வெருளி நோய்கள் 876-880
குறுந் தகடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுந் தகட்டு வெருளி.
ஒலி. ஒளி அலைப்பதிவுகள் சரியாக மேற்கொள்ளப் படவில்லையோ, கீறல் விழுந்த குறுந்தகடாக இருந்து சரியாக இசையையோ உரையையோ கேட்க முடியாமல் போகுமோ, கேட்கத்தகாதவை அல்லது பார்க்கத்தகாதவை பதிவாிகியருக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளா்வோர் உள்ளனர்.
00
குறுமி(dwarf planet) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறுமிவெருளி.
dwarf planet என்றால் குள்ளன் என்கிறார்கள். அவ்வாறு சொல்வது உயர்திணையாகும். குறுமளவு உள்ள கோளைச் சுருக்கமாகக் குறுமி என்பது பொருத்தமாக இருக்கும்.
Ceres என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறுமி.
00
குறும்பி(earwax/cerumen) எனப்படும் காதுக்குள் சேரும் பசையான அழுக்கு குறித்த வரம்பு கடந்த பேரச்சம் குறும்பி வெருளி.
குறும்பியாகிய காதினுள் சேரும் பழுப்பு நிறமுடைய மெழுகு போன்ற பொருள் தானாகவே வெளியேறும் இயல்புடையது. இருந்தும் இது குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். ஆகவே, முறையற்ற வழியில் வெளியேற்ற முயன்று துன்பத்திற்கு ஆளாவர். இதனைக் கேள்வியுறுவோருக்குக் குறும்பியால் காது செவிடாகிவிடும் என்பதுபோன்ற அளவுகடந்த பேரச்சம் வருகிறது.
Kypselida என்பது கிரேக்கச்சொல்லில் இருந்து உருவான குறும்பி என்னும் பொருள் கொண்ட சொல்.
00
குறும்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறும்பு வெருளி.
pharsa என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குறும்பு எனப் பொருள்.
குழந்தைகள் அல்லது பிறர் செய்யும் குறும்புகள், இன்னல் விளைவிக்குமோ தீங்கு விளைவிக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.
சிறு குறும்பாகவோ கேலிக் குறும்பாகவோ விளையாட்டுக் குறும்பாகவோ தீங்கிலாக் குறும்பாகவோ தீங்கு தரும் குறும்பாகவோ எத்தகைய குறும்பாகவோ இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
செயல்பாட்டுத்திறன் குறைவாக இருப்பது தொடர்பான பேரச்சம் குறை திறன் வெருளி.
செயலில் நிறைவின்மையால் குறை காண்பது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறைமை / குறை திறன் வெருளி.
Ordacleaphobia என்பதற்குக் குறைபாட்டு வெருளி/நிறைவிலி வெருளி என இருவகையாகவும் முதலில் குறித்திருந்தேன். இரு வகையாகக் குறிக்க வேண்டா என்பதால் குறைமை வெருளி என ஒற்றைச் சொலலை மட்டும் இப்பொழுது குறித்துள்ளேன்.
குறைமை வெருளி(Ordacleaphobia)யும் குறைதிறன் வெருளியும் ஒன்றுதான். குறைமை வெருளி(Ordacleaphobia)ஐப் புதிய வெருளியாக வரையறுத்துள்ளனர். இரண்டையும் நாம் ஒன்றாகவே குறை திறன் வெருளி எனக் குறிக்கலாம்.
இவ் வெருளி உள்ளவர்கள், நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்க அஞ்சுவர். பணியில் நிலைப்பு இருக்காது, வேலை பறி போகும் என்று கவலை கொள்வர். திறமையை வளர்த்துக் கொள்வதில் கருத்து செலுத்துவதை விட குறைதிறனால் ஏற்படும் இடர்கள் பற்றியே கவலைப்படுவர்.
Atelo என்னும் கிரேக்க முன்னொட்டின் பொருள்கள் குறைவுற்ற; முழுமையற்ற.
orda+clea என்பவற்றின் கூட்டுப் பொருளும் முழுமையற்ற திறன்/குறை திறன் ஆகும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
15
ஆரியர் வரவு
தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே. அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு நல்கும் பண்டைத் தமிழர் வட ஆரியப் புலவரை வரவேற்று வாழ்வளித்ததில் வியப்பின்று. தமிழரை யடிமையாக்கித் தமிழ் மொழியை ஒழிக்கும் உள்ளத்துடன் அன்று வடவாரியர் இங்கு வந்திலர். ஆதலின் புகலிடம் தேடி வந்த ஆரிய மொழிச் சான்றோரிடம் பொல்லாங்கு காட்டாது முகமன் கூறி வரவேற்று அகமகிழ ஆகும் உதவிகளைச் செய்தனர். அதனால் இருசாராரும் நெருங்கிப் பழகி ஒருவர் மொழியை ஒருவர் பயின்றனர். ஓரினத்தார் மற்றோரினத்தாருடன் கலந்து உறவாடுங்கால் இரு சாராரின் மொழிகளும் பண்பாடுகளும் கலைகளும் ஒன்றினுள் ஓன்று கலப்புறுவது இயற்கையே; தடுக்க முடியாததும் ஆகும். ஆதலின் ஆரியர்கள் தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டது போலவே, தமிழர்களும் ஆரியர்களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தமதாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளல் வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் பிற மொழி வெறுப்பும், பகைமை யுணர்ச்சியும் தோன்றவில்லை. ஆரியர்கள் தமிழகத்தில் செல்வாக்குத் தேட வேண்டிய நிலையில் இருந்ததால், தம் ஆரியநூல்களைத் தமிழர்கள் கற்கலாகாது என்று தடுக்கும் கொள்கையை அஞ்ஞான்று மேற் கொண்டிலர். தமது மொழியில் புலமை பெற்ற தமிழர்களும் வேற்றுப் புது மொழியாம், ஆரியத்தை விரைந்து கற்றனர். புதிய மொழியில் புலமை பெறுதலைப் பெருமையாகக் கருதுதல் என்றும் உள்ள இயல்பு. ஆதலின் தொல்காப்பியரைச் சிறப்பித்துக் கூறப் புகுந்த பனம்பாரனார் தொல்காப்பியரின் வடமொழிப் புலமையை எடுத்துக்காட்டிச் சிறப்பித்துள்ளார். (பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம்: 26-27)
உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார் தொல்காப்பியர். ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் (அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க’ என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள். உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது. அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி, தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர். தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை வேளாளரைஉயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும். (பேராசிரியர் சி. இலக்குவனார்,தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145 )
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் குன்னூரில் ஒரு நூலகம் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று அமைத்தவர். அங்கே தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். இத்தகைய அறிஞர் பெருமக்களாலும் ஆன்றோர்களாலும்தான் தொல்காப்பியர் புகழ் காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. நாம் அவர் புகழை மேலும் உலகெங்கும் பரப்புவோமாக!
கருத்துகளை உள்வாங்குதற்கும் மேற்கோளாகப் பயன்படுத்துவதற்கும் துணை நின்ற நூல்கள்
000
நிறைவு
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்