அறுபதாண்டு கால நினைவுகள் அவனுக்கு. அஃதாவது தமிழ் ஆண்டுகள் அறுபதன் சுழற்சியொன்று முடிந்து விட்டது. எந்த ஊரில் வாழ்ந்தாலும் முத்தாரம்மன் கலங்கரை விளக்கம், தங்கூரம், படகின் பாய் தள்ளும் திசைக்காற்று. வஞ்சகச் சுயநலத்தை சமூக நலமாக அபிநயித்துக் காட்டிய விட விருட்சத்தின் வேர்கள் மண்ணுக்குள்ளும் கிளைகள் நிர்மல வெளியிலும் படரத் தொடங்கிய காலம் அது. பூனாவில், பம்பாயில், ஆமதாபாத்தில், சூரத்தில்சென்னையில் இருந்தெல்லாம் ஊரம்மன் கோயில் கொடைக்குப் புறப்பட்டு வருவார்கள். வடக்கன் குளம், காவல் கிணறு, பணகுடி, களக்காடு, நாங்குநேரி, மூன்றடைப்பு, திசையன்விளை, கொக்கரகுளம் போன்ற பல ஊர்களை இலக்காக்கி. குடும்பத்துடன் யாத்திரையாகும் அந்த மன எழுச்சி நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்தவர்க்கு ஒருபோதும் அர்த்தமாகாது. எந்த மதம், என்ன சாதியாக இருந்தாலும் சர்க்கார் உத்யோகஸ்தர் பிள்ளைகளின் மன வார்ப்பு வேறு, காடு கரையென அலைந்து திரிந்து கண்டதைப் பறித்துத் தின்று வாழும் எளிய சம்சாரி வீட்டுப் பிள்ளைகளின் மன நிலை வேறுதான்.