கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள்

1,038 views
Skip to first unread message

subra manian

unread,
Jan 17, 2018, 10:48:07 PM1/17/18
to Srividhya S., subra manian, Venkatachalam Subramanian, Palsuvai
tamizhtharakai.wordpress.com

tamizhtharakai.wordpress.com

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17 | தாரகை on WordPress.com

By tharakaieditor|Nov. 9th, 2017


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

நெய்தல்மலர்.jpg

நெய்தல்மலர்

நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84).

கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவைகளிலும் ஆங்காங்கே காணப்படும். ’மணிப்பூ நெய்தல்’ என்று இதனைக் குறிப்பர். மணிபோல நீல நிறத்தையுடைய பூ என்று பொருள் கொள்ளவேண்டும்.“கண் நேர் ஒப்பின் கமழ் நறு நெய்தல்” (நற்றிணை, 283:2) என்று நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல்மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர். இதனை, ‘இருங்கழி நெய்தல்’ என்று குறுந்தொகை (336) கூறும். இருங்கழி ஓரத்தில் கழிசேர் மருங்கில் நெய்தல்மலர்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. செடிநூலிலும் மேற்குக் கடற்கரையில் கழிகளில் (Backwaters) காணப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

நெய்தற்செடியின் இலை ‘பாசடை’ என்று அழைக்கப்படுகின்றது. நீரில் வாழும் தாமரை, ஆம்பல் கொடிகளின் இலைகளை ‘அடை’ என்று வழங்குவது சங்கநூல் வழக்கு. நெய்தலின் இலை தாமரையைக் பார்க்கிலும் சிறியதாய் இருந்ததால்  ‘சிறு பாசடைய நெய்தல்’ (நற். 27) எனப்பட்டது. தாமரை, ஆம்பல் மொக்குகளைவிடச் சிறியதாக இருந்ததால் ‘சிறுகுரல் நெய்தல்’ எனக் கூறப்பட்டது. நெய்தலின் இலை சிறிய யானைக்குட்டியின் காதுபோலக் காணப்படுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது. நெய்தல்மலர் நன்றாக இலைகளுக்குமேல் நீட்டிப் பூப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது‘கணைக்கால் நெய்தல்’ என்று பலவிடங்களில் பேசப்படுகின்றது.

       நெய்தல்மலர் நிறம் கருமை என்று கருதியே கண்ணுக்கு உவமிக்கப்பட்டது. நெய்தல்மலர் நறுமணமுடையது என்றும், இதன் தாதை வண்டினம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. நெய்தல் வைகறையில் மலரும். அதனை, ‘வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி (திருமுருகாற்றுப்படை, வரிகள் 73-74) என்றும், ‘வைகறை மலரும் நெய்தல்’ (188:3) என்றும் வருகின்ற பாடல் வரிகளால் உணரலாம். மாலை நேரத்தில் இம்மலர் கூம்பும். இது மிகுதியாக மலர்ந்திருக்கும் காட்சி, நீலமணி நிறைந்த பொதியை அவிழ்த்துவிட்டாற் போலிருக்கும் காட்சியை  நற்றிணைப் பாடல் (239:6-8) படம் பிடித்துக் காட்டுகின்றது.

       வண்டுகள் தாமரைப் பூவில் இரவெல்லாம் உறங்கி, வைகறைப் போதில் மணம் கமழ்கின்ற நெய்தல்மலரில் தேனை உண்டு, சூரியன் தோன்றிய பின்னர் சுனையில் மகளிரின் கண்போல் மலர்ந்த சுனைப் பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் காட்சியை,

               “முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

                 கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

                 கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

                 அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

என்று திருமுருகாற்றுப்படை (வரிகள் 73-76) காட்டுகிறது.

       நெய்தல் உட்துளையை உடைய மலர் என்பதை, ‘நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூ’ என்று ஐங்குறுநூறு(109:1-2) கூறும். ‘தூம்பின் பூ – உட்துளையுடைய பூ’ என்று உ. வே. சா. விளக்கம் கூறுவார். நெய்தலின் காம்பு திரட்சியுடையது. ஆதலின் அதனைப் ‘பாசடை நிவந்த கணைக்கால்’ நெய்தல் என்றனர். சேறுநிறைந்த செழிப்பான இடங்களில் நெய்தல் இடையறாது பூக்கும். நறுமணமும், தேனும் நிறைந்த,. கரும்பைவிட இனிப்புடையதான நெய்தல்மலரை எருமைகள் விரும்பி உண்பதைப் பதிற்றுப்பத்தால் அறியலாம்.

       தொண்டைநாட்டு உழவர்தம் பிள்ளைகள் நெய்தல் பூக்களைச் சூடிக்கொள்வர். செங்கரும்புச் சாற்றைக் காய்ச்சும்போது உண்டான வெப்பத்தால் நீர் நிரம்பிய வயலில் உள்ள உயர்ந்த நெய்தல் பூக்கள் தம் அழகு கெட்டு வாடியதை, “கார்க்கரும்பின் கமழ்ஆலை, தீத்தெறுவின் கவின்வாடி, நீர்ச்செறுவின் நீள்நெய்தல் பூச்சாம்பும்” என்ற பட்டினப்பாலை (வரிகள் 9-12) உணர்த்துகின்றது.

நெய்தல் பூத்திருக்கும் பகுதியை  ‘நெய்தற் படப்பை’  என்பர். (திணைமொழி ஐம்பது, 41) இம்மலர்களைக் கண்ணியாகக் கட்டி அணிந்துகொள்வர் (குறுந்தொகை, 401). அழகிய நீலமணிகளின் குவியலை விரித்துப் பரப்பியது போன்றன நெய்தலின் புறவிதழ் மூடிய மலர்கள் என்று கூறுவர் (நற்றிணை, 239 உரை). வளமான இதழைக்கொண்ட தாமரைப் பூவையும், நெய்தல் பூவையும் பறித்துப் பெண்கள் சூடிக் கொள்வர் (பதிற்றுப்பத்து, 78:4-5). நெய்தலும் நீலமலரும் நிறத்தால் ஒக்குமாயினும், நீலத்தின் இதழ் முழுவதும் நீலநிறம் கொண்டிருப்பதே இவற்றிடை வேறுபாடு. அன்றியும், நீலம் காலையிலும், நெய்தல் வைகறையிலும் மலரும். நெய்தல் பூவின் இதழ் வேல் வடிவில் இருக்கும். சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பேசப்பட்ட மலர்களுள் நெய்தல்மலரும் ஒன்று.

Related image

தென்னம்பாளை

தெங்கு அல்லது தென்னை தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான தாவரமாகும். இது பிலிப்பைன்ஸ்/பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாகக் கேரளத்தையும், தமிழ்நாட்டையும் அடைந்திருக்கவேண்டும். வேதகால மனிதர்களுக்கும், வட இந்தியர்களுக்கும் தென்னைபற்றி இடைக்காலத்தில்தான் தெரியவந்துள்ளது. இதன் பெயர்/இதன் உறுப்புகளின் பெயர் தென்னிந்திய மொழிகளில் பின்வருமாறு: தென்னைமரம், தென்னை, தேங்காய் (தமிழ்); தெங்கு (தமிழ், மலையாளம், கன்னடம்); தெங்காயி (தெலுங்கு); தெங்கினகாயி (கன்னடம்). இலங்கையிலும் இதன் பெயரைக் குறிக்கும் சொல் தெற்குத் திசையின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த அனைத்துச் சொற்களுக்கும் வேர்ச்சொல் ‘தென்’ ஆகும். அதாவது இது இந்தியாவிற்கு அதன் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாட்டில்/நாடுகளிலிருந்து வந்தது என்பது தெளிவு. இவை பிலிப்பைன்ஸ், பாலினீசியா அல்லது பசிபிக் தீவுகள் ஆகியவைகளாக இருக்கவேண்டும்; ஏனெனில் இங்கெல்லாம் தென்னை இயல்புத் தாவரமாக வளர்கிறது. அங்கிருந்து கடல் மூலம் பரவியோ, கடல் வாணிகம் மூலமாகவோ இது இலங்கையையும், கேரளா வழியாகத் தமிழகத்தையும் அடைந்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே இன்றும் பரவலாக உள்ள தெங்கு என்ற பெயரில்தான் தமிழகத்திலும் இது முதன் முதலில் அழைக்கப்பட்டது.

தென்னையைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் தெங்கு என்ற பெயரில்தான் காணப்படுகின்றன. குறிப்பாக பொது ஆண்டு 250க்குப் பின்னால் எழுதப்பட்ட திருமுருகாற்றுப்படையில் தெங்குபற்றி இரண்டு குறிப்புகள் உள்ளன.

ஏழாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியத்திலும், கோயில்களில் தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், 7ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தெங்கு நன்கு அறிமுகமாயிருந்தது. முதலாம் நந்திவர்மனின் ஏழாம் நூற்றாண்டுத் தண்டந்தோட்டம் செப்பேடுகளில், “இம்மனை உள்ளிட்ட தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாராகவும்” என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது‘தெங்கு நின்ற நந்தவனம்’ என்ற தொடரையும் இந்நூற்றாண்டில் தாம் காண்கிறோம். பத்தாம் நூற்றாண்டுவரைகூட தேங்காய் இறைவனுக்குப்  படைக்கப்படவில்லை (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பக். 117-118).

தென்னை, பசமேசியீ அல்லது பனைக் குடும்பம் என்னும் ஒற்றை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனம். அயனமண்டலத்தில் வளரும் பனைக் குடும்பத் தாவரங்களிலெல்லாம் மிகவும் பயன்தரும் மரமாகும். இதன் காயின் உள்ளிருக்கும் பருப்பு உலர்ந்தால் கொப்பரை எனப்படும். கொப்பரையும், அதிலிருந்து பிழியப்படும் தேங்காய் எண்ணெயும் வாணிகத்தில் முக்கியமான பொருள்கள்.

எண்ணெய் எடுப்பதும், தேங்காய் நார் எடுப்பதும், அதிலிருந்து கயிறு திரிப்பதும் குடிசைத் தொழில்களாகவும், பெரிய ஆலைத் தொழில்களாகவும் வளர்ந்துள்ளன. இந்தியாவின் மேற்குக் கரையிலும், அயனமண்டலத் தீவுகளிலும் உள்ள மக்களின் செல்வத்திற்கு வேறு எந்தத் தனிப்பயிரைக் காட்டிலும் தென்னையே காரணம் என்று சொல்வது மிகையாகாது.

Related image

தென்னை நாரிலிருந்து கயிறு திரித்தல்

தென்னைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வழியில் மக்களுக்குப் பயன்படுகின்றது. காயிலுள்ள பருப்பு பச்சையாக இருந்தாலும், காய்ந்து கொப்பரையானாலும் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. எண்ணெய் சமையலுக்கும், தாவர நெய் தயாரிப்பதற்கும், சோப்பு முதலிய அலங்காரப் பொருள்கள் செய்வதற்கும் பயனாகின்றது. பிண்ணாக்கு கால்நடைகளுக்குத் நல்ல தீவனம். இளங்காயிலுள்ள நீர்,களைப்பை ஆற்றிக் குளிர்ச்சி தரும் பானம். தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கும் நார், கயிறு திரிக்கவும், கயிற்று மிதி, பாய் முதலியன செய்யவும் உதவும். கொட்டாங்கச்சி ஓடு அடுப்பெரிக்கவும், கரியாக்கவும் உதவுகிறது. வளர்ந்தமரத்தின் தண்டு வெட்டுமரமாகப் பயன்படும். தென்னமட்டையைக் கீற்றாக முடைந்து, கூரை வேயவும், வேறு வகைகளிலும் பயன்படுத்துவார்கள். விரியாத பாளையைச் சீவித்தட்டி, அதிலிருந்து வடியும் சாற்றை, வெல்லம், சர்க்கரை, இனிய பதநீர், புளித்த கள் ஆக மாற்றிக்கொள்வார்கள். இவ்வாறெல்லாம் பலவிதமாகப் பயன்படுவதால், இம்மரம் மெய்யாகவே வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் கற்பக விருட்சம் என்றும் சுவர்க்கத் தரு என்றும் சொல்லப்படுகிறது.

       தென்னை அயன மண்டலத்தின் பெரும்பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. பிலிப்பீன் தீவுகளே தெங்கு விளையும் நாடுகளில் முதன்மையானவை. இந்தியாவில் திருவிதாங்கூர், கொச்சி, சென்னை, மைசூர் ஆகியவையே தென்னைப் பயிருக்கும், விளைவுக்கும் பேர் போனவை.

இன வகைகள்

        பயிராகும் தென்னை வகைகளை நெட்டை, குட்டை என இரண்டு பிரிவுகளாகப் பொதுவாகப் பிரிக்கலாம். இந்தப் பிரிவுகள் ஒன்றொன்றனுள்ளும் பல உட்பிரிவுகள் உண்டு. நிறம், வடிவம், காயின் பருமன், விளைவின் அளவு ஆகியவற்றைக் கொண்டு இந்த உட்பிரிவுகள் ஏற்படுகின்றன.

       நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கும். சூழ்நிலையைத் தாங்கிக்கொள்ளும் உறுதியுள்ளது. தேங்காய், கொப்பரை, உயர்தரமான எண்ணெய், உயர்தரமான நார் போன்ற பலவிதமான பயன்களைத் தருவது. இதுவே உலகத்திலே தென்னை வளரும் நாடுகளிலெல்லாம் பொதுவாகவும், ஏராளமாகவும் பயிர் செய்யப்படுகிறது. இது 7 முதல் 10 ஆண்டுகள் காலம் தாழ்த்தே காய்க்கத் தொடங்கும்.

       குட்டை வகைகள் 3, 4 ஆண்டுகளுக்குள்ளே காய்க்கத் தொடங்கும். ஆயின் அவை 30 – 35  ஆண்டுகளே வாழ்ந்திருக்கும். அவற்றில் நல்ல தரமான தேங்காய் உருவாவதில்லை; கொப்பரையும் கிடைப்பதில்லை. இவற்றைப் பல நோய்களும், பூச்சி முதலிய தொற்றுக்களும் பற்றும். இந்தக் குறைபாடுகள் உள்ளதால், குட்டைத் தென்னை தோப்பாக வளர்ப்பதற்கு ஏற்றதன்று என்று கருதப்படுகிறது. என்றாலும், கவர்ச்சியான பச்சை, கிச்சிலி, சிவப்பு நிறமுள்ள காய் கொடுக்கும் வகைகளுக்காகவும், அழகுக்காவும், இளநீருக்காகவும் பயிர்செய்யப்படுகிறது. தென்னைமரம் 7 – 10 ஆண்டுகளில் பாளை விட்டுப் பூக்கத் தொடங்கும். பிறகு அனுகூலமான நிலைமைகளில் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் ஒழுங்காக ஒரு பாளை உண்டாகும்.

பயன்

       சமையல் முதலிய வீட்டுப் பயன்பாட்டிற்கும், தொழிற்சாலைகளிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.  மற்ற எல்லா எண்ணெய்களையும்விட இது எளிதில் சீரணமாகிறது. சோப்புத் தொழிலில் தேங்காய் எண்ணெய் மிகுதியாகப் பயன்படுகிறது. உலகத்திலே தென்னைமரம் விளையும் பாகங்களிலெல்லாம் பச்சைத் தேங்காய்ப் பருப்பும், தேங்காய் எண்ணெயும் மக்களின் உணவுகளில் பெரும்பாலான வகைகளில் சேர்கின்றன. தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும் (கலைக்களஞ்சியம், தொகுதி 6, பக். 148-152).

Related imageசங்க காலத்தில் தளவம் என்னும் பெயரால் குறிப்பிட்டு வந்த இப்பூவை இக்காலத்தில் சாதி மல்லிகை என்று அழைக்கின்றனர். தளவமும் முல்லை இனத்தைச் சேர்ந்தது. நச்சினார்க்கினியர் இதனைச் செம்முல்லைப் பூ என்று குறிப்பிடுகிறார். மலைச்சாரல்களிலும், பாறையின் மேலும் இது படர்ந்து காணப்படும். கார்காலத்தில் மாலை நேரத்தில் மிகுதியாக மலர்ந்து நிற்கும். மணம் மிக்க இம் மலரின் போது மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்று சிறிது சிவப்பாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதனை, “பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை” என்ற பாடல் வரி (ஐங்குறுநூறு, 447:2) தெரிவிக்கிறது.

       தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மொட்டு செந்நிறமாக இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால், இதனைத் தளவம் என்றனர்.

சங்கப் பாடல்களில் தளவம்

தளவ முல்லை’ (அகநானூறு, 254:15) என்றும், ‘அவிழ் தளவின் அகன் தோன்றி, நகு முல்லை’(பொருநராற்றுப்படை, வரிகள்199-200) என்றும் அழைக்கப்படும் தளவ மலர் கொடியில் பூக்கும். புதர் மேல் படரும் (நற்றிணை, 242:2). மேலும், ஐந்திணை எழுபது, கார் நாற்பது, திணைமாலை நூற்றைம்பது, பதினெண்கீழ்க்கணக்குப் போன்ற சங்கப் பாடல்களிலும், இரட்டைக் காப்பியங்களிலும் தளவம் பூ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. புதரின் மீது படர்ந்த செம்முல்லையின் சிவல் முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள் என்பதை, “புதல் மிசைத் தளவின் இதல் முட் செந் நனை” என்ற அகநானூற்றுப் பாடல் வரி (23:3) தெரிவிக்கிறது. மிகுந்த மழை பொழிந்தது; பாறையின் பக்கத்தில் சிச்சிலிப் பறவையின் வாய்போன்ற அரும்பைக் கொண்ட தளவம் மலர்ந்ததை, “படுமழை பொழிந்த பாறை மருங்கில், சிரல்வாய் உற்ற தளவின்” என்று நற்றிணை (61:7-8) கூறுகிறது. உழவர் காட்டில் புதரில் மலர்ந்துள்ள தளவம் பூவைச் சூடுவதைப் புறப்பாடலால் (395:6) அறியமுடிகிறது.

தளவ மலர் கூத்தியரிடத்துக் கூர் எயிறுபோல அரும்பின என்பதை, “குருதிக் கூரெயிறு கூத்தியர்கட் கொண்ட கொடித் தளவமே” என்று சீவக சிந்தாமணியில் (1651) தளவம் குறிப்பிடப்படுகிறது.

இந்திய நடுவணரசு தாமரையைத் தேசியமலராகப் போற்றிவருகின்றது.    வியட்நாமுக்கும் இதுவே தேசியமலர். தாமரையினைத் தமிழிலும், வடமொழியிலும் பல்வேறு பெயர்களிட்டு வழங்குகின்றனர். தாமரையானது பங்கம் ஆகிய சேற்றிலே தோன்றுவதால் ‘பங்கஜம்’ (பங்கம் + ஜம்) எனப் பெயர் பெறும். இதனைத் தமிழில் பங்கயம் என்பர். வனம், அப்பு, ஜலம் ஆகியவை நீரைக் குறிப்பன. தாமரையானது நீரில் தோன்றுவதால் வனஜம் (வனம் + ஜம்), அம்புஜம்(அப்பு + ஜம்), நீரஜம் (நீர் + ஜம்) ஜலஜம்(ஜலம்+ ஜம்) என்றும் வழங்குவர். இவற்றுள் முதலிரண்டு பெயர்களையும் தமிழில் வழங்குகையில்வனசம், அம்புயம் என்பர். நீரில் தோன்றுகின்ற அதே குறிப்பில் பின்னிரண்டு பெயர்களாகிய நீரஜா, ஜலஜாஆகியவையும் (வட சொற்களும்) வழக்கில் உள்ளன. தாமரைக் காம்பிலே மொட்டையான முள்போன்ற அமைப்பு இருப்பதால்  ‘முளரி’  என்றும் தமிழில் கூறுவர் (செ. வைத்தியலிங்கன், தமிழ் பண்பாட்டு வரலாறு, முதல் பாகம், ப.135). தாமரை, ஆம்பல் குடும்பத்தின் தாவரமாகும். இதன் மற்ற பெயர்கள் அரவிந்தம், போது, கமலம், பத்மம், செந்தாமரை மற்றும் வெண்தாமரை என்பன (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.109).

Image result for செந்தாமரைImage result for வெண்தாமரைதாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். பண்டைய எகிப்துநாட்டில் நைல் நதிக்கரை ஓரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் தூயமலராகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின் பூக்கள் மற்றும் இதழ்கள் அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை, அங்கிருந்து பாரசிகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

       தேவநேயப் பாவாணர், தும் – துமர் – தமர் – தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். ‘தும்’ என்பது சிவந்தவற்றோடு தொடர்புடைய சொல் மூலம். ஆகையால், தாமரை என்னும் சொல் செந்தாமரையைக் குறிக்கும் என்றும், அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத் தாமரைப் பூவையும் குறிக்கும் பொதுப் பொருளில் வழங்குகிறது என்றும் கூறுகிறார்.

       வெண்ணிறத் தாமரை வெண்தாமரையென்றும், சிவப்புநிறத் தாமரை செந்தாமரை என்றும் வழங்கப்படுகின்றன.

தாவர அறிவியலில் தாமரை

       தாமரை தமிழ்ப் பண்பாட்டிலும், ஆசியப் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்து போற்றப்பட்ட மலர்.

உலகப் புகழ் பெற்ற நேச்சர் (Nature) இதழில் (1996) வெளிவந்த ‘தாமரை’ தொடர்பான ‘தாமரையின் வெப்பம் உருவாக்கமும் பூச்சி இனங்களின் ஈர்ப்பும்’என்ற கண்டுபிடிப்புக் கட்டுரை கூறும் வியப்பூட்டும் செய்தி:

       முனைவர் ரோஷர் டெய் மோர் மற்றும் முனைவர் பால் சுல்சு மோட்டல் எனும் அடிலெய்டு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் சார்ந்த இரு தாவர உடலியல் வல்லுனர்கள் தாமரைப் பூவினை ஆராயும்பொழுது, அவை எப்பொழுதும் தமக்குள் வெப்பத்தை உண்டாக்கி வெதுவெதுப்புடன் அதனிலும் குறிப்பாக 860 – 950  பாரன்ஹீட் வெப்பத்தையே சமநிலைப்படுத்திக் கொண்டேயுள்ளது என்று கண்டறிந்தனர். மேலும் தாமரைப் பூவின் வெளிப்பகுதி மிகக் குளிராக இருப்பினும், மிக உயர்வான வெப்பமாக இருப்பினும், தாமரை தன் பூவினுள் உள்ள வெப்பத்தை உயரவிடாமலோ, தாழவிடாமலோ ஒரேவிதமாக வெதுவெதுப்பான தன்மையையே எல்லாச் சூழலிலும் பேணுகின்றது. தாமரையின் இச்செயல்பாடு அந்த அறிவியலாளர்களை வியப்பின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது.

       இதன் தொடர்ச்சியாக, தாமரைப் பூக்களில் பல நுண்ணிய வெப்பமானிகளை இணைத்து அதன் வெப்ப மாற்றங்கள் மற்றும் ஆற்றல் உருவாக்கத்தை ஆய்வுசெய்தபொழுது, தாமரை மலர்கள் மலர ஆரம்பிக்கும்போது அதன் வெப்பநிலை மாற்றம் அடையத் தொடங்குகிறது. அதைவிட இரவுநேரக் குளிரில் அதன் மலர்கள் கூம்பிய நிலையில் அதிக வெதுவெதுப்பாகவே உள்ளது. வெப்பநிலை மாற்றம் 860முதல் 950 பாரன்ஹீட் வரையே உள்ளது. இந்த வெதுவெதுப்பான வெப்பநிலையில் ஒவ்வொரு தாமரைப் பூவும் ஒரு ‘வாட்’ சக்தியை வெளிப்படுத்துகிறது. நாற்பது மலர்கள் கூடி ஓர் அறையில் உள்ள 40 வாட் குழல் விளக்கை எரிய வைக்க இயலும் என்று கூறுகின்றனர் அதே ஆராய்ச்சியாளர்கள்.

Related image

தாமரையில் வண்டு

  இந்த வெப்பநிலையில்தான் தாமரையை நோக்கி வண்டுகள் மாலையில் விரும்பி வருகின்றன. பின்னர், தாமரை இதழ் மெதுவாக மூடிக் கூம்பிக்கொள்கின்றன. இந்த வெப்பநிலையில் வண்டுகள், இயல்பான சூழலைவிடச் சுறுசுறுப்பாக இரவில் புணர்ச்சியையும், மகரந்தத்தை கிளறி உண்பதையும் மேற்கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன. இரவில் கால் முழுதும் மகரந்தத் தூள்களை ஒட்டி எடுத்துக்கொண்ட வண்டு, காலையில் கிளம்பிச் சென்று வேறு தாமரை மலரில் அயல் மகரந்தச் சேர்க்கையைச் செய்துமுடிக்கின்றது. இதற்காகத்தான் வண்டுகளுக்கு இதமான வெப்பத்தைத் தாமரை கொண்டுள்ளது. இது எரியும் சுடர் போலும் திகழ்கின்றது.

சங்க கால இலக்கியத்தில் தாமரை – ஓர் அறிவியல் பார்வை

       உலகம் வியக்க, பல்துறை அறிவியலாரால் ஆய்வு செய்யப்பட்டு, ‘நேச்சர்’ இதழில் வெளிவந்த நுட்பமான கண்டுபிடிப்பினை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சங்ககாலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர் என்பது அறிவியல் வியப்பின் உச்சமாகும். தாமரையின் தாவரச் சூழல் தன்மை மட்டுமல்லாமல், மனிதமன நுட்பத்தினையும், உடல் நுட்பத்தினையும் விளக்கும் தன்மையைக் காணும்போது சங்கப் புலவர்கள் இயற்கை அறிவியலை மிக நுட்பத்துடன் அறிந்திருந்தனர் என்பது புலப்படுகிறது.

                “மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

                 சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

                 வேனிலானே தண்ணியள்; பனியே,

                 வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

                 அலங்கு வெயிற் பொதிந்த தாமரை

                 உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே”              ( குறுந்தொகை, 376)         

தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறியதாக அமைந்த இப்பாடலில், மக்கள் அணுகமுடியாத உயரமான உள்காட்டினுள்ளே வளர்ந்த சந்தனத்தின் குளிர்ச்சிபோல், வேனில் காலத்திலும் குளிர்ச்சி உடையவளாக இருக்கின்றாள் தலைவி. இதை அனுபவித்துக் கண்ட தலைவன் இயற்கையில் குளிர்ந்த பொய்கையில் மலர்ந்த தாமரையை உவமையாக்குகின்றான். தாமரை, பனிக்காலத்தில் சூரியக் கதிர்கள் மறைந்த பின்பு,  சூரியக் கதிர்களின் ‘வெப்பத்தை’ உள் வாங்கிக் கொண்டு பொதிந்து திகழ்வதைப்போலத் தலைவி ‘சிறு வெப்பத்தை’  எப்போதும் மேனியினுள் கொண்டவளாகத் திகழ்கின்றாள்.

       இங்கு நாம் அறியவேண்டிய இயற்கை நுட்பம் என்னவெனில், தாமரைக் குளம் மிகுந்த குளிர்ச்சியைப் பெற்றிருக்கிறது; ஆனாலும், அந்தக் குளிர்ச்சியின் தாக்கம் தாமரையைச் சூழ்ந்த போதிலும், அதற்கு மாறாக உட்புறத்தில் சிறு வெம்மையுடன் வெதுவெதுப்பை எப்பொழுதும் தாமரை தன்னகத்தே பொதிந்துள்ளது என்பதாம். இச்செய்தி இப்பாட்டில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

       இதே போன்று, திருமுருகாற்றுப்படையில் (வரிகள் 72-75) அதன் ஆசிரியர் நக்கீரர், இரவு நேரங்களில் வண்டுகள் தாமரைப் பூவில் உறங்கிவிட்டுக் காலையில் பூ இதழ் விரித்ததும் வெளியேறுவதாகத் தெரிவித்திருக்கிறார்.  இதே செய்தியை அகநானூற்றுப் பாடலும்(46), கலித்தொகைப் பாடலும் (78)  பதிவு செய்துள்ளன.

தாமரை – ஒளிப்பிழம்பு, சுடர் வடிவம்

        தாமரை மலர் விரிந்தபொழுது ஒளிப்பிழம்பிற்கும், குவிந்தநிலையில் சுடரின் வடிவத்திற்கும் உவமையாகக் காட்டுவது சங்கப் புலவர்களின் மரபாக அறியப்படுகின்றது. இதன் வாயிலாகத் தாமரையின் உள்பொதிந்த வெப்பம்தான் புலவர்களால் உணர்த்தப்படுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது. இச்செய்தியை,

“விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை”              (நற்றிணை, 310:1)            

                “சுடர்ப் பூந்தாமரை”                                  (அகநானூறு, 6:16)

                “எரி அகைந்தன்ன தாமரை”                 (மேலது, 106:1, 116:1) 

                “முட்தாள சுடர்த் தாமரை”    

“கடவுட் கயத்து அமன்ற சுடர்இதழ்த் தாமரைத்

                 தாதுபடு பெரும்போது”     (மதுரைக்காஞ்சி, வரிகள் 249 மற்றும் 710-711)

என்ற இலக்கியச் சான்றுகளால் உணரலாம்.

தாமரை – தண்ணீர் ஒட்டா தன்மை

       தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பது ஏன்? தாமரை இலையிலிருந்து இந்தத் தந்திரத்தை அறிவியல் எடுத்துக் கொண்டது. இயற்கையைப் படியெடுத்து அதைத் தொழில் நுட்பத்தில் புகுத்தும் புதிய முறையை உயிர் – படி எடு தொழில் நுட்பம் என்கிறார்கள்.

       வில்லியம் பர்த்லாட் என்பவருக்குத் தாமரை மலரையும் அதன் இலைகளையும் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். சேற்றிலிருந்து வெளிப்பட்டாலும் அதன் மீது துளி அழுக்குக் கூட இல்லாமல் எந்நேரமும் புத்தம் புதிதாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும் என யோசிப்பார். மின்னணு நுண் நோக்கி மூலம் பார்த்தபொழுது, இலையினைக் கழுவாத நிலையிலும், அதன் மீது தூசி ஒன்றும் காணப்படவில்லை. உண்மையில் தூசி இல்லாமலிருப்பதற்கு மெழுகுப் படலம் அல்லாமல் இராணுவ அணிவகுப்புப்போல வரிசையாக குன்றுகள் போன்ற அமைப்பு அங்கே இருந்ததே காரணம். இந்த அமைப்புதான் தண்ணீரை உருண்டோடிக் கூடவே தூசிகளையும் அடித்துச் செல்வதற்குக் காரணம் என்பதும் தெரிந்தது.

       இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘தாமரைப் பூச்சு’ எனும் நேனோ தொழில் நுட்ப ஆய்வு, தண்ணீர் அழுக்கு ஒட்டாத ஆடைகளும், சுவரினைக் காக்கும் நீர் ஒட்டாத வண்ணப் பூச்சுக்களும் தயாரிக்கும் முறைகளுக்கு அடிப்படை நுட்பமாகப் பயன்படுகிறது.

மேலும் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற உயர் விண்கலத் தொழில் நுட்ப நிறுவனங்கள்   ‘தாமரை மெய்யியலின்’ படி தூசி மற்றும் நுண்ணுயிர்கள் படியாத விண்கலப் பரப்பினை உருவாக்க முனைகின்றனர்.

தாமரை – தமிழர் பண்பாடு

        தாமரையின் தனித்தன்மை, தானும் தூய்மையாக இருந்து தன்னோடு சேர்ந்தவற்றையும் தூய்மையாக்கும் பண்பாகும். எனவேதான் தெய்வங்கள் விரும்பித் தங்கும் இடமாகத் தாமரை காட்டப்படுகிறது. தமிழர் அறிவியல் பூர்வமான அடிப்படையிலேயே மெய்யியல் குறியீடாகத் தாமரையைப் பயன்படுத்தினார்கள் என்பதும் புலனாகிறது.

              “தூமலர்த் தாமரைப் பூவின் அம்கண்”              (அகநானூறு, 361:1)   

                “வரிநுதல் எழில்வேழம் பூ நீர் மேல் சொரிதர,

                 புரிநெகிழ் தாமரை மலர்அம்கண் வீறு எய்தி,

திரு நயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல் வெற்ப”  (கலித்தொகை, 44:5-7)

மேற்கூறப்பட்ட சங்கப் பாடல்களின் அடிப்படையில், வழிபாட்டு இடங்களுக்கு முன்பு நீர்நிலைகளை அமைப்பது தமிழர்மரபாகத் தெரிகிறது. அந்நீர் பல்வேறு பண்பாட்டு நிலையிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்றெண்ணியே குறிப்பாகத் தாமரை மலர்களைக் கோயில் குளங்களில் வளர்த்துப் பேணியதாக எண்ண இடம் உள்ளது (பொற்றாமரைக்குளம், சித்தன்னவாசல் பொய்கை ஓவியங்கள்).

       மேலும் இன்றைய அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி இக்குளங்களில் தாமரைக் கிழங்கு, தண்டு முதலியன கிருமி நாசினித் தன்மை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அன்னப் பறவை தூய்மையைக் குறிக்கும் ஒரு குறியிடு என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படும்மரபாகும் .‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்’ எனக் கூறப்படும் ஔவையார் உவமை, அன்னங்கள் தாமரைக் குளத்தை அதன் தூய்மை கருதியே நாடி வருகின்றனவோ என எண்ணத் தூண்டுகிறது.

       சிந்துவெளி அகழ்வாய்வின்போது கிடைத்த தூண்களின் மேற்பகுதியில் தாமரைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (கீற்று – சங்க இலக்கியத்தில் தாமரை – சிறப்புக் கட்டுரை – மருதமலை முருகன்).

இலக்கியங்களில் தாமரை மலர்

முள்ளைத் தண்டிலேயுள்ள தாமரையினது புறவிதழை ஒக்கும் நெடிய செவியினையுடைய குறுமுயல் என்பதை, “முள்அரைத் தாமரைப் புல்இதழ் புரையும், நெடுசெவி குறுமுயல்” என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் (114-115) உணர்த்துகின்றன. மேனி முழுதும் அணிகள் அணிந்த திருமாவளவனின்  உரிமைப் பெண்கள் தாமரை மொட்டுப் போன்ற தம் மார்பகத்தால், அவன் மார்பில் பூசிய செஞ்சாந்தைச் சிதைத்ததைப் பட்டினப்பாலை (வரிகள் 296-297) நயமாகச் சித்தரிக்கிறது.

       நெருப்பின் தன்மை நீரிலே உண்டாகப் பூத்த கடவுள் சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப் பூ என்றும், நான்கு முகங்களையுடைய ஒருவனைப் பெற்ற நீல நிறத்தை உடைத்தாகிய வடிவினையுடைய திருமாலுடைய திருவுந்தியாகிய பல இதழ்களையுடைய தாமரை மலர் என்பதை,

                “நீல்நிற உருவின், நெடியோன் கொப்பூழ்

                 நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த் தாமரை”

என்றும் பெரும்பாணாற்றுப்படை (வரிகள் 402-404) இயம்புகின்றது.

       இளம் பெண்களின் மார்பகங்கள் தாமரைமொட்டு போன்று விளங்குவதை, ‘முகிழ் முலை’ என்று பட்டினப்பாலை (வரி 296) நயமாகக் கூறுகிறது. இரு தாமரை மொட்டுகளுக்கு இடையே ஓங்கிப் பூத்திருந்தது ஒரு தாமரை மலர்; அதுபோல் தலைவியின் இரு மார்பகங்களுக்கு இடையில் அவள் முகம் விளங்கிற்று என்பதை, “இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும், துணை இன்றித் தளைவிட்ட தாமரைத் தனிமலர், திருமுகம்” என்ற கலித்தொகைப் பாடல் (77:1-3) அழகாகப் புலப்படுத்துகின்றது.

       வளமான இதழைக்கொண்ட தாமரைப் பூவையும், நெய்தல் பூவையும் பறித்துச் சூடிக்கொண்ட பெண்கள், அடுத்துள்ள முல்லை நிலம் சென்று கிளிகளை ஓட்டிவிட்டுப் பாடுவார்கள் என்று பதிற்றுப்பத்து (78:4-6) குறிப்பிடுகின்றது.

       பொன்னை நெருப்பில் உருக்கித் தகடு ஆக்கித் தாமரைப் பூ செய்வர். அதைப் பொன் கம்பியால் கோத்து மாலை ஆக்கி, அம்மாலையை உலர்ந்த கரிய தலை மயிரில் பாணர் சூடினர் என்று புறப்பாடல் (29:1-5) சுட்டுகின்றது.

நாணயங்களில் தாமரை

பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி தன் காசிலே (நாணயத்திலே) செல்வத்தின் சின்னமாகிய தாமரையையும் (பதுமநிதி யுணர்வில்) பொறித்தான். இந்திய நாட்டிலே நடுவணரசு சில ஆண்டுகளுக்கு முன் இருபது பைசா நாணயம் அச்சடித்து வெளியிட்டது. அந்நாணயத்திலே ஒரு பக்கம் தேசியமலராகிய தாமரைமலரையும் பொறித்தமையை நினைவுகூரலாம்.

விந்தையான தாமரை

       சோவியத் நாட்டில் காபர்வோஸ்க் என்னும் இடத்திலுள்ள குகைகளில் அதிசயமான தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இம்மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீலவண்ணமாகிப் பின் குருதிச் சிவப்பாக மாறி, பின்னர் வெண்மையாக மாறி, மீண்டும் சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கருமையான ரோசா வண்ணத்தில் காட்சி அளிக்கின்றனவாம்.

தாமரைப் பூவின் மருத்துவப் பயன்கள்

       வெண்தாமரைப் பூவால் ஈரல் பாதிப்பு, குடல் புண், உடல் எரிச்சல் நீங்கும். தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். தோல் எரிச்சலைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்; இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்தநாளங்களில் படிந்துள்ள  கொழுப்புச் சத்தைக் குறைக்கும்.

       தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப்போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும். தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

       செந்தாமரை, வெண்தாமரை ஆகிய இரு வகை தாமரை மலர்களில் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. தாமரைப் பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொண்டு, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு, இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும். கூந்தல் உதிர்வது நின்று விடும் எனக் கூறுவர் (தகவல் களஞ்சியம், தாமரை).

***

Advertisements
 

Reply all
Reply to author
Forward
0 new messages