எத்தனையோ ஹிந்தித் திரைப்படங்கள் தமிழிலும், தமிழ்ப்படங்கள் ஹிந்தியிலும்
மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்படி மொழி மாற்றம் செய்யப்படுகிற
படங்களில், ஒரு சூழ்நிலைக்கு இரண்டு மொழிகளில் இயற்றப்பட்ட பாடல்களை
ஒப்பீடு செய்தாலென்ன என்று கொஞ்ச நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஏனோ முடியவில்லை. தயாரிப்பாளர் பாலாஜி இறந்த செய்தியைக்
கேள்விப்பட்டதும், இயல்பாகவே மொழிமாற்றப்படங்களைப் பற்றிய சிந்தனை
மீண்டும் வந்தது. கூடவே யாக்கை நிலையாமையும் நினைவுக்கு வராமல் இல்லை.
எனவே, தள்ளிப்போடாமல் ஆரம்பித்து விட்டேன்.
’கைக்கே பான் பனாரஸ்வாலா’ பாடல் அமிதாப் பச்சன் நடித்த ’டான்’ படத்தில்
பிரபலமானதற்கு முக்கிய காரணம், பாடல்வரிகள், இசை, அமிதாப்பின் நடனம்,
ஜீனத் அமனின் நளினம் என்று பல காரணங்களை அடுக்குவோர்கள் உண்டு. இதெல்லாம்
இல்லாமலே ’வெத்தலையைப் போட்டேண்டி,’ பாடலும் ’பில்லா(1) படத்தில் மிகப்
பிரபலமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
’எங்க வீட்டுப் பிள்ளை’யில் இடம்பெற்ற ’நான் ஆணையிட்டால்’ பாட்டு, ஹிந்தி
’ராம் அவுர் ஷ்யாம்’ படத்தில் கிடையாது. அதே போல ’ராம் அவுர் ஷ்யாம்’
படத்தில் இடம்பெற்ற ’ஆயியே பஹார் கே..’ என்ற பிறந்தநாள் பாடல் ’எங்க
வீட்டுப் பிள்ளையில்’ இல்லை. ஆக, இரண்டு மொழிப்பாடல்களையும் தராசில்
வைத்து நிறுத்துப் பார்ப்பதை விடவும், இரண்டையும் கேட்டு, இரண்டிலும்
பிடித்ததை ரசித்தாலென்ன என்ற ஒரு பேராசை! இதைப் படிப்பவர்கள் முக்கியமாக
கவனத்தில் கொள்ள வேண்டியது - அடியேன் முறைப்படி ஹிந்தியோ, உருதுவோ
படித்தவனில்லை! எனவே ஆங்காங்கே நான் கொடுக்க முயன்றுள்ள பொருள்
தவறாகக்கூட இருக்கலாம்.
’பிரம்மச்சாரி’ என்ற ஷம்மிகபூர் நடித்த ஹிந்திப் படம் பின்னாளில் ’எங்க
மாமா’ என்ற பெயரில் தமிழில் வந்தது. தமிழில் அதைத் தயாரித்தவர்கள் ஜேயார்
மூவீஸ்! ( பாலாஜி அல்ல!) பிரம்மச்சாரி படத்தைப் போலவே எங்க மாமாவிலும்
பாடல்கள் பிரமாதமாக இருந்தன. செல்லக் கிளிகளாம் பள்ளியிலே, நான்
தன்னந்தனிக்காட்டு ராஜா என்று ஏறக்குறைய எல்லாப் பாடல்களுமே மெல்லிசை
மன்னரின் இசையில் கேட்பதற்கே ஒரு சுகானுபவமாக இருந்தாலும், அந்தப்
படத்தின் பெயரைச் சொன்னதுமே நினைவுக்கு வருகிற பாடல் ஒன்று உண்டென்றால்
அது ’எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்,’ என்று தான் எனக்குத்
தோன்றுகிறது. நான் முதலில் எங்க மாமாவைப் பார்த்து விட்டுத் தான் பிறகு,
பிரம்மச்சாரியைப் பல வருடங்கள் கழித்துத் தொலைக்காட்சியில் பார்த்தேன்
என்பதாலோ, பிள்ளைப்பருவம் முதலே நான் நடிகர் திலகத்தின் விசிறியாக
இருந்து வந்தவன் என்பதாலோ கூட, ஹிந்திப் படத்தை விட, தமிழ்ப் படம் எனக்கு
அதிகமாகப் பிடித்திருந்தது.
ஆனால், ’எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்,’ பாடலையும் ’தில் கே ஜரோக்கே
மே துஜ்கோ பிட்டாக்கர்,’ பாடலையும் என்னால் ஒரே மாதிரி ரசிக்க முடிகிறது.
காரணம், இரண்டு பாடல்களையுமே உச்சஸ்தாயியில் பாடிவதில் விற்பன்னர்களான
டி.எம்.சௌந்திரராஜனும், முகமது ரஃபியும் முறையே பாடியிருப்பதும் கூட ஒரு
காரணம் தான்.
ஷம்மிகபூரை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவரது சேஷ்டைகளுக்காக!
அவருக்கென்று ஒரு பாணியிருந்தது-நடிப்பிலும் சரி;நடனத்திலும் (?!) சரி!
சந்தேகம் இருப்பவர்கள் ’தீஸ்ரி மன்ஜில்’ படத்தில் வரும் ’ஆஜா ஆஜா மே ஹூம்
ப்யார் தேரா...,’ பாடலைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ’அந்தாஸ்’
போன்ற படங்களில் ஆட்டம் பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாகவும் நடித்து
அப்ளாஸ் வாங்கியவர்.
இனி பாடலுக்கான சூழ்நிலைக்கு வருவோம்! வேண்டுமென்றே கதாநாயகியை
வில்லனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, கதாநாயகன் சோகமாகப் பாடுவது
மாதிரியான கட்டத்தில் வருகிற ஒரு பாடல். முகமது ரஃபியின் ’தர்த் பரே
கீத்,’ என்று T-Series தொடங்கி, HMV வரைக்கும் எந்த ஆல்பத்திலும்
இந்தப்பாடல் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்.
இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் பிராண் இருப்பது
இன்னொரு விசேஷம். ஆனால், பொம்மை மாதிரி கதாநாயகி ராஜஸ்ரீ (மும்பை) வந்து
போவது ஒரு மைனஸ் பாயிண்ட்! நம்ம ஊரில் எப்படி டி.எம்.எஸ்-ஸின் குரல்
எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பொருந்தியதோ அதே போல, ஷம்மி கபூர், சஷி கபூர்,
ஜித்தேந்திரா போன்றவர்களுக்கு முகமது ரஃபியின் குரல் கனகச்சிதமாகப்
பொருந்தும். இந்தப் பாடலில் ’தட் தட் தட் தட் த்ட் தட்,’ என்று ஒரு ரயில்
வேகம் பிடிக்கிற கதியில் ரஃபி ஸாப்பின் சுருதி மேல்நோக்கிச் சென்று,
சட்டென்று எவ்வித குலுங்கலுமில்லமால், கீழ்ஸ்தாயிக்கு வருகிற அற்புதத்தை
நம்மால் கேட்டு உணர முடியும். முகமது ரஃபிக்காகவே கூட இந்தப் பாடலைக்
கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
முதலில் ஹிந்திப்பாடலைப் பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=5Fq1K-Eax_E
படம்: பிரம்மச்சாரி
பாடல்: ஹஸ்ரத் ஜெய்பூரி (இன்னொரு ஆல்பத்தில் ஷைலேந்திரா என்று
போட்டிருக்கிறது! :-( )
இசை: ஷங்கர் ஜெய்கிஷன்
நடிப்பு: ஷம்மி கபூர், ராஜஸ்ரீ, ப்ரான்
-------------------------------------
தில் கே ஜரோக்கே மே துஜ்கோ பிட்டாக்கர்
யாதோன் கோ தேரி மே துல்ஹன் பனாக்கர்
ரக்கூங்கா மே தில் கே பாஸ்! மத் ஹோ மேரி ஜான் உதாஸ்!
தில்=இதயம், ஜரோக்கே=சிறிய ஜன்னல், யாதோன்=நினைவுகள்
துல்ஹன்=மணப்பெண், உதாஸ்=சோகம்
(நினைவுகளில் உன்னை மணமகளாக்கி, என் இதயத்தில் வைத்திருப்பேன்.
என்னுயிரே! கலங்காதே!)
கல் தேரே ஜல்வே பராயே பி ஹோங்கே
லேகின் ஜலக் மேரே க்வாபோ மே ஹோகி
ஃபூலோன் கீ டோலி மே ஹோகி தூ ருக்ஸத்
லேகின் மெஹக் மேரி சான்ஸோன் மே ஹோகி
ஜல்வே=அற்புதம், பராயே=பிறருடையது
ஜலக்=காட்சி(சட்டென்று தென்படுவது), க்வாப்=கனவு
ஃபூலோன்=பூக்க்ள், டோலி=பல்லக்கு,
(நாளை நீ இன்னொருவருக்கு சொந்தமானாலும், என் கனவுகளில் உன் காட்சி
தோன்றும். பூப்பல்லக்கில் நீ சென்று விட்டாலும் எனது மூச்சில் அவற்றின்
நறுமணம் இருக்கும்)
அப் பீ தேரே சுர்க் ஹோட்டோன் கே ப்யாலே
மேரே தஸவ்வுர் மே ஸாக்கில் பனே ஹை
அப் பீ தேரீ ஸுல்ஃப் கே மஸ்த் ஸாயே!
பிரஹா கீ தூப் மே சாத்தி பனே ஹை
சுர்க் ஹோட்டோன்= சிவந்த உதடுகள்,
ப்யாலா= கோப்பை
தஸவ்வுர்=கற்பனை
ஸாக்கில்=தூண்டுதல்
ஸுல்ஃப்=கூந்தல்
மஸ்த் ஸாயே= மயக்கும் நிழல்
பிரஹா=காதல் ஏக்கம்
தூப்=வெயில்
சாத்தி=துணை
உனது சிவந்த உதடுகள் என்னும் கோப்பைகள் இன்னும் எனது கற்பனைக்குத்
தூண்டுதலாக இருக்கின்றன. உனது மயக்கம் தரும் கூந்தலின் நிழல், காதல்
ஏக்கம் என்னும் வெயிலில் எனக்குத் துணையாக இருக்கின்றது.
மேரீ மொஹப்பத் கோ டுக்குரா தே சாஹே!
மே கோயி துஜ்ஸே நா ஷிக்வா கரூங்கா
ஆங்கோ(ம்) மே ரஹத்தீ ஹை தஸ்வீர் தேரீ
ஸாரி உமர் தேரீ பூஜா கரூங்கா!
மொஹப்பத்=காதல்
டுக்குரானா=உதறித்தள்ளுதல்
ஷிக்வா=புகார்/ குறை கூறுதல்
தஸ்வீர்=சித்திரம் / ஓவியம்
உமர்=ஆயுள்
பியானோவின் இசை துணைவரும் பாடல்களில் பல பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில்
பசுமையாக இருக்கின்றன. உதாரணமாக, ’கண்ணன் என் காதலன்,’ படத்தில் வரும்
’பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்.’ அந்த வரிசையில் எனக்கு மிகவும்
பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. படத்தில் மற்ற காட்சிகளில் தனது
வழக்கமான மேனரிசங்களை அவிழ்த்து விட்டிருந்த ஷம்மிகபூர், இந்தப் பாடலில்
எவ்விதமான கொனஷ்டையும் செய்யாமல், முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல்
அற்புதமாக வாயசைத்திருப்பார். அத்தோடு, 1960-களில் வந்த ஈஸ்ட்மேன்
படங்களுக்கே உரித்தான் பலவித வண்ணங்களை வாரியிரைத்திருக்கும்
காட்சியமைப்பு. அட்டகாசமாக இருக்கும் பாருங்களேன்!
அடுத்து, ’எங்க மாமா’ பாடல்!
http://www.youtube.com/watch?v=20XgZ2WJqtk
படம்: எங்க மாமா
பாடியவர்: டி.எம்.எஸ்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:
---------------------------------
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்?
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்?
பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது?
பொல்லாத மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஏழை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது
கண்ணீரை நானெங்கு கடன் வாங்குவேன்?-அது
கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்-நான்
யாரென்று அப்போது நீ காணலாம்
உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று புரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்-இனி
என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்-நான்]
எப்போதும் நீ வாழ இசைபாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்?
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்?
ஹிந்திப்பாடலுக்கு நேர் மாறாக, நடிகர் திலகம் புருவங்களைத் தூக்கியும்,
சுருக்கியும், கண்களில் நீர்த்திரை காண்பித்தும், முகபாவங்களில் பலவித
வர்ணஜாலங்களை வெளிப்படுத்தியும், நாகர்கோவில் பயனீர் பிக்சர் பேலஸையே
கைதட்டலால் அதிர வைத்தது நினைவுக்கு வருகிறது. சோகமென்றாலே உதடுகளைத்
துடிக்க வைத்தால் போதும் என்று ஜெயலலிதாவுக்கு ’வெண்ணிற ஆடை’யில் ஸ்ரீதர்
சொல்லிக் கொடுத்ததை அவர் ’நதியைத் தேடும் க்டல்’ வரை கைவிடவில்லை. இந்தப்
பாடல் அதற்கு இன்னொரு உதாரணம்.
இரண்டில் எது நன்றாக இருக்கிறது? எனக்கு இரண்டுமே பிடித்திருக்கிறது.
(இதற்கு மேல் ஏதாவது சொன்னால் ஒரு சிவாஜி ரசிகன் வேறு எப்படிச் சொல்வான்
என்று கேள்வி வருமே? :-)
தமிழன் வேணு
நல்ல முயற்சி. முன்பு நானும் முயற்சி செய்தேன், தமிழோவியத்தில், பத்து
பாடல்களோடு நிறுத்திவிட்டேன்.
தொடருங்கள்!
அன்புடன்
'கீத்'சாத்
ஹைகூ :http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் :http://duraipathivukal.blogspot.com
கனவுகள் :http://duraikanavukal.blogspot.com
ஆசாத்! நீங்களே பத்து பாடல்களோடு நிறுத்தி விட்டீர்களா? :-( . கொஞ்சம்
பயமாகத் தானிருக்கிறது.
கவிஞருக்கும் சுபைருக்கும் நன்றிகள்!
தமிழன் வேணு
’தோ ஆங்கேன் பாரா ஹாத்,’ (இரண்டு கண்கள் பன்னிரெண்டு கைகள்) என்ற
வி.சாந்தாராமின் திரைப்படம், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் திறந்த
வெளிச்சிறைச்சாலையைப் பரீட்சார்த்த முறையில் முயன்ற ஒரு சிறை அதிகாரியின்
வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்வார்கள்.
கொடூரமான ஆறு கொலைகாரர்களைத் திருத்த முயலும் ஒரு சிறை அதிகாரியாக நடித்த
வி.சாந்தாராம், இறுதியில் அவர்களைத் திருத்தி, வில்லன்களால் கொலை
செய்யப்படுவதாகக் கதை அமைக்கப்பட்டிருந்தது.
இதே படம் தமிழில் ’பல்லாண்டு வாழ்க,’ என்ற பெயரில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரை வைத்து, மணியனின் தயாரிப்பில் வெளியான போது, பல்வேறு
மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தும் எம்.ஜி.ஆரின் படங்களில் அது ஒரு
வித்தியாசமான படமாக அமைந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
’குமுதம்’ விமர்சனத்தில் ’எம்.ஜி.ஆர் என்ன, காயகல்பம் சாப்பிடுகிறாரா?’
என்று கேட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் மிகவும் இளமையாகத்
தோற்றமளித்தார்.
’தோ ஆங்கேன் பாரா ஹாத்,’ படத்தில் இடம்பெற்ற ’யே மாலிக் தேரே பந்தே ஹம்,’
என்ற பாடல், படத்தில் பல காட்சிகளில் திரும்பத் திரும்ப வரிகள் மாறி
வந்து கொண்டேயிருக்கும். இறுதியில், மரணப்படுக்கையில் கதாநாயகன்
படுத்திருக்கும்போது, கதாநாயகி அந்தப் பாட்டை மீண்டும் பாட ( குரல்:லதா
மங்கேஷ்கர்) கல் மனமும் கரையும். ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில் அவர்
இறப்பதாகக் காட்டுவது ’பாசம்,’ படத்தோடு வழக்கொழிந்து போய் விட்டதென்று
நினைக்கிறேன். (எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் இறப்பதாகக் காட்டியும் வெற்றி
பெற்ற ஒரே படம் ’மதுரை வீரன்’ மட்டும் தானோ?) எனவே பல்லாண்டு வாழ்க
படத்தின் முடிவு எம்.ஜி.ஆருக்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
பல்லாண்டு வாழ்க படத்தில் ’ஒன்றே குலமென்று பாடுவோம்; ஒருவனே தெய்வமென்று
போற்றுவோம்,’ என்று திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின்
கைவண்ணத்தில், தமிழ்த் திரையுலகில் இரண்டாவது இன்னிங்க்ஸ்
ஆடிக்கொண்டிருந்த கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் கேட்கும்போது, வி.சாந்தாராம்
தனது படத்தை ஒருவேளை பின்னாளில் எம்.ஜி.ஆர்.தமிழில் எடுத்தாலும்
எடுக்கலாம் என்று ஏதேனும் உள்ளுணர்வோடே எடுத்திருப்பாரோ என்று தோன்றும்.
"தோ ஆங்கேன் பாரா ஹாத்"- கண்டிப்பாக எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு ஏற்ற
கதாபாத்திரத்தைக் கொண்டிருந்தது. ஓரிரெண்டு கனவுப்பாடல்களைத்
தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றினாலும், எம்.ஜி.ஆரின் படங்களில் எனக்குப்
பிடித்தவைகளில் ஒன்று.
படம்: தோ ஆங்கேன் பாரா ஹாத்
பாடியவர் & இசை: வசந்த் தேசாய்
பாடலாசிரியர்: பரத் வியாஸ்
-------------------------------
அந்தப் பிரார்த்தனைப் பாடலைப் பார்ப்போம்.
http://www.youtube.com/watch?v=QTCRDqNybH4
"ஹே மாலிக் தேரே பந்தே ஹம் அய்ஸே ஹோ ஹமாரே கரம்
நேக்கீ பர் சலே அவுர் படீ சே தலே, தாக்கீ ஹஸ்தே ஹுவே நிக்கலே தம்"
மாலிக்=ஆண்டவன்/ முதலாளி, பந்தே=சேவகன்/ அடிமை, கரம்=செயல்
நேக்கி=நேர்வழி/நேர்மை, தம்=மூச்சு
(இறைவா! உனது அடியவர்களான எங்களை, நேர்வழியில் சென்று, தீச்செயல்களைத்
தவிர்த்து, புன்னகையோடு மரணத்தை ஏற்றுக்கொள்ளுகிறாற்போன்ற நற்செயல்களைச்
செய்ய வைப்பாயாக!)
"யே அந்தேரா கனா சாரஹா தேரா இன்சான் கப்ரா ரஹா
ஹோ ரஹா பேகபர், குச் நா ஆத்தா நஜர், சுக் கா சூரஜ் சுப்பா ஜா ரஹா
ஹை தேரீ ரோஷ்ணி மே ஜோ தம் தோ அமாவாஸ் கோ கர் தே பூனம்"
கனா=அடர்ந்த அந்தேரா=இருட்டு, இன்சான்=மனிதன், பேகபர்=அறியாமை, நஜர்-
பார்வை, சுக்=இன்பம், சூரஜ்=சூரியன், ரோஷ்ணி=வெளிச்சம், அமாவாஸ்=அமாவாசை,
பூனம்=பவுர்ணமி.
(மண்டுகிற கும்மிருட்டில் மனிதர்கள் மருள்கிறார்கள். அவனுக்கு எதுவும்
புரியவுமில்லை; தெரியவுமில்லை. இன்பத்தின் சூரியன் மறைந்து
கொண்டிருக்கிறான். உனது வெளிச்சத்தைக் கொடுத்து அமாவாசையைப் பவுர்ணமிபோல
ஆக்குவாயாக!)
"படா கம்ஜோர் ஹை ஆத்மி, அபீ லாக்கோன் ஹை இஸ் மே கமி
பர் தூ ஜோ கடா, ஹை தயாளு படா, தேரே கிருபா சே தர்தீ தமீ
தியா துனே ஹமே ஜப் ஜனம் தூ ஹி செஹ்லேகா சப் கே கம்"
கம்ஜோர்=பலவீனம், ஆத்மி=மனிதன், லாக்கோன்*=இலட்சக்கணக்கான, கமி=குறை
தயாளு=கருணையுள்ளம் மிக்கவன், கிருபா=இரக்கம், தர்தீ=உலகம்/ மண்,
ஜனம்=பிறப்பு, கம்=துயரம்(இந்த ’க’வை ஆங்கில எழுத்து Ga என்று உச்சரிக்க
வேண்டும்)
(மிகுந்த குறைகள் கொண்ட மனிதன் மிகவும் பலவீனமானவன். உனது கருணையால்
உலகம் உய்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பிறப்பளித்த நீ, எங்களது
துயரங்களையும் தாங்கிக்கொள்கிறாய்)
*தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வட்டாரவழக்கில் ’நான்கு’ என்று
சொல்வார்களே! நாலு எழுத்துப் படித்தவன், நாலு பேரிடம் போய்க் கேள்,
நாலும் தெரிஞ்சவன்..! இதே போல ஹிந்தியில் ’லாக்’ என்பது உண்மையில் லட்சம்
என்ற பொருள் கொண்டிருந்தாலும், சாதாரணமாக உபயோகிக்கும்போது ’நிறைய’ என்ற
பொருள் கொண்டிருக்கும்.
"ஜப் ஜுல்மோ கா ஹோ சாம்னா, தப் தூ ஹீ ஹமே தாம்னா
வோ புராயீ கரே ஹம் பலாயீ பரே, நஹீ பதலே கீ ஹோ காம்னா
பத் உட்டே ப்யார் கா ஹர் கதம் அவுர் மிட்டே பைர் கா யே பரம்"
ஜுல்ம்=கொடுஞ்செயல், சாம்னா=எதிர்கொள்ளுவது, புராயீ=தீமை, பலாயீ=நன்மை,
காம்னா=எண்ணங்கள்,பத்லே-பழிக்குப் பழி,
(நாங்கள் கொடுஞ்செயல்களை எதிர்கொள்ளும்போது, எங்களைக் காப்பாயாக. பிறர்
தீமை செய்தாலும், நாங்கள் நன்மை செய்யவும், பழிவாங்குகிற
எண்ணமேற்படாமலுமிருக்க அருள்வாயாக. எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்
அன்பே நிறைந்திருக்க, வெறுப்பு என்னும் தடைகளைக் கடந்து செல்ல
அருள்வாயாக)
மஹாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த காலங்களில், சுதந்திர தினம்,
குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை, கூடி பாடுவா போன்ற
எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்.
எச்.எம்.வி வெளியிட்டுள்ள திரைப்படத்தில் வந்த பக்திப்பாடல்களின்
ஆல்பங்களில், இந்தப் பாடலும், ’கோபி’ படத்தில் இடம் பெற்றுள்ள ’சுக் கே
சப் சாத்தி துக் மே நா கோயீ.’ என்ற பாடலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
அடுத்து, தமிழ்ப்பாடல்!
http://www.youtube.com/watch?v=tN_FBBU4RH8
படம்: பல்லாண்டு வாழ்க
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கவிஞர் புலமைப்பித்தன்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
-------------------------------
அன்பிலார் எல்லாம் தமர்க்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்கூலி தரும்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
கடவுளிலே கருணைதனைக் காணலாம்-அந்தக்
கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
பாவமென்ற கல்லறைக்குப் பலவழி-என்றும்
தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி
அந்தவழியொன்றுதான் எங்கள்வழியென்றுநாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்-அவர்
என்றும்வாழும் கொள்கைதீபம் ஏற்றினார்
அந்த ஒளிகாணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளைவரலாறு நமக்காக உருவாகலாம்
இந்தப் பாடலும் ஜேசுதாஸின் மென்மையான குரலில், கே.வி.மகாதேவனுக்கே
உரித்தான இன்னிசையும், படத்தில் எப்போதும்போலப் புன்னகையோடு வாயசைத்து
நடித்த எம்.ஜி.ஆரின் நடிப்பும், ஹிந்திப் படம் போலன்றி, வண்ணப்படமாக
இருந்த சிறப்பும் சேர்ந்து, பிற எம்.ஜி.ஆர். படங்களிலிருந்து அந்தப் படம்
எவ்வளவு மாறுபட்டது என்பதற்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருந்தது.
ஹிந்திப் படம் போலவே, ’பல்லாண்டு வாழ்க,’ படத்திலும் இந்தப் பாடல்களின்
வரிகள் பலமுறை திரும்பத் திரும்ப வரும்.
ஹிந்திப் பாடலைப் பொறுத்தவரை, ’சரணாகதி’ என்ற தத்துவத்துக்கு ஏற்றாற்போல,
இறைவனிடம் நல்வழி தேடுகிற ஒரு பக்தனின் கோரிக்கையாக இந்தப் பாடல்
அமைந்திருந்ததென்றால், தமிழில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கே உரித்தான
நம்பிக்கையூட்டுகிற (Positive thinking) ஒரு பாடலாக இருந்தத். இரண்டில்
எது சிறந்த பாடல் என்பது சிரமமே!
ஆனால், ஒரு வித்தியாசம்! ’தோ ஆங்கேன் பாரா ஹாத்,’ படத்தின் இறுதியில்,
வி.சாந்தாராம் மரணப்படுக்கையில் இருக்கும்போது, கதாநாயகி சந்தியா பாடுகிற
காட்சியில், என்னுடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்த பிஸ்வாஸ் என்ற
வங்காள நண்பர் கண்களிலிருந்து மடைதிறந்தாற்போல கண்ணீர் கொட்டியதை நான்
பார்த்திருக்கிறேன்.
தமிழன் வேணு
அப்பேர்ப்பட்ட கைஃபி ஆஸ்மியின் கவித்துவம் மிக்க வரிகளுக்கு, அவரது மகள்
ஷபானா ஆஸ்மியே நடிக்கும்போது அதைப் பார்க்கிற அனுபவம் எப்படியிருக்கும்?
நான் குறிப்பிடுவது மகேஷ் பட் இயக்கி, ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல்,
குல்பூஷண் கர்பந்தா, ராஜ்கிரண்(மும்பை) ஆகியோர் நடித்த ’அர்த்’ என்ற
திரைப்படத்தில் வருகிற ’தும் இத்னா ஜோ முஸ்குராரஹே ஹோ’ என்ற பாடல்தான்.
இதோ, கைஃபி ஆஸ்மியின் கைவண்ணத்தில், ஜகஜித் சிங்-சித்ரா சிங்
இசையமைப்பில், மனதை உருக்கிய ஷபானா ஆஸ்மியின் நடிப்பில் உருவான மூல
ஹிந்திப் பாடல் உங்களுக்காக:
http://www.youtube.com/watch?v=3unptPIAdMk
படம்: அர்த்
பாடல்: கைஃபி ஆஸ்மி
இசை & பாடியது: ஜகஜித் சிங்
--------------------------------
தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ
க்யா கம் ஹை ஜிஸ்கோ சுப்பா ரஹே ஹோ
தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ
உன் அளவுக்கதிகமான புன்னகையால்
என்ன சோகத்தை மறைக்கிறாய்?
ஆங்கோ(ம்) மே நமி ஹ(ன்)ஸீ லபோ(ம்) பர்
க்யா ஹால் ஹை க்யா திக்காரஹே ஹோ
கண்கள் ஈரமாக இருக்க, இதழ்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கின்றன.
உன் உண்மைநிலையென்ன, நீ காட்டிக்கொண்டிருப்பது என்ன?
பன் ஜாயேங்கே ஜெஹர் பீத்தே பீத்தே
யே அஷ்க் ஜோ பியே ஜா ரஹே ஹோ
நீ தொடர்ந்து குடித்துக்கொண்டேயிருக்கும்
உன் கண்ணீர் விஷமாகி விடும்
ஜின் ஜக்மோ(ன்) கோ வக்த் பர் சலா ஹை
தும் க்யூ(ன்) உன்ஹே சேடே ஜா ரஹே ஹோ
காலத்தால் மூடப்பட்ட காயங்களை
நீ ஏன் மீண்டும் சீண்டிக்கொண்டிருக்கிறாய்?
ரேகாவோ(ன்) கா கேல் ஹை முக்கத்தர்
ரேகாவோ(ன்) ஸே மாத் கா ரஹே ஹோ
கைரேகைகளின் விளையாட்டான விதியுடன்
நீ தோற்றுக்கொண்டிருக்கிறாய்!
மகேஷ் பட்- தனது ஆரம்பக்காலங்களில் மிகவும் எதார்த்தமான, ஆனால், ஓரளவு
வெகுஜனங்களின் ரசனைகளோடு ஒத்துப்போகிற படங்களை எடுத்த ஒரு இயக்குனர்.
’சாரான்ஷ்’ என்ற படத்தின் மூலம் அனுபம் கேர் என்னும் ஒரு மிகச்சிறந்த
பன்முகத் திறமை கொண்ட நடிகரை இந்தித் திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்.
நிறையவே வியாபார நோக்கங்களோடு தயாரிக்கப்பட்ட அவரது ’நாம்’ என்ற படத்தில்
கூட, பல எதார்த்தமான உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்தன. அதிலும்
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் கூடியிருக்கிற ஒரு அரங்கத்தில்,
பிரபல கஜல் இசைக்கலைஞர் பங்கஜ் உத்தாஸ் பாடும்,’சிட்டி ஆயி ஹை வதன் ஸே
சிட்டி ஆயி ஹை,’ பாடல் கல்நெஞ்சையும் கரைத்து விடக்கூடிய ஒரு பாடல்.
"அர்த்" - திருமணமான ஒரு திரைப்பட இயக்குனர், சந்தர்ப்ப சூழ்நிலை
காரணமாக, ஒரு விதமான மனநோயால் பாதிக்கப்பட்ட நடிகையோடு தொடர்பு
ஏற்படுத்திக்கொள்வதால், ஏற்படும் குழப்பங்களைப் பற்றிய கதை! மிக மிக
அண்மையில், டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் வந்த,’ டோட்டல் ரீக்கால்-பர்வீன்
பாபி,’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மகேஷ் பட், ’அர்த்’
திரைப்படத்திற்கும் தனக்கும் பர்வீன் பாபிக்கும் இடையே இருந்த உறவுக்கும்
உள்ள ஒற்றுமைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.
இதே ’அர்த்’ பின்னாளில் தமிழில் ’மறுபடியும்’ என்ற பெயரில் ரேவதி,
ரோஹிணி, நிழல்கள் ரவி, அர்விந்த் சாமி ஆகியோர் நடிப்பில்,
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்தது. பாலுமகேந்திராவின்
அழகுணர்ச்சி அனைவரும் அறிந்ததே என்பதால், அவரது ஒளிப்பதிவில் சின்னச்
சின்னப் பூச்செட்டிகளும் அழகாய் புதிய பரிமாணத்தில் வெளிப்பட்டது. கவிஞர்
வாலி-இசைஞானி இளையராஜாவின் கூட்டணியில் பாடல்களும் இனிமையாகவே இருந்தன.
அதிலும்...
தனது பிறந்த நாளன்று விவாகரத்து பெற்றுக்கொண்டு வரும் கதாநாயகியைப்
பார்த்து, அவரது நண்பர் பாடுவது போல அமைக்கப்பட்டிருந்த பாடல், மிதமான
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மகேஷ் பட்-பாலு மகேந்திரா இருவருக்குமே
இருந்த தனித்திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்த ஒரு காட்சி.
தனிப்பட்ட முறையில், கவிஞர் வாலி அவர்கள் உபயோகப்படுத்திய ஒரு உவமை
எனக்கு சற்று நெருடலாகப் பட்டது; இன்னும் படுகிறது.
"விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!"
அந்த நெருடலையும் மீறி, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தேன்குரலில் இன்னும்
கேட்கத் தெவிட்டாத அந்தப் பாடல் இதோ:
http://www.youtube.com/watch?v=EmBA-DRxGwE
படம்: மறுபடியும்
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசைஞானி இளையாராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
------------------------------------
நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!
கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!
நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!
ஒரு திருமண உறவை அல்லது அதன் முறிவை, நகத்தை நறுக்குவதோடு ஒப்பிட்டதை
என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு வேளை இன்னும் என்னிடம் கொஞ்சம்
பிற்போக்குத்தனம் இருப்பதையே காட்டுகிறதோ என்னவோ! ஆனால், இந்த இரண்டு
பாடல்களிலுமே மிகவும் இதமான இசை, இனிமையான் குரல், ஆர்ப்பாட்டமில்லாத
நடிப்பு என்ற மூன்று அம்சங்களும் பொதுவாக இருந்தன.
மூல ஹிந்திப் பாட்டில், கைஃபி ஆஸ்மியின் வரிகள், ஜகஜித் சிங்கின் குரல்
மற்றும் இசை, கண்களில் ஒரு மெல்லிய நீர்த்திரையோடு புன்னகைத்துக்கொண்டு
நிற்கும் ஷபானா ஆஸ்மி என இந்தப் பாடலைப் பற்றி சிலாகித்துப் பேச பல
விஷயங்கள் இருக்கின்றன.
அதே போல, ஆரம்பக்காலக்கட்டங்களில் அபரிமிதமான உடல்மொழியால், கிட்டத்தட்ட
’அலட்டல்’ என்ற முத்திரையை வாங்கிய ரேவதி, நடிப்பில் பின்னாளில் காட்டிய
முதிர்ச்சிக்கு ’மறுபடியும்,’ படத்தில் வரும் இந்தப் பாடல் ஒரு சிறந்த
உதாரணம்.
பொதுவாக, இந்தியத் திரைப்படங்களில் ஒரு கணவனுக்கு இரண்டு மனைவிகள்
இருந்தால், படம் முடிவதற்குள்ளாக ஒரு மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி
விடுவார்கள் அல்லது சாகடித்து விடுவார்கள். ’தேனும் பாலும்,’ என்ற
படத்தில் முதல் மனைவியாக வரும் பத்மினி, இரண்டாவது மனைவியாக வரும்
சரோஜாதேவியை ஏற்றுக்கொள்வது போல படத்தின் முடிவை அமைத்திருப்பார்கள்.
’சிந்துபைரவி,’ ’புதுப்புது அர்த்தங்கள்,’ படத்தின் முடிவுகளும்
ஓரளவுக்கு கணவன் இரண்டாவது துணையைத் தேடினால், முதல் மனைவி ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்பது போல அமைந்திருக்கும்.
’அர்த்’ ’மறுபடியும்,’ -இரண்டு படங்களுமே பொருளாதாரக் காரணங்களுக்காக
மட்டும் ஒரு பெண் கணவனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் அவளை
விடுத்து இன்னொரு பெண்ணைத் தேடும்போது கூனிக்குறுகி அவனைச்
சகித்துக்கொண்டு போக வேண்டிய கட்டாயமில்லை. அவள் தனது சுயமரியாதையைக்
காப்பாற்றியபடியே, சொந்தக் காலில் நிற்கலாம் என்று துணிந்து சொல்ல முயன்ற
படங்கள். இந்தப் படங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்க விஷயம்!
இயல்பாக, அழுது ஆகாத்தியம் செய்து, ஆர்ப்பாட்டம் செய்யாமல், சில ஆழமான
காயங்களை, அழகாக வெளிப்படுத்துகிற படங்களும், அவற்றில் காட்சியோடு
இயைந்து வருகிற பாடல்களும் எப்போதும் மக்களால் ரசிக்கப்படும் என்பதற்கு
இந்த இரண்டு பாடல்களும் நல்ல உதாரணங்கள் என்று கூடச் சொல்லலாம்.
தமிழன் வேணு
வேணு,
நல்ல கஜல்.
இப்போதிருக்கும் வாழ்வியல் நெரிசல்களில் சிக்கித் தவிப்பது எனது கஜல்
ரசனையும்தான். சல்தாஹை! என்றாவது விட்ட இடத்திலிருந்து
பிடித்துக்கொள்ளலாம். இளையவர்களும் நன்றாகவே கஜல் எழுதுகின்றார்கள்.
ஆனால், பழையவர்கள் கையாண்ட ஆழமான உருது வார்த்தைகளைக் கையாள்வதில்லை,
பிர்பி சல்தாஹை :-)
துபாய் கேலரியா அரங்கம், இரவுக் காட்சி முடிந்து யாருமற்ற துபாய்
சாலையில் வண்டியில் பயணம், திரைப்படம் குறித்த ஆரோக்கியமான விவாதம்,
மகேஷ் பட்டைப் போல மேல் தட்டு மக்களுக்க்காக மட்டுமே காட்சிகளை
அமைக்காமல் சில காட்சிகளை பாலுமகேந்திரா தமிழ் ரசிகர்களுக்காக மாற்றிய
விதம், ஏன் தமிழ் ரசிகன் கொஞ்சம் மேலே செல்லக்கூடாதா என்னும் அதிருப்தி,
எல்லாமுமாகச் சேர்ந்து இந்த 'மறுபடியும்' எனது வாழ்வின் சில நிமிடங்களை
ஆக்கிரமித்திருக்கிறது.
இந்தியில் 'ஆசை அதிகம் வெச்சு' பாடல் கிடையாது, அது ஒரு நகைக்கான
விளம்பரப் படமாக அமைந்திருக்கும். இங்கே தயாரிப்பாளர் குதிப்பதுபோல்
அங்கே தாலிப் தாகில் 'த ஃபில்ம் ஈஸ் நைஸ் பட் வேர் ஈஸ் மை ப்ராடக்ட்'
என்று குதிப்பார். இந்த விவரங்களை மரத்தடியில் குறிப்பிட்டுள்ளேன்.
அன்புடன்
'அர்த்'சாத்