தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர்
— தேமொழி
தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று, ஆட்சியில் இருந்த திமுக அரசால் 2008 ஆம் ஆண்டு தைத் திங்கள் 23 ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசாணை பிறப்பித்தது. அதன் தொடக்கமாக, தமிழர்களின் ஆண்டின் தொடக்கம் சித்திரைப் புத்தாண்டுதான் என்றும், இல்லையில்லை தைப்புத்தாண்டுதான் என்றும் தமிழர்கள் அணி பிரிந்து சர்ச்சையில் ஈடுபட்டிருப்பது வழக்கமாகிவிட்டது.
பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டு காலத்திய சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு முதற்கொண்டு, பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்பவரால் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு வரை "ஆவணியே ஆதி" என்று நிகண்டுகள் நேரடியாக ஆண்டின் தொடக்கம் ஆவணி என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றன. இதனை எதிரொலிக்கும் வகையில் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தமிழரின் புத்தாண்டின் தொடக்கம் இதுதான் என்று நேரடியாகக் குறிப்பிடும் தகவல்கள் இல்லை என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தத் தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் வகையில் நச்சினார்க்கினியர் எழுதிய உரைகள் நமக்கு உதவுகின்றன.
நச்சினார்க்கினியர் ஓர் அறிமுகம்:நச்சினார்க்கினியர் பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் ஒருவர். அவர் உரை கூறும் திறனை மெச்சி “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்றும் பாராட்டப் படுபவர். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர். பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலியவற்றிற்கு உரை வகுத்துள்ளார். பேராசிரியரால் உரையெழுதாமல் விடுபட்டுப் போயிருந்த குறுந்தொகை இருபது பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இவர் உரை வகுத்ததைக் குறிப்பிட்டு;
பாரத் தொல்காப்பியமும் பத்துப் பாட்டுங் கலியும்
ஆரக் குறுந்தொகையுள் அயன் நான்கும் — சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்தி நச்சினார்க்கினியமே
என்று ஒரு வெண்பா உள்ளது.
நச்சினார்க்கினியர் பழந்தமிழ் இலக்கியங்களை மரபறிந்து, பொருள் தெளிவுடன் சுவையாக எடுத்து விளக்கியவர் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். இவர் குறித்த விரிவான ஆய்வுநூல் ஒன்றை எழுதிய மு. அண்ணாமலை அவர்கள் நச்சினார்க்கினியர் குறித்துக் கூறுகையில், "இலக்கணம் இலக்கியம் ஆகிய இரு துறையினும் வல்லவராயினும் அவரை ஓர் இலக்கிய உரைகாரராக வைத்துக் காண்பதே பொருந்தும். ஒரு விரிவான காவியத்திற்குச் சுருக்கமாகவும், அழகாகவும், திட்பமாகவும், உரை செய்வதெப்படி என்பதற்குச் சீவக சிந்தாமணி உரை முன் மாதிரியாக அமைந்திருக்கிறது" என்று கூறுவார்.
தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல் முடிவிலும் "மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது. அவ்வாறே, "பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது. பத்துப்பாட்டு உரை முடிவிலும், உரைச் சிறப்புப்பாயிரங்களிலும் அவ்வாறே குறிப்பிடப்படுவதால், நச்சினார்க்கினியர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்மார்த்த பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், மதுரையில் வாழ்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. இவர் சிவனை வழிபடும் வைதிகராக இருப்பினும் சமயக் காழ்ப்பின்றிச் சமண காவியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதிய பண்பாளர். 'அருளொடு புணர்ந்த அகற்சி' என்ற தொல்காப்பியத் தொடருக்கு துறவு என்று பொருள் எழுதி அத்துறவுக்குப் புத்தன் துறவையே எடுத்துக்காட்டாக விளக்கியவர்.
இறையனார் களவியல் உரைகாரர், உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர் முதலிய உரையாசிரியர்களை இவர் தம் உரையில் ஆங்காங்கு குறித்தும் மறுத்தும் எழுதியுள்ளார். எனவே அவர்களுக்கெல்லாம் இவர் பிந்தியவராவார். சேனாவரையர் 'எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன்' (கி.பி. 1268-1311) காலத்தில் வாழ்ந்தவர் என்று மு. இராகவையங்கார், சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். எனவே, நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலாவது அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாவது (1350 - 1450 இடைப்பட்ட காலம்) வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதலாம்.
தமது உரைகளில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோளாகக் காட்டும் நச்சினார்க்கினியர் மிகப்பரந்த நூற் புலமையுள்ளவர் என்று பாராட்டப்படுபவர். அதேவேளை, உரை கூறுகையில் இவர் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் முறை இவரது உரை கூறும் முறையின் குறைபாடாகப் பல தமிழறிஞர்கள் குறிப்பிடப்படுவதையும் காண முடிகிறது. கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய உத்தியை அதிகம் கையாண்டது இவர்தான் என்று அறியப்படுகிறது.
“சொற்கிடந்தாங்கு பொருள் கொள்ளாது தாம் நினைத்தாங்குச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இவர் தம் உரை உரையறங் கடந்த உரை ஆயிற்று. பொருளறை செய்த இப்பெருங்குறை இவ்வுரையில் இல்லாதிருப்பின் நச்சினார்க்கினியர் உரை ஞாயிறாகப் பெரும் புகழ் பெற்றிருப்பர்." என்று தொல்காப்பியக் கடல் என்ற நூலை எழுதிய வ.சுப மாணிக்கம் அவர்கள் கருதுகிறார்.
நச்சினார்க்கினியர் உரைகள் தரும் விளக்கம்:தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பாவான
“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்” (அகத்திணையியல், நூற்பா 6)
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் ஆவணிதான் ஆண்டின் தொடக்கம் என்று விரிவாக விளக்கம் அளிக்கிறார்.
நக்கீரர் எழுதிய சங்க இலக்கியமான நெடுநல்வாடை பாடலுக்கும் உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். இப்பாடலில் இரு இடங்களில் சித்திரை குறித்து விளக்கம் தரக் கூடிய பகுதிகள் உள்ளன. நக்கீரர் எழுதிய பாடல் வரிகள் ஆண்டின் நாள் அல்லது மாதம் குறித்த குறிப்புகளைக் கூறவில்லை. இருப்பினும் விரிவாக உரை எழுதும் முறையைக் கடைப்பிடித்த நச்சினார்க்கினியர், ஆண்டின் தொடக்கம் சித்திரை என்பது தமிழர் மரபாக இருந்திருக்குமாயின், இந்த இரு இடங்களிலும் அதைக் குறிப்பிடாமல் உரை எழுதியிருக்கவும் மாட்டார்.
(1) தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் ஆவணித் திங்கள் ஆண்டின் தொடக்கம் என்றும் குறிப்பிட்டதையும்;
(2) நெடுநல்வாடை உரையில் ஆண்டின் தொடக்கம் சித்திரைத் திங்கள் என்பதைக் குறிப்பிடாமையையும் கவனத்தில் கொண்டால் அவர் வாழ்ந்த காலம் வரை, 15 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்களின் ஆண்டுக் கணக்கு ஆவணியில் தொடங்கியது என்று உறுதியாகக் கொள்ளலாம். அடுத்து தொல்காப்பிய நூற்பாவிற்கும் நெடுநல்வாடை பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர் வழங்கிய உரைகளைச் சற்று விரிவாகக் காணலாம்.
(1) தொல்காப்பிய உரை: “காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்” – (அகத்திணையியல், நூ. 6)
என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் . . .
"இக்காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார். அப்பெயர் உலக வழக்காய் அப்பொருள் உணர நிற்றலின். காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று உரை எழுதியுள்ளார்.
இதன் பொருள்; உலக வழக்காக யாவரும் அறிந்த செய்தி என்பதால் தொல்காப்பியர் சிறப்பாகப் பொருள் கூற முற்படாமல் பொதுவான வழக்காற்றை அவ்வாறே நூற்பாவாகச் சொல்லிச் சென்றுள்ளார். இதன் விளக்கம் யாதெனில், ஞாயிற்றின் ஆட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (ஆவணித் திங்கள்), திங்களின் ஆட்சி வீடாகிய கற்கடகவோரையின் இறுதி (ஆடித்திங்கள்) வந்து முடியும்வரை ஓர் ஆண்டாகும். இதனை முறையாக ஆறு பருவங்களாகப் பகுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு திங்கள் உரியதாக்கினார் என்று நச்சினார்க்கினியர் மிகத் தெளிவாக விளக்கம் உரைக்கிறார். அத்துடன் ஞாயிற்றைக் கொண்டே காலம் வரையறுக்கப்பட்டதால் 'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்றும் குறிப்பிடுகிறார்.
(2) நெடுநல்வாடை உரை:2.1: பாண்டியன் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட சித்திரை நாள்:தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் ஆன நக்கீரனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், அரண்மனையும் பெருங்கோட்டையும் எவ்வாறு கட்டப்பட்டது என்று விளக்கும் பாடல் வரிகள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை நூலில் இடம்பெறுகிறது. இப்பாடலில் 'நிழலற்ற நாளில்' அக்கோட்டையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது.
"... ... ... ...மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து"
(நெடுநல்வாடை, 72-75)
"இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு ஒருதிறம் சாரா அரைநாள் " என்ற சொற்றொடர் நிழலற்றநாளை அறியும் முறையைக் குறிக்கிறது.
இப்பாடலுக்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர்;
"திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்
சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
அங்குரார்ப்பணம் பண்ணி"
என்று விளக்கம் தருகிறார்.
சித்திரை மாதத்து இடைப்பத்து நாட்களில் (அதாவது சித்திரை 11 முதல் - சித்திரை 20 நாட்களுக்குள்) அப்பகுதியில் எது நிழலற்ற நாளோ அந்த ஒருநாளின் நண்பகலில் பதினைந்தாவது நாழிகையில் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அந்த நிழலற்ற நாள் எந்த மாதத்தின் நாள்? பாடல் குறிப்பிடுவது ஆண்டில் இருமுறை நிகழக்கூடிய நிழலற்ற நாளைக் கொண்ட சித்திரையிலா அல்லது ஆவணியிலா, அது எந்த மாதத்தின் நிழலற்ற நாள் என்று நக்கீரரால் குறிப்பிடப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அது சித்திரை மாதத்து நிழலற்ற நாள் என்று இங்குக் குறிப்பிடுபவர் உரைகாரர் நச்சினார்க்கினியர்.
நச்சினார்க்கினியர் இந்த இடத்தில் விரிவாகச் சித்திரைத் திங்கள் குறித்து விளக்கம் தர முற்பட்டும் கூட ஆண்டின் முதல் மாதம் அது என்று விளக்கமளிக்க முயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
அவ்வாறே நெடுநல்வாடையில் தொடர்ந்து வரும் பின்பகுதியில் சித்திரை ஆண்டின் தொடக்கம் எனக் குறிப்பிட நச்சினார்க்கினியருக்கு மற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்பொழுதும் அவர் ஆண்டின் தொடக்கம் சித்திரை என்று குறிப்பிடவில்லை. இப்பகுதி பாண்டிமாதேவியின் அரண்மனையில் அவள் மன்னனைப் பிரிந்திருக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் காட்சி.
2.2: பாண்டிமாதேவியின் பள்ளியறைக் காட்சி:நெடுநல்வாடையில் நூலில், பாண்டிய மன்னன் போரின் காரணமாகப் போர்க்களம் சென்று விடுகிறான். மன்னன் வருவதாகக் கூறிய நாளும் கடந்து குளிர் காலமும் வந்துவிட்டது. மதுரையின் அரண்மனை அந்தப்புரத்தில் அவன் நினைவாக உறக்கம் வராது வாடுகிறாள் அரசி. பள்ளியறையின் அகன்ற பாண்டில் (வட்ட வடிவக் கட்டில்) மேல் மெல்லியதாக விரித்த ஒரு மஞ்சமும் அதன் மேலே மென்மையான அன்னத்தூவி தலையணைகளும் கொண்ட பஞ்சணை இருக்கிறது. பஞ்சணை மேல் முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை போல பாண்டிமாதேவி சாய்ந்திருக்கிறாள். மஞ்சத்தின் உறுதியான திரண்ட கட்டில் கால்களின் மேற்புறம், துணியால் கட்டிய மேல் விதானத்தில் வரையப்பட்டிருந்த திண்ணிய கொம்புகளையுடைய மேட இராசி முதலாகப் பன்னிரு இராசிகளின் படத்தில் ஞாயிற்றையும், திங்களையும்; திங்களோடு இணைந்து நின்ற ரோகிணி விண்மீனையும் பார்த்து நெடு மூச்சு விடுகிறாள் அரசி. ரோகிணியைப் போன்று தன் காதலனோடு பிரிவின்றி வாழும் பேறு தனக்குக் கிட்டவில்லையே. ரோகிணி தன் காதலனான நிலவுடன் இணைபிரியாது இருக்க நாம் மட்டும் மன்னனைப் பிரிந்து தனியே வாடுகிறோமே என்று ஏங்குகிறாள். தன்மேல் கொண்ட கழிவிரக்கத்தால் கண்களில் பொங்கிய கண்ணீரை, விரலால் சுண்டிவிட்டபடி வருந்துகிறாள்.
"புதுவதுஇயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலைமருப்பின் ஆடுதலை ஆக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவள் நோக்கிநெடுதுயிரா
மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியு நலங்கிள ரரிவை"
- (நெடுநல் வாடை, 159-66)
இப்பாடலில் இடம் பெறும் "திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161) என்ற வரியையே தமிழரின் ஆண்டுக் கணக்கு சித்திரையில் தொடங்குகிறது என்று கருதுவோர் மிக முக்கியமான சான்றாக முன்வைப்பர். திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று விண்ணில் திரியும், மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமனின்ற உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து நெட்டுயிர்ப்புக் கொண்டு, தன்கடைக்கண்ணில் தளும்பிய கண்ணீரைத் தனது சிவந்த விரலால் சுண்டிவிட்டு, மன்னனைப் பிரிந்து தனிமையில் இருப்பதற்காக பாண்டிமாதேவி வருந்தினாள் என்பது நச்சினார்க்கினியர் தரும் உரையின் சாரம்.
தொன்று தொட்டு தமிழர்கள் பின்பற்றுவது கதிரவனின் நகர்வை அடிப்படையாக்கக் கொண்ட காலக் கணக்கீடு. அதனால்தான் ஆண்டு ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் தமிழரின் பயன்பாட்டில் உள்ளது சூரிய சித்தாந்த நாட்காட்டி. இது வான் வெளியை 12 ஓரைகளாக அல்லது வீடுகளாகப் பிரித்துக் கணக்கிடும் கனலி வட்டம் (அல்லது ஓரை வட்டம் அல்லது இராசிச் சக்கரம்) என்பதை அடிப்படையாகக் கொண்டது. இதில் மேஷ ஓரையில் சூரியன் தொடங்கும் காலம் ஆண்டின் தொடக்கமாக, இளவேனில் தொடங்கும் சித்திரைத் திங்களிலிருந்து ஆண்டுக் கணக்கு தொடங்குகிறது என்பதை அறிவோம். இந்த வரிகளுக்கு விளக்கம் அளிக்கையில் ஆண்டின் தொடக்கம் சித்திரை எனக் குறிப்பிட நச்சினார்க்கினியருக்கு மிக நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த மற்றொரு வாய்ப்பிலும் சித்திரை ஆண்டின் தொடக்கம் என்று அவர் குறிப்பிடவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
அவர் இராசிச் சக்கரத்தில் முதலில் இருக்கும் ஓரை மேஷம் என்பதை "திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக" எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் தமிழர்களுக்கு ஆண்டு அங்குத் தொடங்கவில்லை. அவர்களுக்குச் சிம்ம ஓரையில்தான், கார்காலத்தில்தான் தொடங்கியது என்பதால் அவர் ஆண்டின் தொடக்கம் குறித்து இப்பகுதியில் குறிப்பிடவில்லை. எல்லா ராசியிலும் சூரியன் பயணிக்கிறது. ஆனால் ரோகிணி விண்மீன் தன் காதலன் சந்திரனுடன் பிரியாமல் இணைந்தே இருக்கிறது, ரோகிணி போலத் தன் காதலனான பாண்டிய மன்னனுடன் பிரியாமல் இணைந்திருக்கத் தனக்கு வாய்க்கவில்லை என்பது மட்டுமே அரசியின் ஏக்கத்திற்குக் காரணம் என்பதை நக்கீரர் பாடலில் சொல்லியுள்ளார் என்று கூறி, அவ்வரிகளுக்கு உரை எழுதிக் கடந்து விடுகிறார் நச்சினார்க்கினியர் (இங்கு ரோகிணி சந்திரனின் 27 மனைவியருள் அவனுக்கு விருப்பமான மனைவி, மற்ற மனைவியரைவிட அதிக அன்புடன் அவன் ரோகிணியுடன் வாழ்ந்தான் என்ற புராணக் கதை இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது).
முடிவுரை: தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் மிகப்பரந்த நூற் புலமையுள்ளவர் என்றும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு மரபறிந்து, பொருள் தெளிவுடன் உரை எழுதியவர் என்றும் பாராட்டப் பாடுபவர். அவர் தொல்காப்பிய உரையில் தமிழர்களின் ஆண்டுக் கணக்கின் தொடக்கம் என்பதை விளக்குகிறார். அவரே நெடுநல்வாடை பாடலுக்கு உரை எழுதும் பொழுது இருமுறை சித்திரை குறித்து விளக்கம் அளிக்கக் கூடிய வாய்ப்பிருந்தும், சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் குறிப்பிடவில்லை என்பதையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தால், தமிழரின் ஆண்டின் தொடக்கம் எது என்ற புதிரை நச்சினார்க்கினியர் விடுவித்துள்ளார் என்று தெளியலாம். அவருடைய உரைகள் தமிழர் ஆண்டின் தொடக்கம் எது என்பதை ‘உறுதிப்படுத்தும் சோதனை முடிவு’ (confirmatory test result) போன்றது எனவும் கொள்ளலாம். இதன் மூலம் நச்சினார்க்கினியர் வாழ்ந்த காலமான 15 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆண்டின் தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதையும், இத்தகவலை பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூடாமணி நிகண்டும் உறுதி செய்கிறது என்பதையும் அறியலாம். நிகண்டுகள் ஏன் ஆவணியை ஆண்டின் தொடக்கம் என்று கூறுகிறது என்பதற்கு தைப்புத்தாண்டு அணியினரோ அல்லது சித்திரைப் புத்தாண்டு அணியினரோ என்றுமே அது குறித்துப் பேச விரும்பியதில்லை. அது ஏன் என்ற விளக்கம் நச்சினார்க்கினியர் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளது.
சான்றாதாரங்கள்: நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
நெடுநல்வாடை - நச்சினார்க்கினியர் உரை
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0484.html________________________________________________________________