பின்னோக்கி ஓடும் நினைவுகள் – 25-05-2026
ஓடைப்பட்டியில் – என் சிறுவயதில் – நான் நாலாப்பு, அஞ்சாப்பு படித்த வேளைகளில். (1940 களின் முற்பகுதி)
விடுமுறைநாட்களில் காலையில் நன்றாகத் தூங்கலாம் என்று நினைத்துப் படுத்தால், காலையில் 5 மணிக்கெல்லாம் அம்மா என்னையும் அண்ணனையும் எழுப்பிவிடுவார். அரைத்தூக்கத்தில் இருக்கும் எங்களைத் தள்ளிக்கொண்டுபோய் ஒரு பானைமுன் உட்காரவைப்பார். அதில் நிறைய முதல்நாள் இரவில் ஊறப்போட்ட நெல் நீருடன் இருக்கும். அது அடுப்பில் ஏற்றப்பட்டிருக்கும். அதில் எரிப்பதற்காகப் பக்கத்தில் காய்ந்துபோன கடலைச் செடிகளும், மிளகாய்ச் செடிகளும் குவித்துவைக்கப்பட்டிருக்கும். அடுப்பு ஏற்கனவே பற்றவைக்கப்பட்டு தீ மளமளவென்று எரிந்துகொண்டிருக்கும். எங்களது வேலை – அந்தத் தீ அணைந்துபோகாமல் அவ்வப்போது அந்தக் குச்சிகளை நெருப்பில் போட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும். தூங்கிவிழுந்தால் நறுக்கென்று பின்மண்டையில் கொட்டு விழும். அவ்வப்போது அம்மாவோ, எங்களுடன் வசிக்கும் அத்தையோ வந்து மூடியைத் திறந்து நெல் வாய்விட்டுவிட்டதா என்று பார்த்துச் செல்வர். அது வெந்துவிட்டால் அந்த நெல்லைக் கொட்டிவிட்டு , வேறு ஊறிய நெல்லை நிரப்பிவைப்பர். ஒருவாறு இரண்டு+இரண்டு பானை நெல்லும் வெந்து முடிய பொழுதும் விடிந்துவிடும். அப்புறம் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பள்ளிக்கூட வெராந்தாவில் கொட்டி, காலால் பரப்பி காயவைக்கவேண்டும். பறவைகளை விரட்ட நாள்முழுதும் நானும் அண்ணனும் மாறி மாறி காவல் இருப்போம். நல்ல வெயிலடித்தால் ஒருநாளில் நன்றாகக் காய்ந்துவிடும். இருப்பினும் மீண்டும் அவற்றை நடை நடையாகச் சுமந்து வீட்டுத் திண்ணையில் நிழல் காய்ச்சலாகக் காயப்போடுவோம்.
மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை. அப்பா ஏற்கனவே யார்மூலமாவது பக்கத்து ஊரிலிருக்கும் தன் சின்னாத்தாளுக்குச் சொல்லிவிடுவார். அவர் தன் மகளுடன் விடிந்து சிறிது நேரத்தில் வந்துவிடுவார். இங்கு சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடங்குவார்கள்.
என்ன வேலை? நெல்லை அரிசியாக்கும் வேலைதான். ஏன்? ரைஸ் மில் இல்லையா என்று கேட்பீர்கள். சாமி, அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரமே இல்லை. விவசாயத்திற்கு, தோட்டத்தில் தண்ணீர் இறைக்கக்கூட கமலை மாடுகளை வைத்துத்தானே – நான் முன்னர் சொல்லியிருந்தேனே.
எங்கள் வீட்டில் சுற்றிலும் நான்கு பக்கமும் புழக்கம். நடுவில் பெரிய அகன்ற திறந்த வெளி. ’அகலுள்’ என்று இதைத்தான் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இது வீட்டு அகலுள். ஊருக்கும் அகலுள் உண்டு. அதைப் படிக்கும்போதெல்லாம் எங்கள் வீடும், இந்த ஊரும்தான் நினைவுக்கு வரும்.
இந்தத் திறந்தவெளியின் தெற்குப்பக்கத்தில், அறையை ஒட்டி, அப்பா பந்தல் போட்டிருப்பார். அந்தப் பந்தல் நிழலில் பாட்டியும், அத்தைமாரும் வேலையைத் தொடங்குவார்கள்.
ஒரு கல் உரல் – இரண்டடி உயரம் இருக்கும். அதன் மேல் பக்கம் இருக்கும் குழிவான பகுதியில் ஓரளவு நெல்லைக் கொட்டி, பாட்டியும், ஊர் அத்தையும் மாறிமாறி உலக்கைகளால் குத்துவார்கள்.
ஒரே சீரான வேகத்தில் அந்த உலக்கைகள் மாறி மாறி ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்ளாமல் மாற்றி மாற்றி அதிக விசையுடன் நெல் மீது ஓங்கி எறியப்படும். இதுதான் நெல்குத்துதல்.
அரிசி குத்தும் அக்கா மகளே
நீ கை புடிச்சி கை வெலக்கி
ஒலக்கையத்தான் கைய மாத்தி
குத்தும்போது வலிக்கவில்லையா
இதைக் கேட்டதில்லையா? இது ஓர் ஆள் நெல்குத்துவது. இரண்டு கைகளாலும் சேர்த்துப் பிடித்துக் குத்தமாட்டார்கள். வலதுகையால் மட்டும் இறுகப் பிடித்து, முடிந்த அளவு கையை உயர்த்தி வேகமாகக் கீழிறக்கி நெல்மீது இறக்குவார்கள். அப்போது கைப்பிடியை விட்டுவிடுவார்கள். (கை பிடித்து கை விலக்கி) இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புரிகிற மாதிரி சொன்னால் – ஜாவலின் த்ரோ போல. ஆனால் முன்பக்கமாக அல்ல. கீழ்ப்பக்கமாக. குழிக்குள் இருக்கும் நெல்லின் மீது. வலதுகை விட்ட அடுத்த நொடியில், இடதுகையால் உலக்கையைப் பற்றி, மீண்டும் அதை மேலே தூக்குவார்கள். (உலக்கையைத்தான் கையை மாத்தி) ஒருவர் இப்படித் தூக்குகிற நொடியில் அடுத்தவர் தன் உலக்கையை நெல்லின் மீது இறக்குவார்.
இதற்கு எந்த அளவுக்குப் பயிற்சியும் திறமையும் வேண்டும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். அந்தக் காலத்துப் பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் நுணுக்கமான பட்டறிவு கொண்டவர்கள்.
சற்றுநேரம் கழித்து, நெல் நன்றாக உடைபட்டுவிட்டதா என்று பார்ப்பார்கள். உமியெல்லாம் உரிந்துவந்தவுடன், அதை வெளியிலெடுத்து விரித்திருக்கும் பாயில் கொட்டுவார்கள். அடுத்து வேறு கொஞ்சம் நெல்லைப்போடுக் குத்த ஆரம்பிப்பார்கள்.
எங்கள் அத்தை கீழே அமர்ந்து காலை நீட்டிக்கொண்டு, குத்திப்போட்டதைக் மகொஞ்சம் கொஞ்சமாகச் சுளகில் எடுத்துப் புடைக்க ஆரம்பிப்பார்கள். இந்தவேலை பலமணிநேரம் தொடரும். முழு நெல்லும் குத்தித்தீர்ந்தவுடன், பாட்டியும் , அந்த அத்தையும் ஆளுக்கொரு சுளகை எடுத்துக்கொண்டு குத்திப்போட்தைப் புடைக்க ஆரம்பிப்பார்கள்.
நெல்லை அரிசியாக்கும் பணியில் முதல் பணி – குத்துதல்.
அடுத்த பணி – புடைத்தல்.
குத்திப்போட்டதைச் சுளகில் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப்போட்டு, சுளகின் பக்கங்களை இருகைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு சுளகை மேலும் கீழும் ஆட்டுவார்கள். அப்போது குத்திப்போட்டது மேலே எழும்பிக் கீழே விழும். கீழே விழும்போது கனமான அரிசி சுளகின் நடுப்பகுதியில் விழும். இலேசான தவிடும் உமியும் சுளகுக்கு முன்புறம் தனியாக ஒதுங்கும். இரண்டு மூன்றுதரம் தூக்கிப்போட்ட பின்னர், நிறுத்தி, முன்பக்கம் உள்ள உமியையும் தவிடையும் தனியே கொட்டிவிட்டு, அரிசியைத் தனியாகச் சேர்த்துவைப்பார்கள்.
உமி என்பது நெல்லின் மேல்தோல். இது ஓடு ஓடாக இருக்கும். தவிடு என்பது மேல்தோலையும் அரிசியையும் இணைக்கும் பொருள். இது தூள் தூளாக இருக்கும். உமி எரிபொருளாகப் பயன்படும். எருத்தட்டும்போதும் பயன்படும். தவிடு மாட்டுக்கு நல்ல உணவு. மாடு குடிக்கும் நீருடன் கலந்து கொடுப்பார்கள்.
நெல்குத்துதல் , குத்தியெடுத்ததைப் சுளகினால் புடைத்தல் ஆகியவற்றுக்குப் பின்,
அடுத்த பணி – நேம்புதல்.
புடைத்தெடுத்த அரிசியிலிருந்து கொஞ்சத்தை உள்ளங்கை நிறைய இரண்டு மூன்று தரம் அள்ளி சுளகின் வலது ஓரத்தில் போடுவார்கள். அந்த ஓரத்தைச் சிறிது மேலே உயர்த்துவார்கள். அரிசி இருக்கும் வலப்பக்கம் சற்று உயர்ந்தும் சுளகின் இடப்பக்கம் தாழ்ந்தும், சுளகு சாய்வாக இருக்கும். இப்போது வலப்பக்கத்தை மெல்ல மெல்ல தூக்கித்தூக்கிப் போடுவார்கள். வலப்பக்கத்தில் இருக்கும் அரிசியில் இருக்கும் சிறிய கல், இதர வேண்டாத பொருள்கள் குதித்துக் குதித்து இடப்பக்கம் இறங்கிவிடும். அவற்றை எடுத்து வெளியில் போட்டு, அரிசியை வேறுபக்கம் சேமிப்பார்கள். அதாவது, நேம்புதல் என்பது, புடைத்தெடுத்த அரிசியில் இருக்கும் வேண்டாத பொருள்களை நீக்குதல். இது மிக மிக முக்கியமான பணி. இதைச் சரியாகச் செய்யாவிட்டால், சாப்பிடும்போது சோற்றுக்கிடையில் வேகாமல் கிடக்கும் கல் பற்களுக்கிடையே சிக்கி, மெல்லும்போது ‘கடுக்’ என்ற ஒலி எழுப்பும். இதைத் தவிர்க்க, அரிசியை வேகப்போடும் முன் ஒரு உருளைச் சட்டியில் போட்டு, நீர் ஊற்றி, அதைச் சாய்வாக முன்னும் பின்னும் ஆட்டி, கையை உள்ளே விட்டு சரங்கை சரங்கையாக அள்ளி உலையில் போடுவார்கள். இதற்கு அரிசி அரித்தல் என்று பெயர். சாப்பிடும்போது ‘கடுக்’ சத்தம் வந்தால், அப்பா கோபத்துடன், ”இன்னக்கி யாரு அரிசி அரிச்சது?” என்பார். காரணம் எங்கள் வீட்டில், அம்மா, அத்தை ஆகிய இருவரும் சேர்ந்து செய்வதுதான் சமையல்.
சரி, மீண்டும் சுளகுக் கதைக்கு வருவோம். சுளகினால் எல்லா அரிசியையும் நேம்பி முடித்த பிறகு, இன்னும் ஒரு பணி மீதம் இருக்கிறது.
அதுதான் கொழித்தல். இந்தச் சொல்லை நிறையப்பேர் கேட்டிருப்பீர்கள். இது நேம்புதல் போன்றது. சுளகில் வலது பக்கம் ரெண்டு மூன்று கை அரிசியை அள்ளிப்போட்டு, அந்தப் பக்கத்தைச் சிறிது மேலுயர்த்தி, இடப்பக்கத்தைக் கீழே சாய்த்து, வலப்பக்கத்தை மெல்ல மெல்ல மேலும் கீழும் தூக்கிப்போட்டால் அது நேம்புதல். வலப்பக்கத்தை மேலும் கீழும் போடாமல் இடப்பக்கமும் வலப்பக்கமுமாக ஆட்டவேண்டும். அவ்வாறு ஆட்டும்போது, வலப்பக்க அரிசி சிறிது சிறிதாக இடப்பக்கம் இறங்கி இடப்பக்கச் சுளகின் ஓரத்தை முட்டித்திரும்பும். இவ்வாறு இது பலமுறை முட்டி முட்டித் திரும்பும். அதாவது கடல்நீர் அலையலையாகக் கரையை முட்டி முட்டித் திரும்புவதுபோல. நீங்கள் கடற்கரையில் கடல் நீரைத் தொட்டவாறு நின்று, இப்போது கடலுக்குள் பார்க்காமல், இடப்பக்கம் திரும்பி, நெட்டுக்க இருக்கும் கரையைப் பாருங்கள். வலப்பக்கமிருந்து கடல்நீர் இடப்பக்கமாக வந்து கரையை மோதித் திரும்பி, மீண்டும் வந்து மோதித் திரும்பி ---- இதுதான் கொழித்தல்.
நெல்லைக் குத்தும்போது, உலக்கையை மெல்லப் போட்டால் பயன் இல்லை. நெல்லிலிருந்து உமி விலகாது. ஓங்கிப் போட்டால் உமி விலகும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் அரிசி உடைந்துவிடும். எனவே பக்குவமான அளவு விசையைப் பயன்படுத்தவேண்டும். ஆனால், குத்துபவர் எவ்வளவு அனுபவசாலியாக இருந்தாலும், சில அரிசி உடைந்துதான் போகும். அந்த உடைந்த அரிசிக்குக் குருணை என்று பெயர். கொழிப்பது என்பது இந்தக் குருணையை நீக்குவதற்காகத்தான். கொழிக்கும்போது, முழு அரிசி வலப்பக்கம் மேலே தங்கிவிடும். குருணை இடப்பக்கம் கீழே இறங்கும். அதிலும் இடப்பக்கம் சுளகின் ஓரத்தில் மிக நுண்ணிய குருணை ஒதுங்கும். இது மாவுக் குருணை. தனியே எடுத்து தவிட்டுடன் சேர்ப்பார்கள் – மாட்டுக்கு. அதற்குச் சற்று மேலே இருப்பதைத் தனியே எடுத்துக் கோழிக்குப் போடுவார்கள். நெல் குத்த ஆரம்பிக்கும்போதே, அவ்வப்போது வெளியே சிதறி விழும் நெல்மனிணிளைக் கொத்தித்தின்ன வீட்டுச் சேவல் ‘கொக் கொக்’ என்று கொண்டையைத் தூக்கிக்கொண்டு, கால்களை மெதுவாகத் தூக்கித்தூக்கி வைத்து, உரல் அருகே வரும். அந்தச் சத்தத்தைக் கேட்ட தாய்க்கோழியும் அங்கு வரும். தீனியைப் பார்த்தவுடன் தாய்க்கோழி, ’கெக், கெக், கெக்’ என்று ஒலியெழுப்பும். அங்கங்கே மேய்ந்துகொண்டிருந்த குஞ்சுகள் இதைக் கேட்டு குடுகுடுகுடுவென்று தம் குட்டிக்கால்களை விரைவாக மாற்றிப்போட்டு கிட்டே வரும். அத்தைமார் அவற்றை விரட்டுவார்கள். ஊஹும், அவை அவருக்குப் பயப்படமாட்டா. ‘பாண்டி, இந்தக் கோழியை விரட்டுப்பா” என்று அபயக் குரல் எழுப்புவார்கள். ஒரு குச்சியை எடுத்துப்போய் அவற்றை நான் விரட்டிவிடுவேன்.
கொழித்து எடுத்த குருணையைக் கோழிக்குப் போட, இப்போது அத்தை “bA, bA, bA” என்பார். அந்தக் கோழிகளும் வெட்கமில்லால் இப்போது ஓடிவந்து குருணையைக் கொத்தித்தின்னும். தாய்க்கோழி, ஒவ்வொரு குருணையாகக் கொத்தியெடுத்து, குஞ்சுக்கு அருகில் போட்டுக் காண்பிக்கும்.
’இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே’ – பட்டுக்கோட்டையாரின் இந்தப் பாடலைப் பின்னாளில் நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு இந்தக் காட்சிதான் நினைவுக்கு வரும்.
எங்கள் ஊருக்கு ஓடைப்பட்டி என்று பெயர் வந்ததற்குக் காரணமே அதன் ஓடைகள்தாம். அங்கு மூன்று ஓடைகள் தென்வடலாகப் பாய்ந்து செல்லும். கிழக்கே உள்ளது ஓடை என்று சொல்லமுடியாது. ஒருமாதிரி நெடிய பள்ளம். அதிகம் மணல் கிடையாது. நடுவிலும், மேற்கேயும் உள்ளவை நல்ல மணற்பாங்கானவை. நடுவில் இருப்பது சின்ன ஓடை. மேற்கில் உள்ளது பெரிய ஓடை. இரண்டுக்கும் நடுவே எங்கள் பள்ளி. ஓடை எப்போதும் வறண்டுகிடக்கும். சிறிய மழைக்கெல்லாம் நீர் வராது. அங்கங்கே இஞ்சிவிடும். ஊரின் கிழக்கே ரெண்டு மைல் தொலைவில் ஒரு நெடிய மலைத்தொடர் உண்டு. அது தெற்குப்பக்கம் நீண்டு கம்பம் பள்ளத்தாக்கில் சேரும். இந்த மலைத்தொடரில் பெய்யும் பெருமழை பெருக்கெடுக்கும்போது ஓடைகளில் வெள்ளம் வரும்.
சின்ன ஓடை பள்ளியை நெருங்கும் முன்னர் அதன் நட்ட நடுவில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும். புரண்டுவரும் வெள்ளம் அந்த மரத்தில் மோதி இரண்டாகப் பிளந்து செல்லும். அதில் வலப்பக்கப்பகுதி அங்கே இருக்கும் ஒரு குளத்தில் பாய்ந்து அதனை நிரப்பும். இந்தக் குளம் தரைமட்டத்தில் இருக்கும். கரைகள் கிடையாது.
பாறையை உடைத்து கல் ஆக்கி, கல்லை உடைத்து மணல் ஆக்கும் பெருவெள்ளம் இரண்டு பக்கங்களையும் மோதிக்கொண்டே வரும். எனவே, ஓடையின் நடுப்பகுதியில் பெருமணல் தங்க, ஓரங்களில் குறுமணலைக் கொழித்து ஒதுக்கும். ஆம், கொழித்து ஒதுக்கும். என் அத்தைமார், முழு அரிசியை சுளகின் நடுப்பகுதியில் தங்க வைத்து, குருணையைச் சுளகின் ஓரத்தில் கொழித்து ஒதுக்குவதைப் போல், வெள்ளத்தின் அலைகள் ஓடையின் ஓரத்தில் குறுமணலைக் கொழித்து ஒதுக்கும். அதுவரை அசிங்கப்பட்டுக்கிடந்த ஓடையின் ஓரங்கள் பளிச்சென்று சுத்தமாகி புத்தம்புதிய குறுமணலைக் கொண்டிருக்கும்.
அப்போதுதான் அவர் வருவார். ஒரு சிறிய பெட்டி நிறைய அந்தக் குறுமணலைச் சேகரிப்பார். கையில் ஒரு சல்லடை வைத்திருப்பார். அந்தக் குளத்து ஓரத்துக்குச் சென்று குத்தவைத்து அமர்வார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குறுமணலைச் சல்லடையில் போட்டு, குளத்து நீரை அதில் மொண்டு விட்டுச் சலிப்பார். சலிப்பது என்பது வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆட்டுவதுதான். அதுதானே கொழித்தலும். ஆம், இவர் அந்தக் குறுமணலைக் கொழித்தெடுப்பார். அவர் எங்கள் ஊர்ப் பொற்கொல்லர். சிறிய கம்மல், மூக்குத்தி போன்றவற்றைச் செய்து விற்பார். பழுதானவற்றைச் சரிசெய்து கொடுப்பார். ஒரு பெட்டி நிறைய குறுமணலை, கொஞ்சம் கொஞ்சமாகச் சலித்து (கொழித்து) , மாவாக இருப்பவை கரைந்து கீழே போக, சல்லடையில் மீந்துநிற்கும் மிக நுண்ணிய குறுமணலைத் தனியே சேகரிப்பார். நாங்கள் எட்டிப்பார்ப்போம். அந்த மிக நுண்ணிய குறுமணல் சில இடங்களில் மின்னும். ஆம், தங்கம்!! இரண்டு, மூன்று மணி நேரம் சலிப்படையாமல் சலித்துச் சலித்து, ஒரு அரைப்படி அளவுக்கு இந்த மிக நுண்ணிய குறுமணலைக் கொண்டுசெல்வார். நன்றாகக் காயவைத்து, உலையில் இட்டுச் சூடாக்கினால், அந்தத் தங்கத்துகள்கள் உருகி, ஒன்றாகி, ஒரு சிறிய குன்றிமணி அளவுக்குத் தங்கம் கிடைக்குமாம்.
பிற்காலத்தில் நான் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்போது, இத்தனை நிகழ்வுகளும் என் நினைவுக்கு வந்தன. பாடலின் இறுதிக் காட்சி அது. முருகனின் படைவீடான பழமுதிர்ச்சோலை இருக்கும் அழகர்மலையில் பெய்த பெருமழை வெள்ளமாகப் பெருக்கெடுத்து அருவியாக ஆர்ப்பரித்துச் செல்லும் அற்புதமான காட்சியைப் புலவர் நக்கீரர் மிக அழகாக விவரித்துச் செல்வார்.
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து,
ஆர முழுமுதல் உருட்டி, வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல 300
ஆசினி முது சுளை கலாவ, மீமிசை
நாக நறு மலர் உதிர, யூகமொடு
மா முக முசுக் கலை பனிப்பப், பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசிப் பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇத், தத்துற்று, 305
நன் பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத், தாழை
இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கிக்
கறிக் கொடிக் கரும் துணர் சாயப், பொறிப் புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇக் 310
கோழி வயப் பெடை இரியக், கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறியக், கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண்-நின்று 315
இழுமென இழிதரும் அருவி
இதன் முழுப் பொருளையும் காண, பாருங்கள் :
https://tamilconcordance.in/table-SANG-01-text.html
நான் உங்களைக் காண அழைப்பது, அடி 306.
நன் பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா –
அந்த அருவி, தன் இரு கரையோரங்களிலும் பொன்னைக் கொழித்துக்கொண்டே செல்கிறதாம்.
நான் ஓடைப்பட்டியில் பிறந்து வளர்ந்திருக்காவிட்டால் இதை மிகை என்று கூறி நம்பியிருக்கமாட்டேன்.
…. இன்னும் வரும்
ப.பாண்டியராஜா