என்றென்றும் பெரியார்! — முனைவர் தேமொழி

110 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 7, 2023, 5:27:41 AM12/7/23
to மின்தமிழ்
என்றென்றும் பெரியார்!  

— முனைவர் தேமொழி



ஆயிற்று;  பெரியார் ஈரோடு வெ.ராமசாமி அவர்கள் மறைந்த டிசம்பர்  24, 1973 நாள் முதல், இந்த டிசம்பர் 24, 2023  வரை அவர் மறைந்து 50 ஆண்டுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது!!!  இருப்பினும் தமிழ் நாட்டில் அவரது தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை!   அவர் மறைந்து  அரை நூற்றாண்டுக்குப் பிறகும் மறுக்கமுடியாத வகையில் பெரியாரின்  தாக்கம் இன்றும் தொடர்கிறது.  பெரியார் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம் திரைப்படம் உட்பட,  எண்ணற்ற நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், காணொளிகளும் வெளியாகி தமிழக வரலாற்றில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பங்களிப்பை விவரித்துள்ளன. அவரது பிறந்த நாள், மறைந்த நாள் ஆகிய நாட்களில் அவரை நினைவு கூர்வது மட்டுமின்றி,  இந்த ஆண்டின் பிற நாட்களிலும் அவர் ஒரு பேசு பொருளாகத்தான் இருக்கிறார் என்பதற்குப் பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.  இந்த ஆண்டு மட்டுமன்று,  கடந்த ஆண்டுகளிலும் இதே கதைதான்.  

இன்றிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், 2017 ஆம் ஆண்டில், சென்னை 40வது புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த நூல்  ‘பெரியார் இன்றும் என்றும்’  என்ற தலைப்பில் விடியல் பதிப்பகம்  வெளியிட்ட, சற்றொப்ப 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரிய நூல். சமுதாயம், மதம், கலைகள், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் வகை பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருந்தது.  இது அதிகம் விற்ற நூல் என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் முதல் பதிப்பு உடனே விற்றுத் தீர்ந்துவிட,  இரண்டாம்  பதிப்பும் உடனே வெளியிடப்பட்டு அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. ஆம், அதிக எண்ணிக்கை என்பது மட்டுமல்ல,  ஒரே புத்தகக்காட்சியில் உடனுக்குடன் இரண்டு பதிப்புகளும் விற்று சாதனை படைத்த நூல் என்ற பெருமைக்கு உரியது பெரியார் குறித்த நூல்தான். பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு என்றைக்கும் மக்களிடம் வரவேற்பு உண்டு என்பதையே இது காட்டுகிறது என்று செய்தித்தாள்கள் செய்திகள் வெளியிட்டன[1].

பெரியார் மறைந்த இந்த 50 ஆம் ஆண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டும் கூட.  வைக்கம் போராட்டம் இந்தியாவின் சமூகநீதிக்கான ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரிலிருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, சென்ற நூற்றாண்டில் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.  பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டம் 1924 மார்ச் 30 முதல், 1925 நவம்பர் 23ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை வழிநடத்திய கேரள போராட்டத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அரசால் சிறையில் அடைக்கப்பட்டதும் இடையில் இப்போராட்டம் தொய்வடைந்தது.  இந்த நிலையில் கேரள போராட்டக் குழுவினரின் அழைப்பை ஏற்று வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்றார். இப்போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் தடையை மீறிப்  போராடினார் என்று பெரியார் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதல் முறை கைதாகி சிறைத்தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஊரை விட்டு வெளியேறாமல் தடை ஆணையை மீறி மீண்டும் போராட்டத்திற்குச் சென்றதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  பெரியார் ஓர் அரசியல் கைதி என்ற தகுதியும் அவருக்கு  மறுக்கப்பட்டு சிறையில்  கடுங்காவல் தண்டனைக்கு  உள்ளாக்கப் பட்டார்[2].  

கேரளாவின் சனாதன ஆதிக்க சக்திகளால் அடக்குமுறைக்கு ஆளான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டமாகத் தொடங்கிய வைக்கம் போராட்டம், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ஓர் உரிமைப் போராட்ட நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.  பின்னாளில் இந்தியாவில் நிகழ்ந்த பல கோவில் நுழைவுப் போராட்டங்களின் துவக்கப்புள்ளி தான் இந்த வைக்கம் போராட்டம். அண்ணல் அம்பேத்கர் 3.3.1930 அன்று முன்னெடுத்த, நாசிக் நகரில் உள்ள காலாராம் கோயில் நுழைவுப் போராட்டமும், வைக்கம் போராட்டம் தந்த தாக்கமே.    திரு.வி.க. அவர்கள் நடத்திய நவசக்தி இதழில் பெரியாரை வைக்கம் வீரர் என்று புகழ்ந்து பாராட்டினார். "வைக்கம் வீரர் சொற்பொழிவு"  என்ற தலைப்பில் பெரியாரின் போராட்டக் காலச் சொற்பொழிவை 'நவசக்தி' 1924ஆம் ஆண்டு இதழில்  திரு. வி. க.  வெளியிட்டார்[3].    வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பெரும் பங்களிப்பைப் போற்றி, கேரள அரசும்  தமிழ்நாடு அரசும் இணைந்து வைக்கம் போராட்ட நூற்றாண்டை ஏப்ரல் மாதம் 1, 2023-ஆம்தேதி அன்று நடந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தன. பெரியார் தொண்டினைப் போற்றி இரு மாநில அரசுகளின் சார்பிலும் வைக்கம் வீரருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை ஏப்ரல் மாதம் 1-ஆம்தேதி முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாட கேரள அரசும் முடிவு செய்துள்ளது[4].  

அண்டை மாநிலத்தில் மட்டும் அல்ல, அயல்  நாட்டிலும் பெரியாரின் புகழ்க்கொடி உயரப் பறக்கிறது.  அண்மையில் நவம்பர் 5, 2023  அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் “பெரியார் விழா 2023” நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில்  உரையாற்றினார் (https://www.youtube.com/watch?v=01sP83hB3kY).   சமூக ஊடகங்களில் உள்ளவர்களால் பெரியார் குறித்த இவ்வுரை  பரபரப்பாக  விவாதிக்கும்  நிலையையும் எட்டியது [5].  

மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகள்தான் என்ன? என்ற வியப்பு எழாமல் இருக்காது.  பெரியார் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையிலான அவரது சமூக நீதிக் கொள்கைதான். மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர் மொழிந்த சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சமய சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை ஆகியவை.  இவையாவும் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகள்.   ஆதிக்கங்களுக்கும் அடக்குமுறைக்கு எதிரானவர் பெரியார்.  அவரின் கொள்கைப்படி பேதம் கூறும் சாதியை எது, அல்லது எவர் முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார். அது யாராக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி. நலிந்தவர் நலன் அவருக்கு  முக்கியம்.  இதுதான் பெரியார் தம் சொற்பொழிவுகள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் மக்களுக்கு ஊட்டிய விழிப்புணர்வு, தமிழ் நாட்டிற்கு அவர் அளித்த மறுமலர்ச்சி.  

"உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது" [6] என்று மிகச் சரியாக இந்தியாவின் சமத்துவமின்மை எவ்வாறு பிற உலக நாடுகளில் இருக்கும் சமத்துவமின்மையில் இருந்து வேறுபட்டது என்று அதன் அடிப்படையை இனங்கண்டார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் [குறள் -48]   என்பதற்கு இணங்க இந்தியாவின் சாதிபேதம்  கூறும் நோய்க்குப் பல நூறு ஆண்டுகளாக அதைக் கட்டிக் காக்கும் வைதீக சமயத்தின்  பிறப்பு அடிப்படையிலான பேதம் கூறும் சனாதனக் கருத்துகள்தான் ஆணிவேர் என்பதையும் இனங்கண்டு கொண்டார். அந்த நச்சு மரத்தை அழிக்க வேருடன் நீக்க நாத்திக வழியில் தாக்குதல் தொடுத்தார்.  சுருக்கமாக, பெரியாரின் கொள்கை, பெரியாரின் சமூக பங்களிப்பு என்பன,  மனிதநேயமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்ததும், அந்த மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு மூலகாரணத்தைக் குறிவைத்துத் தாக்கி ஆட்டம் காண வைத்ததும் ஆகும்.

பெரியார் நடத்திய போராட்டங்களின் பட்டியல் நெடியது. அத்தனை போராட்டங்களின் மையக் கருத்து எதுவென நோக்கினால், அவை அனைத்திற்கும் அடிப்படை நோக்கம் ஏதோ ஒரு அடக்குமுறையை எதிர்த்துச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களாகவே அவை இருக்கும். மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி ஆகியன எவருக்கோ எந்தவகையிலோ மறுக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் களம் இறங்கியிருக்கிறார் பெரியார்.

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்த தொழிலாளி வீட்டிற்குப் போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்காக நான் நிற்பேன்.மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி என்று  தனது நிலைப்பாட்டை விளக்கியவர் பெரியார்.

      "நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்
      நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
      பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
      பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்"
என்று கவிஞர் கண்ணதாசன் பெரியாரைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்[7].

பெரியார் மண் என்று பெருமிதத்துடன் இன்று அறிவித்துக் கொள்ளும் தமிழ் நாட்டின் வரலாற்றிலிருந்தோ,  இந்திய அரசின் வரலாற்றிலிருந்தோ அவரின் பங்களிப்பை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதபடி ஆழமான சுவடுகளைப் பல துறைகளில் பதித்துவிட்டுச் சென்றுள்ளார் பெரியார்; அவற்றில் குறிப்பிடத்தக்க சில:  

இந்திய மற்றும் தமிழக சட்ட மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்தபிறகு, குமாரசாமி ராஜா ஆட்சியில் நாட்டின் புதிய அரசியல் சட்டத்தின் துணையுடன் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்த  கம்யூனல் ஜி.ஓ. வை (1920களில் நீதிக்கட்சி உருவாக்கிய வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையை) முறியடிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. செண்பகம் துரைசாமி என்பவரும், சீனிவாசன் என்பவரும் தொழிற்கல்வி  மாணவர் சேர்ப்பில் கம்யூனல் ஜி.ஓ. குறுக்கீடு இருக்கக் கூடாது என்று வழக்குத் தொடுத்தனர். தமிழக அரசின் கம்யூனல் ஜி.ஒ. என்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசின் சட்டப்படி செல்லாது என்று தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதுவரை இடவொதுக்கீடு, சமூகநீதி என்று போராடிப் பெற்ற தமிழக அரசின் அத்தனை முயற்சியும் தீர்ப்பால் செயலற்றுப் போனது. அரசியல் சட்டத்தினாலேயே மக்களின் உரிமை பறிக்கப்பட்ட அவலநிலை அது.   இந்தியாவின் சட்டவரைவை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் இடவொதுக்கீட்டுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு சட்டத்தையும் சட்டவரைவில் இடம்பெறச் செய்து, பார்ப்பன மாணவர்கள் சார்பில் ஒரு வழக்கையும் தொடுத்து, அவரே வாதாடி சட்ட வரையறையைக் கொண்டே இடவொதுக்கீட்டு ஆணையை முறியடித்தும் காட்டினார் என்பது அன்று தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட நிகழ்வு [8].

ஒரு தீர்ப்பு சட்டப்படி சரி, ஆனால் அறத்தின் அடிப்படையில் பிழை என்றால் சட்டத் திருத்தம் ஒன்றுதான் மீண்டும் அறத்தை நிலை நிறுத்தும். ஆகவே, தீர்ப்பையடுத்து ஈ.வெ.ரா. பெரியாரின் தலைமையில், திருச்சியில் நடந்த இடவொதுக்கீடு குறித்த மாநாட்டில் இந்த தீர்ப்பினை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறைக்காகச் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இங்குதான் இட ஒதுக்கீட்டில் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் இடவொதுக்கீட்டின் தேவையையும் அதன் வரலாற்றையும் அறியாதவர் எண்ணற்றவர் என்பது ஒரு பெரிய குறைபாடு. கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் பெரியாரின் கீழ் ஒன்று திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரும் ஆதரவு அளித்தார். பெரியாரின் தலைமையில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கை 'இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது', அனைவருக்கும் இடவொதுக்கீட்டு உரிமையை மீட்டுக் கொடுத்தது. தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நேரு தலைமையிலிருந்த ஒன்றிய  அரசை உலுக்கியது. போராட்டத்திலிருந்த நியாயம் உணரப்பட்டது. இந்தியா அரசின் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு (ஆர்ட்டிக்கில் – 15(4)) என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறை உறுதி செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூகவாழ்வில் முன்னேற வேண்டிய எந்த ஒரு வகுப்பினருக்கான திட்டங்களில் அரசின் எந்த ஒரு சட்டமும் தடை செய்ய முடியாத வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பெரியாரின்  போராட்ட நடவடிக்கை இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது என்பதும் இந்திய அரசியல் வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது. இன்றைய ஒன்றிய அரசின் ‘அரியவகை ஏழைப் பிரிவு’ என்ற உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க எடுத்த முடிவு இந்த சட்டத்திற்குப் புறம்பானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர் என்ற சமூக மாற்றத்திற்காக மரணத்திற்கு முன்னர் அவர் அளித்த இறுதி உரை வரை போராடியவர் பெரியார். சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை(தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது[9].

அவரது இந்தப் போராட்டத்தின் துவக்கம் 1920 களிலேயே தொடங்கியது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.  "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள பிறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது" என 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3-ஆவது அரசியல்  மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது [10]. இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் கழிந்த பிறகு  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' இதனால் அகற்றப்பட்டது[11].

சாதி மறுப்பு திருமணங்களும், சீர்திருத்த முறைப்படி வைதீக சடங்குகள் இன்றி நடை பெறும் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றதிலும் பெரியாரின் பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது.  சாதிக்கான கட்டமைப்பு, சொந்த சாதி திருமண முறையால் வலுவடைகிறது என்பதால் பெரியார் காதல் திருமணங்களையும் கலப்பு திருமணங்களையும் ஆதரித்துச் சாதிக் கட்டமைப்பை ஒழிக்கப் பாடுபட்டார்.  வைதீக  முறையில் நடக்காத சீர்திருத்தத் திருமண முறையைச் சமுதாய முன்னேற்றத்திற்கான  வழியாகக் கண்டார்.  அதற்கான சட்ட வடிவம் தான் சுயமரியாதைத் திருமணச் சட்டமாக அவரது கொள்கையைப் பின்பற்றிய அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் அண்ணாதுரையால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நவம்பர் 28, 1967 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள். [12].

சமூக மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்பு:
ஐம்பது அகவையை எட்டிவிடும் பொழுதில், சமூகத் தொண்டின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த பெரியார், 1927ம் ஆண்டில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்து வந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தை நீக்கிவிடுகிறார். தமது “குடிஅரசு” 25-12-1927 இதழ் முதற்கொண்டு ‘ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி’ என்று அறிவித்து சாதிப்பெயரைத் தவிர்த்துவிடுகிறார். பிறகு, 1929இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ எனும் நான் இன்றுமுதல் ‘ஈ.வெ.ராமசாமி' என அழைக்கப்படுவேன்" என்று அறிவித்து அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.   அதே மாநாட்டில்  பெரியாரோடு இணைந்து செளந்தரபாண்டிய நாடார், விருதுநகர் ராமசாமி நாடார் உள்ளிட்ட பல தலைவர்களும் பெரியாரின் தொண்டர்கள் பலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிக் கொண்டனர்[13]. இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பெரியாரின் தூண்டுதல் காரணமாகச் சாதிப்பெயரை தங்கள் பெயருடன் இணைப்பதைக் கைவிட்டனர் தமிழர்.  ஒருவரின் சாதிப் பின்னணியை வெளிப்படையாகக் கேட்பது தவறான பண்பாடு என்று கூசும் அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது, அவ்வாறு மாற்றியவர் பெரியார்.  

பெண்ணுரிமைக்கு என்று உரத்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.  ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று சென்ற நூற்றாண்டிலேயே  பெண்ணுரிமை பேசியவரும்,  பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறைகளை ஒழிக்கப் போர்க்கொடி உயர்த்தியவர் அவர்.   'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியாரின் நூல் 1942-இல் வெளியான  79 பக்கங்கள்  மட்டுமே கொண்ட ஒரு  சிறு நூல்.  இந்த நூல்  பெண் ஏன் அடிமையானாள் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அணுகி,  பெண்ணுரிமை அற்ற நிலையை விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியது[14].   ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்று சென்ற நூற்றாண்டிலேயே கேள்வி எழுப்பிய பெரியார், ஆண்களுக்கு இருக்கும்  அனைத்து உரிமைகளும்  பெண்களுக்கும்  கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்து பெண்களின் நிலையை மாற்றப் போராடினார். பெண் ஏன் அடிமையானாள் நூல் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக் கொண்டிருக்கிறது.  தங்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிப் போராடிய  ஈ.வெ.ரா.  அவர்களைப் பெண்கள் பெரிதும் மதித்தனர். இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் நடைபெற்ற தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் தந்தை ஈ. வெ. ரா. அவர்களுக்கு  “பெரியார்” எனும் பட்டம் பெண்கள் சார்பாக அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களால் வழங்கப்பட்டது[15].

குடிஅரசு 20.1.1935 தேதியிட்ட இதழிலிருந்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பெரியார் நடைமுறைப்படுத்தினார். பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1978-79 ல் எம்.ஜி.ஆர்.  தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு,  1935 பெரியார் இயக்கம் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் (அய், அவ் மாற்றங்களைத் தவிர்த்து) தவிர மற்ற மற்ற மாற்றங்களை ஏற்றுச் செயற்படுத்தியது[16].  இவ்வாறாக, தமிழ் மொழி வரலாற்றிலும்  பெரியார் எழுத்து சீர் திருத்தம் என்ற முறையும் நிலைத்துவிட்டது.

தமிழக வரலாற்றில், இந்திய அரசியலில், இந்திய மற்றும் தமிழ் நாட்டுச் சட்ட வரையறைகளில், தமிழ்மொழி வளர்ச்சியில், மனிதநேய சமத்துவ மாற்றங்களில் என நிலையாக இடம் பிடித்தவர் பெரியார்.  மறைக்கவோ மறுக்கவோ முடியாதபடி தன் தடத்தைப் பதித்துச் சென்றவர் பெரியார்.  சாதி ஒழிப்பு, சாதிப் பெயர் மறுப்பு, எழுத்துச் சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு, கருத்துரிமை, பெண்ணுரிமை, சட்ட வரையறை திருத்தம் என்று எந்த ஒரு துறையிலும் அவர் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் தடம் பதித்துச் சென்றுள்ளார் என்பதை அவர் மறைந்து 50 ஆண்டுகள் கழித்தும் அவர் பேசு பொருளாக இருப்பது நிரூபிக்கிறது.  அவர் மறைவிற்குப் பிறகு பிறந்த தலைமுறையினர் இடையில் பெரியாரின்  புரட்சிக் கருத்துகள் போற்றப்படுகிறது.  பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று செப்டம்பர் 06, 2021 முதல் தமிழகம் கொண்டாடி வருகிறது.   பெரியார் என்றென்றும் நினைவு கூரப் படுவார்.   பெரியாரின்  தாக்கம் என்றென்றும் தொடரும்.

வாழ்க பெரியார் !! பெரியார் புகழ் ஓங்குக!!


உதவிய நூல்களும் செய்திக் குறிப்புகளும்:  
1.  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகம்
http://www.noolulagam.com/2017/01/31/168797/

2.  வைக்கம் போராட்டம்: சமூகநீதிக்கான வரலாற்றுத் திருப்புமுனை, முனைவர். தேமொழி. திராவிடப் பொழில்— திராவிட ஆய்விதழ், தொகுதி: 3, இதழ்:  2 , ஏப்ரல் - ஜூன் 2023. பக்கம் 69-75.
https://dravidapozhil.pmu.edu/pdf/Vaikom-Poraattam.pdf  

3.  வைக்கம் வீரர் சொற்பொழிவு - திரு. வி. கலியாணசுந்தரனாரின் 'நவசக்தி' 1924 இதழ்.

4.  வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அழைப்பு.
https://www.dailythanthi.com/News/State/vaikam-protest-centenary-kerala-chief-minister-calls-on-chief-minister-mk-stalin-925668

5.  விதைத்தவர் பெரியார் : விளைந்தது சந்திரயான் ..., ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நவம்பர் 9, 2023
https://minnambalam.com/featured-article/periyar-and-science-mylswamy-annadurai-speech-in-singapore/

6.  பெரியார், 14.12.1931 திராவிட இயக்க இதழ்கள்: தொகுதி 2

7.  "பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!", கவிஞர் கண்ணதாசன். பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில் -கி.வீரமணி நூலிலிருந்து.  

8.  வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத் தெரு, சென்னை.

9.  தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம்,  தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017.

10. சேலம் 3-வது அரசியல்  மகாநாடு. குடி அரசு. 13-11-1927 இதழ். பக்கம் - 13

11.  அனைத்து ஜாதி அர்ச்சகர் வழக்கு: நீதிமன்ற தீர்ப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?, முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ், 22 ஆகஸ்ட் 2022. https://www.bbc.com/tamil/india-62633574

12.  சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை!, ரமணி மோகன கிருஷ்ணன், நவம்பர் 29, 2015.
https://www.vikatan.com/literature/arts/55766-

13.  "முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு”, 1929 டிசம்பர், ‘குடிஅரசு’ இதழ்கள்

14.  பெண் ஏன் அடிமையானாள்?, தந்தை பெரியார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.  பக்கங்கள்:79 1942.  

15.  ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ , 20.11. 1938, ‘குடிஅரசு’ இதழின் தலைப்புச் செய்தி.  

16. பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, முதல் தொகுதி, சிந்தனையாளர் கழகம், 1974 – http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/EVRT-VOL-1-part-1.pdf

------------------------
tamilanangu12.jpg
நன்றி:
தமிழணங்கு (டிசம்பர்  2023)
பக்கம்: 10-21



இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 9, 2023, 6:09:36 AM12/9/23
to மின்தமிழ், tsj...@gmail.com
நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a8fe65ac-ca3f-45a9-a9bf-97701f54c3ffn%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 9, 2023, 2:37:01 PM12/9/23
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா 
அன்புடன் 
தேமொழி 

தேமொழி

unread,
Jan 3, 2024, 12:15:02 AM1/3/24
to மின்தமிழ்
தமிழ் விக்கிப்பீடியாவில் டிசம்பர் மாதப் புள்ளிவிவரத்தின்படி அதிகம் பார்க்கப்பட்ட ஆளுமைகளில் 
முதல் 5 என்ற தரவரிசை இடத்தை பெரியார் பிடித்துள்ளார் !!!!!!!!!!!
பதிவு தகவலுக்கு நன்றி Neechalkaran Raja

பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=6961210540581586&set=a.631920786843958


தமிழ் விக்கிப்பீடியாவில் டிசம்பர் மாதப் புள்ளிவிவரத்தின்படி அதிகம் பார்க்கப்பட்ட ஆளுமைகள்.

wiki -periyar.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Reply all
Reply to author
Forward
0 new messages