You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Nallisai Group
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அறுபதுகளில் வெளிவந்த ஏ.வி.எம்மின் "இராமு" திரைப்படத்தை நினைவில் நிறுத்துங்கள்.
அந்தக் கோபாலனிடம் முறையிடும், மன்றாடும் "கண்ணன் வந்தான்" என்ற தெய்வீகத் தன்மை வாய்ந்த உருக வைக்கும் பாடலை உச்சரித்துப் பாருங்கள். அந்தப் பேச்சுத்திறனை இழந்த பாலகன் உங்கள் மனக்கண் முன் தோன்றியிருப்பான்.
"தெய்வ மகனில்" வந்த இளம் சிவாஜி
"அதே கண்கள்" திரைப்படத்தின் பூம்பூம் மாட்டுக்காரன்
"பெற்றால்தான் பிள்ளையா" வில் வந்த சிறுவன்
எல்லாமே இந்தக்
குழந்தை நட்சத்திரம்,இராஜ்குமார்தான்.
முழு நேர இசையார்வலரான இவர்,
பியோனாவில் எம்.எஸ்.விஸ்வநாதனே வியக்கும் வண்ணம் கார்ட்ஸ் கொடுத்து
வாசித்திருக்கிறார். இராஜ்குமார் (யோகேந்திரகுமார்) - படம்: பி.இராதாகிருஷ்ணன் தவில்காரர்கள் போல் தோளில் மாட்டிக் கொண்டு
வாசிக்கும் அக்கார்டியன்,எலக்ட்ரானிக் கீ போர்டு எல்லாமே அத்துப்படி.
அவருடன் உரையாடியது ஏதோ கதை கேட்பது போல இருந்தது.
"எனது
தகப்பனாருடன் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்ற சமயம், இயக்குனர்
எஸ்.பி.முத்துராமன் என்னைப் பார்த்த உடனே, "நடிக்கத் தயாரா?" என்று
கேட்டார். நாங்கள் சரி என்றதும் அன்றே டெஸ்ட் நடத்தினார்கள்.
இரண்டு நாள்
கழித்துத் தொலைபேசி அழைப்பு வந்தது. என்ன நாணயம்! மெய்யப்பச் செட்டியாரே
வந்திருந்து என்னை நேராகப் பார்த்து ஓ.கே.செய்தார். யோகேந்திரகுமார் என்ற
என் பெயர் தமிழ் இரசிகர்களுக்கு உகந்ததாக இல்லை என்று எண்ணிய அவர்,
இராஜ்குமார் என்று ஒரு புதிய நாமகரணத்தை எனக்குச் சூட்டினார். "இராமு"வின்
கதாநாயகன் வந்துதித்தான்.
கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில்
பல படங்களில் நான் இதற்கு முன் நடித்திருந்தாலும் இராமு தான் எனது முதல்
தமிழ்ப்படம். நல்ல ஹிட் ஆனது. இங்கே 100 நாட்கள் என்றால், தெலுங்கில் 35
வாரங்கள் ஓடி அபார சாதனை படைத்தது. தமிழில் ஜெமினி சார் - எம்.ஜி.ஆர்.,
சிவாஜி இவர்களோடு ஒப்பிடக் கூடியவர், மிகுந்த அன்புடன் என்னை நடத்தினார்.
படத்தில் தான்தான் ஹீரோ என்றிருந்தாலும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல்,
என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இங்கே இப்படி என்றால், தெலுங்கில்
ஜாம்பவான், என்.டி.இராமராவ். "என்ன தம்பி, எனது நடிப்பு சரியா இருக்கா"
என்று அடிக்கடி என்னைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். எப்பேர்பட்ட
பெருந்தன்மை!
தெய்வமகனில் மரத்தையே வேரோடு அகற்றும் காட்சியையும்,
என் நடிப்பையும் கண்டு பாராட்டிய நடிகர் திலகம் என்னை அழைத்தார்.
கோபப்படும்போது, காலைத் தரையில் உதைத்து, உதைத்து எனது ஆத்திரத்தை
வெளிப்படுத்தச் சொன்னார். இதனால் அவர் தெய்வமகனாக தனது அடக்க முடியாத
ஆக்ரோஷத்தைக் காட்டுமிடத்தில் இதே பாவனையைக் கையாண்டு ஒரு தொடர்பு இருப்பதாகக் காண்பவருக்குப் புலப்படச் செய்யலாம்
என்றார். எனக்கு இங்கே அப்ளாஸ், அவருக்கு அங்கே. எப்படியெல்லாம்
கவனித்திருக்கிறார் பாருங்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்
நடித்தது "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில். நல்ல மனிதர். ரொம்ப
பிஸியானவர். ஒரு தொழிலை இரண்டு நபர்களுக்குள், எவரிடம் கொடுப்பது என்று
முடிவு செய்யச் சொன்னால், யார் அதிகம் கஷ்டத்தில் உள்ளார்களோ அவர்களுக்கே
அந்த வேலையைக் கொடுக்கச் சொல்வார். மற்றவரிடம் உண்மையான காரணத்தையும்
கூறிவிடுபவர். இந்த நற்குணமும் நேர்மையும் உடையவர்.
இசையைப்
பற்றிச் சொல்லப் போனால், நானாகவே பேபி அக்கார்டியனில் வாசித்து, முயன்று
முயன்று தேறினேன். எனது தகப்பனார் அனுமந்தாச்சார் ஒரு சிறந்த இசைக்
கலைஞர். அவரது இசை என்னுள் ஊறிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருமுறை
மைசூரில் எனது தகப்பனாரை வெறும் ஐந்து நிமிடம் மட்டும் வாசிக்கச் சொன்ன
போது அவர் அந்த வாய்ப்பை எனக்களித்தார். முதல் பாட்டு ஒரு ஹிந்திப்
பாட்டு. வாசித்தவுடன் கற்கள் போன்ற சில என்னை வந்து தாக்கின. எனக்கு 14 அல்லது 15
வயதுதான் இருக்கும். நிஜத்தில் எல்லாம் சில்லறைக் காசுகள். காயின்ஸ்!
மீண்டும் வேண்டும், ஒன்ஸ் மோர் என்ற கூக்குரல் வேறு. இதைக் கண்ட எனது
தகப்பனார் என்னுடன் இணைந்து கொள்ள, ஓர் அரைமணி நேரம் வாசித்தோம்.
பழைய காலங்களில் இருந்து இந்த நாள் வரை, அநேகமாக எல்லா
இசையமைப்பாளர்களுடனும் பணி புரிந்துள்ளேன்.
முதல் ரிக்கார்டிங்
எம்.எல்.ஸ்ரீகாந்த், இரண்டாவது சங்கர் கணேஷ், அப்புறம்,
எம்.எஸ்.வி
இராமமூர்த்தி
கே.வி.மஹாதேவன்
இளையராஜா
இரஹ்மான்
என்று தொடர்ந்து கொண்டே
போகும்.
இதுதவிர, கன்னட, மலையாள இசை அமைப்பாளர்கள்
சத்யம்
தேவராஜன்
மாஸ்டர்
ஆகியோருக்கெல்லாம் வாசித்துள்ளேன்.
மலேசியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் என்னை அழைத்துச் சென்றவர் ஏ.வி.இரமணன். என் பெயர் முதல்
இலிஸ்டில் இல்லாதபோதும், கடைசி நேரத்தில் பாஸ்போர்ட், விசா எல்லாம்
எனக்குப் பெற்றுக் கொடுத்து என்னை அழைத்துச் சென்று கெளரவித்தார்.
பியானோவில் மிகுந்த ஆர்வம் ஏற்பட ஜேகப் ஜானிடம் முறையாகக் கற்றேன். ஐந்து
க்ரேட் வரை தேறியுள்ளேன். என் குருநாதர் எல்லாருக்கும் ஒரே பாடம்
என்றில்லாமல், நிலைக்கேற்ற பாடம் கொடுப்பார்.
கோவர்த்தன மாஸ்டரிடம்
ஏற்பட்ட அனுபவத்தையும் இங்கே கூற வேண்டும். அவர் ஒரு சிறந்த இசைஞானி.
என்னை இனம் கண்டு கொண்ட பின்னர், எனது திறமைக்கேற்ப முழு மாத
ஒலிப்பதிவுகள் கொடுத்திருக்கிறார். அவரிடம் வாசித்துப் பெயர் பெற்றால்,
அதுவே ஓர் அரிய சான்றிதழ். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது,
விடுமுறை ஆரம்பிக்கும் நாளை அவர் கவனம் கொண்டு என்னை அழைத்துக் கொள்வார்.
ஐந்து மணிக்கு மேல் என்னைக் கச்சேரிக்கும் அனுமதிப்பார். என் மீது அந்த
அளவுக்கு அக்கறை.
இராமு பற்றி இரண்டு நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும்.
ஒன்று, செளந்தரா கைலாசம் இராமு படத்தின் பாராட்டு விழாவில் "எல்லாரும்
நிறையப் பேசுவார்கள். ஆனால் இந்தப் பையன் பேசாமலேயிருந்து என்னை அழ
வைத்துவிட்டான்" என்று என் உரோலை உணர்ந்து பலத்த கரகோஷத்திடையே என்னைப்
பாராட்டியது.
மற்றொன்று, இராமு க்ளைமாக்ஸ் காட்சி. நெருப்பு சரியாக
எரியவில்லை என்று பொறுமையிழந்து, பெட்ரோலை ஊற்றிவிட்டார்கள்.
குபுகுபுவென்று நெருப்பு. காட்சியோ முடிந்துவிட்டது. என்னையோ உரலில்
கட்டியிருந்தனர். எழுந்திருக்கக் கூட வழியில்லை. நெருப்பு என்னைச்
சூழ்ந்து கொண்டது. ஒரு நெருப்புத் தீவில் நான். "குழந்தையைக்
காப்பாற்றுங்கள்" என்று கத்திப் பார்த்தும் பயனில்லை என்றுணர்ந்த
இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், ஒரு தேவியின் அவதாரம் போல, நெருப்பு
ஜ்வாலையின் உள்ளே தாவி வந்து என்னை உரலுடனே தூக்கி எடுத்து எனக்கு மறு
ஜன்மம் கொடுத்தார். ஆம். அவர் இல்லையேல் நான் இல்லை. எனக்கு உயிர் கொடுத்தவர் அவரே.