1) 85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே! ++ 2. கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்

12 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 19, 2025, 5:08:41 PM6/19/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன் 
     20 June 2025      கரமுதல


(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16


கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம்.

வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90)

வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ படக்கூடாது. எனவே யானை மீது அமர்ந்து வெற்றிக் கொடியைப் பிடித்தால் வரும் உயரத்திற்குக் கோபுர வாயில் அமைக்கப்பட்டது. மலையைக் குடைந்து திறந்தவெளி உருவாக்குவதுபோல் (குன்று குயின்று அன்ன) அமைக்கப்பட்ட அகலமும் உயரமும் உடையதாக வாயில் அமைந்தது. எல்லா வகைப் பொருளும் வந்து குவிக்கப்படும் வளமைக்கு எடுத்துக்காட்டான (திருநிலை பெற்ற) குற்றமற்ற சிறப்பினை உடைய  முன்றிலை அமைத்து அதில் மணலைக் கொண்டு வந்து பரப்பினர்.

வெற்றிக் கொடியை யானை மீது உயர்த்திப் பிடித்து உலா வரும் மரபைப் பிற புலவர்களும் கூறி உள்ளனர்.

கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
(புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் : பதிற்றுப்பத்து : 52.1)
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி வரைமிசை
அருவியின் வயின் வயின் நுடங்க (ஆசிரியர் கபிலர் : பதிற்றுப்பத்து :69:1-2)
உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
(ஆசிரியர் பெருங்குன்றூர் கிழார் : பதிற்றுப்பத்து : 88:17)
கோல்களிற்று மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்
(புலவர் நெட்டிமையார் : புறநானூறு : 9:7)

மலையைக் குடைந்து முனிவர் இருப்பிடம் அமைக்கப்பட்டதை ஆசிரியர் மாங்குடி மருதனார்

குன்றுகுயின்றன்ன அந்தணர் பள்ளியும் (மதுரைக்காஞ்சி:470) எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இங்கு அவ்வாறு குறிப்பிட்டது கற்பனை யல்ல என்பதையும் மலையைக் குடைந்து திறந்த வெளி அமைப்பது போன்ற அகலமும் உயரமும் உடைய வாசல்கள் முன்பு அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உழைப்பாலும் இயற்கையாலும் வணிகத்தாலும் பெறும் செல்வங்களுடன் பகைவர் போர்க்களத்தில் விட்டுச் செல்லும் யானைகளும் பகை நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் குதிரைகள், பசுக்கள், செல்வங்கள்  முதலானவையும் தோழமை நாட்டினர் திறையாகச் செலுத்தும் செல்வங்களும் எனப் பல்வகைச் செல்வங்கள் வந்து குவியும் இடம் ஆதலின், செல்வமாகிய திருநிலை பெற்றது எனக் கூறியுள்ளார். ஆசிரியர் மாங்குடி மருதனாரும்

கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந் தாங்கு
அளந்து கடையறியா வளம்கெழு தாரம் (மதுரைக்காஞ்சி 696-697)
என்கிறார்.

எனவே, பல்வகை வளங்களும் குவிப்பதற்கு ஏற்ற வகையில் முகப்பு இடத்தையும் வாசலையும் அகலமாகவும் உயரமாகவும் அமைத்திருந்தனர் என்பது சரிதான்.

தனி வீடுகளில் விழா அல்லது சிறப்பு நாட்களில் வீட்டின் முன்புறம் மணல் பரப்பும் பழக்கமும் இப்பொழுதும் உள்ளது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து (தருவித்து) முற்றத்தில் பரப்புவது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பழக்கமாக  இருந்துள்ளது. பிற இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆசிரியர் மாங்குடி மருதனார்,

தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்காஞ்சி 684)

(அரிஞிமிறு – வண்டுகளும் ஞிமிறுகளும்) என்கிறார்.
ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்,

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் (மணிமேகலை : 1:50-51)

என்கிறார்எனவே, வீடுகளில் மட்டும் அல்லாமல் அகலமான வீதிகளிலும் மன்றங்களிலும் மணல் பரப்புவதும் அவ்வப்பொழுது பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.

எனவே, வீடுகளின் முன்பக்க முற்றங்களில் மணலைக் கொண்டு வந்து பரப்பும் அளவிற்கு ஒவ்வொரு வீடும் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டு இருந்துள்ளன.

உயரமான, அகலமான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதை மேலே உள்ள வரிகள் மூலம் அறிந்த நாம், பிற சிறப்புகளை அடுத்துக் காணலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

நட்பு இணைய இதழ் ஏப்பிரல் 30, 2011

++

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன் 
     20 June 2025      கரமுதல



(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி)

சனாதனம் – பொய்யும் மெய்யும் 85

  1. ? 85 . ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!
  2. 4.1.2023 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடி வட்டம் ஆதனூரில் இவ்வூரில் பிறந்த  நந்தனார் குருபூசை நிகழ்ச்சி நடந்தது. இங்குதான் ஆளுநர் இரா.ந.இரவி 100 பட்டிலினத்தவருக்குப் பூணூல் அணிவித்துள்ளார். நந்தனாரைத் தீயில் இறக்கி அதன் மூலம் அவர் புனிதமானதாகச் சனாதனவாதிகள் கூறுவதுபோல், பட்டியலின மக்கள் பூணூல் அணிந்ததால் புனிதமானதாகச் சனாதனவாதி ஆளுநர் இரா.ந.இரவி கூறுகிறார். அவரே தன்னைச் சனாதனவாதி என்று கூறுவதால் இவ்வாறு கூறுவது இழித்துரைப்பதாகாது. இதுதான் அனைவரையும் சமமாகக் கருதும் சனாதனம் என்கிறார். பூணூல் அணிவதால் உயர்வடையலாம் எனக் கூறுவதுதான் சனாதனம். பூணூல் அணிவித்ததன் மூலம் பட்டியிலினத்தவரை மோட்சம் அடைய வைத்ததாகவும் சனாதனவாதிகள் கூறுகின்றனராம். இதன் மூலம் பூணூல் அணியாதவர்கள் இழிவானவர்கள் என்னும் சனாதனத்தை வலியுறுத்துகிறார் அவர்.

பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

என்னும் பாரதியார் சாதி வெறியில் இவற்றைச் செய்யவில்லை. பிராமணன் மட்டும்தான் பூணூல் போட வேண்டுமா? எல்லாரும் போடலாம் எனக் கூறுவதற்காக உணர்ச்சி வயப்பட்டு செய்த செயல் இது. எனினும் பூணூல் அணிந்தவன் உயர்ந்தவன் என்பது இழிவை உயர்த்தும் சனாதனம் ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  “பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந்தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதருமத்தின் பேதத்தினை ஆளுநர் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப்படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்பவர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா? ” என்கிறார்.

அமைச்சர் பொன்முடி, “பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர்” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“நந்தனார், கோயிலுக்குச் சென்றதால்தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. பூணூல் அணிவிக்கப்பட்ட 100 பழங்குடியினரையும் அந்த வாசல் வழியாக ஆளுநர் உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாமே” என்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம். இதன் மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர்களைக் கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வி.சி.க.வைச்சேர்ந்த  சிந்தனைச் செல்வன், “புராணங்களில் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் செயல்படுத்திக் காட்டுவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவரும் தீயில் விழுந்து எழுந்து புனிதமடையவில்லை. நந்தன் மட்டும் நெருப்பில் விழுந்து எழுந்ததால்தான் புனிதமடைகிறார், அவருக்குப் பூணூல் அணிவிக்கப்படுகிறது என்று கூறி, இப்போதும் அதைச் செய்தால் எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்

“பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா?” என்கிறார் தோழர் மருது.

இவ்வாறு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவை யாவும் மக்கள் குரலே.

ஆனால், பிராமணர்களை மட்டும் உயர்த்துவதை மறைக்கும் வகையாகப் “பிராமணத்துவம் பிறப்பினால் வருவது அல்ல, ஒழுக்கத்தினால் வருவது.” எனப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சொல்வதன் மூலம் பிராமணர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்ந்து அந்நிலை அடைந்தார்கள் என்று மாயையையும் உருவாக்குகிறார்கள். எல்லா ஒழுக்கவான்களும் பிராமணர்கள் என்றால் பிற வருணத்தார் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதானே பொருள்.

  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனம்  பொய்யும் மெய்யும் பக். 118-120

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages