தினம் ஒரு பாடல் - 27 நவம்பர் 2015
மானிடப் பிறவியின் மகத்துவமறியாமல் மனிதர்களெல்லோரும் அற்ப விஷயங்களுக்காக ஒருவரோடொருவர் கருத்து வேறுபாடு கொண்டு அதற்காக ஒருவரையொருவர் சாடுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துத் தாங்களும் துயருற்றுப் பிறரையும் வருத்துகின்றனர். வாழ்வில் எத்தனையோ இன்பங்கள் இருக்கத் துன்பத்தைத் தேடியடைந்து வருந்தி மடிகின்றனர். இதில் ஒரு சாரார் பெரும் ஞானியர் போன்ற
தோற்றத்தைத் தரவல்ல உடைகளையணிந்து கொண்டு ஏனையோர் செய்யும் அதே துர்ச் செயல்களைத் தூண்டிவிடுகின்றனர். இவர்கள் உண்மையில் ஞானியரா என்று சிந்தித்துப் பார்க்க நம்மிப் பெரும்பாலோர் தவறிவிடுகின்றோம். காரணம் ஞானியரின் உண்மை இலக்கணம் என்னவென்று முழுமையாக நாம் அறியாமையே ஆகும். இதனை மஹாகவி பாரதியார் தமது கண்ணன் என் சற்குரு எனும் கவிதையில் தெளிவாக விளக்கியுள்ளார்.
கவிதையின் கருத்தாவது: பாரதி சாத்திரங்கள் பலவற்றைத் தேடி அவற்றில் உண்மையில்லையெனவும் பழங்கோத்திரங்கள் சொல்லும் மூடர் தம் பொய்ம்மைக் கூடையே என்றும் தெளிந்து மனம் வாடி ஆத்திரமுற்று நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழத் துயருற்று வாழ்வில் நொந்திருந்த காலம் ஒரு நாள் நீர் நிரம்பிய நிலையில் ஓடும் யமுனை நதிக் கரையிலே தடியூன்றிச் சென்ற ஒரு கிழவனாரின் ஒளி பொருந்திய முகத்தையும்
அவரது தெளிவான விழிப் பார்வையையும் அவரது வெண் தாடியையும் கண்டு அவர் தனக்கு நன்மை செய்வாரென நம்பி அவரைப் பணிந்து வேண்டுகையில் அவர், "தம்பி, உன் உள்ளத்திற்கு ஏற்றவன் நித்திய மோனத்திருப்பவனும் வடமாமதுரைப் பதியை ஆள்பவனும் ஆன கண்ணனேயாவான். நீ அவனிடம் செல்" எனப் பணிக்கிறார்.
பாரதியார் வடமதுரைப் பதி சென்று மன்னன் கண்ணனைக் கண்டு வணங்கித் தன் ஊர், பெயர், கருத்து அனைத்தையும் சொல்லி நன்மை தர வேண்டுகிறார். கண்ணனோ காமனைப் போன்ற வடிவமும் இளங் காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட பூமியைக் காக்கும் தொழிலிலே எப்போதும் செலுத்திடும் சிந்தையுடன் ஆடலும் பாடலுமாக விளையாட்டுத் தனமாக இருப்பதைக் கண்டு பாரதிக்குக் கோபமுண்டாகிறது.
யமுனைக் கரையில் கண்ட கிழவரைக் கொல்ல வேண்டுமென உள்ளத்திலே எண்ணுகிறார். சிறு நாட்டைக் காக்கும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கித் திளைப்பவன், இவன் தவப் பாடு பட்டோர்க்கும் விளங்கிடா உண்மையைப் பார்த்தெங்ஙனம் கூறுவான் என்று கருதியிருக்கிறார். அப்போது கண்ணன் அவரத் தனியே அழைத்துச் சென்று ஞானம் என்னவென்று விளக்குகிறான்.
"நெஞ்சில் ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தனை வென்று மறந்திடும் போதினில் அங்கே விண்ணையளக்கும் அறிவுதான்" என்றுரைத்துப் பின் சந்திர சூரியர் மற்றும் உலகனைத்தும் பற்றிய விளக்கங்களை அளித்து ஞானக்கண்ணைத் திறக்கிறான்.
தான் என்ற ஆணவத்தை வென்று சிற்றின்பங்களை மறந்து உள்ளம் தெளிவான நிலையில் தன்னை மறந்த நிலையில் தானே தம்முள் வந்து புகும் ஞானமாகிய மெய்யறிவு விண்ணையளக்கும் என்பது பொருள்.
அத்தகைய மெய்யறிவு பெற்றவர்கள் இன்று நம்மிடையே வாழ்வதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. நாமும் அவர்களைப் போன்று மெய்யறிவு பெற்று ஞானமெய்திப் பேரின்பமடைவதே வாழ்வின் நோக்கம்.
அதை விடுத்து மண், பொன், பெண் ஆசைகளை வளர்த்துக் கொண்டு பிறருடன் முரண்பட்டுப் போராடி உடல் நலத்தையும் மன நலத்தையும் இழந்து வயோதிகமடைந்து நோயுற்று ஏன் வாழ்ந்தோமென்றே தெரியாத நிலையில் மரணமடைவதின் என்ன சுகம் இருக்கும்? அத்துடன் பலர் மதுவுக்கு அடிமையாகி இருக்கின்ற சிறிதளவு நல்வாழ்வையும் சீரழித்து ஆரோக்கியம் அழிந்து மருத்துவமனைகளில் சென்றும் நோய் தீராமலே
அவதியுற்றுச் சின்னாபின்னமாகி சித்திரவதைக்குள்ளாகின்றனர்.
மதுவிற்கு அடிமையாகப் பல காரணங்களை மனிதர்கள் சொன்னாலும் அவையெல்லாம் அவனது மனோ பலவீனத்தை மறைக்கக் கூறும் சாக்கேயன்றி வேறில்லை. ஒரு இசை மேதை தன் மனைவியைத் தவிர்த்து வேறு ஒரு பெண்ணிடம் காதலுற்று அதனால் ஏற்படும் துயர்களை மறக்க வேண்டு மதுவிற்கடிமையாகிறார். மதுவருந்திய நிலையிலேயே மேடைக் கச்சேரியிலும் பாடுகிறார். இப்பாடல் காட்சியில் அமைந்த ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மதுவுக்கடிமையாகாமல் நாட்டு மக்களை மீட்கும் சேவையில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஒரு காணிக்கை!
திரைப்படம்: சிந்து பைரவி
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து,
இசை: இசைஞானி இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே தினம் தினம்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசையெதற்கு?
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்து விட்டான்
ராகம் தாளம் மறந்து விட்டான்
ரசிகனின் கடிதத்தைக் கிழித்து விட்டான்
கடற்கரையெங்கும் மணல் வெளியில்
காதலி காலடி தேடினான்
மோஹனம் பாடும் வேளையிலும்
சிந்துவில் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழிழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திடப்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான்
இசைக்கொரு குயிலென்று ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலைத் தானின்று சுரம் பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்து விட்டான்
மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன் முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்பு
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசையெதற்கு?
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
ஏஏஏஏஏ ஏஏஏஏ
--
AKR