தினம் ஒரு பாடல்
இவ்வுலக வாழ்வு ஒருவழிப் பாதைப் பயணமேயாகும் என்பதை உணராது தம் ஆயுட்காலத்தில் தமக்கென விதிக்கப்பட்ட சொற்ப நன்மைகளையும் அனுபவியாமல் பேராசையால் அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்து வைத்து பிறரது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு தானும் மகிழ்ச்சியடையாமல் பிறரையும் மகிழ்ச்சியடைய விடாமல் வாழ்நாளெல்லாம் துன்பங்களிலே கிடந்து உழலும் மானிடப் பதர்கள் என்றும் உய்வடைய மாட்டார்கள்.
உறவுகளே இவ்வுலக வாழ்வின் சுகம். நம்முடன் தொடர்புகொள்ளும் அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ்தல் அளவிடற்கரிய இன்பம் பயப்பதாக அமையும். உறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பெற்றோருடன் தொடங்குகிறது. தாயின் அரவணைப்பில் ஒரு குழந்தை காணும் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது. பின்னர் வளர்சியடைய அடைய அன்னையை மட்டுமின்றி தந்தை, சகோதரர்கள், பிற குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், அண்டை அயலார் என உறவு வட்டம் பெரிதாக வளர்கிறது.
மனம் விசாலமாக அனைவரையும் பேரன்புடன் நேசிக்கும் தன்மை அமையப்பெற்றவர்கள் அடையும் இன்பம் ஏனைய பிறர் அடையும் இன்பத்தை விடப் பன்மடங்காக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் முதலிய ஏனைய உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்துதல் சுகமே பயக்கும்.
அவ்வாறு நாம் அன்பு செலுத்தும் உயிர்களின் எவையேனும் விதிவசத்தால் துயருறுகையிலும் மடிகையிலும் நமக்கு துக்கமுண்டாகிறது. அத்தகைய துக்கத்தின் அளவு அவ்வுயிர்களிடத்தில் செலுத்தும் அன்பையும் அவற்றிம் மேல் கொண்ட பற்றுதலையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ விளங்கும்.
இயற்கையாகவே ஒவ்வொருவரும் தம் குழந்தைகளின் மீது மிகவும் அதிகப்படியான அன்பைச் செலுத்தி அவர்களை மிகவும் அக்கரையுடனும் பிரியத்துடனும் வளர்த்துக் காப்பது அனைவரும் அறிந்ததே. எனவே ஒருவர் தனது குழந்தை துயருறுகையிலும் துரதிருஷ்டவசமாக மடிகையும் அடையும் துன்பத்துக்கு அளவே கிடையாது. மனதில் பொங்கும் துயர வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றைப்போலக் கட்டுக்கடங்காமல் பெருகுவது இயல்பு. இதனைப் புத்திர சோகம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ராமாயண மஹாகாவியத்தில் ஸ்ரீ ராமன் கைகேயிக்கு தசரதன் தந்த இரண்டு வரங்களின் பயனாக முடி துறந்து வனவாசம் செல்கையில் அவனது பிரிவைத்தாங்காமல் தசரதன் புத்திர சோகத்தால் உடல்நலம் குன்றி மடிந்ததாக வால்மீகி முனிவர் எழுதி வைத்துள்ளது நாம் அறிந்ததே.
எத்தனை கோடானு கோடி செல்வம் இருப்பினும் பெற்ற குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் உடல்நலமும் பிற நலன்களும் பெற்று வாழ்வதே பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும். குழந்தைகளுக்கு ஏதேனும் குறைகள் உண்டாகுகையில் தம்மிடம் உள்ள பொருள் அனைத்தும் செலவழித்தாலும் பரவாயில்லை, குழந்தைகள் நலமடைந்தால் போதும் என்ற சீரிய மனப்பான்மை நமது நாட்டில் பெற்றோரது பெருங்குணமாகக் கடைபிடித்து மதிக்கப்படுவதாலேயே நம் நாடு உலகிலுள்ள பிற நாடுகளைக் காட்டிலும் கலாச்சாரத்தில் மேன்மை பெற்று விளங்குகிறது.
இங்கே நமது கதாநாயகன் அடக்குமுறை அரசியலாலும் இனக் கலவரத்தினாலும் பாதிக்கப்பட்ட தன் இனத்தினரை மிகவும் அன்பு செலுத்திப் பாதுகாக்கிறான். சந்தர்ப்பவசத்தில் அவன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேர்கிறது. இச்சூழலில் அவனது மகன் அத்தகையதொரு குற்றச் செயலில் ஈடுபடுகையில் மரணமடைந்து விடுகிறான். நம் நாயகனுக்கு துக்கம் ஆறாகப் பெருகுகிறது. அதனை விளக்கும் விதமாக அமைந்த பாடல் இதோ:
திரைப்படம்: நாயகன்
பாடலாசிரியர்: புலமைப் பித்தன்
இசை: இளையராஜா
பாடியோர்: : கமலஹாசன்
ஆண்டு: 1987
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
--
AKR