சங்ககாலப் பொன்மொழிகள்
- அருள் மெர்வின்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரே ஒரு சங்க இலக்கியப் பொன்மொழி (quote) தவிர வேறு பல பொன்மொழிகள் புத்தகம் போடும் அளவுக்கு சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. சாக்ரடீஸ் சொன்னார், சேகுவேரா சொன்னார், கடவுள் சொன்னார் என்று பொன்மொழிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்பவர்கள் அவற்றுடன் மோசிகீரனார் சொன்னார், இடைக்காடனார் சொன்னார் என்று சங்க இலக்கியப் பொன்மொழிகளையும் பகிர்ந்தால் சங்கத்தமிழர்களுக்கும் பெருமை கிட்டும்.
திருக்குறளுக்கெல்லாம் முற்பட்டவை இவை. தமிழர் திருநாளில் இது வீண் பெருமையல்ல, வீணடிக்கக்கூடாத பெருமை. பின்வரும் சங்க இலக்கியப் பொன்மொழிகள் ஒரு sample மட்டுமே. ஒவ்வொன்றையும் வாசித்து ஒன்றிரண்டு நொடிகள் சிந்தியுங்கள். சிந்தித்தால் எப்படியெல்லாம் மூவாயிரம் ஆண்டுகள் முன்பு சிந்தித்திருக்கிறார்கள் என்று சிலாகிக்க முடியும்.
“பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே.”
- வெள்ளி வீதியார்
பலர் இருக்கும் இந்த உலகத்தில் இருப்பவரெல்லாம் பிறரே.
“இரை கொண்டமையின் விரையுமால் செலவே.”
- தாமோதரன்
இரை கிடைத்ததும் விரைந்து சென்றுவிடுவோம்.
“நில்லாமையே நிலையிற்று.”
- மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்
எதுவும் நிலைக்காது என்பதே நிலையானது.
“இறு முறை என ஒன்று இன்றி மறுமை உலகத்து மன்னுதல் பெறினே”
- பரணர்
இதுதான் இறுதி முறை என்று எதுவும் இல்லாமல் (அடுத்த உலகம் சென்றாலும்) எல்லாம் நிலைபெற்றுத் தொடரும்.
“நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.”
- மோசிகீரனார்
நிரம்பாவிட்டாலும் இன்றைய நாள் நீள்வதில்லை. (இன்று நாம் செய்து முடிக்க நினைத்த காரியங்களை செய்து முடிக்கவில்லை என்பதற்காக இன்றைய நாள் நீளாது.)
“அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே.”
- யாரென்று தெரியவில்லை (anonymous)
ஒரு முடிச்சை எப்படிப் போடுகிறோம் என்பது அதை அவிழ்ப்பது எவ்வளவு கடினம் என்பதைத் தீர்மானிக்கிறது.
“இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.”
- தூங்கலோரி
இனிமேல் நமக்கு வேலையில்லை, கிளம்பிவிடுவோம் (இறப்பல்) என்று நினைத்துவிட்டால் அது இளமைக்கு முடிவு. (அதாவது, இந்த உலகில் உங்களுக்கு வேலை இருக்கும் வரை நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.)
“இன்றும் முல்லை முகை நாறும்மே.”
- அரிசில் கிழார்
இன்றும் முகர்ந்தால் முல்லைப்பூ மணக்கும். (ஒரே பூவை என்றும் முகர்ந்து கொண்டிருந்தால் மணந்து கொண்டிருக்காது. வாடிவிடும். ஆனால், இன்று மலர்ந்த முல்லைப் பூ இன்று மணக்கும்.)
“உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே.”
- நொச்சி நியமங்கிழார்
உயிர் போனால் உடனிருப்பது எல்லாம் போய்விடும்.
“கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லாகுதுமே.”
- கல்பொரு சிறுநுரையார் (!!!)
பாறையில் நீர் மோதும்போது எழும் சிறிய நுரைகள் போல கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போகின்றோம்.
“அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.”
- குடவாயில் கீரத்தனார்
ஆசைகொள்வதால் ஆகிய மனதால் ஆகியவர்கள் நாம்.
“கழிந்த நாள் இவண் வாழும் நாளே.”
- பதடி வைகலார்
கழிந்த நாட்கள் நாம் வாழும் நாட்கள். (நாம் வாழ்ந்த நாட்கள் நாம் வாழும் நாட்களைத் தீர்மானிக்கின்றன.)
“வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே.”
- மதுரை மருதன் இளநாகனார்
நாம் அன்பு செய்பவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் நமக்கு அன்பு செய்யாதவர்கள். (அதனால், எல்லோரையும் அன்பு செய்யுங்கள்.)
“அம் தீம் கிளவி கேட்கம் நாமே.”
- இடைக்காடனார்
நம்மைப் பற்றிய இனிய சொற்களைக் கேட்டு மகிழ்பவர்களே நாம்.
“அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே.”
- காமக்கணிப் பசலையார்
அறத்தைவிட அரிதாகப் போய்விட்டது பொருள். (இது ஒரு சர்காஸ்டிக் பொன்மொழி. மக்கள் அறத்தைவிட பொருளை அதிகம் தேடித் திரிகிறார்கள், ஏதோ பொருளுக்குப் பற்றாக்குறை போல.)
“பிரிந்தனர் பிரியும் நாளும் பல ஆகுபவே”
- காவன்முல்லை பூதனார்
பிரிந்தவர்கள் பிரிய பல நாட்கள் ஆகும். பிரிந்தவற்றைப் பிரிய பல நாட்கள் ஆகும்.
“உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.”
- கபிலர்
ஒன்றை நினைக்காமல் இருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் வல்லவர்கள். (நினைவுகள்தான் நாம் பழக்கங்களுக்கு அடிமையாகக் காரணம். காலையில் எழுந்தவுடன் செல் போனைப் பற்றி நினைக்காமல் இருக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஆமென்றால், நீங்கள்தான் இந்த உலகில் வல்லவர்.)
“சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.“
- பரணர்
சூழ்ச்சியும் கொஞ்சம் வேண்டும். (சூழ்ச்சி என்றால் strategy என்று எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம்தான் வேண்டும்.)
“சில ஆகுக நீ துஞ்சும் நாளே.”
- ஔவையார்
நீ தூங்கும் நாட்கள் சில நாட்களாக இருக்கட்டும்.
“துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே.”
- கொல்லன் அழிசி
எவ்வளவு நேரம் மக்கள் தூங்குகிறார்களோ அவ்வளவு நேரம் இருட்டில் இருப்பார்கள்.
“கவலை மாக்கட்டு இ பேதை ஊரே.”
- வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
மக்களெல்லாம் கவலையில் இருந்தால் ஊர் முட்டாள் ஊராக இருக்கும். (அதாவது, மக்களை முட்டாள்களாக வைத்திருக்க வேண்டுமென்றால் அவர்களைக் கவலையில் வைத்திருக்க வேண்டும்.)
“நன்றென உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.”
- நக்கீரனார்
முட்டாள்தனம் என்பது என்னவென்றால் நாம் சொல்வது தமக்கு நல்லது என்று உணராதவர்களிடம் வலிந்து சென்று நிற்பது.
“மருந்தும் உண்டோ மயலோ இதுவே.”
- நெடுங்கண்ணன்
மயக்க மருந்து உண்டு. மயக்கத்துக்கு மருந்து உண்டா?
“மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.”
- மிளைகிழான் நல்வேட்டனார்
மென்மையான இதயமே செல்வம் என்பது.
“நீ அளந்து அறிவை நின் புரைமை.”
- பரணர்
நீயே அளந்து அறிந்துகொள் உன் உயர்வை.
“நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே.”
- சேந்தன் கண்ணன்
நீ உன் மனதால் விரும்பித் துணிந்து எடுக்கும் எல்லா முடிவும் நல்ல முடிவே!
“பெருந்தேன் கண்படு வரையில் முதுமால்பு அறியாது ஏறிய மடவோன் போல ஏமாந்தன்று இவ்வுலகம்.”
- சிறைக்குடி ஆந்தையார்
பெரிய தேனடை கிடைக்கும் என்று பழைய ஏணி ஒன்றை வைத்துக் கொண்டு அதில் ஏறிய முட்டாள் போல் ஏமாந்து போகிறவர்களால் ஆனது இந்த உலகம்.
பி-கு: மேலே நான் தொகுத்திருக்கும் வரிகள் சங்க இலக்கியங்களில் பழமையானவை என்று கருதப்படும் குறுந்தொகை, நற்றிணையில் வருபவை. காதல் கவிதைகளில் வருபவை. இதைப் பற்றிய ஒரு hypothesis கைவசம் இருக்கிறது. அதை வேறு ஒருமுறை எழுதுகிறேன். இப்போதைக்கு ஆராயாமல் அனுபவியுங்கள்.