பெரியோரும் சிறியோரும் பண்புகளால் வேறுபடுவர் — தேமொழி

11 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 4, 2026, 3:50:38 PM (yesterday) Jul 4
to மின்தமிழ்
பெரியோரும் சிறியோரும் பண்புகளால் வேறுபடுவர்

— தேமொழி


இயற்கையாக நடைபெறும், இயல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வில் புலவர் தம் கற்பனையில் ஒரு கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி என்பதை அறிவோம்.  அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக,  "வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட" என்ற  சிலப்பதிகாரச் செய்யுள் அடியைப் பள்ளிநாட்களில் பாடத்தில் படித்தும் உள்ளோம். கண்ணகியும்  கோவலனும் மதுரை மாநகரில் நுழையும்பொழுது தொலைவில், பாண்டிய மன்னன் அரண்மனைக் கொடி  காற்றில் அசைவதைக் காண்கிறார்கள்.  காற்றில் கொடி அசைவது இயற்கை.  ஆனால், அது அவர்கள் படவிருக்கும் துன்பத்தை அறிந்து இங்கே வராதீர்கள் என்பது போல அசைந்தது என்று இளங்கோ குறிப்பிடுவார்.

இவ்வாறாக, பிறிது பொருளைத் தன்பொருளின் மேல் ஏற்றி உரைத்தலை;
      பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
      இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
      தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம் (தண்டி, நூ. 56)
பெயரும் பொருள், பெயராத பொருள் (அசையும் பொருள்,  அசையாத பொருள்) என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, புலவர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் (தன் + குறிப்பு + ஏற்றம் = தற்குறிப்பு ஏற்றம்) என்னும் அணியாகும் என்று தண்டியலங்காரம் நூற்பா குறிப்பிடுகிறது.

இவ்வாறான கற்பனையில் 'பெரியோர் செயல்', 'சிறியோர் செயல்' என்பதற்கு ஒரேவிதமான கற்பனையைத் திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல் ஒன்றும், சீவகசிந்தாமணியும் பயன் கொள்வதைக் காண முடிகிறது.

       பெரியார் பெருமை பெரிதே - இடர்க்காண்
       அரியார் எளியர் என்று, ஆற்றா, பரிவாய்,
       தலை அழுங்க, தண் தளவம் தாம் நகக் கண்டு, ஆற்றா,
       மலை அழுத, சால மருண்டு.
              (திணைமாலை நூற்றைம்பது—110)

பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்ற குறிப்பு கொண்டது இப்பாடல்.  தலைவன் இன்னமும் வரவில்லை என்ற துயரத்துடன் இருக்கும் தலைவி அது குறித்து தோழியிடம் கூறும் பாடலாக இப்பாடல் அமைகிறது.

சிறுமதி கொண்ட செம்முல்லைகள் என் துயர் கண்டு நகைக்க, பெருந்தன்மை கொண்ட மலைகளோ என் நிலை கண்டு அழுகின்றன தோழியே!  பெரியோர் என்பவரின் பெருந்தன்மைப் பண்பு என்பது என்றும் பெருமைக்குரியதே. துன்பம் வரும் சூழலில் இதைக் கண்கூடாக நாம் அறிந்து கொள்ள முடியும். நமக்கு அருமையான துணையாக இருந்தவர் வருத்தத்தை நீக்கும் வகையில் அருகில் இல்லையே என வருந்தி, மனம் ஆறாது, அன்புடன் தலைசாய்த்துக் கொள்ள வகையற்ற நிலையில் நான் இருப்பதைக் கண்டு, குளிர்ந்த செம்முல்லைச் செடிகளோ சிறுமைக் குணத்தால் சிரித்துக்கொண்டு பூக்கின்றன. ஆனால், அதனைப் பார்த்துப் பொறுக்கவியலாத பெருந்தன்மை கொண்ட மலைகளோ மழை நீரினைக் கண்ணீராக வழிய விட்டு மிகவும் அழுது மயங்குகின்றன என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

1.png
பூத்து நிற்கும் முல்லை மலர் தன் துயர் கண்டு சிரிப்பதாகக் கற்பித்து அதற்குச் சிறுமைக் குணம்  என்றும், மலையிலிருந்து விழும் அருவிநீரால் அம்மலை அவள் நிலைக்குக் கண்ணீர் சிந்தும் பெருந்தன்மை குணம் கொண்டதாகத் தலைவி கூறுகிறாள்.


இதே கற்பனையை, தற்குறிப்பேற்றத்தை திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணி பாடலும் சொல்கிறது. சிந்தாமணியின் பதுமையார் இலம்பகத்தில், சுதஞ்சணனிடம் இருந்து விடைபெற்று  சீவகன் நாடுகள் பலவற்றையும் காண விரும்பிச் செல்கிறான்.
  
      வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந்
      தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி
      நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக்
      கோளுழுவை யன்னாற்குக் குன்ற முந்நின் றழுதனவே.
             
      மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மை
            யில்லாச் சிறியார்போ
      னக்காங்கே யெயிறுடைந்த நறவ
            முல்லை நாள்வேங்கை
      தக்கார்போற் கைம்மறித்த காந்த
            ளந்தோ தகாதெனவே
      தொக்கார்போற் பன்மாவு மயிலுந்
            தோன்றித் துளங்கினவே.
                 [சீவக சிந்தாமணி, 5. பதுமையார் இலம்பகம்—1226, 1227]

புலி போன்ற வீரனான சீவகன் தன்னந்தனியே செல்கிறானே என்று மலை வருந்துகிறதாம்.  சீவகனாகிய போருக்குரிய ஏறு தனியே செல்வதை நினைத்து  நீண்ட அருவியாகிய கண்ணீரை விட்டுக் கதறி;  மேனி கருகி வருந்தி நீரைச் சொறிந்து மலைகளும் நின்றழுதன என்கிறார் புலவர்.
 
2.jpg
பெரியோருக்குக் கெடுதல் நேரும் பொழுது அவருடைய பெருமையை அறியாத, மதிக்காத கீழ்மக்கள் அவர்கள் நிலைகண்டு எள்ளி நகையாடுவது போல, வேங்கை மரத்தில் படர்ந்திருந்த முல்லைக் கொடியில் பூத்திருந்த தேன் நிறைந்த முல்லைகள் சீவகனின் நிலைகண்டு சிரித்துக் கொண்டிருந்தன.  அதைக் கண்டு  நன் மக்களைப் போலக் காந்தள் மலர்கள், ஐயோ இது தகாத செயல் என்று கைகவித்து விலக்கின. சுற்றத்தாரைப் போலே பலவகை விலங்குகளும் மயில்களும் சீவகனின் நிலை கண்டு நடுங்கின என்பது இப்பாடலின் பொருள்.

பெருந்தன்மை  கொண்டவர் பிறரின் துன்பம் கண்டு அழுவதற்கு இயற்கையாக மலையில் இருந்து விழும் அருவியையும்;  சிறுமைப் பண்பு கொண்டவர் பிறர் படும் துயர் கண்டும் சிரிப்பதற்கு  முல்லை பூத்துச் சிரிப்பதாகத் திணைமாலை நூற்றைம்பது நூலின் கணிமேதாவியாரும்,  சீவகசிந்தாமணியின் ஆசிரியர்  திருத்தக்கதேவரும் ஒரே போன்று ஒப்புமை காட்டி உள்ளார்கள். பெரியோரும் சிறியோரும் பண்புகளால் வேறுபடுவர்.

அணி இலக்கணச் சுவையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்தாக இப்பாடல்கள் கூறுவது கீழ்க்காணும் குறள் சொல்லும் கருத்தே.
      அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
      தந்நோய்போல் போற்றாக் கடை.   (குறள்  - 315)
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதுவது மேன்மக்களின் பண்பாகும்.



நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
ஜூலை 2026


Reply all
Reply to author
Forward
0 new messages