ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2026 அகரமுதல
(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி)
நாலடி நல்கும்நன்னெறி 26
வறுமையிலும் உதவுக!
உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்
கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பாலவை.
நாலடியார் பாடல் 185
பொருளுரை:
மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும் ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும் தம்மால் இயலும் அளவு பிறர்க்கு உதவி செய்வர். வறுமையிலும் பிறருக்குத்தரும் பெருமையை நாம் கொள்வோம்.
பதவுரை
உறுபுனல்= (மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்) மிகுதியான நீர்; தந்து= கொடுத்து; உலகூட்டி = உலகினருக்கு ஊட்டி, அஃதாவது உண்பித்து; அறுமிடத்தும்= வறண்டு நீர் அற்ற காலத்திலும்; கல்லூற்றுழி= தோண்டும் ஊற்றினிலே; ஊறும்= நீர் சுரக்கும், அஃதாவது நீரைச் சுரந்து சிலருக்கேனும் உதவுகின்ற; ஆறே போல்= ஆற்றைப்போல்; செல்வம்= பெரியோர்த ம்மிடம் உள்ள பொருளை; பலர்க்கு ஆற்றி=பலருக்கும் கொடுத்து உதவி; கெட்டு உலந்தக் கண்ணும்= நிலைமை கெட்டுப் பொருள் இல்லாது ஒழிந்த பின்னும்; சிலர்க்காற்றி=இயன்ற வரையில் சிலருக்கேனும் உதவி; செயற்பாலவை= செய்யக் கூடியவற்றை;செய்வர்=செய்வார்கள்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய்எல்லாஞ் செயல். (திருக்குறள், ௩௰௩- 33)
என்கிறார் திருவள்ளுவர்.
முடியக்கூடிய இடங்களில் எல்லாம் அறச்செயல் புரிய வேண்டும். முடியாதபோதும் வாய்ப்புள்ள வழியில் எல்லாம் அறச்செயல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். பணம் கொடுப்பது மட்டும்தான் அறவினைஅல்ல. பிறருக்குத் துன்பம் நேரும்பொழுது அதைத் துடைக்கிற எல்லாச் செயலும் அறம்தான். பிறருக்கு உதவி தேவைப்படும்பொழுது நம்மால் முடியக்கூடிய வழிகளில் உதவ வேண்டும்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் வேந்தர்
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.
என்கிறார்.
உலகம் எதனால் இயங்குகிறது என வினா தொடுத்து, பிறருக்கு உதவுவதற்காக முயலும் பெரும்பண்பினராலேயே உலகம் இயங்குகிறது என்கிறார். இவர்கள் தாம்வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள் அல்லர். பிறர் வாழவேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்பவர்கள்.
ஒளவையாரும் இதனையே கூறுகிறார்.
“ஆற்றுப்பெருக்கற்றடிசுடு மந்நாளு மவ்வாறு
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்ஆனாலும்
இல்லை யெனமாட்டார் இசைந்து”(நல்வழி பாடல்: 9)
என்கிறார் அவர்.
ஆற்றில் நீர்ப்பெருக்கின்றி வற்றிப் போனாலும் உலகுக்கு ஊட்ட ஊற்றின்மூலம் நீரைவழங்கும். அதைப்போல் நற்குடிப்பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மை நாடிவருவோருக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
உயர்நிலை தாழ்நிலை என எந்நிலைவந்தாலும் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் இயல்பாகும். சிறியோர் தம் செல்வப்பெருக்கில் இருந்தாலும்கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும். அவ்வாறு நாம் இருத்தல் கூடாது.
இவ்வாறு கொடைக்கடனை என்றும் மறவாது போற்றும் பெரியோர்போல் வாழவேண்டும் என நாலடி நவில்கிறது. ஆதலின் நம்மிடம் செல்வம் இருந்தாலும் இல்லாமல் வறுமை உற்றாலும் இயன்றவரைபிறருக்கு உதவ வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1266 -1270 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1271 -1275
திருப்புளி குறித்த வரம்பற்ற பேரச்சம் திருப்புளி வெருளி.
திருப்புளியைக் கவனக் குறைவாக ஒரு முறை பயன்படுத்தி அதனால் காயம் வந்ததை எண்ணி அல்லது பிறர் அவ்வாறு கையாண்டு காயம் உற்றதைப் பார்த்து எப்பொழுதும் தேவையற்ற பேரளவு அச்சம் கொள்வோர் உள்ளனர்.
Katsavidi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திருப்புளி எனப் பொருள்.
00
திருமண உரையர் (wedding speakers) குறித்த வரம்பற்ற பேரச்சம் திருமண உரையர் வெருளி.
மதச்சார்புத் திருமணங்கள், தேவாலயம் முதலியவற்றில் நடக்கும் பொழுது திருமணம் நடத்தி வைத்து உரையாற்றுபவர் நீண்ட நேரம் பேசுவது எரிச்சலைத் தந்து திருமண உரை என்றாலே வெறுப்பு கொள்வோர் உள்ளனர். நேரம் வீணாகப்போகிறது என்று கவலைப்பட்டு வெறுப்பவர்களும் உண்டு. தமிழர் தமிழ்த்திருமண முறையில் திருமணம் நிகழ்த்துநரும் வாழ்த்துநரும் உரையாற்றுகின்றனர். மறுமலர்ச்சிக்கும் தன்மான எழுச்சிக்கும் உந்துதலாக இவ்வுரை அமைகிறது. எனினும் அரசியல் கலக்கும் வாழ்த்துரைகளை விரும்பாதவர்கள் இவ்வுரைகள் மீதும் உரையாற்றுநர் மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
00
திருமணம் குறித்த தேவையற்ற அச்சமே திருமண வெருளி.
சிலர் தாங்கள் மண வாழ்க்கைக்குத் தகுதியற்றவர் எனக் கருதுவதாலும் தங்களுக்குரிய சில பழக்க வழக்கங்கள் மண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியை இழக்கச்செய்துள்ளது என அஞ்சுவதாலும் சிலர் துறவு வாழ்க்கை அல்லது தனி வாழ்க்கையை விரும்புவதாலும் இல்லற உறவைச் சிலர் இழிவாகக் கருதுவதாலும் இத்தகையோருக்குத் திருமணம் மீது வெறுப்பும் அதனால் அச்சமும் வருகின்றன. சிலருக்குத் தற்பாலுறவில் ஏற்படும் நாட்டமும் திருமண வாழ்க்கை குறித்து அச்சத்தை ஏற்படுத்தலாம்.
திருமண வெறுப்பு குறித்துச் சந்திரோதயம் திரைப்படத்தில் வாலி எழுதிய பின்வருமாறு உள்ள பாடல் போல் எண்ணுவோர் உள்ளனர்.
கெட்டி மேளம் கொட்டு(கி)ற கல்யாணம்
தங்கத் தாலி கட்டு(கி)ற கல்யாணம்
பூ விலங்கு மாட்டு(கி)ற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
….. …… …..
அந்தக் கோணங்கிக்கும் பூங்கொடிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
….. …… …..
வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும்
கல்யாணமாம் கல்யாணம்
கலியாணம் என்பதும் தமிழ்ச்சொல்லே. கலி = ஆரவாரம், பெருக்கு, செருக்கு, தழைத்தல், மகிழ்ச்சி; யாணம் = அழகு; கலியாணம் = நன்னிகழ்ச்சி, மகிழ்வூட்டும் செயல், விழா. பேச்சு வழக்கில் கல்யாணம் என்கின்றனர்.
‘gamo’ என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் திருமணம்.
இஃது ஒருவகையில் தனியர் வெருளி(Anuptaphobia)க்கு எதிரானதே!
00
திருமணப் பங்கேற்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் திருமணப் பங்கேற்பு வெருளி.
திருமணத்தில் கருத்து மாறுபாடு உள்ள உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க நேரும் என்று அஞ்சல், மொய் அல்லது அன்பளிப்பு குறைந்த மதிப்பு உள்ளது என ஏளனமாகப் பார்க்கப்படுமோ என்ற கவலை, அல்லது சற்றுக் கூடுதலாக மொய்யோ அன்பளிப்போ வழங்கிச் செலவுத்தொகை கட்டுப்படாமல் போகுமோ என்ற கவலை, குடும்பத்தில் திருமணமாகாப் பிள்ளைகள் இருந்தால், அவர்கள் திருமணம்பற்றிக் கேட்பார்களே என்ற எரிச்சல், மணமகன் அல்லது மணமகள் மட்டுமே தெரிந்திருந்தால் எவ்வாறு பங்கேற்பது என்ற கவலை போன்றவற்றால் தேவையற்ற வரம்பு மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.
Pantreia என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திருமணம் எனப் பொருள்.
00
திருமறை(Bible) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திருமறை வெருளி.
பைபிள் எழுத்தொலிப்பில் விவிலி என்றாகி அம் விகுதி சேர்த்து விவிலியம் எனப்படுகிறது. எனவே, விவிலியம் என்பது தமிழ்ச்சொல்லன்று. பைபிள் என்றால் கிரேக்கத்தில் நூல் எனப் பொருள். சிறப்பிக்க இதனைத் திரு நூல் எனலாம். எனினும் மறைநூல் என்பதைச் சமயத்துடன் தொடர்பு படுத்திக் கூறுவதா் கிறித்துவ மறை நூலைத் திரு மறை எனலாம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5