தமிழகம் - நாட்டுப்புறக் கலைகள் நமது சீதனமே!

416 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 10, 2011, 4:13:29 PM8/10/11
to Min Thamizh
தமிழர் தம் வாழ்க்கையில் முக்கிய அங்கமான நாட்டுப்புறக் கலைகள் யாவும் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன.

  • நாட்டுப்புறப் பாடல்கள்
  • வில்லிசை
  • பொம்மலாட்டம்
  • தெருக்கூத்து
  • கரகாட்டம்
  • ஒயிலாட்டம்
  • கும்மியாட்டம்
போன்ற பல்வேறு கலைகள் இன்று அரிதாகிவிட்டன. 

வயல்வெளிகளில் நாற்று நடும்போதும், களையெடுக்கும்போதும் பாடப்பட்ட குளவைப் பாடல்கள், பயிருக்கு கமலையில் தண்ணீர் இறைக்கும்போது ஆண்கள் பாடும் பாடல்கள் இனிமையான ஏற்ற இறக்கங்களுடன் பல அர்த்தங்களைக் கொண்டதாக அமைந்திருந்தன.

இன்றைக்கு கொல்லங்குடி கருப்பாயி, பறவை முனியம்மா போன்றவர்கள்தான் இந்தப் பாடல்களைப் பாதுகாக்கும் எச்சங்களாக உள்ளனர். 

அதுபோல, "ரேக்ளா ரேஸ்" என்று சொல்லக்கூடிய மாட்டு வண்டிகளின் பந்தயம் சிறப்பாக இருக்கும்.

இன்றைக்கும்

- விளாத்திகுளம்
- ஒட்டப்பிடாரம்

பகுதிகளில் இப்பந்தயங்கள் நடக்கின்றன.

கொங்குச் சீமையில் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதுபோன்ற "ரேக்ளா ரேஸ்"கள் நடைபெறுகின்றன.

இந்தப் பந்தயத்தை

- சாமல்பட்டி திருமால்
- மிளகுநத்தம் ஜக்கன்னா
- பச்சைகுப்பம் கண்ணுசாமி

போன்றவர்கள் ஒருகாலத்தில் சிறப்பாக நடத்தினர்.

இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு

- பேரீச்சை
- எலுமிச்சை
- வெங்காயம்
- இஞ்சி
- கருப்பட்டி

ஆகியவற்றை வெந்நீரில் பிசைந்து கவளம் கவளமாக ஊட்டுவார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டைப் போன்று விளாத்திகுளம் அருகில் உள்ள தரைக்குடியில் "எருதுகட்டு" நடைபெறும். 

கிராமங்களில் இளவட்டக்கல் என்று ஒன்று உண்டு.

அது பூமிப் பந்து போன்று பெரிய கல்லாக இருக்கும்.

ஒரு கிராமத்துக்கு மருமகனாக வந்தவருக்கு விருந்து வைத்து வழியனுப்பும்போது, அவர் இந்த இளவட்டக் கல்லைத் தூக்கி, தனக்குப் பின்னால் போட்டால் அவருக்கு முறையான விருந்து படைக்கப்பட்டது என்று கருதப்பட்டது.

மேலும், இது மருமகனின் கெ
ரவமாகவும் பேணப்பட்டது. 

இவ்வாறான நாட்டுப்புறத் தரவுகள் கலைகளில் மட்டுமல்லாமல் சமூக அமைப்பிலும், மரபு ரீதியாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நாட்டுப்புறத் தரவுகளில் முக்கியமான அங்கம் நாட்டுப்புறக் கலைகளாகும். 

கிராமியக் கலைகளின் கொண்டாட்டங்கள் தை, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கொண்டாடப்படுவது உண்டு. தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கென தனித்தனிக் கலைகள் வளர்ந்தன. அதில் நாட்டுப்புறப் பாடல்களும் முக்கிய இடம்பிடித்தன. 

- தாலாட்டுப் பாடல்கள்
- அம்மானைப் பாடல்கள்
- மணமக்களை வாழ்த்தும் பாடல்கள்
- பொங்கல் வைக்கும்பொழுது பாடும் பாடல்கள்
- ஒப்பாரிப் பாடல்கள்

என வகைவகையாகப் பொருத்தமான பாடல்களை ஒவ்வொரு செயலுக்கும் நாட்டுப்புற மூதாட்டிகளும், பெண்களும் எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் முன்னோர்களிடமிருந்து பாடும் முறை இப்போது இல்லாமல் போய்விட்டது. 

சங்க காலத்திலேயே தோன்றியது தெருக் கூத்தாகும்.

கூத்தில் ஆட்டத்துக்கேற்பப் பாட்டு பாடினர். பாட்டு தொடர் பாட்டானது. அதன்பின் கதைப் பாட்டானது. கதைப் பாட்டு காட்சிப் பொருளாகி நாட்டியம், நாடகம் எனப் பிறந்தது. 

கூத்தும், கானமும் இணைந்ததுதான் தெருக்கூத்து.

நாட்டுப்புறப் பாடல்களும், தெருக்கூத்தும் தமிழ்நாட்டுக் கலைகளின் ஆதியும் அந்தமும் ஆகும். இதை தொகுசொல் கோடியர் (அகம் 111) என்று அகநானூறு கூறுகிறது.

"கூடிசேர், ஒன்றாயிரு" என்பதுவே தெருக்கூத்தின் இலக்கணமாகும். 

உள்நாடு என்ற ஒன்றுபட்ட வட, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தெருக்கூத்து கதைகள் பாரதக் கதைகளாக இருந்தன.

சில இடங்களில்
ராமாயணக் கதைகளும் நடத்தப்பட்டன. பல்லவர் காலத்திலேயே இந்தத் தெருக்கூத்துகள் காஞ்சி நகரில் சிறப்பாக நடந்தேறின. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை இம்மாதிரியான தெருக்கூத்துகளுக்கு மானியமாக வழங்கி வருகின்றனர். 

- தெற்கத்திக் கூத்து என்பது தென் ஆற்காடு, புதுவை போன்ற பகுதிகளில் ஆடப்படுவதாகும்.
- வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடப்படுவது வடக்கத்திக் கூத்தாகும்.

இந்தக் கூத்துகளில்

- மெட்டு வகை
- உடையலங்காரம்
- முடியலங்காரம்
- கூத்து கதை

ஆகியவைகளைக் கொண்டு தெற்கத்தி கூத்து, வடக்கத்தி கூத்து என வகைப்படுத்தப்பட்டது. 

தெருக்கூத்துக்கு, "கட்டைக் கூத்து"  ஹனா டி-பிரான் (Hanne de Bruin - http://www.indiaabroad-digital.com/indiaabroad/20110128?pg=42#pg42 ) என்ற ஹாலந்து ஆய்வாளர் பெயர் சூட்டினார்.

தெருக்கூத்து என்பது பொருத்தமான பதமில்லை. கட்டைக் கூத்து என்று அழைப்பதுதான் அதற்குச் சிறப்பு என்று இந்த ஆய்வாளர் கூறுகிறார்.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் நடைபெறும் தெருக்கூத்துகளை ஆய்வு செய்தவர் இவர். 

பாவைக் கூத்து என்பது

- மரப்பாவைக் கூத்து
- தோல் பாவைக் கூத்து

என வகைப்படுத்தப்பட்டது.

மரப்பாவைக் கூத்து வட மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்தது. மரத்தாலான பொம்மைகளைச் செய்து நடத்துவது மரப்பாவைக் கூத்தாகும்.

தோலில் படம் வரைந்து காட்டுவது தோல் பாவைக் கூத்தாகும்.

மரப்பாவைக் கூத்து தஞ்சை, மதுரை, சேலம் மாவட்டங்களில் அதிகம் உண்டு. 

சேலம் மாவட்டத்தில் குறிப்பாக
ராமாயணக் கூத்தாகவோ, சமூகக் கதைகளைக் கொண்ட கூத்தாகவோ இருந்தன.

சேலம் வட்டாரத்தில் உள்ள

- சீரகப்பாடி
- காரவள்ளி
- கரட்டூர்
- கவுண்டாபுரம்

போன்ற பகுதிகளில் மரப்பாவைக் கூத்துக் குழுக்கள் உள்ளன.

சீரகப்பாடியைச் சேர்ந்த செம்மலை என்பவர் இதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சேலம் மாவட்ட பாவைக் கூத்துக்கும், தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடத்தப்படும் பாவைக் கூத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் பாவைக் கூத்து, தெருக் கூத்து பாணியில் இருக்கும். 

குமரி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பாவைக் கூத்தை வித்தியாசமாக நடத்துவர்.

பாவைக் கூத்தை இயக்க நால்வர் தேவைப்படுவர். கூத்தின் இடையிடையே நகைச்சுவைகளும் புகுத்தப்பட்டிருக்கும்.

இக்கூத்துக்கு

- சுதிப் பெட்டி
- முகவீணை
- மிருதங்கம்
- ஜால்ரா

போன்றவை தேவை.

சின்ன படையாச்சி என்பவர் வட மாவட்டங்களில்

- நல்லதங்காள்
-
லவகுசா
- அரிச்சந்திரா
- மார்க்கண்டேயன்

கதைகளை நடத்தி வந்தார்.

இதுமட்டுமல்லாமல்

- விராட பருவம்
- பாஞ்சாலி சபதம்
- கர்ணன்
- பவளக்கொடி
- ஆரவள்ளி
- கண்ணன் பிறப்பு
- இரணியன் பிரகலாதன்
- கட்டபொம்மன் கதை

போன்ற கதைகள் இந்தப் பாவைக் கூத்தில் இடம்பெற்றன. 

ஒயிலாட்டம் தமிழர் கலைகளில் சிறப்பான இடம்பெற்ற ஒன்றாகும். ஒயிலாட்டத்துக்கு எட்டுப் பேர் இருந்தால் விறுவிறுப்பாக இருக்கும். முதல் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பவரே பாடுவார். பின் பாட்டை ஒருவர் பாடுவார். கச்சை கட்டிக்கொண்டு கைகளை பாவ்லா போட்டு ஆட்டம் தொடங்கும். இவ்வாட்டத்தை ஆண்களே அதிகமாக ஆடியுள்ளனர். அண்ணாமலை செட்டியாரின் காவடிச்சிந்து கவிதைக்கு ஏற்றவாறு இந்த ஆட்டம் இருக்கும்.

இத்தகைய ஆட்டம் குறிப்பாக

- விளாத்திகுளம்
- முத்தையாபுரம்
- வேலுடுபட்டி
- கோடாங்கிபட்டி
- தாராபுரம்

போன்ற கொங்கு நாட்டு வட்டாரத்தில் மதுரையை ஒட்டிய கிராமப்புறங்களில் சிறப்புற நடைபெற்று வந்தன.

ஒயிலாட்டத்துக்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே இப் பகுதிகளில் வாத்தியார்கள் இருந்தனர். 

"கணியான் கூத்து" எனும் கலையில் ஆட்டத்துக்கு ஏழு பேர் இடம்பெறுவர். இதில் தலைமையேற்பவர் ஒரு பாடகர். அவர் புலவர் அல்லது அன்னாவி என்று அழைக்கப்படுவார். பின் பாட்டுக்கு ஒருவர் ஜால்ரா, ஒருவர் ஆட்டக்காரர்கள் இருவரும் பெண் வேடமிட்டு ஆடுவர். கணியான் கூத்து தெய்வத்தின் எதிரிலும் ஆடுவது உண்டு. சுடலைமாடன் கோயில் கொடையில் இந்தக் கணியான் கூத்து இடம்பெறும். 

இதேபோன்று, "உடுக்கைக் கூத்து" என்பது ஒருவரே உடுக்கை அடித்துக்கொண்டு பாடுவதாகும், அல்லது ஓர் ஆணும் பெண்ணும் உடுக்கை அடித்துக்கொண்டு பாடுவது. திருச்சி, கரூர் மாவட்டங்களில் காத்தவராயன் கதையை உடுக்கை அடித்துப் பாடுவது உண்டு.

கணியான் கூத்து குறிப்பாக

- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- விருதுநகர்

மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெறுகின்றன.

இரவு மூன்று மணிவரை கூட இந்தக் கூத்து நடைபெறும். 

- வில்லிசை
- தாரை ஊதுதல்
- கோலாட்டம்
- பின்னல் கோலாட்டம்
- தப்பட்டை அடித்தல்
- நையாண்டி மேளம்
- கும்மி
- ஒயில் கும்மி
- பொய்க்கால் குதிரை என்ற புரவி ஆட்டம்
- மார்கழி மாதத்தில் நடத்தப்படும் அரையர் நடனம்
- புதுவையில் நடக்கும் பொடிக்கலி ஆட்டம்
- தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பாகவத மேளா, குரவைக் கூத்து
- மதுரை உருமி மேளம்
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் காலைக் கூத்து
- மயிலாட்டம்
- நொண்டிச் சிந்து
- மோடியாட்டம்
- சிலம்பம்

போன்றவை பழந்தமிழர்களின் கலைகளாகும். 

- குமரி மாவட்டத்தில் வேம்படி மாடன் கதை
- அகஸ்தீஸ்வரம் பகுதியில் நடக்கும் கூளம் கொண்டான் கதை
- மணக்குடியில் நடக்கும் வெங்கல்ராசன் கதை
- சேர்வைக்காரன் கதை
- வெள்ளைக்காரன் கதை
- வீராச்சியம்மாள் கதை

போன்றவை கொண்டாடப்பட்டன.

தென் தமிழகத்தில் கூத்துகள்

- முத்துப்பட்டன் கதை
- கட்டபொம்மன் கதை
- பேச்சியம்மன் கதை
- பூச்சியம்மன் கதை
- கான் சாகிப்
- பகவதியம்மன்

போன்ற கதைகளை ஒட்டிய நாட்டுப்புறப் பாடல்கள்,

- நந்துனிப் பாட்டு
- உரியடி ஒயில் கும்பம்
- நையாண்டி மேளம்
- பாஸ்கா
- களிறு பயிற்சி

போன்றவையும் மதுரை, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் வட்டாரங்களில்

- பேச்சியம்மன்
- பிரமலைக் கள்ளருடைய வரலாற்றுப் பாடல்கள்

போன்றவை பிரசித்தி பெற்றவை. 

இராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் மருது சகோதரர்கள், சேதுபதி புகழ்பாடும் நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும் கூத்துகளாக நடத்தப்படுவதுண்டு. செட்டிநாட்டில் சிலம்பு கண்ணகிக் கதை, நாட்டுப்புறக் குல தெய்வங்கள் குறித்து தரவுப் பாடல்கள் பாடப்பட்டன.

கொங்கு மண்டலத்தில்

- அண்ணன்மார் கதை
- காத்தவராயன் கதை
- பன்னாரி அம்மன் கதை
- பொம்மலாட்டம்
- உடுக்காட்டம்
- நாடகக் கூத்து
- இலாவணி
- தொலைச் சிந்து
- பெரிய மேளம்

நீலகிரி மாவட்டத்தில் இருளர்கள் நடத்தும் நாடகங்கள், இசைப் பாடல்கள் சிறப்புற விளங்கின.

பாரம்பரியமிக்க இசைக் கருவிகளைக் கொண்டு ஆடிப் பாடுவது இன்றைக்கும் மரபில் உள்ளது. 

வட தமிழகத்தில்

- திரெ
பதி அம்மன்
- பெரியாண்டவர்
- ஊத்தாண்டவர்
- கன்னிமார்
- எல்லையம்மன் மற்றும் கானா பாட்டு
- தெருக் கூத்து
-
ராஜ மேளம்
- உடுக்குப் பாட்டு
- நீலகிரியை ஒட்டிய மலைப் பகுதிகளில் தும்பிப் பாட்டு
- திரளிப் பாட்டு
- குறத்தைக் களி
- கைத்தடியாட்டம்
- கோலாட்டம்

கடற்கரையை ஒட்டிய பகுதிகளில்

- மாதா, அந்தோணியார், குட்டியாண்டவர், ஏழு கன்னியர் கதைகள்
- ஐலசா
ராகத்தில் படகு ஓட்டத்தில் பாடும் மீனவப் பாடல்கள்
- கரவலா பாட்டு
- கப்பல் பாட்டு
- கோலப் பாட்டு
- வேளம்

போன்றவை தமிழ்க் கலைகளாகச் சிறப்புற்றிருந்தன. 

நமது நாட்டுப்புறக் கலைகள் பற்றிய தரவுகளை இவ்வாறு பலவகைப்படுத்தலாம்.

தணிகை மலையிலிருந்து தென் கடல் குமரி வரை பரந்த தமிழகத்தில் வட்டாரத்துக்கேற்ப இந்தக் கலைகள் இருந்தன. இந்தக் கலைகளை வளர்த்த பல கலைவாணர்கள் இப்போது நம் நினைவில் இல்லை. அவர்கள் எல்லாம் இந்தக் கலையை நம்பி ஏழ்மையில் வாடினார்கள்.  தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் அந்தந்த ஊர் மண் மணத்தைச் சொல்கிற இயற்கையின் அருட்கொடைகளாக அமைந்தன. அந்தக் கலைகள் மறையக் கூடாது. சாகக் கூடாது. இவை நம்முடைய கலாசாரத்தின் ஆணி வேர்களாகும்.  சில ஆர்வலர்கள் கலை இலக்கிய இரவு மேடைகள் அமைத்து, நாட்டுப்புறக் கலைகளை நடத்தி வருவது ஒரு முனையில் வரவேற்பைப் பெற்று வருகிறது. எளிய, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய கிராமியக் கலைஞர்கள் இன்றைக்கும் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களின் கலைத் திறமைகள், நாட்டுப்புறப் பாடல்களின் இசை வண்ணம் இன்றும் குடத்திலிட்ட விளக்காக உள்ளது.  இக்கலைகளுக்குரிய ஊக்குவிப்புகள் இருக்க வேண்டும். இவற்றை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதற்கான காரண, காரியங்களை அறிய வேண்டிய நிலை இருக்கிறது.

"நம் வீட்டுச் சாளரத்தை திறந்துவைத்து வெளிக்காற்று வர அனுமதிக்கலாம். ஆனால், அந்தக் காற்றே வீட்டில் உள்ள பொருள்களைப் புயல்போல் அடித்து கீழே தள்ளுகிற நிகழ்வாக இருந்துவிடக் கூடாது". 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நன்றி:- தினமணி
Reply all
Reply to author
Forward
0 new messages