தெய்வீகக் களவியலை அறிமுகம் செய்த இறையனார் அகப்பொருள் — முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர், தொல்காப்பியத்தைப் படைத்து சொல்லையும், பொருளையும் எழுத்தையும் மட்டும் இலக்கணத்துக்கு உட்படுத்தி சொல்லிச் செல்லாமல் மனித வாழ்வியலில் ஒழுக்கத்தின் அடிப்படைகளையும் திணை சார்ந்து களவியலிலும் கற்பியலிலும் விவரித்து இருக்கிறார் தொல்காப்பியர். பழங்காலத் தமிழில் இலக்கியப் பொருள் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவற்றின் தன்மைகளை விளக்குவது தொல்காப்பியரின் பொருளிலக்கணம். தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றின. அகப்பொருள் இலக்கணம் மனிதனின் அகவாழ்வான , காதல் உணர்வை மையமாகக் கொண்டு அமைக்கப்படவை.
அகத்திணை இயல்:
தொல்காப்பியர் காட்டும் அகத்திணை இயல்:
1. குறிஞ்சி, 2. முல்லை, 3. மருதம், 4. நெய்தல், 5. பாலை, 6. கைக்கிளை, 7. பெருந்திணை ஆகிய ஏழு பிரிவுகளாகும்.
தொல்காப்பியத்தைப் பின் பற்றி எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை, தொல்காப்பியம் கூறிய ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்ற கருத்தைக் கூறாது,
‘அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவ(து)
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்
(இறை.களவு 1:1)
அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது என்கிறது.
அன்பின் ஐந்திணை என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும்
கண்டு, தமக்குள்ளே காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என
‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே,
(தொல்.பொ.அகத்.14)
என தொல்காப்பியம் கூறுவதைப் பின் பற்றி ,
புணர்தல் என்பது குறிஞ்சித்திணைக்கும்,
பிரிதல் என்பது பாலைத் திணைக்கும்,
இருத்தல் என்பது முல்லைத் திணைக்கும்,
இரங்கல் என்பது நெய்தல் திணைக்கும்,
ஊடல் என்பது மருதத்திணைக்கும்
உரியதாகின்றன என வகைப்படுத்தப் படுகின்றன,
கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகள் ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் வயதில் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.
ஐந்திணைகள்:
ஐந்திணைகளுக்கும் முதல், கரு, உரி என முப்பொருள் பாகுபாடு கூறப்பட்டுள்ளது. முதன்மையும் அடிப்படையுமான பொருள் முதற்பொருளில் நிலமும், பொழுதும் அடங்கும். ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து - அங்கு விளங்கும், வாழும், திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களென, தெய்வம், உணவு, விலங்கு, பறவை, பறை, செய்தி, தொழில் , பண் என்பவற்றை அடக்கும். ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’ உரிப்பொருள் ஆகிறது. உரிப்பொருள் இன்றி பாடற் பொருண்மை அமையாது. ஐந்திணை இலக்கியத்தின் அடிக்கருத்து உரிப்பொருள் ஒழுக்கம் ஆகும். ஐவகை உரிப்பொருட்களும், , அவை , தொடர்பான நிகழ்வுகளும் பாடல்களின் அடிக்கருத்தாக அமைகின்றன.
பின் நாளில் தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்திகளைச் சுருக்கியோ, விரித்தோ, சற்றே மாற்றியோ கூறுவதாக பல புதிய இலக்கண நூல்கள் உருவாகின. அவற்றுள், இறையனார் எழுதிய இறையனார் அகப்பொருள் மற்றும் நாற்கவிராச நம்பி எழுதிய நம்பியகப்பொருள் ஆகிய இரண்டும் முக்கியமானவையாகும்.
நூலின் காலம்:
இறையனார் களவியல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் , கி.பி.ஏழாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது என இதன் காலம் குறித்த கருத்து நிலவுகின்றது. இந்நூல் எழுதப்பெற்ற பொழுது சைவ பெருமக்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருமூலர், காரைக்காலம்மையார் மற்றும் , வைணவ ஆழ்வார்கள் , முதலாழ்வார் மூவர், திருமிசையாழ்வார் ஆகியோரும் சமகாலத்தைய படைப்பாளிகளாக இருந்துள்ளனர். சங்கப்பாடல்கள் மனிதரின் அக இலக்கிய மரபைக் பேசும் இலக்கியங்களாக அறியப்பட்ட போது , இறைவனின் பேரின்பக் காதலை பேசும் புதிய அக இலக்கிய மரபு , தோற்றுவிக்கப்பட்டு தெய்வீகக் களவியலுக்கு ஆதார நூல்களாக அமைந்தன . இது புதிய அகத்துறை, கைக்கிளைக் காதலாக உருவானது .
‘இப்பின்னணியிலேதான் இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதிய நக்கீரரும் சைவ அக இலக்கிய மரபை உட்புகுத்தி உரை தந்துள்ளார்.’ என செ.வை.சண்முகம் குறிப்படுகின்றார். இந்த நூலை இயற்றியவர் , இறையனார் - ஆலவாய்க் கடவுளாகிய மதுரை சோமசுந்தரக் கடவுள் என்று கூறப்படுகின்றது. இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத சூழ் நிலையில் இறையனார் இயற்றினார் என்று ஒரு சாரார் கூற்றாகும்.
நூலில் வரும் முதற் சூத்திர உரையில்
‘மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு
நக்கீரனாரால் உரை கண்டு,
குமார சுவாமியாற் கேட்கப்பட்டது என்க’ என்று உள்ளது.
அது போலவே இது எழுதப்பட்ட காலம் குறித்தும் கருத்து வேறு பாடு காணப்படுகின்றது . நக்கீரரால் உரையெழுதப் பெற்றதோ என, சந்தேகமும் இருக்கின்றது. ஏனெனில் நக்கீரர் காலம் கடைச்சங்க காலம் பிற்காலத்தில் தான் கோவைகள் உருவாகின . தவிர கோவைகள் யாவும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தன. தொல்காப்பியர் காலத்திலோ அதற்குப் பிற்பட்ட காலத்திலோ கட்டளைக் கலித்துறை இல்லை . தொல்காப்பியச் செய்யுளியலில் கலித்துறைக்கு விதியும் அமைக்கப் படவில்லை. ஆனால் இறையானர் அகப்பொருளில் கட்டளைக் கலித்துறை மற்றும் கோவை வகையறா பாடல்கள் உதாரணம் காட்டப் பெற்றுள்ளன.
நூலுக்கு உரை:
அந்நூலின் உரைப்பகுதியில், பல ஆண்டுகள் , பத்து தலைமுறைகளாக வாய்மொழியே உரைக்கப்பட்டு செவி வழியாகக் கேட்டு அதன் பின் ஏட்டுச் சுவடியில், எழுத்தில் நிலைபெற்றது என்ற செய்தியை பாயிரத்தின் முகப்புரை முன்வைக்கிறது .
உரையாசிரியர் நக்கீரர்,
"ஆயிரமுகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே"
என்று சான்று காட்டி, பொதுப்பாயிரத்தையும், சிறப்புப்பாயிரத்தையும் விளக்கி நூல் தோன்றிய வரலாற்றினையும் விளக்கியுள்ளார்.நக்கீரனார் உரை தனிச்செய்யுள்கள் ஏதும் இடம்பெறவில்லை . நூலின் முதற்சூத்திரத்திற்குரிய விளக்கத்துடன் பாயிரத்திற்கான விளக்கமும் அளிக்கப்பெற்றுள்ளன.
“உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” என்ற தொடர், முதல் உரையை நக்கீரனார் எழுதி அதை முருகன் கேட்டு அதன் தரத்தை உறுதி செய்ததாகவும் அறிய முடிக்கின்றது .
உரைகளின் காலமும் உரையாசிரியரும்:
• கி.பி .8 ஆம் நூற்றாண்டின் இடைப் பட்ட பகுதி - கி.வெள்ளைவாரனார்
• முதல் உரை கி.பி.எட்டாம் நூற்றாண்டின் பின் ச.வே.சுப்ரமணியன்
• கி.பி. 7 ஆம் 8 ஆம் நூற்றாண்டு - கா.சிவத்தம்பி ,
• கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி .9 ஆம் நூற்றாண்டு - செ.வை.சண்முகனார்
• கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் - அ.பாண்டுரங்கன்
• 8 ஆம் நூற்றாண்டு மயிலை . சீனிவேங்கடசாமி
நக்கீரனாரின் - உரைத் தன்மை:
• நக்கீரர் பின் வரும் பல உத்திகளைக் பயன் படுத்தி தான் உரையினைப் படைத்துள்ளார். கவிதைப் பண்பு கொண்ட உரைநடை எளிமையான உரைநடை என பலவாறு
• வினாவிடை முறையில் அமைந்த உரைநடை
• பகுத்து விளக்குதல் - பகுத்து விளக்குதல் என்பது சூத்திரத்திற்குரிய பொருளை பகுதி பகுதியாக வகுத்து விளக்கும் முறை.
விரித்துச் சுட்டுதல் என்பது அவர் பகுத்துக் கொண்ட விடயங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்வதாகும்
பகுதிச்சூத்திர விளக்கம் அளித்தல் என்பது எழுதி முடித்த பின் அவற்றின் பகுதிகளுக்கு விளக்குவதாகும்
இலக்கணக் குறிப்புத் தருதல் என்பது அங்கங்கு மூலசூத்திரத்தின் சொற்களுக்கு இலக்கண குறிப்புகளை வழங்குவதாகும்
மேற்கோள் சுட்டிப் பொருள் விளக்கம் தருதல் என்பது பல மேற்கோள்களை தொல்காப்பியத்தில் இருந்து எடுத்து விளக்குவதாகும்
சான்றுகாட்டிப் பொருள் விளக்கம் தருதல் என்பது பல சான்று பாடல்களை பிற இலக்கியங்களில் இருந்து எடுத்து கையாளுவதாக அமையும் .
வினா - விடை நோக்கில் உரை எழுதுதல் என்பது கேள்வி பதில் நோக்கில் வாசகருக்கு புரியும் விதத்தில் எழுதுவதாகும்
உவமைசுட்டிப் பொருள் விளக்குதல் பொருத்தமான உவமைகளை மேற்கோள் காட்டி புரியும் விதத்தில் விளக்குவதாகும்.
இதன் பொருள் விளக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு பொருத்தமான விளக்கத்தாய் அதனை பயன் படுத்திய நோக்கம் சார்ந்து விளக்குவதாகும்.
நூல் உள்ளடக்கம்:
நூலில் முச்சங்க வரலாறு , நூல்தோற்ற வரலாறு , உரைத்தோற்ற வரலாறு , நூற் பெயர்த்தோற்ற வரலாறு ஆகியன இடம்பெற்றுள்ளன. .
ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, அங்குள்ள விலங்கு, மரம், பறவை, பறை, அவர்களது தொழில், யாழ், தலைமகனது பெயர், தலைமகளது பெயர், நீர்நிலைகள், ஊர், பூ, மக்கள் பெயர் என்று ஆறு கூடுதலாக எழுதி கருப்பொருள் பதினான்கு என்று வரையறுக்கிறார். இந்த விரிவான பட்டியல் சங்க இலக்கிய திணைப்பாடல் பகுப்புக்கு வழிவகுக்கின்றன
எண்வகை மணத்தின் விரிவான நிலையை நக்கீரர் கையாண்டுள்ளார் .அடுத்து தலைவன் தலைவியின் இடையே நடைபெறும் ஊடல்களைப் போக்கவும் இருவரையும் ஒன்றிணைத்து வைக்க பாங்கற் கூட்டம், உற்றது உரைத்தல், தலைவனை வியந்து கூறுதல் என்பவையும் இதில் அடங்கும். .மடல் திறம் கூறல், தோழியின் பண்புநலன்கள், அறத்தோடு நிற்றல், புணர்ச்சியில் களிறுதரும் புணர்ச்சி, புனல் தரும் புணர்ச்சி, களவின் வழியே கற்பு, இரவுக்குறிம், அல்லல்குறி, பகற்குறி, களவு வெளிப்படுதல், அலர் தூற்றல், ஊரார், போவோர், கண்டோர், வேலனை கேட்டல் போன்ற இன்னும் பல செய்திகள் களவியியலில் குறிப்பிட்டுள்ளன. கற்பியல் பிரிவைப்பற்றி விரிவாகப் பேசப்படுகிறது
பாங்கனின் செயல்பாடுகள் குறித்து , களவுக் காலத்தில் தலைவன், தலைவியைச் சந்திக்க பாங்கன் அல்லது தோழி உதவியை நாடவேண்டியிருக்கும். இதைத் தொல்காப்பியர் "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" என்று குறிப்பிட்டவர் அவை என்னவென்று விளக்கவில்லை தொல்காப்பியர் குறிப்பிடும் பாங்கன் நிமித்தத்திற்கு உற்றதுவினாதல், உற்றதுஉரைத்தல், கழறியுரைத்தல், கழற்றெதிர்மறை, கவன்றுரைத்தல், இயல்இடம் கேட்டல், இயல்இடம் கூறல் என்று பன்னிரண்டில் ஏழு நிகழ்வைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
பகற்குறி இரவுக்குறி இலக்கணமும் கூறிப்பட்டுள்ளன.
நக்கீரர் உரையில்,
”குறீயெனப் படுவ திரவினும் பகலுனு
மறியக் கிளந்த விடமென மொழிப” (இ.அகப்பொருள்-18)
களவுக்கு கால எல்லை குறித்து
"களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப" (இறையனார்-32)
என களவு (காதல்) நிகழ்வதாக இருந்தால் அதற்கு ஒரு கால அளவு என்பது தேவை. எதற்கும் ஒரு கால அளவு இருக்கவேண்டும். அவ்வாறு களவு வாழ்விற்கு எல்லையாக தொல்காப்பியர் கூறாத களவின் கால எல்லையை இறையனார் வகுத்துள்ளார்.
மூன்று சங்கங்களின் வரலாறு:
தமிழ் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு, பண்டைக் காலத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழைப் போற்றிய செய்தியைத் தெரிவிக்கின்றது.
• இந்த உரைதான் தமிழ்ச் சங்கம் மூன்றின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.
• தமிழ்ச் சங்கங்களின் அமைப்பு, செயல்பாடு ஆகியவை பற்றி விரிவான செய்திகளையும் குறிப்பிடுகின்றது
மேலும்- முதற் சங்கம்:
• குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரை
• சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர்
• மேலும் - புலவர்களின் எண்ணிக்கை 4449.
• தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது.
• காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் - பாதுகாத்து வந்தார்கள்.
• நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம்.
இடைச் சங்கம்:
• தென்மதுரை கடல்கோளுக்குள்ளான போது, பாண்டிய நாட்டுக்குத் தலைநகரமாகிய கபாடபுரம்.
• தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் போன்ற 59 பேர்
• இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700.
• வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் புரவலர்கள்.
• 3700 ஆண்டுகள் நடைபெற்றது.
• அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்கள் .
கடைச்சங்கம்:
• கபாடபுரத்தைக் கடல் கொண்ட பின்னர் வடமதுரையில் (மதுரை)
• புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர்.
• சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள்/ 449பேர் பாடினர்.
• நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.
• இலக்கண நூல் தொல்காப்பியம்.
• 1850 ஆண்டுகள்.
• நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன்.
• இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
மேற் குறிப்பிட்டபுலவர்களின் எண்ணிக்கையும், சங்கம் வளர்த்த ஆண்டும், முன்னிலை வகித்த மன்னர்களையும், முதன் முதலில் இறையனார் களவியல் உரையே குறிப்பிடுகிறது. தமிழில் ஐந்திணையின் வரலாறு, நூல்வரலாறு, முதல், கரு,உரிப்பொருள்களின் விளக்கம், எட்டுவகைத் திருமணம், நயப்பு, பிரிவச்சம், வன்புறை, அருமையறிதல் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
நூல் எழுதப்பட்ட சூழ்நிலை:
பாண்டிய நாடு பன்னிரெண்டு ஆண்டு மழையின்றி வறண்டு இருந்தது . இதனை ‘வற்கடம்’ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். அப்போதிருந்த பாண்டியனின் பெயர் தெரியவில்லை என்று ஒரு சாரார் குறிப்பிட்டாலும் ம் , உக்கிரப்பெருவழுதி என்பது ஒரு சாராரால் உறுதி செய்யபடுகின்றது. சங்கப்புலவர்களை அழைத்த, பாண்டியன் உங்களை என்னால் காப்பாற்ற முடியாது . எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுகிறான். பின்னொரு நாள் மழையால் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை திருப்பி அழைக்கிறான். திரும்பி வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். பொருள் இலக்கணம் அறிந்தவர் எவரும் இல்லை. பாண்டியன் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிடுகிறான் . இறைவன் இந்தக் கவலையைப் போக்க எண்ணி அறுபது நூற்பாக்களை பொருளதிகாரம் சார்ந்து மூன்று செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். தூய்மைப் பணியாளர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர்.
அதே சமயம், ஒரு சாபம் காரணமாக முருகக் கடவுள் உப்பூரிக்குடி கிழாருக்கு வாய் பேசா மகனாகப் பிறந்து ஐந்து வயதை எட்டினார். இறைவன் அந்த சிறுவனுக்கு களவியல் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் எந்த உரையை அவன் கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொலி எழுப்புகின்றானோ அதுவே சிறந்த உரை என்று அசரீரி எழுந்ததாகவும் நூல் எழுதப்பட்ட சூழ்நிலை குறித்த வரலாறு கூறுகிறது.
பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்த அவன், மதுரை மருதனிளநாகனார் உரையின் போது போது மட்டும் ஆங்காங்கே வியப்படைந்த அறிகுறி காட்டினானாம் வியப்படைந்த அறிகுறி காட்டினானாம். பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “ உரைத்த இடத்துப் பதந்தொறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரைபெற்றாம் இந்நூற்கு’ என்றார்.’ *
இச்செய்தியினை சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையிலும், ( 8:1-2)
கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இறையனார் பொருளுரை’
என்று உறுதி படுத்தப் படுகின்றது
எழுதப்பட்ட நோக்கம் என்ன?
ஒரு புதிய அகப்பொருள் நூலை எழுதிய நோக்கம் என்ன? இலக்கியக் கல்விக்கு இது மிக முக்கியம் என்று படைக்கப் பட்டதா என்று எழும் கேள்விக்கு ‘ ‘களவியல் நூலாசிரியர் சிவபெருமான் என்று கருதுவதால் இலக்கணத்துக்குரிய பொருள் தேர்வு என்ற அடிப்படையில் காமப்பொருள் பற்றி எழுதுவானேன் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு, களவு வாழ்க்கையின் முடிவு சமய வாழ்க்கை உடையது என்று சமாதானம் கூறியுள்ளார்’ சபாபதிநாவலர் (யாழ்ப்பாணம்) (1899) : திராவிடப் பிரகாசியவியல் என்ற நூலில்.
‘உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க’- என்று கல்லாடம் (கல்லாடம் 3.10) சொல்வதன் படி ‘இதன் நூற்பொருள் தேர்வு தன்னுடைய காலச் சூழலை விமர்சிப்பதாகவே அமைந்துள்ளது’ என செ வை சண் முகம் கூற்றாக்கும்.
இந்நூலின் உரை, "இனிப் பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும் என்பது... என்பயக்குமோ இது கற்க வெனின் வீடுபேறு (மோட்சம்) பயக்கும் என்பது"
"இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட் கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்’ உலக வாழ்க்கையை வலியுறுத்துவதற்காகக் களவியல் இயற்றப்பட்டது என்று கொள்ள வேண்டும் என்று உறுதி செய்கிறது .
நூலின் கட்டமைப்பு - விதிகள்:
இதில் கற்பிற்கு அடிப்படையான - களவுப் பிரிவில் 33 நூற்பாக்களும்
துறவின் வாழ்க்கைக்கு - அடிப்படையான - கற்பு பிரிவில் 25 நூற்பாக்களும்
பாயிரங்களும் சேர்ந்து மொத்தம் 60 நூற்பாக்களையுடையதாக அமைந்துள்ளது.
இவ்விதிகளுள்;
• ஓரடி விதிகள் பதினைந்து,
• ஈரடி விதிகள் இருபத்து ஆறு,
• மூவடி விதிகள் பன்னிரண்டு,
• நான்கடி விதிகள் நான்கு,
• ஆறடி, ஒன்பதடி, பத்தடி
விதிகள் முறையே ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.
தொல்காப்பியம் அகப்பொருளை விளக்க இருநூற்றுப் பன்னிரண்டு விதிகள் கொண்டாதறு, இறையனார் சுருக்கி 60 நூற்பாக்களையுடையதாக அமைக்கப்பட்டுள்ளன.
உரையின் சிறப்பு:
உரை குறித்து , 'தமிழ் உரைநடையின் ஆரம்ப காலத்தை - கவிதை நிலையிலிருந்து உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது‘’ என மு.வரதராசனின் கருத்து.
நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல் மரபும் ,இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத்துணர்வுகளையும், சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும் , பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் ,உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும் ,தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய வைக்கும் திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சிறந்த உரை நடை நூல் என்பது வெள்ளைவாரணனார் கருத்தாகும்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இறையனார் களவியல் நூலும் அதன் உரையும் முதன் முதலாக 1883 ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது . எத்தனை விமர்சனங்கள் எழுதியவர் , காலம் , உரையாசிரியர் குறித்து முன் வைக்கப்பட்டாலும் கூட அதன் உள்ளடக்கம் கருதி இன் நூலை நாம் ஒரு தமிழரின் வாழ்வியல் பெட்டக மாகவேக் கருத வேண்டும் .
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
— வழக்குரைஞர் - ஆஸ்திரேலியா
lawyer.c...@gmail.com