பிரபாகரனைச் சந்தித்தேன்

37 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Aug 28, 2012, 10:56:09 PM8/28/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
அப்துல் ஜப்பார் ஐயாவின் தொடர்

பாகம் - 1


2002 ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி.  ஞாயிறு பிற்பகல். உண்ட மயக்கம். ஒரு
 செல்லத் தூக்கம். தொலை பேசி கிணு கிணுக்கிறது. மறுமுனையில்
 கலைமாமணி மதுரா பாலன்.

“விடுதலைப் புலிகள் பத்திரிகையாளர் மாநாட்டுக்குப் போக வேண்டாமா..? “
அடுத்து என் கேள்வி, “யார்?”.அவரது பதில் “ நீங்கள் தான் “..!!!

ஓர் இனம் தெரியாத உற்சாகம் தூக்கத்தைத் தூக்கி எறிகிறது பிறகுதான் இதன்
பின்னிலுள்ள யதார்த்தம் உறைக்கிறது. இன்று ஞாயிறு. நாளையே கொழும்பு
புறப்பாட்டால்தான் எப்படியோ செவ்வாய் மாலை வன்னி சென்றடைய முடியும்
புதன் கிழமை மாநாடு.

விசா தேவை இல்லை On Arrival Visa  தான். ஆனால் Emigration Clearance  வேண்டுமே
அதற்கு குறைந்தது ஒரு நாள் எடுப்பார்களே என்று நிலைமையைச் சொன்னதும்
பாலனுக்கும் யோசனைதான். என்றாலும், “ எதற்கும் நாளைக் காலை புறப்பட்டே
வாருங்கள். பயணச் சீட்டு முதலியவற்றை நான் தயார் செய்து. வைக்கிறேன்  E.C.
விஷயத்தைப் பார்க்கலாம்” என்றார் நம்பிக்கையோடு...!

இதற்கிடையில் லண்டன் IBC-தமிழ் வானொலி நிலையத்தாரும் தங்கள் சார்பாக
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள்.

காலையிலேயே Madura Travels  சென்றேன். பாலன் பயணச் சீட்டு தந்தார். அடுத்து நான்
சென்று நின்ற இடம் குடிவரவு - அகல்வு அலுவலகம். அப்போது தான் திறக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டார்கள். சொன்னேன். அதற்கென்ன விண்ணப்பத்தை தந்து
விட்டுப் போய் மாலையில் வந்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

நான், “நண்பகல் விமானம். அதை விட்டால் மாநாட்டுக்குப் போகவே முடியாது. ஆகவே
உடனே தந்தால் நல்லது” என்றேன். அதற்கவர், ”அப்படியானால் நீங்கள் தலைமை
அதிகாரியைத்தான் பார்க்க வேண்டும்.பொறுங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்து
விடுவார்” என்றார். சொன்னது போல் வந்தார். விஷயத்தைச் சொன்னேன்.

அவருக்கோ ஆச்சரியமா ஆச்சரியம். மாநாட்டை ஒரு சரித்திர சம்பவம் என்றார். ”.கீழே
போய் ஆவணங்களுக்கு xerox  எடுத்துக் கொண்டு வாருங்கள் அதற்கிடையில் நான் என்
பூஜையை முடித்துக் கொள்கிறேன்.” என்றார். ஆவணங்கள் சகிதம் அவர் முன் சென்று
நின்றபோது,மள,மளவென்று செயல் பட்டு எல்லாவற்ரையும் சரியாக்கி கையில் தந்து
விட்டு, "Best of luck"  என்று புன்னகைத்தார்.

அடுத்த கணம் நான் விமான நிலையத்தை நோக்கிப் “பறந்தேன்”. Counter Close  செய்யப்பட
இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ..............................
................(இன்னும் ‘பறப்பேன்’ )           


காமேஷ்

unread,
Aug 28, 2012, 10:57:16 PM8/28/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
 பாகம் - 2

விமான நிலைய பயணிகள் நுழைவாசலில் நீண்ட ஜன வரிசை.
சலிப்பு - சோர்வு - ஏமாற்றம் அத்தனையும் ஒருசேர என்னை ஆட்-
கொண்டன.

ஒரு ஏர்லங்கா அதிகாரி வாயில் காவலரிடம் ஏதோ பேசினார்.
பிறகு என்னை நோக்கி வேகமாக வருமாறு கையசைத்தார்.
நான் வருவதாகவும், என்னுடைய அங்க அடையாளம் பற்றியும்
பாலன் தொலைபேசியில் சொன்ன தகவலின் நற்பலன் இது.

தரை வழுக்குவதையும் பொருட்படுத்தாது ஏறக் குறைய ஓடினோம்.
சில நொடிகளில் Boarding Pass  கையில் வந்தது. Immigiraation-லும்
நீண்ட வரிசை. ஆனால் அந்த அதிகாரி என்னை நேராக ஓர் அதிகாரி
முன் அழைத்துச் சென்று என் ஆவணங்களை என்னிடம் கையளித்து
விட்டு ” RUN “ என்றார்.

மின் ஏணிப்படிகளையும் இரண்டிரண்டாகத் தாவி, அங்கிருந்தும்
ஓட்டமாக ஓடி,அங்கும் சோதனைகளை முடித்துக் கொண்டு, மூச்சு
வாங்குகிறது  சற்று ஆஸ்வாசப் படுத்திக்கொள்ள அமர்கிறேன்.
விமானம் ஏறுவதற்கான அழைப்பு ஒலிபரப்பப் படுகிறது.நான்
அவசரப் படவில்லை. கொஞ்ச நேரம் இருந்து விட்டு, வரிசையின்
 வால் நுனியில் சென்று இணைந்து கடைசி ஆளாக விமானம் ஏறுகிறேன்.
 காலையில் குடித்த ஒரு கப் காப்பி.பசி சுள்ளென்று உறைத்தது.

என்னென்னவெல்லாமோ சாப்பிடத் தந்தார்கள். ஆனால் எனக்குப்
பிடித்தது அப்பமும் சீனி சம்பலும்.! தொடர்ந்து ஒரு குட்டி தூக்கம்
பண்டார நாயக்க விமான நிலையம் வந்து விட்டது. நண்பர் அஸ்வரால்
வர இயலாது போகவே நண்பர் முபாரக் அலியை அனுப்பி இருந்தார்.

“என்ன திடீர்னு....” அவர் கேள்வியை முடிக்கு முன்னே நான் விஷயத்தை
சொன்னேன். ஏன், எதற்கு என்று குழம்பி இருந்தவர் முகத்தில் இப்போது
ஆஸ்வாசம் படந்தது. ”..? ”சரி,கொழும்புக்கு வந்து விட்டீர்கள். வன்னிக்கு
 எப்படிப் போகப் போகிறீர்கள்?” அது நடக்கிற காரியமா என்ற தொனியில்
 இருந்தது அவரது கேள்வி. இப்போது குழப்பம் எனக்கு. “ நீங்கள் தான் ஏற்பாடு
 செய்ய வேண்டும்” என்றேன். “ அது அவ்வளவு எளிதான் காரியமல்ல” என்று
 புருவத்தை தடவினார். நான் மலைத்து நின்றேன்......................
..( தொடர்கிறேன்)

 

காமேஷ்

unread,
Aug 28, 2012, 10:59:27 PM8/28/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 3
 
கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு பஸ் உண்டு. அங்கிருந்து சோதனைச்சாவடி
போக, போக்குவரத்து வசதி எப்படி என்று தெரியவில்லை. மேலும் தனி நபர்
போக அனுமதிப்பார்களா என்பதும் சந்தேகம். பத்திரிகை மாநாடு நடப்பதால்
‘பத்திரிகையாளன்” என்றால் அனுமதிக்கக் கூடும் என்று ஓர் ஊகம். அதைச்
சொல்ல ஓர் உள்ளூர் பத்திரிகையாளர் கூட இருந்தால் நல்லது என்பது நண்பர்
முபாரக் அலியின் கணிப்பு.

அவருக்குத் தெரியாத பத்திரிகையாளர்களே கிடையாது எனலாம். ஒவ்வொரு
பத்திரிகை அலுவலமாக தொடர்பு கொண்டார் கிடைத்த பதிகள் எல்லாமே ஏறக்
குறைய ஒன்று போலவே இருந்தன. “ Duty-யில் நாங்கள் இரண்டு பேர்தான்.ஆனால்
வேடிக்கை பார்க்க வர இங்கே இருபது பேர் போட்டி போடுகிறார்கள்...!!!”

கடைசியாக “தினகரன்” பிரதம ஆசிரியர் N.M.அமீன் அவர்களை தொடர்பு கொண்டார்.
 “ எங்களுடன் ‘லக்பீம’ ஆசிரியர் அய்யூப் வருகிறார். அவர் தனியாகத்தான் வருகிறாரா
 என்பது தெரியவில்லை. ஒரு சீட் இருக்கிறது. அதில் எங்கள் குழும சிங்கள நாழிதளின்
நிருபர் லாஹூரிலிருந்து வருகிறார். அவரை ஏற்றிக் கொண்டு போக வேண்டும். எங்கள்
 குழுவில் வெட்டியாக12 பேர் வருகிறார்கள். அவர்களில் ஓரிருவரை கழற்றி விட முடியுமா
 பார்க்கிறேன் - மிஸ்டர் ஜப்பாருக்கு வேண்டி” என்று சிறிது நம்பிக்கை தந்தவர் எதற்கும் ஒர்
அரை மணி நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு ‘சஸ்பென்சும்’ வைத்தார்.

கொஞ்ச நேரத்தில் அவரே தொடர்பு கொண்டார்.” காலை ஐந்து மணிக்கு உங்கள் வீட்டருகே
 கார் வரும். ’சூட் கேஸ்’ எதுவும் வேண்டாம். மடியில் வைத்துக்கொண்டு போகிறாற்போல்
 ஒரு ‘பேக்’கில் துணிகளை வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.” என்றார்

நான் விடிய விடியத் தூங்கவில்லை. நான்கரை மணிக்கெல்லாம் குளித்து, முடித்து, ஆயத்தம் !.
 சரியாக ஐந்து மணிக்கு கதவில் மென்மையாக ஓரிரு தட்டல். நான் கேட்டது சரியா என்று சற்று
 நிதானித்தேன். மீண்டும் தட்டல். கதவைத் திறந்த போது அமீன் அவர்கள் தான். “ ஏன் ’ஹோர்ன்’
அடித்தால் என்ன  ?”  என்று கேட்டேன். எல்லோரு அயர்ந்து தூங்கும் இந்த அதிகால வேளையில்
அந்தப் பாவத்தைச் செய்ய வேண்டுமா என்ன ? “ என்றார். That is the gentleman Mr.Ameen.

மாபொள என்னுமிடத்தில் மற்றவர்களை டீ குடிக்கச் சொல்லி விட்டு தொழச் சென்றோம். வெளியில்
வந்து புறப்படலாம் என்ற போது நீங்களும் டீ குடியுங்கள்பிறகு போகலாம் என்றார்கள். அது பண்பு...!!!
காலை உணவு குருணேகலையில்.!  தவிடு நீக்கப்படாத அரிசி மாவு இடியப்பம், தேங்காப்பால் சொதி
(ஹொதி என்கிறார்கள்), தேங்காப்பூ - மாசி சம்பல். உண்டு மகிழ எத்தனை காத தூரமும் செல்லலாம்.
விலையைக் கேட்டதும் தான் சாப்பிட்டது அத்தனையும் செறித்து விடுகிறது. இந்திய ஒரு ரூபாய்க்கு
இலங்கை நாணயம் இரண்டரை ரூபாய் தந்தார்கள். இந்தியாவில் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கும்
பொருளை இலங்கையில் இரண்டரை ரூபாய்க்கும் வாங்க முடியாது. அது தான் வித்தியாசம்..!

நேராக அநுராதபுரம் சென்று அங்கே  மதிய உணவை முடித்துக் கொண்டு பிற்பகலுக்கெல்லாம் வவுனியா
சென்று விட்டோம். கடை பஜார் கலகவென்றிருந்தது. காலாற சற்று நடந்தேன். சிங்களப் பெண்மணி
சிலரை பேட்டி கண்டார்.ஒரு வியாபாரி, “சமாதானமெல்லாம் சரிதான். முன்பு இங்கே சுற்று வட்டாரத்தில்
இருப்பவர்கள் சாமான்கள் வாங்க வவுனியாவுக்குத்தான் வருவார்கள். ஆனால் இனி கொழும்புக்கே போய்
விடுவார்கள். வேறு யாரை இல்லாவிட்டாலும் நகை - துணிக்கடைகளைத்தான் ’மிச்சம்’ பாதிக்கும்” என்றார்.

தொடர்ந்து அவர் பல்வேறு தரப்பு மக்களை பேட்டி கண்டிருக்க வேண்டும். இல்லை. தான் விரும்பும் பதிலை
சொல்பவர்கள் கருத்தை மாத்திரம் குறித்துக் கொண்டார்.
பிறகு என்னைப்பார்த்து, “நான் வேலை செய்வதை ஏன் கவனிக்கிறாய் “ என்றாள் சற்றுக் கடுப்புடன்...!
கொஞ்சம் லட்சணமாக இருந்தாலாவது அவளையாவது கவனிக்கலாம். இல்லை !!!!.
பிறகு நான் ஏன் அவள் வேலையைக் கவனிக்கப் போகிறேன்..? அவளை அப்படியே
விட விருப்பமில்லை.
மேடம் உன் வயசு 25 ஆனால் என் அனுபவத்தின் வயசே 50. நான் உன்னிடத்தில் பாடம்
படிக்கப் போகிறேனா..?
 “ பேசு. ஆனால் யோசிக்காமல் பேசாதே” என்றேன். கோபத்தால் முகம் சிவந்தது என்று
எழுத முடியாது.
ஏனெனில் அவள் சற்று கருவல் ஆகவே முகம் கறுத்தது எனலாம். சரி போகுது வெறிபிடிச்சது !
( இன்னும் எவ்வளவோ இருக்கே...!!!!!)

காமேஷ்

unread,
Aug 28, 2012, 11:00:24 PM8/28/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 4

சோதனைச் சாவடிக்குச் செல்லும் முன்பு புலிகளின் அலுவலகத்தில் அனுமதி
பெற வேண்டும். ஒரு போலீஸ் காரரிடம் வழி கேட்டோம். அவர் சிங்களவர்.
“கெலீம கிஹில்லா தக்குணு பெத்தட்ட யண்ட. யத்தன  கொட்டியாகே
கார்யாலய ஹம்புவெய்” என்று சொல்லி கையசைத்து வழி அனுப்பி வைத்தார்.
அது சமாதானத்தின் பின் விளைவுகளில் ஒன்று.

புறநகர்ப் பகுதியில் ஒரு விசாலமான வளாகம். அதன் மத்தியில் ஒரு கம்பீரமான
ஓட்டுக் கட்டிடம். அதன் முன்பில் ஓர் உயர்ந்த கொடிக்கம்பம். அதன் உச்சியில்
விடுலைப் புலிகளின் கொடி. நாங்கள் ஆவணங்களைக் கொடுத்ததும், “ ஜபார் ஐயா
வந்திருக்கார்” என்று வரவேற்பாளர் ஓர் உற்சாகக் குரல் எழுப்பினார். அவ்வளவுதான்
என்னைச் சுற்றி ஒரு கூட்டம். எல்லோரும் என் “இந்தியக் கண்ணோட்டம்” ஒலிபரப்பின்
அபிமானிகள் என்றார்கள். லண்டனிலிருந்து அது “உறவுப் பாலம்” சிகழ்ச்சியில் சிற்றலையில்
ஒலிபரப்பாவதாகச் சொன்னார்கள். காசு பணமல்ல. இந்த உற்சாக ‘டானிக்’ எங்கள் ஜீவ பானம்.

அடுத்து முறிகண்டி பிள்ளையார் கோவில். அடுத்து தியாகி தீபனின் நினைவிடம். அங்கு சுமார்
50 இளைஞர்கள் சைக்கிளில் சமாதானப் பேரணி வந்தவர்கள். ஒரு சிறிய கடை. அங்கு தேநீர்
வியாபாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது.” இப்ப பாருங்கோ கட நிறய சாமான்கள்
இருக்குது. வியாபாரமும் நல்லா நடக்குது. மும்பு அப்படி இல்லை ஐயா” என்றார்.

கிளிநொச்சி சந்திப்பில் ஒரு பஸ். அது நிறைய பவுத்த பிக்குகள். ஒருவர் சமாதானத்தைப் பற்றி
முழங்கிக் கொண்டிருந்தார். சற்று சென்றதும் அமரர்களின் துகிலிடம். “ இவர்கள் புதைக்கப்படவில்லை
விதைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்ற வாசகம் நெஞ்சை நெகிழ வைத்தது. மேலும் சில வாகனங்கள்
வந்ததும் எல்லோரும் ஓரணியாக புலிகளின் கமத் தொழில் பண்ணைக்குச் சென்றோம். ஏற்கனவேயே,
உலகெங்கிமிருந்து  BBC, CNN  உட்பட முன்னூறுக்கும்  மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள்.

‘ப’ வடிவில் மிக நேர்த்தியாகக் கட்டப் பட்ட ஓட்டுக் கட்டிடம். பரந்து விரிந்த முற்றத்தில் வெயிலே
விழாதவாறு அடர்த்தியாக மரங்கள். சென்றதும் ஒரு சுக்குக் காப்பி. ஆளுக்கு ஒரு பாயும் தலையணையும்
போர்வையும் தந்தார்கள். முற்றத்தில் பெரிய திரையில் புலிகளின் சாகச வரலாறு ஓடிக் கொண்டிருந்தது.

இரவில் சுவையான சைவ உணவு. வெள்ளைக்க்காரர்கள் இரண்டாம் முறையும் வாங்கிச்சாப்பிட்டார்கள்.
பிரயாண களைப்பு. நல்ல சுகமான காற்று. திருப்தியான சாப்பாடு.உண்ட மயக்கம். உறங்கிப் போனேன்.

காலையில் பண்ணையைச் சுற்றி ஒரு நடை.கமத்தொழில் ஆராய்ச்சியின் பயன் கண் முன்னே தெரிந்தது.
தென்னையும், பனையும் நெடிதுயர்ந்த பின்னர் தான் பலன் தெரும். ஆனால் இங்கே கைக்கெட்டும் தூரத்தில்
செவ்விளனீர். பத்தடி உயரத்தில் பனை நொங்கு, பதனீர். அப்படியே காலைக் கடன்கள் முடித்து ‘நயாகரா’
போல் கொட்டும் ‘பம்ப்-செட்’டில் ஓர் ஆனந்தக் குளியல்.

காலை உணவு இரவை மிஞ்சும் வண்ணம் இருந்தது. மாலையில் நடக்கப் போகும் செய்தியாளர்கள்
மாநாட்டுக்கு பாதுகாப்பு கருதி அப்போதே சோதனைகள் ஆரம்பித்து விட்டன. பேனா உட்பட சகல
பொருட்களையும் அங்கு வைத்துத் தருகிறோம் என்று வாங்கி வைத்துக் கொண்டார்கள். செவிகளைப்
பிடித்து காதுகளையும் திறந்து பார்த்தார்கள். அது போல் மூக்கையும்...! எங்கள் பெண் நிருபர் பெண்களால்
கூட சோதனையிடப்படுவதை ஆட்சேபித்தார். சாந்தமாக வந்தது பதில். ‘சோதனைக்கு உட்பட்டால்
அழைத்துச் செல்வோம். இல்லாவிட்டால் இல்லை. உங்கள் முடிவு’ என்றார்கள். வேறு வழியில்லை.
சோதனைக்கு உட்பட்டார்.

பகல் உணவையும்,மாலைத் தேநீரையும் கூட முடித்துக் கொண்டு காத்திருந்தோம். நான்கரை மணிக்கு
வாகனங்கள் வந்தன. நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தை நோக்கிப் புறப்பட்டோம். (இன்னும் வரும்)



காமேஷ்

unread,
Aug 28, 2012, 11:01:06 PM8/28/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 5


புறப்படு முன்பு பத்திரிகையாளர்கள்,” சோதனைச் சாவடியில் எங்கள் பேட்டரிகளையெல்லாம்
‘பிடுங்கிக்’ கொண்டார்கள்.உங்களால் புது ‘பேட்டரி’ தர முடியுமா.? “ என்று கேட்டார்கள். அதற்கு
“என்ன காரணத்துக்காக அவர்கள் பறித்துக் கொண்டார்களோ, அதே காரணத்துக்காக எங்களாலும்
தர முடியாது. பொறுத்துக்கோங்கோ” என்றார்கள் - பணிவாக...!

ஒரு பத்திரிகைக்கு ஓரிரு பேர் என்கிற முறையில் அனுமதி தந்திருந்தார்கள்  IBC-யைப் பொறுத்த
வரை எனக்கு, லண்டனிலிருந்து வந்த பெண்மணிக்கு, வவுனியா,யாழ்ப்பாணம்,மட்டக்களப்
பு,
திரிகோணமலை நிருபர்கள் உட்பட அறுவருக்கு அனுமதி.” அனுமதி இல்லாத நபர்கள் வாகனங்களில்
 ஏற வேண்டாம்” என்றார்கள் -  கண்டிப்பாக..!

 எல்லாவற்றிலும் அவர்களிடம் ஒரு தயக்கமில்லாத - தடுமாற்றம் இல்லாத - தெளிவான அணுகு
முறை இருந்தது.. மிகப் பணிவாகப் பேசினார்கள். ஆனால் மேலிடத்து உத்தரவுகளை கடைப்
 பிடிப்பதில் உறுதியாக இருந்தார்கள.

உயரமான ஓர் இடத்தில் அழகாக அலங்கரிக்கப் பட்ட ஒரு ஓலைப் பந்தல். மேடையில்பாலசிங்கம்
அமர்ந்திருந்தார். அடுத்த ஆசனம் காலியாக இருந்தது. இரு மருங்கிலும் துவார பாலகர்கள் போல்
 துப்பாக்கி ஏந்திய இரு இளைஞர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பாலசிங்கம் வரவேற்றார்.பிறகு
”குழப்பம் எதுவும் வேண்டாம். பொறுமையாகக் கேள்விகளைக் கேளுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலுண்டு. சாகசம் எதற்கும் முயலாதீர்கள்.பக்கத்தில் பார்த்தீர்கள்தானே..” என்ற போது எங்கும்
சிரிப்பொலி. “புகைப்படக்காரர்கள் அந்தரப்பட வேண்டாம்.  நானே அவரை முற்றத்துக்கு வருகிறேன்”
உங்கள் இஷ்டம் போல படமெடுக்கலாம் “ என்றார்.

அடுத்து, ராணுவ கம்பீரத்துடனும் - சிரித்த முகத்துடனும் பிரபாகரன் அரங்கினுள் நுழைந்தார். அத்தனை
பேரும் ஒரு சேர எழுந்து நின்று ஆரவாரத்துடன் கை தட்டியது இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

கேள்விகள் துவங்கின. இருவரும் தம்முள் ஆலோசித்தனர். பிறகு பிரபாகரன் பதில் சொன்னார். தேவைப்
பட்டால் பாலசிங்கம் விளக்கம் சொன்னார். இரண்டே முக்கால் மணி நேரம் - மாலை ஐந்து மணிக்கு
ஆரம்பித்தது இரவு ஏழே முக்காலுக்கு முடிந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக செய்திகளை அனுப்பும்
வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கவில்லை. அவ்வளவுதான். அடுத்துள்ள ஒரே ஒரு நகரான வவுனியாவுக்கு
பெரும்பாலானோர் ‘பிய்த்துக் கொண்டு’ பறந்து போய் விட்டார்கள்.

எட்டே காலுக்கு பொருண்மியத் தலைமை பீடத்திலிருந்த தொலைபேசியின் மூலம் லண்டனுக்கு ஒலிப்பதிவு
செய்யப்பாட்ட நிகழ்ச்சியை அனுப்பினோம். பிறிதோர் சமயத்தில் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட
 பத்திரிகையாளர் சுப்பையா கேள்விகளுக்கும் பதிலுக்கும் இருந்த இடைவெளியை தன் கருத்துக்களால்
 நிரப்பினர். சரக்கு தீர்ந்ததும் “ இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவரும் மற்றவர்களும் கிளம்பிப்
 போய் விட்டார்கள்.  என் பணி பதினொன்றரைக்கு நிறைவு பெற்றது.

”ஐயா, உங்கள ‘ஃபார்மில்’ விடச் சொன்னவிய. உதெல்லாம் உப்பிடியே இருக்கட்டும். ஒண்டும் செய்ய வேண்டாம்.
கதவை மாத்திரம் ஓங்கி அறைந்து சாத்திப் போடுங்கோ. விளக்குகள் எல்லாம் தானாக அணஞ்சிடும்” என்றார்.
’ட்ரைவர்’ ! பண்ணை சென்றடைந்த போது பாதிப்பேர் போய் விட்டார்கள்.மீதப் பேர் உறக்கம்........( இன்னும் வரும்)



காமேஷ்

unread,
Aug 30, 2012, 9:57:38 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம்-6

பண்ணையில் காவலுக்கு நின்ற நால்வரில் இருவர் பெண்கள். அதிலொருவர்,
“ஐயா நீங்கள் சாப்பிட்டனீங்களோ” என்று கேட்டார். “இல்லையே அம்மா” என்றேன்.
“ஐயோ, குசினி ஆக்கள் எல்லாத்தையும் கழுவி கவுத்தி வச்சுட்டுப் போய்ட்டாங்களே”
என்றார். “பரவாயில்லை. தண்ணீர் கொடுங்கள் போதும்” என்றேன். “ இல்ல ஐயா,
எனகிட்ட ரண்டு ‘பனிசு’ (BUN)-ம் பழமும் இருக்குது. சாப்பிடுவீங்களோ “ என்றபோது
நன்றியோடு கேட்டுப் பெற்றுக் கொண்டேன். மண் கூசாவில் கிணற்று நீர். சுவையாக
இருந்தது. அந்த நேரத்தில் அது எனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு....!!!!

“ஐயா, உங்களுக்கு எத்தனை பிள்ளயள். என்ன செய்யினம்..?” சொன்னேன். தங்களுக்கு
 அமையாத குடும்ப வாழ்க்கை மற்றவர்களுக்கு எப்படி அமைந்திருக்கிறது என்பதைத்
தெரிந்து கொள்ளும் ஆவலும் - ஆசையும் - ஆதங்கமும் - ஏக்கமும் அந்தக் கேள்வியில்
தொக்கி நிற்பதை உணர்ந்தபோது மனதுக்கு சங்கடமாக இருந்தது

“உன் குடும்பம் எப்படியம்மா, அப்பா, அம்மா, அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாம்
இருக்காங்களா...? “ என்று நான் கேட்டேன். இப்படி யாரும் அந்தப் பெண்ணிடம் எதுவும்
கேட்டிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. நான் அவளை ஒரு பொருட்டாக மதித்துக்
கேட்கிறேன் என்கிற பெருமிதம் முகத்தில் தென்பட்டது.

“அப்பா போய்ச் சேந்துட்டார். அண்ணர் இயக்கத்தில் தான் இருந்தார். தோக்கைச் சுத்தம்
செய்யும்போது எதிர்பாராமல் குண்டு வெடித்து அவரும் செத்துட்டார். ஒரே தம்பியை
ஆமிக்காரங்கள் பிடிச்சு கொண்டு போனாங்கள். பேந்து என்னாச்செண்டு ஒண்டுமே
தெரியல. நான் Advance Level-லே சித்தி பெற்றதும் இயக்கத்துல சேர்ந்திட்டன். தங்கச்சி
அதக்கூட முடிக்காம வந்து சேர்ந்திட்டா. அவ வெறோர் எடத்துலா இருக்கா.. ஊர்ல
அம்மா தனியாத்தான் இருக்கா. இன்னும் ரண்டு பிள்ளையள் இருந்தா அவியளயும்
இயக்கத்துக்கு கொடுத்திருப்பேன் என்பாள் எங்கள் அம்மா” என்றாள் அந்தப் பெண்.

எனக்கு நெஞ்சைப் பிசைந்தது. ஆனால் அந்தப் பெண் ஏதோ அடுத்த வீட்டுக் கதையை
சொல்வதுபோல் சாதாரணமாகச் சொன்னாள். ஏதோ அபூர்வமான சம்பவம் என்றால்
அதில் ஓர் அதிர்ச்சி இருக்கும். ஆனால் குடும்பத்துக்குக் குடும்பம் இதுவே தான் நிலை
என்று வரும்போது எந்த மனம் தான் மரத்துப் போய் விடாது. ஆனால், இந்த இளம்
 வயதில் இத்தனை  சோகம் என்பது ஜீரணிக்கக் கடினமாக இருந்தது.

நீங்கள் போர் முனைக்குப் போயிருக்கிறீர்களா ?” என்று கேட்டேன். “ அதென்னய்யா
என் காலைப் பார்த்துட்டும் இப்படி கேட்கிரியள் “  என்றாள். பார்த்தேன்.  ஒரு கால் இல்லை.
அந்தப் பெண்  நடக்கும் போது செயல் பட்ட வேகத்தில் நான் இதை கவனிக்கவில்லை
.கவனித்த போது அதிர்ந்து போனேன். ‘ சரியய்யா.....தூன்குங்கன்னு “ என்று சொல்லி விட்டு
 போனாள்

உண்டும்,உடுத்தும்,உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தும், சொந்தம் கொண்டாடி சொகுசோடும்
வாழும் நம் வாழ்க்கையையும், காடு மலை கானகங்களில் கொடிய வன விலங்குகளுக்கும்
விஷ ஜந்துக்களுக்கும் போர்ச் சூழலுக்கும் இடையில் வாழும் அந்த வாழ்க்கையையும்
 ஒப்பிடும்போது அது நம்மை அதிரவே வைக்கிறது.

செல்லுமுன்பு அந்தப் பெண் கடைசியாகச் சொன்ன வார்த்தை, “ அடுத்த வேளை உணவுக்கு
உத்தரவாதம் உண்டா என்பதில்லை  ஐயா,.  அடுத்த கணம் கூட உயிருக்கு உத்தரவாதமில்லை
என்பது தான் எங்கள் லட்சிய வாழ்க்கையின் சாரம்.”  என்று சொல்லி விட்டுச் சென்றாள் அந்த
பாரதி கண்ட புதுமைப் பெண்...! அன்று இரவு முழுக்க நான் தூங்கவே இல்லை........(தொடரும்)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 9:58:19 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 7

”கோப்பி ஒண்டு தரட்டே” என்ற பரிவான குரல் கேட்டு கண் விழித்தேன். நேரம்
நன்றாக விடிந்திருந்தது. “இரவிலேயும் நீங்கள் ஒண்டும் சாப்பிடேல்ல. முதலில்
முகம் கழுவிக்  கொண்டு வாருங்கோ சாப்பிடுவோம்.மத்தவைகளை பிறகு பாப்பம்”
மீண்டும் அதே பரிவு. “ இல்ல ஐயா நான் குளித்து விட்டே சாப்பிடுகிறேன்” என்று
பண்ணையில் சற்று காலார நடந்தேன். கூட்டம் இல்லை. பலர் போய் விட்டனர்.
காலைக் கடன்கள் திறந்த வெளியில்..! ‘பம்ப்-செட்’டில் அலுப்பு தீரக் குளியல். !!.

உடை உடுத்தி - உணவு அருந்தி விட்டு நின்றபோது, ‘வேனில் உபகரணங்களை
ஏற்றிக் கொண்டு நின்றவர்களிடம், “என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் போய்
விட்டார்கள். எனக்கு வவுனியா செல்லும் வரையாவது ஓர் இடம் தர முடியுமா ?”
என்றபோது, “மன்னிக்கவும், சாமான்கள் வைக்கத்தான் இடம் சரியாக இருக்கும்
நாங்கள் கூட தொங்கிக் கொண்டுதான் போக வேண்டும். Up-linking facility  இல்லாத
போது இவற்றை சுமந்து கொண்டு வந்ததே வீண்” என்று சலித்துக் கொண்டார்கள்.

பண்ணை பொறுப்பாளரிடம் சென்றேன். மரியாதையுடன் எழுந்து நின்றார். பிறகு,
, “ஐயா நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். பார்க்க வர முடியவில்லை”என்றார்.
புரிந்தது. முழுக் கால் சராய் அணிந்திருந்தார். இரண்டு முட்டுகளுக்குக் கீழேயும்
எதுவும் இல்லை என்று தெரிந்தது. விக்கித்துப் போனேன். கேட்க வந்ததைக்
கேட்பதில் தயக்கம். அவரே கேட்டார். “என்ன வேணுமையா...? ”இல்ல எல்லொரும்
போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் கிளிநொச்சி செல்வதற்காவது ஏற்பாடு செய்தால்
அங்கிருந்து நான் கொழும்பு போய் விடுவேன்” என்றேன்.

“ஒக்கள விட வேண்டாம் எண்டு சொல்லி இருக்கினம். பவநந்தன் வந்து கொண்டிருக்கிறார்.
ஒங்களுக்கு விவரம் சொல்வார்...! என்றபோது, ஏன், எதற்கு என்று என்னுள் இனம் புரியாத
குழப்பம்.

கிளிநொச்சியின்  IBC  நிருபர் பவநந்தன் வந்தார், அவருக்கும் ஒரு கால் இல்லை என்பது
எனக்கு முதல் நாளே தெரிந்தது.  “ ஐயா மன்னியுங்கோ...ஒரு வாரமா சற்றியான வேலை.
பத்திரிகையாளர் சந்திப்பு நல்ல படியா நடந்து முடிந்ததில் ஓர் ஆறுதல். நல்லா தூங்கிப்
போட்டன். தமிழ்ச் செல்வன் ஒங்கள கூட்டிக் கொண்டு வரச் சொன்னவ. இப்போ வாகனம்
வரும் போகலாம்” என்றார்.

“தமிழ்ச் செல்வனா.. என்னையா..”.நான் கேள்வியை முடிக்கவில்லை.” பிறகு வேறு யாரை.
சாட்ச்சாத் ஒங்களையேதான்.! “ சிரித்துக் கொண்டே சொன்னார். சற்று நேரத்தில் ஒரு ‘ஆஸ்டின்
A-70 கார் வந்தது - ஏகப்பட்ட புகையை கக்கிக் கொண்டு..! காரணம் அது முற்ற முழுக்க ஓடியது
மண்ணெண்ணயில்...!!! இது அவர்களது விஞ்ஞான வித்தைகளுக்கு இன்னொரு சாட்சியம்...!!!

தமிழ்ச் செல்வனைப் பார்க்க பொருண்மியத் தலைமை பீடத்தை சென்றடைந்தது கார். அப்பொது
அவர் அலுவலகத்தில் இருக்கவில்லை. அதிகம் காக்க வைக்கவும் இல்லை. சற்று நேரத்தில் கைத்-
தடியை ஊன்றிக் கொண்டு விந்தி, விந்தி நடந்து வந்தார். உள்ளத்திலும் எண்ணத்திலும் ஊனமில்லா
 அந்த பளீர்ச் சிரிப்பு கவர்ச்சி இளைஞர் தமிழ்ச்செல்வன்  கைலாகு கொடுத்தவர் அடுத்த கணம் கட்டி
 அணைத்துக் கொண்டார் - வாஞ்சையுடன்   !


காமேஷ்

unread,
Aug 30, 2012, 9:59:11 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 8

குசலம் விசாரித்து முடிந்த பின், “ஐயா உங்கள எனக்குத் தெரியாது. எங்க இவர் (தலைவர்)
தான் IBC-யில் ஒலிபரப்பாகும் உங்கள் “இந்தியக் கண்ணோட்டம்” நிகழ்ச்சியை ஒலிப்பதிவு
செய்து, “நான் எங்கிருந்தாலும் எனக்கு அனுப்புங்கோ “ என்று உத்தரவு போட்டவர். “ நான்
வழமையா இந்த நேரத்துக்குத்தான் வருவன். ஆனால் புதன் கிழமை மட்டும் காலம்பர
நேரத்தோடு வருவன். வந்து சொறுக வேண்டியதுகளை சொறுகி ‘ON  பண்ணிப் போட்டுப்
போட்டு நான் எண்ட பாட்டில் என் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பன்.

அப்போது காதில் விழுந்த சில சங்கதிகள் அதனை கவனிக்க வைத்தது. உங்கட வசீகரமான
குரல், விடயங்களை நீங்கள் சொன்ன விதம். ஒவ்வொரு சம்பவத்தையும் சொல்லிப் போட்டு
அவயுட பின்னணி, காரண காரியங்களை நீங்கள் விளக்கிய விதம் என்னை கனக்க கவர்ந்து
போட்டுது. அதிலும் குறிப்பாக உங்களுடை சில சொல்லாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தது.

’வெள்ளாமை விதைத்தால் மட்டும் போதாது அது வீடு வந்து சேரவும் வேண்டும். நாம் பட்ட
பாடுகளுக்கு பலன் கிடைக்க வேண்டுமானால் நம்மை நாம் பட்டை தீட்டிக் கொண்டே இருக்க
வேண்டும்.  ஆல மரத்தைச் சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்ப்பதில் பலன் இல்லை
இப்படி எத்தனையோ !. பெரும்பாலானவற்றை குறித்து வைத்திருக்கிறேன்” என்றார் ஒரு சிறு
குழந்தையின் குதூகலத்துடன்...! பிறகு, ஒலிப்பதிவு செய்யும்போது ஒரு தரம், ஒலிப்பதிவு
சரியாக வந்திருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக ஒரு தரம் எண்டு ரெண்டு முறை கேட்கத்
 தொடங்கினன். இதத் தொடர்ந்து நடக்கும் முதல் சந்திப்பில் நானும் தலைவரும் இதுகளைப்
 பற்றிப் பேசுவம்.” என்ற போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது

புகழ்ச்சிக்கு மயங்காதார் யார்..? ஆனல் என் கவனமெல்லாம் கொழும்பு திரும்புவதிலேயே
இருந்தது. அன்று தேதி 11. மறுநாள் துபை செல்லும் நண்பர் அஸ்வர் MP-யை சந்திக்க
வேண்டும். 13 சனிக்கிழமை விமானத்தைப் பிடித்து ஊர் செல்ல வேண்டும். 14-ம் தேதி ஞாயிறு
என் புது வீட்டில் ‘ பால் காய்ச்சுதல்’ அதாவது புது மனை புகும் நிகழ்ச்சி. அவரிடம் சொன்னேன்.

‘இல்லை இன்று தங்கிப் போங்கள். இன்று மாலை ஒரு முக்கியமான ‘மீட்டிங்’ இருக்கிறது.” என்றார்.
”இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை ?” என்கிற கேள்வி நா நுனி வரை வந்தது. வெளியில்
வரவில்லை “.நாளை அதிகாலை உங்களை எல்லையிலேயே கொண்டு விட ஏற்பாடு செய்கிறேன். பிற்பகல் அல்லது மாலைக்குள் கொழும்பு போய் விடலாம்” என்றார். இன்று மதிய உணவு
 உங்களுக்கு TR0 (Tamil Relief Organisation-தமிழர் புனர் வாழ்வு மையம்) அலுவலகத்தில்.  கார்
வரும் இப்பிரதேசத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள்” என்றார்.

நேராகச் சென்றது “செஞ்சோலை குழந்தைகள் காப்பகம்”. பால்ய பருவம் முதல் பச்சிளம்
குழந்தைகள் வரை தாய் தந்தை யார் என்றறியாத நிறையப் பேர் இருந்தார்கள். ஏழெட்டு இளம்
திருமணமாகத பெண்கள்  இந்தக் குழந்தைகளை கவனித்து வந்தார்கள். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு நான்கைந்து குழந்தைகளுக்குத் தாய் என்றார்கள். துணுக்குற்றேன். “ ஐயா, இவர்கள்
வளர்ந்து வரும்போது தாங்கள் தாய் தந்தை இல்லாத அனாதைகள் என்கிற நினைப்பு வரக்கூடாது
என்பதற்காக பிறப்புச் சான்றிதழில் தாய் என்று எங்கள் பெயர்களை பதிவு செய்திருக்கிறோம்”. என்றனர்

பின்னாளில் இந்தக் காப்பகம் விமான குண்டு வீச்சில் தர்க்கப்பட்டது. ஒருவர் கூட மிஞ்சவில்லை
என்று கேள்விப்பட்ட போது நான் பதறி துடிதுடித்துப் போனேன். இன்று நினைத்தாலும் நான் கண் கலங்கிப் போவேன். நெஞ்சை ஒரு பாரம் அழுத்தும்.  போருக்கு வரையரை சொன்ன நபிகள்பெருமான்
பெண்கள் - குழந்தைகள் - வயோதிபர் - நோயாளிகள் -கால்நடைகள் - மரம் செடி கொடிகல் அத்துடன்
நீர் ஆதாரம் இவற்றைத் தொடக் கூடச் செய்யாதீகள் என்றார்கள். ஆனால் இங்கே முதல் பலி பச்சிளம்
குழந்தைகள்.

இன்னும் இரண்டு மூன்று காப்பகங்களுக்குச் சென்றேன். ஐந்து வயது முதல் பருவக் குமரியான பெண்கள். பிறிதொன்றில் இளம் காளையர் முதல் சிறுவர்கள் வரை பலர். பாடினார்கள் -ஆடினார்கள்
 உற்சாகமாக கலை நிகழ்ச்சியே நடத்தினார்கள். பாட்டு - ஆட்டம் எல்லாவற்றின் கருப்பொருள் ”விடுதலை.”

எனக்கு கொழுப்பு. சராசரி பத்திரிகையாளளர்களின்  SCEPTISM என்னும் குறுக்குப் புத்தி. கேட்டேனே
ஒரு கேள்வி. “படைக்கு இளமையிலேயே ஆள் சேர்க்கும் முயற்சியா இது..?” பொறுப்பாளர் சிரித்துக்
கொண்டே நிதானமாக பதில் சொன்னார். “ இல்லை. இங்கிருந்து யாரையும் போர்ப்படையில் சேர்க்க
கூடாது என்பது தலைமையின் கட்டளை. இவர்கள் முழுமையாகக் கல்வி பெற வேண்டும். உயர்
நிலையை எய்த வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று வேலைகளில் அமர வேண்டும். தங்கள்
சொந்த வாழ்க்கையை நடத்தும் இவர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாடுகளில் எங்களின் அவல
நிலையை எடுத்துச் சொல்லி எங்களுக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரகர்களாக மாற வேண்டும்” என்றார்.

உண்மையச் சொன்னால் இவர்கள் நிஜப் போர் முனைக்குச் செல்லப் போவதில்லை. ஆனார் ஒரு
ராஜ தந்திர போர் முனைக்கு ( Diplomatic and/or Proxy Warfare-க்கு) தயாராகிறார்கள். இங்கே இருக்கும்
பலருக்கு தாய் தந்தையர் யார் என்று தெரியாது. உறவினர்கள் இருக்கிறார்களா என்பது தெரியாது.
அங்கிருக்கும் எல்லோருமே அக்கா-தங்கச்சி, அண்ணன் - தம்பி. விவரம் தெரியாத வயது. ஆகவே
குறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். காப்பகமும் எவ்வித குறையும் வைப்பதில்லை’ என்றார்கள்.

என்னை அப்படியே கட்டிப் போட்ட இன்னொரு செய்தி. வெளிநாடுகளிலிருந்து இந்தக் குழந்தைகளை
தத்தெடுக்க எத்தனையோ பேர் தயார். ஆனால் தத்துக் கொடுக்க நிர்வாகம் தயாரில்லை. “இவர்கள்
எங்களுக்கு ஒரு பாரமே அல்ல மாறாக பலம். மேலும், வெளிநாடுகளிலிருந்து தத்து எடுக்க வருபவர்
கள் இவர்களை மதம் மாற்றக் கூடும். பாலியல் இன்ன பிற  தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடும். ஒரு கொடுமைக்கு மேல் இன்னொரு கொடுமையா.. வேண்டாம் சுவாமிகளே வேண்டவே வேண்டாம்”
என்றார்கள். இவர்கள் தியாகிகள் மட்டுமல்ல மிக உயர்ந்த பண்பான மனிதர்கள் என்றெண்னிய போது சிலிர்த்துப் போனேன். (தொடரும்)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:00:01 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் -9

யாழ். எல்லை ஓரமான முகமாலை வரை சென்றோம். வழி நெடுக போரினால் ஏற்பட்ட
 அழிவின் கோரத் தாண்டவம். வழியில் ஒரு தென்னந்தோப்பு. ஒன்றிலாவது ஓலை என்ற
ஒன்றில்லை. எல்லாமே மூழியாக நின்றன. சில கருகி இருந்தன. அந்தத் தோப்பு எப்போது
செப்பனிடப் பட்டு எப்போது இத்தனை ஆயிரம் மரங்கள் இந்த அளவு உயர்ந்து  எந்த காலத்தில்
பலன் தரப் போகின்றன ?. -  எண்ணும் போது அந்த அழிவின் தாக்கம் நம்மை அழுத்தவே செய்கிறது.

பரந்தன் ரசாயனத் தொழிற்சாலையில் வரிசையாக இரும்புத் தூண்கள் மட்டும் மொட்டையாக
நின்றன. தொழிற்சாலை இருந்ததற்கு அடையாளமாக வேறெதுவுமே இல்லை. பக்கத்தில் ஒரு
காளி கோவில்.இடிந்து சிதிலமடைந்து கிடக்கிறது. இதன் பக்கத்துத் திடலில் தொழிற்சாலை
ஊழியர்கள் ஆதரவில் “லண்டன் கந்தையா” நாடகம் போட்டிருக்கிறோம். அத்தனை ஆயிரம்
பேர் கூடினார்களே அந்த மக்கள் எங்கே..?

கிளிநொச்சியில் ஒரு ராட்சச தண்ணீர் தொட்டி. கால்கள் போன்ற நான்கு தூண்களும் தகர்ந்து
போக அப்படியே முழுமையாக ‘நச்சென்று’ தரையில் அமர்ந்தாற்போல் இருக்கிறது. அவ்வளவு
உயரத்திலிருந்து அது விழுந்தும் அது சேதம் அடையாதது அதிசயம் . ஆனால் அது பயன்பாட்டில்
இல்லை. எதிரே உள்ள தபால்’கந்தோரில்’ அதன் பெயர் அறிவிப்புப் பலகையிலுள்ள  அத்தனை
எழுத்துக்கள் மீதும் குண்டுகள் பாய்ந்திருக்கின்றன..

மாடிகள் உள்ள வீடுகளே இல்லை எனலாம்.  அங்கே ஒழிந்திருந்து தாக்கக் கூடும் என்று மாடிகளை
அடித்து உடைத்திருக்கிறார்கள். மொட்டை மாடிகளையும் மொட்டை அடித்திருக்கிறார்கள். தரைத்
தளத்தை விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் தங்குவதற்குத்தான் ஆட்கள் இல்லை.

ஒரு விவசாய TRACTOR-ஐ ஒரு பீரங்கி TANK போல் ஜோடித்து எதிரிக்கு ‘தண்ணி’ காட்டி விட்டு,
பிறகு தாக்குதலில் சேதமடைந்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓர் ஓரத்தில்
நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இறங்கிப் பார்க்கலாம் என்றால், “ஐயா ரோட்டை விட்டு கீழ்
இறங்காதேயுங்கோ. இங்கெல்லாம் ஏகப் பட்ட கண்ணி வெடி புதஞ்சிருக்கு. கவனம்” என்றார்கள்

சற்று தூரத்தில் வயலில் கொஞ்சம் பேர் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடு பட்டு
இருந்தார்கள். உலகெங்கும் கண்ணி வெடிகளை அகற்றும் இயக்கத்துக்கு இளவரசி டயனாதான்
தலைவர். அந்த இயக்கத்திலிருந்து இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை
கொடுத்திருக்கிறார்கள். ஆனால் TRO  சர்வதேச அளவில் ஓர் அங்கீகரிக்கப்படாத அமைப்பு
என்பதால் அவை கிடைக்கவில்லை. வெற்றுடம்போடுதான் பணி செய்கிறார்கள்.

வயலில் தண்ணீர் பாய்ச்சி சகதியாக்கி ஒவ்வொரு கண்ணி வெடியாக அகழ்ந்தெடுத்து செயலிழக்கச்
செய்கிறார்கள். இது கரணம் தப்பினால் மரணம் சங்கதி. தப்பித் தவறி தெரியாமல் ஒன்றை மிதித்து
விட்டோமோ கை போகுமோ, கால் போகுமோ அல்லது உயிரே போகுமோ தெரியாது.

’இவைகள் புலிகளால் புதைத்து வைக்கப் பட்டதா ? “ என்று கேட்டேன். ”இல்லை ஐயா, அப்படி என்றால்
தான்  வரை படத்தை வைத்துக் கொண்டு குறுகிய காலத்தில் அகற்றி விடுவோமே. இவ எல்லாம்
ஆமிக்காரங்கள் வைத்தது. மேலும் புலிகளது மரக் கட்டையால் ஆனது. காலப் போக்கில் மக்கிப்போகும்
ஆனால் பாகிஸ்தான் சீனாக்காரங்களோட கண்ணி வெடிகள் ஏறக் குறைய தொண்ணூறு ஆண்டுகள்
அழியாது” என்றார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளு முன்பே இன்னொரு ‘வெடி குண்டை’ வீசினார்கள்.

மற்ற கண்ணீ வெடிகளை மிதித்தால் மிதித்தவர் மட்டுமே பாதிக்கப் படுவார். ஆனால் சீனாக்காரன் கண்ணி
வெடியில் ஒரு Mini-rocket  பொருத்தப் பட்டிருக்கும் அதை மிதித்தால் சுற்றிலும் இருக்கும் 120 மீட்டர்
தூரத்துக்கு சர்வ நாசம் தான்.மற்றவர்கள் சாகாமல் இருப்பதற்காக சாவின் முனையில் நின்று கொண்டு
இவர்கள் ஆற்றும் பணியின் மகத்துவம் வார்த்தைகளில் அடங்கக் கூடியவை அல்ல.

TRO-வில் இரண்டு புலம் பெயர்ந்தயாழ். தம்பதியர், நான், ஓர் ஐரோப்பிய நிருபர் மற்றும் நிவாகிகள் என
பத்துப்பேர். உணவருந்து முன்பு அங்கிருந்த காட்சி சாலையை சுற்றிப் பார்த்தோம். ஈழம் அமைந்தால்
எந்தெந்தப் பகுதி கமத் தொழிலுக்காக ஒதுக்கப் படும் அதற்கான நீர்த் தேக்கம் எங்கே அமையும். தகவல்
தொடர்பு கோபுரங்கள் எங்கெங்கே அமையும். அது போல மின் வசதிகள் - தொழிற்சாலைகள் என்று ஓர்
 உன்னதக் கனவின் MINIATURE  வடிவங்கள் அங்கே இருந்தன.

”உலகத்திலேயே புத்திசாலிகள் இஸ்ரேலியர்கள். இந்தியாவில் பிராமணர்கள். இவர்கள் யாரையும் விட
எங்க யாழ்ப்பாணத்து ஆக்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல” என்றார் யாழ் பெண்மணி. ஆனால் படிப்பு -
உத்தியோகம் - திருமணம் - பிள்ளகுட்டிகள் என்று ஒரு கட்டத்தோடு நின்று போவார்கள்” என்றார் கணவர்.
”எப்படிச் சொல்கிறீர்கள் ?” என்று கேட்டேன்.  இப்போ பாத்தீங்க தானே இதெல்லாம் முடியும் ஆனால் எங்கட
வங்க முயற்சிக்கிறாங்கள் இல்லை” என்றார் பெண்மணி. ஆனால் ஐரோப்பிய விருந்தாளி ”இவர்களிடம்
 நிர்வாகத்தைக் கொடுத்தால் இங்கே இன்னொரு இஸ்ரேலையே உருவாக்கிடுவார்கள்” என்றார் -  “இது சற்று
 அதீதமாகப் படவில்லையா?” என்று கேட்டேன். “ உங்களுடைய  சக்திபற்றிஉங்களுக்கு இதுகாறும் தெரியாது
இனித் தெரிந்து கொள்வீர்கள் என்று போட்டாரே ஒரு போடு. இவரிடம் மட்டுமல்ல சமாதானத்துக்குப் பிறகு
 எங்கும் ஓர் UP-BEAT MOOD  நிலவுவதைக் கண்டேன்.

உணவு செல்லவில்லை. கண்ணால் கண்டவற்றை அசை போட்டதால் கனத்துக் கிடந்தது மனசு. அலைந்ததால்
அல்ல,  கண்டவற்றால் அலுத்துக் களைத்து, உடலும் மனமும் சோர்ந்து போக பொருண்மிய தலைமைப் பீடத்தை
சென்றடைந்தேன்.(தொடரும்.)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:00:30 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 10

”ஐயா ரொம்பக் களச்சிட்டீங்க போலகெடக்கு” தமிழ்ச்செல்வன் தனது ‘ட்ரேட்-மார்க்’
மந்தகாசப் புன்னகையுடன் வரவேற்றார். ஒரு ‘வோஷ்’ எடுத்தால் சரி ‘ ஃப்ரஷ் ஆயிடுவியள்”
‘வோஷுக்கு’ எங்கே போவது என்று நான் முழிப்பதைப் பார்த்து Conference அறையைத் திறந்து
தந்தார். ஓர் உயர்தர CORPORATE  நிறுவனத்தின் Board-room  போல அவ்வளவு நேர்த்தியாக -
பிரம்மாண்டமாக இருந்தது. பக்கத்திலேயே ஒரு சிறிய ஓய்வறை மற்றும் குளியல் அறை.

தண்ணீர் இளம் சூட்டில் இருந்தது. தலைக்குக் குளிக்கவில்லை.முகம் அலம்பி மேல் கழுவிக்
கொண்டேன். உடைகளை நன்றாக உதறிப்போட்டு உடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது
தமிழ்ச் செல்வன் “கோப்பியோ, டீயோ” என்றார். நான் சைகை மூலம் எதுவானாலும் சரி என்றேன்.
புல்வெளியில் போடப் பட்டிருந்த ‘கதிரை’ (நாற்காலி)-களில் அமர்ந்தோம்.

“வெள்ளன வெளிக்கிட்டீங்களெண்டால் மதியத்துக்கு மேல கொழும்பு போய்ச் சேர்ந்துடலாம்.
அதுவர உங்களக் கொண்டு விடலாம் என்று பார்த்தனான். ஆனா இங்கிருந்து வண்டிகள் போக ஏலா.
அங்கிருந்து வந்து திரும்பலாம். ஆனா வெற்று வண்டியை வர விடமாட்டாங்கள்  எல்லை வரை
தான் வர முடியும்” என்ற போது, “ அது போதும்” என்றேன் நான்.

இப்படித்தான் கொழும்புலேருந்து உங்களை கூட்டிக் கொண்டு வர ஏலாமல் போச்சு. நீங்க  வர்ரதா
IBC   ஆக்கள் சொல்லிச்சினம். எங்கட Air-port source  நீங்க வந்துட்டதா சொன்னவ. உங்களத் தேடிப்
பிடிக்கிறதுக்குள்ளே நீங்க கொழும்பு போயிட்டீயளாம். சரி. Immigration Form-ல் அவர் தந்திருக்கும்
Address-ஐ  தேடிப் பிடிச்சி அவரப் பிடியுங்கோ எண்டு எங்கட SOURCE-க்கு சொன்னன். அதுக்குள்ளால
 நீங்கள் “தினகரன்”  ஆக்களோட வர்ரதா எங்களுக்கு தகவல் வந்திடுச்சி. பேந்து வரட்டும் பார்த்துக்
 கொள்ளலாமெண்டு  இருந்துட்டோம்” என்றார் படு’கூலாக’ !!!

எனக்கு தலை கிறுகிறுத்தது. என்னுடைய ஒவ்வொரு அசைவையும் இவர்கள் துல்லியமாகக் கை
நுனியில் வைத்திருக்கிறார்கள் என்றால் இது எத்தகைய NET-WORK ..? என்னுள் முகிழ்த்த மலைப்பும்
திகைப்பும் என் முகத்தில் பிரதி பலித்திருக்க வேண்டும். அதை உன்னிப்பாகப் பார்த்து ரசித்து புன்னகை
பூத்தவண்ணம் இருந்தார் தமிழ்ச் செல்வன். அப்போது ‘பொட்டு’ அம்மானும் மாஸ்டரும் வந்து எங்களுடன்
சேர்ந்து கொண்டார்கள்.

அப்போது  WIRE-LESS-SET உருமும் தொனியில் சிணுங்கியது. எடுத்துக் கேட்டு விட்டு, “என்னோலுங்கோ.
எங்க தலைவர் யாரை எங்கே எப்போது எந்த இடத்தில் சந்திப்பார் எங்கிறதை நாங்கள் ஒருத்தரிடத்தும்
 சொல்றதில்லே” என்று ‘சஸ்பென்ஸ்’ விட்டு நிறுத்தியவர், “ இன்று உங்கள சந்திக்கப் போறார்” என்று தன்
 வழமையான சிரிப்பின் மூலம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம். தொண்டைக்குழியில் ஏதோ வந்து சிக்கிக் கொண்டது போன்றதோர்
உணர்வு. மீண்டும் வயர்லஸ் செட் சிணுங்கியது. அதைக் கேட்டுக் கொண்டே சிறிது தூரம் நடந்து விட்டுத்
திரும்பிய தமிழ்ச் செல்வன், “ என்னோலுங்கோ’ என்றபோது சரிதான் நிகழ்ச்சி ரத்து என்று நான் நினைத்தேன்.

ஆனால் அவரோ “ நீங்கள் அவரச்செண்டு பாக்குறது மரியாதை இல்லையாம். அதனால் அவரே இங்கு வருகிறார்”
என்ற போது என் கால்களுக்கடியில் தரை இருக்கிறதா என்று சற்று உதைத்துப் பார்த்துக் கொண்டேன். சற்று
நேரத்தில் ஒரு  BRAND  NEW  JAPANESE 'HIGH-ACE' VAN  சீறிக் கொண்டு வந்து அந்த வளாகத்தினுள் நின்றது.


காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:02:00 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 11

ஜூனியர் விகடனின் அந்த இதழ் அட்டைப்படமும் இதுதான்.
உள்ளே அட்டைப்படக் கதையும் இதுபற்றியது தான்.

என் தொடரில் சந்திப்பில் நடந்ததை இனித்தான் சொல்லப்
போகிறேன்.

Inline image 1

Magazine.jpg

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:03:05 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம்-12

ஆஜானுபாகுவான - ஆயுத தாரிகளான - நான்கு இளைஞர்கள் வேனிலிருந்து
துள்ளிக் குதித்து வெளிவந்து,கச்சிதமாக இடைவெளி விட்டு சிலைபோல்
நின்றனர். ஓட்டுநர் வண்டியை விட்டு இறங்கி அதை ஒரு முழுச் சுற்று சுற்றி
வந்தார். பிறகு திறந்த  வெளியை நோக்கிய கதவையல்ல, மாறாக சுவற்றை
நோக்கிய கதவைத் திறந்து விட்டு பவ்யமாக ஒதுங்கி நின்றார்.

ஓர் ஐந்தாறு அடி எடுத்து வைத்த பின் கண்ணுக்கு நேராகப் பிரத்யட்சப் பட்டார்.
படங்களில் மட்டுமே பார்த்துப் பார்த்து பரிச்சயப் பட்ட ஓர் உருவம் இப்போது
உயிர்த்துடிப்புள்ள மனிதனாக கண்ணெதிரே  ..! அதிக உயரமில்லை. ஆனால்
கனகச்சிதமான ஆண்மை மிகு தோற்றம். ராணுவ உடையில் இன்னும் மிடுக்கு.


குழந்தையைப்போல் ஓடிச் சென்று கட்டிப் பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய
அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் -
எண்ணத்தையும் - கட்டுப் படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை
நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து
அப்படியே கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். !
இன்னும் பிடி இறுகிறது. “ நான் உங்கள் பரம ரசிகன் ஐயா” என்கிறார்.

அந்த அன்புப் பிடியில் என் படபடப்பு சற்று அடங்கியது. பிடி தளர்ந்ததும் பழைய
நிலைக்குத் திரும்பி ஆஸ்வாசமானேன்.” எண்பதுகளில் உங்கள் தமிழ் வர்ணனைக்கு
பரம ரசிகன். இப்போது உங்கள் “இந்தியக்  கண்ணோட்டம் நிகழ்ச்சிக்கு !!. எங்கிருந்து
இவ்வளவு விவரம் திரட்டுகிறீர்கள் ஐயா.?” உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அந்தப்
பாராட்டை ரசித்தேன். ஆனால் சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை.

சட்டென்று எதையோ கவனித்த மாதிரி, “ என்ன பவா, ஒளிஞ்சு நிண்டு கொண்டு படம்
எடுக்கிறீர். இப்படி நேரா வந்து நிண்டு வடிவாய் எடும். ஒண்டல்ல ரண்டு”. அந்த பவநந்தன்
எடுத்த படம் தான் இங்கே நீங்கள் காண்பது. படப்பிடிப்பு முடிந்ததும்,” தமிழ்,  இவியள
அறிமுகப் படுத்திப் போட்டீர் தானே, ஐயா, வாருங்கோ சாப்பிட்டுக் கொண்டே கதைப்போம்”
 என்ற போது எனக்கு ஆச்சரியமா ஆச்சரியம்...!!!

பொருண்மியத்தின்  நடுக் கூடம். விசாலமான மேசை. பல்வேறு ஜீவ ராசிகள் பல வகையான
உருவங்களில் அங்கு உணவாகப் பரிணமித்திருந்தன. சாப்பாட்டுப் பிரியர்கள் மகிழ்ந்து போய்
இருப்பார்கள். அத்தனை வகை !!!. அமர்ந்ததும் சொன்னார். “ இந்த நிகழ்ச்சி காரணமாக ஒரு வார
காலமா நல்லா சாப்டவும் இல்லே. நல்லா தூங்கவும் இல்லே. இண்டைக்கு வடிவா சாப்பிடப்
போறேன். ஐயா, நீங்களும் நல்லா சாப்பிட வேண்டும். உங்களுக்காக தருவிக்கப் பட்ட ‘ஹலால்’
(ஆகுமான) உணவு.” !!!” என்றார் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அவர்கள் செலுத்தும் அக்கறையும் -
கரிசனமும் - என்னை மலைக்க வைத்தது.

குதூகலமான மனநிலையில் இருக்கிறார் என்பது புரிந்தது. “ஐயா,இவருக்கு எப்படி ‘பொட்டு அம்மான்’
எண்டு பேர் வந்தது தெரியுமோ... என்ற போது, “ சும்மா இருங்கோ கால  வராதீங்கோ என்று பொட்டு
குறுக்கிட்டார். கலகவென்று நகைத்து விட்டு, “ஐயா,.இவர் எடுத்ததுக்கெல்லாம் கத்தியை எடுத்துக்
 கையைக் கீறிக்  ரத்தத்தை எடுத்து பொட்டு வைத்துக் கொண்டு சபதம் போடுவார். அதச் செய்து
 முடிப்பார் அது வேறு...ஒரு நாள் அப்படிச் செய்த போது நரம்பு அறுபட்டுப்போயிட்டது. ரத்தம்
நிக்கேலே..பயந்து போனார்.. பேந்து வைத்தியம் செய்து குணமானார்”. என்று முடித்ததும், “பேந்து
காய் கறி வெட்டக் கூட அவர் கத்தியத் தொடெவேயில்ல” என்று தமிழ் இடையில் புகுந்தார். அதைத்
தொடர்ந்த அந்தக் கூடம் முழுக்க எதிரொலித்த சிரிப்புச் சப்தம் அடங்க வெகு நேரமாயிற்று.

(தொடரும்)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:03:41 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம்-13

’இரண்டே முக்கால் மணி நேரம் - 165 நிமிடங்கள் - அப்படி என்னதான்
பேசினீர்கள்..?’  என்று ஒரு நண்பர் கேட்ட போது, ‘செக்சையும் சினிமா-
வையும் தவிர வேறு எல்லா விஷயங்கள் குறித்தும் பேசினோம்” என்று
சொன்னதாக ஞாபகம். உண்மையும் அதுதான்.

ஒரு கட்டத்தில், “இன்று தமிழக சட்ட மன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு
எதிராக ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. அந்த மனுஷிக்கு எங்கள்
மேல் ஏனிந்தக் கோபம்..அப்படி நாங்கள் என்ன செய்து போட்டம்” என்றவர்
அடுத்த வாரம் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று அறிந்துகொள்ள
காத்திருப்பேன்” என்றார்.

’தமிழகத்தில் சில கட்சிகளுக்கு இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று மத்திய
அரசை நோக்கி ! மற்றது தமிழக மக்களை நோக்கி !! முன்னதில் தாங்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்வார்கள்
பின்னதில் ஈழத் தமிழர் விஷயத்தில் எங்களுக்கு எப்போதுமே அக்கறை
உண்டு என்று காட்டிக் கொள்வார்கள். விடுதலைப் புலிகள் பிரச்னை வேறு
ஈழத் தமிழர் பிரச்னை வேறு என்றும் முழங்குவார்கள். இவை Passing
Clouds. இடி இடிக்கும். மின்னல் வெட்டும் ஆனால் மழை பெய்யாது’ இப்படித்
தான் சொல்லி இருப்பேன்’ என்றேன்.

“ஐயா நீங்கள் கொழும்புக்கும் போக வேண்டும், இந்தியாவுக்கும் திரும்ப
வேண்டும்” என்று உங்கள் ஒலிபரப்பு ஒன்றிலேயே சொல்லி இருக்கிறீர்கள்”
என்ற போது, “ உண்மை. இதை நான் எப்போதும் கவனத்தில் வைத்திருப்பேன்.
நான் இந்திய இறையாண்மையை அவமதிப்பதில்லை.தலைவர்களின்
கொள்கைகளை விமர்சிப்பேனே தவிர அவர்களை தனிப்பட்ட முறையில்
கொச்சைப் படுத்த மாட்டேன். இந்த வட்டத்தில் நின்று கொண்டு, காய்தல்
உவத்தலின்றி தேர்ந்தெடுத்த சொற்களால் என் கருத்துக்களை துணிந்து முன்
வைப்பேன்”  என்றேன்.

“ஓமோம்...எங்களையும் கூட விமர்சித்திருக்கிறீர்கள். விறுப்பு வெறுப்பை விட
அந்தக் ‘காய்தல் உவத்தலின்றி என்று நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.”

“எங்களையும் கூட” என்றால் நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா..?”
சட்டென்று கேட்டு விட்டேன். சடுதியில் ஓர் அமைதி. கத்தியால் வெட்டி எடுக்கலாம்
போன்ற அப்படி ஒரு கனத்த அமைதி. எல்லோர் பார்வையும் என் மேல் விழுந்தன.
சடுதியில் கல கலவென்று சிரித்துக் கொண்டே “ அதுதானையா நீங்கள் !!! என்றார்.

பிறகு தமிழ் பற்றித்தான் அதிகக் கவலையுடன் பேசினார்.” முன்பு தமிழாக இருந்தது
தான் காலப் போக்கில் தெலுங்கு - கன்னடம் - மலையாளம் என்று மருவியதாக
படிச்சவங்க  சொல்லினம். அப்படிப்பார்த்தால் இப்போது இலங்கைத் தமிழ்- இந்தியத்
தமிழ் - சிஙப்பூர் தமிழ் - மலேசியத்தமிழ் - புலம் பெயர்ந்தோர் தமிழ் எண்டு இருக்கக்
கூடிய நிலை போய் இவை வெவ்வேறு மொழிகளாகப் போய் விடுமோ என்று ஒரு
பயம் வருகிறது. இங்கே ‘காப்புறுதிக் கூட்டுத்தாபனம்” எண்டு சொல்றத நீங்கள்
‘காப்பீட்டுக் கழகம்” எண்டு சொல்றியள்... இப்படி கனக்க...! என்றார்

“உண்மைதான்... எல்லா மொழிகளுக்கும் ACADEMY  என்ற ஒன்று இருக்கிறது. தமிழுக்கு
அது இல்லை. எல்லா பிரதேசங்களும் சேர்ந்து எல்லாரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஓர்
அமைப்பை ஏற்படுத்தி இன்ன பயன்பாட்டுக்கு இன்ன சொல்லைத்தான் பயன்படுத்தலாம்
என்று அவர்கள் தீர்மானிப்பார்களேயானால் உலகம் முழுவதும் மக்கள் அதையே பின்
பற்றக் கூடும்” என்றேன்.

நல்ல யோசனை... ஆனால் தமிழ் நாட்டுல ஏனய்யா இப்படி தமிழக் கொல்றாங்கள்..?
என்ற போது, “ அது பல்வேறு மொழி பேசும் மக்கள் சங்கமிக்கும் ஓர் அழிந்த குட்டை.
அது அப்படித்தான் இருக்கும். ஆனால் செங்கல்பட்டுக்குத் தெற்கே ஒரு தமிழகம்
இருக்கிறது. அங்கே அது கிராமீய மணத்துடன் வேறூன்றி - விழுதூன்றி - பந்தலிட்டுப்
படர்ந்திருக்கிறது. அதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது” என்றபோது
என்னைத் தவிர மீத நால்வரும் தங்களை மறந்து உற்சாக மிகுதியால் கை தட்டினர்.

”அதோட, ஆங்கிலத்த தமிழ் படுத்துறோம்னு சொல்லி சிலர் கடபுடா தமிழ் பேசுறதும்
நல்லா இல்ல.. நல்லதும் இல்ல.. தமிழ் ஓர் அழகான மொழி அதில் வந்து சேரும் கலைச்
சொற்களும் அழகாக இருக்க வேண்டும் என்றார். ‘ பொறுங்கள் வருகிறது” என்றேன்.

(சம்பாஷணை தொடர்கிறது)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:04:10 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் 14

மேலைத் தேயத்தவர் Refrigerator - ஐயே  FRIDGE என்று சுருக்கி  விட்டார்கள்
நாம் இன்னும் ‘குளிர்சாதனப் பெட்டி’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரி
வராது. அதனால் தான் இப்போது அதற்கு ‘குளிர்மி” என்ற சொல்லைப் பயன்
படுத்தலாம் என்று யோசனை சொல்கிறார்கள் என்றபோது, “ அப்படியானால்
A/C-க்கு  புதிய தமிழ்ச் சொல்  ஏதும் இருக்கிறதா ?” என்று கேட்டார். அதற்கு
நான்,”இருக்கிறது ‘தண்மி” என்றேன்.

ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தவர் “உங்கள் கண்டு பிடிப்பா ?” என்று கேட்டார்.
“இல்லை, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தது” என்றேன். நான் என்னுடைய
கண்டுபிடிப்பு என்று சொல்வேன் என்று எதிர்பார்த்தோரோ என்னவோ என்னை சற்று
விநோதமாகப் பார்த்து விட்டு ஒரு மென்னகை புரிந்தார்.

“எசகு பிசகென்று சொல்கிறோமே அதற்கு பொருள் தெரியுமா..?” என்று கேட்டேன்.
“சாதாரண மொழி வழக்கில் நாம் சொல்வது தான் இல்லையா..மலையாளத்தில்
பிசகு என்றால் பிழை என்று தெரியும்.மற்றபடி கை கால் பிசகுவது கேள்விப்
பட்டிருக்கிறேன். ஆனால் எசகு என்றால் என்ன வென்று தெரியாது” என்றார்.

“எதிர்ப்புச் சக்தி நோயை AIDS  என்கிறார்கள். இது Acquired Immuno Deficiency Syndrom
என்ற நான்கு சொற்களின் சுருக்கம். அதை தமிழில் எதிர்ப்புச் சக்தி நோய் - எ.ச.கு
நோய் என்று குறிப்பிடலாமே..! ‘ என்றபோது அதை ரசித்துச் சிரித்தார்.  பிறகு
”உங்களைப் போன்ற தமிழறிஞர்கள் இருக்கும் போது நாம் கவலைப் படத் தேவை
இல்லை. தமிழுக்கு ஓர் ஆபத்தும் வராது” என்றார்.

“ ஐயையோ... நான் ஒன்றும் தமிழறிஞன் அல்ல. கல்லூரிப் படியைக் கூட நான்
மிதித்தது கிடையாது. அதைச் செய்ய ஆன்றோர்களும் சான்றோர்களும் இருக்கவே
செய்கிறார்கள். அவர்கள் தான் தமிழ் வாழ - வளர தோள் கொடுக்க வேண்டும்” என்றேன்.

”நாங்கள் செய்வோம். எம் முக்கிய லட்சியங்களில் அதுவும் ஒன்று “ என்ற போது அந்தக்
 குரலில் தொனித்த அசாத்திய நம்பிக்கை  என் காதுகளில் இன்னும் ரீங்கரிக்கிறது.

“நல்லது. விடை தாருங்கள் ஐயா. நேரம் போனதே தெரியவில்லை. இந்த நிமிடங்கள்
என் வாழ் நாளில் மறக்க முடியாத தருணங்கள். என்றும் நினைவில் வைத்திருப்பேன்”
என்று என் கரங்களை அவர் பற்றிய போது, “ தமிழ் வாழ - தமிழர் வாழ உங்களுக்கு என்
வாழ்த்தும் பிரார்த்தனையும்” என்ற போது, “ எனக்கல்ல, என் அணிகளுக்காகப்
பிரார்த்தியுங்கள்” என்றார். “  You are the personification of the whole lot "   என்றேன். அப்படியே
என்னைக் கட்டிப் பிடித்து, கைகுலுக்கி விடை பெற்றார். அது போலவே மாஸ்டரும்,
பொட்டுவும்..! அவர்கள் செல்லும் திக்கைப் பார்த்து பிரமிப்புடன் நான் நின்று கொண்டிருந்தேன்.

என் கூட நின்ற தமிழ்ச் செல்வன், “ ஐயா, எங்கட பொடியளிடம் சில முக்கியமான பொறுப்புகளை
ஒப்படைப்போம். அவர்கள் அதற்காகப் புறப்படும் முன்பு தலைவருடன் இருந்து தான் உணவருந்தி
விட்டுச் செல்வார்கள். தலைவரை மீண்டும் பார்க்க மாட்டோம் என்பது அவர்களுக்கும் தெரியும்.
தலைவருக்கும் தெரியும். என்றாலும் சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாகவே பிரிவோம்.”
என்று நிறுத்திய தமிழ்ச்செல்வன், சற்று இடைவெளி விட்டு, ஒரு குறும்புச் சிரிப்புடன், “ இன்று நீங்கள்
சாப்பீட்டு இருக்கிறீர்கள்” என்ற போது எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் அதில் தொக்கி நின்ற சோகமும்
யதார்த்தமும் அந்தச் சிரிப்பை இல்லாமலாக்கி விட்டது.

தொடர்ந்து, “ ஐயா, அடுத்திருக்கும் விருந்தினர் இல்லத்தில் தான் உங்களுக்கு படுக்கை ஏற்பாடு செய்யப்
பட்டிருக்கிறது. பவாவும், ட்ரைவரும் உங்களுடன் தான் இருப்பார்கள். காலையில் உங்களுக்கு எப்போது
 வசதியோ அப்போது புறப்பட்டுப் போகலாம்” என்ற போது அவரது விழியோரங்களில் நீர் கோர்த்தது. ஆட்
காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து  கண்களில் வைத்து அழுத்தி கண்ணீர் வராமல் தடுக்க
முயன்றார்.   ஆனால் அந்தக் கண்ணீர் அவரது விரலை நனைத்தது. எத்தனையோ ஆண்டுகாலம் சேர்ந்து
இருந்த ஓர் உறவைப் பிரிவது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. “ ஐயா விடை தாருங்கள் “ என்ற
போது அவரது குரல் தழு தழுத்தது. என் கண்களில் கண்ணிர் வந்தது. அதை நான் துடைக்க முயலவில்லை.
இன்று நினைத்தாலும் அந்த இனம் தெரியாத சோகம் என் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும்..!

(இன்னும் கொஞ்சம் தான்.....வரும்...! )

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:04:38 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 15

வீடு எளிமையாக - அழகாக - வெகு நேர்த்தியாக - மிக முக்கியமாக படு சுத்தமாக
இருந்தது. காண்பனவற்றில் எல்லாம் ஒரு வித கட்டுப்பாடும்- அழகும் - நேர்த்தியும்
சுத்தமும் இருந்தன. கிடைக்கும் இடங்களிலெல்லாம் புல் தரைகள் -பூஞ்செடிகள்..!!!
இவை ஒப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் மிக நன்றாக பராமரிக்கப் படுவது மிகத்
துல்லியமாகத் தெரிந்தது ஒரு சிறு துண்டு காகிதம் கூட எங்கும் தரையில் கிடப்பதைப்
பார்க்க முடியாது. எல்லோரும் மிக கச்சிதமாக உடையணிந்து கம்பீரமாகத் தோற்றம்
அளிக்க வேண்டும் என்பதிலும் பிரபாகரன் மிகக் கண்டிப்பு என்று சொன்னார்கள்.

கோடை காலம் என்றாலும் சற்றுக் குளிர் இருந்தது. மின் விசிறியைப் போட்டால்
அது இன்னும் அதிகரித்தது போடா விட்டால் ஈயின் அளவுக்கு இருக்கும் கொசு
நம்மை ஒரு வகை பண்ணி விடும் போல் தோன்றியது மேலே கூடாரம் போல்
தொங்கிய கொசு வலையை அவிழ்த்து விட்டார்கள். அது படுக்கை முழுவதையும்
 நன்றாக மூடி மறைத்துக் கொண்டது.

படுக்கை பரம சுகம். தூங்க முயன்றேன். முடியவில்லை. அன்று முழுவது நடந்த
சம்பவங்கள் நினைவுத் திரையில் ஒவ்வொன்றாக அணி வகுத்தன. இப்போதைய
சமாதானம் மிகுந்த ஆஸ்வாசம் தருகிறது. இதுவே நிரந்தரமாக நிலைத்து விட
வேண்டும் என்கிற ஆசை நெஞ்சில் முகிழ்க்கிறது. அப்படியே ஆகட்டும் இறைவா
என்று மனம் உருகுகிறது.

எலோருக்கும் சாவு என்பது நிச்சயம் தான். ஆனால் அதை தினம் தினம் கண் முன்னே
கண்டு கொண்டு வாழ்வது எவ்வளவு கொடுமை. நாளை என்பதல்ல, அடுத்த கணம்
கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றால் எதைத் திட்டமிட முடியும். ? எப்படி
வாழ்க்கையை நடத்த முடியும்..?இந்த மனிதர்கள் வளர்ந்து வாலிபமாகி வாழ்க்கையை
எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இவர்களை இப்படி அந்தரத்தில் தொங்க விடுவதை
விட அவர்களைக் கருவிலேயே கொன்றிருக்கலாமே இறைவா என்றெண்ணிய போது
வெடித்துக் கதறி விட்டேன்.

பதறிப்போய் ஓடி வந்த பவநந்தன் என் கட்டிலருகே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு,”ஐயா
என்னாச்சு... என்னாச்சு...” என்றபடி என் கரங்களைப் பற்றினார். அது நடுங்கிக் கொண்டிருந்தது.
எழுந்து உட்கார்ந்து அந்த இளைஞனின் தோள்கலைப் பற்றிய போது அந்த நாட்டின் அத்தனை
இளம் குருத்துக்களும் என்  மனக் கண் முன்னே அணிவகுத்தார்கள். “பவா உங்கள் மக்களின் விதி
நல்ல விதியாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்ற போது என் மடி மீது தலை
புதைத்து அழ வேண்டியது  இப்போது பவ நந்தனின் முறையாகியது. என்னைக் கட்டுப் படுத்திக்
 கொண்டு அந்த இளஞனை ஆஸ்வாசப் படுத்தினேன்.

பிறகு எப்படித் தூங்கிப் போனோம் என்று தெரியாது. ஒரு சேவலின் கூவல் கேட்டு கண் விழித்தேன்.
அந்த அமைதியான நேரத்தில் அதன் குரல் கணீரென்று கேட்டது. குளியலறையும், கழிப்பறையும்
வெளியே கொல்லையில் இருந்தன. விளக்கு ‘சுவிட்ச்’ எங்கிருக்கிறது என்று தெரிய வில்லை.
யாரையும் தொந்தரவு செய்யவும் விருப்பமில்லை. ஆனால் பக்கத்து பொருண்மிய மையத்தின்
 முற்றத்திலிருந்த உயரமான கம்பத்திலிருந்து வீசிய மென்னொளி  காரிருளின் கனத்தை சற்றுக்
 குறைத்தது. சற்று நேரத்தில் கண் இருட்டுக்கு பழக்கப் பட்டுப் போய் விட்டது.

விஷ ஜந்துக்கள் ஏதும் இருந்தாலோ என்று ஒரு சிறு ஐயம். ஆனால் ஆட்கள் அதிகம் புழங்கும்
இடத்தில் அவை இருக்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் காலைக்  கடன்களை முடித்தேன்.
குளிக்கத் தண்ணீர் பிடிக்க ஒரு பாத்திரமும் இல்லை குவளையும் இல்லை ‘ஷவரும்’இல்லை.
ஆனால் ‘பைப்’ ஒருவர் அதன் அடியிலிருந்து குளிக்குமளவுக்கு சற்று உயரத்தில் இருந்தது.
அலுப்பு தீரக் குளித்து தலையை துவட்டிக் கொண்டே வீட்டினுள் நுழைந்த போது பவநந்தன்
’கோப்பி’ யோடு காத்திருந்தார்.

“ஐயா, வழி நெடுக உள்ள எங்கட பாதுகாப்பு ஆக்களுக்கு நாங்க வாறது பற்றி நேற்றே தமிழ்
அண்ணா சொல்லிப் போட்டார். எண்டாலும் கொஞ்சம் விடிஞ்சு போறது நல்லது. கொஞ்சம்
பொறுங்கோ இதோ குளிச்சுப் போட்டு கெதியா வாறன்” என்று அந்த இளைஞன் சுறுசுறுப்பானான்.

ஏராளமான புகையை கக்கிக் கொண்டு மண்ணெண்ணையில் ஓடும் அந்த  AUSTIN  -  A -  70  கார்
புறப்பட்டது. கிளிநொச்சி சென்றபோது மஞ்சளும் காவியும் கலந்த நிறத்தில் புலிகள் பேருந்து
சேவையின் பேருந்து ஒன்று எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. அந்த இளம் காலை
நேரத்திலும் மக்கள் கூட்டம் இருந்தது. செம்மண் சாலை. ஒரு வாகனம் சாதாரணமாகச் செல்லலாம்.

எதிரே ஒரு பேருந்து வந்தது. முன்னால் சென்ற ட்ரைவர் பக்கவாட்டில் சற்று இடம் கிடைத்த இடத்தில்
நிறுத்தி விட்டு மற்ற பேருந்துக்கு வரும்படி சைகை செய்தார். அந்தப் பேருந்து கடந்து சென்றதும்
எங்களிடம் வந்து, “நீங்க வேணுமெண்டால் முன்னால் போங்கோ நான் பொறகால வாறன்” என்றார்.
பவா சம்மதிக்கவில்லை. ”அவியளும் கெதியாப் போக வேணும் தானே. நீங்க போங்கோ நாங்க
பொறகால வாறம்” என்றார். பொது மக்கள் மீது அவருக்குள்ள கரிசனம் என்னைக் கவர்ந்தது.

எனக்கு இரண்டு ஊர்கள் நினவுக்கு வந்தன.ஒன்று லண்டன்.மற்றது சென்னை. லண்டனில் தெருவின்
இரு மருங்குகளிலும் கார்கள் நிறுத்தப் பட்டிருக்கும். அதிக விசாலமில்லாத நடுப்பகுதியில் எதிரும்
புதிருமாகக் கார்கள் வரும். இருவரும் காரை சற்று ஒதுக்கி நிறுத்திக் கொண்டு ஒருவரை ஒருவர்
போகச் சொல்லி சமிக்ஞை செய்வார்கள். கடைசியில் ஒருவர் கடந்து செல்வார்.போகிற போக்கில்
காரின் ‘ஹோர்னில்’ ஹொங்க் என்று ஓர் அழுத்து அழுத்தி விட்டுப் போவார். அதன் பொருள் “ நன்றி”
என்பதாகும். அந்தப் பண்பைத்தான் இங்கு கண்டேன். உலகத்திலேயே மிக  மோசமான காட்டுமிராண்டி
சென்னை ஓட்டுநர்கள் லண்டனைப் பார்த்துப் பாடம் படிக்க வேண்டாம். வன்னியைப் பார்த்து பாடம்
படிக்கலாம் என்று தோன்றியது. ( பயணம் தொடர்கிறது.)

காமேஷ்

unread,
Aug 30, 2012, 10:05:18 PM8/30/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் -16

அடுத்த நிறுத்தம் முறிகண்டி பிள்ளையார் கோவில். அதற்கு எதிரே உள்ள
கடையில் தான் காலை ஆகாரம். பன் - பழம் - தேநீர் ஆகியவைதான்
சாப்பிடுகிறாற்போல் இருந்தது. ஆளுக்கு ஒவ்வொன்று சாப்பிட்டோம்.
காசு வாங்க மறுத்தார். “போகும்போது கதச்சுப்போட்டுப் போனியள். பேந்து
ஒங்களப் பத்தி விசாரிச்சனான். ஒங்களக் கண்டதில் சந்தோஷமையா....”
நாங்கள் சாப்பிட்டது சிறிய தொகையானாலும் அவருக்கு அது பெரிய காசு.
என்றாலும் விருந்தோம்பும் பண்பு அவரை அவ்வாறு செய்யத் தூண்டி
இருக்கிறது. கட்டாயப் படுத்தி காசை கொடுத்து விட்டு வந்தோம்.

அடுத்துச் சென்றது நீள வசத்தில் கூரை வேய்ந்த விடுதலைப் புலிகளின்
சுங்கம் மற்றும் சோதனைச் சாவடி. கொழும்பு - வவுனியா முதலிய
இடங்களுக்குச் செல்பவர்கள் சிறிது கட்டணம் செலுத்தி பற்றுச் சீட்டு
பெற்றுக் கொண்டு போகிறார்கள். அது கட்டாயம். அதற்கு எதிரே வட்ட
வடிவமாக ஒரு திறந்த ஓலைக் குடிசை. என்னை அங்கே இருக்கச் சொல்லி
விட்டு உள்ளே போனார். சிறிது நேரத்தில் அந்தச் சாவடிக்குப் பொறுப்பானவர்
பவாவுடன் வந்தார். முறிகண்டி நண்பர் IBC  நிகழ்ச்சி ரசிகர் என்றால் இவர் கிரிக்கட்
ரசிகர் ! .” நீங்கள் வந்ததாகக் கேள்விப்பட்டன். கண்டதில் சந்தோசம் “என்று
கை குலுக்கினார். எல்லோருமே கை குலுக்கும் போது மிகுந்த வாஞ்சையுடன்
அழுத்தமாகப் பற்றி குலுக்குகிறார்கள்.

அடுத்து ஐ.நா.வின் சோதனைச் சாவடி  !. பேருந்தில் வந்தவர்கள் போகட்டும்.
அதுவரை பவாவுடன் பேசலாம் என்று நின்றேன். பேச்சு வரவில்லை.இரண்டு
பேருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றோம். பவா
பேச முயன்றார்.முடியவில்லை. என் தோளில் சாய்ந்து கொண்டு அழுதார்.
இரண்டு நாட்களும் சில மணி நேரங்களும் தான் அந்த உறவு. ஆனால் அந்த
இளைஞனுக்கு அது ஜென்ம ஜெமாந்தர உறவு போல் தோன்றியதற்கு இது
வரை இருந்து வந்த நிம்மதியற்ற - நிச்சயமற்ற வாழ்க்கையும் ஒரு காரணம்
எனலாம். அந்த நினைப்பு என் நெஞ்சைப் பிசைந்தது.

“பவா ஒரு முறை இந்தியாவுக்கு வாருங்கள். உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ
அவ்வளவு காலம் நிம்மதியா இருந்துட்டு வரலாம்.” என்றேன் - ஆதரவாக..!” அது
ஏலாதையா... நெனச்சுக்கூட பாக்க ஏலாது. எங்கட மக்கள இங்கே விட்டுப் போட்டு
நான் மட்டும் வந்து நிம்மதியா இருக்கவா...இந்த மண்... எங்கட மண்.. அதுதான்யா
எங்களுக்குக் கடைசி வரை...வேறெங்கும் போறதா இருந்த அது மேல் உலகத்துக்குத்
தான். அல்லாண்டு இந்தக் கோட்டை தாண்டினாலும் என்னப் போன்றவய்யளுக்கு
ஆபத்துத்தான். சிங்களவங்க எங்கள விட மாட்டினம்” என்ற போது அந்த இளைஞனின்
 கண்களில்  கண்ணீர்.. தொண்டையில் கமறல்.. உடலில ஒரு சிறு நடுக்கம்.

வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டிருந்தால்- எந்த அளவுக்குக் கொடுமைகளை கண்டும் -
கேட்டும் - அனுபவித்துமிருந்தால் இந்த இள வயதில் இந்தச் சின்னஞ்சிறு வாலிபன்
இவ்வளவு விஷயங்களை கொட்டித் தீர்ப்பான் என்று நினைத்த போது எனக்கு நா வறண்டது -
நெஞ்சு கனத்தது - அது கண்ணீராய் பிரவகித்தது. இறுகப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தி
பவா என்னை விட்டுப் பிரிந்த போது அது என் உடலின் ஒரு பாதியையே பிய்த்துக் கொண்டு
 போனது போல் இருந்தது

வண்டியில் சென்று ஏறுகிறேன். பவா அப்படியே மண்டியிட்டு தலை குனிந்தவாறு
மண்ணில் கை பதித்து குலுங்கிக் குலுங்கி அழுவது தெரிகிறது. பவாவின் உருவம் நான்
தூரம் செல்லச் செல்ல என் கண்களிலிருந்து மறையவில்லை கண்ணீர் தான் பார்வையை
மறைத்தது. அருமையான இளைஞன் இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்பேனோ..!

(தொடரும்)

காமேஷ்

unread,
Aug 31, 2012, 11:24:18 PM8/31/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம்-17

அரசின் பகுதியிலும் ஒரு சுங்கம் மற்றும் சோதனைச் சாவடி. அங்கே நீண்ட
வரிசையில் மக்கள். கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல், உடையிலும்
தோற்றத்திலும் யுத்தம் அவர்கள் மீது திணித்து விட்ட ஏழ்மை பளிச்சென்று
தெரிந்தது. சிரிப்பையே மறந்து விட்ட வாடி வதங்கிய முகங்கள்.நானும்
அவர்களோடு வரிசையில் சென்று நின்றேன். தூரத்தில் ‘சன்’ தொலைக்
காட்சியினர் கொழும்பை நோக்கியும், இப்போதைய சட்ட அமைச்சர் ரவூஃப்
ஹக்கீம் தன் சகாக்களுடன் வன்னி நோக்கியும் போவதைக் கண்டேன்.

தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி என்னருகில் வந்து
”(Where is your Paper)  உங்கள் சீட்டு எங்கே..? என்று கேட்டார். நான் என்னிடம்
சீட்டு எதுவும் இல்லை பாஸ்போர்ட் தான் இருக்கிறதென்றேன். வாங்கிப்
பார்த்துவிட்டு,  Oh.. from India ! You came for the conference right?  என்று வினவிய
போது “ ஆமாம் பத்திரிகையாளர் சந்திப்புக்குத்தான் வந்தேன்."  என்றேன்.

“எல்லோரும் நேற்றே போய் விட்டார்களே  !” ஆமாம், ஆனால் பிரபாகரனைச்
சந்தித்தேன்.  அதனால் சுணங்கி விட்டது” என்றேன். "Oh.. you did. Fine very fine "
 என்றார். நேற்று இராப்போசனம் அவருடன் தான்” என்றேன். அவருக்கு நம்ப
 முடியாத ஆச்சரியம். என்னைப் பற்றிக் கேட்டார். சொன்னேன். படித்தது
 இலங்கையில் என்றேன். என் பால்ய நண்பரும் பள்ளித் தோழரும் அஸ்வர் MP
  என்றேன். ஆரம்பத்திலிருந்த விறைப்பு இப்போது இல்லை.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்..?. “நன்றாக இருக்கிறார்.” ஓ.. நாங்கள் இலங்கையர்
அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் (Irony of Fate)  நாங்கள் எதிர்
எதிர் முகாம்களில் இருக்கிறோம். “ It is really very unfortunate  (துரதிர்ஷ்ட வசமானது)
என்றபோது.  “ஆம். அப்படித்தான்  (Yes . It is )  என்றேன் நான்.

You know one thing after Israel's Moshe Dayan, Praba is the best Military Strategist. I should feel
very proud about him (  உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்குப்
பிறகு ராணுவத் திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப் பற்றி நான் பெருமைப்பட
வேண்டும்)  என்றார். ஒன்றைக் கவனித்தேன். ‘பெருமைப் படுகிறேன்’ என்று சொல்ல-
வில்லை.   ‘பெருமைப்பட வேண்டும்’ என்று தான் சொன்னார்.

சட்டென்று , “  Can I quote you..? ' (இதை உங்கள் கருத்தாகக் குறிப்பிடலாமா.?” என்று
 கேட்டேன். சிலிர்த்து விட்டார். 'This is the trouble with you media felloows. Look here you
never met me and I never spoke to you. Let us keep things at that level...okay..? ( இதுதானப்பா
இந்த பத்திரிகைக் காரன்களோடுள்ள சங்கடம். இங்கே பாரும் நீர் என்னைக் காணவும்
இல்லை. நான் உம்மோடு பேசவும் இல்லை..சரியா..?” என்று விட்டு, “வரிசையில்
நிற்க வேண்டாம். நேராகப் போகலாம்" என்று சாவடிக்குள் அழைத்துக் சென்று அங்கு
நின்றிருந்த ஓர் அதிகாரியிடம், “ மே  மஹாத்தியாகே பேக் எக்க செக் கராகண்ட” என்றார்.
அவர் பையை பிசுக்கிப் பார்த்துவிட்டு ‘சாக் பீசால்’ ஒரு கிறுக்குக் கிறுக்கினார். சோதனை

முடிந்தது.

வெளியில் வந்த போது கொழும்பு செல்லும் பேருந்தே நின்றிருந்தது. பயணச் சீட்டு இன்னும்
வழங்கத் துவங்கவில்லை. நேராக நடத்துநரிடம் சென்று, “ மே மஹாத்தியாட்ட ஹொந்த
ப்ளேஸ் எக்க தெண்ட” (இந்த தொரைக்கு நல்லதோர் இடம் கொடுங்கள்) என்றூர். “ஓண
ப்ளேசெக்கேய்ன் வாடிவெண்ட கியாண்ட (இஷ்டமுள்ள இடத்தில் உட்காரச் சொல்லுங்கள்)”
என்றார்.நடத்துனர். பிறகு என்னைப்பார்த்து, “ தேவத்ரு எக்க பொமுத..? (தே-நீர் ஒன்று
குடிப்போமா) என்று கேட்டார். “ நே..மஹாத்தியா...யப்பா...மகே ஹித்தட்ட பொஹோம
சந்தோஷவுனா.. மங் கிஹில்ல யன்னாங் ( இல்லை.. தொரை... வேண்டாம்.. என மனதுக்கு
மெத்த மகிழ்ச்சி.. நான் போய் வருகிறேன்)” என்றேன். “ எஹேன்னாங்... எஹேமத்-தமாய்
ஆயுபோவன்...  Take Care ( அப்படியென்றால் அப்படி...வணக்கம். உங்கள கவனிச்சுக்கோங்கோ)
என்று கை குலுக்கி விடை பெற்றார். அழுத்தமான அந்தப் பிடியில் நட்பார்ந்த அன்பு தெரிந்தது.

( வந்து விட்டோம்....ஊர் இன்னும் சற்று எட்டும் தொலைவில் தான்...)

காமேஷ்

unread,
Aug 31, 2012, 11:25:51 PM8/31/12
to பண்புடன், தமிழ் சிறகுகள்
பாகம் - 18


ஆட்களை ஏற்றவும் இறக்கவும் மட்டுமே பேருந்து வவுனியாவில் நின்றது.
ஒரு தம்பதியும் ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் ஏறினார்கள். நம்
ஊர்களில் என்றால் அம்மாவும் பெண்ணும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு
அப்பா என் அருகில் அமர்ந்த்திருப்பார் ஆனால் இங்கே அம்மாவும் அப்பாவும்
ஒரு ஆசனத்தில் !அந்தக் குழந்தை என்னருகில் !!. அது வரை என் அருகில் அமர்ந்து
வந்தவர் ஓர் ‘ உம்மணாமூஞ்சி !’ வண்டி ஓடத் துவங்கிய போது அந்தப் பெண்ணிடம்
பேச்சுக் கொடுத்தேன். தட்டுத் தயங்கி திக்கித் திணறி பதில் சொல்லிற்று..

அப்பா தமிழ் - கத்தோலிக்கம். அம்மா சிங்களம் - பௌத்தம்..!பெண்ணின் பெயர் சுஜாதா.
 அப்பாவுக்கு எழுத்தாளர் நினைவு. அம்மாவுக்கு பௌத்த சரித்திரத்தில் வரும் ஒரு
 பெண்மணியின் நினைவு. எப்படியோ பெயர் இருவரின் ஏகமனதான தேர்வு !.பெண்ணுக்கு
தமிழும் தெரியாது சிங்களமும் தெரியாது !!. இப்போது ஒரு வக்கிரக் கற்பனை ! கலகம் என்று
 வந்தால் யார் யாரைக் கொல்வார்கள் ? அம்மாவை தமிழரும் அப்பாவை சிங்களவரும்
 கொல்வார்களா ? அப்போ இந்தச் சிறுமியை...?

ஓர் ஆங்கிலப் படத்தில் ஒரு கதா பாத்திரம்,போர்க்களத்தின் அழிவைப் பார்த்து விட்டு “இது
ஒரு பைத்தியக்கார உலகம்.. பைதியக்கார உலகம்” என்று உச்ச-ஸ்தாயியில் கத்த படம்
முடியும். இப்போது எனக்கும் அப்படிக் கத்த வேண்டும் போலிருந்தது.

சற்று நேரத்தில் சாப்பாட்டுப் பொதியை அவிழ்த்து எனக்கு ஒரு SANDWICH  தந்தார்கள். நான்
நாகரீகம் கருதி மறுத்தேன். வற்புருத்தினார்கள். எனக்கும் பகல் உணவு சாப்பிடாதது நினைவுக்கு
வந்தது. வாங்கிச் சாப்பிட்டேன்.நான் யாரோ, அவர்கள் எவரோ, ஏன் இந்த விருந்தோம்பல்..?
 இது தானே ஐயா மனிதம் - மனுஷத்வம்... இதை ஏன் மக்கள் மறந்து போனார்கள்..?

அநுராதபுர - குணாகலே என்று ஐந்து மணி நேர ஓட்டத்துக்குப் பின் முன்னிரவில் கொழும்பைச்
சென்றடைந்தேன்.  முபாரக் அலியின் இல்லம் சென்றபோது அவர் எனக்கு என்னவாயிற்றோ ஏது
ஆயிற்றோ என்ற பரிதவிப்பில் இருந்தார். என்னைக் கண்ட பிறகே அவருக்கு சரியாக சுவாசம்
வந்தது. ”சரி ‘ரெடியாவுங்க சொப்பிங் போய்ட்டு வரலாம்” என்ற போது, “இதற்குப் பிறகா”?என்று
ஆச்சரியப் பட்டேன். “உங்களுக்கு ஊருக்கு கொண்டு போறதுக் கெண்டு ஒண்ணு ரண்டு சாமானுவள
வாங்கி வச்சீக்கன்.. எண்டாலும் நாளக்கிம் மத்த நாளக்கிம் இங்கே ‘ சின்ஹல அலுத் அவுருது’
(சிங்கள புது வருஷம்) தானே...கடகளெல்லாம் விடிய விடியத் தொறந்திருக்கும் வாங்க போய்ட்டு
வரலாம்” என்றார். அவரது துணைவியும் வந்தார்.

என்ன வாங்கப் போகிறேன் - கொஞ்சம் தேயிலை - பால் பவுடர் -தேங்காய் பால் பவுடர் - மாலைத்தீவு
மாசி - ஏலம் - கிராம்பு - கித்துல் கர்ப்பட்டி என்று அப்போது இலங்கையில் மட்டுமே கிடைக்கும் சில
அபூர்வ பொருள்களை மட்டும் வாங்கினேன். அவர்கள் பரிசாக சொக்லேட் வகைகளை வாங்கினார்கள்.

வீடு வந்து PACK  செய்து குளித்துத் தயாராகி உடை மாற்றிய போது விமான நிலையம் செல்வதற்கான
நேரம் சரி. வழியில் அதே ‘மாபொள’ பள்ளியில் வைகறைத் தொழுகையை நிறைவேற்றிய போது ஒரு
முழுச் சுற்று சுற்றீ விட்டு வந்த உணர்வு. விமான நிலையம் சென்று சம்பிரதாயங்களை நிறைவேற்றி
வீட்டு விமானத்தில் ஏறி அமர்ந்த போது ‘ அக்கடா’ என்று ஓர் ஆஸ்வாசம்.

காமேஷ் நான் இதை ஒரு கனவென்று முடித்து விடுவேனோ என்று ஐயம் கொண்டிருந்தார். ஆனால்
எனக்கு ஒவ்வொன்றையும் மனத் திரையில் ஓட விட்டுப் பார்த்த போது ஒரு கனவு போல் தான் தெரிந்தது.
அந்தக் கனவைக் கீறிக் கிழித்துக் கொண்டு ஒரு கேள்வி எழுந்து நின்றது. நண்பர் முபாரக் அலியின் கேள்வி.

“ பிரபாகரன்...எப்பிடி... நல்லமா...?  பரபரப்பில்லாத இந்தச் சூழலில் தான் மூளை பதிலைத் தேடியது.

பிரபாகரனை குல தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். கொடூரன் என்றும் குமுறுபவர்கள்
இருக்கிறார்கள்

ஒரு மாபெரும் இயக்கத்தை கட்டுப் படுத்தி - கட்டிக்காத்து - கட்டி உயர்த்திய ஒரு நல்ல நிர்வாகி என்று
 கணக்குப் போடுபவர்களும் இருக்கிறார்கள். இயக்கத்துக்கு உள்ளிலும், வெளியிலும் அவர் எவரையும்
 வளர விட்டது கிடையாது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

தான் தேய்ந்து பிறருக்கு மணம் கொடுக்கும் சந்தனக் கட்டை அவர் என்று வாய் மணக்கப் போற்றுபவர்களும்
இருக்கிறார்கள். தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மரங்களின் சத்தையும் உறிஞ்சும் சந்தன மரம் அவர் என்று
வாய் கூசாமல் அவதூறு பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ நான் பார்த்தவரை - பழகியவரை -  தெரிந்தவரை - அறிந்தவரை - புரிந்தவரை - தனிப் பட்ட
 முறையில் பிரபாகரனைப் பற்றி உறுதியாக ஒன்று சொல்வேன்   ---------------

அவர் ஓர் அன்பார்ந்த - பண்பார்ந்த நல்ல மனிதன் -----------  HE   IS   A   PERFECT   GENTLEMAN...!!!!!!!!!!!

(நிறைவு)

Asif Meeran AJ

unread,
Aug 31, 2012, 11:57:45 PM8/31/12
to panb...@googlegroups.com
கேட்டுப் பழகியிருந்த சம்பவங்கள்தாம். சில கேட்டேயிராத சம்பவங்களும். ஆனாலும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒவ்வொரு விதமான உணர்வுகளுக்கு ஆட்படுத்தும் வித்தியாசமான சந்திப்பாகவே அது அமைந்திருக்கிறது

பிரபாகரன் என்ற ஒப்பற்ற மனிதனை ஒரு இனத்தின் குலவிளக்காகப் பார்க்கிறேன் நான். அடிப்படையில் இந்திய தேசிய சார்புள்ளவைகளாகவே செய்திகளை வெளியிடும் ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிக்கும் என் சகோதரனைப் பொறுத்தவரை பிரபாகரன் கொண்டாடப்பட வேண்டியவரல்ல. என் தாயாருக்கோ , சகோதரிக்கோ சார்பு நிலைகளில்லை.. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இத்தனை நிலைப்பாடுகள் இருக்கும்போது ஒரு பத்திரிகையாளனாக அவரை எடைபோடுவதென்பது அத்தனை எளிதல்ல.

ஆனாலும்...
அத்தனை எளிதில் எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஓர் இனத்தின் தலைவன் உங்களைச் சந்திக்க வந்து நின்றாரென்றால் அது உங்கள் தமிழுக்கு அவர் செய்த மரியாதை. அப்படியென்றால் அந்தத் தமிழின் மீது எத்தனை அக்கறையும் பிடிமானமும் இருந்திருக்கும் அந்தத் தலைவனுக்கு??

பெயரளவில் இல்லாமல் 'தமிழினத் தலைவனாக' வாழ்ந்த அந்தப் பெருந்தகை, தானே முன்வந்து சந்தித்த மனிதர் என் தகப்பனார் என்பதில் எனக்குத்தான் எத்தனை பெருமை!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

மகிழவும் நெகிழவும் வைத்த அற்புதமான தொகுப்பு! நிறைய இடங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நெருக்கமாக உணர்ந்தேன் அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றியும் கூட!




நன்றி காமேஷ்! இந்த இழையை முழுத் தொகுப்பாக இங்கே இட்டமைக்கு!

காமேஷ்

unread,
Sep 1, 2012, 11:32:24 PM9/1/12
to panb...@googlegroups.com
பிரபாகரன்  அவர்களின் எளிமை , தமிழகத்தினர் மேல் கொண்டிருந்த அன்புக்கு ஜப்பார் ஐயா அவர்களின்  இந்த தொடர் ஒரு நல்ல உதாரணம்.

நன்றி அண்ணாச்சி.

.........................




2012/9/1 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
Sep 3, 2012, 9:55:57 AM9/3/12
to panb...@googlegroups.com


2012/8/31 காமேஷ் <kame...@gmail.com>
பாகம்-6
 
 
ஆர்வ மிகுதியில் வேகமாகப் படித்துக்கொண்டு வந்தேன்... இந்த இடத்திற்கு மேல் என்னால் நகர முடியவில்லை... கண்ணில் நீர்த்துளியோடு உறைந்து நிற்கின்றேன்... :((

Prakash Sugumaran

unread,
Sep 3, 2012, 2:50:26 PM9/3/12
to panb...@googlegroups.com
மறைந்த பிறகாவது மாறா வழக்கம் போல இவன் நம்முள் பிறக்கட்டும்..

2012/9/3 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages