உங்களை பூம்புகாருக்கே அழைத்துச் செல்லும் வகையிலான உணர்வை ஏற்படுத்தும் ( என்ற நம்பிக்கையில்) பெரிய கட்டுரை எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் வாருங்கள் பூம்புகாருக்குச் செல்வோம்.. நிற்க.. கட்டுரை படிப்போம்..
சிதம்பரம் அண்ணாமலைப்பலகலைக்கழகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கை முடித்துக்கொண்டு ஒரிசா பாலு அவர்களின் அழைப்பின் பேரில் பூம்புகார் செல்ல முடிவெடுத்தோம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முனபு கல்லூரி படிக்கையில் திருமணம் ஒன்றிற்காக சிதம்பரம் சென்று விட்டு பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போது செல்லும் பொழுது மாலையாகி விட்டதால் வெறும் கடற்கரையை மட்டும் ரசித்து விட்டு ஒரே ஒரு நிழற்படம் எடுத்து வந்ததாய் ஞாபகம். ஒரிசா பாலு அவர்கள் கடலாய்வுப்பணியில் மேற்கொண்டு வருகிறார். நாகர்கோவில் இணையப்பயிலரங்கில் சந்தித்த போது கன்னயாகுமரியில் கடலாய்வு மேற்கொண்டிருந்தார். சிதம்பரம் பயிலரங்கில் கலந்து கொண்ட போது பூம்புகாரில் கடலாய்வும், வரலாற்று ஆய்வாகவும் சில பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாயிருந்ததால் நானும் செலவமுரளியும் அவருடன் பூம்புகார் செல்ல ஆர்வமுடன் இருந்தோம்.
”படங்களைச் சொடுக்கி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்”
பூம்புகாரில் பிறந்தவரும், பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டவருமான புலவர்
நா.தியாகராசன்அவர்கள் ஒரிசா பாலு அவர்களுடன் ஆயவு உதவிக்காக வந்திருந்தார். நால்வரும் மாலை 6 மணிக்கு கிளம்பி சிதம்பரத்திலிருந்து கருவி சென்று, பின் பூம்புகார் இரவு 9 மணிக்குச் சென்றடைந்தோம். பூம்புகாரிலுள்ள தமிழகம் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த அரசு விருந்தினர் மாளிகையினில் தங்கினோம். விருந்தினர் மாளிகை அறை மிகவும் பிரதானமாகவும் அழகுற க்டற்கரையின் மிக அருகில் அமைந்திருந்தது.
”நீதி கேட்டு தலை விரித்த கோலத்துடன், சிலம்புடன் கைகளை நீட்டியுள்ளதைப் போலல்லாமல் கண்ணகி, கடவுளாக உருவகம் செய்யப்பட்டு அழகுற வலது கைகளை அருள் பாலிப்பது போல் அமைத்து, அணிகலன்கள் அணிந்து கால் சிலம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது”
ஜன்னலில் இருந்து வெளிப்படும் கடற்கரைக் காற்று தென்றலாய் இதமான உணர்வை ஏங்களுக்கு வீசிக்கொண்டிருந்தது. கல்பனா சேக்கிழார் அவர்கள் சிதம்பரத்தில் கொடுத்து அனுப்பியிருந்த மாதுளை பழமும், ஆப்பிளும் சாப்பிட்டுக் கொண்டு வெளிவரும் கடற்கரைக் காற்றில் அமிர்தமாய் இருந்தது. சற்று நேர அரட்டை முடித்து விட்டு கடற்கரைப் பக்கம் சென்று உலா சென்று வரலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அசதியால் சோம்பலுடன் நடக்க மனமின்றி தூங்கிப் போனோம். கடற்கரை அலையின் வேகமும், ஒலியும் மிக வேகமாகவே இருந்தது. கடல் அலையின் ஒலியிலும், அதிகமான பயணத்தின் அசதியிலும், இதமான காற்றிலும் இனிய உறக்கம் எங்களை எளிதில் ஆட்கொண்டது.
அதிகாலை வேளையில்
இரவு அனுபவித்த அதே கடல் அலை சத்தத்துடனும், தென்றல் காற்றுடனும் காலை 5 30 மணிக்கெல்லாம் எழுந்து கடற்கரை உலா வர தயாரானோம். அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியில் சிறிது தூரத்தில் கண்ணகியின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி கேட்டு தலை விரித்த கோலத்துடன், சிலம்புடன் கைகளை நீட்டியுள்ளதைப் போலல்லாமல் கண்ணகி, கடவுளாக உருவகம் செய்யப்பட்டு அழகுற வலது கைகளை அருள் பாலிப்பது போல் அமைத்து, அணிகலன்கள் அணிந்து கால் சிலம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்ணகி சிலை
இரவு இருந்ததைப் போலவே அலையின் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. ஒரிசா பாலு அவர்கள் சிறுவயதில் பூம்புகார் வந்ததையும், கடல்நீர் எந்த அளவு உள்வாங்கியுள்ளது என்பதையும், பூம்புகார் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார். அதிகாலை என்பதனால் கடலின் அலைகளைத் தவிர அனைத்தும் கும்மிருட்டாக் இருந்தது. கடற்கரை ஓரங்களில் மண் அரிப்பைத் தடுப்பதற்கெனவும், அலையின் வேகத்தை கட்டுப்படுத்தவும் மலைபோல் இருபது அடிகள் அளவிற்கு கருங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. கடற்கரை மணலை தரிசிக்க, கடல்நீரில் கால்களை நனைக்க இருநூறு மீட்டர் வலதுபுறத்தில் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

இனிய கடல்காற்றை ரசித்தபடி பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடந்தபடி சூர்ய உதயத்திற்காக காத்திருந்தோம். இதற்கிடையே நானும், செல்வமுரளியின் கடலலைகளில் கால்களை நனைத்து கடல்செல்வங்களை அள்ள முயன்று கொண்டிருந்தோம். சிப்பி, சங்கு போன்றவைகளை அலையூனோடே கை, கால்களினால் அரவணைத்து கைப்பற்றி கரையில் ஒதுக்கி சேமிக்கலானோம். மேகங்களின் மறைவினில் உதித்த சூரியன் ஆறுமணியாகியும் கண்களில் தென்படவில்லை.
காலை 6 30 மணியளவில் தம் செந்நிற கதிர்களைப் வானில் பரப்பி தன்னிகரில்ல தன்மையுடன் எழுந்த சூரியன் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளித்தது. மேலெழும்பிய சூரியனை பிடிப்பது போல், தாங்குவது போல் அமைந்த நிழற்படங்களை ஒரிசா பாலு அவர்கள் அழகுற எடுத்தார். நிழற்பட எடுக்க கேமரா கொண்டு
வரவில்லையாததால் என்னுடைய 2MP கொண்ட பிளாக்பெர்ரி மூலம் எடுத்துத் தள்ளினோம். தேவையான அளவு நிழற்படங்களையும், கடலலைகளையும், சூரிய உதயத்தையும் ரசித்து விட்டு, கைப்பற்றிய சிப்பிகளுடன் விடுதி செல்ல தயாரானோம். வழியில் கலைங்கரை விளக்கமும், அழகுற வடிவமைக்கப் பட்டிருந்த விளக்குத்தூண் அருகிலும் நின்று நிழற்படம் எடுக்கத் மறக்கவில்லை.
அ) விளக்குத்தூண் ஆ) கலங்கரை விளக்கம்
கடற்கரை அழகை ரசித்து முடித்த பின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இலஞ்சி மன்றத்திற்குச் சென்றோம். பண்டைய கால வரலாற்றில் இங்கே குளம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. அவற்றை நினைவு கொள்ளும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கீழ்க்கண்ட படத்தில் காணப்படுவதைப் போன்ற மூன்று கட்டிட அமைப்புகளும் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குளத்திலுள்ள தண்ணீர் தான் மாசடைந்து காணப்படுகிறது.

இளஞ்சி மன்றம்
அறைக்குச் செல்லலாம் என முடிவெடுத்த நிலையில் தேனீர் அருந்தலாம் எனத் தோணவே சிறு தொலைவில் இருக்கும் தேநீர் கடைக்கு செல்ல ஆரம்பித்தோம். கடறகரையில் இருந்து செல்லும் சாலையின் வலது புறத்தில் பாவை மன்றம் ஒன்று உள்ளது. கீழ்க்காணும் படத்தில் கூறப்பட்டுள்ளது போல எட்டு வகையான தோற்றங்களும், முகபாவங்களும் கொண்ட உருவங்களை எட்டு தூண்களில் அமைந்துள்ளது. காலை 7 மணி நேரமாதலால் இது பூட்டப்பட்டிருந்தது.ஆகையினால் வெளியில் நின்று கண்டு ரசித்து விட்டு நகர்ந்தோம்.
பாவை மன்றம்
சிறிது தூரத்தில் சாலையின் இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் உள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்திருந்தன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கபெற்று கண்கவர் காட்சியாய் அமைந்திருந்தது.
சிலப்பதிகாரக் கலைக்கூடம்
இக்கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், 3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் கல்லில் வடிவமைக்கப்படுள்ளன.
அங்கிருந்து சிறிது தூரத்தில் சாலையின் வலதுபுறத்தில் பேருந்து நிலையமும் சிலம்பு வடிவில் அமைந்திருந்து. ஆனால் அவை இன்னும் கட்டி முடிக்கப்படாமல் பயன்பாடின்றி காணப்பட்டுள்ளது. அதன் பின் தேநீர் அருந்திவிட்டு வரும் வழியில் அகழ்வியல் நிலையம் என்றழைக்கப்படும் அரிய பொருட்களை உடைய நிலையத்திற்குச் சென்றோம். அங்கு பூம்புகார நகரின் பலபகுதியில் கிடைக்கப்பெற்ற அரிய வகைப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கபட்டிருந்தது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலம்புகள், மணிகள், பாசிகள், புலித்தோற்றம் கொண்ட படகுகள், ஓடங்கள், கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், ஆவணங்கள், கிடைத்த பொருள்களின் பட்டியல்கள், கல்வெட்டுக்கள், இலக்கியக் குறிப்புகள், பூம்புகார் பற்றிய நூல்கள் பட்டியல்கள், படகுத்துறை படங்கள், 2 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிப்பி, வெளிநாடுகளில் கிடைக்கப்பெற்ற தமிழ்க் கல்வெட்டுக்கள், 7 ம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற அய்யனார் சிலை, 7ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, 5ம் நூற்றாண்டு நங்கூரம் என அரிய வகைப் பொருட்களை உள்ளடக்கியதாய் அமைந்துள்ளது.
இவையனைத்தையும் பார்த்து ரசித்தி விட்டு, ஒரிசா பாலு அவர்கள் மேலும் பல ஆராய்வு பணிகள் இருந்தமையால் நானும், செல்வமுரளியும் காலை 10 மணியளவில் பூம்புகாரை விட்டு கிளம்பிச் சென்றோம். பார்க்கவேண்டிய மேலும் பல இடங்களைக் காணும் வாய்ப்பை நேரமின்மையால் இழந்து வேறொரு நாள் வந்து பார்க்கலாம் எனும் எண்ணத்தில் பூம்புகாரிலிருந்து இனிய நினைவுகளுடன் கிளம்பிச் சென்றோம்.
பூம்புகார் எப்படிச் செல்வது :
சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.
வழித்தடங்கள் : சென்னை - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் - சீர்காழி - கருவி - பூம்புகார்.