இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள்

19 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 20, 2024, 11:34:12 PMFeb 20
to மின்தமிழ்
நன்றி:
ஜனசக்தி - பிப்ரவரி 11 மற்றும் 18 வார இதழ்களில் வெளியான சுந்தர சோழன் (Sundara Cholan) அவர்களின் கட்டுரைத்தொடர் 
"செந்தளம்" -  செய்திப் பிரிவு

இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள்

- சுந்தர சோழன்

1

இராமர் கோவில் என்ற ஒத்து மக்களை மதவாத மாயையில் மூழ்கடிக்க இந்துத்துவப் பாசிசம் வெறித்தனமான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. எனினும் ராமன் என்னும் ஒரு நபர் உண்மையில் வாழ்ந்தாரா? என்பது கூட விஞ்ஞானபூர்வமாக நிறுவப்படவில்லை.

அப்படி ஒருவர் உண்மையில் வாழ்ந்தார் என்றால் கூட அவர் எந்தக் காலத்தில் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தார், இந்துப் பழமைவாதிகள் குறிப்பிடும் ராமன் என்னும் கடவுளுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு எனப் பல கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது.

இராமாயணம் என்னும் காவிய நூல் இராமனைப் பற்றிய தகவல்களை அளிக்கிறது. இந்தியாவில் மட்டும் முன்னூறுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப் பட்டுள்ள ஒன்று. அவற்றில் ஜைன இராமாயணம் மற்றும் பவுத்த இராமாயணம் ஆகியவை முக்கியமானவை. வால்மீகி இராமாயணம் சீதையை இராமனின் மனைவி என்னும் போது வேறொரு இராமாயணம் சீதையை இராமனின் சகோதரி என்கிறது.

பழமைவாத இந்துக்கள் வால்மீகி இராமாயணத்தையே வெகுவாக ஏற்றுக் கொள்வது வழக்கம். இது ஒரு ஆதி காவியம் என்பதாக மட்டுமின்றி புராண இதிகாசமாகவும் போற்றப்படுகிறது.

ஆனால் இத்தகைய இராமாயணத்தின் காலம் குறித்து நம்பகமான தகவல்கள் ஏதும் கிடையாது என்பது வியக்கத் தக்கதே. பழமைவாத இந்து நம்பிக்கையான இராமாயண நிகழ்வுகள் திரேதாயுகத்தில் நடைபெற்றவை எனக் கூறுகிறது. சில இந்துமத நம்பிக்கையாளர்கள் இராமாயண நிகழ்வுகள் இன்றைக்குச் சுமார் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றவை எனக் கூறுகின்றனர். இன்னும் சில ஆய்வாளர்கள் அது கி.மு. 1400 காலத்தைச் சேர்ந்தது எனக் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் யாருமே தனது வாதத்திற்கு ஆதரவாக, அதனை உறுதிபட நிறுவிடும் சான்றுகள் எதையும் முன்வைக்கவே இல்லை என்பதே உண்மை.

இராமாயணம் குறித்து இத்தனை குழப்பங்கள் உள்ள போது, இதன் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் துணையை நாடுவதே சரியானதாக இருக்கும்.

பழமைவாத இந்துக்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படும் வால்மீகி இராமாயணக் கதையின் படி ராமனும் அவனது குடும்பத்தினரும் அயோத்தியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான தனித்தனி மாளிகைகளில் வாழ்ந்தனர். அம்மாளிகைகள் குறித்தும், அதன் பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டம் குறித்தும் இராமாயணத்தில் பல குறிப்புகள் உண்டு.

அவர்கள் ஒரு நகர நாகரீகத்தில் வாழ்ந்தனர் என்றும் அது கூறுகிறது. பயணம் செய்வதற்கும் போர்களுக்கும் அவர்கள் குதிரைகள் மற்றும் தேர்களைப் பயன்படுத்தினர் என்றும் அக்கதை மாந்தர்கள் பங்கேற்ற போர்கள் குறித்தும் இராமாயணம் மிகப் பல முறை குறிப்பிடுகிறது.

அப்படியானால், இராமாயணக் கதை உண்மையானதாக இருப்பின், அது தவிர்க்கவியலாதவாறு ஏராளமான தொல்லியல் சான்றுகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இராமாயணக் காவியம்

அரங்கேறியதாகக் கூறப்படும் அயோத்தியா
நகரின் மாபெரும் மாளிகைகள், அதன் நகரக் கட்டமைப்பு, அதனுடன் தொடர்புடைய சித்ரகூடம் உள்ளிட்ட இடங்கள் என அது ஒரு தொல்லியல் புதையலாக இருக்க வேண்டும்.

இது பற்றிய உண்மையைக் கண்டறியும் நோக்கத்துடன் கடந்தநூறாண்டுகளுக்கும் மேலாக, இன்றைய அயோத்தியில் மட்டுமின்றி இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்களிலும் வெவ்வேறு காலங்களில் பல தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் தந்தையாகக் கருதப்படும் அலெக்சாந்தர் கன்னிங்ஹாம், 1862-63ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் இராமாயணத்துடன் தொடர்பு படுத்தக் கூடிய மிகப் பழமையான கட்டுமானங்கள் எதையும் கண்டதாக அவர் குறிப்பிடவில்லை.

1889 -91 காலகட்டத்தில் அங்கு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை
சார்பில் அங்கு அகழ்வாய்வு மேற்கொண்ட அலோய்ஸ் அண்டன் ஃப்யூரர் என்பவரும் இந்நகரை இராமாயணத்துடன் தொடர்பு படுத்தக் கூடிய எந்த இடிபாடுகள் அல்லது கட்டுமானங்களைக் காணவில்லை. மாறாக, அங்கு பல பவுத்தக் கட்டுமானங்கள் இருந்ததையே அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1969 -70ஆம் ஆண்டுகளில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அவத் கிஷோர் நாராயண் என்பவர் அயோத்தியாவில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் இன்றைய அயோத்தியா நகரம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் தான் நிர்மாணிக்கப்பட்டது எனக் கூறினார்!! மேலும் அங்கு சமண மதத்தின் தாக்கம் தான் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத் தக்கது.

தொல்லியல் ஆய்வுத்துறைத் தலைவராக இருந்த பி.பி. லால் என்பவர், 197585ஆம் ஆண்டுகளில் இராமாயணத்துடன் தொடர்புடைய அயோத்தியா உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வு முடிவுகள் அச்சமயத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தொல்லியல் அறிஞர்களால் உரிய சான்றளிக்கவில்லை.

பின்னர் இந்துத்துவ சார்புப் பத்திரிகையான மன்தன் என்னும் இதழில் அயோத்தி குறித்த உறுதி செய்யப்படாத பல தகவல்களை அவர் கூறியிருந்தார்.

வேறு சீரிய தொல்லியல் ஆய்வாளர்கள் யாரும் அவரது கூற்றுகளை ஆதரிக்காத அதே சமயம் உச்சநீதிமன்றம் அவரது பல கூற்றுகளைப் பின்னாளில் ஏற்றுக் கொண்டது. அயோத்தியில் இராமர் கோவில் என்னும் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. அவர் பணியில் இருந்த காலத்தில் அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு எதுவுமில்லை என்று அவரே கூறியிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது.

இராமாயணக் கதைப்படி அயோத்தியில் இருந்து வனவாசம் புறப்பட்ட இராமன், ஸ்ருங்கவேரபுரா, மற்றும் சித்ரகூடம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். இதன் அடிப்படையில் இராமாயணத்தின் தொல்லியல் சான்றுகளைக் கண்டறியும் நோக்கத்தில் அவ்விடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

ஆனால் அங்கு கிடைத்தவசிப்பிடமானது அயோத்தியைக் காட்டிலும் பழமையானது. மேலும் ஸ்ருங்கவேரபுரா, மற்றும் சித்ரகூடம் ஆகிய இடங்களில் கிடைத்த வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்புப் பாண்டங்கள் மற்றும் இதர சான்றுகளின் அடிப்படையில் அவை கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை மட்டுமே என்று ஆய்வாளர் ராஜேஷ் கொச்சார் கூறுகிறார். மேலும் இராமாயணத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவ்விடங்களுக்கு அப்பெயர்கள் இடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அது முற்றிலும் ஏற்கத் தக்கதே.

இராமாயணம் குறித்து ஆய்வு செய்த தொல்லியலாளர்களில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் எச்.டி. சங்காலியா ஆவார். இராமாயணத்தின் உள்ளார்ந்த சான்றுகளை எடுத்துக் கொண்டு, அதற்குப் பொருத்தமான வரலாற்றுச் சான்றுகளை எதிர்வைத்து விரிவாக வாதிட்டார் அவர்.

இராமாயணக் கதையின் பல கூறுகளின் மீது ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த கேள்விகளை எழுப்பினார். இராமாயணம் மற்றும் அயோத்தி குறித்துப் பேசும் யாரும் இக்கேள்விகளைத் தவிர்த்து விட்டு உண்மையை அடைய முடியாது என்பது திண்ணம்.

******************************************

2

அகழ்வாய்வுச் சான்றுகளைத் தொல்லியல் மற்றும் இதர விஞ்ஞானச் சான்றுகளும் இராமாயணம் என்னும் புனைகதையை வலுவாகவே மறுக்கின்றன. இதற்கு ஏராளமான காரணிகளை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

இராமாயணக் கதை மாந்தர்கள் குதிரைகளையும், தேர்களையும் வெகுவாகப் பயன்படுத்தினர் என்பதற்கு வால்மீகி இராமாயணம் மிகப் பல சான்றுகளைத் தருகிறது. ஆகவே குதிரைகளின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த தேடலில் இருந்து தொடங்குவது சரியானதாக இருக்கும்.

மத்திய ஆசியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ரிக்வேத ஆரியக் கூட்டத்தினர், கி.மு. 1500அம் ஆண்டு (அல்லது அதற்குச் சில நூறு ஆண்டுகள் முன்னரோ பின்னரோ) இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ஊடுருவினர். ஹரப்பாவைச் சேர்ந்த திராவிட நாகரீக மக்கள் முன்னேறிய நகர வாழ்க்கை வாழ்ந்த அதே சமயம், இவர்கள் கால்நடை மேய்ச்சலைத் தாண்டி வளராத நாடோடிக் குழுவினராக இருந்தனர்.

இவர்களது வருகை இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைக் குறைந்தபட்சமாக 900 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் சென்றது என்பது தான் உண்மை. ஏனெனில் மகத்தான ஹரப்பா நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த நகரமயமாக்கல் நடைபெறுவதற்கு இந்தியத் துணைக்கண்டம் 900 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி யிருந்தது. ஒப்பீட்டளவில் பார்த்தோம் எனில், ஹரப்பா நாகரீகம் முன்னேறிய நாகரீகமாக இருந்த அதே சமயம், இந்தியத் துணைக்கண்டத்தை வந்தடைந்த ரிக்வேத ஆரியர்கள் அரைக் காட்டுமிராண்டிகளாக இருந்தனர்.

விவசாயத்தை அறியாத, கால்நடை மேய்ச்சலை மட்டுமே மேற்கொண்ட உணவு சேகரிக்கும் சமூகமாக மட்டுமே இருந்தனர், அவர்கள் உணவு உற்பத்தி மேற்கொள்ளும் சமூகமாக இருக்கவில்லை என்பது உண்மை.

குதிரைகள்
இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த வேதகால ஆரியர்களின் வருகைக்கு முன்னர் குதிரை இருக்கவில்லை. இடம் பெயர்ந்து வந்த ஆரியக் குழுக்கள் மட்டுமே குதிரையை இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தினர். அதற்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் குதிரையின் இருப்பை நிரூபிக்கும் தொல்லியல் சான்றுகள் கிடையாது. ஹரப்பா முத்திரைகளில் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த போதிலும் குதிரை அதில் இடம் பெற்றிருக்கவில்லை. தெளிவற்ற, உடைந்து போன ஒரு ஹரப்பா முத்திரையை குதிரையைச் சித்தரிப்பதாகக் காட்டி தில்லுமுல்லு செய்ய முயற்சித்து அசிங்கப்பட்ட வரலாறெல்லாம் உண்டு.

ஆனால் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தொடர்பில்லாத இந்தக் குதிரை என்னும் விலங்கு, இராமாயணத்துடன் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளது. பிள்ளைப் பாக்கியம் இல்லாத இராமனின் தந்தையாகிய தசரதன், புத்ர காமேஷ்டி யாகமும், அஸ்வமேத யாகமும் செய்தான் என்கிறது இராமாயணம்.

கொல்லப்பட்ட குதிரையின் உடலுடன் அரசிமார்கள் இரவு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அருவறுக்கத்தக்க பல குறிப்புகள் இராமாயணத்தில் உண்டு, அப்போது ஓதப்படும் மந்திரங்கள், சடங்குகள், நடப்புகள் ஆகியவை குறித்து தேவி பிரசாத் சட்டோபத்தியாயா விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இராமாயணக் கதை மாந்தர்கள் குதிரைகளைப் பயன்படுத்தினர் என்றால், அது கி.மு. 1500க்கு முன்னர் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது மிகத் தெளிவாகும். மறுபுறத்தில் அந்தக் காலத்திற்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் இராமாயண நிகழ்வுகள் நடைபெற்றமைக்குத் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடையவே கிடையாது.

தேர்கள்
அடுத்ததாகத் தேர்கள். இராமாயணக் கதை மாந்தர்கள் போர்களில் மட்டுமின்றிப் பொதுப் பயணத்திற்கும் தேர்களைப் பயன்படுத்தினர் என்று இராமாயணக் கதை கூறுகிறது. தசரத மன்னன் தன்னைச் சந்திக்க இராமனை அழைத்த போது, இராமன் தனது அரண்மனையில் இருந்து தனது தந்தையான தசரதனைச் சந்திக்கத் தேரில் பயணித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இராமாயணக் கதையில் தேர்கள் மிகப் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளன.

இராமனுக்கும் இராவணணுக்கும் நடைபெற்ற போரை வர்ணிக்கும் யுத்த காண்டத்தில் ராமன் தனது தேரில் இருந்து போரிட்டது குறிப்பிடப் படுகிறது. அப்படியானால், இராமாயண நிகழ்வுகள் கற்பனையாக இல்லாமல் உண்மையாக நடந்தவை என்றால், தேர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மட்டுமே அவை நடைபெற்றிருக்க முடியும்.

இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ஆரியர்கள் ஊடுருவும் முன்னே, இந்தியத் துணைக்கண்டப் பூர்வகுடிகளைப் பொறுத்த வரையில் தேர்கள் அறியப்படாதவையாக இருந்தன. ஹரப்பா முத்திரைகளில் யூனிகார்ன் எனப்படும் கற்பனை விலங்கு, யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் இடம் பெற்றுள்ள அதே நிலையில், ரிக்வேத ஆரியர்களின் மிகப் பெரும் அடையாளமாகிய குதிரை ஒரே ஒரு முத்திரையில் கூட இடம் பெற்றிருக்கவில்லை.

ஹரப்பா மக்கள் சகடம் எனப்படும் வட்டுச்சக்கரம் அல்லது தட்டைச் சக்கரம் பொறுத்திய பாரவண்டிகளைப் பயன்படுத்தினரேயன்றி ஆரைக்கால் சக்கரங்கள் பொறுத்திய தேர்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. குதிரைகளைப் பழக்கியது மற்றும் தேர்களைப் பயன்படுத்தக் கற்றிருந்தது ஆகிய இரண்டுமே ரிக்வேத ஆரியர்கள் பூர்வகுடிச் சமூகங்களுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமாயணத்தில் குதிரைகளும் தேர்களும் இடம் பெற்றிருந்தன என்றால், அது உண்மையில் நடைபெற்ற வரலாற்றை அல்லது உண்மையில் வாழ்ந்த ஒரு மக்கள் சமூகத்தைக் குறிக்கும் என்றால் அது கி.மு. 1500க்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாக மட்டுமே இருக்க முடியும்.

இந்துப் பழமைவாத நம்பிக்கை கூறுவது போல பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவோ, 75000 ஆண்டுகளுக்கு முந்தையதாகவோ, ஏன் கி.மு. 1500

ஆண்டைச் சேர்ந்ததாகவோ கூட இருக்க வாய்ப்பில்லை. இது வரையில் நமக்குக் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் இதனைத் தெளிவாக நிரூபிக்கின்றன. ஆனால் இராமாயணத்தை நிரூபிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அத்தகைய தேர்கள் குறித்த எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை.

நால்வகை வர்ணத் திணிப்பு
மேலும், இராமாயணம் நன்கு நிலைபெற்றிருந்த வர்ணப் பகுப்பை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சமூகத்தைக் குறிக்கிறது. நால்வர்ணங்களின் இருப்பு மற்றும் அவர்களுக்கென விதிக்கப்பட்ட வர்ணக் கடமைகளை அவ்வர்ணத்தினர் விருப்பத்துடன் பின்பற்றும் ஒரு லட்சிய வர்ணாசிரம சமூக அமைப்பை அது பிரதிபலிக்கிறது. சூத்திர வகுப்பைச் சேர்ந்த சம்புகன் என்ற ஒருவன் தவம் மேற்கொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட கெடுவிளைவுகளின் காரணமாக, வர்ண தர்மத்தை உயர்த்திப் பிடிக்க இராமாயண இராமன் அவனது தலையைக் கொய்ததாகவும் உத்தர இராமாயணம் தெரிவிக்கிறது.

இது வரையில் நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளை நோக்கினால், ரிக்வேத காலத்தின் இறுதிக் கட்டம் வரையில் வர்ணக் கட்டமைப்பு உறுதியாக நிலைபெறவில்லை. அதன் பிற்காலத்தைச் சேர்ந்த பத்தாவது மண்டலத்தில் மட்டுமே புருஷ சூக்தத்தில் மட்டுமே வர்ணக் கட்டமைப்பு பற்றிய தெளிவற்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது (ரிக் வேதம் 10.90). அதுவும் பிற்காலத்தைச் சேர்ந்த இடைச்செறுகல் மட்டுமே என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆகவே, இராமாயணம் குறிப்பிடும் தெளிவான வர்ணப் பகுப்பு கொண்ட சமூகம் நிலைபெற்றிருந்தது என்பது உண்மையானால், அது ரிக் வேதத்திற்குப் பிந்தைய பின்வேத காலத்தில் மட்டுமே நடந்திருக்க முடியும். அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முந்தைய காலம் முதற்கொண்டு ஐயத்திற்கு இடமில்லாத தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இராமாயணம் அல்லது அதில் குறிப்பிடப்படும் இராமன் என்னும் கதைநாயகன் உண்மையில் உயிர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அணுவளவும் கிடையாது. ஆகவே இராமாயணத்தின் உண்மைத் தன்மையை இந்தச் சான்றும் முற்றாக நிராகரிக்கிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages