இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

4 views
Skip to first unread message

JANARDHAN G

unread,
Apr 17, 2026, 10:43:48 PM (10 hours ago) Apr 17
to மின்தமிழ்

மனித மனம் எப்படிப்பட்டது?

 இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது. அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது). இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது.

இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும் இடமாக உள்ள ஒரு பொருளை மனம்முழுமையாக நம்புகிறது.

உதாரணம் இறையை வணங்கும் ஒருவன் தன் தேவையின் அளவுக்கு ஏற்ப இறையின் சக்தியை நிர்ணயிக்கிறான்.

 மனச்சிந்தனை எப்படி வடிவமைகிறது?

 தேவையை எதிர்கொள்ள மனம் பல யுக்திகளை கையாளுகிறது. தான் விரும்பிய வழியிலேயே அதை செய்யவும் விரும்புகிறது. தன்தகுதி தெரிந்து அதையுணர்ந்து பெருக்க முயற்சி செய்யத்தூண்டுவதே நல்வழி, அது எல்லா நேரமும் எல்லோருக்கும் நடப்பதில்லை. எளிமையான வலியில்லாத வழியில் அது தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறது. ஒருவகையில் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இதுதான் இருக்கிறது, என்றாலும் மனம் பொருளை அடைய பல வழிமுறைகளை கையாளுகிறது. இதனால் சகமனித உறவு, உரிமை இவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை சீரமைக்கவே தர்மம் என்ற ஒரு கயிறு நம்மை சுற்றிகட்டப்பட்டது. சில நேரங்களில் இந்தக்கயிறும் நம்மை இறுக்கத்தொடங்கியது. தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்ட அறம் என்பது இதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும்.

 மனிதமனதின் உறுதிக்கு எது எல்லை?

இங்கு மனஉறுதி என்பது எந்த அர்தத்தில் கொள்ளவேண்டுமென்று விளக்க விரும்புகிறேன். மனஉறுதி என்பது நல்வழியில் நடப்பது என்று கொள்ளலாமா? மன உறுதியை எளிமையாக சர்.ராதாகிருஷ்ணன் முற்பகுதியில் விளக்கியதைப் போல கொள்ளலாமா? அறிவு பக்தியின் பாதம் தொடுவதே மன உறுதியின் எல்லை என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.இன்று பக்தியில் உள்ள அனைவரும் மன உறுதியின் எல்லையை அடைந்தவர்களாக? ஆம் என்று நான் கூறுவேன். அப்படியானால் பக்தியில் சரணடைந்ததும் மன உறுதி இல்லாமல் போய்விடுமா? அறிவின் சரணாகதி மனஉறுதியின் எல்லை என்றால், அதன் பின் அறிவு யதார்த்த புலன்வழியில் வேலைசெய்வதில்லை. ஆனால் மனம் வேறு பரிணாமத்தை கொண்டு வேறு அளவுகளில் உருமாறுகிறது. இங்கு மனஉறுதி நம்பிக்கை சார்ந்ததல்ல அந்தக்கட்ட முடிந்துவிட்டது. இப்பொழுது மனஉறுதி என்பது நம்பியஒன்றை கொண்டு தேவையானதை அடைவது மட்டுமே.

உதாரணம்: மரக்கிளையில் தொங்கும் ஒருவன் மரக்கிளை ஒடிந்து கீழேவிழும் முன் மற்றொரு கிளையை பற்றுவது இயல்பு. நாம் யதார்த்தத்தை விரும்புவதில்லையே! என்ன செய்வது? அவன் கண்ணைமூடி தன் மனதில் ஜோதிஸ்வரூபமான பிரம்மத்தை, கிருஷ்ணனை, சிவனை, விஷ்ணுவை, தேவியை இன்னும் எல்லா புகைப்படங்களும் அவன் கண்முன்னே வந்தன. ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து மனஒருநிலையில் தொங்கி கொண்டிருப்பானேயாயில் அதுதான் மனஉறுதியின் எல்லை. என்ன அதை அடைய நீங்கள் தயாரா? அவன் வாழ்வில் இரண்டு முடிவுகள், ஒன்று அவன் புஷ்பகவிமானத்தில் வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் எங்காவது செல்வது, இல்லையேல் கைகால் உடைந்து நடமாட முடியாமல் இருப்பது. இப்பொழுது அவரிடம் நீ மற்றொரு கிளையை பிடிக்கலாமல்லவா என்றுகேட்டால் அவன் என்ன சொல்லிப்பான்?. நான் வணங்கிய தெய்வம் என்னை இத்தோடு காப்பாற்றியது, இல்லையென்றால் என்னை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதுதான் மனஉறுதியின் பரிணமித்த நிலை அவனுக்கு என் அனுதாபங்கள்.

குமரிலபட்டர் கதையும் இதுபோல ஒன்றுதான். உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாள் இது போன்ற நபரை சந்தித்து இருப்பீர்கள், அவர்கள் நடக்காத ஒரு மாபெரும் துன்பசம்பவத்தை இன்றைய நிலையில் தொடர்புபடுத்தி, உங்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் (Hypothetical Narrative). ஆண்டாண்டுகாலமாய் இந்த யுக்தி உதவி கொண்டுதான் இருக்கிறது. 


இங்ஙனம்

ஜனா

Email 

Blog

X Platform

Reply all
Reply to author
Forward
0 new messages