத்துக்கிட்டு மாடிக்கு வந்துடு’ என்று கூப்பிடுவார். அந்தப் பெண்ணைப் படிக்கவைக்கிறவர். ஆனால் ஏதாவது சான்ஸ் கிடைக்காதா என்று அந்தப் பெண்ணிடம் முயற்சித்துக் கொண்டே இருப்பார். கையைப் பிடிப்பார். அவர் புண்படாத மாதிரி கையை விலக்கிக்கொள்வார் லட்சுமி. ஒவ்வொரு காட்சியிலும் லட்சுமியின் நடிப்பும், எடுக்கப் பட்டிருந்த காட்சிகளும் அவ்வளவு நன்றாக இருக்கும். இப்படியெல்லாம் செய்த ஒய்.ஜி. பார்த்தசாரதி... கங்கா பட்டம் பெற்றுவரும்போது ‘கங்கிராஜூலேசன்ஸ்’ என்று சொல்வார். நில்லுங்க மாமா... உங்களை நமஸ்காரம் பண்ணிக் கிறேன்  என்று சொல்லிவிட்டு... அவரை நிறுத்திவைத்து காலில் விழுந்து கும்பிடுவார். அவர் என்னவெல்லாம் தவறு செய்தார் என்று நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர் செய்த நல்ல காரியங்களுக்காக காலில் விழுவது என்ற அந்த விஷயம் வித்தியாசமானது. எழுத்தாளர் ஜெயகாந்தன், இயக்குநர் பீம்சிங், அதை நடித்த லெட்சுமி... மூன்று பேரையுமே கல்வெட்டில் பொறித்த காட்சி இது.

அந்தக் காட்சியில் லட்சுமியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முழு படத்திலும் அவருடைய நடிப்பைப் பாராட்டலாம். ரொம்பவும் உயரமும் அல்ல. ரொம்ப குள்ளமும் அல்ல. எந்தக் காலத்திலும் அவர் குண்டாக இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த உருவம் அவருடையது. அவருடைய கண்களில் கருணை வரும். கவர்ச்சி வரும். அது எதுவுமே மலினமானதாகத் தெரியாது. அதில் ஒரு தகுதி இருக்கும். எல்லாவிதங்களிலும் அவரிடம் ஒரு மரியாதை, கௌரவம், நடிப்புத் திறன் எல்லாமே இணைந்திருக்கின்றன. சிறை என்றொரு படம். அப்படி நடித்திருந்தார். எந்தப் படத்தில் என்ன ரோல் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடுவார். சேதுமாதவன் இயக்கிய சட்டைக் காரி என்ற மலையாளப் படத்தில் லட்சுமி நடித்தார். அது இந்தியில் ஜூலி என்று வந்தது. இப்படத்தில் கவர்ச்சி என்கிற வார்த்தையைத் தாண்டிய வேறொரு ஒரு வார்த்தையை அவரைச் சித்தரிக்க நாம் பயன்படுத்தவேண்டும். சிருங்கார ரசத்தை திரையில் காட்டிய நடிகைகளில் லட்சுமி மறக்கமுடியாதவர். அதேபோல அவருடைய குரல்.

நான் கேளடி கண்மணி படத்தின் மூலம் இயக்குநராக ஆகி, அடுத்த படத்தில் எப்படியாவது ஒரு ரோலில் அவரை நடிக்கவைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீ பாதி நான் பாதி படத்தில் கௌதமிக்கு அம்மாவாக அவர் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நாடக நடிகை பற்றிய கேரக்டர் அது. தொழில்முறையில் ஒரு நாடக நடிகையாக கௌதமியின் அம்மா இருப்பார். இன்னொருவரின் சின்ன வீடாக இருப்பார். அந்த கேரக்டரில் லட்சுமி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மறுபடியும் ஜெய்சங்கருடன் நடிக்கணும் என்று திட்டமிட்டிருந்தேன். அந்தப் படத்தில் ஜெய்சங்கரையும் வைத்திருந்தேன். ஆனால் கால்ஷீட் என மற்ற சில விஷயங்கள் ஒத்துவராததால் அவரால் நடிக்கமுடியவில்லை. அது எனக்கு ஒரு வருத்தமாகவே இருந்தது.  நேருக்கு நேர், ஆசை,  பூவெல்லாம் கேட்டுப் பார், அப்பு என தொடர்ந்து படங்கள் செய்யும்போது எதிலும் அவருக்கேற்ற கேரக்டர் அமையவில்லை. கடைசியில் ரிதம் படத்தில் பிராமணப் பெண்ணாக மடிசார் கட்டிக்கொண்டு நடித்திருப்பார். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரத் தை எனக்கு அவர் அதில் நடித்துக் கொடுத்தார்.

அறிவு தெரியக்கூடிய முகம். அதில் திமிரைக் கொண்டுவருவது மிகவும் சிரமம். கருணையும், அன்பும், திமிரும், அறிவும் காட்டக்கூடிய நடிகையாக அவர் தெரிகிறார். பலே பாண்டியாவில் வந்த சிவாஜிதான் தேவர் மகனில் வந்தவர். தேவர் மகனில் வந்த சிவாஜிதான் கௌரவத்தில் வந்தவர். அந்த அளவுக்கு மாறுபாடு காட்டியவர். முகபாவத்தில், நடிப்பில், நடையில் என மிகப்பெரும் வித்தியாசங்களைக் காட்டியவர் சிவாஜி. என்னைப் பொறுத்த வரைக்கும் பொம்பள சிவாஜி என்று லட்சுமியைச் சொல்வேன். சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு சின்ன ரோல் செய்திருந்தார். எதுவாக இருந்தால் என்ன நடிப்பில் ஒரு முழுமையை அவர் தந்துவிடுவார். கலெக்டராகவும் நடிப்பார். மூளையே இல்லாத முட்டாளாகவும் அவரால் நடிக்கமுடியும்.  நான் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது நிறைய பேரின் முதல் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் நடிப்பு என்பது... நடிப்பது அல்ல. அது ஒரு குணம் சார்ந்த செயல்பாடு. எந்தெந்தச் சூழலில் எப்படி நடந்துகொள்வீர்களோ அப்படி நடந்துகொள்வது மட்டும்தான் நடிப்பு. அதை உணர்ந்து செய்தவர் லட்சுமி.  வெள்ளித்திரையில் அவருக்கு இருந்த உயரமான பிம்பம் பிறகு ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியில் எவ்வளவோ பேருக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லக்கூடிய ஒரு பெண்ணாக எழுச்சி பெறுவதற்கு உதவியாக இருந்தது. 


தமிழ் சினிமா சந்தித்த கதாநாயகிகளில் மிகப்பெரும் இடம் லட்சுமிக்கு உண்டு.  எனக்கு அவரைப் பிடிக்கும் என்று சொல்வதே என்னைக் கௌரவப்படுத்திக்கொள்கிற விஷயமாகப் பார்க்கிறேன்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:42:59 AM11/10/11
to panb...@googlegroups.com

ஷோபா என்ற தேவதை...

பாலுமகேந்திரா | Issue Dated: அக்டோபர் 17, 2011

ஷோபா


ஷோபா பற்றி எழுத உட் கார்ந்த ஒவ்வொரு தடவையும், உணர்ச்சிவசப்பட்டு அழுதேனே தவிர ஒரு வரி எழுதமுடியவில்லை.
இன்று மறுபடியும் உட்காருகிறேன். ஞாபகங்கள் மீண்டும் கண்ணை நனைக்கின்றன. எழுந்து முகம் அலம்பிவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

தேவலோகத்திலிருந்து, பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்துபோன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது.? எதை எழுதுவது..?

அடுத்த வீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம்கொண்ட ஷோபா ஓர் அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும், தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்யேக கதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா...
குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசைக் கொண்டு சதா வியப்பும் பிரமிப்புமாகப் பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...

அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்தி, பின் பட்டென்று பறந்துபோன அந்த சோகத்தையா...
எதை? எதை எழுதுவது..?

மிக அடர்த்தியான உணர்வுகள், முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய்விடுகின்றன. நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் நமது தமிழ் நம்மை ‘அம்போ’ என்று விட்டு விலகிக்கொள்கிறது...
இந்த நிலையில், எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக்கொள்கிறேன்...
மழைக்கால காலைப் பொழுது. குளித்து, பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளை பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டி ருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் ஏதோ படித்துக்கொண் டிருந்தேன்...
அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி:
“மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது?
ஷோபா சொல்லியிருந்த பதில்:
“மற்றவர்கள் என்னைக் காமிரா, லைட்ஸ் மற்றும் பிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னை காமிரா, லைட்ஸ், பிலிம் இந்த மூன்றோடும் நிறைய அன்பையும், நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்...

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பான்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழவைத்தது...
தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒரு தடவைதான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதைதான் ஷோபா.

ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருப்பைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்துபோன ஒரு எரிநட்சத்திரம்.
அந்த தேவதையின் வரவையும், மறைவையும் அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்குச் சொல்லியிருந்தேன் ‘மூன்றாம் பிறை’ படம் மூலமாக.
மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே...

நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்... அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்!

ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன... இது உங்களுக்கு...
எனக்கு எல்லா இன்னல் களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்..

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:44:34 AM11/10/11
to panb...@googlegroups.com

சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்

சுகுமாரன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

ஸ்ரீவித்யா

 

நண்பரும் மலையாளக் கவிஞருமான பாலசந்திரன் சுள்ளிக்காடு 'சௌந்தர்ய லஹரி' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். 'தேவ சபை நர்த்தகியான நீ சாபத்தினால் பூமிக்கு வந்தாய்' என்று தொடங்கும் அந்தக் கவிதை, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பணம் செய்யப் பட்டது. வாசகர் களுக்கிடையில் அந்தக் கவிதை வெகுவாகப் பாராட்டப் பட்டது. இலக்கிய வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கவிதைக்கான முகாந்திரம் என்ன என்று கேட்ட போது ' இன்றைக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயதை எட்டியிருக்கும் சிலருக்காவது அவர்களுடைய பதின் பருவத்தில் ஸ்ரீவித்யா கனவுப் பதுமையாக இருந்திருப்பார். எனக்கு இருந்தார். நீயும் என் வயதுதானே? ஏன் உனக்கு இல்லையா?' என்று எதிர்க் கேள்விகளை எழுப்பினார். உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்க வில்லை.

பாலன் சொன்ன சிலரைப்போல என் விடலைப் பருவக் கனவுகளிலும் இருந்த பெண் பிம்பங்களில் ஒன்று ஸ்ரீ வித்யா. பள்ளிக் கூடத்துக்கு மட்டம் போட்டுப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று ஸ்ரீவித்யா நடித்த 'நூற்றுக்கு நூறு'. அதே வயதில் வீட்டு ஜன்னல் கதவின் உள் பக்கத்தில் சினிமாப் பத்திரிகை யிலிருந்து வெட்டியெடுத்த படம் ஒன்றை சோற்றுப் பருக்கையைத் தேய்த்து ஒட்டி வைத்திருந்தேன். கவுன் அணிந்த பெண்ணின் மார்பளவுப் புகைப்படம். வலப் பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கைகளை இறுகக் கட்டி மோனலிசாப் புன்னகையுடன் நிற்கும் ஸ்ரீவித்யாவின் படம். அதுபோன்ற இளமைத் தோற்றத்தில் ஸ்ரீவித்யாவின் படத்தைப் பின்னர் பார்க்கவில்லை. சில படங்களுக்குள்ளேயே அவருடைய உருவத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தென்பட்டது. என்னுடைய ஜன்னல் படம் எழுபத்தி ஒன்றிலோ எழுபத்தி இரண்டிலோ பத்திரிகையில் வெளியானது. அப்போது ஸ்ரீவித்யாவின் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது. நான்கு வருடங்கள் பிந்தி வந்த 'அபூர்வ ராகங்கள்' (1975) படத்தில் அவரை விடச் சில வருடங்களே இளையவரான ஜெயசுதாவுக்கு அம்மாவாகப் பாத்திரம் ஏற்றிருந்தார். மத்திய வயதுப் பாடகியான எம்.ஆர்.பைரவி பாத்திரத்தில் பொருந்தி நடிப்பதற்கு அன்று அவரளவு திறமைசாலிகள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவரது தோற்றம் அதைவிட முக்கியமான காரணம் என்று தோன்றியது. திரை உலகில் பெண்களுக்குத்தானே சீக்கிரம் வயதாகிறது. அதன் வெளிப்படையான உதாரணங்களில் ஒருவர் ஸ்ரீவித்யா.

கல்லூரி மாணவியாக 'நூற்றுக்கு நூறு' (1971) படத்தில் அறிமுகமான ஸ்ரீவித்யாவுக்குக் கிடைத்த இளமையான நாயகி பாத்திரங்கள் குறைவு. 'சொல்லத்தான் நினைக்கிறேன்' (1973), 'ஆறு புஷ்பங்கள் (1977)' போன்ற ஒரு சில படங்களில்தான் அவருடைய வயதும் பாத்திரத்தின் வயதும் ஒத்துப் போயின. பின்னர் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பான்மையும் அவரது வயதுக்கு மீறியவை. அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி, மாமியார், பாத்திரங்கள்தாம் அவருக்காகத் தமிழில் காத்திருந்தன. கொஞ்சம் முயன்றிருந்தால் சினிமா வணிகத்துக்குத் தேவையான தகுதிகளுடன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க முடியும். பொலிவான தோற்றத்தை பராமரித்திருந் திருக்க முடியும். மேலும் சில ஆண்டுகள் இளம் நாயகியாகத் தொடர்ந்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லைபோல. எப்படி இருக்கிறாரோ அப்படியான தோற்றத்தில் நடிப்பதையே தேர்ந்தெடுத்தார். இளம் நாயகியாக இருப்பதால் திரையுலகில் சந்திக்க நேரும் தொல்லை களையும் எப்போது நட்சத்திர ஜொலிப்பு மங்கி விடுமோ என்ற பயத்தையும் சமாளிக்கவே மேற்சொன்ன பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும் தோன்றுகிறது. சோகத்தின் அத்தர் லேசாகப் பூசிய வட்ட முகம், சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள், நடனத்தில் பயின்ற உடலசைவுகள். இவை அவருடைய நடிப்புக் கருவிகளாயின.ஸ்ரீவித்யா நடிப்பின் நுட்பங் களைக் கற்றுக் கொண்டது நாட்டியத்திலிருந்து என்று யூகிக்கலாம்..

கவிஞன் இல்லாமல் கவிதையை வாசித்து விடமுடியும். ஓவியன் இல்லாமல் ஓவியத்தைப் பார்த்து விட முடியும். பாடகன் இல்லாமல் இசையைக் கேட்டு விட முடியும். ஆனால் ஆடுபவர் இல்லாமல் நடனத்தையோ நடிப்பவர் இல்லாமல் நடிப்பையோ பார்க்க முடியாது. இந்த நுட்பத்திலிருந்துதான் ஸ்ரீவித்யாவின் நடிப்பை அணுக முடியும்.நாட்டியத்தில் ஆடுபவரின் தோற்றம் மறைந்து ஆட்டம் மட்டுமே புலனாகிறது. இந்த ரகசியம் வெளிப்படுவதை ஸ்ரீவித்யாவின் நடிப்பில் காண முடியும். அப்படிக் காண உதவும் பாத்திரங்கள் தமிழில் அவருக்கு அரிதாகவே வாய்த்தன. அவற்றையும் நாட்டியப் பயிற்சியில் பெற்ற பாடங்கள் மூலம் செழுமைப் படுத்தினார். சின்ன அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட பாத்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதை வெளிப்படுத்தினார்.

பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு அம்மா வேடம். படம் முழுவதும் பாசமுள்ள தாயாக வந்து உருகுவதைத் தவிர எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் உச்ச கட்டக் காட்சியில் மகன் காதலித்த பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது பெண்ணின் தாய் மகளிடம் சொல்லிக் கொண்டு போகச் சொல்லுவார். 'அவளை என் கிட்ட கொடுத்துடுங்க. கண்ணுக்கு கண்ணா வெச்சுப் பார்த்துக்கிறேன்' என்று பதில் சொல்வார் அம்மாவான ஸ்ரீவித்யா. வசனத்தை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் அவருடைய உடல்மொழியும் விழியசைவுகளும். கவனமாகப் பார்த்தால் அந்தக் காட்சியில் அதிகமான குளோஸ் அப் ஷாட்டுகள் வைக்கப் பட்டிருப்பதும் அவருக்குத்தான் என்பது புரியும். நாட்டியத்தில் சிறு அபிநயத்தின் மூலம் பாத்திரத் தின் இயல்பை வெளிப்படுத்துகிற இந்த நுட்பத்தை ஸ்ரீவித்யா திரைநடிப்பில் தனதாக்கிக் கொண்டார்.

அபூர்வராகங்களின் இந்தி வடிவம் 'ஏக் நை பஹேலி' (1984) என்று வெளியானது. தமிழில் ஸ்ரீவித்யா ஏற்றிருந்த பைரவி பாத்திரத்தில் ஹேமமாலினி நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சி. தீவிரவாதி இளைஞன் பிரசன்னாவை (கமலஹாசன்) மனம் மாறச் செய்வதற்காகத் தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறாள் பைரவி. இசை உலவும் அந்த வீட்டில் பிரசன்னா மெல்லமெல்ல மனம் மாறுகிறான். ஒரு மிருதங்கத்தை எடுத்து லய சுத்தமாக வாசிக்கிறான். குளியல் அறையில் நீராடிக் கொண்டிருக்கும் பைரவி அவன் வாசிக்கும் தாளத் கட்டுக்குப் பொருத்தமாக ஸ்வரங்களை ஆலாபனை செய்கிறாள். இலக்கணம் பிசகாத வாசிப்பால் ஈர்க்கப்பட்டு ஈர உடையுடன் வந்து ஆச்சரியப்படுகிறாள். பின்னர் உடை மாற்றி வந்து அவனைப் பாராட்டுவாள். இரண்டு படங்கள். இரண்டிலும் அதே காட்சி. அதே இயக்குநர். கே.பாலசந்தர். அதே கதாநாயகன் .கமலஹாசன். இரண்டிலும் பைரவியாக நடித்தவர்கள் நாட்டியம் தெரிந்தவர்கள். ஸ்ரீவித்யாவும் ஹேமமாலினியும். எனினும் தமிழ்ப் படக் காட்சியிலிருந்த தீவிரம் இந்தியில் குறைவாகவே தென்பட்டது. காரணம், ஸ்ரீவித்யா என்று தோன்றுகிறது. இந்த நுட்பம்தான் ஸ்ரீவித்யாவைத் தமிழ்ச் சினிமாவில் புறக்கணிக்க முடியாத நடிகையாக்கியது. நீண்ட காலம் நிலைத்திருக்கவும் உதவியது. அதை இப்படிச் சொல்லலாம்: ஸ்ரீ வித்யா ஒரு ஸ்டார் அல்ல; பெர்ஃபார்மர். குறைந்தபட்ச சலனம் மூலம் பாத்திரத்தை முழுக்கவும் வெளிப்படுத்தும் திறமையைக் காட்டக் கூடிய தமிழ் வாய்ப்புகள் சொற்ப மாகவே இருந்திருக்கின்றன. தமிழில் நூற்றுச் சொச்சம் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை இரு கை விரலளவு கூடத் தேறாது. பதிலாக தனது திறமையை வெளிக்காட்ட இசைவானதாக மலையாளத் திரையுலகை ஸ்ரீவித்யா தேர்ந்தெடுத்தார். மொத்தம் நடித்த கிட்டத் தட்ட முந்நூறு படங்களில் சரிபாதிக்குமேல் மலையாளப் படங்கள் என்பது அவரது தேர்வை நியாயப்படுத்துகின்றன.

ஸ்ரீவித்யாவின் திரையுலக வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த நான்கு கட்டங்களும் அவருடைய தனி வாழ்க்கையு டனும் தொடர்பு கொண்டவை.சரியாகச் சொன்னால் அவரது தனி வாழ்க்கைப் பிரச்சனைகள் தாம் இந்தக் கட்டங்களையே உருவாக்கின. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் கட்டம். கதாநாயகியாக இரண்டாம் கட்டம். குணச் சித்திர நடிகையாக மூன்றாம் கட்டம். தொலைக் காட்சி நடிப்பில் ஈடுபட்ட நான்காம் கட்டம்.

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்த குமாரியின் மகளாகப் பிறந்தவர் மீனாட்சி. குழந்தையைப் பார்த்த ஸ்ரீவித்யா உபாசகர் ஒருவர் அழைத்த பெயர்தான் பின்னர் அவருடைய அடையாளமானது. தந்தை விகடம் கிருஷ்ண மூர்த்தி அந்தக் கால ஹாஸ்ய நடிகர். ஸ்ரீவித்யாவின் குழந்தைப் பருவத்திலேயே நோய் காரணமாக வீட்டுக்குள் ஒடுங்கி யவர். குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு எம்.எல்.விக்கு வந்து சேர்ந்தது. பகலில் ரிக்கார்டிங். மாலையில் கச்சேரி என்று சக்கரச் சுழற்சியாக வாழ்ந்தார். ஸ்ரீவித்யாவும் சகோதரர் சங்கரராமனும் தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டனர். பத்தா வது வயதில் தாத்தா மறைந்தார். தனிமையில் விடப்பட்டார். அந்த தனிமை அவரை மரணம்வரை பின்தொடர்ந்தது. குடும்பத்தில் நிலவிய நிதிப் பிரச்சனைகள் பெற்றோரின் உறவில் விரிசலை ஏற்படுத்தின. ஸ்ரீவித்யாவின் இளம் பருவம் பயத்தில் கழிந்தது. இசையும் நாட்டியமும் கற்றுக் கொண்டது தான் பயத்தை விரட்ட உதவின.

பதின் மூன்றாம் வயதில் குழந்தை நட்சத்திரமாக 'திருவருட் செல்வர்' (1966) படத்தில் அறிமுகமானார். ஏறத்தாழ அதை யொட்டியே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.படம் - 'குமார சம்பவம்' (1969). இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலசந்தரின் அறிமுக நாயகியாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நடித்தார். ஆனால் அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல; நடனத்தில்தான்.அந்தக் கட்டத்தில் திருமண வாய்ப்பும் தகைந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த எம்.எல்.வி. மூன்று ஆண்டுக ளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு தட்டிப் போனது. 'நடிக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்த மகள் முன்னால் வீட்டுக் கடன் பத்திரங்களைப் போட்டார் எம்.எல்.வி. காமிரா முன் நிற்கத் தயாரானார் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தன. 1973 இல் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'செண்ட' மூலம் மலையாளத் திலும் 'அபூர்வ ராகங்கள்' மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார். தனி வாழ்க்கையிலும் 'அபூர்வ ராகங்கள்' அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதன் கதா நாயகனும் நாயகியும் பரஸ்பரம் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. நாயகன் நாயகி இருவரது குடும்பமும் சம்மதமும் தெரிவித்தன. நாயகனுக்குத் தன்னிடம் இருந்தது போலவே வேறொரு பெண் மீதும் காதல் இருப்பது தெரிந்ததும் சோர்ந்து போனார். அவரே இடக்கரடக்கல் நிமித்தம் ஆங்கிலத்தில் சொன்ன வாக்கியத்தை இப்படி மொழிபெயர்க்கலாம்: ' இன்னொரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'

காதல் நிறைவேறாத ஆற்றாமையில் வாழ்க்கையில் பெருந் தவறைச் செய்ததாகப் பின்னர் குறிப்பிட்டார் ஸ்ரீவித்யா. 'தீக்கனல்' (1976) மலையாளப் படத்தில் நடிக்கும்போது அதன் துணைத் தயாரிப்பாளரும் துணை இயக்குநருமான ஜார்ஜ் தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். கிறித்துவ மதத்துக்கு மாறும் அளவுக்குத் தீவிரமாக இருந்த காதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர் விரும்பியது அமைதியான குடும்ப வாழ்க்கையை. ஆனால் கணவரின் பணத்தாசை அதைத் தடை செய்தது. உறவில் பூசல்கள் தொடங்கி ஒன்பதாவது ஆண்டு விவாகரத்தில் முற்றுப் பெற்றது. அதுவரை சம்பாதித்த எல்லாவற்றையும் ஸ்ரீவித்யா இழந்தார். வீடு, வங்கிக் கையிருப்பு, சொத்துகள் எல்லாம் பறிபோயின. அவற்றை மீட்கப் போராடியதில் அவருடைய தனி வாழ்க்கை நரகமானது. இயக்குநர் ஆர்.சி.சக்தியும் மறைந்த நடிகர் செந்தாமரையும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீள அவருக்குத் துணையாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் புதிய தலைமுறைக் கதாநாயகிகள் அறிமுக மானார்கள். ஸ்ரீவித்யா குணச் சித்திரப் பாத்திரங்க ளுக்கு மாறினார். தமிழில் அவருக்குக் கிடைத்த குணச்சித்திரப் பாத்திரங்கள் ஒரே வார்ப்பில் அமைந்தவை. இந்தப் பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்கக் கூடும். அவற்றுக்குத் தொழில்முறை நியாயத்தைச் செய்தார். நடிகையாக வாழ்ந்த காலம் முழுவதும் அவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்று தமிழ்த் திரையுலகில் அமைந்த பாத்திரங்களாக சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வராகங்கள், மதுரகீதம் (1977), புன்னகை மன்னன்(1986), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் (2000) படங்களைத்தான் சொல்ல முடியும்.

தனது திறமைக்கான இடம் மலையாள சினிமாவில் இருப்பதை ஸ்ரீவித்யா இந்த மூன்றாம் கட்டத்தில் உணர்ந்தார். எண்பதுகளில் மலையாளத்தில் உருவான இடைநிலைப் படங்கள் அவருக்கான வாய்ப்பை விசாலமாக்கின. எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரது திரைக்கதையிலும் (இடவழியிலே பூச்ச மிண்டா பூச்ச 1979, வில்கானுண்டு ஸ்வப்னங்ங்கள் (1980) அன்றைய முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் ஸ்ரீவித்யா தவிர்க்க இயலாத வரானார். ஸ்ரீவித்யா என்ற பெர்ஃபார்மர் முழுப் பிரகாசத்துடன் தெரியவந்தது மலையாளப் படங்களில்தான்.'காற்றத்தே கிளிக் கூடு' ( 1983 - பரதன்), ஆதாமின்டெ வாரியெல்லு (1983), இரைகள் (1985 - கே.ஜி.ஜார்ஜ்), திங்களாழ்ச்ச நல்ல திவசம் ( 1985 - பத்மராஜன்) , ஸ்வாதி திருநாள் (1987), தெய்வத்தின்டெ விக்ருதிகள் (1992 - லெனின் ராஜேந்திரன்), ரசனா ( 1983 - மோகன்), கஸல், என்டெ சூர்ய புத்ரிக்கு ( கமல்) பவித்ரம் (1994 - டி.கே.ராஜீவ் குமார்) ஆகிய படங்களில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பரவசப் படுத்துவது. தமிழ்ப் படங்களில் கொஞ்சம் உரத்த நடிப்பை வெளிப் படுத்திய அவரே இந்த மலையாளப் படங்களில் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பாத்திரங்களை தன் நடிப்பால் ஜீவனுள்ளதாக மாற்றினார். 'இரைகளில் கிறித்தவப் பெண், கஸலில் முஸ்லிம், பவித்ரத்தில் திருமண வயதில் மகனிருக்க கர்ப்பிணியாகும் தாய், ஆதாமின் வாரியெல்லில் பணக்காரக் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறப் போராடித் தற்கொலை செய்து கொள்ளும் மனைவி ஆகிய பாத்திரங்களில் அவரைத் தவிர வேறு யாரும் சோபித்திருக்க முடியாது என்பது என் ரசிக விசுவாசம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எம்.எல்.வி. காலமானார். ஸ்ரீவித்யாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் போனது. அந்தக் கட்டத்தில் அவருக்கு ஆறுதலாக அமைந்தது நீண்ட காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததுதான். உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக் களை மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முன்னாள் கனவுக் கன்னிகளாக இருந்த நடிகைகள் பலரும் அம்மாக்க ளாகவும் அண்ணிகளாகவும் மறு பிறவியெடுத்தபோது ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்குத் திரும்பினார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக் கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும் படியானவை குறைவு.

புதிய நூற்றாண்டில் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கு நடிகை சாரதாவுக்குப் பிறகு மலையாளக் கலாச்சார உலகம் சொந்தம் பாராட்டியது தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவிடம்தான் என்று படுகிறது. ஒரு நடிகையாக அவரை மதிப்பிட அவர் நடித்த மலையாளப் படங்கள்தான் துணைவரக் கூடும். தமிழில் செய்ததை விட வித்தியாசமான பாத்திரங்கள் அவற்றில்தான் கிடைத்தன. இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை சிறந்த குணச்சித்திர நடிகைகான விருதையும் பெற்றார். எல்லா வற்றுக்கும் மேலாக அவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

ஸ்ரீவித்யாவை ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழின் ஆசிரியர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது நான் பேட்டி காண விரும்பிய பிரபலங்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேலிருந்த 'நல்லெண்ணம்' காரணமாக அவர் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு நெருங்கிய திரைப் பிரமுகர் ஒருவரின் சிபாரிசுக்கு இசைந்து அரை மனதுடன் சம்மதித்தார். ஆழ்வார் பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்த முதல் பத்து நிமிடங்கள் ஒரு காலத்திய கனவு தேவதையை நேரில் பார்ப்பதில் விடலைத்தனமான அசட்டுணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையில் இருந்தேன். எப்படியாவது என்னை சீக்கிரம் வழியனுப்பி வைத்துவிடும் எண்ணத்தில் அவர் இருந்தார். சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு அவர் நடித்த படங்களைப் பற்றி. குறிப்பாக மலையாளப் படங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அந்தப் பெரிய கண்களில் தோழமை சிரித்தது. முக்கால் மணி நேர உரையாடலில் அவருடைய மனம் கிட்டத்தட்டக் கொட்டப்பட்டிருந்தது. தண்டாயுத பாணிப் பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்ட நாட்கள், முறையாகப் பயிலா விட்டாலும் ரத்தத்தில் இசை ஓடுவதை உணர்ந்த கணம், முதல் காதல், இரண்டாவது அவசரக் காதல், அதன் விபரீதங்கள். அம்மா எம்.எல்வியின் பாட்டு, மலையாள சினிமா, தமிழ் சினிமா, சொந்த வாழ்வு என்று எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விடை பெற்ற போது பெருமிதமாக இருந்தது. பத்திரிகையாளனின் வெற்றிப் பூரிப்பு இருந்தது. இவ்வளவு பட்டவர்த்தனமான நேர்காணலை வெளியிட முடியுமா என்ற தயக்கமும் இருந்தது. மறுநாள் நேர்காணலைத் தாளில் எழுதத் தொடங்கிய சற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு. எதிர்பார்த்தது போலவே ஸ்ரீவித்யா. நேர்காணலை வெளியிட வேண்டா மென்று கேட்டுக் கொண்டார். அது வெளியானால் பலரும் தர்மசங்கடப்படுவார்கள் என்றார். தேவதையின் வேண்டுகோளை எப்படி மீற? பேட்டி வெளியாகவில்லை. சில வருடங் களுக்குப் பிறகு அதே தகவல்களை வேறொரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருந்தார். சொந்த வாழ்க்கையின் கசப்புகளை புன்னகையுடனும் சிரிப்புடனும் யாரையும் குற்றம் சாட்டாமல் சொன்ன விதம் அவரை மேலும் மதிப்புக்குரியவராக்கியது.

மலையாளத் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் ஸ்ரீவித்யாவை மீண்டும் சந்திக்க வாய்த்தது. பத்திரிகையாளர் யூனியன் நடத்தும் கருத்தரங்கத்துக்கு அழைப்பதற்காகச் சென்றிருந்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டபோது பழைய பேட்டியை நினைவுபடுத்தினேன். என்னை வெளியிட வேண்டாம் என்று தடுத்த அதே தகவல்களை தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லியிருப்பதை ஆதங்கத்துடன் சொன்னேன். 'அன்றைக்கு வேண்டாமென்று தோன்றியது. இப்போது பேசலாம் என்று பட்டது. அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்குப் பக்குவம் கூடியிருக்கிறதில்லையா? ஒவ்வொரு அனுபவத் திலிருந்தும் பக்குவமடையவில்லை என்றால் அப்புறம் நாமென்ன மனிதர்கள்?' என்றார். அந்த பதில் என்னை வெட்கமடையச் செய்தது. வருவதாக ஒப்புக் கொண்டிருந்தும் அவர் கருத்தரங்கத்துக்கு வரவில்லை. காரணம் உடல் நலமின்மை என்று தெரிவிக்கப் பட்டது. உண்மையில் அந்தச் சமயத்தில்தான் அவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரைஅதை ரகசியமாகவே வைத்திருந்தார். உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்துவம் காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்து நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.

கடைசியாக அவரைச் சந்தித்தது 'வேனல் மழ' என்ற தொலைக்காட்சித் தொடரின் பூஜை வேளையில். நான் பணியாற்றிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த தொடர். அதில் மையப் பாத்திரம் ஸ்ரீவித்யா. அந்தத் தொலைக்காட்சியில் அதுவரை ஒளிபரப்பான தொடர்களில் அசட்டுத் தனமில்லாத தொடர் அதுதான். நலம் விசாரிப்புடன் முடிந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரைப் பார்த்தது திருவனந்தபுரம் வி.ஜே. டி.ஹாலின் மையத்தில் திரளான மக்கள் கூட்டத்தின் நடுவில் உயரமான மேடைமேல் வைத்திருந்த கண்ணாடிப் பேழைக்குள். யாரோ ஒருவர் கூடையிலிருந்து ரோஜா இதழ்களை அள்ளிக் கையில் திணித்தார். அதைப் பேழைமேல் தூவியபோது எந்த நொடியும் 'ஷாட் ஓகே' என்ற குரல் வரும். விளக்குகள் மங்கும். பேழைக்குள்ளிருந்து எழுந்து வருவார் என்று தோன்றியது.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:45:35 AM11/10/11
to panb...@googlegroups.com

பேசும் பொற்சித்திரம்

பாஸ்கர்சக்தி | Issue Dated: அக்டோபர் 17, 2011

அமலா


எண்பதுகளின் இறுதியில் ரேவதி, நதியா, அமலா ஆகிய மூவரும்தான் தமிழ் இளைய சமூகத்தை மிகவும் ஈர்த்தவர்கள். இளையராஜாவின் பொற்கால இசை, கமல் & ரஜினியின் உச்சமான திரைப்படங்கள், சத்யராஜின் புதுவிதமான நடிப்பு, மணிரத்னத்தின் வருகை என்று தமிழ் சினிமா அமோகமாக இருந்தது. அப்போதெல்லாம் டி.ராஜேந்தரின் படம் ரிலீஸ் ஆனால் மாணவர்களாகிய நாங்கள் உற்சாகமாகக் கிளம்பிவிடுவோம்.ஏகப்பட்ட பாட்டுகளும், செட்டுகளும் சவடால் வசனங்களுமாக அவரது திரைப்படம் கல கல என்று இருக்கும். அப்படித்தான் மைதிலி என்னைக் காதலி திரைப்படத்துக்குப் போனோம். சின்னப் பெண் போன்ற தோற்றமும் குழந்தை முகமுமாக அமலா அதில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் 'நானும் உந்தன் உறவை' என்ற பாடலுக்கு ஏகப்பட்ட கத்திக்குத்துகளுடன் டி.ராஜேந்தர் பாடிக்கொண்டிருக்க அமலா ஆடிக்கொண்டிருக்க தியேட்டரில் பறந்த விசில் சத்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

அதன் பின் அமலா நிறைய ஹிட் படங்களில் நடித்தார். அதில் வேலைக்காரன், அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களை விழுந்து விழுந்து பார்த்தோம். வேலைக்காரனில் அமலா அழகாக இருப்பதைத் தவிர பெரிதாக நடித்து விடவில்லை. ஆனால் அக்னி நட்சத்திரத்தில் ஒரு துடுக்கான இளம்பெண்ணின் பாத்திரம். இவ்வகையான துணிச்சலான இளம்பெண் பாத்திரம் பார்வையாளர்கள் மத்தியில் வெகு சுலபமாக எடுபட்டுவிடும். பூவே பூச்சூடவா நதியா தொடங்கி சண்டைக்கோழி மீரா ஜாஸ்மின் வரை துடுக்கான பெண்கள் ரசிகர்களைக் கவர்வதற்கான காரணம், அதன் சமூக உளவியல் பற்றி யோசித்தால் சுவாரசியமாயிருக்கும். திரையில் இப்படி துடுக்கான பெண்களை ரசிக்கும் மாணவர்கள் கல்லூரியில் எந்தப் பெண்ணாவது இந்தச் சாயலில் இருந்தால் அவளைத் துளியும் சகித்தது கிடையாது.இன்று ஒருவேளை அது மாறியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அக்னி நட்சத்திரம் படத்தில் அமலா தோழிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு சிகரெட் பிடித்து இருமினார்.. அஞ்சலி... இந்த ஒரு எலி ரெண்டு எலி மூணு எலி இல்லை? அது மாதிரி அஞ்சலி என்று அழகாகக் கொஞ்சிப் பேசினார்...அதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ‘தள்ளிக்கிட்டு வந்திட்டியா? என்று பிரபுவிடம் அப்பாவிபோல் முகம் வைத்துக் கொண்டு கேட்பதை எவராலும் ரசிக்காமல் இருக்க முடியாது.தொடர்ந்து நிறையத் திரைப்படங்களில் அமலாவைப் பார்க்க முடிந்தது. உதயம் என்ற பெயரில் வெளியான தெலுங்கு டப்பிங் படம் சக்கைப் போடு போட்டது. அதில் நாகார்ஜுனனின் ஜோடியாக வந்தார். கொடி பறக்குது படத்தில் ரஜினியின் ஜோடி என்று பல திரைப்படங்களில் அவர் வந்தார். தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் துரதிர்ஷ்டம் பல படங்களில் அவர்கள் வந்து போகும் வேலையை மட்டுமே செய்கிறார்கள் என்பதே. திரையில் விரியும் உலகம் ஆண்களின் உலகம். செய்யப்படும் கதையும் காட்சிகளும் ஆண்களின் உலகையும், ஆண்களின் வாழ்வையுமே பிரதானமாகச் சித்தரிக்கின்றன. எனவே பெண்கள் எப்போதும் அதில் துணைப் பாத்திரங்களாகவே வந்துபோகிற நிலைமை. அமலாவின் திறமையும் அப்படி அவ்வப்போது கீற்றுப் போல் வந்து போனதைப் பார்க்க முடிந்தது. சத்யா திரைப்படத்தில் கமலுக்கும் அமலாவுக்குமான காதல் காட்சிகள் கவிதையாய் அமைந்தவை. ‘வளையோசை கல கல’ எனும் பாடலை இப்போது டிவியில் பார்த்தாலும் நின்று கவனிக்கத் தோன்றும். அந்தப் பாடல் காட்சியில் கமல் மற்றும் அமலாவுக்கிடையேயான உடல் மொழி மற்றும் முகபாவங்கள் அருமையானவை. பேசும் படம் என்கிற மௌனத்திரைப்படத்திலும் அமலா கமலுடன் நடித்தார். வசனம் ஏதுமின்றி அருமையான பாவங்களை அதில் வெளிப்படுத்தியிருப்பார். வேதம் புதிது திரைப்படத்தில் ஒரு பிராமணப் பெண்ணின் பாத்திரம். அமலாவின் முகலட்சணம் அதற்கு நூறு சதவிகிதம் பொருந்தியிருந்தது.

அமலாவின் கண்கள் அழகானவை. மெல்லத் திறந்தது கதவு படத்தில் அவர் புதைகுழியில் மூழ்கிச் சாகும்போது கடைசியாக மணலுக்குள் மறையும் அந்தக் கண்களும் அதன் துயர வெளிப்பாடும் ரசிகர்களைக் கலங்கவைப்பவை. அவருக்கு இயல்பாக அமைந்த குழந்தைத்தனமான முகமும் பேச்சும் அவரைத் தொடர்ந்து ரசிக்கவைத்தன.

அமலா தன் ஆற்றலை ஓரளவிற்கு முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு ஒரு திரைப்படத்தில் அவருக்குக் கிடைத்தது. ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான கற்பூர முல்லை என்ற திரைப்படம். எனக்கு மிகவும் பிடித்த படம் அது. பல முறை அந்தப் படத்தை நான் பார்த்தேன். தனது தாயால் குழந்தைப் பருவத்திலேயே புறக்கணிப்பட்டு பின், தனது அடையாளத்தை நிரூபிப்பதற்காக தன் தாயுடன் போராடும் பெண்ணாக அதில் அமலா நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் சற்று ஒல்லியாக இருந்தார். ஆனால் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. ஒரு குறும்பான கல்லூரி மாணவியாக இருந்து  பின், தனது பிறப்பு பற்றிய உண்மைகளைத் தேடிக் கண்டு அடைகிற பெண்ணாக , புறக்கணிப்பின் வலியை வெகு சிறப்பாக பல காட்சிகளில் அமலா வெளிப்படுத்தினார். அவரது அம்மாவாக நடித்தவர் ஸ்ரீவித்யா...இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நல்ல திரைப்படம் கற்பூரமுல்லை. அதன் கதை ஒரு தாயையும் மகளையும் அவர்களுக்கிடையேயான உணர்ச்சிப் போராட்டங்களையும் மையப்படுத்தி இருந்த காரணத்தினால்தான் அமலா அதில் சோபிக்க முடிந்தது.வருத்தமான உண்மை என்னவென்றால், பெரும்பாலான திறமைசாலி நடிகைகளுக்கு அப்படிப்பட்ட படம் ஏதும் அமையாவிட்டால், கடைசிவரை அவர்கள் டூயட்டுக்கு மட்டுமே ஆடி விட்டு, அவர்களது திறமைகள் இனம் காணப்படாமலேயே கேரியர் முடிந்துபோகும். அமலாவுக்கு ஒரு வாய்ப்பாக கற்பூர முல்லை அமைந்தது. ஆனால் அதில் சிறப்பாக நடித்த அவர் திருமணம் செய்துகொண்டுவிட்டார். கற்பூர முல்லைக்குப் பின் எந்தப் படமும் நடிக்கவில்லை.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:46:13 AM11/10/11
to panb...@googlegroups.com

தமிழ் வசீகரம்

யுகபாரதி | Issue Dated: அக்டோபர் 17, 2011

ராதா

ஒரு காலம்வரை தீவிரமாகவும் அதி தீவிரமாகவும் ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகைகளை நினைவுகூர்வது நல்ல விஷயம். வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் நம்முடைய நினைவு அடுக்குகளில் பதிந்துபோன காட்சிகளை அபிப்ராயங்களை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடிவதில்லை. நம்மோடு பழகிய அவர் இப்போது என்ன செய்கிறார், அவருக்கு எத்தனை குழந்தைகள், அவர் ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தாரே, இன்னின்ன காரியங்களில் அவர் ஈடுபாடு காட்டுவாரா, அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என சதா யாரிடமாவது யாரைப் பற்றியாவது விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.அது வெறும் விசாரணை மட்டுமல்ல; இன்றுவரை குறிப்பிட்ட நபர்மீது நாம் வைத்திருக்கும் அன்பு. அந்த அன்பே நம்மை ஈரமுடைய மனிதனாகவும் இயல்பான சிந்தனைஉடையவனாகவும் வைத்திருக்கிறது.

இரண்டு பேர் வெகுநாட்களுக்குப் பிறகு எதேச்சையாகச் சந்திக்கும் போது பழைய நண்பர்களைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுபோலவே, பழைய திரைப்படங்களையும் பழைய திரையிசைப் பாடல்களையும் பேசாமல் இருப்பதில்லை.அது யாவும் வளரிளம் பருவத்தின் வரப்பிரசாதம். என்னுடைய பதின்பருவம் முழுக்க இளையராஜாவே ஆக்கிரமித்திருந்தார். சனி, ஞாயிறுகள் அவருடைய பாடல்களைக் கேட்பதற்கு இயற்கை வழங்கிய கொடை நாள்கள் என நினைத்துக்கொள்வேன். அப்போது இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாயிருந்த கே.எஸ்.ராஜாவும் ராஜேஸ்வரி சண்முகம் அம்மாவும் ஒலிபரப்பும் பாடல்களுக்கு இடையிடையே சொல்லும் தகவல்களும் பாடல்களுக்கு இணையான பிரமிப்பை ஏற்படுத்தும்.  அதைவிட அவர்கள் இருவரின் தமிழ் உச்சரிப்பு. ஓசையும் அழகும் இயைந்த ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் என்னும் கர்வத்தை அவர்களிருவரும் உண்டாக்குவார்கள். முதலில் பாடல்களின் வாயிலாகவே சினிமா எனக்குள் புகுந்தது. நாளடைவில் நான் விரும்பும் பாடல்களைத் தாங்கிய திரைப்படமே சிறந்த திரைப்படம் என்பதாக நம்பத் தொடங்கினேன். சிறந்த பாடலை வாங்கும் ஓர் இயக்குநரே சிறந்த திரைப்படத்தை மக்களுக்கு வழங்கமுடியும் என விவாதம்கூட செய்திருக்கிறேன். என் விருப்பத்துக்குரிய பெரும்பாலான பாடல்களில் நடிகை ராதா இடம்பெற்றிருக்கிறார். ராதாவால் பாடல்களைப் பிடித்ததா... இல்லை பாடல்களால் ராதாவைப் பிடித்ததா என்பது இன்றுவரை நான் விளங்கிக் கொள்ளாத புதிர்களில் ஒன்று.எதுவாயிருந்தாலும் பிடித்ததுதானே முக்கியம்.

இளையராஜாவின் பாடல்களில் நடிகை ராதாவும் இன்னபிற நடிகைகளும் அழகாகவே தெரிவார் கள். ஆனால், எல்லா நடிகை களையும்விட ராதாவே அசல் தமிழ்ப்பெண்ணின் சாயலை உடையவராகத் தோன்றுவார். அவர் மலையாளப்பெண் என்பதும் நடிகை அம்பிகாவின் தங்கை என்பதும் பின்னால் தெரிந்து கொண்ட தகவல். ராதாவும் அம்பிகாவும் இடதும் வலதுமாய் நிற்க நடுவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அமர்ந்திருக்கும் ஒரு கலர்ப்பட காலண்டர் அந்த காலத்தில் வெகு பிரசித்தம். எம்.ஜி.ஆர் அபிமானிகள் அத்தனை பேர் வீட்டிலும் அந்த காலண்டர் வரவேற்பறையை அலங்கரிக்கும். எம்.ஜி.ஆருக்காக அல்லாமல் ராதாவுக்காக அந்த காலண்டரை வீட்டில் மாட்டப்போக அப்பாவிடம் வாங்கிய வசையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அப்பாவுக்கு எம்.ஜி. ஆரின் அரசியல்மீது எதிர் விமர்சனம் இருந்த காலம் அது.

அம்மன் கோவில் கிழக்காலே என்றொரு திரைப்படம். அதிலுள்ள பாடல்களை இன்றைக்குக் கேட்டாலும் ராதாவின் பாந்தமான முக பாவனைகளும் விஜயகாந்த் மீது அவர் பொழிந்த அளவுகடந்த காதல் பார்வைகளும் நினைவுக்கு வருகின்றன. கழுத்துச் சங்கிலியை பல்லிடுக்கில் வைத்துக்கொண்டு ஒரு சின்ன சிணுங்கலோடு அவர் பார்க்கும் பார்வை. ‘உன் பார்வையில் ஓராயிரம் கவிதைநான் எழுதுவேன் காற்றில் நானே’- பாடலில் மெய்யாகவே ராதாவின் பார்வை எனக்குள் பல கவிதைகளை எழுதின. ‘பூவ எடுத்து’ என்றொரு பாடலில் கண்ணாடி வள, முன்னாடி விழ என்றொரு வாக்கியம். அதுயென்ன கண்ணாடி வள, முன்னாடி விழ என்று எனக்குப் புரியவில்லை. உடனே, என்னுடைய தமிழாசிரியர் புலவர்.கோ. நாகேந்திரனிடம் போய் விளக்கம் கேட்டேன். அவருக்கு அதை முழுமையாக விளக்க சங்கடமாயிருந்தது. பெண்களுக்கு காதல் வந்தால் தேகம் இளைத்துவிடும். இளைத்ததன் விளைவாக கைவளையல்கள் கழன்று கீழேவிழும். அதைத்தான் பசலைநோய் என்று இலக்கியத்தில் கூறுவார்கள் என்றெல்லாம் அவர் சொல்வதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார். பதினைந்து வயதில் ஒருவனுக்கு இதெல்லாம் தேவையில்லாத கேள்வி என்று அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவருக்கு சங்கடமாயிருந்தாலும் எனக்கு விளங்கவைக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். ஆண்களுக்கு பசலை நோய் வருமா என்று கேட்காமல் இருந்தது அவர் அதிர்ஷ்டம். அவ்வயதில் எனக்குள் கிளர்ந்த உணர்வுகள் எதுவுமே மறக்கவில்லை. பாடல் கற்றுக் கொள்வதற்காக விஜயகாந்தைச் சந்திக்க வரும்போது அவர் கட்டிவந்த காட்டன் புடவையின் நிறம் உள்பட.

பதினாறு வயதினிலே படம் எடுத்து தமிழ்ச் சினிமாவுக்கே புது நெறியை ஏற்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவை நடிகை ராதாவை அறிமுகப்படுத்தியவர் என்பதாகவே புரிந்துவைத்திருந்தேன். எனில், ராதா  எந்த அளவுக்கு என் உவப்புக்குரிய நடிகையாக இருந்திருப்பார் என யூகித்துக் கொள்ளுங்கள். வரிசையாக ராதா நடித்த படங்கள் வெற்றியடைந்த தருணத்தில் காதல் பரிசு என்றொரு திரைப்படம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தது. அதில், ‘காதல் மகராணி’ என்றொரு பாடல். பிரம்மாண்டமான அரண்மனையைப் பின்னணியாக வடிவமைத்து பாடலை காட்சிப் படுத்தியிருப்பார்கள். உற்சாகம் ததும்ப கமலும் ராதாவும் அப்பாடலில் கூடுதல் நெருக்கத்தோடு ஆடியதாலும்  ராதாவின் இடையை டைட் குளோசப்பில் காட்டியதாலும் அந்தப் படத்தையும் கமலஹாசனையும் கொஞ்ச நாள் பிடிக்காமல்போனது. அதே மாதிரிதான் எங்க சின்ன ராசா படத்தில்  ‘ஏ ரா தூக்கம் போச்சு என்ற பாடலால் திரைக்கதை மேதை என்னிடம் வாங்காத திட்டை வாங்கிக் கட்டினார்.

அண்ணாநகர் முதல் தெரு படத்தில் ராதாவின் மார்புக்கு அருகே மச்சம் இருப்பதைப் பார்க்கத் துணிந்த காரணத்துக்காக சத்யராஜோடு மானசீகமாக சண்டைபோட்டு, அவர்  நடித்த வேறு சில திரைப்படங்களின் சுவரொட்டியைக் கிழித்து எறிந்திருக்கிறேன். ‘ராதா அழைக்கிறாள்’ என்றொரு பாடல்.தெற்கத்தி கள்ளன் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றது. அதில் கதாநாயகியாக ராதிகா நடித்திருப்பார். ராதிகா எப்படி ராதாவாக முடியும். ராதிகா அழைக்கிறாள் என்று எழுதாமல் ராதா அழைக்கிறாள் என்று எப்படி அந்தப் பாடலாசிரியர் எழுதலாம் என கோபித்துக்கொண்டேன். ராதா அழைப்பது வேறு. ராதிகா அழைப்பது வேறில்லையா. ராதா என்பவள் கண்ணனை வேண்டியவள் என்பதுகூட தெரிந்திராத வயதில் கோபம் வராமல் என்ன செய்யும். நடிகை ராதா ஒருவருக்குத்தான் நம்மூர் மடிசாரும் நாகரிக சுடிதாரும் பொருந்துவதாகக் கற்பனை செய்திருக்கிறேன். அகல விரியும் அவருடைய கண்கள், அதன் பிறகு வந்த எந்த நடிகைக்கும் வாய்க்கவே இல்லை. எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தில் ஓடிப்போன அக்காவுக்காக, தன் வாழ்வை ஒப்புக்கொடுக்கும் ராதா மாதிரி ஒரு நல்ல பெண் இருப்பதால்தான் பூமியில் மழையே பெய்கிறது என்று நம்பியிருக்கிறேன். ராதாவால்தான் ரஜினிக்கே பெரிய மரியாதை என்று அப்போது நினைத்ததை இப்போது சொன்னால் ரஜினி நடிகர்கள் அடிக்க வருவார்கள்.

என்னை எவ்விதத்திலும் எரிச்சல் மூட்டாமல் ராதாவோடு நடித்த நடிகர்களில் மோகன் முக்கியமானவர். பெரும்பாலும் பாடகராகவோ பாடல்களைச் சேகரிக்கும் ஆர்வமுடைய இளைஞராகவோ அவர் நடித்ததால் அவர் மைக்கை மட்டுமே உரசுவாரே தவிர ராதாவிடம் கண்ணியமாகவே நடந்துகொள்வார். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் பூவாடைக் காற்று பாடலும் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் குழலூதும் கண்ணனுக்கு பாடலும் எனக்கு வெகுவாகப் பிடித்த பாடல்கள். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர், ஆனந்த் திரைப்படத்தில் ராதாவுக்காக பாடிய ஆராரோ ஆரோரோ பாடலுக்கு ஈடாக வேறு ஒரு பாடல் அதன்பிறகு தமிழ்த் திரைப்படத்தில் கேட்க முடியாமலேயே போய்விட்டது. சந்திரமுகி படத்தில் நான் எழுதிய ‘கொஞ்சநேரம்
கொஞ்சநேரம்’ பாடலைப் பாடுவதற் காக லதாஅம்மாவின் தங்கை ஆஷாபோன்ஸ்லே வந்தபோது இசையமைப்பாளர் வித்யாசாகரும் என் விருப்பத்தையே பிரதிபலித்தார்.நடிகை ராதாவால் எத்தனை எத்தனை பாடலை ரசிக்க நேர்ந்திருக்கிறது.

ராஜாதிராஜாவில் மீனம்மா மீனம்மா என்றொரு பாடல். கண்கள் மீன் நாணம் தேன் என்ற மிகச் சாதாரண பல்லவிகூட ராதாவில் அழகாகவும் இனிமையாகவும் தோன்றியதை என்ன சொல்வது. காதல் ஓவியம் படத்தில் ராதா ஒரு நாட்டிய நங்கையாக நடித்திருப்பார். ராதா மாதிரி ஓர் அழகிய நடிகையைக் காதலிக்கும் கதாநாயகன் கண்ணில்லாதவன் என்று பாரதிராஜாவால் எப்படித்தான் யோசிக்கமுடிந்ததோ. அதன் காரணமாகவே அந்தப் படம் ஓடவில்லை. இருக்கின்ற கண்கள் எல்லாம் ராதாவையும் அவருடைய நடிப்பையும் புகழ்ந்து தள்ளிய காலத்தில் அவரைக் காதலிக்கும் ஒருவனுக்கு கண்ணில்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் இளையராஜாவின் அதி அற்புதப் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தக் குறையை எல்லாம் களைவதுபோல பாரதிராஜா ஒரு காரியம் செய்தார். அதுதான் முதல் மரியாதை. ரவிக்கை இல்லாமல் நடிகை ராதா நடித்த ஒரே படம் என்று நினைக்கிறேன். நடிகர் திலகத்தோடு நடிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் வெகு இயல்பாக நடித்திருப்பார். அதிலுள்ள பாடல்கள் வைரமுத்து &- இளையராஜா கூட்டணியின் உச்சம். ஒரு பாடலின் தேவையை கதைக் களத்தோடு இரண்டுபேரும் புரிந்துகொண்டு பணியாற்றி யிருப்பார்கள். பூங்காத்து திரும்புமா பாடலில் ராதாவின் முகத்தில் தெரியும் நவரச பாவத்திற்கு தேசிய விருதே கொடுத்திருக்கலாம். ஆனால், ஒரு மாநில விருதுகூட தராமல் ராதாவைப் புறக்கணித்து விட்டார்கள். நடிகைகள் ஆண் களுக்கும் நடிகர்கள் பெண்களுக் கும் பிடிப்பதற்கு மனோரீதியான காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். தமிழ் மரபு சார்ந்து எடுக்கப்பட்ட படங்களிலேயே ராதா அதிகம் நடித்ததால் அவரைத் தமிழ் இளைஞர்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. தவிர, எண்பது தொண்ணூறுகளில் நம்முடைய சிந்தனைகளும் ஒரு வட்டத்துக் குள்ளேயே சுழன்றன.பெண்ணுக்குரிய இலக்கணங்களும் ஆணுக்குரிய லெட்சணங்களும் கலாச்சாரப் பிறழ்வுகளை மிகுதியாக கண்டிராத சூழலில் நடிகை ராதாவின் வசீகரம், தமிழ் இளைஞன் தன் அகத்தில் வைத் திருந்த பெண் பற்றிய வசீகரம்.

சில பல ஆண்டுகள் கழித்து ராதாவின் மகள் கார்த்திகா, கோ படத்தில் நடிக்க வந்திருக்கிறார்.அதன் நிமித்தம் ராதாவின் புகைப்படங்களும் நேர்காணலும் ஊடகங்களில் மீள் பதிவைக் கொள்கின்றன. அந்தக் காலத்தில் இருந்த ராதாவை இப்போது காணமுடியவில்லை. முகத்தில் இழையோடும் சிரிப்பைத் தவிர பழைய வசீகரத்தைத் துறந்துவிட்ட அவருடைய இன்றைய தோற்றம் இள நடிகை ஒருத்தியின் அம்மா என்பதை மட்டுமே சொல்கிறது.நல்லவேளையாக ராதா அம்மாவாகவோ அண்ணியாகவோ சீரியலில் நடிக்கவில்லை. நடிக்க வந்திருந்தால் என்னால் இந்தக் கட்டுரையை எழுத இயலாமல் போயிருக்கும். கார்த்திகா, தன் அம்மா ராதாவைவிட  நன்றாக நடிக்க ஆசைப்படுவதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அம்மாவைவிட என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம்.பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற முக்கியமான தமிழ் இயக்குநர்கள் ஏன் ராதாவை தங்கள் படங்களில் நடிக்கவைக்கத் தவறினார்கள் என்பதுதான் என் சமீபத்திய தலையாய  கேள்வி

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:46:42 AM11/10/11
to panb...@googlegroups.com

லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி

அஜயன் பாலா | Issue Dated: அக்டோபர் 17, 2011

சிம்ரன்


கதைப்படி ஜூலியா ராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி. தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த  வலுவாக ஒரு தந்திரத்தைக் கற்றிருந்தாள். அந்தத் தந்திரம்தான் அவனைத் தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய  & அந்த உறவை பன்மடங்காக ஊதிப் பெருக்கி வைத்து படத்தின் இறுதிப் புள்ளி வரை இருவரையும் இறுக்க மாக கட்டியிருக்கவைத்தது.


1990&ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடிக் களைத்த ப்ரெட்டி வுமன்  இப்படியாகத்தான் அனைவரையும் ஈர்த்து தன்னில் தக்கவைத்துக்கொண்டாள். பெண்மையின் வெற்றி என கருதக்கூடிய அந்தப்  படத்தின் வெற்றிக்குக் காரணமான அந்தத் தந்திரம் என்ன தெரியுமா?  குழந்தைமைகூடிய ஒரு சிரிப்பு.
ஜூலியா ராபர்ட்ஸ் கண்கள்
மினுங்க அப்படி ஒரு சிரிப்பைக் காண்பித்தபடி வளைய வந்த
தருணத்தில், ரிச்சர்ட் க்ரேவைக் காட்டிலும் நாமும் மயங்கி அவளிடம் இன்னும் எதையோ தேடிக்கொண்டிருந்தோம். ஓர் ஆண், பெண்ணிடம் முழுமையாகத் தோற்கும் இடம் இது.  


 காமத்தை உடலில் தேடிவிட லாம். ஒரு நொடியில் அது தீர்ந்து வடிந்துவிடும். ஆனால் அவள் கண்களுக்கும் அந்தச் சிரிப்புக்கு மிடையில் ஒளிரும் அந்தக் குழந்தைமையை அவன் எங்கு தேடுவான்? அங்கு முடிவேயில்லை
 எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் திறந்துகொண்டே யிருக்க, முடிவுறாத குழந்தைமை தான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாகப் பின்னிருந்து செயல்படுகிறது.
 அவனைக் கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்குப் பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்தப்   பட்டாம்பூச்சிகள் பறக்கும்  மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்துவருகிறது. 
 அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி, உமை, தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்கவைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்காபோல, மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியா ராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்திரி போல கதைகளிலும் கற்பனைகளி லும் மட்டுமே அது போன்ற மன வெளிகளை நம்மால் தரிசிக்க முடியும். 
 மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா,  வஹீதா ரஹ்மான், பத்மினி, சரோஜாதேவி,  ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில்... சிம்ரனின் கண்களுக் குப் பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்கமுடிந்தது. 
 முதன் முதலாக 1999&ல் வெளியான ‘வாலி’ படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியை யும் தரிசிக்கமுடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாகத் தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தன மும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான். சீசாவைத் திறந்ததும் சட்டென வந்துபோகும் ஊறுகாயின் வாசம்போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தைமையை லேசாக திரைவிலக்கிக் காண்பித் தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியாக சொல்லத்தக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத் தில் காட்டும் ஒருவித காமத்தைத் தூண்டும் குழந்தைமை இவைதான் அதனை சமன் செய்தது  எனலாம். 
1974&ல் பஞ்சாபில் பிறந்து   ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்து வீட்டில் அல்லது காலேஜ் போகும்போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும்போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்கவேண்டியவர். அசந்தர்ப்பமாக ஹிந்திப் பாடல்கள் போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்புப் பெற்றார். அதைப் பார்த்த   ஜெய்பாதுரி அமிதாப்பச்சன்  அவர்களது  படமான  தேரே மேரே சப்னேவில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு  நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ்மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு அவர் அறிமுகமாகும்போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்குப் போகும் அந்த வயதில், ஒரே நாளில் இரு படங் களின் மூலம் தமிழ்த் திரையுலகில்  தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார். நேருக்கு நேர் படத்தில் ஹவுரா பாலத்தில் சூர்யா பின்னால் துரத்த அவர் செல்லமாய் ஓடும் எங்கெங்கே எங்கெங்கே... பாடல் காட்சியிலேயே நமக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தினர்.
  இந்த முதல் படங்களின் அறிமுக வெற்றியைத் தொடர்ந்து ராசியான நடிகை என சினிமாவைத் தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள்  திருவாய் மலர்ந்தனர். பஞ்சாபி பெண் நலுக்குசுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிகைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்தபோதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், பார்த் தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர்    தனக்கென ஓர் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.


 அழகின் உச்சம்  பெண்ணுடல் என்றால், அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காணமுடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹோவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல. அவை  உண்மையில் சாத்திய மானவைதான் என முதன்முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு அவருடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும்   நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை  பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் விஜய் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்துபோன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருப்பார்.  இந்த இரு பாடல்களுக்கும் பின்னால்  அவர் காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றைப் பற்றி சொல்லாமல்போனால் இக்கட்டுரை முழுமையடையாது. 
சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். ஆனால் சிம்ரனோ அந்த வகையைச் சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர் களைத் தனக்குள் முழுமையாக தக்கவைத்துக் கொள்ளும் சாகசம் அல்லது திறமை, வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பிவழிந் தது. முந்திய பட்டியல் நடிகை களைப் போன்ற காவியத்தன்மை கொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச் செல்ல வில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்குப் பெருமைகளைத் தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்குப் போதும் என அவர் முடிவெடுத்துக்கொண்டார்.


 அதேசமயம் அவரது சக நடிகைகளான தேவயானி, ஜோதிகா இருவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நாயகி பாத்திரத் துக்கு முக்கியத்துவம் தரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தனர். பேரழகன், மொழி , சந்திரமுகி என ஜோதிகாவின் மாறுபட்ட பாத்திரங் கள் சிம்ரன் ஏற்றால் அவரால் பிரகாசித்திருக்க முடியுமா? அவரது அபரிதமான கவர்ச்சி அதற்கு இடமளித்திருக்குமா என்பதும் ஒரு கேள்வியே
  ஆனாலும் சிம்ரன், தான்   ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பார்வையாளர்களைப் பதற்றப்படவைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்திரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கி விடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக   தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பைக் காணமுடியும். ஆனால் சாவித்திரி, சிம்ரன் இருவரும் வேறுரகம். சுதந்தரமாக அனாயசமாக நடிக்கக்கூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தா லொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.


நடிகர்களில் ரஜினியைப்போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு ஒரு வகை.  இதுபோன்ற வகையினர் வெளிப் படையாக இருக்கக் கூடியவர்கள். தனி வாழ்வில் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியைக் காண்பவர்கள். துரோகத்தைத் தாங்கமுடியாதவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழுத் தகுதியுடையவராக ஆக்கிக் கொண்டார்.


ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அட இந்தப் பெண்ணா சிம்ரன்.


இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி. 
பிறகு இரண்டாவது முறையாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அந்தநாளில் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை எனத் தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்குச் செலுத்தினேன்.
என்னை அங்கே அழைத்திருந்த ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண். பூசினாற் போல முகம். ஸ்டெபி அவரிடம் ஏதோ சொன்னதும் என்னைப் பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார்...
அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைவுப் பொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம். சாட்சாத் அவரேதான். 


சிம்ரன். அதே கண்கள்... வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்கத் தொடங்கியன.   ஆனால் எப்படி கொஞ்சம் குண்டாக... ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு   ‘‘ம்ம்... சொல்லுங்க மேடம்” என சொன்னேன். அவர் ஒரு சினிமாக் கதையைக் கூறி திரைக்கதை அமைப்பதற்காக என்னை அழைத் திருந்தார். அது அவரது அம்மாவைப் பற்றிய கதை. அவர் கதையைக் கூறத் தொடங்கினார். கதை அவுட் லைனைச் சொல்லிமுடித்தார். கதையின் ஒவ்வொரு தருணங் களுக்கும் ஏற்ப முகபாவங்கள் மாறிக்கொண்டே இருந்தன.  நடுவில் தொலைபேசி வந்தது. அம்மாதான் பேசுவதாக கூறிவிட்டு, அருமையான மகளாக உருகிப் பேசினார்.
  ‘‘இதில் நீங்கள் தான் நடிக்கப் போகிறீர்களா?’’ என்று கேட்டேன்.
 ‘‘ஆமாம்” 
சட்டென பதில் சொன்னார். 


 பின்னர் படம் தொடர்பான இதர விஷயங்கள் பேசத் தொடங்கி னோம்.  நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்க மாய்ப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன்.
 உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்கக் கூடாதுதான். சினிமா தியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே... அதுபோலவொரு டுபாக்கூர் கேள்விதான் அது. ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான். 
 ஆமாம். நீங்க சிம்ரன்தானே?


 இந்தக் கேள்வி கேட்ட மாத்திரத் தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம். ‘‘என்ன கேள்வி இது.  அப்ப ஏன் நீங்களே நடிக்கப்போறீங்களா எனக் கேட்டீர்கள்?’’ என்றார்.  நான் கொஞ்சம் அசடு வழிந்தேன். சமாளித்தேன். 
ரைட்டர்ஸ் எல்லோருமே கொஞ்சம் இப்படித்தான் இருப்பீர்களா? என்று தலையின் மேல் விரலை சுழற்றி கேட்டார்.
 பின்னர் அவரும் இரண்டு பிரசவம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தைக் கூறினாலும், உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதன்பிறகு வெளியில் வந்தபோதுதான் எனக்கு உரைத்தது.


ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த   பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:47:27 AM11/10/11
to panb...@googlegroups.com

தமிழனுக்குப் பிடித்த கன்னங்கள்

ரவிக்குமார் | Issue Dated: அக்டோபர் 17, 2011

குஷ்பு

தமிழ்நாட்டில் அரசியல் என்ற நாடகத்துக்கான மேடையாகவும் திரையாகவும் சினிமா இருக்கிறது. சினிமாவில் மூழ்கி அரசியலில் கரை சேர்வது  என்பது கடந்த அரை நூற்றாண்டு காலமாக இங்கே தொடர்ந்துகொண்டிருக்கும் விளையாட்டு. சினிமாவின் செல்வாக்கு இங்கே ஒவ்வொரு வீட்டையும் திரையரங்காக மாற்றிவிட்டது. தமிழர்களின் தினசரி வாழ்வில் தண்ணீராகவும் உணவாகவும் இருக்கிறது சினிமா.


பிற துறைகளைவிட ஆணாதிக்க மனோபாவம் தலைவிரித்தாடும் தமிழ்த் திரை உலகில் வெற்றிகரமான நடிகையாக இருக்கவேண்டும் என்றால் அதற்கென்று சில எழுதப்படாத விதிகள் இருந்தன.  “தமிழர்கள் ஒல்லியாக இருக்கும் நடிகைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. இங்கு கதாநாயகி என்றாலே,  அவர் ‘கொழு கொழு’வென்று இருக்கவேண்டும். அப்போதுதான் இங்குள்ள ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்று தமிழ்த் திரை உலகின் ‘ஜோதிடர்கள்’ அவ்வப்போது அருள்வாக்கு சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த ரசனை தமிழ்நாட்டில் எப்போது ஏற்பட்டதென்று தெரியவில்லை.


தமிழ்நாட்டின் கோயில்களில் காணப்படும் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் நாம் பார்க்கிற பெண்களாகட்டும்; உலகப் புகழ்பெற்ற சோழர்கால செப்புச் சிலைகளில் சித்திரிக்கப்பட்டிருக்கும் பெண் உருவங்களாகட்டும்; இலக்கியங்களில் வெளிப்படும் பெண்களைப் பற்றிய வர்ணனைகளாகட்டும் எதுவுமே இந்த ‘தியரிக்கு’ ஒத்துப் போவதாக இல்லை. ஆனால், தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒருகாலகட்டத்தின் உண்மையாக அது இருந்ததை நாம் மறுக்கமுடியாது. சாவித்திரியையும், கே.ஆர்.விஜயாவையும் கதாநாயகிகளாக ஏற்றுக் கொண்டிருந்தவர்கள் நாம். ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ்த் திரை உலகை ஆட்டிப் படைத்தவர்கள் “அமுல்பேபி” நடிகைகள்தான். அந்த வரிசையில் வந்தவர்தான் குஷ்பு.


குஷ்பு ஒரு வெற்றிகரமான கதாநாயகியாகத் திகழ்ந்தவர்; ஆனால் அவர் ஒரு வெற்றிகரமான நடிகை அல்ல. தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைத்துவிடுவதில்லை என்பது உண்மைதான். ஸ்மிதா பாட்டில், ஷப்னா ஆஸ்மி போன்ற நடிகைகள் புகழ்பெற்றதற்கு அவர்களிடமிருந்த திறமை மட்டுமே காரணமல்ல. அவர்கள் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் நல்ல சினிமாக்களை உருவாக்கிய இயக்குநர்களே அதற்கு முதன்மையான காரணம். வங்காளத்திலும், மலையாளத் திலும்,  கன்னடத்திலும் இருப்பதுபோல  ‘சீரியஸ் சினிமா’ என்று எதுவும் தமிழில் உருவாகவில்லை. ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், கிரீஷ் காசரவள்ளி முதலானவர்களோடு ஒப்பிடக்கூடிய ஓர் இயக்குநர்கூடத் தமிழில் இல்லை. நல்ல இயக்குநர்கள் இல்லாதபோது திறமைமிக்க கலைஞர்கள் மட்டும் எப்படி உருவாவார்கள்?


‘கமர்ஷியல்’ பட கதாநாயகிகளாயிருந்த ஸ்ரீப்ரியாவுக்கும், சரிதாவுக்கும் கிடைத்த பாலசந்தரைப் போலவோ, ஷோபாவுக்குக் கிடைத்த துரை அல்லது பாலுமகேந்திராவைப் போலவோ குஷ்புவுக்கு எந்தவொரு இயக்குநரும் வாய்க்கவில்லை. ஒரு முஸ்லிம் பெண் பாத்திரத்தில் நடிப்பதற்காக மனிஷா கொய்ராலாவை அழைத்துவந்த மணிரத்னம், அந்த சமூகத்திலேயே பிறந்த குஷ்புவைக் கூப்பிடவில்லை. குஷ்பு நடித்தவை எல்லாமே கமர்ஷியல் படங்கள். எனவே அவரை ‘சீரியஸான’ நடிகைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது’ என்று சிலர் வாதிடக்கூடும். கமர்ஷியல் சினிமாவின் கும்மிருட்டிலும், தென்னங்கீற்றிடையே கசியும் நிலவொளியைப்போல சிறந்த நடிப்பின் வெளிச்சத்தைக்காட்டி, வாய்ப்பு கிடைத்திருந்தால் இவர்களாலும் நல்ல நடிப்பைத் தந்திருக்கமுடியும் என்று நம்மை எண்ணவைத்த நடிகைகள் தமிழில் பலர் உண்டு. சுஜாதா, சுஹாசினி, ஷோபனா, சிம்ரன் என்று அந்தப் பட்டியல் நீளும். ஆனால், குஷ்பு ஒருபோதும் அப்படியான நம்பிக்கையை ஏற்படுத்தியவரில்லை.


குறும்பு கொப்பளிக்கும் கதாபாத்திரங்கள் பலவற்றில் குஷ்பு நடித்திருக்கிறார். ‘மாடர்ன் ட்ரெஸ்’ அணியும் நகரத்துப் பெண் பாத்திரங்கள் அவருக்கு நன்றாகப் பொருந்தின. அத்தகைய பாத்திரங்களில் அவருக்கு முன்பு நடித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நதியா. இளம்பெண்கள் அணியும் ஆடைகள், நகைகள், அவர்களது ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் ஒரு மாற்றத்தையே ஏற்படுத்தியவர் அவர். பதின்பருவத்துப் பெண்கள் அவரைத் தமது ‘ரோல் மாடலாகக்’ கருதியதுண்டு. ஸ்டைல் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. தன்னம்பிக்கை மிளிரும் ( திமிர் அல்ல) அவரது முகபாவமும் அதற்கு வலுசேர்ப்பதுபோல் அமைந்த பாத்திரங்களும் அதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம்.  குஷ்புவுக்கும் அப்படியான பாத்திரங்கள் கிடைத்தன என்றாலும், நதியாவைப்போல அவர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


அப்படியானால் குஷ்புவின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன? என்ற கேள்வி எழும். தொகுத்துப் பார்த்தால் எஞ்சுவது அவரது தோற்றமும் அதன் ‘கவர்ச்சியும்’ மட்டும்தான். தமிழ் சினிமாவின் அகராதியில்  ‘கவர்ச்சி’ என்றால் உடம்பைத் திறந்துகாட்டுவது என்பதே பொருள். குஷ்பு அந்த அளவுக்கு உடம்பைக் காட்டி நடித்தவரல்ல. சிம்ரனைப் போலவோ, ஸ்ரேயாவைப் போலவோ காமிராவால் விழுங்கித் துப்பப்பட்டதல்ல அவரது உடல். குஷ்புவைவிடவும் ‘கவர்ச்சி’ காட்டிய கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் அவர்களுக்கில்லாத ஓர் அம்சம் குஷ்புவிடம் இருக்கிறது. அவரிடம் தென்படும் குழந்தைத்தனம்தான் அது. முகத்தில் மட்டுமல்ல அவரது தோற்றம் முழுவதிலும் அது கலந்திருக்கிறது.


 ‘‘பரிணாம வளர்ச்சியானது குழந்தைகளைப் பாதுகாக்கும் விதமாக ஆண்களை வடிவமைத்தி ருக்கிறது. மனித உடல் வளர்ச்சி மெதுவாக நடக்கிறது என்பதால் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் அரவணைப்புக் கூடுதலாகத் தேவைப்படுகிறது. கொழுகொழு வென்றிருக்கும் குழந்தைகள் தந்தையின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. அந்த அம்சம்தான் வயதுவந்த பெண்கள், ஆண்களைக் கவர்வதற்கும் காரணமாக இருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு பெண் தனது உடலமைப்பில் குழந்தைத்தனத்தைக் கொண்டிருக்கிறாளோ, அந்த அளவுக்கு அவள் தனது இணையின் பாதுகாப்பைப் பெறுகிறாள். மனிதகுலப் பரிணாமத்தின் வளர்ச்சிப்போக்கில் ஆண் மனரீதியாக குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துகிறவனாகவும், பெண் உடல்ரீதியாகக் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துகிறவளாகவும் ஆகிப்போனார்கள்’’ என்கிறார் பெண்களின் உடல் அமைப்பு குறித்து ஆய்வு நூலொன்றை எழுதியிருக்கும் டெஸ்மாண்ட் மோரீஸ் என்ற அறிஞர். (The Naked Woman - A Study of the Female Body, Vintage Books, 2005)   இந்த குழந்தைத்தனம் அதிகம் வெளித்தெரியும் பகுதியாக இருப்பது முகம். குஷ்புவின் வட்டமான முகம், செழித்த கன்னங்கள், உறுத்தாத சிரிப்பு எல்லாமே ஒரு குழந்தையை நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.


உலகின் எல்லாப் பண்பாடுகளிலுமே கன்னத்துக்கு முக்கியத்துவம் உண்டு. முக ஒப்பனையில் கன்னங்களுக்குத் தனி கவனம் தரப்படுவது ஆதிவாசிகளின் பண்பாட்டிலும் காணப்படுகிறது. கன்னம் எந்த அளவுக்குச் செழிப்பாகவும், வட்டமாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் குழந்தைத்தனம் வெளிப்படும். சரோஜாதேவியைப் போல மழலை மொழியில் குழறிப் பேசி குழந்தைபோல பாவனை செய்யாமலேயே குழந்தைத் தனத்தை வெளிப்படுத்தக்கூடியது குஷ்புவின் முகம். அதற்குக் காரணம் அவரது செழிப்பான கன்னங்கள்தான். குஷ்புவுக்கு ஆண் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுத் தந்ததில் அவரது கன்னங்களே முக்கியப் பங்காற்றின என்று சொல்லலாம்.     


குஷ்புவுக்கு இருக்கும் இன்னொரு சாதகமான அம்சம் அகன்ற தோள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வை வலுப்படுத்துவதில் தோளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. அகன்ற தோள் என்பது வலிமையின் அடையாளம், வீரத்தின் குறியீடு. இதை உணர்ந்ததால்தான் சமத்துவத்தை விரும்பிய பெண்கள் தமது தோள்களை அகலமாகக் காட்டிக்கொள்ள முற்பட்டார்கள். பெண்ணுரிமை இயக்கங்களின் வரலாறு நெடுகிலும் அவர்களது உடைகளில் நேர்ந்த மாற்றங்களை அவதானித்தால் நாம் இதைப் புரிந்துகொள்ளலாம். பெண்ணுரிமைவாதிகளின் பிரயத்தனங்கள் குஷ்புவுக்குத் தேவைப்படவில்லை.இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும் அகன்ற தோள், கம்பீரத்தையும், மிடுக்கையும் அவருக்குத் தருகிறது.


குஷ்புவின் அகன்ற தோள்களுக்குப் பாலியல் சார்ந்த இன்னொரு பரிமாணமும் உண்டு. கழன்று விழுந்துவிடுமோ  என்று எண்ணக்கூடிய வகையில் தோள்களில் வழியும்விதமாக அவர் அணிந்த ‘ மாடர்ன் ட்ரெஸ்கள்’ அவரது கவர்ச்சியைக் கூட்டின. தோள்களை வெளிக்காட்டும் உடைகள், பார்ப்பவர்களுக்கு உடலின் வெளித்தெரியாத - குறிப்பாக மார்பகங்கள் குறித்த யூகங்களை உண்டாக்குகின்றன. இடுப்பையும், தொப்புளையும் திறந்துகாட்டினால் உண்டாகும் கிளர்ச்சியைவிட இந்தத் திறந்த தோள்கள் உருவாக்கும் ‘கிளுகிளுப்பு’ அதிகம்.


தோள் மட்டுமின்றி முதுகும் அவருக்குக் கவர்ச்சியைச் சேர்த்தது. முதுகை அவர் அளவுக்குத் திறந்துகாட்டிய தமிழ் நடிகைகள் வேறெவரும் இருக்கமாட்டார்கள்.  ஜப்பானியப் பண்பாட்டில் ஒரு பெண் எந்த அளவுக்கு அவளது முதுகைத் திறந்துகாட்டலாம் என்பது அவள் சமூகத்தில் வகிக்கும் அந்தஸ்தை வைத்து வரையறுக்கப்பட்டது. அவர்களது பாரம்பர்ய உடையான ‘கிமோனோ’க்கள் பெண்ணின் முதுகுப் பகுதியைத் திறந்துகாட்டும் விதமாகவே வடிவமைக்கப் படுகின்றன. பெண்களுக்கான உடைகளை வடிவமைக்கும் மேற்கத்திய ‘ஃபேஷன் டிசைனர்களும் முதுகுப் பகுதியின் கவர்ச்சியை வெளிக்காட்டும் விதமாகவே ஆடைகளை உருவாக்குகிறார்கள். அத்தகைய ஆடைகளை குஷ்பு அணியவில்லை என்றாலும், தாராளமாக முதுகைத் திறந்துகாட்டும் ‘பிளவுஸ்களை’ அவர் அணிவது பிரசித்தம். அவர் நடத்திய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்புக்கு அவரது திறந்த முதுகும் ஒரு காரணம்.


நடிகைகளின் பெயரை புடவைகளுக்கும், நகைகளுக்கும் சூட்டுவதுண்டு. உணவுப் பொருள் ஒன்றுக்கு நடிகையின் பெயரை வைத்ததாக நாம் கேள்விப் பட்டதில்லை. ‘ குஷ்பு இட்லி ’ என்று அவரது பெயர் மட்டும்தான் அப்படி சூட்டப்பட்டது. மிகவும் மிருதுவான இட்லி வகை ஒன்றுக்கு குஷ்புவின் பெயரை வைத்தவர்கள் மற்றும் அதைச் சாப்பிடுகிறவர்கள் ஆகியோரின் உளவியல் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவரது பிம்பம் எந்த அளவுக்குத் தமிழர்களின் பாலியல் உணர்வில் கலந்துபோயிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.
அவருக்குத் திருச்சியில் ஒரு ரசிகர், கோயில் கட்டியதாகச் செய்திகள் வெளியாயின. குஷ்புவுக்கு மட்டுமல்ல நமீதாவுக்கும்கூடக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அவை, ஊடக வெளிச்சம் தனது முகத்தில் படவேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட ‘சாகசங்கள்’தானே தவிர, பக்தியின் வெளிப்பாடுகள் அல்ல.


சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் இன்று தமிழ்நாட்டுக்கு அப்பால் பிரபலமாக அறியப்படும் ஒரு சில தமிழ் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். அதற்குக் காரணம் அவரது நடிப்புத் திறன் அல்ல.  கற்பு குறித்து ஒரு பத்திரிகையில் அவர் தெரிவித்த கருத்தே அவரை அப்படி பிரபலமாக்கியது. அந்தக் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பும், தமிழ்ப் பண்பாடு குறித்து அதனால் தூண்டப்பட்ட ஆவேசமான விவாதங்களும் ஓர் அரசியல் பரிமாணத்தை அவருக்குக் கொடுத்தன. அவர்  அதையே தனது அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரமாக ஆக்கிக்கொண்டார். தி.மு.க வின் தேர்தல் பிரச்சாரங்களில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதாவது , அரசியலிலும் அவரது கவர்ச்சிக்குத்தான் மரியாதை.


நடிப்புத் திறமையே இல்லாமல் வெற்றிகரமான கதாநாயகியாகத் திகழ்ந்ததுபோல, அரசியலிலும் குஷ்பு வெற்றிபெறக்கூடும். அவரது குழந்தைத்தனம் அதற்குக் கை கொடுக்குமா என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும்.

senshe senshe

unread,
Nov 10, 2011, 9:47:43 AM11/10/11
to panb...@googlegroups.com

நலம்தானா?

அ.முத்துலிங்கம் | Issue Dated: அக்டோபர் 17, 2011

பத்மினி

நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்றும் முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப் படுத்தியபாட்டை விவரிக்க முடியாது. என்னுடன் படம் பார்த்த நண்பன்கூட அறியமாட்டான். ஓர் இடத்தில் பத்மினி சற்று தலை குனிந்து கூந்தல் வழியாக என்னை மட்டும் பார்த்து நெருங்கிய பற்களை பாதி காட்டி சிரித்தார். தமிழ்ப் பாடத்தில் ’செறி எயிற்று அரிவை’ என்று படித்தது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அன்றிலிருந்து நான் அவருக்கு அடிமையாகிவிட்டேன்.

பத்மினி நடித்த படங்கள் எல்லாவற்றையும் ஒன்று தவறாமல் பார்த்தேன். ஒரு காலத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 2003&ம் ஆண்டு பத்மினி ஒரு விழாவுக்காக ரொறொன்ரோ வந்தபோது எங்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கினார். மணமகள் திரைப்படத்தில் நான் பார்த்து மயங்கிய பத்மினிதான். தங்கத்தை கரைத்துப் பூசியதுபோல அதே மேனி. கால்மேல் கால் போட்டு, ஒரு பூனைக்குட்டியை அணைப்பதுபோல மடியிலே கைப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். உடனேயே ஒரு சங்கதி  புலப்பட்டது. அவர் வாழ்நாள் முழுக்க அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர். புகழ் வெளிச்சத்தில் இருந்து விலக விருப்பம் கொள்ளாதவர். சாதாரண பேச்சும் கட்டளை போலவே இருக்கும். கேள்விகள் எல்லாம் துப்பாக்கி ரவைகள்போல சட்சட்டென்று வந்தன. ’ரொறொன்ரோவில் நண்டு இருக்கிறதா? என்ன நண்டு, ஆற்று நண்டா கடல் நண்டா? றால் இருக்கிறதா? உங்களுக்கு றால் பொரிக்கத் தெரியுமா? என்ன என்ன மீன் இருக்கிறது? கரி மீன் இருக்கிறதா? பால் மீன் இருக்கிறதா? சுறா மீன் இருக்கிறதா?’ என்று எல்லாம் கேட்கத் தொடங்கினார். ‘இங்கே புட்டு எப்படியிருக்கும்? வீட்டிலே இடியப்பம் செய்வீர்களா? ஓ, மறந்துவிட்டேன். ரொறொன்ரோவில் நல்ல அப்பம் கிடைக்கும் என்று சொன்னார்களே.’ ஒவ்வொரு கேள்வியும் எங்களைக் கலங்கடித்தது.

அடுத்து வந்த கேள்வி என் மனைவியைத் திடுக்கிட வைத்தது. ‘ஆறு மணி மருந்தை எடுத்தேனா?' என்றார். மனைவி என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இப்பொழுதுதானே வந்து இறங்கியிருக்கிறார். எங்களுக்கு எப்படித் தெரியும்? மடியிலே படுத்துக் கிடந்த கைப்பையை திறந்து இரண்டு கை நிறைய மருந்துகளையும், வைட்டமின் மாத்திரைகளையும் அள்ளி எடுத்தார். எல்லா நிறங்களிலும் எல்லா அளவுகளிலும் அவை இருந்தன. அது தவிர நாளுக்கு ஒருதரம் போடவேண்டிய ஊசியும் இருந்தது. மனைவி ஒரு சொல் பேசாமல், வாழ்நாள் முழுக்க இந்தத் தொழிலைச் செய்த தாதிபோல, அத்தனை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பத்மினியின் ஞாபக சக்தி புகழ் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்ணாடியைப் பார்த்து நடிகை மேக்கப் போடும்போது அந்தக் கால வழக்கப்படி வசனகர்த்தா நீண்ட நீண்ட வசனங்களை நின்றபடி சொல்லிக் கொடுப்பார். சிவாஜிக்குப் போட்டியாகப் பேச வேண்டிய வசனங்கள் அவை. அத்தனையையும் பத்மினி, இயக்குநர் வியக்கும்படி ஒரே டேக்கிலேயே பேசி அசத்திவிடுவார்.

பழைய கதைகள் பேசும்போது பத்மினி இப்படித்தான் ஆரம்பிப்பார். ‘1958&ல் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலாவுடன் நான் நடித்து வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில்’ அல்லது ‘1967&ல் சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன் நான் நடித்து திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இருமலர்கள் படத்தில்’ என்று ஒரு படத்தைப் பற்றி சொல்லும்போது அதில் நடித்தவர்கள், அதை இயக்கியவர், அது வெளிவந்த வருடம் போன்ற சகல விவரங்களையும் மறக்காமல் சேர்த்துக்கொள்வது அவர் இயல்பு. அத்தனை வியக்கவைக்கும் ஞாபகசக்தி அவருக்கு. அப்படிப்பட்ட பத்மினிக்கும் என் மனைவிக்கும் இடையில் தினம் சண்டை மூளும். ’இதைப் போடுங்கள்’ என்று என் மனைவி ஒரு மருந்தை நீட்டுவார். ‘இதை ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேனே’ என்பார் பத்மினி. ‘அது வைட்டமின். இதுதான் ரத்த அழுத்த மாத்திரை.’ அப்படியா என்று அதை வாங்கிப் போடுவார். ஒரு பதினைந்து நிமிடம் போயிருக்கும். ‘பாருங்கள், இந்த மாத்திரையைத் தர மறந்து விட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டிவிட்டு ஒன்றை எடுத்து வாயைத் திறப்பார். என் மனைவி எங்கேயோவிருந்து பாய்ந்து வந்து அதைப் பறித்து ‘இதைத்தான் 15 நிமிடம் முன்பு நீங்கள் சாப்பிட்டீர்கள்’ என்று சொல்வார். பத்மினி, வங்கி மெசினில் பணம் இல்லையென்று சொன்னதுபோல திடுக்கிட்டுப் பார்ப்பார். ஒரு மாற்றமில்லாமல் தினம் தினம் இது நடந்தது.

ரொறொன்ரோவில் ஓர் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு நாங்கள் புறப்பட்டபோதுதான் பிரச்னை ஆரம்பமானது. அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையைக் கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை. அதற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மை தேவைப்பட்டது. வளையல்கள் மாட்ட வேண்டுமென்று நினைத்ததுதான் விபரீத முடிவு. முன்கையிலிருந்து முழங்கைவரை அவை நிரப்பப்பட்டன. எண்ணிப் பார்த்தபோது ஒரு கையில் 16ம் மறு கையில் 17ம் ஏறிவிட்டது. எத்தனை தரம் எண்ணினாலும் அதே தானம்தான் வந்தது. விருந்திலே யாராவது எண்ணிப் பார்த்து விடக்கூடும் என்ற அச்சத்தில் பத்மினி அமைதி இழந்தார்.

விருந்துக்குப் புறப்பட்டபோது இரவு 10 மணிக்குத் திரும்பிவிடவேண்டும். ரசிகர்களின் அநாவசிய தொந்திரவு அவருக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டார். ஆனால் அங்கே நடந்தது வேறு. விருந்துக்கு  வந்திருந்தவர்கள் எல்லோரும் பத்மினியுடன் படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். எல்லோருக்கும் கையெழுத்து வேண்டும். எல்லோரிடமும் கேள்விகள் இருந்தன. முக்கியமான கேள்வி ‘நீங்கள் ஏன் சிவாஜியை மணமுடிக்கவில்லை?’ ஆயிரம் கி.மீட்டர் பயணம்செய்து வந்தது இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவா? எனினும் பத்மினி மலர்ந்துபோய், சௌந்தர்யம் அதிகமாகி காட்சியளித்தார். ஒரு சின்னப் பெண் சலுங் சலுங் என்று நடந்துவந்து அவர் காலைத் தொட்டபோது அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.  புகழின் உச்சியில் இருந்த ஒரு தருணத்தை அவர் மறுபடியும் வாழ்ந்துகொண்டிருந்தார். வீடு திரும்ப இரவு ஒரு மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த நாள் நடந்த சம்பவம்தான் அத்தனையையும் கெடுத்துவிட்டது.

பத்மினி கேட்ட சகல உணவு வகையும் அகப்படும் ஓர் உணவகம் ரொறொன்ரோவில் இருந்தது. ஓர் ஈழத்துக்காரர்தான் அதை நடத்தினார். பெயர் Hopper Hut. பத்மினியை அங்கே அழைத்துப் போனோம். பத்மினி மெனு அட்டையைப் பார்த்து தனக்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தார். அப்பம், நண்டு, மீன், றால், கோழிப் பிரியாணி. அப்பத்தின் நடுவில் மீனை வைத்து மடித்து, பின்னர் றாலை வைத்து இன்னொருதரம் மடித்து ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். பரிசாரகன்  20 வயதுப் பையன். அவன் பத்மினியைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பத்மினி அவன் முகத்தைப் பார்த்தார், பின்னர் அப்பத்தைப் பார்த்தார். மறுபடியும் பையனின் முகத்தைப் பார்த்தார். அவன் கவனத்தை என்ன செய்தும் திருப்பமுடியவில்லை. இறுதியில் ஆற்றாமல் ‘நான் யாரென்று தெரிகிறதா?’ என்றார். மேசை துடைத்த பையன் அரைக் கணம் அந்த வேலையை நிறுத்திவிட்டு ‘தெரியாது’ என்றான். அந்த மேசையை சுற்றிய இலையானின் மேல் அவனுக்கிருந்த கவனம்கூட பத்மினியின் மேல் இல்லை. பில் கொடுத்தபோது மறுபடியும் ‘நான் யார் தெரியுமா?’ என்றார். வாயைத் திறக்காமல் தலையை கிழக்கு மேற்காக ஆட்டினான். இந்த வேதனையை நீடிக்கவிடாமல் நான் ‘இவர்தான் நடிகை பத்மினி' என்றேன். அவன் ‘எந்த பத்மினி?' என்றான். பத்மினியின் அத்தனை நடிப்பும், அத்தனை அழகும், அத்தனை புகழும் அந்த ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போயின.

பத்மினியை விமான நிலையத்தில் ஏற்றிவிடப் போனபோது அவரை மறுபடியும் பார்க்கக்கூடும் என நான் எண்ணவில்லை. அதுவே கடைசி என்று நினைத்தேன். சில மாதங்கள் கழித்து நியூயோர்க்கில்  ஒரு விழாவில் சுதா ரகுநாதன்  பாடினார். ஜி.ராமநாதன் இசையமைத்த ‘பாற்கடல் அலைமேலே, பாம்பணை யின் மீதே’ என்ற ராகமாலிகை. திடீரென்று அந்தப் பாடலுக்கு பத்மினி அபிநயம் பிடிக்கத் தொடங்கிவிட்டார். உலகம் காணவேண்டிய அருமையான காட்சி. இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். பத்மினிக்கு அப்போது வயது 72. அதுவே பத்மினி மேடையில் ஆடிய கடைசி நடனம் என்று நினைக்கிறேன்.
விழா முடிந்த பின்னர் பத்மினியை அமைதியாகச் சந்தித்தேன். நலம்தானா? என்றார். நேரில் பார்க்கும்போதும் டெலிபோனில் அழைக்கும்போதும் அப்படித்தான் பேச ஆரம்பிப்பார். அவர்  முகத்தில் புது ரத்தம் பாய்ந்து அழகாகத் தெரிந்தார். ‘என்ன இன்று இவ்வளவு மகிழ்ச்சி?’ என்றேன். ‘பல நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர் களை முகம் முகமாகப் பார்க் கிறேன்’ என்றுவிட்டு தலையைச் சற்று குனிந்தார். தாயின் கையைப் பறித்துக்கொண்டு ஓடும் குழந்தை போல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது. அதை அகற்றாமல் என்னைப் பார்த்து சிரித்தார். சட்டென்று மாணவப் பருவத்தில் எனை மயக்கிய மணமகள் படத்து சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. அவர் திரும்பவும் இந்தியாவுக்குப் போய்விடப் போவதாகச் சொன்னார். நான் அதை ஒன்றும் பெரிதாக எடுக்கவில்லை. விடை பெறும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எங்கேயிருந்தாலும் தொடர்பில் இருங்கள் என்று சொன்னேன். சரியென்றார்.

2006-ம் ஆண்டு, 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் திங்கள் கிழமை இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  செய்தி வந்தது. சென்னையில் ஒரு விழாவுக்கு பத்மினி சக்கர நாற்காலியில் போயிருக்கிறார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மேடையில் அவர் நடனம் ஆடியது நினைவுக்கு வந்தது. இந்த இடைக்காலத்தில் அவர் சக்கர நாற்காலி ஏறிவிட்டார். விழாவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் உயிர் பிரிந்துபோனது என்று சொன்னார்கள். நான்  உண்பதை நிறுத்திவிட்டு கடைசியாக நியூயோர்க் விழாவில் அவரிடம் விடைபெற்றதை நினைத்துக் கொண்டேன். சற்று குனிந்து நெற்றி யில் வழிந்த கூந்தல் வழியாக சிரித்த படி மேல் கண்ணால் என்னைப் பார்க்கிறார் நாட்டியப் பேரொளி.

sk natarajan

unread,
Nov 10, 2011, 9:53:21 AM11/10/11
to panb...@googlegroups.com
அருமை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/11/10 senshe senshe <me.s...@gmail.com>

சாதித்த தமிழ்ப்பெண்

மாலன் | Issue Dated: அக்டோபர் 17, 2011

ஸ்ரீதேவி


V Ramesh

unread,
Nov 10, 2011, 11:32:07 PM11/10/11
to panb...@googlegroups.com
மீனாவும் இல்லை.. சிநேகாவும் இல்லை.. இழை ரிஜக்டட்..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



காமேஷ்

unread,
Nov 11, 2011, 12:24:53 AM11/11/11
to panb...@googlegroups.com
முக்கியமா அவங்க இல்லை..!
.........



2011/11/11 V Ramesh <rames...@gmail.com>

lucky shajahan

unread,
Nov 11, 2011, 5:44:50 AM11/11/11
to panb...@googlegroups.com
கலக்கல் பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றி...
2011/11/11 காமேஷ் <kame...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Reply all
Reply to author
Forward
0 new messages