Pandiyaraja
unread,Oct 20, 2025, 2:12:16 PM (5 days ago) Oct 20Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
இன்று தீபாவளி நாள் – ஏறக்குறைய நாள் முடிந்துவிட்டது.
ஆனால் என் நெஞ்சில் அந்த நாள் நினைவுகள் மீண்டும் மீண்டும் கடலலையாக வந்துவந்து மோதிக்கொண்டிருக்கின்றன.
காட்சி – 1
ஓடைப்பட்டி – தேனிமாவட்டம் சின்னமனூர் அருகில் ஒரு சிற்றூர் – 1940 களின் கடைசிக் காலம்.
தீபாவளி அன்று – வயது 4, 5 இருக்கலாம். என் அண்ணன் எனக்கு இரண்டு வது மூத்தவர். நானும் அண்ணனும் தீபாவளி கொண்டாடுவோம். எங்கள் அப்பா – எங்களின் சட்டை, காற்சட்டைகளைக் கழற்றிப்போட்டு, கோவணம் கட்டிவிடுவார். எங்கள் அம்மா – ஒரு தாளிக்கிற கரண்டி நிறைய கங்குகள் எடுத்துவைப்பார். எங்கள் அத்தை – அதை அவ்வப்போது ஊதி ஊதி அணைந்துவிடாமல் காப்பார். ஒரு சிறிய அட்டைப் பெட்டியிலிருந்து அப்பா கம்பி மத்தாப்பை ஒவ்வொன்றாக உருவி எடுத்துக்கொடுப்பார். அதைக் கங்கில் காட்டி, பொறி வந்தபின் கழுத்தைப் பின்புறமாகத் திருப்பிக் கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டிப் பிடித்துக்கொண்டிருப்பேன். “டேய், கண்ணைத் தொறந்து பாருடா” என்று அப்பா கத்துவார். என்னது தீர்ந்து முடிந்தவுடன் கண்ணைத் திறந்து அண்ணன் விடும் மத்தாப்புப் பொறிகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கைதட்டுவேன்.
காட்சி – 2.
அதே ஓடைப்பட்டி – கொஞ்சம் வயது அதிகம். தீபாவளியன்று – அதே கோவணம் – அதே கரண்டி – கங்குகள் - இப்போது ஓலைவெடி. ஒரு வெளக்குமாற்றுக் குச்சியில் ஒரு முனையில் அந்த ஓலைவெடியைச் செருகி அடுத்த முனையை அப்பா கையில் கொடுப்பார். அதைக் கங்கில் காட்டி, பொறிவந்தவுடன் கழுத்தைத் திருப்பி, கண்ணைமூடிக்கொண்டு, கையை நீட்டிப்பிடிப்பேன். சற்று நேரம் கழித்து அது மெல்லிய ஒலியுடன் டப் என்று வெடிக்கும். உள்ளத்தில் அத்துணை மகிழ்ச்சி.
காட்சி – 3.
என் அப்பாவுக்கு அங்கே கவுண்டமார் நண்பர்கள் நிறைய. அவர்கள் தீபாவளிக்கு ஆடுவெட்டுவார்கள். அவர்கள் வீட்டிலிருந்து தீபாவளியன்று ‘வாத்தியார் வீட்டுக்கு’ என்று கறி வரும். அன்றைக்கு எங்களுக்கு அந்தக் கறிக்குழம்புதான். மீந்துபோன கறியை, அம்மா, உப்பு மஞ்சள் தடவி, கோணூசியால் சாக்குச் சரடில் கோத்து, தோரணமாகத் தொங்கவிடுவார்கள். சுமார் ஒரு வாரத்தில் காய்ந்துவிடும். அதற்குப் பெயர் உப்புக்கண்டம். வாடூன் (வாடு + ஊன் = வாடிப்போன மாமிசம்) என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இரவுச் சாப்பாட்டுக்கு, தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணெயில் பொரித்து, ‘கடிச்சுக்கிற’ கொடுப்பார்கள். கடுக் முடுக் என்று அவ்வளவு ருசி.
ஏதாவது சேட்டை செய்து அம்மாவிடம் அடிவாங்கப் பயந்து வெளியே ஓடினால், ‘வாடா, பசிச்சா இங்கதான வருவ, அப்ப முதுகுத் தோலை உறிச்சு உப்புக்கண்டம் போடுறேன்’ என்பார்கள். அந்த ஓசிக் கறி உப்புக்கண்டம் ஒருநாள் தீர்ந்துபோகும். இந்த அம்மா வாய் உப்புக்கண்டம் ஆண்டு முழுதும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கும்.
காட்சி- 4.
இப்போது பசுமலை – மதுரை அருகில். பசுமலை உயர்நிலைப் பள்ளி மாணவன். கிராமத்தில் அப்பா, அம்மா. பசுமலையில் அத்தை எங்களுக்கு ஆக்கிப்போட நாங்கள் உயர்கல்வி பெற்றுவந்தோம். கிராமத்தில் இருக்கும் அண்ணன் அனுப்பும் பணத்தில் சிக்கனமாக இருந்து எங்களை வளர்த்து வந்த அத்தை தீபாவளிக்கு ‘தாராளமாக’ காலணா கொடுப்பார். காலணாவுக்கு இரண்டு டப்பா கேப் வெடி கிடைக்கும். ஒரு பெரிய ஒருரூபாய் நாணயத்தின் அளவில் ஒரு சிறிய வட்டமான அட்டைப் பெட்டி. அதற்குள் பத்துப்பன்னிரண்டு கேப் வெடிகள். ஒரு கேப் வெடி என்பது பெண்களின் நெற்றிப்பொட்டு அளவில் இருக்கும். சிவப்பான இரு வட்டக் காகிதத்திற்கு இடையில் ஒரு பெரிய கடுகு அளவில் வெடிமருந்து புடைத்துக்கோண்டிருக்கும். இதை வெடிக்க நாங்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி வேடிக்கையானது. வீட்டில் ஆணிடப்பாவில் ஒரு போல்ட் இருக்கும். ஒன்றரை அங்குலம் நீளம். அதின் கொண்டை தட்டையாக இல்லாமல் சிறிய குமிழாக இருக்கும். அதில் இரண்டு வாஷர் செருகியிருக்கும். மேலே ஒரு நட். நட்டைத் திருகி வெளியிலெடுத்து, ஒரு வாஷரையும் வெளியிலெடுத்து, அடுத்த வாஷரில் ஒரு கேப் வெடியை வைப்போம். இர்ணடு மூன்று கூட வைக்கலாம். சத்தம் பெரிதாக வரும். ஆனால் சந்தோஷ காலம் குறையும் நீண்ட நேரம் சந்தோஷம் வேண்டுமென்றால் ஒவ்வொன்றாக வெடிக்கவேண்டும். பின்னர் இரண்டாம் வாஷரை செருகி அதனை மூடி, நட்டைத் திருகி இறுக்குவோம். ஏதாவது ஒரு பெரிய கல்லின் மீதோ அல்லது வீட்டு வாசற்படியிலோ அந்த போல்ட்டின் தலைப்பு படுகிறது மாதிரி ஓங்கி வீசி எறியவேண்டும். அப்போது அது எழுப்புகிற டப் சத்தம் – தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல் இருக்கும்.
இப்போது வயது 80-ஐத் தாண்டி – முதுமை – தளர்ச்சி.
கார் – வசதியான வீடு – கட்டில் – மெத்தை – ஏசி.
இருந்தாலும் –
அந்தக் கோவணம் கட்டி விட்ட கம்பி மத்தாப்பு --
வெளக்குமாற்றுக் குச்சியில் செருகிய ஓலைவெடி --
கவுண்டமார் வீட்டுக் கறியின் உப்புக்கண்ட ருசி --
காலணா கேப் வெடியில் காது குளிர்ந்த மகிழ்ச்சி --
எங்களுக்காகத் தங்களைத் தேய்த்துக்கொண்டு எங்களை மகிழ்வித்த அப்பா, அம்மா, அத்தை --
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
இந்தநாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
ஏக்கத்துடன்,
ப.பாண்டியராஜா