தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் சிறப்பிதழாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் செப்டம்பர் மாத 'Canadian Rationalist' மின்னிதழ் அச்சுப் பதிப்பாக வெளியீடு கண்டுள்ளது. அதனை 25/9/2025 அன்று தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட முதல் பிரதியைத் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்தப் பெரியார் பிறந்த நாள் சிறப்பிதழில் "பெரியார் படித்த அறிவியல் நூல்" என்ற தலைப்பில் நானெழுதியுள்ள ஒரு சிறு கட்டுரையும் வெளியாகி உள்ளது. வெளியிட்ட கனேடியன் ரேஷனலிஸ்ட் இதழுக்கு என் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இதழை இணையம் வழியாகப் படிக்கலாம்.
__________________________________
"பெரியார் படித்த அறிவியல் நூல்"
— தேமொழி

பெரியார் ஈ.வெ.ராமசாமி தனது கட்டிலில் அமர்ந்த வண்ணம், வலது கையில் பிடித்திருக்கும் ஓர் உருப்பெருக்கியின் துணைகொண்டு இடது கையில் உள்ள ஒரு நூலைப் படிக்கும் படம் ஒன்றை இணையப் பயன்பாடு பரவலான இந்நாளில் அறியாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. அந்தப் படத்தில் இருக்கும் பெரியார்தான் என்னுடைய 'பெரியார் பெருமை பெரிதே' என்ற நூலின் அட்டைப்படத்திலும் சிறிது மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளார். தள்ளாத முதிர்ந்த அந்த வயதில், பார்வைத் தெளிவிற்காக அணிந்திருக்கும் கண்ணாடியும் உதவாத நிலையில், உருப்பெருக்கி ஒன்றின் உதவியுடன் ஆர்வத்துடன் படிக்கிறார்.
அவர் படிக்கும் அந்த நூல் 1967 இல் வெளியிடப்பட்ட நூல் என்பதால், அந்த ஆண்டே பெரியார் அதை வாங்கிப் படித்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்பொழுது அவருக்கு வயது 88. தமது 88-ஆவது வயதிலும், உருப்பெருக்கியின் உதவியுடன் பெரியார் ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு அவரது கருத்தைக் கவர்ந்தது ஓர் அறிவியல் நூல் என்பதுதான் வியப்பிலும் வியப்பு !!
இந்த நூலின் தலைப்பு, "நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்". அறிவியல் ஆய்வாளர்கள் குறித்து நூல்கள் பல எழுதிய 'எட்னா யோஸ்ட்' என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய 'மாடர்ன் அமெரிக்கன்ஸ் இன் சயின்ஸ் அண்ட் இன்வென்ஷன்' (Modern Americans in science and invention - Edna Yost) என்ற நூலை, ”நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்" என்று தமிழில், தென் இந்திய சயின்ஸ் கிளப்பிற்காக மொழிபெயர்த்தவர் திரு. சி. சீநிவாசன் என்ற மொழிபெயர்ப்பாளர். விஞ்ஞான அறிவு - நூல் பிரிவின் கீழ், 239 பக்கங்கள் கொண்ட இந்த நூலை 1967ஆம் ஆண்டில் ஹிக்கின்பாதம்ஸ் வெளியிட்டது.
மொழிபெயர்ப்பாளர் திரு. சி. சீநிவாசன், (ஸி.ஸ்ரீநிவாஸன் என்றும் இருவேறுவகையிலும் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டவர்) ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். சுதேசமித்திரனில் ஸி.ஆர்.ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசிரியராயிருந்த காலத்தில் அங்குப் பணியாற்றியவர் சி.சீநிவாசன். புகழ்பெற்ற பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. வில்லா கேதர் (Death Comes for the Archbishop - Willa Cather); எர்னஸ்ட் ஹெமிங்வே (For Whom the Bell Tolls -Ernest Hemingway); ஆலன் பேட்டன் (Cry, the Beloved Country - Alan Paton) போன்ற புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் சி.சீநிவாசன்.
அவர் மொழிபெயர்ப்பில் வெளியான அறிவியல் பொருண்மை கொண்ட நூலைத்தான் நாம் படத்தில் உள்ள நம் பெரியாரின் கையில் காண்கிறோம்.
அறிவியல் நூலின் விவரம்:
"நவீன அமெரிக்க விஞ்ஞானிகள்"
நூலாசிரியர்: எட்னா யோஸ்ட்
மொழி பெயர்ப்பு: சி.ஸ்ரீனிவாசன்
பதிப்பு: ஹிக்கின்பாதம்ஸ் - 1967
239 பக்கங்கள் - விஞ்ஞான அறிவு நூல்
நன்றி: Canadian Rationalist - செப்டெம்பர் மாத இதழ்
பக்கம் : 68-71
https://online.fliphtml5.com/kdsmi/jtva/#p=68

-------------------------------------