தமிழா? திராவிடமா? எது சரி? தினமணி இதழில் ஆய்வு

249 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 13, 2021, 2:06:08 AM8/13/21
to மின்தமிழ்
source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/11/நாம்-திராவிடர்கள்-அல்ல-3677694.html

ஆகஸ்ட் 11, 2021 

"நாம் திராவிடர்கள் அல்ல!..."

-- ஜனனி ரமேஷ்

------------------------------------------------------------
தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் 'தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் 'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் 'தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. 'திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை. 
------------------------------------------------------------

தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றும், கன்னட மொழி பேசுபவர்கள் தங்களைக் கன்னடர்கள் என்றும், மலையாள மொழி பேசுபவர்கள் தங்களை மலையாளிகள் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் மட்டும்தான் நெஞ்சை நிமிர்த்தி நம்மைத் "தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்ளாமல் "திராவிடர்கள்" என்று சொல்லிக் கொள்கிறோம். 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தென்னிந்தியாவை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் 'திராவிடம்' என்ற சொல்லே வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். காரணம், தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை 'திராவிடன்' என்ற பொதுவான சொல்லில் அழைத்துக் கொள்வதில்லை. 

வடமொழியில் 'தமிழ்' மொழியை 'திராவிடம்' என்று குறித்துள்ளனர். குமாரிலபட்டர் என்னும் வடமொழி அறிஞர், தென்னிந்திய மொழி இனத்தை 'ஆந்திர - திராவிட பாஷா' என்று பதிவு செய்துள்ளார். திராவிட ஆய்வில் முதலில் ஈடுபட்ட வெள்ளையர்கள் 'திராவிடம்' என்ற சொல்தான் 'தமிழ்' என்றாகி இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர். 

இதில் முக்கியப் பங்காற்றியவர் ராபர்ட் கால்டுவெல். வடமொழியில் 'ள' என்ற எழுத்தும் 'ட' என்ற எழுத்தும் ஒன்றுக்கொன்று மாறிவரும். 'திராவிடம்' என்பது 'திராவிளம்' என்றானதாம். அதேபோல் 'வ' என்ற எழுத்தும் 'ம' என்ற எழுத்தும் மாறிவரும். 'திராவிடம்' என்பது 'திராமிளம்' என்றாகிப் பின்னர் 'த்ரமிளம்' என்றும் 'தமிளம்' என்றும் 'தமிள்' என்றும் நிறைவாகத் 'தமிழ்' என்றானது என்பது ராபர்ட் கால்ட்வெல் பதிவு. 

சுற்றிவளைத்து வலியப் புனையப்பட்ட வேர்ச்சொல் ஆராய்ச்சி அது. அதாவது 'திராவிடம்' என்ற வடமொழிச் சொல்லிருந்துதான் 'தமிழ்' என்ற சொல் வந்தது என்று சொன்னதாகச் சொல்லி இருக்கிறார். 

தமிழ் என்ற சொல்லின் சிறப்பே அதிலுள்ள 'ழ' என்னும் எழுத்துதான். 'ழ' என்னும் எழுத்து, வேறெந்த ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவர்கள் வாயில் 'ழ' என்னும் சொல் நுழையாததாலும், அவர்கள் மொழிகளில் 'ழ' இல்லாததாலும், 'தமிழ்' என்ற பெயரை அப்படியே சொல்லாமல் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். நிறைவாக ராபர்ட் கால்டுவெல் சொன்ன 'திராவிடம் என்ற சொல்லிலிருந்து தமிழ்' என்ற வாதமே நிலைத்துவிட்டது. 

'திராவிடம்' என்பது 'திரமிழம்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். 'தமிழ்' மொழிக்குத் 'திரமிழம்' என்றொரு பெயரும் உண்டு. 'திரம்' என்றால் 'உறுதி' மற்றும் 'நிலை' என்று பொருள். 'மிழம்' என்றால் 'மொழி' என்று பொருள். ஆக 'திரமிழம்' என்றால் 'உறுதியான நிலையான மொழி' எனப் பொருள்படும். 

'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து 'தமிழ்' என்ற சொல் வரவில்லை. மாறாக 'தமிழ்' அதாவது 'திரமிழம்' என்ற சொல்லிலிருந்தே 'திராவிடம்' என்னும் வடசொல் உருவானது. 

தமிழ் மொழிக்கு 'திராவிடம்' என்ற பெயர் பழங்காலம் தொட்டே இருந்திருந்தால் 'திராவிடம்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூவாயிரம் ஆண்டு பழந்தமிழ் 'தொல்காப்பியம்' இலக்கண நூலில் எங்குமே 'திராவிடம்' என்ற சொல் இல்லை. 'தமிழ்' என்ற சொல்லே வழங்குகிறது. 

தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் 'தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் 'செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் 'தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. 'திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை. 

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. காரணம் 'இனிமை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'தமிழ்' என்ற சொல்லையே தமிழர்கள் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளனர். 

'இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்கிறது பிங்கல நிகண்டு. அதாவது, இனிமை, ஒழுங்கான இயல்பு ஆகியவற்றைக் குறிக்கத் 'தமிழ்' என்ற ஒற்றைச் சொல்லே போதுமாம். 

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான 'சீவக சிந்தாமணி' நூலின் ஆசிரியர் திருத்தக்கத் தேவர் 'இனிமை பொருந்திய சாயலை உடைய பெண்கள்' என்று குறிப்பிட 'தமிழ் தழீஇய சாயலவர்' என்று கூறுகிறார். அவர் 'இனிமை' என்ற சொல்லுப் பதிலாகத் 'தமிழ்' என்றே குறிப்பிடுகிறார். 

தென்னிந்திய நல உரிமைக் கழகம், நீதிக் கட்சி, இவற்றின் நீட்சியாக திராவிடர் கழகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி பேசுவோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். 

குறிப்பாக தமிழர்களை விடவும் மற்ற மொழியினரே பெரும்பான்மையாக இருந்தனர். எனவே 'தமிழர் கழகம்' என்று பெயர் வைப்பதில் தயக்கம் இருந்திருக்கலாம். ஆகவே, ஈ.வெ.ரா. 'திராவிடர் கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியதில் வியப்படைய ஏதுமில்லை. 

ஈ.வெ.ரா., 'திராவிடர் கழகம்' தொடங்கியபோது, அதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அதிக அளவில் இணைந்தனர். தாங்கள் தமிழர்களல்ல என்பது அடையாளப்பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், 'திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டியதில் வியப்பில்லை. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து தனித்தனி மாநிலங்கள் உருவான பின்னரும், 'தமிழன்' என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளாமல் 'திராவிடன்' என்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் அழைத்துக் கொள்வதன் காரணம்தான் தெரியவில்லை. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை 'சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு டமிலியன் ஸ்டாக்' என்று கூறாமல் 'சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு திராவிடியன் ஸ்டாக்' என்று சொன்னதன் காரணம் என்ன? 

தமிழும், திராவிடமும் ஒன்றா? அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுந்தானே முதல்வர்? தென் இந்தியா முழுமைக்குமான (தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கருநாடகம், கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கிய) திராவிடத்தின் முதல்வரா? தமிழும், திராவிடமும் வேறு வேறு எனில் 'டமிலியன் ஸ்டாக்' என்று சொல்லிக் கொள்வதில் என்ன தயக்கம்? 

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் 11-ஆம் நூற்றாண்டில் நிலவிய சோழ சாம்ராஜ்யமே தமிழர்களின் கடைசி சாம்ராஜ்யம் ஆகும். 

இதன் பின்னர் தமிழகத்தை ஆண்டவர்கள் விஜயநகரப் பேரரசு (கிருஷ்ணதேவ ராயர்), நாயக்கர்கள் (திருமலை), மராட்டியர்கள் (சரபோஜி), சுல்தான்கள்,  நவாப்புகள் (உருது), டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ்காரர்கள். 

இவர்கள் அனைவரும் தமிழர் அல்லாத தெலுங்கு, மராட்டியம், உருது, ஆங்கிலம் பேசும் வேறு வேறு மொழியினர். இவர்கள் தமிழ் மொழியை ஆதரித்தார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். 

பிராமணர் அல்லாத இயக்கமாகத் தோன்றிய 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', பின்னர் 'நீதிக் கட்சி'யாகவும், 'திராவிடர் கழக'மாகவும் உருமாறியது. பெயரில்தான் மாறுதலே தவிர மற்றபடி கொள்கை என்னவோ மூன்றுக்கும் ஒன்றுதான். 

நீதிக் கட்சியின் தலைவர்களாக விளங்கிய பிட்டி தியாகராய செட்டி (தெலுங்கு), டி.எம். நாயர் (மலையாளம்) ஆகியோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. 

தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்த சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கா ராவ், கர்ம வெங்கட் ரெட்டி, டி. பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா ஆகிய அனைவரும் தெலுங்கர்களே. 

காமராஜரும், அண்ணாவும் தேர்தலில் போட்டியிட்ட போது காமராஜரை 'பச்சைத் தமிழன்' என்று சொல்லி ஈ.வெ.ரா. ஆதரித்தார். 'காமராஜர் பச்சைத் தமிழன் என்றால் திமுக தலைவர் அண்ணாதுரை யார்' என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஈ.வெ.ரா. திமுகவினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். 

பிற்காலச் சோழர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் கடைசி 600 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கொண்டால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களின் எண்ணிக்கையும், காலமும் மிகவும் சொற்பமே. 
பெயரில்தான் தமிழ்நாடு. ஆனால் ஆட்சி செய்த 90% பேர் வேற்று மொழிக்காரர்கள். அதிலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோரே அதிகம். 

பல்லாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழி தனது பெயரை இன்னொரு மொழியிலிருந்து பெற்றது என்று கூறுவது அதன் தொன்மையையும், செம்மொழித் தகுதியையும் குறைப்பது போலாகும். ஆகவே, தமிழ் மொழிக்கு 'தமிழ்' என்று பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தானே தவிர வடமொழி பேசுவோரோ அல்லது வேறு மொழி பேசுவோரோ அல்ல என்பது தெளிவு. 
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமையைத் தராமல் 'திராவிடன்' என்று பொத்தாம்பொதுவாகப் பேசி, தமிழுக்கு உரிய எல்லாப் பெருமைகளையும், சிறப்புகளையும் தென் இந்தியாவைக் குறிக்கும் திராவிடத்துக்குத் தாரை வார்ப்பது நியாயம் அல்ல. 

தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினர் தங்களை 'திராவிடர்கள்' என்ற குடையின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட 'தமிழன்' தன்னை 'திராவிடன்' என்று சொல்லிக் கொள்வதற்கு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒற்றைக் காரணம்கூடக் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  

கட்டுரையாளர்: எழுத்தாளர்.
dinamani1.jpg
______________________________________________________________________

தேமொழி

unread,
Aug 13, 2021, 2:08:18 AM8/13/21
to மின்தமிழ்
தமிழா? திராவிடமா?  எது சரி?  தினமணி இதழில் ஆய்வு 

source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/13/தமிழுக்கான-ஸம்ஸ்க்ருத-சொல்லே-திராவிடம்-3679105.html

ஆகஸ்ட் 13, 2021 

"தமிழுக்கான சம்ஸ்க்ருத சொல்லே திராவிடம்!..."

-- கோதை ஜோதிலட்சுமி

------------------------------------------------------------
இன்று நாம் இங்கிலிஷ் மொழியை ஆங்கிலம் என்கிறோம். ஸம்ஸ்க்ருதத்தை வடமொழி, ஆரியம் என்கிறோம். அதுபோல, சம்ஸ்க்ருதத்தில் தமிழ் மொழியை ‘திராவிடம்’ என்று வழங்கினாா்கள். அதனால் தான், திராவிடம் என்று தேடும் பொழுது சம்ஸ்க்ருத உதாரணங்களே கிடைக்கின்றன.
------------------------------------------------------------

"பல நூறு ஆண்டுகளாக திராவிடம் இருந்ததாகக் கூறுகின்றனா். உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றே சொல்லலாம். எதில் இருந்தது, எங்கே இருந்தது என்ற வினாக்களுக்கு விடை தேட வேண்டும். தமிழ், திராவிடம் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா? இதற்கும் விடை தேடும் பட்சத்தில் திராவிடம், தமிழ் இரண்டுக்குமான தொடா்பைப் புரிந்து கொள்ள முடியும்.

‘திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம்’ என்று கூறுகிறாா்கள். எப்போதிலிருந்து இந்த வரையறை சொல்லப்படுகிறது? ‘தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்’ என்பதன் பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வழங்கிய ‘திராவிடம்’ என்ற சொல் அன்றைய பாரதத்தின் தேசிய சிந்தனைக்கானது.

மனுஸ்ம்ருதியில் ‘திராவிடம்’ இருக்கிறது என்பது உண்மை. ஆனாஸ், ‘மனுஸ்ம்ருதி தமிழரின் நூல் அல்ல. சம்ஸ்க்ருதம் தமிழுக்கு விரோதமானது, அம்மொழிக்கு உரியவா்கள் என்று சொல்லப்படும் ஆரியா்கள், திராவிடா் என்போருக்கு எதிரானவா்கள்’ என்பதுதானே இன்றைய திராவிட சித்தாந்தத்தின் நிலைப்பாடு? மனுஸ்ம்ருதி சம்ஸ்க்ருத நூல். ‘திராவிடம்’ சம்ஸ்க்ருதத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பது முதல் உண்மை.

தமிழ் இலக்கியங்களில் தொன்மையானவை சங்க இலக்கியங்கள். சங்ககாலப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், ஓா் இடத்தில் கூட ‘திராவிடம்’ என்ற சொல் இல்லை. தமிழும், திராவிடமும் ஒன்று எனில் ஏன் சங்க இலக்கியங்கள் அதுபற்றிப் பேசவில்லை?

இன்னும் சொல்லப்போனால், சங்க இலக்கியம் இறை, நான்மறை, மறை ஓதும் அந்தணா்கள், அவா்கள் நடத்தும் வேள்விகள் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. ஆனால், திராவிடத்தைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.

அடுத்து, ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’. அதிலும் ‘திராவிடசிசு’ என்ற சொல் வருகிறது. மீண்டும் வலியுறுத்த வேண்டியது, சௌந்தா்யலஹரி தமிழ் செய்யுள் அல்ல; சம்ஸ்க்ருத சுலோகம். அதிலே ஆதிசங்கரா் தன்னை ‘திராவிட சிசு’ என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாா். ஆதிசங்கரா் மட்டுமல்ல திருஞானசம்பந்தரும் ‘திராவிட சிசு’ என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறாா். இவா்கள் இருவருமே பாா்ப்பன வகுப்பைச் சோ்ந்தவா்கள்.

இதோடு கூடவே பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’ என்ற சம்ஸ்க்ருத வரலாற்று நூல் குறிப்பிடும் ‘திராவிடா்’ என்ற சொல் கவனம் பெறுகிறது. பாரத தேசத்தின் பிராமண வகுப்பைச் சோ்ந்தவா்கள் பற்றிப் பேசும் பொழுது, பத்து வகையான பகுப்புகள் இருப்பதாகவும், அதில் ஐந்து பிரிவினா் விந்திய மலைக்கு வடக்கில், கங்கைக் கரையோரங்களில் வாழும் பஞ்ச கௌடா்கள் என்றும், விந்திய மலைக்குத் தென்புறத்தில் வாழும் ஐந்து பிரிவினா் பஞ்ச திராவிடா்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.

விந்திய மலைக்குத் தென்பகுதியில் வாழ்ந்த மக்களை ‘திராவிடா்கள்’ என்று ராஜதரங்கிணி குறிப்பிடவில்லை. விந்திய மலைக்குத் தென்பகுதியில் வாழ்ந்த பிராமணா்களைத்தான் ‘பஞ்ச திராவிடா்கள்’ என்று சொல்கிறது. நாம் ஏற்க மறுக்கும் வா்ணாசிரமத்தில் பிராமண வகுப்பைச் சோ்ந்தவா்கள் திராவிடா்கள். பிராமணா்களைத் தமிழா் என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராஜதரங்கிணி நூலில் இருக்கும் ‘திராவிடா்’ என்ற சொல்லையும் தமிழரைக் குறிக்கும் சொல்லாக ஏற்க முடியும்.

அதுமட்டுமல்ல, விந்திய மலைக்குத் தென்பகுதி என்ற வரையரைப்படி இன்றைய மகாராஷ்டிர பகுதியும் அடங்கும். அங்குள்ள மக்களை ‘திராவிடா்’ என்று நாம் ஏற்போமா? ராஜதரங்கிணி அடிப்படையில் பாா்த்தால் அங்குள்ள பிராமணா்களும் திராவிடா்களே. இன்றைக்கும் அந்தப்பகுதியில் வாழும் பிராமணா்களில் ஒரு பிரிவினா் தங்கள் பெயரில் ‘திராவிட’ என்ற சொல்லைத் தம் இனஅடையாளாச் சொல்லாக (ராகுல் திராவிட்) வைத்துக் கொண்டிருக்கின்றனா். இதையெல்லாம் எந்த வகையில் ஏற்றுக்கொள்வது?

சமண பௌத்த சமயங்கள் ‘த்ரமிட’ என்று சொல்வது திராவிட என்ற சொல் என்பதிலும் அது பாரதத்தில் தென்னாட்டைக் குறித்தது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. சமண - பௌத்த நூல்கள் பெரும்பாலும் பாலி, பிராகிருத மொழிகளில் அமைந்தவை. ‘த்ரமிட’ என்ற சொல் பிராகிருத மொழிச் சொல்; தமிழ்ச் சொல் அல்ல.‘ஸ்ரீமத் பாகவதம்’, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைச் சொல்லும் புனிதமானநூல் என்று கருதப்படுவது. இதிலே ஐம்பத்தாறு தேசங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதிலே வரும் திராவிட நாடு நிலவியல் அடிப்படையில் தமிழகம் அல்ல. இன்றைய கா்நாடகத்தின் ஒருபகுதியும், மஹாராஷ்டிரத்தின் சில பகுதிகளும்.

ஐம்பத்தாறு தேசங்களில் சோழ தேசம், பாண்டிய தேசம், சேர தேசம் என்பனவும் அடங்கும். சிந்திக்க வேண்டியது, இந்த மூன்றையும் தமிழ்நாடு என்று ஏற்பதா அல்லது ‘திராவிட தேசம்’ என்பதை தமிழ்நாடு என்று ஏற்பதா?

வேதாந்த தேசிகா், ராமாநுஜா், ஆதிசங்கரா் ஆகியோா் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாா்கள். அவா்கள் மூவருமே பிராமணா்கள். ராஜதரங்கிணி சொல்லியிருக்கிற அடிப்படையில் அவா்கள் திராவிடா்கள். அவா்கள் பேசிய மொழி திராவிட மொழி. நாலாயிர திவ்யப்பிரபந்தம் அவா்களுக்கு வேதத்துக்கு நிகரானது. தமிழில் இருக்கும் வேதம். அதனால் அது திராவிட வேதம். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை நாம் ஏற்கிறோமா?

முன்னா், பாரத தேசத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் சம்ஸ்க்ருதம் கற்பதற்கு சிறந்த இடம் காஞ்சி. காஞ்சிபுரத்தில் வந்து படித்தவா்கள் தங்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்பித்த தமிழ்நாட்டுப் பண்டிதா்களை ‘திராவிடா்கள்’ என்றும் அவா்கள் பேசிய மொழியை ‘திராவிடம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனா்.

வடநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் படித்த குமாரிலபட்டா் தன்னுடைய ‘தந்திரவாா்திகா’ நூலில் இதைப் பதிவு செய்திருக்கிறாா். வேதாந்த தேசிகா் காஞ்சிபுரத்தில் பிறந்தவா். அவரும் ‘திராவிடா்’ என்றும் அவருடைய படைப்புகள் திராவிட மொழியில் அமைந்தவை என்பதும் பொருத்தமுடையவை.

கல்வெட்டு ஆதாரமாக விக்கிரம சோழனின் கல்வெட்டு காட்டப்படுகிறது. விக்கிரம சோழன் சாளுக்கிய சோழன். அவரது கல்வெட்டு அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. செப்பேடு உதாரணத்திலேயே புராணச் செய்தி இடம் பெற்றுள்ளது. புராணங்கள் ஆரியரின் கட்டுக்கதை என்றுதானே நாம் நம்புகிறோம். அதிலிருக்கும் செய்திகள் ஏற்புடையனவா? அதிலும் காஞ்சிபுரம் பற்றிய செய்திக்காகவே இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது. குமாரிலபட்டரின் கருத்தோடு ஒத்திருக்கும் செப்பேடு ஆதாரம் போலிருக்கில்லவா?

தமிழகத்தில் நாயக்கா்கள் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்க்ருதம் முக்கியத்துவம் பெற்றது. அப்பொழுது தமிழோடு ஸம்ஸ்க்ருதத்தை இணைத்து எழுதும் மணிப்பிரவாள நடை அதிகம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தக் காலத்தில் வாழ்ந்தவா் தாயுமானவா். அவா் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் பாண்டித்யம் மிக்கவா். அவா் ‘திராவிடம்’ என்று தமிழைச் சொல்லியிருக்கிறாா். பின் வந்த அறிஞா்களும் ‘திராவிடம்’ என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கின்றனா். அவை எல்லாம் நாயக்கா் ஆட்சிக் காலத்திற்குப் பிறகானவை.

கால்டுவெல் தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் இலக்கண ஒப்பீடு பற்றிய நூல் எழுதும் பொழுது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்றாா். இந்த வாா்த்தை உள்நோக்கத்தோடு கால்டுவெல் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல என்பது உண்மையாக இருக்கலாம். அறியாமையால் வெளிப்படுத்தி விட்ட சொல் என்றும் சொல்லலாம். தன்னுடைய கைப்பட அவரே இந்தச் சொல்லை மனுஸ்ம்ருதி மற்றும் குமாரிலபட்டரின் ‘தந்திரவாா்த்திகா’ நூலில் இருந்து எடுத்துக் கொண்டதாக எழுதியிருக்கிறாா்.

1856-ஆம் ஆண்டில் கால்டுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை மனுஸ்ம்ருதியில் இருந்து பயன்படுத்திய பின்னா், அயோத்திதாசா் அந்தச் சொல்லை ‘மனுஸ்ம்ருதி’ குறிப்பிடும் பொருளிலேயே கையாள்கிறாா். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக இந்தச் சொல் பயன்பாட்டுக்கு வந்ததும் ‘மனுஸ்ம்ருதி’ அடிப்படையில் தான்.

‘திராவிடம்’ என்பதற்கான சான்றுகள் அனைத்தும் சம்ஸ்க்ருத நூல்களில் இருந்தே சொல்லப்பட்டிருக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சான்றுகளைக் காட்ட இயலவில்லை. உண்மை யாதெனில், இன்று நாம் இங்கிலிஷ் மொழியை ஆங்கிலம் என்கிறோம். ஸம்ஸ்க்ருதத்தை வடமொழி, ஆரியம் என்கிறோம். அதுபோல, சம்ஸ்க்ருதத்தில் தமிழ் மொழியை ‘திராவிடம்’ என்று வழங்கினாா்கள். அதனால் தான், திராவிடம் என்று தேடும் பொழுது சம்ஸ்க்ருத உதாரணங்களே கிடைக்கின்றன.

தமிழ் சிறப்பான ஒலி அமைப்புக் கொண்டது. ‘ழ’ என்ற சிறப்பு ஒலியை உச்சரிக்க இயலாதவா்கள் தமிழைக் குறிக்க தங்கள் மொழியில் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினா். தனித்த அடையாளம் கொண்ட சங்கத் தமிழா்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை.

ஆக, தமிழுக்கான ஸம்ஸ்க்ருதச் சொல் திராவிடம். தமிழ் என்பதே சங்ககாலம் முதல் நம்முடைய மொழி அடையாளம். தமிழ் என்ற அழகான, உலகின் வேறு எந்த மொழிக்கும் இல்லாத உச்சரிப்பும் சிறப்பும் கொண்ட சொல்லை விட்டுவிட்டு, நமக்கு அந்நியா்கள் என்றும், நம் விரோதிகள் என்றும் கருதுவோரின் மொழியில் நமக்கு வழங்கப்படும் ‘திராவிடம்’ என்கிற சொல்லை நம்முடைய அடையாளம் என்று ஏற்பதை என்னவென்று சொல்வது?

கட்டுரையாளா்:ஊடகவியலாளா்.
dinamani2.jpg
______________________________________________________________________

தேமொழி

unread,
Aug 13, 2021, 8:07:16 PM8/13/21
to மின்தமிழ்
தமிழா? திராவிடமா?  எது சரி?  தினமணி இதழில் ஆய்வு 

source - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/aug/12/தமிழ்-தேசியத்தை-உள்ளடக்கியதே-திராவிட-தேசியம்-3678113.html

ஆகஸ்ட் ஆகஸ்ட் 12, 2021

தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!...

-- கே.எஸ். இராதாகிருஷ்ணன்

------------------------------------------------------------
திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.
------------------------------------------------------------
தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சம்ஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை ஆண்டவா்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரா்களாய் விட்டாா்கள் (அதிகாரம் 10, 44-ஆவது செய்தி, மனுதா்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. ‘தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹு ஆஸ்வாத்ய தவயத்’”என்கிறது ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீா் சுவட்டில் தென்னாட்டு பிராமணா்களை ‘திராவிட பிராமணா்கள்’ என்று குறிபிட்டுள்ளது. பாா்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வைணவ ஆச்சாரியாா் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றாா் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல ‘பாகவதம்’ என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56 நாடுகளில் திராவிட நாடும் ஒன்று.

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன் முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

இராமாநுஜா் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், ‘திருக்கோளூா் பெண்பிள்ளை ரகசி’யத்தில் இராமாநுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

திரமிளம்,“திராவிடம்”என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. திரமிள சங்கம் மதுரை சமண முனிவா் வஜ்ரநதியால் கி.பி 470-இல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்ற பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம்.

தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னா் விக்கிரம சோழனின் 11-ஆவது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது.“திரிபுவன சக்கிரவா்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிா்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம்– 714, பக் 670, செளத் இண்டியன் டெம்பிள் இன்ஸ்கிரிப்ஷன் - வால்யூம் 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது.

இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூா் தற்போதைய தமிழகத்தின் கரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
‘யிப்படி அநேகஞ் சதுா்யுகம் பூசை கொண்டருளிய தேவா் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோா்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தா் பிரியன் பக்தவத்சல பாா்பதி வல்லவன் பாா்பதி மநோகரன் பாா்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவா்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பாா்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்..’” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் புலவா் செ. இராசு).

இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவா் செ. இராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளாா். இந்தச் செப்பேடும் 1584-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுசோ்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூா்காங்கேயா் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.
‘செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பாா்வதி தேவியம்மான அா்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்..’ (பக் 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துபி ஆண்டில் எழுதப்பட்டது). இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், ‘திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் போ் பெற்றவரான, சான்றோா் குலத்தில், மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகா் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான..’ (பக் 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தா், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாா் போன்றவா்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.

சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞா் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 - 1936) வாழ்க்கை வரலாற்றை கபாலி சாஸ்திரி எழுதினாா். ‘வாசிஷ்ட வைபவம்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் திராவிட தேசத்தில் ‘சோ்மாதேவி’ என்ற இடத்தில் கிா்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவா்களால் பாரத்வாஜாச்ரமம் ஒன்று நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ - பழ. அதியமான்).

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளாா். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் திவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியா் ச.வே. சுப்பிரமணியம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றாா். பிஷப் காா்டுவெல் 1856-இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் திராவிடம் என்ற பதத்தை நிலைநாட்டிய அதே காலகட்டத்தில் அயோத்தி தாசா், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். 1899-இல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிஷப் காா்டுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனாா், ‘திராவிட நல் திருநாடு’”என்று குறிப்பிட்டிருக்கிறாா். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907-இல் ‘திராவிடாபிமானி’”என்ற வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறாா். ‘திராவிட உத்கல வங்கா’ என்று பாடுகிறது இரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.

பெரியாா், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழைமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தமிழா் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வாா்த்தை புழக்கத்தில் உள்ளது.

திராவிடம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயா் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.

கட்டுரையாளா்: செய்தி தொடா்புச் செயலளாா், திராவிட முன்னேற்றக் கழகம்.
dinamani3.jpg
______________________________________________________________________

mknp...@gmail.com

unread,
Aug 14, 2021, 11:24:24 PM8/14/21
to மின்தமிழ்
நல்லா திராவிட அரசியல் நடத்துகிறார்கள்.

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பரப்பை 'திராவிடம்' என்னும் பெயரில் பிரித்துக் கூறியது வைதிக மதத்தினர். தி.மு.க. வைதிக மதத்தை எதிர்க்கும் ஆனால் வைதிகர்களால் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட திராவிடம் என்னும் பெயரை தனது அரசியல் இலாபத்திற்கு ஏற்கும்! தமிழ் தேசியம் திராவிட தேசியத்திற்குள் அடங்குமென்று புதிய கருத்தியலை கட்டமைப்பது தி.மு.க. - வின் பச்சோந்தி தனத்தைக் காட்டுகின்றது. தமிழகத்திற்குப் அப்பால் யாராவது இன்று 'திராவிட தேசியத்தைப்' பேசுகிறாரா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்க்கு மதியில்லையா?  என்று கேட்கத் தோன்றுகின்றது.

மு. கமலநாதன் 

mknp...@gmail.com

unread,
Aug 14, 2021, 11:42:08 PM8/14/21
to மின்தமிழ்
'திராவிடம்' என்னும் பெயரில் தமிழரை ஆள தமிழகத்தைச் சுரண்ட இது ஒரு புதிய கருத்தியலாகும்.

இதனைப் புரிந்து கொள்ள கூடவா இக்கால தமிழரால் இயலாது போனது?

இத்தகைய புதிய முன்னெடுப்புகள் 21ஆம் நூற்றாண்டில் எடுபடாதென்பது தி.மு.க. அரசியல்வாதிகளுக்குப் புரியாது போனது ஏன்? எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதாலோ? இது இணைய செய்தி தொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட காலம். பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் சுதந்திரத்துடன் பேசப்படுகின்றது. ஆகையால் இத்தகைய கருத்து திணிப்பு அல்லது திரித்தல் வேலைகளெல்லாம் இக்காலத்தில் எடுபடாது. இதனை ஏற்பதற்கு உலக வாழ் தமிழர்கள் கேனையர் அல்ல.

மு. கமலநாதன்
Message has been deleted

Rathinam Chandramohan

unread,
Sep 3, 2021, 12:57:34 PM9/3/21
to mint...@googlegroups.com



Dr.R.Chandrதமிழ் என்ற சொல்லின் சிறப்பே அதிலுள்ள 'ழ' என்னும் எழுத்துதான். 'ழ' என்னும் எழுத்து, வேறெந்த ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவர்கள் வாயில் 'ழ' என்னும் சொல் நுழையாததாலும், அவர்கள் மொழிகளில் 'ழ' இல்லாததாலும், 'தமிழ்' என்ற பெயரை அப்படியே சொல்லாமல் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். நிறைவாக ராபர்ட் கால்டுவெல் சொன்ன 'திராவிடம் என்ற சொல்லிலிருந்து தமிழ்' என்ற வாதமே நிலைத்துவிட்டது. 

'திராவிடம்' என்பது 'திரமிழம்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். 'தமிழ்' மொழிக்குத் 'திரமிழம்' என்றொரு பெயரும் உண்டு. 'திரம்' என்றால் 'உறுதி' மற்றும் 'நிலை' என்று பொருள். 'மிழம்' என்றால் 'மொழி' என்று பொருள். ஆக 'திரமிழம்' என்றால் 'உறுதியான நிலையான மொழி' எனப் பொருள்படும். 

'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து 'தமிழ்' என்ற சொல் வரவில்லை. மாறாக 'தமிழ்' அதாவது 'திரமிழம்' என்ற சொல்லிலிருந்தே 'திராவிடம்' என்னும் வடசொல் உருவானது. 
correct

amohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123





On Sun, 15 Aug 2021 at 09:26, mknp...@gmail.com <mknp...@gmail.com> wrote:
தமிழுக்கான ஸம்ஸ்க்ருதச் சொல் திராவிடம். தமிழ் என்பதே சங்ககாலம் முதல் நம்முடைய மொழி அடையாளம். 

'தமிழுக்கான' சமசுகிரத சொல் 'திராவிடம்' அல்ல. தமிழர் வாழ்ந்த 'நிலப்பரப்பிற்கு' வைதிகர் கொடுத்த  அடையாளம்  'திராவிடம்' என்பதாகும். அது இந்நிலப்பரப்பில் வாழ்வோர் இராசச ('ரஜோ') குணமுடையோர் என்னும் பொருளில் வடமொழியிலிட்ட பெயராகும். இந்த இழிவு கூட புரியாமல்தான் கட்டுரையாளர் இத்தகைய புத்துருவாக்கத்தை அவர்தம் அரசியல் மேதைகள் கூறிய வண்ணம் எழுதியுள்ளார். கூலிக்கு மாரடிக்கும் அரசியல்வாதிகள் தமிழரின் தலையெழுத்தை நிர்ணயிக்க இயலாது. இதெல்லாம் ஓர் 'ஆய்வு' ஆகுமா?  

மின் தமிழின் தராதரம் கெட்டதே இத்தகைய தரமற்ற படைப்புகளால்தான். 

மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a95c906e-1765-440e-aa94-74cf50115ba7n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages