வருந்துகிறேன் அண்ணா கண்ணன்.
வல்லமையின் துணையாசிரியர் பொறுப்பில் நான் இருந்த பொழுது நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அது நட்பு என்ற எல்லையையும் எட்டியது. மிகச் சரியாக உரிய காலத்தில் அவருடைய படைப்புகளை வெளியீட்டுக்கு அனுப்பிவிடுவார். அக்கால எழுத்தாளர்களுக்கே உரிய முறையில் சிந்தனையைத் தெளிவாக முன்வைக்கும் முறையில் கருத்துப்பிழை எழுத்துப்பிழை தட்டுப்பிழை என எதுவும் இன்றி இருக்கும் அம்மையாரின் படைப்புகள். இவரிடம் இருந்து வந்தால் அதில் திருத்தம் செய்யவே நமக்கு வேலை இல்லை என்ற அளவில் இருக்கும் அவருடைய படைப்புகள்.
அப்படியே வெளியிட்டுவிடலாம்.
அவரிடம் நான் மதித்து வியந்தது அவருடைய முற்போக்குச் சிந்தனைகளும், மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவின்றித் தயக்கமின்றி எழுதும் துணிவும் கொண்டவர் என்ற பண்பும்தான். உலகச் செய்திகள், உள்ளூர்ச் செய்திகள், இலக்கியம், அரசியல் என்று எதிலும் ஆர்வம் கொண்டவர்.
என் அமெரிக்க வாழ்வின் எதிரொலியாக நான் எழுதிய கட்டுரைகளை "சுதந்திர தேவியின் மண்ணில் ..." [
https://archive.org/details/suthanthira-deviyin-mannil-isbn-9780996399340] என்ற நூலாக நான் தொகுத்து வெளியிட ஏற்பாடு செய்த பொழுது நாகேஸ்வரி அண்ணாமலை (ஆசிரியர்: 'அமெரிக்காவின் மறுபக்கம்' 'அமெரிக்க அனுபவங்கள்'), மேகலா இராமமூர்த்தி (ஆசிரியர்: 'பன்மணிக் கோவை'), பழமைபேசி (ஆசிரியர்: 'செவ்வந்தி' 'ஊர்ப்பழமை'), ஆகிய அமெரிக்க எழுத்தாளர்களிடம் என்னுடைய நூல் குறித்த அவர்களுடைய அணிந்துரை, வாழ்த்துரை போன்றவை வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அப்பொழுது நாகேஸ்வரி அண்ணாமலை அவர்கள் மகிழ்ச்சியுடன் உடனே அனுப்பி வைத்தார் என்பதை நினைவு கூர்கிறேன்.
எளிமையையும் நட்பையும் நேர்மையையும் மதித்தவர் என்பது என் புரிதல். பரபரப்பாக ஆரவாரம் இன்றி அமைதியாகத் தமிழ்ப்பணி ஆற்றும் வாழ்கையில் சென்றவர். பெண்களுக்கு நல்லதோர் முன்மாதிரி. அவரிடம் அன்பு கொண்டவர்களுக்குத் துயரம் தரும் பிரிவு இது.
வருத்தத்துடன் . . .
தேமொழி
___________________________________________________

அணிந்துரை
இந்தியாவில் மத்தியத்தரக் குடும்பங்களுக்கு அமெரிக்காவின் அந்நியத் தன்மை போய்விட்டது எனலாம். ஒரு சொந்தக்காரர்கூட அமெரிக்காவில் இல்லாத குடும்பம் இல்லை என்றே சொல்லலாம். பிள்ளைகளுக்கு உதவ வந்துபோகும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. இதற்குமேல் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் அமெரிக்கா பற்றிய செய்திகளும் படங்களும் வந்துகொண்டேயிருக்கின்றன. இருப்பினும் அமெரிக்கா பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதை ஓரளவு இந்தப் புத்தகம் நிறைவேற்றி வைத்திருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. சில அமெரிக்க அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துகின்றன. சிறையைப் பற்றியும் ஒரு கட்டுரை இருக்கிறது. அமெரிக்காவுக்குப் பிறநாட்டு இளவயதினரை ஈர்க்கும் சிறந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய தகவல்களை ஒரு கட்டுரை தருகிறது இவர்கள் தரும் கட்டணம் இல்லாவிட்டால் பல்கலைக்கழகங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையும் சுட்டுகிறது. அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கு உரமிடும் நியூயார்க் பங்குச் சந்தையைச் சொல்லும் அதே நேரத்தில் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை எதிர்க்கும் குரல்களையும் இரு கட்டுரைகள் அடையாளப்படுத்துகின்றன. கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் சாதனையைச் சொல்லும்போது ஆசிரியர் இன்னும் இன வெறுப்பு இருப்பதையும், கறுப்பினத்தினர் சிறு குற்றத்துக்கும் பெருந்தண்டனை பெறுவதையும், குற்றமே செய்யாதவர்கள் சந்தேகத்தின் பெயரால் சுடப்படுவதையும் இனக்கலப்புத் திருமணங்கள் மீதுள்ள காழ்ப்பையும் சொல்கிறார். இந்தியாவில் பெண்கள் நினைக்கவும் முடியாத சுதந்திரம் அமெரிக்கப் பெண்களுக்கு உண்டு என்றாலும் அரசியலில் அதிகாரம் பெற முடியவில்லை என்று சுட்டுகிறார். கொலம்பஸ் அமெரிக்காவில் கால்வைத்தது இங்குள்ள பழங்குடி மக்களுக்கு வினையாக வந்தது என்றும் சொல்கிறார். அமெரிக்காவில் உள்ள இப்படிப்பட்ட முரண்களை இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம். பல நாடுகளிலிருந்தும் வந்து வெற்றிகரமான வாழ்வை அமைத்துக்கொண்டவர்களையும் தாங்கள் அமெரிக்க மண்ணில் பிறந்தவர்கள் இல்லை என்று எண்ண வைக்கும் சூழ்நிலை இருக்கத்தான் செய்கிறது என்ற தன் அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற எண்ணம் வலுக்கும். வேற்றுமையில் ஒற்றுமை குறையும், பொருளாதார ஏற்றத்தாழ்வு கூடும். அமெரிக்கா உலகிற்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் நிலை மாறும். அமெரிக்காவின் நிகழ்காலத்தை இந்த நூலின் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் வாசகர்கள் அதன் எதிர்காலத்தைப் பற்றிய சந்தேகத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
அன்புடன்