கைக்குறிப்பு
(ஒரு கிராமத்தானின் பதிவுகள்)
------------------
❖ நாலு மணிச் சங்கு ஊத
நாட்டுச் சேவல் கூண்டில் கூவ
விழித்தெழுந்து முகம் கழுவி
முற்றம் வந்தோம் குளிர் தழுவி…
❖
இருள் விலகிப் போகும் முன்னே
வரிச்சிப் பனை பக்கம் போனோம்
விழுந்து கிடந்த நொங்கை எல்லாம்
விறு விறுனு பொறுக்கி வந்தோம்…
❖
காடு கரை எல்லாம் சுத்தி
கடைசி நேரம் கண்மாய் வந்தோம்
ஆவாரம் பூ அரைச்சு
அதன் சாறைத் தலையில் வச்சோம்…
❖
படிந்த மண்ணைத் தோண்டி எடுத்து
பல்லை எல்லாம் விளக்கி முடித்து
உடலை நல்லாத் தளர்வு செய்து
உள்ளே விழுந்தோம் ஓடி வந்து …
❖
அட்டை கடிச்சு அலறித் துடித்தோம்
அதையும் புடுங்கிப் பிச்சு எறிந்தோம்
தவளையோடு போட்டி போட்டுத்
தண்ணிமேல மிதந்து கிடந்தோம்…
❖
அக்கரைக்கு நீந்திச் சென்று
அனைவருமே சேற்றில் புரண்டு
கொட்டுக் கிழங்குச் செடியயெல்லாம்
கொத்துக் கொத்தாப் புடுங்கி வந்தோம்…
❖
தீவுபோல் காட்சி தந்த
திட்டுமேல ஏறி நின்னு
எல்லோரும் ஒன்னாக் கத்தி
எதிரோசை கேட்டு ரசித்தோம்…
❖
தலை நீட்டிய தண்ணிப் பாம்பை
தலையில் எறிந்து விரட்டி விட்டோம்
ஆள் உயர கோரை புல்லை
அடியோடு புடுங்கி எடுத்தோம்…
❖
முக்குளிப்பான் நீந்தி வர
முக்குளித்து அதைத் துரத்த
கையில் வந்து கிட்டாது
கடைசிவரை சிக்காது…
❖
கண் இரண்டில் பூளை பட
கரம் இரண்டும் சோர்ந்து விட
ஏரிக்கு விடை கொடுப்போம்
ஊருக்குள் நடை எடுப்போம்…
❖
மதிய உணவை முடித்து விட்டு
ஆலமரம் பக்கம் போவோம்
எல்லாத் தெரு பசங்களுமே
தவறாம ஒன்றிணைவோம்…
❖
வேறுபாடு கொள்ள மாட்டோம்
வெருப்புணர்வைக் காட்ட மாட்டோம்
ஆலமரக் கிளையை எல்லாம்
ஆட்டிப் படைக்க ஆரம்பிப்போம்…
❖
தொட்டுத் தொட்டு விளையாட
தோழன் எல்லாம் திட்டமிட்டோம்
கிளை விட்டுக் கிளை தாவி
குரங்கை எல்லாம் மிரள வைத்தோம்…
❖
விழுது விட்டு விழுது பாய்ந்து
வித்தை காட்டி விளையாடி
பயமறியாப் பயலுகளா
பாய்ந்து பிடித்துத் தாவினோம்…
❖
ஒரு விழுதில் ஊஞ்சல் கட்டி
மறு விழுதை முக்கி இழுத்து
அடி வயிறு கூசக் கூச
அந்தரத்தில் ஆடி வந்தோம்…
❖
கிளி மூக்கு நிறத்துல
கனிந்து விழுந்த பழங்களை
நசுங்காமக் கையில் எடுத்து
நாக்கில் வச்சு அதைச் சுவைத்தோம்…
❖
வாழ வந்த அம்மன் கோயில்
வவ்வால்களைக் கௌப்பி விட்டு
வட்டமிட வச்சுப் புட்டு
வயிறு வலிக்கச் சிரிச்சு நிப்போம்…
❖
உச்சிக்கு ஏறிப் போய்
ஊரையே பார்த்து நிற்போம்
விண்ணைத் தொட்டு விளையாடி
அடியில் இருப்பவரை அடிவயிறு கலங்கவைப்போம்…
❖
கட்டிக் கிடக்கும் காளை கன்றை
கயிறு அவிழ்த்து இழுத்து வந்து
மரத்தைச் சுற்றி ஓட விட்டு
மஞ்சு விரட்டுப் பழக்கி வந்தோம்…
❖
ஊடுபயிர்
ஊண்டும்போது
ஊடுருவும் காதலரை
உன்னிப்பாய்க் கவனிப்போம்...
❖
கதிரும்
முதிரும்
காதலும் முதிரும்
அனைத்தும் அறிவோம்
அகத்துள் மகிழ்வோம்...
❖
குனிந்து
குலை பொறுக்கி
கசக்கிக்
காசாக்குவோம்...
❖
கருவ மரத்தில் கவட்டை செஞ்சு
காற்று வாரை இறுகக் கட்டி
செருப்புத் தோளை இடுக்கியாக்கி
குறி பார்த்துக் குருவி அடிச்சோம்…
❖
டயருக்குள் டயர் திணிச்சு
துவளாமல் நேர் பிடிச்சு
அரை அடி குச்சி வெட்டி
அதை அடிச்சு ஓட்டினோம்…
❖
சின்னதாக்
குழி தோண்டி
சின்னக் குச்சி அதுல வச்சு
சிறுநீளக் கம்பு கொண்டு
தூரம் செல்ல தூக்கியடிப்போம்…
❖
கிட்டி அடிச்சு விளையாடி
கண்ணம் கீறி காயம் ஆகும்
என்றாலும் விடமாட்டோம்
வெல்லாமல் வரமாட்டோம்…
❖
ஓட்டப் பந்தயம் வைப்போம்
ஓட ஒன்னா நிப்போம்
முந்திச் செல்ல நினைப்பவனை
முழங்கையால் பதம் பார்ப்போம்…
❖
வட்டக் கபடி ஆடி
வளைந்து குனிந்து ஓடி
தோற்றுப் போய்ச் செல்லாமல்
கோட்டுக்குள் தப்பி நிப்போம்…
❖
பந்து வாங்கி விளையாட
பட்டணம் தேடிப் போகாம
கொமட்டிக்காய் பந்து எறிந்து
குட்டை முழுதும் பறக்க விட்டோம்…
❖
மண் பானை ஓடு எடுத்து
மெல்ல அதை உடைத்து
தண்ணி மேல பறக்க விட்டோம்
தவளைக்கே சவால் விட்டோம்…
❖
தேத்தா விதையுரசி
தண்ணீரைத் தெளிவச்சு
மண்பானை இளங்குளிரில்
மயங்கியும் சாய்ந்திருப்போம்...
❖
காளிமுத்தன் பதநீர் இறக்கி
கலையத்தோடு கீழ் இறங்க
பனை ஓலைப் பட்டையோடு
பரிதாபமா நாங்க நிப்போம்…
❖
கோவப் பட்டு திட்டாம
குளவி விழுந்த பதநீர
வடிகட்டிக் கொடுப்பாரு
வயிறு நிறைச்சு மகிழ்வாரு…
❖
வாங்கருவாக் கம்பு தூக்கி
காட்டுக்குள் வலம் வருவோம்
குளவி கொட்டிக் கண்வீங்கி
கொடுக்கோட தேன் எடுப்போம்…
❖
கெளப்பி விட்ட குளவியெல்லாம்
கோவம் கொண்டு வட்டமிடும்
காட்டுக்குள் சிக்கியவன்
கண்ணத்தில் முத்தமிடும்…
❖
அதையெல்லாம் குணப்படுத்த
ஆஸ்பத்திரி போக மாட்டோம்
முகம் வீங்கிப் போச்சேன்னு
முடங்கிப்போய் இருக்க மாட்டோம்…
❖
சுருக்கு வச்சு ஓணான் புடுச்சு
சுருட்டை பிச்சு வாயில வச்சு
கிறு கிறுனு சுத்த விடுவோம்
கிறுக்குப் புடுச்சு அலைய விடுவோம்…
❖
பூவரசம் கட்டை வெட்டி
பூப்போல அதை எளச்சு
பிளக்காம ஆணி அடிச்சு
பம்பரமா சுத்த விடுவோம்…
❖
சுத்த விட்ட பம்பரத்தை
விரல் இரண்டை விட்டெடுத்து
உள்ளங்கையில் சுழலவிட்டு
கைக் கூச்சம் அறிந்திடுவோம்…
❖
கோந்தை வண்டி ஓட்டுவோம்
தெருப் பூராம் சுத்துவோம்
கழண்டு ஓடும் கோந்தையை
கம்பை வச்சு இறுக்குவோம்...
❖
பூச்சி மருந்து பையில
புத்தகத்தை அமுக்குவோம்
பொடி நடையா நடந்து போய்
பள்ளிக் கூடம் சேருவோம்…
❖
மரத்தடியில் உட்காந்து
வாய் விட்டுப் படிச்சிருப்போம்
மதிய வேளை வந்ததுமே
வயிற நெறச்சு முடிச்சுருப்போம்…
❖
மாலை வேளை வகுப்பையெல்லாம்
மயங்கி மயங்கிக் கடந்தோம்
சீருடை வாங்க மட்டும்
சீக்கரமாய் நடந்தோம்…
❖
நைசா நசுக்கி விடுவோம்
நாசூக்கா பொசுக்கி விடுவோம்
படபடனு சத்தம் கேட்டா
பாட்டில்களைத் தள்ளி விடுவோம்…
❖
கணக்கு வாத்தி கேள்வி கேட்டா
கையைக் கட்டி நிப்போம்
பதில் எதுவும் தெரியாம
பேந்தப் பேந்த முழிப்போம்…
❖
காலையில நடத்தி முடிச்ச
கோண வடிவச் சூத்திரத்தை
மாலையில வகுப்பு எடுத்து
மறுபடியும் கொழப்புவாரு…
❖
உருச்சா மட்டையை எடுத்து வந்து
உள்ளங்கையை நீட்டச் சொல்லி
கணக்க ஒழுங்காக் கவனீனு
கை சிவக்க வைப்பாரு…
❖
பழுத்த கையப் பார்த்துப் பார்த்து
பல தடவை உதறி விட்டு
அடுத்தவன் அடிவாங்க
அதைப் பார்த்து சிரிச்சு நிப்போம்…
❖
உடலை உறுதி செய்ய
உடற்பயிற்சி செய்ய மாட்டோம்
ஒவ்வொரு செயலுமே எங்கள்
உடலை உறுதிப் படுத்தும்…
❖
தெரிந்ததை எழுதி வைப்போம்
தேர்ச்சியும் பெற்று இருப்போம்
பத்தாம் வகுப்பு வரும்போது
படிப்பின் அருமை அறிந்திருப்போம்…
❖
பள்ளி நேரம் முடியும் போது
பொழந்து கட்டி மழை அடிக்க
மழையோடு மல்லுக் கட்டி
வெறும் கையோடு வீடு வருவோம்…
❖
கடந்து வந்த சுவடுகள்
வந்து வந்து போகுதே
மீண்டும் அந்த வாழ்க்கைக்கு
என்மனது ஏங்கதே.
▂ ▂ ▂
❖ யாழ்க்கோ ✍
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/661ba907-6785-40db-bcd1-264142ea836bn%40googlegroups.com.