தினம் ஒரு பாடல் மார்ச் 06, 2016
ஆதிமனிதன் காடுகளில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தான். மலைக் குகைகளிலும், மரங்களின் மேலும் வனத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிறு கூடு போன்ற வீட்டை அமைத்துக் கொண்டு குளிர், வெய்யில் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். இயற்கையாக விளையும் காய்கறிகளையும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழ்ந்தான். மனிதர்களில் ஒரு பகுதியினர் விலங்குகளைக் கொன்று மாமிச உணவும் அருந்தி வாழ்ந்தனர். எந்த மனிதனுக்கும் பெரிய சொத்து சுகம் என்று அன்று இருக்கவில்லை. இருப்பினும் அவன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மனிதர்களில் பலர் இறை வழிபாட்டில் ஈடுபடுவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சூரியனையும், நிலவையும், விண் மீன்களையும் தெய்வங்களாகப் போற்றி வணங்கி உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்தனர். நாளடைவில் பொருட்களை உருவாக்கக் கற்றுக்கொண்டு தெய்வங்களுக்கு உருவங்களைப் படைத்து தெய்வங்களும் குடும்ப வாழ்க்கை வாழ்வதாகத் தன் மனதில் தோன்றும் காட்சிகளைக் கொண்டு பல விதப் புராணக் கதைகளைப் புனைந்தனர். அவ்வாறு இறைவழிபாட்டில் முழுக்கவனமும் செலுத்திய மனிதர்களே நாளடைவில் ரிஷிகள் என்றும் முனிவர்கள் என்றும் போற்றப்பட்டனர்.
வேதவியாசர் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைத் தொகுத்து உலகுக்குத் தந்தவர். அவரே மஹாபாரத காவியத்தையும் இயற்றினார். மஹாபாரதம் விநாயகக் கடவுளால் வியாசர் சொல்லி எழுதப் பட்டது என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள். வியாசர் வாழ்ந்த காலத்திலேயே மஹாபாரதக் கதை உண்மையில் நடந்த இந்தியாவின் பழம் வரலாறு என்பது கதையில் வரும் பாத்திரங்கள் வியாசரைப் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசியதும் பழகியதும் கதையில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து தெரிய வருகிறது. மேலும் பல விவரங்கள், வியாசர் இடம்பெறும் காட்சிகள் மஹாபாரதத்தில் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளன.
மனிதர்கள் அன்று இயற்கையை வணங்கினர், வாயு, வருணன், அக்கினி, அஸ்வினி தேவர்கள் ஆகியோரை முறையே காற்றுத் தெய்வம், மழைத் தெய்வம், நெருப்புத் தெய்வம், நட்சத்திரத் தெய்வங்கள் என்று கருதி வழிபட்டனர். வன விலங்குகளையும் பறவைகளையும் நேசித்தனர், பாதுகாத்தனர். ஒரு பகுதியினர் மிருகங்களையும் பறவைகளையும் கொன்று தின்று மாமிச போஜனம் செய்து வந்திருந்த போதிலும் அனேகமாக அனைவரும் மிருகங்களையும் பறவைகளையும், பிற உயிரினங்களையும் தம் நட்புறவுகளாகவே கண்டனர். பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிவதையும் ஆண் பெண் பறவைகள் காதல் உறவு கொண்டு களித்திருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர். பறவைகள் போல் தாமும் சுகமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களை நாகரீகம் அடையாதவர்களாக நாம் கருத்கிறோம். அதே நேரத்தில் நம் நாகரீகத்தின் தன்மை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாகரீகம் வளர்ந்த இந்நாளில் நாம் இயற்கை வளங்களை அழிக்கிறோம். விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் அதிகமாகக் கொன்று தின்கிறோம். நாம் தின்பது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்து வணிகம் செய்கிறோம். கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடங்களைக் கட்டி அவற்றுக்குள் பதுங்கிக் கொள்கிறோம். தனக்கு தனக்கு என்று பெரும் பொருள் சேர்த்து வங்கிகளிலும் நகைகளாகவும், பல மாளிகைகளாகவும், தோட்டங்களாகவும் சேர்த்து செல்வச் செழிப்புடன் ஆடம்பர வாழ்வு வாழ்வதில் மிகவும் முனைப்பாக இருக்கிறோம். இத்தகைய ஆசை தொற்று நோய் போல் அதிகபட்ச மனிதர்களிடையே பரவி அனைவரும் ஆட்டுக் கூட்டம் போல் அறிவிழந்து அழிவுப் பாதையிலேயே செல்கின்றனர். இயற்கையை அழித்து விட்ட பின் உணவு கிடைக்காது என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. மரங்கள் இல்லாவிடில் மழை பொழியாது, காற்றில் பிராணவாயு சேராது என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். நாம் நம் வீடுகளில் கூடிய வரையில் மரங்களையும் செடி கொடிகளையும் வளர்க்க வேண்டும். முடிந்தால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும். அவற்றில் இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களையே பயிரிட வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்ற விதைகளை உபயோகிக்கக் கூடாது. அவை நமக்கும் கெடுதி. பிற பயிர்களுக்கும் கெடுதி என்பதை அறிய வேண்டும். அத்துடன் பறவைகளுக்கு உணவளிக்கவும், தாகத்துக்கு நீர் தரவும் பறவைக் கூடுகளை வீடுகளில் தகுந்த இடங்களில் அமைக்க வேண்டும். சென்னையில் ஒரு வீட்டில் வசிக்கும் அன்பர் தினமும் கிளிகளுக்காகவென்றே உணவு சமைத்து மொட்டை மாடியில் நெடுகப் பரப்பி வைக்கிறார். ஆயிரக்கணக்கான கிளிகள் தினம் தோறும் வந்து அவ்வுணவை உண்டு மகிழ்வது அந்தப்பகுதியிலிருக்கும் அனைவருக்கும் கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்து வருகிறது.
சில மனிதர்கள் மிருகங்களை சிறைபிடித்து மிருகக் காட்சி சாலை அமைக்கின்றனர். சர்க்கஸ் விளையாட்டுக்களில் அவ்வாறு சிறை பிடித்த மிருகங்களை உபயோகப் படுத்துகின்றனர். அம்மிருகங்கள் இரும்புக் கூண்டுக்ளுக்குள் அடைபட்டு வதைபடுகின்றன. பறவைகளைப் பிடித்துக் கூண்டுகளில் அடைத்து வீட்டுக்குள்ளே காட்சிப் பொருளாக்கி வைக்கின்றனர். அப்பறவைகளுக்கு உணவளிப்பதும் அவற்றின் குரல் கேட்டு மகிழ்வதும் பலருக்குப் பொழுது போக்காவி விட்டது. அவற்றின் சுதந்திரத்தைப் பறிக்கிறோமே, அது தவறல்லவா எனும் எண்ணம் சிறிதும் அவர்களுக்கில்லை.
இன்றைய பாடலின் கதாநயாகி கூண்டில் அடைக்கப்பட்ட காதல் பறவைகளைக் கொஞ்சி மகிழ்கிறாள். அவற்றின் காதல் வாழ்க்கையைத் தன் காதல் மனதுக்குள் எண்ணி அவ்வெண்ணங்களைப் பாடலாகப் பாடுகிறாள். பாட்டு இனிமையாகவே இருக்கிறது. பறவைகள் சுதந்திரம் பறிபோனது குறித்த ஓரே ஒரு கவலை மட்டும் மிஞ்சிகிறது.
திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: பி. சுசீலா
ஆண்டு: 1966
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா?
அச்ச சச்ச சசசா அந்தக் காலம் வந்தாச்சா?
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா
கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாடக்
காற்றில் வந்தது ஓசை
ஓஹோஹோஹோ ஆசை
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓசை
கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாடக்
காற்றில் வந்தது ஓசை
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
சிட்டுக்குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும்
ஓஹோஹோஹோ ஓஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓஹோ
சிட்டுக்குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில் நீங்கள்
கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா?
அச்ச சச்ச சசசா அந்தக் காலம் வந்தாச்சா?
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா