காந்தியின் இன்றைய முக்கியத்துவம்

311 views
Skip to first unread message

தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2012, 11:07:39 PM3/3/12
to பண்புடன்

காந்தியின் இன்றைய முக்கியத்துவம்

by jeyamohan

ஜெ,

உலகப்போருக்குப் பின் உருவான பொருளியல் நெருக்கடிகளால்தான் வெள்ளையர் இந்தியாவை துறந்தனர், காந்தியின் போராட்டங்களுக்கு அதில் பங்கில்லை என்று சொல்லும் இடதுசாரி விமர்சனங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரவணன்.ஆர்

ஜீன் ஷார்ப்

அன்புள்ள சரவணன்,

இந்த வினாவுக்கு விரிவாக நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். இம்முறை ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறேன். காந்தியின் இன்றைய பங்களிப்பைப்பற்றிய ஜீன் ஷார்ப்பின் நீண்ட கட்டுரையின் தமிழாக்கம்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

காதல் கவிதைகள் கிறுக்கல்களாக இருப்பதற்கு, சிலர் காதலிக்கு பதிலாக மனைவியை நினைத்து வாசிப்ப​தே காரணம்!!


தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2012, 11:09:21 PM3/3/12
to பண்புடன்

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம்- 1


இன்ற உலக அரங்கில் அகிம்சை போராட்டங்களின் முக்கியமான ஆளுமை அமெரிக்காவை சேர்ந்த ஜீன் ஷார்ப்.1983 ஆம் ஆண்டு பாஸ்டனில் அகிம்சை வழிமுறைகளை பற்றி உலகளாவிய ஆய்வுகளை செய்து வரும்ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி மையத்தை தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு அவரது முனைவர் பட்ட ஆய்வை முன்வைத்து " பாலிடிக்ஸ் ஆப் நான் வயலன்ட் ஆக்ஷன் " எனும் புத்தகத்தை எழுதினார்.உலகெங்கிலும் உள்ள எத்தனையோ அகிம்சை போராட்டங்களுக்கு ஷார்ப்பின் எழுத்துக்கள் உதவியுள்ளன.செர்பியா, ஜார்ஜியா ,உக்ரைன் தொடங்கி அண்மைய துனிசியா எகிப்து புரட்சி வரை பல்வேறு போராட்டங்கள் ஷார்ப்பின் எழுத்துக்கள் முன்வைக்கும் வழிமுறைகளை கையாண்டுள்ளதாக நம்பப்படுகிறது.பர்மாவில் வெளியிடப்பட்ட அவரது மற்றுமொரு முக்கியமான புத்தகம் " ப்ரம் டிக்டேடர்ஷிப் டு டெமாக்ரசி " (from dictatorship to democracy- சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ) இப்புத்தகத்தில் அகிம்சை போராட்டங்களின் பல்வேறு படிநிலைகள் , சர்வாதிகாரத்தை எப்படி எதிர்கொள்வது , பேச்சுவார்த்தையின் நன்மை தீமைகள் என்று ஓர் அகிம்சை போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஓர் கையேடு என்றே சொல்லலாம் .


காந்தியை அகிம்சை போராட்ட ஆய்வாளர் என்று முன்வைக்கிறார் .அவரது போராட்டங்கள் எத்தனை விஞ்ஞானபூர்வமானது என்றும் அதன் உலகளாவிய முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறார்.காந்தியின் ஆளுமையின் வெவ்வேறு கூறுகளை வெளிச்சம் பாய்ச்சுகிறார் ஷார்ப் .காந்தியின் பன்முக ஆளுமையை புரிந்துகொள்ள இது மற்றுமொரு பரிமாணம் .இது ஒரு கோணம் மட்டுமே இதுவே காந்தியின் முழு மதிப்பீடு அல்ல என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய ஜனநாயக யுகத்தில் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் என்ன ? 

ஷார்ப் காந்தியை ஓர் புதிய யுகத்தின் முன்னோடியாக காண்கிறார்.இருபதாம் நூற்றாண்டிலும் இனி வரும் நூற்றாண்டுகளிலும் உலகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை காந்தியின் அணுகுமுறையை விரித்து எடுத்தல் மூலமே தீர்வுக்கான முடியும் என்கிறார்.மேலும் காந்தி, காந்தியத்தின் பாலுள்ள பல புரிதல் பிழைகளை ,புரட்டுகளை புறந்தள்ளுகிறார் .இக்கட்டுரை மேற்கின் மக்களுக்கு எழுதப்பட்டது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும், ஆதலால் இந்திய அரசியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கூட ஷார்ப் விளக்கியது புலப்படும் .மார்டின் லூதர் கிங் அகிம்சையின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னது " ஸ்பட்னிக்குகளும் எக்ஸ்ப்லோரர்களும் விண்ணில் மிதந்து கொண்டிருக்கும்இக்காலத்தில் , அடுக்குமண்டலத்தில் (stratosphere) பாய்ந்து கொன்று குவிக்கும் கொலை யந்திரங்களாக ஏவுகணைகள் இருக்கும் இக்காலத்தில் இனி எத்தேசமும் எப்போரிலும் வெல்ல முடியாது . வன்முறைக்கும் அஹிம்சைக்கும் இடையில் நாம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய இனி எப்பொழுதும் வாய்ப்பில்லை . ஒன்று அஹிம்சை வழி அல்லது அழிவு பாதை இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம் ." 
---------------------------

ஜனவரி 30 , 1948 பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றுக் கொண்டிருந்த காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்து அவரது உயிரை பறித்தது .மத கலவரங்களால் பற்றி எரிந்துக்கொண்டிருந்த இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்த காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பிடிக்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திலிருந்து ஓர் இளம் இந்து வெறியன் அவரை கொலை செய்தான் .காந்தியின் உண்ணாவிரதம் கடந்த ஒரு வருடமாக ரத்தவெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்த கொல்கத்தாவிற்கும் ,ஒட்டுமொத்த பெங்காளுக்கும் அமைதியை மீட்டு தந்தது.பின்னர் டெல்லியிலும் பதட்டமான சூழல் நிலவியதை உணர்ந்துக் கொண்டு அங்கும் அமைதியை உருவாக்க அவரது வாழ்வின் கடைசி உண்ணாவிரதம் பயன்பட்டது .இது போன்ற பல செயல்களை அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படவில்லை .கொல்கத்தாவில் .அவரது வசிப்பிடத்தை ஒரு கூட்டம் தாக்கியது , அவரை நோக்கி கல் வீசப்பட்டது,மூங்கில் தடி வீசப்பட்டது ,இருமுறையும் மயிரிழையில் உயிர் தப்பினார் .அவரது டெல்லி உண்ணாவிரதத்தின் பொழுது வெளியில் "காந்தியை சாக விடுங்கள்" என்று சிலர் கோஷம் எழுப்பினர் .மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு , மதிய நேரத்து பிரார்த்தனை கூட்டத்தின் பொழுது அருகாமையிலுள்ள தோட்டத்திலிருந்து அவர் மீது சிறிய நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. மிக முக்கியமான அரசியல் தலைவரின் மரணம் எனும் அந்த மோசமான விளைவை அந்த மூன்று தோட்டாக்கள் நிறைவேற்றியது.இந்தியாவும்,ஒட்டுமொத்த உலகமும் சோகத்தில் ஆழ்ந்தது.அரசியல் தலைவர்களும் ,சாமானிய மக்களும் தங்கள் தனிப்பட்ட இழப்பாக ஒருசேர உணர்ந்தனர்.

அந்த ஜனவரி திங்களிலிருந்து வருடங்கள் பல உருண்டோடிவிட்டன .உலக அரசியலை கணிசமாக மாற்றிய எத்தனையோ உலக நிகழ்வுகள் கடந்துவிட்டன.ஸ்டாலினின் மரணம், சீனாவில் கம்யுனிஸ்டின் வெற்றி, ஹைட்ரஜன் வெடிகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும்  ஏவுகணைகளின் கண்டுபிடிப்பு, ஹங்கேரிய புரட்சி, ஈச்மான் விசாரணை , பிரித்தானிய மற்றும் பிரெஞ்ச் காலனியாதிக்கத்தின் முடிவு, பிரதமர் கென்னடியின் கொலை, அமெரிக்காவில் நடந்த "கறுப்பர்களின் புரட்சி" போன்றவை அதில் சில.
உலக வரலாறு இப்படி எத்தனையோ நிகழ்வுகளின் விளைவாக வேகமாக சுழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது , இந்த சூழ்நிலையில் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் என்ன ? இப்பொழுது பல வருடங்களை கடந்து பின்னோக்கி பார்க்கையில் காந்தியை எவ்வாறு மதிப்பிடுவது ? அவரை பற்றிய நமது முந்தைய தீர்மானங்களில் ஏதும் மாற்றம் உண்டா ?

காந்தியை மதிப்பிடுதல் 

பொதுவாக மேற்கில் ,குறிப்பாக அமெரிக்கர்களுக்கு காந்தியை மதிப்பிடுதலில் சில பிரத்யேக சிக்கல்கள் உள்ளன.அவரது ஆளுமையில் உள்ள சில அதீத குணாம்சங்களின் காரணமாக அதை கடந்து நமது பார்வையை செலுத்துவதிலும் , அவரது வாழ்வின் இதர பரிமாணங்களை பற்றி ஆழமாக சிந்திக்கவும் முடிவதில்லை.மேற்கின் ஆன்மீகவாதிகளுக்கு கூட அவரது சமூக , அரசியல் நிலைப்பாடு அல்லது, கொள்கைகளை விளக்க பயன்படுத்தும் மெய்யியல் மொழியும் ,மதம் சார்ந்த வார்த்தை பிரயோகங்களும் புரிதலை காட்டிலும் குழப்பத்தையே விளைவிக்கிறது.

பலரும் ஆழ்ந்த மதிப்புடன் அவரை மகாத்மா எனும் அடைமொழியைக்கொண்டு விளித்தல் கூட அவரை நெருங்கி அணுகுவதற்கு தடையாக இருக்கிறது.அவர் ஓர் மகாத்மா,மாபெரும் புனிதர்,துறவி -அவரது அத்தனை சாதனைகளுக்கும் இந்த பட்டம் போதுமானது,அவரை மேலும் ஆராய்ந்து புரிந்துக்கொள்ள அவசியமில்லை.சாமானிய மக்களின் வாழ்வுடன் நேரடியாக தொடர்பற்று மண்ணில் வாழ்ந்து மறைந்த இன்ன பிற எத்தனையோ புனிதர்கள் போல்,தீர்க்கதரிசிகளைப்போல் ,இறை தூதர்களைப்போல் , அவரையும் அந்த பீடத்தில் ஏற்றி மகாத்மாவாக வழிபடலாம்.

சில நேரங்களில் அவரை பின்பற்றுபவர்கள், மற்றும் அவர் பால் ஆழ்ந்த மதிப்புடயவர்களின் கருத்துக்களை காட்டிலும் காந்தி தன்னை பற்றி அவ்வபொழுது முன்வைத்த துடுக்கான மதிப்பீடுகள் துல்லியமானதாக படுகிறது."நான் சராசரிக்கும் கீழான திறன் கொண்ட ஓர் சாமானிய மனிதன் " என்று ஒருமுறை எழுதினார்.சில முக்கிய அம்சங்களை கணக்கில்கொண்டால் இது ஓரளவு உண்மையே, இந்தியாவில் தேர்ந்த வழக்கறிஞராக பரிணமிக்க முடியாததால் அவர் தென்னாப்ரிக்கா சென்றார். 

மக்களின் மெய்யான அன்பை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாலும் ,அவரது மகாத்மா அடைமொழியை அவர் ரசிக்கவில்லை ." எனது இந்த மகாத்மா பட்டம் பயனற்றது,சுய சிந்தனையற்ற கூட்டத்தால் வழிபடப்படுவது உண்மையில் பெரும் சலிப்பை ஏற்படுத்துகிறது , என்னிடம் எந்த அதிமானுட சக்தியும் இருப்பதாக நான் கருதவில்லை ,எனக்கு அது தேவையும் இல்லை.ஓர் பலவீனமான சக மனிதன் அணிந்திருக்கும் அழுகக்கூடிய அதே சதையை நானும் அணிந்துள்ளேன் , ஆதலால் மற்றவர்களைப்போல் நானும் தவறு செய்திட வாய்ப்புகள் உண்டு" என்றார்.

அவரை மதிப்பிடுவதில் மேலும் பல சிக்கல்கள் உள்ளன.காந்தியை பற்றியும் அவரது அரசியல் நிலைபாடுகளை பற்றியும் நிலவி வரும் புரிதல் பிழைகளும் இதில் உள்ளடங்கும்.பெரும்பாலும் இவ்வகையான பிழைகளின் பின்னணியில் எவ்வித ஆழமான உள்நோக்கங்கள் இல்லையென்றாலும் ,இவர்கள் பெரும்பாலும் காந்தியின் அந்த குறிப்பிட்ட நிலைப்பாடு குறித்து ஆழமாக அறிந்திருக்கவில்லை.காந்தி காஸ்மீரம் மீதான ராணுவ நடவடிக்கையை ஆதரித்தார் , கோவா மீதான இந்திய படையெடுப்பை அங்கீகரித்திருப்பார், அணு ஆயுத தொழில்நுட்பத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து இருப்பார் ,  இவைப்போன்ற பிழைகள் அதில் சில. 

மேற்கில் மட்டுமென்றில்லை ,தாங்கள் இந்தியர்கள், அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கிறோம்,காந்தியை பற்றி நாங்கள் விரிவாக விவாதித்துள்ளோம் ,அதனால் நாங்கள் என்ன பேசுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று கருதும் மெத்த படித்த இந்தியர்களிடமும் கூட இவ்வகை புரிதல் பிழைகள் மலிந்து கிடக்கின்றன .காந்திக்கு அவரது அகிம்சையின் மேலிருந்த தெளிவற்ற புரிதலை பற்றியும், மேற்கின் பாணியில் கல்வி கற்ற இந்தியர்களின் நம்பிக்கையையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

காந்தியை புரிந்துக்கொள்வதில் உள்ள முக்கியமான சிக்கல் காந்தியை வழமையான எந்த பட்டியில் கொண்டடைப்பது என்பதிலிருந்தே தொடங்குகிறது.உதாரணமாக - அவரை அமைதிவிரும்பிகளின் வகையில் அல்லது ராணுவத்தை ஆதரிப்பவர் எனும் இந்த இரண்டு மரபில் ஏதோ ஒன்றில் அவரை அடைக்கவேண்டும்.அரசியலிலுள்ள தீய சக்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்று அவர் கூறியதால்," அவசியமென்றால் " வன்முறையை ஆதரிக்கலாம் என்று அவர் சொன்னதாக பலரும் கருதுகின்றனர்.

காந்தியின் சிந்தனை தொடர்ந்து வளர்ந்து பரினமித்துக்கொண்டே இருந்தது, தொடக்க காலங்களில் போருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தார் என்பது உண்மையே.ஆனால் அவரது வாழ்வின் இறுதி கட்டத்தில் இந்த நிலைப்பாடு மாறிவிட்டது.ஆனால் அதற்காக எதிர்வினயற்று எதையும் செய்யாது கடந்து செல்லவேண்டும் என்று சொல்லவில்லை.இரண்டாம் உலகப்போரில் அலைய்ஸ் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணினாலும், அப்போரை அவர் ஆதரிக்கவில்லை.அதே போல் காஷ்மீர் பிரச்சனையிலும் , பாகிஸ்தான் வரம்பு மீறுகிறது அதை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு ராணுவத்தை பயன்படுத்துவதில் அவருக்கு ஒப்புதல் இல்லை.

மாறாக அவரது அகிம்சை வழிமுறைகளின் மேல் நம்பிக்கை வைத்து அரசியல் சிக்கல்களை தீர்க்க அதை பயன்படுத்தினார்.இந்த சமயங்களில் தொடர்ந்து அகிம்சை முறையை பரிசோதித்துக்கொண்டே இருந்தார், நெருக்கடியான சூழலில் கூட அகிம்சை திறமையாக செயலாற்றும் எனும் அவரது நம்பிக்கை நடைமுறைவாதிகளுக்கு அத்தனை ஏற்புடையதாக இல்லை.காஷ்மீர் பிரச்சனையின் பொழுது அரசியல் ரீதியாக அவரது அகிம்சை வழிமுறை சரியாக செயலாற்றவில்லை என்று புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர அவர் முற்றிலும் அகிம்சயை நிராகரித்தார் என்று புரிந்துகொள்ள கூடாது. 

 போரும் அரசியல் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படும் வழமையான சூழல்களை ஆராய்ந்து அதன் பின்புலத்தை கண்டறிந்து அதற்கு மாற்றாக நடைமுறை சார்ந்த அகிம்சை முறை போராட்ட வழிமுறைகளை வளர்த்தெடுப்பது காந்தியின் மிக முக்கியமான பங்களிப்பு.இத்திசையில் அவரது பணி முழுமையானதில்லை என்றாலும் அவர் ஓர் முன்னோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இதன் பொருட்டே கூட அவரை அரசியலில் வன்முறையை ஆதரிப்பவர் அல்லது எதிர்ப்பவர் எனும் இருமைக்குள் அடக்கிவிட முடியாது,ஏனெனில் அவர் இவை இரண்டுமே அல்ல.அவர் "வன்முறையற்ற போர் " எனும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் ஓர் ஆய்வாளர்.

காந்தியை மதிப்பிடுவதில் மிகமுக்கியமான இறுதி பிழை என்னவெனில்,சில நேரங்களில் அவரது அரசியலை நேருவிற்கு கீழிருந்த சுதந்திர இந்தியாவின் கொள்கைகளுடன் ஒத்தது என்று நம்புவது.காந்தியிடத்தில் நேருவிற்கு அபார மரியாதை இருந்தாலும் , இந்திய தேசிய காங்கிரசோடு இனைந்து காந்தி நீண்ட காலம் இந்திய சுதந்திரத்திற்கு போராடி இருந்தாலும் கூட , இன்றைய காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் காந்திய கொள்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உண்மையில் , இந்து முஸ்லீம் மதக்கலவரத்தை அமைதி படுத்த கொல்கத்தாவில் இருந்த காந்தி ஆழ்ந்த சோகத்தில் இருந்தார், ஆகஸ்ட் 15 1947  சுதந்திர தினத்தை அவர் கொண்டாடவில்லை .கலவரம் அதன் தீவிரத்தால் அவரை சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, இந்திய சமூகத்தில் உள்ள ஓர் பலவீனத்தை அது உணர்த்தியதாக எண்ணினார், அதன் காரணமாக இந்தியா மீண்டும் வெளிநாட்டு ஆளுகைக்கு கீழ்படிந்து விடுமோ என்று அவர் அஞ்சினார்.


காந்தி இந்திய பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார்.காங்கிரஸ் தலைவர்களே அத்தீர்வை ஏற்றுக்கொண்டனர்.காஸ்மீரில் இந்திய துணையுடன் அகிம்சை போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், அதுவும் புறக்கணிக்கப்பட்டது.சுதந்திர இந்தியா ராணுவ துணையின்றி தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளும் என்று காந்தி கனவு கண்டார்.மாறாக சுதந்திரத்திற்கு முன்பான இடைக்கால அரசாங்கத்திலும் சரி , சுதந்திரத்திற்கு பின்பும் சரி ராணுவத்திற்கான செலவு அதிகரித்தது .இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்திட வாய்ப்புண்டு அதனால் உலக அமைதிக்கு பங்கம் வரலாம் என்று அவர் எச்சரித்தார்.அகிம்சை முறையை பின்பற்றி எப்படி மாபெரும் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் பிடிகளிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டோதோ அதேப்போல் இந்தியா தனது சுதந்திரத்தை அகிம்சை வழியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.


---மேலும் ---
சுகி

2012/3/4 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2012, 11:11:12 PM3/3/12
to பண்புடன்

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம்-2 -ஜீன் ஷார்ப்

ஜீன்ஷார்ப் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கத்தின் இரண்டாம் பகுதி இது.இந்தியர்கள் வேறுவழியின்றி அகிம்சையை கையில் எடுத்தனர் எனும் வாதத்தை பொய்யாக்கி,எப்படி அகிம்சையை சுதந்திர போராட்ட களத்தில் ஓர் யுத்தியாக காந்தி மக்களை கொண்டு பயன்படுத்தினார் என்பதை விளக்குகிறார்.பொருளியல் ரீதியாக இந்தியாவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது நட்டத்தை ஏற்படுத்தியதால் இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் அகன்றனர்,இதற்கும் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிலவும் ஓர் கருத்தை தர்க்கப்பூர்வமாக புள்ளிவிவரங்களைக்கொண்டு தகர்க்கிறார்.காந்தி, மற்றும் அவரது அகிம்சை முறை மீது  முன்வைக்கப்படும் குற்றசாட்டுகளை எதிர்கொள்ளும் முக்கியமான பகுதி இது.மீண்டும் ஓர் நினைவுறுத்தல்- இக்கட்டுரை ஜீன் ஷார்ப்பால் மேற்கத்திய வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது.


-----------------------------------


ஏழை விவசாயிகளுக்கு இந்திய விடுதலை பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .காந்தி அவர்களை அகிம்சை முறையில் போராடி நிலங்களை பெற போராட சொன்னார் ,அரசியல் ரீதியாக அணி திரளவேண்டும் என்று வலியுறுத்தினார்.காங்கிரசின் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது காந்தியின் பெயரும் படமும் பரவலாக பயன்படுத்தப்பட்டது.காந்தியோ " நாம் கனவு காணும் சமூக மாற்றத்தை இன்றைய காங்கிரஸ் கட்சியால் நிகழ்த்த முடியாது என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் .." என்றார்.காந்தியின் மரணத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை கலைக்கும் ஓர் தீர்மான முன்வரைவை காந்தி எழுதி இருந்தார்,காங்கிரசை தன்னார்வலர்கள் கொண்ட சேவை அமைப்பாக மாற்றி,  அரசிற்கு வெளியே நின்று ஓர் அகிம்சை சமூகத்தை கட்டி எழுப்பி, இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பாடுபடவேண்டும் என்று காந்தி விரும்பினார்.


காந்தியை அவரது கொள்கைகள் மற்றும் பார்வைகளைக்கொண்டே மதிப்பிட வேண்டும் ,மற்றவர்களுடையதை கொண்டு அல்ல.மேலும் மேற்கில் , காந்தி மற்றும் அகிம்சை போராட்டம் தொடர்பாக பரவலாக நிலைத்திருக்கும் பார்வைகளையும் நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.உண்மையில் அவரை சரியாக மதிப்பிடுவதில் இவை குறுக்கிடுகின்றன .பெரும்பாலும் இவை உண்மைக்கு புறம்பானதாக இருக்கின்றது , ஆதலால் காந்தியை பற்றியும் அவர் இந்தியாவில் செய்த சோதனை முயற்சிகளை பற்றியும் ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியாமல் போகிறது.முக்கியமான ஆறு புரிதல் பிழைகளின் பால் நாம் கவனத்தை குவிப்போம்..

இந்தியாவில் அகிம்சை முறையில் விடுதலை போராட்டம் நடந்துக்கொண்டிருந்த காலங்களிலும் அதன் பின்னரும் வெளியுலகில் பரவலாக ஓர் கருத்து நிலவியது , அகிம்சை இந்தியர்களின் இயல்பான குணம்,பல்வேறு காரணங்களால் அவர்களால் வன்முறையில் ஈடுபட முடியாது என்பதே அது .இதன் உட்பொருள் என்னவெனில் , இதற்கு மேல் இந்தியாவில் நடந்த அகிம்சை போராட்ட கள பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே.இப்பொழுது இத்தகைய குரல்கள் ஒலிப்பதில்லை தான் , இருப்பினும் கூட இத்தகைய பார்வை மாற்றத்தின் விளைவுகள் சரிவர ஆராயப்படவில்லை.

ஆங்கிலேயர்களால் வெறும் கலகம் என்று முத்திரைகுத்தப்பட்ட  இந்தியாவின் முதல் சுதந்திர போர் 1857 -59 ஆண்டுகளில் முழுவீச்சில் நிகழ்ந்தது ,இதில் கொரில்லா தாக்குதல் மட்டுமல்ல நேரடி யுத்தங்களும் நடந்தன என்பதை இந்தியர்களை தவிர்த்து வேற்று தேசத்தவர்கள் நினைவில் கொள்வதில்லை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய தேசியவாதிகளிடையே ஓர் தீவிரவாத இயக்கம் முளைத்தது ,குறிப்பாக பஞ்சாப் ,வங்காளம் ,மகாராஷ்டிரா மாகணங்களில் துப்பாக்கி தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புக்களின் விளைவாக எண்ணற்ற உயிர்கள் பலியாகின.  
காந்தி போராட்ட களத்தில் இறங்கிய பின்னரும் கூட தீவிரவாதிகள் இயங்கிக்கொண்டு தானிருந்தார்கள்.1929 களில் கூட டெல்லி சட்ட சபையின் மீது குண்டு வீசப்பட்டது,துப்பாக்கி சூடு நடந்தது .அதே வருட இறுதியில் வைஸ்ராய் லார்ட் இர்வின் பயணித்த ரயில்வண்டியின் அடியில் குண்டு வெடித்தது (பிற்காலத்தில் -இவர் லார்ட் ஹாலிபாக்ஸ் என்றழைக்கப்பட்டார்,அமெரிக்கவுக்கான பிரிட்டிஷ் தூதராக திகழ்ந்தார்).அத்தோடு அவர்களின் செயல்பாடு ஓய்ந்துவிடவில்லை.

1928 வாக்கில்"உங்கள் உதிரத்தை கொடுங்கள் நான் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறேன் " எனும் அறைகூவலின் விளைவாக  சுபாஷ் சந்திர போஸ் மக்களிடையே கணிசமான ஆதரவை பெற்றிருந்தார் , அவரும் நேருவும் அவ்வருடமே பூரண ஸ்வராஜ்யம் வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்,இல்லையேல் சுதந்திரத்திற்கான போர் தொடங்கும் என்றனர்.

இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1938 ஆம் ஆண்டு போஸ் பதவி வகித்தார்,1939 ஆம் ஆண்டு மாநாட்டின் போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் ,ஆனால் காந்தி கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அப்பதவியை துறந்தார்.இரண்டாம் உலகப்போரின் போது போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஜப்பானுடன் இனைந்து போராடினார் ,இந்தியாவின் ஒரு சாரருக்கு இது பெரும் உவகை அளித்தது.   

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த மதக்கலவரங்களை பற்றி சொல்லவேண்டியதில்லை.பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர் .சுமார் ஐந்து மில்லியன் மக்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உருவான புதிய எல்லையை கடந்து இடம்பெயர்ந்தனர்.உள்நாட்டு போர் மூளுமோ எனும் நியாயமான அச்சம் அங்கு நிலவியது,பின்னர் புதிதாக சுதந்திரமடைந்த இரு நாடுகளுக்கு இடையே போர் மூளுமோ எனும் அச்சமும் சேர்ந்துக்கொண்டது.பரஸ்பரம் ராணுவங்கள் காஷ்மீரில் சந்தித்துக்கொண்டன.  

இந்திய எல்லைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் பொழுது தன்னைகாத்துக்கொள்ள மாபெரும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயங்காது என்பது இந்திய -சீன எல்லை பிரச்சனையின் பொழுது தெளிவாக துலங்கியது.பெரும்பான்மை மக்களும் அதே மனநிலையில் தானிருந்தனர்.அரசின் மீது முன்வைக்கப்பட்ட முக்கியமான விமரிசனமே அரசு போருக்கு தக்கப்படி தயாராகவில்லை என்பது தான் . கோவாவில் நடந்த படையெடுப்பு,நாகாலாந்து போர் ,போன்றவை இந்திய அரசு தேவையென்றால் ராணுவத்தை பயன்படுத்த தயங்குவதில்லை என்பதை தெளிவாக்குகிறது.இது காந்தி எதிர்பார்த்தது தான்.ராணுவ பாதுகாப்பு என்று வரும்போது மற்ற அரசுகளிலிருந்து அதன் நடவடிக்கைகளில் இந்தியா பெரிதாக வேறுபடவில்லை என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளது. 

நேருவின் அணிசேரா கொள்கைகள் காரணமாக அல்லது இத்தகைய வழிமுறைகள் பால் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கூட ,சீனா அணு ஆயுதங்களை உருவாக்கிவிட்டால் இந்தியாவும் அத்திசையில் நிச்சயம் பயணிக்கும்..

இவை அனைத்தையும் தொகுத்து பார்க்கும் பொழுது - இந்தியர்கள் வன்முறையை பிரயோகிப்பதில் தேர்ச்சியுடயவர்கள் என்பது தெளிவாக புரிகிறது, அப்படி இருந்தும் ஏதோ சில விசேஷ காரணங்களினால் அகிம்சை முறையை சுதந்திரத்தை அடைய தங்களது முக்கிய திட்டமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது .

இந்திய மதங்களிலும் பாரம்பரியங்களிலும் காந்தி முன்வைத்த வழிமுறைகளுக்கு இடம் இருக்கின்றது என்பதும் உண்மை தான்,காந்தி இதை பயன்படுத்தி ஆன்மீக மொழியில் பேசியபோது எளிதாக ஆன்மீகவாதிகள் அவரை புரிந்துக்கொள்ள முடிந்தது.இதில் மிக முக்கியமானது எண்ணத்தினாலோ செயலினாலோ அல்லது வார்த்தைகளினாலோ  கூட பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க கூடாது எனும் அகிம்சை கோட்பாடு தான்.சந்தேகமின்றி இவை முக்கியமானது தான்,ஆனால் காந்தி இதற்கு வெவ்வேறு புதிய அர்த்தங்களை அறிமுகப்படுத்தினார் .


மேற்குலக நாகரீகத்தில் எப்படி எதிரியிடத்திலும் அன்பு செலுத்து எனும் கிறித்துவின் கோட்பாட்டிற்கு முரண்பாடான கொள்கைகளும் வழக்கங்களும் இருக்கிறதோ அதே போல் இந்திய மதங்களிலும் கலாச்சாரங்களிலும் முரண்பாடுகள் உண்டு.சீக்கியர்களும் முஸ்லீம்களும் ராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.இந்து மதத்தின் வர்ண அமைப்பிலேயே க்ஷத்ரியர்களுக்கு ஓர் இடமுண்டு .காந்தி வெகுவாக போற்றி ,குறியீட்டு தளத்தில் அதன் வெவ்வேறு அர்த்தங்களை பற்றி பேசிய பகவத் கீதை- உண்மையில் போர் முனையில் நிற்பவரிடம் போரில் பின்வாங்காமல் பங்கெடுக்க அறிவுறுத்துகிறது.

இத்தகைய பல ஆவணங்களைக்கொண்டு பார்க்கையில்,அரசியல் போராட்ட களங்களில் இந்தியர்கள் வன்முறையை தேவைப்பட்டால் கையாள்வார்கள் என்பது புலப்படுகிறது .இந்திய சுதந்திர போராட்டம் பெரும்பாலும் அகிம்சை வழியில் நடைப்போட்டதற்கு காரணம் அவர்கள் வன்முறையை அறிந்திருக்கவில்லை எனும் வாதம் சரிகிறது.

 முழுவீச்சிலான நேரடி போர் என்பது அறிவீனம் ,அதனால் அது சாத்தியபடாமல் போயிருக்கலாம் ,ஆனால் நிச்சயம் பெரிய அளவிலான கொரில்லா தாக்குதல்கள் சாத்தியம் தான்.( அல்ஜீரியாவில் நடந்த அத்தகைய போராட்டத்தை போன்ற விளைவுகளை இந்தியாவிலும் ஏற்படுத்தி இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்-இந்தியாவிலும் 3,000,000- 3,500,000 இந்தியர்கள் அல்ஜீரியர்களைப்போல் மடிந்திருக்கக்கூடும் .இந்தியாவில் அகிம்சை போராட்டத்தில் பங்குபெற்று மடிந்தவர்கள், அல்லது காயமடைந்து மறைந்தவர்களின் எண்ணிக்கை ரிச்சர்ட் கிரேகின் கணக்குப்படி சுமார் 8000.பிரெஞ்சு நாட்டவர்கள் ப்ரிடிஷார்களை காட்டிலும் இயல்பில் குரூரமானவர்கள் என்று நிச்சயம் கருதமுடியாது !)

இந்திய அகிம்சை போராட்டம் வேறுவழியின்றி தோன்றியதோ ,இல்லை இயல்பினால் தோன்றியதோ அல்ல என்பதை புரிந்துக்கொண்டு,அகிம்சையை சுதந்திர போராட்டகளத்தில் பிரதான யுத்தியாக பயன்படுத்தி அதை அனைவரையும் ஏற்றுகொள்ள செய்ததற்கு காந்திக்கு அதிமுக்கியமான பங்குண்டு என்பதை உணர வேண்டும் .இந்திய தேசிய காங்கிரஸ் அவரது யுத்தியை ஏற்றதற்கு தார்மீகமோ ஆன்ம நலனோ காரணமில்லை.அது ஓர் அரசியல் செயல்பாடு .காந்தி, அவர்களுக்கு அகிம்சையை முன்வைத்து நடைமுறையில் பயனளிக்க வல்ல வழிமுறைகளை அடையாளம் காட்டினார்.  
காந்தி இந்திய பாரம்பரியத்தின் ஓர் அடையாளம் என்று பரவலாக நம்பப்படுகிறது.கலிபோர்னியா பல்கலைகழகத்தின் டாக்டர். ஜோன் போண்டுரன்ட் கூற்றின்படி இந்திய பாரம்பரிய கோட்பாடுகளை அவர் எப்பொழுதெல்லாம் பயன்படுத்தினாரோ அப்பொழுதெல்லாம் அதன் மூலப்பொருளிலிருந்து மாறுபடும் முக்கியமான புதிய புரிதல்களை முன்வைத்தார்.அதே வேளையில் காந்தி பல தருணங்களில் இந்தியர் அல்லாதராகவும் திகழ்ந்தார் என்பதையும் நினைவுகூர வேண்டும்.பரவலாக கடைபிடிக்கப்பட்ட பல கட்டுபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் அவரது சொல்லினாலும் செயலினாலும் வெளிப்படையாகவே மீறினார். தீண்டாமை இப்பொழுதை காட்டிலும் முழு தீவிரத்தோடு இந்திய சமூகத்தில் புரையோடிய காலங்களில் முழுமூச்சோடு அதை எதிர்த்து போராடினார் என்பது ஓர் எளிய உதாரணம்.தனது வாழ்வையும் அரசியலையும் முழுமையாக பரிசோதனைகளாகவே ஆக்கிக்கொண்டார் ,இந்த அடிப்படையில் மேற்கின் தாக்கம் கணிசமாக நிலவுகிறது. 

தீமையை புரிந்துகொள்வதோ ,ஏற்றுக்கொள்வதோ காந்தி முன்வைத்த வழிமுறையல்ல அதை எதிர்த்து போராட வேண்டும்.பலர் ஆமோதித்தாலும் ,இதற்கு நேரெதிரான கொள்கைகள் கொண்ட சிந்தனை மரபும் இந்து மதத்தில் உண்டு,தீமையை எதிர்க்ககூடாது அதை கடக்க வேண்டும் என்று முன்வைக்கிறது .நன்மைக்கு தீமைக்கும் இடையிலான அறபோராட்டங்களின் விளைவாக மனிதன் மேன்மையை அடைவான் ஆதலால் இதை பற்றி மனிதன் பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை என்கிறது . 

காந்தியின் போராட்ட திசை இத்தகைய இந்து மத தத்துவங்களுக்கு எதிராகவே இருந்தது.பரவலாக வழக்கத்திலிருந்த நடைமுறைகளிலிருந்து பெரிதும் அவரது செயல்பாடு விலகி இருந்தது.எதிர்ப்பின்றி சரணடைதல் என்பது அப்பொழுது இந்தியர்களின் இயல்பு குணமாக இருந்தது, ப்ரிடிஷார்களை காட்டிலும் மக்களின் இந்த குணமே சுதந்திரத்தை அடைய தடையாக இருப்பதை காந்தி கண்டுக்கொண்டார்.இத்தகைய மனப்போக்கை மாற்றி தன்னம்பிக்கையையும் ,செயலூக்கத்தயும் ,மனத்துணிவையும் மக்களிடையே நிறுவியதில் அவரது பங்கு மகத்தானது. 
1920 ல் காந்தி எழுதுகிறார், " அகிம்சை என்பது தீங்கிழைப்பவரிடம் எதிர்ப்பின்றி சரணடைவது அல்ல, மாறாக தன் முழு ஆன்ம பலத்தோடு வன்முறையாளர்களின் இச்சைக்கு எதிராக துணிந்து நிற்பது ,இந்தியா பலவீனமாக இருப்பதால் நான் இந்தியாவை அகிம்சையை கடைபிடிக்க சொல்லவில்லை ..இந்தியா அவளது சக்தியையும் பலத்தையும் உணர்ந்தபடி அகிம்சையை பின்பற்றவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்."   

காந்தியையும் இந்திய சுதந்திர போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பரவலாக மார்க்சியர்களால் முன்வைக்கப்படும் மற்றொரு குற்றசாட்டு - ப்ரிடிஷார்கள் இந்தியாவை விட்டு அகண்டதற்கும் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இந்திய துணை கண்டத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது அவர்களுக்கு லாபகரமாக இல்லாததால் அவர்கள் நாட்டை விட்டு சென்றனர்.  காந்தி மற்றும் அவரது அகிம்சை போராட்டத்திற்கும் ,பிரித்தானிய பொருளாதார வீழ்ச்சிக்கும் தொடர்பில்லை எனும் முன்முடிவு மார்க்சியர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு எதிராக கிளர்தெழுந்த எதிர்பிற்கும் ,சுதந்திர வேட்கைக்கும் காந்தி ஓர் முக்கிய காரணகர்த்தா.இவ்வெழுச்சி பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு பெரும் சவாலாக திகழ்ந்தது , ராஜ்ஜியத்தை தக்கவைத்து கொள்வதும் பெரும் செலவீனமானது.குறிப்பாக ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்பு போராட்டங்களின் பொழுது அவர்களை இது பெரிதாக பாதித்தது. 

 இந்தியாவுடனான வணிக உறவின் பொருளியலை மட்டும் கணக்கில்கொண்டால் கூட ,காந்தியின் செயல்திட்டம் கணிசமான பாதிப்பை செலுத்தியது.1930-31 ஆண்டுகளில் நடந்த சட்ட மறுப்பு ,ஒத்துழையாமை போராட்டங்கள் அதை தெளிவாக உணர்த்தியது.உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை நிலவிய அதே காலகட்டம் தான் என்றாலும்,பிரித்தானிய பொருட்களுக்கான இந்திய சந்தை கணிசமாக குறைந்ததற்கு பொருளாதார மந்த நிலை மட்டும் காரணமில்லை ,ஒத்துழயாமைக்கும் அதில் முக்கிய பங்குண்டு.

இந்தியாவிற்கான பிரிட்டிஷ் செயலர் பிரித்தானிய மக்கள் சபையில்( ஜெ.சி.குமரப்பாவின் கூற்றின்ப்படி ) 1930 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கான ஏற்றுமதியில் 25 சதவிகித வீழ்ச்சியை பொருளாதார மந்தநிலையை காரணமாக சூட்டினார், மேலதிக 18 சதவிகிதம் -இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை போராட்டங்களின் மீது சுமத்தினார்.இந்தியாவிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி புள்ளியியல்  விவரங்கள்ப்படி ( ஸ்டேர்லிங் பவுண்டுகளில் ) 1924 ஆம் ஆண்டு 90.6 லிருந்து 1927 ல் - 85 ஆகவும், பின்னர் 1929 ல் 78.2 ஆகவும், ஒத்துழையாமை ஆண்டான 1930 ல் 52.9 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது .  

அனைத்து தேசங்களிலிருந்தும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியின் அளவு 1924 ல் 1.82 பில்லியன் யார்டுகளிளிருந்து 1929 ல் 1.94 பில்லியன் யார்டுகளாக பெருகி,பின்னர் 1930 ல் 1.92 பில்லியன் யார்டுகளாக  குறைந்தது.பிரித்தானியாவின் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் படி பார்த்தால் ,இதே பருத்தி 1924 ல் 1.25 பில்லியன் யார்டிளிருந்து 1929 ஆம் ஆண்டில் 1.08 பில்லியன் யார்டுகளாக குறைந்தது ,அதாவது 14 சதவிகித வீழ்ச்சி.பின்னர் 1930 ல் 0.72 பில்லியன் யார்டுகளாக குறைந்தது- 42.4 சதவிகித வீழ்ச்சி.அக்டோபர் 1930 லிருந்து ஏப்ரல் 1931 வரையிலான போராட்டத்தின் உச்சகட்ட காலகட்டத்தில் ,சுமார் 84 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டது.  

இந்திய சுதந்திரத்திற்கான பல்வேறு காரணிகளை அலசுவது இதன் நோக்கமல்ல என்றாலும், இப்புள்ளிவிவரங்கள் காந்திய அகிம்சை போராட்டங்களுக்கும் பொருளாதார காரணிகளுக்கும் தொடர்பில்லை எனும் மார்க்சிய பார்வை உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல என்பதை புரிந்துகொள்ளலாம்.

நான்காவதாக முன்வைக்கப்படும் அரசியல் இயல்புவாதக்காரர்களின்(political realists) பார்வை - ஆக்கப்பூர்வமான அரசியல் அதிகாரத்தை அடைய காந்தியின் அகிம்சைக்கு திராணியில்லை ,ஆதலால் நடைமுறை அரசியல்வாதிகளுக்கு அது உதவாது.காந்தியை மிக சாதரணமாகவும்,அவரது வழிமுறைகள் பலமற்றதாகவும், அதனால் அரசியல் எதிரிகளுக்கு எவ்வித சவாலையும் கொடுப்பதில்லை என்று முன்முடிவுகளோடு கருதுகின்றனர் .இவை எதுவுமே உண்மையை அடிப்படையாகக்கொண்டவையல்ல . 

--மேலும்--
-சுகி 

2012/3/4 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>


தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2012, 11:12:33 PM3/3/12
to பண்புடன்

காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் -3 -ஜீன் ஷார்ப்

ஜீன்ஷார்ப்பின் கட்டுரையுடைய மொழியாகத்தின் மூன்றாம் பகுதி இது.காந்தியின் அகிம்சை போராட்ட வழிமுறைகளின் மீது சுமத்தப்படும் களங்கங்கள்,குற்றசாட்டுகள், புரிதல் பிழைகளை பற்றி அலசும் பதிவு.


1930-31 ஆண்டுகளில் நடந்த சட்ட மறுப்பு போராட்ட காலத்தில் காந்தியின் வார்த்தைகள் அற்புதமானவை.

"தங்கள் அரசாட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதை பிரித்தானிய மக்கள் உணர வேண்டும். இந்தியாவிற்குள் நமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமான பலத்தை திரட்டினாலொழிய அவர்கள் அதை உணர மாட்டார்கள்... முன்முடிவுகளோடு விவாதங்களை சுமந்து செல்வதல்ல பிரச்சினை. சமபலம் கொண்ட இருதரப்பில் ஏதேனும் ஓர் தரப்பிற்கு சாதகமாகவே இப்பிரச்சனை தீரும். பிரித்தானிய பேரரசு இந்தியாவுடனான வணிகத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனும் தனது நோக்கத்திற்காக தன் முழு பலத்தையும் பயன்படுத்தும் என்பது உறுதி. இந்தியா இந்த மரணப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போதிய பலத்தை திரட்ட வேண்டும்... நாம் நம் தீவிரமான செயல்பாடுகளால் கட்டாயப்படுத்தினால் மட்டுமே ஆங்கிலேயர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். மனுக்கள், தூதுக்குழுக்கள், நட்பான பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் நான் ஒரு காலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இவை அனைத்தும் வீணாய்ப்போனது. அரசை வழிக்கு கொண்டுவர இவை ஏதும் பயன்படாது என்பது எனக்கு தெரியும்.கலகமே என் மதமாகிவிட்டது.நமது போராட்டம் ஓர் அகிம்சை போராட்டம் "      


அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அறியாமையில் காந்தி இருந்ததாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை.மாறாக, காந்தி தன் போராட்டத்தை முறைபடுத்தி இந்தியர்களின் பலத்தை அதன் உச்ச சாத்தியங்களுக்கு உயர்த்தவும் ஆங்கிலேயர்களை பலவீனப்படுத்தவும் அவர்களின் அரசியல் அதிகாரத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டார். .அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கி வந்த ஒத்துழைப்பையும் ,கீழ்ப்படிதலையும் திரும்பப்பெற்றதன் மூலம் காந்தி ஆள்வோரின் அதிகாரத்திற்கான அடிப்படை ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்கினார். அதே நேரம், ஒத்துழையாமையும் கீழ்ப்படியாமையும் தங்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சிக்கலைக் கொடுத்தது. அகிம்சை முறையில் போராடுவோரின் மீது அடக்குமுறையை செலுத்துவது என்பது அரசிற்கு வலுச்சேர்க்காது. மாறாக, மேலும் பல இந்தியர்களை பிரிட்டிஷ் அரசிடமிருந்து அந்நியமாக்கும். அதேவேளை, -தங்கள் தேசத்திலும் எதிர்ப்பின்முன் ஒற்றுமை குலைந்து எதிர்ப்பும் அதிருப்தியும் வலுக்கும்.   

 இந்தியர்களின் உச்சகட்ட பலத்தை திரட்டிய அதே வேளையில் ஆங்கிலேயர்களின் பலத்தையே அவர்களுக்கு எதிராக திருப்பியது ஓர் அரசியல் ஆடு புலியாட்டம் தான். "எந்த அரசும் விருப்பத்துடனோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ மக்கள் தங்கள் ஒத்துழைப்பை அளித்தாலன்றி ஒரு நொடி கூட பிழைத்திருக்க முடியாது, மக்கள் திடுமென்று ஒத்துழைப்பை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக்கொண்டால் அரசு ஒட்டுமொத்தமாக திகைத்து நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன்" என்றார் காந்தி.

அரசியல் அதிகாரங்களின் பயன்பாடு பற்றி காந்திக்கு அறியாமை இருந்தது என்பதையும் அவரது செயல்முறை வலுவற்றது என்பதையும் பிரித்தானிய அரசாட்சிப் பணியாற்றிய, இந்தியாவில் காந்தியுடன் தொடர்பிலிருந்த, ஒவ்வொரு பிரித்தானிய அதிகாரியும் வைஸ்ராயும் நிச்சயம் கடுமையாக மறுப்பார்கள்.

ஜூலை 1930 ஆம் ஆண்டில் இந்திய சட்டசபையின் கூட்டவையில் வைஸ்ராய் லார்ட் இர்வின் ஆற்றிய முக்கியமான உரையில் " என்னுடைய தனிப்பட்ட முடிவும், எனது அரசின் முடிவும் - சட்ட மறுப்பு இயக்கம் என்பது அரசின் அதிகாரத்தை தூக்கி எறிய பெருந்திரள் மக்களை பயன்படுத்திக் கொள்வதாகும். மேலும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது, ஆட்சியைக் கவிழ்க்குமளவிற்கு ஆபத்தானது. இந்த வெகுஜனப் போராட்டத்தை முன்வைப்பவர்கள் இதை அகிம்சை வழிமுறை என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இது வன்முறையின் மற்றொரு வடிவம்தான். அது அரசை நிலைகுலைய செய்ய வேண்டும் எனும் தன் இலக்கை அடைய முனையும்போது, ஒன்று அரசு அதை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும் இல்லையேல் அதற்கு பணிந்து போக வேண்டும் ..சட்டமறுப்பு இயக்கம் முடிவுக்கு வரும்வரை நாம் நம் முழு திறனோடு அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் .."என்றார் இரவின். காந்தி நடைமுறைக்கு ஒவ்வாதவர் என்று அவரை புறம்தள்ளிய அரசியல் நடைமுறைவாதிகள் தங்கள் முடிவை மறுமதிப்பீடு செய்தாக வேண்தியது அவசியம்.

ஐந்தாவதாக, பரவலாக உள்ள ஒரு புரிதல் பிழை -குறிப்பாக இங்கிலாந்திலும்,சில இந்தியர்களிடமும் - அகிம்சை போராட்டம் வெற்றி பெறக் காரணம் - எதிர்தரப்பு மென்மையான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என்ற எண்ணம் இருக்கிறது. இக்கூற்றில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், அது அகிம்சை போராட்டத்தின் வெற்றியில் எந்த அளவிற்கு பங்களிப்பாற்றியுள்ளது என்று ஆராயாமல், இது மட்டுமே காரணம் என்று அதீதமாக நிறுவப்படுகிறது - ஆதலால் இதர நிகழ்வுகள் உரிய கவனம் பெறாமல் அப்படியே புறக்கணிக்கப்படுகிறது .

ஸ்டாலினைப் போலோ ஹிட்லரைப்போலோ பிரிட்டிஷார்கள் வரம்பற்ற வன்முறையாளர்கள் அல்ல. ஆனாலுகூட இன்று நம்பப்படுவதை காட்டிலும் பன்மடங்கு அதிகமான அடக்குமுறையை கையாண்டவர்கள் அவர்கள். மக்கள் மிக மோசமான சிறைச்சாலைகளிலும் சிறை முகாம்களிலும் வதைபட்டது மட்டுமின்றி போராட்டங்களின்போது மண்டையோடு தெறிக்கும் அளவுக்கு தலையில் லத்தி அடிகளையும் தாங்கிக் கொண்டனர்.இதைக் காட்டிலும் கொடூரமான நிகழ்வு- ஜாலியன் வாலா பாகில் நடந்தேறியது, அமைதியான முறையில் திரண்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கி சூடு நடந்தது .ஹன்டர் கமிஷனின் தகவலின் படி அதில் 379 உயிர்கள் பலியாகின, 1137 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 


அகிம்சை போராட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசு அடக்கி வாசித்தது என்றால்- அதற்கு அகிம்சை போராட்டம் ஏற்படுத்திய பிரத்யேக பிரச்சனைகள்தான் காரணம், மேலும் அகிம்சை போராட்டம் உருவாக்கிய எழுச்சியும் அதற்கு முக்கிய காரணம். மென்மையை கடைபிடிக்கும்  ஆங்கிலேயர்கள் எதிர்தரப்பு என்பதினால் அல்ல. இதே ஆங்கிலேயர்கள் கென்யாவின் மாவு மாவுவிடமும் , ஜெர்மனியின் மீதான குண்டுவீச்சின்போதும் எத்தகைய மென்மையையும் கடைபிடிக்கவில்லை. 

ஹிட்லர் அவரது சுயசரிதையான மெய்ன் கேம்பில் - இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெற்றிபெற அகிம்சை போராட்டமோ வன்முறை புரட்சியோ கைகொடுக்கும் என்று நம்பவில்லை."இங்கிலாந்தை பணிய வைப்பது எத்தனை சிரமம் என்பதை ஜெர்மானியர்களான நாங்கள் உணர்ந்துள்ளோம் " என்று எழுதுகிறார் அவர்.  

அரசியல் போராட்டங்களில் இந்தியாவின் அகிம்சை போராட்டம் மட்டுமே தனியுதாரணமாகக் கருதப்பட்ட காலக்கட்டத்தில் வேண்டுமானால் அது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது என்பதால்தான் வெற்றிபெற்றது எனும் கருத்து ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இப்பொழுதைய சூழலில் அது உண்மையில்லை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வெவ்வேறு அரசியல் சூழல்களிலும் குறிபிடத்தக்க அளவுக்கு வென்றுள்ளது - நாஜி, கம்யுனிஸ்ட் ஆட்சிகள் உட்பட. அதன் பயனை முழுவதுமாக உணர அந்தந்த சூழலை பற்றிய நுண்ணிய ஆய்வுகள் அவசியம்.


இறுதியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஓர் கருத்து -அகிம்சை வழிமுறை மூலம் அரசியல் வெற்றி பெறுவது என்பது காந்தி வாழ்ந்த காலத்தில் நிலவிய இந்திய சூழலுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவிற்கு வெளியில் உள்ளவர்கள் இதன் மூலம் அகிம்சை- நடைமுறைக்கு ஒவ்வாது என்று கருத நேரிடும். இந்தியர்களை பொருத்தவரை -ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்தது, இனி எப்போதும் பயன்படாது என்ற ஒரு எண்ணம் உள்ளது. சில சமயங்களில் இத்தகைய பார்வை மேலும் குறுகி- இந்துமதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே அகிம்சை வழிமுறை ஏதுவானது என்றும் கருதப்படுகிறது . 


இக்கருத்தை மறுத்திட இந்திய அனுபவங்களேகூட நமக்கு உதவும். அகிம்சை போராட்டங்களில் அபார திண்மையோடும் உறுதியோடும்  பங்குக்கொண்டவர்கள் வட மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த முஸ்லீம் பதான்கள். நீண்டகாலமாக பலவேறு போர்களில் பங்குபெற்று அவர்களின் வீரதீர செயல்களுக்கு பெயர்போனவர்கள். இவர்கள் கான் அப்துல் கபார் கானின் திண்மையான தலைமைக்கு கீழ் அகிம்சை முறையில் போராட அணிதிரண்டனர்.   

இது நமது முக்கிய கவனத்திற்கு உரியதில்லை என்றாலும்,இப்பொழுதும் அகிம்சை செயல்பாடுகள் இந்தியாவில் சாத்தியம் என்று ஒரு சாரர் நம்புகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சுதந்திரத்திற்கு பின்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் உள்நாட்டு அளவில் இவ்வழிமுறைகள் பயன்பட்டுள்ளது.சீனாவோ பாகிஸ்தானோ ராணுவ பலத்தைக்கொண்டு எல்லை மீறி வந்தால் அதை எதிர்கொள்ள அகிம்சைமுறை பயன்படுத்துவதற்கான ஆயத்தனங்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் இத்தகைய சூழலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகவில்லை என்பதும் உண்மையே. 

சுகி 


2012/3/4 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>


Reply all
Reply to author
Forward
0 new messages