எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

14 views
Skip to first unread message

Packiarajan Sethuramalingam

unread,
Aug 9, 2010, 6:33:25 PM8/9/10
to

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10291:2010-08-07-08-44-51&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139


கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்

எஸ்.பொ. சனி, 07 ஆகஸ்ட் 2010 14:13
மின்னஞ்சல்அச்சிடுகPDF

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.

eelam_tamils_380அண்மையில் இலங்கை நாடாளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் தில்லியிலுள்ள அரசியல் தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களையும் சந்தித்து ஈழத் தமிழனத்தின் சோகங்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் தமிழ் ஈழரை மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் ஈழரின் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து ஓராண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழரின் புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் இந்தியா கொடுத்துள்ள 500 கோடி ரூபாயும் தமிழ் இனத்தைத் தமிழ் மண்ணிலே நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ராஜபக்சே அரசு செலவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுவரை நான்கு லட்சம் சிங்கள இராணுவக் குடும்பத்தினர் தமிழ் மண்ணிலே குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாம் பிறந்த மண்ணிலே தமது மானத்தையும் கற்பையும் காப்பாற்றி வாழ முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலம் தொடர்கதை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

‘இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட தமிழ் ஈழருடைய மண் சிங்களருக்குச் சொந்தமானது' என்று ராஜபக்சே கொக்கரிப்பதாகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமுறினார்கள். தமிழ் ஈழர் நிரந்தரமாக அடிமைகளாக்கபட்டுள்ள ஒரு சூழலிலே உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு நடத்துவது அவசியமானதா? உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா மனச்சாட்சியாகவும், இனத்தின் சுதந்திரத்திற்காக மூர்க்கங் கொண்ட விடுதலை வெறியனாகவும் வாழ்தல் அவசியம். அவற்றை எல்லாம் தொலைத்து விட்டு, இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று போக்குக் காட்டுவதற்காகவா இந்த உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்படுகிறது?

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள தமிழ்ப் படைப்பாளிகள், அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் ராஜபக்சே அடாவடிகளுக்கு எதிராகக் குரலும் குமுறலும் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் ஈழருடைய இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்கும் பணியிலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வீறுமிக்க அக்கறை கொண்டவர்களாக வாழ்வதாகவும் சாட்சியம் கூறுகின்றார்கள். இத்தகைய சூழலிலே ஒரு மாநாடு கொழும்பில் ஏன் நடத்தப்படுகிறது என்ற கேள்வி தமிழ்ப் படைப்பாளிகள் அனைவர் மத்தியிலேயும் எழுதல் நியாயமானது.

1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.

சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீன்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பனிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு?

மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை நீதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க வேண்டுமென்று உலக மாந்த நேயர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையிலே தான் ராஜபக்சே அரசு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினை முரட்டுத்தனமாகத் தாக்கி உள்ளார்கள். சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?

சர்வதேச சமூகம் இலங்கையில் நடைபெற்ற இன சங்காரத்துக்கும், நரபலி வெறி யாட்டத்திற்கும் எதிராக இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் சிங்கள ராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியுமா? தமிழ் ஈழருக்கு இலங்கையில் சாதாரணமான மனித உரிமைகளை வென்றெடுத்துத் தரமுடியுமா? அன்றேல், இன்றும் கொலை வெறித் தாக்குதனின் இரத்தத்தினால் கறை படிந்து கிடக்கும் இலங்கை ஆட்சியாளரின் மனநிலையில் அற்ப மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? இவை சாத்தியப்படாவிட்டால், கொழும்பில் நடத்தப்பட இருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் யாது பயன்?

ராஜபக்சே சகோதரர்களுடைய அராஜகத்தைக் கொழும்பிலே தட்டிக் கேட்கக்கூடிய ‘தில்' உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் யார் கொழும்பிலே கூடுகிறார்கள்? ‘சிங்கள அரசு பற்றி எத்தகைய விமர்சனமும் செய்ய மாட்டோம்' என்கிற உறுதிமொழி வழங்கித்தான் மாநாடு நடத்துவதற்கான அனுமதியே பெறப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

தமிழ் ஈழர் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார்கள். தமிழச்சிகள் தங்கள் கர்ப்பப் பைகளில் சிங்களக் குழந்தைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். சொந்த மண்ணில் அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி, விவசாயம் ஆகிய சகல ஜீவாதாரங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. கல்வி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையிலே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டி தமிழர்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் கொடுக்கப் போகிறோம் என்று வலைச் செய்திகள் பரப்புவது எவ்வளவு கேலிக்குரியது?

espo_350பிரான்சு நாட்டு ராணி ஒருத்தி அகங்காரத்துடன் கேட்டாளாம், "தின்பதற்கு ரொட்டியில்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே' என்று! எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

காட்டுபிராண்டிகள் வாழும் ஆப்பரிக்காக் கண்டம் என்று சொல்வார்கள். நைஜீரியாவில் இபோ இன மக்கள் தனி நாடு கோரிப் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டம், இபோ மக்களுக்கு தோல்வியில் முடிந்தது. ஆனால் ஓராண்டுக்கிடையில் போரினால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளும் மறக்கப்பட்ட நைஜீரியாவில் இவர்கள் இப்பொழுது தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள். புத்தர் பெயரால், நீச ஆட்சி நடத்தும் ராஜபக்சே ஆட்சி நிலவும் வரையில் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் வாழும் ஒரு மயான பூமி என்று வெறுத்து ஒதுக்கப்படுவதுதான் தர்மம்.

இந்த ஆட்சியினரால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்ன? எழுத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துச்சொன்னது என்பதற்காக சிங்களனுக்குச் சொந்தமான ஓர் ஒளிபரப்பு நிலையமே சாம்பலாக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி நடக்கும் மயான பூமியிலே, ஏன் அவசரமாகச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல்?

இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா? மாநாடு கூட்டுவதற்கு முன்னர், இதனை உலகப் படைப்பாளிகள் சமூகத்திற்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த மாநாட்டினைக் கூட்டும் அமைப்பாளருக்கு உண்டு. தங்கள் பக்கத்து நியாயங்களை ஏனைய தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் முன்வைக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழருடைய மூத்த படைப்பாளி என்கிற உரிமை கோரலுடன் முன் வைக்கின்றேன்.

- எஸ்.பொ.

தொடர்புக்கு: +919176333357


--
-- பாக்கியராசன் சே..

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages