அழகர் குறவஞ்சி

24 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Sep 19, 2009, 8:27:19 PM9/19/09
to Min Thamizh, Nallisai Group
நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர்.
  • தலைவன் நாடெங்கும் பவனி வருதல்
  • தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல்
  • விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல்
  • குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல்
  • தலைவி தலைவனோடு சேருதல்.
இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள்.

குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன.

  1. திருக்குற்றாலக் குறவஞ்சி
  2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
  3. அழகர் குறவஞ்சி
  4. விராலிமலை குறவஞ்சி
இவைகளில்,
  • குற்றாலக் குறவஞ்சியில் - இலக்கியச் செறிவும்
  • சரபேந்திர பூபால குறவஞ்சியில் - இசை உயர்வும்
  • அழகர் குறவஞ்சியில் - இலக்கியம், இசை இணைந்த அமைப்பும்
  • விராலிமலை குறவஞ்சியில் - நடனக் கலையின் நளினமும் பிரகாசமாகக் காணப்படும்
அழகர் குறவஞ்சியில்,
  • பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர்
  • தலைவி மோகனவல்லி
"கருமுகில்மால் அழகராதி; மோகினியை மணந்த கதை" என்ற அடியால் இதனை உணரலாம். இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிக்குஞ்சர பாரதி.

சங்கீத மும்மூர்த்திகளான,
  • ஸ்ரீதியாகராஜர்
  • முத்துஸ்வாமி தீக்ஷிதர்
  • சியாமா சாஸ்த்ரிகள்
ஆகியோரின் சமகாலத்தவர்.

இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெளரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது.

இக்குறவஞ்சி,
  • வெண்பா
  • விருத்தம்
  • கீர்த்தனம்
  • சிந்து
  • திபதை
  • அடிமடக்குத்திபதை
  • கும்மிக்கண்ணிகள்
  • ஓரடி கீர்த்தனம்
முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன.

சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.

"மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும்
 கொண்டைச் சொருக்கினாள்
"

"துயிலும் இல்லை பசியும் இல்லை
 பசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை
"

"தவளநிறக் கருங்கூந்தல்
 பவளச்செவ்வாய்க் கலைமகள்
"

"அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம்
 சிங்கம் தெலுங்கம்
."

என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள் பிரகாசிக்கின்றன.

"உருகு பெருகு கோடையில்
 நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்
"

"புயல் கண்ட மயில்போல"

"கிணற்று நீரைக் கொண்டு போமோ?"

"கல்லினும் நார் உரிப்பேன்
 மணலையும் கயிரெனத் திரிப்பேன்
."

இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.

இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்" இராகத்தில் "ஸாமி மயூரகிரி வடிவேலா" என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத இலய வேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.

கட்டியக்காரன் வருகையை,

"தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச்
 சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாகப்
 பையிலே துயின்ற திருவழகர்
."

என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார்.

சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும், சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி இராகத்தில்,

"சோலைமலைச் சிங்கனும் வந்தான்
 சிங்கியைத் தேடி
."

என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு.
  • விறுக்கி
  • முறுக்கி
  • யுறுக்கி
  • வீக்கி
என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.

சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான,
  • வீணை
  • மத்தளம்
  • தாளம்
  • துந்தி
  • தம்புரு
  • மேளம்
  • பேரி
  • முரசு
  • டமாரம்
  • உடுக்கு
  • வேய்
  • துடி
முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாட்டுப்பாடல் இசையான,
  • நொண்டிச் சிந்து
  • கும்மி
  • திபதை
முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.

இம்மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா!

காரை ஏ.சங்கரசேது

நன்றி:- தினமணி
Reply all
Reply to author
Forward
0 new messages