சென்னை, அண்ணாநகர் தமிழ்ப் பேரவையின் சீரிய நிகழ்வு: ஆன்மீகப் பேருரையும் அறிவார்ந்த சிற்றுரைகளும்!
தமிழ்மொழிச் செழுமையைப் போற்றும் முகமாக நடைபெற்ற, சென்னை, அண்ணாநகர்தமிழ் பேரவையின் நிகழ்வானது, பேரா. முனை. ரூபா அவர்களின் இனிய குரலில் ஒலித்த தெய்வீகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மங்கலமாய் இனிதே தொடங்கியது. அவையோர் அனைவரையும் தமிழ் கூறும் நல்லுலகின்பால் ஆர்வத்துடன் வரவேற்கும் பொருட்டு, பாவலர் சீனி. பழநி அவர்கள் தமது கவிநயம் மிக்க வரவேற்புரையை வழங்க, அரங்கமே தமிழ் மணம் கமழ்ந்தது.
இந்நிகழ்வின் சிறப்புக்கும், தலைமைப் பொலிவுக்கும், வலு சேர்க்கும் விதமாக, பேரவையின் தலைவர் பேரா. முனை. ம. இளங்கோவன் அவர்கள், காலத்தின் தேவைக்கேற்பத் தமிழின் சிறப்புகளையும், சமுதாயத்தில் தமிழ் ஆற்ற வேண்டிய பங்கையும் விளக்கி, ஆழமான தலைமை உரையை ஆற்றினார்கள்.
அடுத்து, ஆன்மீகச் சிந்தனைக்கு வித்திடும் வண்ணம், பேரா. முனைவர். சந்திரிகா அவர்கள், பக்தி இலக்கியத்தின் மணிமகுடமாம் "பெரிய புராணம்" குறித்த பேருரையைத் தொடங்கினார். அதில், அன்பின் செறிவும் அறத்தின் மேன்மையும் கொண்ட சாக்கிய நாயனாரின் வரலாற்றை விவரித்து, மனித வாழ்வின் உன்னத விழுமியங்களைச் சபையோருக்கு உணர்த்தினார்.
தொடர்ந்து, அறிவுக் கருவூலமான திருக்குறளின் பெருமையை அனைவரும் அறியும் பொருட்டு, திரு. பாலு சாமி அவர்கள் "இன்று ஒரு திருக்குறள்" என்னும் தலைப்பின்கீழ், தேர்ந்தெடுத்த ஒரு குறளுக்கு வாழ்வியல் உதாரணங்களுடன் சிற்றுரையாற்றி, அறநெறியை எடுத்துரைத்தார்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள் குறித்து, முன்னதாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பேரா. முனைவர். ரூபா அவர்களும், தமிழாசிரியர் பெரியநாயகி அவர்களும் தங்கள் ஆய்வார்ந்த கருத்துரைகளை வழங்க, அவை கூடுதல் மெருகூட்டின. நிறைவாக, பேரவையின் பணிச் செம்மலான தொண்டர் திலகம். சுதாகர் அவர்கள், விழாவில் பங்கெடுத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி உரையைத் தெரிவித்தார்கள்.
இவ்வாறு, பக்தி, அறம், தமிழ் என முப்பரிமாணச் சிறப்புடன் கூடிய இந்தத் தமிழ்ப் பேரவை நிகழ்வு, மிகுந்த எழுச்சியுடனும் இனிமையுடனும் நிறைவுற்றது.
தமிழ்த்திரு. வி. நாகசுந்தரம்.
நிறுவனர். அண்ணா நகர் தமிழ்ப்பேரவை, சென்னை