இலக்கிய நடையில் எனது மீள்பார்வை-3

8 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Oct 24, 2025, 6:24:55 AM (21 hours ago) Oct 24
to மின்தமிழ்

எனக்கு இட்லியென்றால் மிகவும் பிடிக்கும். தினமும் போட்டாலும் சலிக்காமல் சாப்பிடுவேன். அது அந்தக் காலம். இப்போது இட்லியென்றால் கொஞ்சம் சலிப்புத்தட்டுகிறது. வெறுப்பு அல்ல – சலிப்புமட்டும்தான். கொஞ்சக் காலத்துக்கு வேறு ஏதாவது உண்ணலாம். தோசை, பணியாரம், பொங்கல் இது மாதிரி.

“உனக்கு என்ன பிடித்தால் என்ன, என்ன பிடிக்காவிட்டால் என்ன” என்று கேட்க நினைக்கிறீர்களா?

இது பாரதிராஜா படத்தில் ‘காந்திமதி’க் கிழவி பேசுவதைப் போன்றது.

இலக்கியப் பாணியில் சொல்வதானால் – இது உள்ளுறை உவமம்.

இன்றைய பாணியில் சொல்வதானால் – இது சாடைபேசுவது.

வீட்டில் அழகிய மனைவி இருக்கும்போது வெளியில் ‘மேய்ந்துவிட்டு’ வரும் ஒருவன் வீதியில் நடந்துபோனால், திண்ணையில் உட்கார்ந்துகொண்டு கிழவி சொல்வாள் –

“கிளிய விட்டுட்டு குரங்கப் பிடிச்சுட்டு அலையுறாய்ங்க”

இதுதான் உள்ளுறை உவமம். 

கிளி < ---- > அழகிய மனைவி

குரங்கு < ---- > பரத்தை

சரி, இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?

நான் முதலில் சொன்ன உள்ளுறை உவமம் இதுதான்.

பிடித்த இட்லி <–-- > தொடரடைவு உருவாக்குவது.

சலிப்பு

தோசை, பணியாரம், பொங்கல்  < --- > இலக்கிய நடையில் எனது மீள்பார்வை, அந்தநாள் ஞாபகம் வந்ததே , ஓடைப்பட்டியும் நெடுநல்வாடையும்.

இந்த மாதிரி எழுதி என் சலிப்பைப் போக்கி மீண்டும் இட்லி (தொடரடைவு)க்குத் திரும்பிவிடுவேன்.

இப்போது நான் எழுதப்போவது -- இலக்கிய நடையில் எனது மீள்பார்வை – 3

இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு பற்றியது. சங்க இலக்கியங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை பத்துப்பாட்டு நூல்கள். நெடும்பாடல்களானதால் ஒரு முழுமை கிடைக்கும்.

இவற்றுள்ளும் எனக்கு மிகவும் பிடித்தவை முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும். எது முதல், எது அடுத்து என்றுகூடச் சொல்ல முடியாது. இரண்டும் ஒன்றுதான். முல்லைப்பாட்டை ஏன் முதலில் சொல்கிறேனென்றால் பத்துப்பாட்டு வரிசையில் அது முதலில் வருகிறது. அவ்வளவுதான்.

இனி நான் சொல்லவேண்டியதற்கு வருகிறேன்.

--------------------------------------------------------------------------------------

மதுரையில் நான் இருக்கும்போது ஒருநாள் எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மதுரை அருகிலுள்ள ஒரு கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் பேசினார். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் அவர் என்னைப் பற்றி அறிந்திருக்கிறார். அந்த உரையாடல் இவ்வாறு சென்றது.

“ஐயா, வணக்கம். நான் (இந்தக்) கல்லூரியிலிருந்து (இன்னார்) பேசுகிறேன். நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர்”

“வணக்கம், சொல்லுங்கள்”

“ஐயா, தாங்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்கள் முதுகலை மாணவரிடம் பேசவேண்டும்”

“சரி, எதைப்பற்றிப் பேசவேண்டும்?”

“சங்க இலக்கியம் பற்றி, ஐயா”

“சரி, பேசுகிறேன்”

“ஐயா, என்ன தலைப்பு?”

“உங்கள் முதலாண்டு மாணவர்கள் பத்துப்பாட்டில் என்ன படித்திருக்கிறார்கள்?”

“ஐயா, முல்லைப்பாட்டு படித்திருக்கிறார்கள்”

“என்றால், இரண்டாம் ஆண்டு மாணவர்களும் அதைப் போனவருடம் படித்திருப்பார்கள்தானே?”

”ஆமாம் ஐயா”

”அப்படியென்றால், நான் முல்லைப்பாட்டு என்ற தலைப்பில் பேசுகிறேன்”

“ஐயா, அவர்கள்தான் ஏற்கனவே அதைப் படித்துவிட்டார்களே!”

“அதனால்தான் சொல்கிறேன், நான் முல்லைப்பாட்டைப் பற்றிப் பேசுகிறேன்”

“ஐயா, அந்த முல்லைப்பாட்டுப் பாடத்தை நடத்துபவரே என் துறைத்தலைவர்தான் ஐயா. அவர் இந்தத் தலைப்பை ஏற்றுக்கொள்வார் என்பது ஐயம் ஐயா”

“அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். சங்க இலக்கியம் பற்றிப் பேசுவார் என்று பொதுப்படையாகச் சொல்லிவையுங்கள்”

தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

நாள், நேரம் குறித்துக்கொண்டோம்.

அந்த நாளில் நான் கல்லூரிக்குச் சென்றேன்.

வாசலில் வரவேற்ற அவர், முதலில் தன் துறைத்தலைவர் அறைக்குக் கூட்டிச் சென்றார்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது …

“ஐயா, தலைப்பு சங்க இலக்கியம் என்று பொதுவாகக் கூறினார். நீங்கள் எதைப் பற்றிப் பேசப்போகிறீர்கள்?”

“முல்லைப்பாட்டு”

“அதைத்தான் மாணவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள். நானேதான் அதை நடத்தினேன். இவர் சொல்லவில்லையா?”

“சொன்னார். தெரியும். நான் பேசப்போவது என்னுடைய பார்வையில் முல்லைப்பாட்டு”

“எல்லோர் பார்வையிலும் முல்லைப்பாட்டு ஒன்றுதானே”

நான் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தேன்.

புறப்படத் தயார் ஆனோம். அப்போது தலைவர் சொன்னார்.

“ஐயா, எனக்கு முக்கிய அலுவல் இருக்கிறது. நான் வந்து முன்னுரை வழங்கிவிட்டு, சற்று நேரம் இருந்துவிட்டுச் செல்கிறேன்”

நான் புரிந்துகொண்டேன் – “நீயென்ன எனக்கு முல்லைப்பாட்டைப் பற்றிச் சொல்வது?”

”சரி ஐயா”

கூட்டம் நடக்கும் அறைக்கு வந்தோம். நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் என்னைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, மேடையை விட்டிறங்கி, முன் வரிசையில் அமர்ந்துகொண்டார்.

நான் எப்பொழுதும் என் கணினி வழியாக Over Head Projector வழியாகத்தான் பேசுவேன்.

திரையில் இந்த வரிகளும் அதன் கீழ் அடிநேர் உரையும் வந்தன.

 

முல்லைப்பாட்டு

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை

நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு

கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி          5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

 

அடிநேர் உரை

அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன்வலம்புரிச்சங்கு பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)செல்ல உயர்ந்த திருமாலைப் போல,ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலைக் குடித்து வலமாக எழுந்து,மலைகளைத் தாண்டிக்கொண்டு எழுந்த விரைந்த போக்கையுடைய மேகம்             5பெரிய மழையைப் பெய்த சிறு புன் மாலை

 

  நான் ஆரம்பித்தேன்.

”கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி.”

கோடு என்றால் மலை, மலையுச்சி. எந்த மலை?

“ஏதோ ஒரு மலை” ஒரு குரல் பின்னால் கேட்டது. சிரிப்பு.

“இல்லை. இது அகப்பாட்டு. ஆனாலும் இதன் தலைவன் ஏதோ ஒரு மகன் இல்லை. இவன் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது ஆய்வாளர் முடிபு. எனவே இந்த மலையும் ஏதோ ஒரு மலை இல்லை. என்ன மலை?”

அமைதி.

நான் சொன்னேன்.

இது முல்லைப்பாட்டு. முல்லைத்திணை. முல்லைக்குப் பெரும்பொழுது கார்காலம். ஆவணி, புரட்டாசி. அந்தக் கார்காலத்து மழை தென்மேற்குப் பருவ மழை. அது அரபிக்கடலில் உருவாகும். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வர அது மேற்குத்தொடர்ச்சிமலையைத் தாண்டி வரவேண்டும்.

கோடு கொண்டு எழுந்த என்றால் அந்தக் கோடு என்பது என்ன மலை.. ?

“மேற்குத்தொடர்ச்சி மலை” என்று உற்சாகத்துடன் கூவினர் மாணவர்கள். அவர்கள் கண்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

அவர்களை உற்சாகம் தொற்றிக்கொண்ட்து.

”அந்த மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து அது தமிழ்நாட்டுக்குள் – அதுவும் மதுரை வரை – வருவதற்குள் மழை பொழிந்துவிட்டால் நமக்கு மழை கிடையாது. எனவே அது வேகமாக வரவேண்டும் – வந்தது என்கிறார் புலவர் – எப்படி?”

அமைதி.

நான் சொன்னேன்.

“கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி. அந்தக் ’கொடும் செலவு’ என்பதில் உள்ள ’கொடும்’ என்பது விரைவைக் குறிக்கிறது. பார்த்தீர்களா? சங்கப் புலவர்கள் சொற்சிக்கனம் உள்ளவர்கள். எந்தச் சொல்லையும் வீணாகச் சொல்லமாட்டார்கள். ஒரு தொடரில் ஒரு சொல்லை நீக்கினால், அந்தத் தொடரின் பொருள் குறையும்.”

மாணவர்களின் கண்கள் அகல விரிந்தன. அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு என்னைப் பின்தொடர்கிறார்கள்.

இப்போது உற்சாகம் என்னைப் பற்றிக்கொண்டது.

”கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி.” – எழிலி என்றால் என்ன?”

ஒரே குரலில் ‘மேகம்’ என்றார்கள்.

“மேகத்துக்கும் எழிலுக்கும் என்ன வேறுபாடு?”

“இரண்டும் ஒன்றுதான் சார்” – ஒரு மாணவர் கூறினார்.

“இல்லை, இரண்டு சொற்கள் இருந்தால் அவற்றுக்கு இரண்டு பொருள் இருக்கும்”

கீழ்க்கண்ட சங்கப்பாடல் அடிகளைத் திரையில் காண்பித்தேன்.

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/5

அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி - நற் 247/3

பெய்து போகு எழிலி வைகு மலை சேர - நற் 396/1

ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி - ஐங் 411/1

ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/2

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - புறம் 173/5

தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் - புறம் 391/1

 

”பார்த்தீர்களா? எழிலி என்பது மழையைக் கொணரும் மேகம், மழையைப் பொழியும் மேகம் அல்லது மழையைப் பொழிந்துவிட்டுச் செல்லும் மேகம். The cloud, during, just before or just after the rain”.

 ”சரி, இப்பொழுது பாடலின் தொடக்க அடிகளுக்கு வருவோம். நீர் செல நிமிர்ந்த மாஅல் போல என்றால், மாஅல் என்பது திருமால். மால் போல என்றால் அந்தப் போல இருப்பது எது?”

ஒரு மாணவன் எழுந்தார்.

“மால் என்பவர் கார்மேக வண்ணன். அவரைப் போல இருப்பது கார்மேகம், அந்த எழிலி” என்றார்.

“ரொம்ப சரி. மிகவும் அருமையான பதில். ஆனால், நீர் செல நிமிர்ந்த மால் என்று புலவர் கூறுவது ஏன்?”

“அது மாலுக்கு அடைமொழி” என்றார் ஒருவர்.

“வெறும் அடைமொழி மட்டும்தானா” அல்லது அதில் வேறு ஒரு சிறப்பும் உள்ளதா?”

அமைதி.

நான் தொடர்ந்தேன்.

“வாமனன் என்ற குள்ளன் அவதாரமாக வந்த திருமால், மாவலி அரசனிடம் மூன்றடி மண் கேட்க, அதைக் கொடுத்தேன் என்று சொன்ன அரசன் அதற்கு அடையாளமாக, குள்ளனைக் கையை நீட்டச் சொல்லி, உள்ளங்கைகளில் நீர் வார்க்கிறார். அந்த நீர் தாரையாக ஒழுகுகிறது. அதுதான் தாரைவார்த்துக் கொடுத்தல். அந்நேரத்தில் திருமால் விஸ்வரூபம் எடுக்கிறார். நீர் செல நிமிர்ந்த என்பதில் உள்ள நிமிர்ந்த என்பது அதுதான். குள்ளனாக இருந்தவர் வானத்துக்கும்  பூமிக்குமாக பேருருவமாக உயர்ந்து நிற்கும்போது, அதே விகிதத்தில் மற்றவையும் பேருருவமாக மாறும். ஒழுகுகிற நீரும் பேருருவமாக மாறுகிறது. அந்தத் தாரை இப்போது வானத்திலிருந்து கீழிறங்கும் ஒரு பெரிய தூணாகக் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் ஏறக்குறைய அடிவானத்தில் கருப்பு மேகங்கள் இருந்தால் அதிலிருந்து மழை கருப்பாக ஒரு தூண் போல் கீழிறங்குவதைப் பாருங்கள் என்று படம்போட்டுக் காட்டினேன்.

Description: C:\MY DATA\PP BOOKS-YET TO PUBLISH\2.MULLAIPPAATTU\mullai-Pictures\6-1.1-FIG-1.jpg

”இவ்வாறு ’பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை’ என்கிறார் புலவர்.

“புன் மாலை சரி. புல்லிய மாலை – பொலிவிழந்த மாலை. மழை பெய்து ஓய்ந்த பின்னர் தெருக்கள் சேறும் சகதியுமாய், வெள்ளம் அடித்துவந்த குப்பை கூளமுமாய்ப் பொலிவிழந்து இருக்கும். அது சரி. அதென்ன சிறு புன் மாலை. அந்தச் சிறு இங்கு எதற்கு?”

“ஐயா மாலை என்பது சிறுபொழுதுதானே ஐயா. அதுதான் சிறு புன் மாலை” என்றார் ஒரு மணவர்.

” மாலை என்பது சிறுபொழுதுதானே – அதை ஏன் சிறு என்று குறிப்பிடவேண்டும். ஒருவேளை பெரும்பொழுது மாலை, சிறுபொழுது மாலை என்று இருந்தால், இது பெரும்பொழுது மாலை இல்லை, சிறுபொழுது மாலைதான் என்று குறிப்பிட சிறு புன் மாலை எனலாம். அப்படி இல்லையே. பெரும் பெயல் பொழிந்த சிறு…………. புன் மாலை. சிறு என்பதை அழுத்தமாக நீட்டிச் சொன்னேன். சின்ன்ன்ன்ன்ன்ன்னப் பையன் என்பது போல. “

“ஆங்கிலத்தில் ஒரு நாளின் தொடக்கம் நள்ளிரவு 12 மணி. அதை 12 midnight என்பார்கள். ஒரு நிமிடம் ஆகிவிட்டாலும் அது 12.01 AM ஆகிவிடும்.  AM என்றாலே காலைதானே. இருந்தாலும் அது இப்பொழுதுதான் தொடங்கியுள்ள காலை. அதை early hours of the morning அல்லது #small hours of the morning என்பார்கள். அதைப் போலத்தான் இது small hours of the evening. அதாவது இப்போதுதான் மாலை ஆரம்பித்திருக்கிறது. தமிழர் கணக்கில் மாலை என்பது 6 pm to 10 pm.  நம் கணக்கில் இரவு 9 மணிகூட மாலைதான். அந்த மாலை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது என்பதைக் காட்டவே புலவர் சிறு புன் மாலை என்கிறார்.

உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறுஅரவு நுங்கு மதியின் ஐயென மறையும்         5சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என  -- அகம் 114/4-6 பார்த்தீர்களா! ஞாயிறு மறையும் அந்தப் பொழுதுதான் சிறு புன் மாலை. Just after 6 pm.முல்லைத்திணை என்பது இருத்தல் – அதாவது காத்திருத்தல் – பிரிந்து சென்ற தலைவன் வரும்வரை பொறுமையுடன் காத்திருத்தல். பிரிந்து செல்வோர் கார்காலம் தொடங்கும் முன் வருவேன் என்று கூறிச் செல்வர். இப்போது காரும் தொடங்கிவிட்டது . முதல் மழை பெய்து விட்டது. பகலுக்குள் வந்துவிடுவார் என்று காத்திருக்கும் தலைவி, பகல் முடிந்து, மாலையும் தொடங்கிவிட்ட அந்தக் கணத்தில் தன் நம்பிக்கையை – பொறுமையை – இழக்க ஆரம்பிக்கிறாள்.   அதுதான் முல்லைப்பாட்டு என்ற அரிய கருவூலத்தின் அடிப்படை.இவ்வாறு கூறிவிட்டு, நேரத்தைப் பார்த்தேன். அரைமணி நேரம் ஆகிவிட்டது. துறைத்தலைவர் அங்கேயே இருந்தார். எழுந்து செல்லவில்லை. நான், “ஐயா, போகவேண்டும் என்று சொன்னீர்களே” என்று நினைவூட்டினேன். “இல்லை, ஐயா. நீங்கள் தொடருங்கள்” என்று சொன்ன துறைத்தலைவர், என் பேச்சு முடிய அங்கே இருந்தார்.முடிந்ததும், முடிவுரைக்காக மேடைக்கு வந்த துறைத்தலைவர், “நானும் முல்லைப்பாட்டு படித்திருக்கிறேன். எத்தனையோ ஆண்டுகள் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இப்படி ஒரு விளக்கத்தை இப்போதுதான் கேட்கிறேன்” என்று சொன்னார்.இது நான் பெருமை பீற்றிக்கொள்வதற்காக எழுதியதில்லை.சங்க இலக்கியத்தில் இத்துணை ஆழம் இருக்கிறது என்று காட்டத்தான்.இனிப்பைச் சுவைத்து ’இது இனிக்கிறது’ என்று சொன்னேன். இனிப்பின் பெருமை அதைச் செய்தவருக்குத்தான்.  

இந்த நடையின் மீள்பார்வை இன்னும் தொடரும் 

ப.பாண்டியராஜா
Reply all
Reply to author
Forward
0 new messages