தினம் ஒரு பாடல்
வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி
உலக மக்கள் யாவரும் வானத்தை நோக்கி மழை வேண்டிப் பெற்று விவசாயம் சிறக்கப்பெற்று உணவு உற்பத்தி செய்து பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்கின்றனர். அது போலவே ஒரு நாட்டின் குடிமக்கள் யாவரும் அந்நாட்டை ஆளும் அரசனின் நீதி நெறி தவறாத செங்கோலின் திறத்தை நம்பி உயிர் வாழ்கின்றனர் என்பதே இக்குறளின் பொருள். சிறு வயதில்
இது குறித்து எண்ணுகையில் என் பள்ளிப்பாடத்தில் தமிழ் மன்னர்கள் பலரது சரித்திரத்துடன் பொற்கைப் பாண்டியன் எனும் பாண்டிய நாட்டு மன்னனைப் பற்றியும் படித்த நினைவு வருகிறது. இரவு நேரங்களில் பழந்தமிழ் மன்னர்கள் மாறுவேடம் பூண்டு நகரை வலம் வந்து மக்கள் நலனையும் பாதுகாப்பையும் பேணிக் காத்தனர் என்பது வரலாற்று உண்மை.
அவ்வாறே பாண்டிய மன்னனொருவனும் நகரை மாறுவேடத்தில் வலம் வருகையில் ஒரு வீட்டில் பேச்சுக்குரல் கேட்கவே அவ்வீட்டிலுள்ளோர் நலமாக வாழ்கின்றனரா என்றறிய அங்கே கேட்ட பேச்சுக் குரலை செவிமடுத்தான்.
கணவன் மறுநாள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லவிருக்கிறான். மனைவியை உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலை. மனைவி அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல், "என்னைத் தனியே விட்டுச் செல்கிறீர்களே!" என்று தன் மனத்தாபத்தை வெளியிட அக்கணவன் அவளுக்கு தைரியமூட்டும் விதமாகச் சொல்கிறான், "நம் நாட்டு மன்னன் குடிமக்களைத் தம் குடும்பததாரைப் போலவே மதித்துப் பாதுகாத்து வருகிறார் என்பது நாமனைவரும் அறிந்ததே. அவ்வாறிருக்க நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் விரைவில் திரும்பி வருகிறேன். நம் மன்னன் பாதுகாப்பில் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை." என அவளைத் தேற்றுகிறான். அன்று முதல் மன்னவன் நாள் தோறும் அவ்வீட்டை
தவறாது காவல் காத்து வந்தான். அவ்வாறிருக்க ஒரு நாள் அவ்வீட்டில் ஏதோஅரவம் கேட்கவே மன்னவன் யாரேனும் திருடன் உள்ளே நுழைந்து விட்டானோ என மிகவும் ஐயமுற்று அவ்வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெளியூர் சென்றிருந்த கணவன் வீடு திரும்பி விட்டான் என்பதை உள்ளேயிருந்து உரத்த குரலில் வந்த, "யாரங்கே?" எனும் கேள்வியால் உணர்ந்த அரசன் சற்றே யோசித்துத் தன் தவறைத் திருத்திக்கொள்ள வழி தெரியாமல் அத்தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் சென்றான். ஒவ்வொரு வீட்டிலும் அதே போல், "யாரங்கே?" என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
மறுநாள் மன்னவன் அரசவையில் அத்தெரு மக்கள் அனைவரும் கூடிவிட்டனர். மன்னவன் அவர்களது குறை என்னவென்று கேட்க அவர்கள், "மன்னா, நேற்றிரவு யாரோ ஒரு திருடன் எங்கள் வீட்டுக் கதவுகளையெல்லாம் தட்டிவிட்டுச் சென்றான். தங்கள் ஆட்சியில் இத்தகைய குற்றம் நிகழ்ந்ததில்லையே. எங்களுக்கு அச்சமாக உள்ளது. அத்திருடனைப் பிடித்துத் தாங்கள் தக்க தண்டனை வழங்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டனர்.
அத்திருடனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என மன்னவன் அவர்களைக் கேட்கவும், கதவுகளைத் தட்டிய கையை வெட்டிட வேண்டும் என அம்மக்கள் தெரிவிக்க மன்னவன் அக்கணமே யாரும் எதிர்பாராத நிலையில் தன் உடைவாளைக் கையிலெடுத்துக் கதவுகளைத் தட்டிய தன் ஒரு கையை வெட்டிக் கொண்டான். மக்கள் மிக்க அதிர்ச்சியடைத்தனர்.
பின்னர் வெட்டப்பட்ட கை இருந்த இடத்தில் பொன்னால் செய்யப்பட்ட செயற்கைக் கையைப் பொருத்திக் கொண்டு மன்னன் வாழ்ந்தான் என்று கூறப்படுகிறது.
நம் நாடு சுதந்திரமடைந்து மக்களாட்சி அமுலுக்கு வந்த பின்னர் அன்று ஆட்சி செய்த மன்னர்கள் இருந்த இடத்தில் நாட்டின் பிரதம மந்திரியும் மாநிலங்களின் முக்கிய மந்திரிகளும் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். அத்தகைய மக்களாட்சியில் சுதந்திரத்துக்குப் பின்னர் சில ஆண்டுகள் வரை மக்களுக்கு நியாயம் கிடைத்தது. நாட்டை ஆள்வோர் பெரும்பாலும் பொறுப்புடனேயே நடந்து வந்தனர். கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது. வியாபாரம் நேர்மையாக நடைபெற்று வந்தது. நல்ல முறையில் விவசாயமும் நடைபெற்று வந்தது. இருப்பினும் சில சமயங்களில் அதிக விலைவாசி உயர்வு ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி அவ்வாறே எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாகப் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்தவர்கள் அதன் பின்னர் மக்களுக்கே துரோகம் செய்து மக்களைச் சுரண்டும் நடைமுறையே பின்பற்றப்பட்டு இன்று மக்கள் சொல்லொணாத் துயரில் மூழ்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை மாற்ற இந்தியத் தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் ஒன்று கூடி ஊழலுக்கெதிராக வலுவான மக்கள் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். அத்தகைய ஒரு சிறந்த மாற்றத்தை நாட்டிலுள்ள பிற மாநில மக்களும் ஒன்று சேர்ந்து விரைவில் கொண்டு வருவது உறுதியே.
எனவே நம் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!
பொற்கைப்பாண்டியன் செய்தது போலவே பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டியக் கட்டபொம்மன் எனும் மன்னனும் மாறுவேடம் பூண்டு கள்வர்களிடமிருந்து மக்களைக் காத்த கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய பாடல் காட்சி ஒன்று சிவாஜி கணேசன் வீரபாண்டியக் கட்டபொம்மன் வேஷத்தில் நடித்து வெளிவந்தது. அற்புதமான அப்பாடல் இன்று உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக வருகிறது.
திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: :டி.எம். சௌந்தரராஜன், டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1959
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே ஏஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏ தே
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
நாட்டைக் கூடக் காசுக்காக விப்பாங்க
நாட்டைக் கூடக் காசுக்காக விப்பாங்க இந்த
நாளையிலே தனிமை வேளையிலே
நாளையிலே தனிமை வேளையிலே
பொன்னான மாலையெல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமாப் பாத்துக்கம்மா
பொன்னான மாலையெல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமாப் பாத்துக்கம்மா
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே ஏஏஏஏ தே
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா
சேட்டைகளப் பண்ணிக்கிட்டு நோட்டங்களப் பாத்துக்கிட்டு
சேட்டைகளப் பண்ணிக்கிட்டு நோட்டங்களப் பாத்துக்கிட்டு
பாட்டுகளும் பாடணுமா பச்சயைப்பா ஓன்
பாதையைத் தான் பத்திரமாப் பாத்துக்கப்பா
தே தே டுர்ர்ர்ர் போங்கடா கண்ணுங்களா ஆஹா
ஆனைகளைக் காக்க இங்கே ஆளை வட்டி வடிப்பாங்க
அண்ணன் தம்பியாயிருந்தும் காட்டியே கொடுப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்ப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்ப்பாங்க
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே
முன்னேறும் பாதையிலே கண்ணைக் கொஞ்சம் வையப்பா
கட்டுச்சோறும் பத்திரமாப் பாத்துக்கப்பா
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா
--
AKR