Fwd: தினம் ஒரு பாடல்

3 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Apr 18, 2016, 12:52:31 PM4/18/16
to muthami...@googlegroups.com
தினம் ஒரு பாடல் - ஏப்ரல் 18, 2016

வாழ்க்கையெனும் நாடகத்தில் நம் ஒவ்வொருவரின் தகுதியையும் சோதிக்கிறான் இறைவன் என்பதை அறியாது அந்த இறைவன் பெயரைச் சொல்லியே ஊரை உலகை ஏமாற்றிப் பல லட்சம் கோடிப் பணத்தைச் சுருட்டி உள்நாட்டில் பல இடங்களில் அங்கும் இங்கும் ஒளித்து வைத்து, அப்படியும் இடம் பற்றாமால் அயல்நாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்து, சேர்த்த பணத்தில் ஒரு சிறிதளவும் உபயோகிக்காமலேயே எமலோகம் செல்லும் அற்ப மனிதர்கள் பலரைப் பற்றிய செய்திகளை நாள்தோறும் அறிகிறோம். 

இத்தகைய மோசடிப் பேர்வழிகள் பலரும் தங்கள் தலைவராகவும், கண்கண்ட தெய்வமாகவும், ஆத்மார்த்தமான குருவாகவும் வணங்குவதாகச் சொல்வது தன்னலம் சிறிதுமின்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழ்ந்து காட்டிய மஹாத்மா காந்தி, ஸ்வாமி விவேகானந்தர், அண்ணல் அம்பேத்கார், வல்லப்பாய் படேல் போன்ற உத்தமர்களையே என்பதை எண்ணிப் பார்க்கையில் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அதையும் மக்களில் ஒரு பகுதியினர் நம்புவதை அறிகையில் வேதனை கூடுகிறது. தேசத்துக்காகவும் மனித குலம் முழுமைக்காகவும் தம் வாழ்வையே ஈந்து தமக்கென வாழாப் பிறர்க்குரியராக விளங்கும் அத்தகைய உத்தமர்களில் பெயர்களைக் களங்கப் படுத்துவது மிகவும் கேவலமான செயலாகும். உண்மை என்றாவதொரு நாள் வெளியாகும் என்பது இயற்கை நியதி என்பதைக் கண்ணாரக் கண்டும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் திருந்துவதில்லை, மனம் வருந்துவதுமில்லை. அது மட்டுமின்றித் திருடன் என்று உலகமே அறிந்த பின்பும் உத்தமர் வேடம் போடப் பெரும் முயற்சி செய்கின்றனர். நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசமாக இதைத் தருவேன், அதைத் தருவேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்லி, மக்களின் ஏழ்மையைப் பகடைக் காய்களாய் உபயோகித்து மீண்டும் மீண்டும் தாங்கள் செய்து மாட்டிக்கொண்ட குற்றங்களையே செய்து மக்களை மேலும் மேலும் அவதிக்குள்ளாக்கும் செயலில் சிறிதும் தயக்கமின்றி ஈடுபடுவதை நினைக்கையில் மக்கள் மேலேயே கோபம் வருகிறது. திரும்பத் திரும்ப இத்தகைய மோசடிப் பேர்வழிகளையே நாடாளத் தேர்ந்தெடுக்கும் மக்களில் பெரும்பாலோரின் மடமையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது.

நம் நாட்டையும் நமது வருங்கால சந்ததியினரையும் இத்தகைய கொடியவர்களிடமிருந்து காக்க வழியே இல்லையா எனும் ஏக்கம் மேலிடுகிற சமயத்தில் நம் நாட்டு இளைஞர்கள் பெரும் விழிப்புணர்வுடன் எழுந்து நின்று ஊழலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவையும், வெள்ளத்தாலும் வேறு பல காரணங்களாலும் அவதியுறும் மக்களுக்கு ஓடோடிச் சென்று பேருதவிகள் புரிவதையும், தொடர்ந்து இரத்ததானம் முதலிய நற்செயல்களில் ஈடுபடுவதையும் அறிந்து மனம் சற்றே ஆறுதலடைகிறாது., ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்துப் பல கல்வியறிவுமிக்க நேர்மையான. சமூக அக்கரையுடன் சேவை செய்யும் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முன்வருவது கண்டு நம் நாடு பிழைத்து விடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. 

மிருகங்கள் அவற்றின் இயற்கை குணத்தையே வெளிப்படுத்துகையில் மனிதன் மட்டும் தன் இயற்கை குணங்களை மறைத்து வேஷம் போட்டு ஊரை, உலகை ஏமாற்றுவதில் சாமர்த்தியம் காட்டுகிறான் என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் பிறருடன் பழகுவதில் எச்சரிக்கையாக இருப்பது அனைவருக்கும் உகந்ததாகும். அவசரப்பட்டு உண்மையைக் கண்டறிய முயற்சிகள் செய்யாமல் வெறும் பத்திரிக்கை செய்திகளையும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் உண்மையென்று நம்பித் தலைவர்களாகும் தகுதி சிறிதுமில்லாதோரைத் தலைவர்களாக ஏற்பதைக் காட்டிலும் மடமை வேறில்லை. இறைவன் நமக்களித்த அறிவையும், நேரத்தையும் உபயோகித்து யார் எப்படிப் பட்டவர் எனும் விவரங்களைத் தேடியறிந்து தெளிந்த பின்னரே எந்த ஒரு மனிதரையும் தலைவராக ஏற்பது, அல்லது மக்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்வது அறிவுடைமை. 

நாட்டை ஆளும் தலைவர்கள் தகுதிமிக்கவர்களாக இருக்கின்றனர் என்றால் ஏன் நாட்டில் சாதி மதச் சண்டைகளும், கொலை கொள்ளைகளும் பெருகுகின்றன? விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக்கொண்டே போவது ஏன்? காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டு ஆற்று மணல் சுரண்டப் பட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மண்ணில் வாகனங்களக் கோடானு கோடிக் கணக்கில் உற்பத்தி செய்து விற்றுக் காற்றையும் மாசுபடுத்தி வருவதை அனுமதிப்பது ஏன்? ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன? ஏன் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது? ஏன் புதிது புதிதாக வரிகள் மக்களின் மேல் சுமத்தப் படுகின்றன? ஏன் அரசு நிறுவனங்கள் மட்டும் நஷடத்தில் இயங்குகின்றன? ஏன் தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இயங்குகின்றன? ஏன் நஷ்டத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நம் நாட்டு வங்கிகள் வாரி வழங்குகின்றன? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத மோசடிப் பெருமுதலாளிகள் மிக எளிதாக அயல் நாடுகளுக்குத் தப்பியோட விடுவது ஏன்?

இன்னும் எண்ணிறந்த கேள்விகள் இருப்பினும் ஒன்றுக்கும் உரிய பதிலையளிக்க அத்தகைய பதிலளிக்கும் கடமையைச் செய்ய வேண்டிய தலைவர்கள் பதிலளிப்பதில்லை. மாறாகத் தம் தவறை நியாயப் படுத்தவே முயல்கின்றனர். தம் எதிரிகள் அதே தவறைச் செய்தனரே, அவர்களை ஏன் கேட்பதில்லை என்று பதில் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் எதிரிகள் குற்றங்களைச் செய்தால் அதே குற்றங்களைத் தாங்களும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டதென்பதே நாம் அறிய வேண்டியது. 

நம் இளையதலைமுறையினர் இவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி நம் நாடு வளம் பெறவும், இயற்கை விவசாயம் சிறக்கவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பல உற்பத்தித் தொழில்கள் பெருகவும், படித்த படிக்காத அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாத்து மிகைப்படுத்தவும், அந்நிய நிறுவனங்களை அகற்றி இந்தியர்களே இந்தியாவில் தொழில்களை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகள் காண்பதுவும், ஏற்றுமதியைப் பெருக்கி நாட்டின் செல்வத்தை உயர்தவும் எனப் புதிய பாதையில் மும்முரமாகத் தங்கள் அரசியல், சமுதாய சீர்திருத்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பது கண்டு பெருமையாக உள்ளது. 


திரைப்படம்: சாது மிரண்டால்
இயற்றியவர்: தஞ்சைவாணன்
இசை: மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி
குரல்கள்: பி. சுசீலா, ஏ.எல். ராகவன், குழுவினர்

பாடல் வரிகள்

ஓஹ் வாட் எ ட்ராஜெடி ட்ராஜெடி காமெடி காமெடி ட்ராஜெடி 
ட்ராஜெடி காமெடி வாட் எ பிட்டி!

ஆஹாஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா 
ஆஹாஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா ஹாஹ ஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இன்ப துன்பம் மாறி மாறி நடமாடிடும்
நன்மை தீமை போட்டி போட்டு விளையாடிடும்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

ஓடி ஆடிக் காசைச் சேரு கையினிலே
ஒசந்த மனுஷன் ஆகிடலாம் நிமிஷத்திலே
தேடி நாடி உறவு வரும் அருகினிலே
தெரிஞ்சிக்கலாம் ஜோசியரே முடிவினிலே

பொம்மனாக வந்து வந்து பழகிடுவான்
அன்பு பாசம் என்று சொல்லிக் குலவிடுவான்
துன்பம் வர்ர போது தூர விலகிடுவான்
பண்பில்லாமல் ஊரினிலே உலவிடுவான்

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

ஓய் டிடீஈ ஓய் டிடீஈ ஓய் டிடீஈ டீஈ டிஈ
ஓய் டிடீஈ ஓய் டிடீஈ 
டிடீடிடி டிடிடிடி டீ

உறங்கும் போது மனுஷன் ரொம்ப நல்லவனே
முளிச்சுக்கிட்டா அம்மாடியோ கெட்டவனே
வழியை விட்டுக் குறுக்கு வழியில் இறங்கிடுவான்
வெந்து வந்து வந்த வழியில் சேர்ந்திடுவான்

இரவினிலே குரங்குகடா பெருச்சாளி
எப்பொழுதும் உறங்கிடுவாம் சோமாறி
வாழ்ந்திடவே பயப்படுவான் சம்சாரி
வாழ்க்கை ரொம்ப டிஃபிகல்ட் ஐயம் சோ சாரி

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

விருப்பத்தோடு செய்வதுவோ கல்யாணம்
வெறுத்தவுடன் வாங்குவதோ சந்நியாசம்
இருப்பதுவோ கொஞ்ச நாளு மண் மேலே
அதுக்குள்ளே ஆட்டத்துக்கோர் அளவில்லே

காலம் நேரம் நம்மைத் தேடி வரும்போது
யாரும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது
போதுமென்ற மனது மட்டும் வந்துவிட்டால்
பூமியையே சொர்க்கமாக மாற்றிடலாம்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இன்ப துன்பம் மாறி மாறி நடமாடிடும்
நன்மை தீமை போட்டி போட்டு விளையாடிடும்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

--

Reply all
Reply to author
Forward
0 new messages