
இலக்கியத்தில் கூந்தல்
கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள்,குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்றை புனிதமானது பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் இவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது. ஆனால்.... கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும் போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து.... அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் தனிச் சிறப்பு உடையது.
பொதுவாக, இருபாலார்க்கும் உரிய தலை மயிருள், குதிரைவாற் சாமை போன்றும், கமுகோலை போன்றும். மயில் தோகை போன்றும் அடர்ந்தும் தழைத்தும் நீண்டும் இருப்பதால் பெண்கள் தலை மயிரை ஓதி, குழல், கூந்தல், கூழை, என்றும் கூறினர். ஐம்பாற் கூந்தல் என்றும் அலங்கரித்தனர்.
மயிலின் உச்சி போன்று சிறிதாகவும் சிறுமையானதாகவும் இருந்ததினால்,ஆண்களின் தலைமயிர் குடுமி என்றும் குஞ்சி என்றும் கூறப்பெற்றது. கோவலன் தலைமயிரைக் ' குஞ்சி ' என்றும், கண்ணகியின் தலைமயிரை ' வார்குழல் ' என்றும் குறிப்பிடும் வரிகளை [சிலப்பதிகாரம் - மதுரை காண்டம்] காணலாம்.
' கதுப்பு ' என்னும் சொல் ஆண் பெண் இரு பாலரின் தலை முடியை குறிக்கிறது. கூந்தலையும் மகளிரையும் நம் முன்னோர்கள் ஒன்றாக கருதினர்.அதனால்தான், மகளிரைத் தழுவுதலைக் கூந்தல் கொள்ளுதல் என்றனர். பிற ஆடவர் கை தம் கூந்தல் மீது படுவதைக் கூட கற்புள்ள மகளிர் ஒப்புவதில்லை. மாந்தர், கூந்தலை கோதி கிளர்ச்சி கொள்ளுதல் போல புறா, கோழி போன்ற பறவை இனங்களும் அலகால் துணைகளின் சிறகை கோதி உணர்வு கொள்கிறன.
கணவன் உடன் இருக்கும் போது மட்டும், கூந்தலுக்கு நறுமணம் தடவி, வகிர்ந்து வாரி மலர்ச் சூடி கூந்தலை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். தலைவன் பிரிவின் போதும் மறைந்த பின்னும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கும் மலர் சூடுதலை தவிர்க்கிறார்கள்.
பெண்களை முதன்மைப் படுத்தி கொள்ளும் காவியங்களே அதிகம். காரணம் காவியங்களுக்கு அழகு சேர்ப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு அழகு தருவதோ, அவர் தம் கூந்தல். எல்லாக் காவியங்களும் காரிருங் கூந்தலைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சபதம் vகாவியத்தின் மிக முக்கியப் பகுதி.பாஞ்சாலியின் சபதமாக கூந்தலே முதன்மை வகித்தது. கூந்தல், பெண்களின் மகிழ்ச்சி, அயர்ச்சி, இன்பம், துன்பம், சினம், வேட்கை முதலான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக கையாளப்படுகிறது.
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா ? இல்லையா என்ற சந்தேகத்திற்கு நக்கீரனும்,சிவபெருமானும் சங்க காலத்தில் மாபெரும் பட்டிமன்றம் அந்நாளில் நடந்தது, ,,,,,, '' கொங்கு தேர் வாழ்க்கை '' எனத் தொடங்கும் பாடல் மூலம்.
'' காரிருங் கூந்தல்.... ''
'' குழல்போற் கமழும் மதுமலரே...''
'' கருங்குழல் போலுளவோ விரைநாறுங் கடிமலரே...''
'' மங்கை வார்குழல்போல் நாற்றமுடைய வுளவோ வறிவு நறுமலரே...''
என்றெல்லாம், மழைக் கண் மாதராரின் நறுங் கூந்தலைப் புகழும் பாண்டிக்கோவை, மலரை விட கருங்கூந்தல் மணம் மேம்பட்டது என்று கூறுகிறது.
கோவலன், கண்ணகியை மறந்து மாதவி இல்லம் சென்றமையால் கண்ணகி தன் கூந்தலுக்கு நெய் இடுவதில்லை; அதனால் கூந்தல் மணத்தை இழந்தது. இதனை இளங்கோவடிகள் ' மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப ' என்று கூறுகிறார். அதே சிலம்பில், கண்ணகியின் கூந்தல் ஒப்பனையை ' புரிகுழல் அளகத்து ' என்றும், ‘’பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும் ' என்றும், ’தாழிருங் கூந்தல் தையால் ' என்று நீண்டு தாழ்ந்த கரிய அவளுடைய கூந்தலை புகழ்கிறார்.
கம்பரின் காவியத்தில் கூட , மண்டோதரி புலம்பல் மூலம் ஒரு பாடல் பாடுகிறார். இராவணன் மரணத்தின் போது:--
'' வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
இடன் நாடி இழைத்த வாறே?
'கள் இருக்கும் மலர்க்கூந்தல்' சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவிதோ ஒருவன் வாளி ! ''
சிவனுடைய சடை முடியில் வெள்ளெருக்கம் பூ இருந்தது. அது மயக்கத்தக்க பூவோ, மயங்காத தக்க சடை முடியோ அல்ல; ஆதலால், இராவணன் மயங்காது அங்கே வீரம் காட்டினான். சானகியின் கூந்தலோ மலர்க் கூந்தல்; அதிலே கள் இருந்தது. அதனால் இராவணன் மயங்கினான்; மடிந்தான்