
1. நிஷா
வால்கா நதி பிரதேசம்
காலம் கி.மு 6000
இனம் ஹிந்தோ- ஐரோப்பியர்
இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர். தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை, சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத, ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது, அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை, அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ, வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கும் வித்தியாசம் இல்லை. இதை வரலாறு மற்றும் புராணக் கதைகளில் பல இடங்களில் பார்க்கலாம். இந்த ரத்த உறவு முறை குடும்பத்தில் பெரும்பாலும் அனைவரும் ஒரே மாதிரியும் ஒரே குணங்களையும் கொண்டவராக இருப்பதில் சாத்தியம் அதிகம். காலப்போக்கில் இது இனம், குலம், கோத்திரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் இது தாயின் பெயரைக் கொண்டே இனக்குழுவாக இருந்தது. தந்தை வழி சமுதாயத்தில் இது பிதுரர்கள் அல்லது முன்னோர்கள் பெயர்களைக் கொண்டு பிற்காலத்தில் மாறி இருக்கலாம். மிருகங்களின் பெயரைக் கொண்ட குலங்களும் உண்டு.(இதை நாம் பின்னர் விரிவாக பார்க்கலாம்)
நாம் பார்க்கும் இந்த பொதுவுடமை தாய் வழி சமுதாயத்தில் உரிமைக்கும் கடமைக்கும் வித்தியாசம் இல்லை. “நாம்” என்ற வார்த்தையே முதலில் தோன்றியதாக நூலாசிரியர் இங்கு குறிப்பிடுகிறார். “நான்”, “எனது”, “என்னுடைய” என்பது தனி உடமை சமுதாயத்தின் பிரதிபலிப்பு. பிற குழுக்களுடன் எந்தக் கொள்வினை கொடுப்பினையும் இல்லாத தனிமையாக இயங்கும் குடும்பங்களாகவே இவை இருந்தன. மொழியில் அதிகமாக வினைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன. உண்மை, பொய், துரோகம் ஆசை இவைகளைப் பற்றி தெரிய வாய்ப்புகள் ஏதுமில்லை.
பெரிதாக ஏதும் கடவுளர்கள் பூசனங்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் காட்டு விலங்குகளின் மீது பயம், இருட்டு, மரணம், மற்றும் பருவநிலை ஆகியவை குடும்ப எண்ணிக்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதால் கடவுள் எண்ணமோ, இயற்கை வழிபாடோ இருந்திருக்கலாம். பனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் நெருப்பை முதலாக கொண்ட கடவுள் நம்பிக்கை என்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம். நெருப்பு பனிக்காலத்தில் உடலுக்கு வெப்பம் தருவதோடு, இன்றும் காட்டில் விடப்பட்டவர்கள் தனிக்காட்டில் இரவை நெருப்பின் ஆதரவோடு கழிப்பதை நிதர்சனமாக காணலாம். அந்த நெருப்பில், தான் உண்ணும் மாமிச வகைகளை மற்றும் மது வகைகளை கொடுத்து பின் தானும் உண்பது இயல்பான ஒன்றாகவே தோன்றுகிறது. இந்த சமுதாயத்தின் ஒரே நோக்கம் வாழ்க்கை போராட்டத்தில் எப்படியாவது உயர் பிழைப்பது மட்டும்தான். அதற்கு மிக முக்கியமானது வேட்டையாடுதல், மற்றும் மக்கள் உற்பத்தி ஆதலால் இது தாய் வழி சமுதாயமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மூப்பும் இறப்பும் இவர்களை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து இருக்கலாம் ஆனால் அதற்கு காரணம் தேட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட இனங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அதன் காலம் மற்றும் இடம் ஆகிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் நம்பிக்கை அல்லது கடவுளர்களை கொண்டிருக்கும்.கோடை காலத்தில் இவர்களுக்கு நெருப்பின் அவசியத்தை விட நீர் அவசியம். அதனால் வருண தேவனை வேண்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கலாம்.
கொற்றவை (கொல்+தவ்வை)வழிபாடு என்பது குறிஞ்சி நிலத்தின் வழிபாட்டு முறையை நமது இலக்கியங்களில் காணலாம். தொல்காப்பியத்தில் குறிஞ்சி கடவுள் சேயோன் என்றாலும், மலைப்பிரதேசங்களில் கொற்றவை வழிபாடு என்பது நாம் இன்றும் காண்கின்ற ஒரு வழிபாட்டு முறையாகும். மேலும் தொல்காப்பியம் ஏற்பட்டது தாய் வழி சமுதாயத்திற்கு பிற்பகுதியில் என்றே கருத வேண்டும். கடவுளர் வழிபாடு என்பதும் இயற்கை வழிபாட்டுக்கு பிற்பகுதியில் ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். குறிஞ்சித் திணையான இக்காலத்தில் குடும்பத்தின் வளர்ச்சி காரணமாகவும், உணவு பற்றாக்குறை காரணமாகும் இவர்கள் எல்லை விரிவாக்கம் என்பது பல மாற்றங்களை இவர்களுக்குள் தந்தது. மேலும் இவர்களை முல்லைப் பகுதிக்கு வருவதற்கான காரணமாகவும் அமைந்தது. காடு என்பது ஒரு இனத்திற்கு மேலும் பல சோதனைகளையும் படிப்பினைகளையும் கொடுத்திருக்கக்கூடும். மலை குகைகளை விட காடுகளில் வசிப்பது என்பது பாதுகாப்பு குறைவானதே. இதற்காக இவர்கள் குடில் மற்றும் அறன் அமைக்க தேவை ஏற்பட்டிருக்கலாம். முதல் முறையாக இவர்கள் தன் ஆயுதத்தை வேட்டையாடுதல் தவிர்த்து மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தி இருக்கலாம். கோடை மற்றும் பனிக்காலத்தை தாண்டி காடுகளில் எல்லா பருவ நிலைகளும் தரும் சோதனைகளை எதிர்க்க அவர்கள் போராட வேண்டியிருந்தது என்றால் பருவநிலை, வானியல், திசைகள் குறித்து அறிவு பெற்று இருக்கலாம். இதைப் பற்றியும் இனக்குழுவின் பரிணாமத்தை பற்றியும் விரிவாக வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
குறிப்பு. மனித சமுதாயம், வால்கா முதல் கங்கை வரை போன்ற நூல்களின் உதவியோடு இந்த கட்டுரையை எழுதப்பட்டது. எங்கெல்ஸின் குடும்பம் அரசு மற்றும் தனிச்சொத்தின் தோற்றம் என்ற புத்தகத்தில் உள்ள முக்கியமான தரவுகள் மற்றொரு விரிவான கட்டுரையில் விவரிக்கப்படும்.
இங்ஙனம்
ஜனா
https://micro-narration.blogspot.com/