வரலாற்று ஆய்வில் களப்பணிகள் - ஒரு பாராட்டுரை
இந்நூல் திருமதி சுபாஷினியால் இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கையேடு. ஆம்; இதை நூல் என்று கூறுவதை விட ஒரு வழிகாட்டிக் கையேடு என்று குறிப்பிடுவதுதான் உத்தமம் என்று நான் நினைக்கிறேன்.
காலஞ்சென்ற திரு சோ. சிவபாதசுந்தரம் ஒலிபரப்புக் கலை என்ற ஒரு நூலை 50களில் வெளியிட்டார். இலங்கையிலும் இங்கிலாந்திலும் அவர் ஒலிபரப்பு வல்லுனராகப் பணியாற்றியவர். இலண்டன் பி பி சி யின் தமிழ் ஓசை என்ற நிகழ்வை ஆரம்பித்து அதை அவர் பல வருடங்கள் நிகழ்த்தியவர். ஆகையால் அவருக்கு ஒலிபரப்புக் கலையில் நல்ல பரிச்சியமும் அறிவாற்றலும் இருந்தது. அந்நூலுக்கு ஒரு முன்னுரை எழுத வேண்டி திரு இராஜகோபாலாச்சாரியாரை சிவபாதசுந்தரம் அணுகினார்.
முதலில் இராஜாஜி ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் நூல்களுக்குச் சாதாரணமாக முன்னுரை எழுதுவதில்லை. தவிரவும் அவருக்கு ஒலிபரப்புக் கலையைப் பற்றிய தெளிவான விவரங்களும் தெரியாது. ஆனால் தொடர்ந்து சிவபாதசுந்தரம் வேண்டிக் கொண்டதால் அவர் “நூலை வைத்துவிட்டுச் செல்லுங்கள். படித்துப் பார்க்கிறேன். பின்னர் சொல்கிறேன்” என்று சொன்னாராம். (இவ்விவரங்கள் சிவபாதசுந்தரமே சொன்னவை) சில நாட்களில் இராஜாஜியே ஆசிரியரை அழைத்து, “இந்நூலுக்குப் பெயரை மாற்றி, ரேடியோ வாத்தியார் என்று வைக்கலாம். ஏனெனில் இந்நூல் மூலம் சாதாரண மனிதர்கள் கூட ஒலிபரப்புக் கலையைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது” என்றாராம். அதையே பொருளாக வைத்து ஒரு நல்ல முன்னுரையையும் வழங்கினார்.
சுபாஷிணியின் வரலாற்று ஆய்வில் களப்பணிகள் என்று நூலுக்கு களப்பணிகளுக்கு ஒரு வழிகாட்டி என்றே பெயர் வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இதை நான் உணர்வு பூர்வமாகக் கூறுகிறேன். அதற்கு ஒரு பின்னணியும் உண்டு.
சென்னைக்குப் புலம் பெய்ர்ந்த பின்னர் நான் வரலாற்று அறிவை வளர்க்கலானேன். அதற்காக எனது மாமாவான சிட்டி சுந்தரராஜனை அணுகினேன். அவர் அதற்குச் சரியான மனிதர் திரு ஐராவதம் மஹாதேவன் என்றார். ஆகையால் எனது வரலாற்று நூல்களுக்கு நான் களப்பணிகள் மேற்கொள்வதற்கு முன் திரு ஐராவதம் மஹாதேவனைத் தொடர்பு கொண்டேன். அவர் விரிவாக சில முக்கிய விஷயங்களை விளக்கியதுடன் மாமண்டூர் பல்லவ குகை, தமிழ் பிராமி கல்வெட்டு காண அழைத்துக் கொண்டு சென்றார்.
குகைகளுக்குச் செல்கையில் எவ்வாறு முதலில் நாம் நம்மையே தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார். காலணிகள் முதல், குறிப்பெடுக்க எவையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். அதற்காக ஒருநாள் முழுதும் நான் அவருடன் மாமண்டூர் சென்று பல்லவர் குகைகளையும் சமணப் படுக்கைகளையும் கண்டோம். அவ்வழியில்தான் எனது களப்பணி ஆய்வுகள் தொடர்ந்தன.
ஆகையால் இந்நூலைப் படிக்கும் போது எனக்கு அதில் ஒரு சொந்தமான ஈர்ப்பு உண்டானது. இந்நூலின் முதல் பகுதி களப்பணியை அறிமுகப் படுத்துகிறது. அதன் முக்கியத்துவத்துடன் தொடங்கி அதற்கு வேண்டிய உபகரணங்கள், மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள், அதற்கு வேண்டிய கேள்விகள் தயாரித்தல், (இது மிகவும் முக்கியமெனக் கருதுகிறேன்; ஏனெனில் பலர் கள ஆய்வுப் பணியின் போது அங்குள்ள மனிதர்களிடம் கேட்க வேண்டியவை என்னவென்று சரியாகத் தயார் செய்து கொண்டு செல்லாமல், பின்னர் அதைக் குறித்துக் கவலைப் படுவதைக் கண்டுள்ளேன்.)
அவர் சொல்வது போல, பலர், ஓரிரு நூல்கள் படித்துவிட்டு பட்டம் பெற்றிருப்பதையும் நான் அறிவேன். அறிமுகத்திலேயே ஆய்வு என்பதைத் தீர்மானமாகக் கூறுகிறார். கள ஆய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், அதற்கான ஒரு கள ஆய்வுக் குறிப்பேட்டின் மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளார். இது ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பரிசென்றே சொல்லலாம்.
இயல் இரண்டில் தாம் மேற்கொண்ட ஐந்து களப்பணிகளின் விவரங்களைத் தந்துள்ளார். படிப்பதற்குச் சுலபமாகவும், நல்ல விவரங்களைத் தருவதாலும், ஒரு சிறந்த பயண நூல் படிக்கும் மகிழ்வை இது தருகிறது.
மொத்தத்தில் தமிழ் நாட்டு இளைய ஆய்வாளர்களுக்கு, முதலிலேயே சொன்னது போல இது ஒரு கையேடென்றே சொல்லத் தோன்றுகிறது.
இராஜாஜி சிவபாதசுந்தரத்திற்குச் சொன்னது போல இந்நூலுக்குக் களப்பணி வழிகாட்டி என்றே பெயர் வைக்கலாம். கல்லூரிகளின் நூலகங்களுக்கு இந்நூலைப் பரிந்துரைக்கலாம்.
---