ஓடைப்பட்டியும் சங்கத்தமிழர் வாழ்வும்.

4 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
4:54 AM (11 hours ago) 4:54 AM
to மின்தமிழ்

எனது ஓடைப்பட்டி அனுபவங்கள் சங்க இலக்கியத்தின் பல பகுதிகளைச் சரியாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ள உதவின. அதுபற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

1940-கள் வரை நான் பிறந்த ஓடைப்பட்டியில் மின்சாரம் இல்லை. மக்களின் போக்குவரத்துக்கு மாட்டுவண்டிதான். தனிமனிதனுக்கு ரொம்பப் போனால் சைக்கிள்தான். அதுவும் இளைஞர்களுக்குத்தான். கொஞ்சம் வயதுவந்தவர்கள் சளைக்காமல் நடந்தே போவார்கள். எனவே நாகரிகம் நுழைந்த நகரத்தின் தாக்கம் வெகு குறைவு. எனவே ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கத் தமிழரின் வாழ்வு ஏறக்குறைய மாறாமல் தொடர்ந்து வந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. எனவே அன்றைய வாழ்க்கையே சங்கத்தமிழரின் வாழ்க்கைமுறையாகவும் இருந்திருக்கவேண்டும்.

நான் அந்தச் சூழலில் அங்கு பிறந்துவளர்ந்தவன். எனவே அந்தக் காலத்து வாழ்க்கை முறையைப் பதிவுசெய்ய முயல்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் இது முற்றிலும் மறைந்துபோகும். அதை எடுத்துச் சொல்ல ஆளிருக்காது.

என் அப்பா போடி ஜமீந்தார் இலவச விடுதியில் தங்கி அங்கு படித்தவர். போடி ஜமீந்தார் அரண்மனைக்கு முதன்முதலில் வந்த ரேடியோப்பெட்டியைப் பார்க்க பக்கத்து ஊர் மக்கள் வண்டிகட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்த செய்தியைக் கதைகதையாகக் கூறுவார்.  ஒருமுறை ஜமீந்தாரைப் பார்க்க, கட்டபொம்மன் சந்ததியார் வில்வண்டியில் முன்னும் பின்னும் திரைபோட்டுக்கொண்டு வந்த செய்தியைக் கூறுவார். மாட்டுவண்டியில் மதுரைக்குத் தபால் கொண்டுசெல்லும் தபால்வண்டியில் பயணம்செய்த கதையைக் கூறுவார். முதன்முதலாகச் சின்னமனூருக்குப் பஸ் வந்தபோது, அது ஊருக்குள் தெருத்தெருவாக ஊர்ந்து சென்று, கண்டக்டர் பஸ் போகும் ஊர் பெயரைச் சொல்லிக் கூவிக்கொண்டே ஓடியோடி ஒவ்வொருவராக வருபவரையும் ஏற்றிக்கோண்டு சென்ற அதிசயத்தைக் கூறுவார். அவற்றையெல்லாம் குறித்துவைத்திருந்தால் நம் சமுதாயம் மாறிக்கொண்டு வந்த விதத்தை நுணுக்கமாக ஆய்ந்திருக்கலாமே என்று இன்றும் வருந்துகிறேன். அதனால்தான் என்னுடைய நினைவுகளையாவது பதிந்துவைப்போம் என்ற நினைப்பில் இத்தொடரை எழுதுகிறேன்.  

ப.பாண்டியராஜா

Reply all
Reply to author
Forward
0 new messages