You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Nallisai Group
கர்நாடக இசை உலகின் மூத்த மிருதங்க மகாவித்வானாக விளங்கிய பாலக்காடு ஆர்.இரகு (81) செவ்வாய்(02/06/09) காலை சென்னையில் காலமானார். அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
கர்நாடக இசை உலகின்
இளம் வாய்ப்பாட்டு வித்வான் அபிஷேக் இரகுராம்
மிருதங்க வித்வான் ஆனந்த்
ஆகியோர் இரகுவின் பேரன்கள்.
மிருதங்க
வாசிப்பு மரபில் தஞ்சாவூர் பாணியை, மறைந்த இலயமேதை பாலக்காடு மணி
ஐயருக்குப் பின் ஏந்தி நின்ற அரிய கலைஞர் இரகு. அவரது மறைவு இலய உலகில்
மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரு மணி அய்யருடன்... அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக விளங்கிய பர்மாவின் தலை நகர் இரங்கூனில் இராமசாமி ஐயர் - அனந்தலட்சுமியம்மாள் தம்பதிக்கு 1928ஆம்
ஆண்டு இரகு பிறந்தார். இராமசாமி ஐயர் பர்மாவில் பணி புரிந்துவந்தார். இரகு
மிக இளம் வயதிலேயே இலயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். இந்தியாவிலிருந்து
பர்மாவுக்கு அவ்வப்போது வரும் இலய வித்வான் திண்ணியம் வெங்கட்ராமய்யரிடம்
ஆரம்பகால இலய பாடங்களை இரகு கற்றார். பின்னர் திருச்சி இராகவையரிடமும் இலய
பாடங்களைக் கற்றார்.
இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவரது
குடும்பம் இந்தியா வந்தது. இந்தியா வந்த பிறகு அவர் இலய மேதை பாலக்காடு மணி
ஐயரிடம் நேரடியாக மிருதங்க சிட்சை பெற்றார். அது அவரது வாழ்வில் பெரிய
திருப்பம். ஏதேனும் ஒரு மிருதங்க வாசிப்பை ஒரு முறை
கேட்டாலும் போதும்...அதைச் சித்திரம் போல மனத்தில் பதித்துக் கொள்ளும்
ஆற்றல் இரகுவுக்குக் கிடைத்த வரம். அத்தோடு இணையற்ற இலய மகாவித்வானாகிய
மணியின் சிட்சையும் சேர்ந்து இரகுவை மிருதங்க மணியாகப் பட்டை தீட்டியது.
அன்றைய
மூத்த வித்வான்களாக விளங்கிய
அரியக்குடி
மதுரை மணி
ஜி.என்.பி.
செம்பை
செம்மங்குடி
கே.வி.நாராயணசாமி
உள்ளிட்ட பலருக்கும்
அவர்
வாசித்திருக்கிறார்.
இரகுவின் வாசிப்பை ஜி.என்.பி. மிகவும் பாராட்டி ஊக்கம்
தந்தார்.அந்த நாளில் மிருதங்கக் கல்வியோடு, கல்லூரிக்
கல்வியையும் சிறப்பாக முடித்தார் இரகு. கணிதப் பிரிவில் பட்டம் பெற்ற இரகு,
பிற்காலத்தில் வித்வான்களின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் பல்லவிக்
கணக்குகளிலும் நிகரற்று விளங்கியவர். இரகுவின் வாசிப்பில்
அவரது கணக்குகள் மிகத் துல்லியமாக பளிச்சென்று இருக்கும். கணக்கில் வழ
வழாவே அவரிடம் பார்க்க முடியாதென்று இலய விற்பன்னர்கள் கூறுவார்கள். அது
நூற்றுக்கு நூறும் உண்மை.தன் குருநாதரான பாலக்காடு மணி
போட்டுக் கொடுத்த இலய மார்க்கத்தின் ஆதாரஸ்ருதி கலையாமல் உள் வாங்கிக்
கொண்டு அந்த மரபு குலையாமல் அதிலேயே தனக்கென புதிய பாணியை வடித்தெடுத்தவர்
அவர்.
மரபுகளைக் குலைக்காதவர் ஆயினும் வேறு பாணிகளிலிருந்து
நல்ல அம்சங்களைக் கை கொள்வதை அவர் தவிர்க்கவில்லை. குறிப்பாக அன்றைய
இலயசிம்மங்களில் ஒருவரான பழனி சுப்பிரமணியப் பிள்ளையின் வாசிப்பிலிருந்து
சில அம்சங்களை தன் பாணியின் மரபு குலையாமல் அவர்
பயன்படுத்தினார்.
திருச்சூர் நரேந்திரன், திருவனந்தபுரம் வைத்தியநாதன்
முதல் மனோஜ் சிவா வரை ஏராளமான சிஷ்யர்களை உருவாக்கியவர்
அவர். பத்மஸ்ரீயிலிருந்து
சங்கீத கலாநிதி வரை எத்தனையோ விருதுகளைப் பெற்றவர். எல்லாவற்றையும் விட
சங்கீத இரசிகர்களின் மனத்தில் என்றென்றும் நீங்காத பெருமையையே மாபெரும்
விருதாகப் பெற்றவர் அவர்.