தொடரும் தொடரடைவுகளின் தொடக்கம்.

12 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jun 14, 2026, 3:14:46 PM (yesterday) Jun 14
to மின்தமிழ்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிதப்பேராசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றி 2001 மே 31-ஆம் நாள் ஓய்வுபெற்ற பின்னர், ஜூன் 1 முதல் வீட்டில் அடைக்கோழியாய் வெற்றுப்பானையில் அடைகாத்துக்கொண்டிருக்க விருப்பமில்லை. என் பணிக்காலத்துக் கடைசி சில ஆண்டுகளில் M.Sc கணித மாணவருக்குக் கணினியின் C – மொழியைக் கற்பித்துவந்தேன். எனவே, C – மொழியில் ஒரு புத்தகம் எழுத முனைந்தேன். எனது அனுபவங்களையெல்லாம் கொட்டி, ஒரு புதிய முறையில் அப்புத்தகத்தை எழுதிமுடித்தேன். சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டாளரை அணுகியபோது, ஒரு கணிதப் பேராசிரியர் எழுதிய கணினிப் புத்தகத்தை வெளியிடத் தயங்கினார்கள். பின்னர் அதனை சிலரிடம் மதிப்பீட்டுக்கு அனுப்பி, அவர்கள் எழுதிய நன் மதிப்புரையினால், அந்தப் புத்தகம் வெளிவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்களே நான் மேலும் சில புத்தகங்கள் எழுதவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். எனவே, அடுத்து Data Structures, Programming in C++ ஆகிய இரண்டு நூல்களையும் எழுதினேன். அவற்றையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

ஒருநாள், ஒரு பிரபலமான புத்தகக்கடைக்கு என் பேத்தியுடன் போகநேர்ந்தது. என் பேத்தி கதைப் புத்தகப் பிரிவில் தேடிக்கொண்டிருந்தபோது, நான் கணினிப் புத்தகப் பிரிவில் நுழைந்தேன். அங்கே C – மொழி புத்தகப் பிரிவில் பார்த்தபோது, அங்கே என்னுடைய புத்தகமும் இருந்தது. பார்த்து அகம் மிக மகிழ்ந்தேன். ஆனால், உடனே ஒரு சோகமும் என்னைப் பற்றிக்கொண்ட்து. ஏறக்குறைய 20 புத்தகங்களுக்கிடையில் என்னுடைய புத்தகமும் இருந்தது.

“பத்தோடு பதினொண்ணு, அத்தோட இது ஒண்ணு”

இல்லை, அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய பணி தனித்துவமாக (UNIQUE) இருக்கவேண்டும். இதுவரை யாரும் செய்யாததாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு, தொல்காப்பியத்திலிருந்து, அன்றைய நாளிதழ்கள் வரையில் உள்ள எழுத்துத்தமிழின் (Written Tamil) மொழியியல் கூறுகளைக் கணினி மூலம் புள்ளியியல் முறையில் (STATISTICS) ஆய்வுசெய்வதையே தலைப்பாகக் கொண்டேன். அந்தத் தரவுகளும், அவற்றுக்குரிய பல்வேறு கணினி நிரல்களும் என்னிடமிருந்தன. அவற்றைக்கொண்டு, சங்க இலக்கியமான பத்துப்பாட்டு என்ற பகுதியின் பத்துப்பாடல்களிலும் உள்ள சொற்களைக் கணினி மூலம் ஆய்வுசெய்ய முடிவுசெய்தேன்.

அப்பொழுது, அப்பாடல்களிலுள்ள சொற்களுக்குரிய பொருள்களைத் தெரிந்துகொள்ளும் அவசியம் நேர்ந்தது. சில சொற்களுக்கு உரைகளிலும் முழுப்பொருள் கிடைக்கவில்லை. எனவே அவை நூலில் பயின்றுவரும் இடங்களைக் கண்டு, அதன் மூலம் அவற்றின் பொருளை முழுதும் தெரிந்துகொள்ள எண்ணினேன். எனவே கொடுக்கப்பட்ட ஒரு சொல் பத்துப்பாட்டு என்னும் நூலில் பயின்றுவரும் இடங்களைக் கண்டறியும் ஒரு கணினிநிரலை எழுதினேன். என்னுடைய தொடரடைவுப் பணியின் தொடக்கம் இதுதான்.

ஆனால், ஒவ்வொருமுறையும், கணினியை இயக்கி, அந்த நிரலை ஓட்டிப் பொருள்காணுவது சிரமமாக இருந்தது. எனவே, பத்துப்பாட்டு நூல்களில் வரும் எல்லாச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்து, அவை ஒவ்வொன்றும் அந்நூலில் பயின்றுவரும் இடங்களை எல்லாம் காணும் இன்னொரு கணினிநிரலை எழுதி, அதன் மூலம் பத்துப்பாட்டு நூல்களுக்குரிய தொடரைவை உருவாக்கினேன். , அதனை என் அச்சுப்பொறியில் அச்சிட்டு, அதை ஒரு புத்தகமாக்கி வைத்துக்கொண்டேன்.

தற்செயலாக, ஒரு கருத்தரங்கில் மொழியியல் அறிஞர் ப.ரா.சுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. கையோடு நான் எடுத்துச் சென்றிருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்து அவர் மிகவும் வியந்தார். “ஐயா, இதற்குத்தானே தமிழுலகம் ஏங்கிக்கொண்டிருக்கிறது, இதை எங்கிருந்து பெற்றீர்கள்” என்றார். “நான் உருவாக்கியது” என்றேன். மிகவும் பாராட்டிய அவர், எட்டுத்தொகைக்கும் இவ்வாறு செய்யமுடியுமா. இதுவரை யாரும் அதனைச் செய்யவில்லை” என்றார். அப்பொழுதுதான் நான் முன்பு புத்தகக் கடையில் எண்ணியது நினைவுக்கு வந்தது.

என்னுடைய பணி தனித்துவமாக (UNIQUE) இருக்கவேண்டும். இதுவரை யாரும் செய்யாததாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?

விடை கிடைத்துவிட்டது.

மளமளவென்று பணியைத் தொடங்கி மூன்றே மாதங்களில் சங்க இலக்கியம் முழுமைக்குமான தொடரடைவினை உருவாக்கி,

www.sangamconcordance.in

என்ற பெயரில் இணையதளத்தில் வெளியிட்டேன்.

(இதற்கு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவை பற்றி பின்னர் எழுதுகிறேன்).

(இப்போது அதன் பெயர் https:\\tamilconcordance.in)

நான் இந்தத் தொடரடைவுக்கான இணையதளத்தை உருவாக்கி, மின்தமிழ் என்ற இணைய இதழ் வழியாக உலகுக்குத் தெரிவித்த நாள்

14-6-2014.

ஆம், நேற்றோடு சரியாக, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இன்னும் இந்தப் பணி தொடர்கிறது.

என் இறுதிமூச்சுவரை என் கணினி இயங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

             The woods are lovely, dark and deep,   

             But I have promises to keep,   

             And miles to go before I sleep,   

             And miles to go before I sleep.

             -ROBERT FROST


ப.பாண்டியராஜா

  

 

தேமொழி

unread,
Jun 14, 2026, 3:29:39 PM (24 hours ago) Jun 14
to மின்தமிழ்
மிக்க மகிழ்ச்சி ஐயா, பொழுதைப் பயனுள்ள முறையில் கழிப்பது குறித்து உங்களிடம் கற்றுக் கொள்கிறோம், நன்றி வாழ்த்துகள், தொடர்க உங்களின் தமிழ்ப்பணி 
Reply all
Reply to author
Forward
0 new messages