பெண்பண்பாடு

18 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 26, 2025, 11:45:24 PM (5 days ago) Sep 26
to மின்தமிழ்
ஆதியிலும் ஆதியான, மனித இனம் மலைக் குகைகளிலும் மரச்செறிவு மறைவுகளிலும் குழுக்குழுவாக உயிர் வாழ்ந்தது. உயிர் உற்பத்தி செய்யத் தெரியும். உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. உடை தெரியாது. குடி இருக்க வீடு வேண்டும் என்ற விபரம் தெரியாது. உறவு முறை தெரியாது. ஒழுக்கவிதி தெரியாது.
தேனை, மானை, எருது, எருமை, பறவையை வேட்டையாடத் தெரியும். வேட்டையில் கிடைப்பதைக் குழுவினர் சமமாகப் பகிர்ந்துதின்பர். சேமிக்கவும் தெரியாது. சமைக்கவும் தெரியாது. வேட்டையில் எதுவும் சிக்காவிட்டால், பட்டிணியை சமமாக பகிர்ந்துகொள்வார்கள்.
குழுவுக்குப் பெண்களே தலைமை. ஒரு பெண் தான் தலைவி. பெண் தலைமையில்தான் சகல குழுவும் வேட்டையாடுவார்கள். பெண்தான் உத்தரவிடுவாள். ஏவுவாள். பெண்தான் குழுத் தலைவியாக இருந்து நிர்வாகம் செய்வாள்.
'ஆதிகாலம் பொதுவுடமைச் சமூகம்’ என்றும் 'தாய்வழிச் சமூகம்’ என்றும் வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர். சரித்திரப் பாடப் புத்தகத்தில் 'கற்காலம்’ என்று குறிப்பிடப்படும்.
எல்லாப் பெண்களுக்கும் எல்லா ஆண்களும் பொது. 'இது இன்ன இவளின் பிள்ளை’ என்றுதான் அடையாளப்படுத்த முடியும்.’ இது இன்ன இவனின் பிள்ளை’ என்று கண்டுபிடிக்க முடியாது. பெண்தான் ஆண் மகனைத் தேர்வுசெய்வாள். அவள் விருப்பமே சட்டம்.
தாயே தலைமை ஏற்ற ஆதி காலப் பொதுவுடமைச் சமூகத்தில் அடிமைத்தனம் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஏற்றத்தாழ்வு கிடையாது. தலைமை இடத்தில் தாய்மை உன்னதம் பெற்று இருந்தது. கருணையும் நேயமும் இருந்தன.
விதையில் இருந்து முளைத்துப் பயிர் வளர்வதையும் அதன் கதிர்களைக் கசக்கினால், விதை மணிகள் ருசியான உணவாக இருப்பதையும் பெண் கண்டுபிடித்தாள். ஒரு கதிர் விதையில் பலநூறு பயிர்கள் செழிப்பதைக் கண்ணுற்றாள். வேட்டையாடித்தின்ற குழுவினர், விதைகள் விதைத்து வேளாண்மை செய்யப்பழகியது.
வேளாண்மை செய்யத் தெரிந்த பெண்கள் உழவின் அவசியத்தை உணர்ந்தனர். மிருதுவான மண்ணில் செழித்து விளைவதையும் இறுகலான மண்ணில் பயிர் பாதியில் வாடி, பட்டுப்போவதையும் கண்ணுற்றனர். இறுகலான மண்ணைக் குத்திக் கிளறி மிருதுவாக்கியபோது, உழவுவந்தது.
உணவு உற்பத்திக்கு மனிதர்கள் அதிகம் தேவைப்பட்டனர். கருப்பையும், கர்ப்பச் சுமைத் தகுதியும், பிள்ளை பெறுகிற தெய்வாற்றலும் உள்ள பெண், போற்றப்பட்டாள். கர்ப்பவதிகள் கொண்டாடப்பட்டனர். வேட்டையில் இருந்து விடுப்பு கிடைத்தது. கர்ப்பத்துடன் வீட்டில் இருக்கத் துவங்கியதுடன், நல்ல பராமரிப்புகளும் கிடைத்தன.
பெண், பிள்ளை பெறும் வரம் பெற்று இருந்ததே பெண்களும், நிலமும் பெருகப் பெருக... சொத்து உடமையும் வர்க்கமும் தோன்றின. பெண், தலைமை ஸ்தானத்தில் இருந்து கீழ் இறங்கி, சமூக அடிமையானாள். காமப் பொருளாகவும், பிள்ளை பெறும் எந்திரமாகவும், அடுப்பங்கரைக் கைதியாகவும் சீரழிந்த பெண்ணைக் கலையும் காவியமும் பொய்யாகப் புகழ்ந்தன. இல்லத்தரசி, தாய்மைத் தெய்வம், பூமி மாதா, தாய் மொழி, நதித் தேவதை, தாய் நாடு என்று உன்னதமானவற்றை எல்லாம் தாய்மையுடன் உவமைப்படுத்தி பெருமைப்படுத்திவிட்டு, சமூக யதார்த்தத்தில் பரிபூர்ண அடிமையாக்கப்பட்டாள்.
காலம் பல்லாயிரம் கடந்தபின்பும், பல லட்சம் தலைமுறைகள் தோன்றி வளர்ந்து மறைந்த பின்னாலும் தாய் வழிச் சமூகம் இருந்ததன் சுவடுகளை இன்றைய வாழ்விலும் உணர முடியும். இவை பண்பாட்டின் முத்திரையாகிறது.
இன்றைக்கும் குடும்ப வாழ்வியல் பண்பாட்டில் தாய்மாமன் உறவு முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம் தாய்மாமன் கௌரவமான மரியாதைபெறுகிறான். அக்கா தங்கச்சிகள்கூடப் பிறக்காத என் போன்றோர், 'தாய் மாமன் சிம்மாசனம் கிடைக்கவில்லையே’ என்று மனசுக்குள் புலம்புகின்றனர். ஏக்கப் புலம்பல்.
பரிசம்போட்டு கல்யாணம் செய்கிற பண்பாட்டு பழக்க வழக்கம் இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்துவருகிறது.
பரிசம் என்பது மணமகளுக்குரிய தொகை, மணமகன் வீட்டார் ஆயிரம், ரெண்டாயிரம் என்று பரிசுத் தொகை தந்துதான் 'பெண் அழைப்பு’ நடத்த முடியும்.
வழிபாட்டுப் பண்பாட்டில் சமூகத்தின் மேல் தளத்துக்கும் இன்னும் வராத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஆதி இனக் குழுச்சமூகத்தின் தாய் வழிச் சமூகச்சுவடாக அம்மன் வழிபாடு இருந்துவருகிறது. தாய் வழிச் சமூகத்தின் எச்சம், தாய் தெய்வ வழிபாடு.
அங்காளம்மன், திரௌபதி அம்மன், மாரியம்மன், காளியம்மன், முப்பிடாதி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், காமாட்சியம்மன், பாளையத்தம்மன், கருமாரியம்மன் என்று பல்லாயிரம் அம்மன்கள் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. அம்மனை வழிபடுகிற எவரும் அப்பன் யார் என்று தேடுவதில்லை. தாய் வழிச்சமூகத்தில் அப்பனைத்தேடாத பிள்ளைகளைப் போலவே, இப்போதும் அம்மனுக்கு பூஜையும் பொங்கலும் நடத்துகிறவர்கள் அப்பனைத் தேடுவதில்லை. அம்மனுக்கு ஓர் அப்பனைச் செய்துவைப்போம் என்று கற்பனையோ - கற்பிதமோ - கூடச் செய்வதில்லை. எல்லாவிதமான தெய்வீக ஆற்றல்களும் நிரம்பியவளாக அம்மன் நினைக்கப்படுகிறாள். ராட்சஸ ஆண் மந்திரவாதிகளை வென்று வீழ்த்துகிற வீராங்கனையாகவே கதைப் பாடல்கள் உள்ளன. அம்மனைப் பற்றிய தமிழ்த் திரைப்படங்களும் அப்படித்தான் சித்தரிக்கின்றன.
இன்றைக்கும் சமூகத்தின் பெரும் பகுதியான விவசாயத் தொழிலாளிகள் குடும்பங்களில் ஆதிச் சமூகப் பண்பாட்டுக் கூறுகளைக் காணமுடியும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பங்களில் எல்லாம் குடும்ப நிர்வாகத் தலைமை, பெண்கள் கையில் இருப்பதைக் காணலாம். கூலி வேலைக்குப் போய்விட்டுவருகிற கணவன், குடித்த செலவு, டீக் கடைச் செலவுபோக மிச்சப் பணத்தைப் பெண்டாட்டி கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வான். குடும்பத்தின் தலைவியாக இருந்து கடன், உடன், ஊர்த் திருவிழா, நல்லது, பொல்லது என்று சமூக வாழ்க்கை முழுவதையும் அவளே பொறுப்பேற்று நடத்துவதைக் காணலாம்.
'பொம்பளை நாட்டாமை நடக்கிற குடும்பம்தான் சீரும் சிக்கனமுமாய் செழித்து நிற்கும்.' 'கோழி கூவி பொழுது விடியாது’ என்பது ஆணாதிக்கச் சமூகத்தின் சொலவடை. கூலித் தொழிலாளர், எளிய விவசாயிகள் போன்ற அடித்தட்டு உழைப்பாளிக் குடும்பங்களில் கோழிகளின் தலைமையிலேயே குடும்ப விடியல் நடக்கிறது.
என்னுடைய சிறுகதைகளில் 'கொண்டாட்டம்’ 'கோழி கூவியும்’ போன்றவை, பெண் தலைமையில் சிறக்கிற குடும்ப யதார்த்தத்தைச் சித்தரிக்கின்றன.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பண்பாடுகளில் ஆதிகாலச் சமூகத்தின் மரபுகள் மிச்சம் மீதியாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த சமுதாயமோ, (மேல் தட்டு, நடுத்தட்டு வர்க்கம் உள்ளிட்டு) வர்க்காதிக்க சமுதாயம், வர்ணாசிரம சாதீய ஆதிக்கச் சமுதாயம். ஆணாதிக்கச் சமுதாயம்.
பெண் இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம்தான், குடும்பங்களில், படிப்பு என்பது ஆணுக்குத்தான். மிச்சம் மீதியான இடத்தில்தான் பெண் படிப்பு. 'உத்தியோகம், புருஷ லட்சணம்' என்ற ஆணாதிக்கப் பழமொழி இன்றும் உயிர்ப்புடன் வாழ்கின்றன.
பொறியியல் முடித்து ஐ.டி. கம்பெனியில் பணியாற்றுகிறான், ஆண்மகன். உத்தியோகமும் ஊதியக் கணிசமும் அவனுக்கு மரியாதை தருகிற மகுட விஷயம். திருமணத்துக்கு இதெல்லாம் மார்க்கெட் ரேட்டை உயர்த்துகிற ஐட்டம்.
பொறியியலில் உயர் கல்வி கற்று, ஒரு கம்பெனியில் நல்ல ஊதியம் பெறுகிற பெண்ணுக்குத் திருமணப் பேச்சுவந்தால்... உத்தியோகம், ஒரு விவாதப்பொருள். தொடர்வதா, விடுவதா? ரெண்டுக்கும் பெண் தயாராக இருந்தாக வேண்டும். 'ஹவுஸ் ஒஃப்’பாக மட்டுமே இருப்பதற்கும் அந்த எம்.இ. பட்டதாரி சம்மதிப்பதற்கான மனத் தயாரிப்புடன் இருந்தாக வேண்டும். இப்படி ஒரு நிர்ப்பந்தம் மன நெருக்கடி.
மாதம் 40,000 சம்பளம் வாங்கி, ஏ.டி.எம். கார்டுடன் உலவிய ஒரு பெண், பத்துக்கும் நூறுக்கும்கூட கணவன் கையை எதிர்பார்த்தாக வேண்டிய அவலத்தை ருசி பார்த்தாக வேண்டும். நகர் சார்ந்த பிரச்னைபோல இது தோன்றும். உண்மையில் ஒட்டு மொத்தச் சமூகமே இப்படித்தான் இருக்கிறது.
தாயும் தகப்பனும் ஒரே ஒரு மகளுடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். முதியார்களின் ஒரே கைத் துணையும், மனத் துணையும் அவள்தான். திருமணம் என்று வந்தால், அவளைப் பணம் செலவழித்து, இழந்தாக வேண்டும். அதுவே மகனாக இருந்தால்... இழப்பில்லை. 40 பவுன் நகை வரவோடு, ஒரு 'வேலைக்காரி'யும் இலவச இணைப்பாக வந்துசேரும்.
இப்போதும் கிராமத்தில் ஒரு பேச்சு உண்டு. ஊர் மடத்தில் பத்துப் பதினைந்துபேர் ரொம்ப நேரம் பேசிக் களைத்த அயற்சியில் சற்று நேரம் மௌனமாக இருக்கிறார்கள். அந்நேரம் ஒருத்தர் வருகிறார். கலகலப்பு, சளசளப்பு இல்லாமல், எல்லாரும் 'கம், கம், கம்’மென்று மௌனமாக இருக்கின்றனர். வந்தவர் கேட்பார். 'என்ன, பொம்பளைப் புள்ளை பெத்த வூடு மாதிரி கெடக்குது. எழவு வீடு மாதிரி...'
ஆண் பிள்ளை பிறந்தால் அந்த வீடே குதூகலிக்கும், கொண்டாடி மகிழும். பெண்கள் குலவை போடுவார்கள். கூட்டுக் கலவையாக மூன்று முறை குலவை போடுவார்கள்.
குலவைச் சத்தமே கிராமம் முழுக்க மௌனமாக ஒரு சேதி சொல்லிவிடும். 'யார் வீட்டிலோ ஆம்பளைப் புள்ளே பொறந்துருக்கு'
அதுவே பெண்பிள்ளை என்றால்... பிரசவ வீடே இழவு வீடுபோல கனத்த அமைதி இறுக்கமாக நெருக்கும். யாரும் யாருடனும் பேசமாட்டார்கள். வருத்தத்துடன் 'உச்’ கொட்டிக்கொள்வார்கள். பிள்ளை பெற்ற பச்சை உடம்புக்காரியின் மனசை நோகடிப்பார்கள். 'மாரியாத்தாவுக்கு பதினைஞ்சு பவுனுக்கு செலவு பொறந்துருக்கு.'
பெண் சார்ந்த சமூகப் பண்பாட்டில் ஆணாதிக்க மமதை கொடிகட்டிப் பறக்கும். பறக்கிறது. பிறந்த கணத்திலேயே அவமதிப்பைச் சந்திக்கிறாள், ஒரு பெண் சிசு. சில இடங்களில் மரணத்தையே சந்திக்க நேரும்.
எருமை மாடு சினையாக இருக்கும். அதை வளர்த்த பெண்ணும் நிறைமாதச் சினை. முதல் நாள் மாடு கன்று போடும். பொட்டைக் கன்று. வீடே மகிழ்ந்து கூத்தாடும். சீம்பாலைப் பீய்ச்சி, கடம்பு (திரட்டுப்பால்) செய்து, வீடே உண்டு மகிழ்ந்து, சொந்த பந்தங்களுக்குக் கொடுத்து கூத்தாடுவார்கள். ரெண்டு நாள் கழித்து, பெண்ணுக்குப் பிரசவம் நடக்கும். பொட்டைப் பிள்ளை பிறக்கும். வீடே இழவுக்கோலம் பூண்டு வாய் செத்துக் கிடக்கும். ஆள் ஆளுக்கு அனுதாபச் சொல்லும் வசவுச் சொல்லுமாக திட்டித் தீர்ப்பார்கள். 'எருமமாடு பொட்டைக்கன்று போட்டா... கூத்தாட்டம். எங்கம்மா பொட்டைப்புள்ளே பெத்தா... வசவுகளா? இது ஏன்? எரும மாட்டைவிட எங்க அம்மா மட்டமா? நா பொறந்தப்பவும் இப்படித்தான் அவமதிச்சாகளா?’ என்று எனது 'பிறந்தவுடன் அவமதிப்பு’ என்ற சிறுகதை சித்தரிக்கும். இதே சித்தரிப்பு, 'கருத்தம்மா’ படத்தில் காட்சிகளாக ஓடும்.
என் மனைவி பொன்னுத்தாய் மேலாண்மறைநாடு கிராமத்தில் குழந்தை பெற்றாள். 'பெண் குழந்தை' என்றார்கள். 'ஆளுக்கு அஞ்சு ரூபா தாரேன்... எல்லாரும் கொலவை போடுங்க' என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தேன். எந்தப் பெண்ணும் சம்மதிக்கவே இல்லை. 'பொன்னுச்சாமிக்குக் கோட்டி புடிச்சிருச்சா? பொம்பளைப் புள்ளை பொறந்தா, கொலவையா போடுவாக?'
மிட்டாய் பாக்கெட் எடுத்து, உடைத்து, எல்லாருக்கும் 'இனிப்புச் செலவு’ செய்தேன். ஒரு சிலர் தயக்கமாய் பெற்றுக்கொண்டனர். வாயில் போடவில்லை. மற்ற பெண்கள் கண்டனச் சீற்றத்துடன் வாங்க மறுத்துவிட்டனர்.
மிட்டாய் வழங்கும் மகிழ்ச்சிக் கூத்தாட்டத்தை நான் நிறுத்தவில்லை. பள்ளிக் கூடம், ஊர் மடம், டீக் கடை எல்லா இடங்களிலும் ஆட்களைத் தேடித் தேடிக் கொடுத்தேன். என்னுடைய 'கூறுகெட்ட மகிழ்ச்சியை' சொல்லிச் சொல்லிப் பரிகசித்தனர்.
ஒரு சித்தி காட்டுவேலை பார்த்து, வெயிலில் வெந்து மாய்ந்து, வந்தார்கள். அவர்களிடம் முட்டாசைக் கொடுத்தேன். 'பொன்னுத்தாய்க்குக் கொழந்தை பொறந்துருச்சா?' என்று மகிழ்ச்சிப் பரவசத்துடனான விசாரிப்புடன் வாயில்போட்டுச் சுவைத்துக்கொண்டே' என்ன புள்ளே?' என்றார்கள். 'பொம்பளைப் புள்ளே' என்றேன். வாயில்போட்டு சுவைத்து, எச்சிலாக்கிய முட்டாசை உள்ளங்கையில் துப்பி, அந்த எச்சி மிட்டாயை என் கையிலும் திணித்துவிட்டு, நாற வசவுவைதுவிட்டுப்போனார்கள்.
அந்த மகள்தான் வைகறைச்செல்வி.
இந்தச் சம்பவத்தை எழுதி குட்டிச் சிறுகதையாக ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். 'மகள் வாசம்’ என்ற தலைப்பில் முத்திரைப் பரிசுடன் பிரசுரமாயிற்று.
இறுகிப்போன கிராமத்துப் பண்பாட்டை... பெண் சார்ந்த பிற்போக்குப் பண்பாட்டை... எதிர்த்துப் பரிகாச விமர்சனம் செய்கிறது, என்னுடைய செய்கையும், சிறுகதையும்.
கூறுகெட்ட என்னுடைய கூத்தாட்ட சுபாவம் ஊருக்கெல்லாம் பழகிப் போனதால், என் தம்பி கரிகாலனுக்கு மகளாக, ராஜ அன்னம் பிறந்தபோதும், என்னுடைய இளைய மகள் தென்றல் பிறந்தபோதும் என்னுடைய மிட்டாய்ச் செலவு பெரிய எதிர்ப்பையோ, மறுப்பையோ சந்திக்கவில்லை. நான் ஒருவன் மிட்டாய் கொடுத்துவிட்டதால் என்ன மாற்றம் நிகழ்ந்தது? இன்றைக்கும் பெண் பிள்ளை பிறந்தால், 'கம், கம், கம்’... மௌன இறுக்கம்தான். ஆண் பிள்ளை என்றால் குலவைத் கூத்தாட்டம்தான்.
கல்யாணம் எங்கே வைத்து? பெண் வீடா, மாப்பிள்ளை வீட்டிலா? இதெல்லாம் பண்பாடு சார்ந்தது. தேவமார், நாயக்கமார் வீடுகளில் பெண் அழைப்பு நடத்தி, மாப்பிள்ளை வீட்டில்வைத்து முகூர்த்தம் நடத்துவார்கள். பெண் வீட்டுக்கு 'மறு வீடு' வந்து, சாந்திமுகூர்த்தம் தொடங்குவார்கள். நாடார்கள் வீடுகளில் இதுவே வேறு மாதிரி. பெண் வீட்டில் பந்தல்போட்டு, முகூர்த்தக்கால் ஊன்றி, வாழை நட்டு, அங்குதான் முகூர்த்தம் நடத்துவார்கள். மாப்பிள்ளை மேள தாளத்துடன் மாலை அலங்காரத்துடன் வந்தால், பெண்ணின் சகோதரர் பந்தல் வாசலில் மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, மோதிரம் மாட்டி வரவேற்பார்.
10, 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் கிராமத்தில் பெண் பார்க்கும் படலம் சினிமாத்தனமாக இருக்காது. தெருவில் தண்ணீர் எடுக்கப்போகச் சொல்வார்கள் பெண்ணை. மாப்பிள்ளை கடை வாசலில் நின்று, நடை, உடை, அழகைப் பார்த்துக்கொள்ள வேண்டியது. எந்தப் பிரகடனமும் இல்லை. சம்பிரதாயம் இல்லை. உபசரிப்பு, வரவேற்பு எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் குணம், சுபாவம், பொருளாதார நிலவரம் விசாரித்துக்கொள்வார்கள். திருப்தி வந்தால் பேச்சுவார்த்தைக் கல்யாணம் இல்லை என்றால்... இல்லை. ஜாதகம், ஜோஸ்யம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 'ஜாதகம் பொருந்தலே’ என்ற பேச்சு கிராமத்தில் ஒலித்ததே இல்லை. ஜாதகப் பொருத்தம் பார்க்கிற பழக்கம் எல்லாம் எங்கிருந்து வந்து, எப்படிப் பரவியது என்பது பண்பாட்டுச் சீரழிவு குறித்து ஓர் ஆய்வு செய்யலாம். எந்தப் புண்ணியாளர் செய்யப் போகிறாரோ...?
கிராமத்து மரபுப்படி நான், எங்கள் வீட்டுப் பிள்ளைகள் யாருக்கும் ஜாதகம் எழுதிவைக்கவில்லை. எங்களுக்கும் ஜாதகம் இல்லை. எங்கள் அப்பா செல்லச்சாமிக்கும் ஜாதகம் கிடையாது. என்னுடைய திருமணம் நவம்பர் 3-ந் தேதி என்று முடிவாயிற்று. காலண்டரில்தான் முகூர்த்த தேதி பார்த்தோம். என் திருமணத்தைத் தலைமை ஏற்று நடத்தித்தருகிற அப்போதைய கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஏ.பாலசுப்பிரமணியத்துக்கு மத்தியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் 3-ந் தேதிதான். பிறகென்ன? முகூர்த்தம் இல்லாத நாளில் நவம்பர் 5-ந் தேதி திருமணம் நடந்தது, கோலாகலமாக.
ஆக எங்கள் பிள்ளைகளுக்கு ஜாதகம் எழுதிவைக்கத் தோன்றவில்லை. அது ஒரு பிரச்னையாக இருந்தது. என்னுடையாக மூத்த மகள் வைகறைச் செல்விக்கு வரன் தேடத் துவங்கியபோது, முதல் கேள்வியாக சந்தித்தது, 'ஜாதகம் இருக்கா?' 'இல்லை’ என்ற பதிலை யாரும் முற்போக்காக எடுத்துக் கொள்ளவில்லை. மூல நட்சத்திரமோ, செவ்வாய் தோஷமோ என்றுதான் சந்தேகப்பட்டனர்.
மூல நட்சத்திரம்கூட பெண்ணுக்கு என்றால் 'நிர்மூலமாம்' ஆணுக்கு என்றால் ''ஆண் மூலம் ராஜ யோகமாம்'. ஆணுக்கு செவ்வாய்தோஷம் என்றால் ஒரு கோயிலுக்குப் போய் பரிகாரம் பண்ணினால் போதும். நிவர்த்தியாகிவிடும். பெண்ணுக்கு செவ்வாய்தோஷம் என்றால், பரிகாரமே இல்லையாம்...
பெண் எல்லா இடங்களிலும் அநீதிக்கு உள்ளாகிறாள். பிறந்தபோது, பள்ளிக்குப் போகும்போது, உயர்கல்வி கற்கச் செல்லும்போது, திருமணத்தின்போது வளைகாப்பின்போது, பிரசவத்தின்போது, பிள்ளைக்கு இழைகட்டுகிறபோது... எல்லா இடங்களிலும் நேரங்களிலும் மாப்பிள்ளை வீட்டாரின் நெறியற்ற நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்தாக வேண்டிய அவமானம்.
'அருணாச்சலம்’ படத்தில் மூண்றரை அடி உயரத்துக்கு ஒரு மாப்பிள்ளையின் தாய் மாமன் வந்து பயங்கர அலப்பரை கொடுப்பார். தாளவே முடியாத அலட்டல்களும், பெருமையடிப்புகளும், உத்தரவுகளும் சட்டாம்பிள்ளைத் தனங்களும் செய்வார். அது நகைச்சுவைக் காட்சி. பல மாப்பிள்ளை வீட்டார்கள் அதை விட மட்டரகமான குள்ள மனமும், கோமாளிப் புத்தியும் கொண்டவர்களாக இருக்கின்றனர். பெண் சார்ந்த சமுதாயப் பண்பாட்டில் பெண் வீட்டார் படுகிற அவமானங்களும் அவஸ்தைகளும் கொஞ்சமல்ல. இதில் 'அருணாச்சலம்’ படத்துக் கோமாளிபோல, பல மாப்பிள்ளை வீட்டார்கள் குறைந்த பட்சத்தகுதிகூட இல்லாதவர்களாக இருந்தபோதிலும் அதிகாரத்திலும் அலைக்கழிப்பதிலும் குறைவைப்பதில்லை. முக லட்சணமோ... குண லட்சணமோ இல்லாமற் போனாலும் கூட, பணத்தையே பெரிதென மதித்து வணங்கித் திரிகிற மாப்பிள்ளை வீட்டார் சிலர், போடுகிற ஆட்டமும், நிர்ப்பந்தமும் கொஞ்சமல்ல. ரொம்ப ரொம்ப அத்துமீறல்கள். வளைகாப்பு விழாவை எவ்வளவு கோலாகலமாக நடத்த வேண்டும் என்பதில் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள், நிர்ப்பந்தங்கள். எந்த மருத்துவமனையில் பிரசவம் என்பதில், அதிகாரத்துவமான கண்கணிப்புகள். விசாரிப்புகள்.
இதில் மரபுகளையும் நெறிகளையும் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப - தங்கள் வீட்டுச் சுற்றத்தார் வசதிக்கு ஏற்ப மீறுவதற்கும் தாவுவதற்குமான அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, பெண் வீட்டாரை அடிமைகளைப்போல நடத்துகிற கொடுமைகள்... அலைக்கழித்து அவமதிக்கிற அநாகரிகம். பெண் கொடுத்தவர்கள் 'சம்பந்தகாரர்கள்’ சமமான பந்தம் கொண்டவர்கள். நெருக்கமான சமத்துவமான உறவுக்காரர்கள். ரத்த உறவினர்களைவிடவும் நெருக்கமான சமமான பந்தம் கொண்டவர்கள். தன்னுடைய குடும்பத்தையே - மான மரியாதையையே - நம்பி ஒப்படைத்தவர்கள்.
மனித நாகரிகம்கொண்ட எவரும் சம்பந்தக்காரர்களைச் சமமாக மதித்துப் போற்றுவார்கள். எல்லாவற்றிலும் மனநெருக்கம் காட்டி, உறவின் அடர்த்தியை வெளிப்படுத்தி மரியாதை காட்டுவார்கள். பரஸ்பரம் மரியாதை காட்ட வேண்டும். ஆனால்... இப்படியும் பலர்? 'அருணாச்சலம்’ படத்து மூண்றரை அடி உயரத்து மாமனைப் போன்று, பலர்? தாய்வழிச் சமூகமாக, தாயைத் தலைமையாக வைத்துத் தொடங்கிய மனித குலப் பயணம் வந்து நிற்கும் இடம் இதுதான். இப்படித்தான் 'அம்மானை’ வணங்குகிற காலத்திலேயே ''அம்மன்கள்'' கதியும் அவலமும் இதுதான்.
பெண்ணின் உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டுத்தான் மனைவியாக ஒடுங்கி வாழ்ந்தாக வேண்டிய அவலம். குணம் பெருமை காட்ட முடியாது. கற்ற கல்வியைப் பயன்படுத்த இயலாது. அடிமையைப்போல ஒடுக்கு முறைக்கு உட்பட்டு வாழ நேர்ந்துவிடுகிறது. அன்பையும், பாசத்தையும், உபசரிப்பையும், விசுவாசத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய சமத்துவமான உறவு நிகழ வேண்டிய தாம்பத்தியத்தில், அடிமைத்தனமோ, அதிகாரத்துவமோ துளிகூட தென்படக் கூடாது.
ஓர் அடிமையிடம் பணிவை எதிர்பார்க்கலாம். பாசத்தையும் அன்பையும் எதிர்பார்க்க முடியுமா?
பண்பாடு என்பது, மனித அன்பிலும் பண்பிலும் முளைத்தெழ வேண்டும். அன்புகாட்டி அன்பைப்பெற வேண்டும். மதித்து, மதிப்பைப் பெற வேண்டும். மரியாதை தந்து மரியாதை பெற வேண்டும்.
பிறரின் சுயமரியாதையை மதிக்கிறவரின் சுயமரியாதைக் குன்றாமல் சுடர் வீசும்.
Reply all
Reply to author
Forward
0 new messages