என்பதே அந்த வரிகள். இதற்கு திரு. நடன. காசிநாதன் பொருள் கூறுகிற போது, "துறவு பூண்ட ஒருவர் இறந்ததற்காக கல் அமைந்த செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது" எனக் கூறியிருக்கிறார். சுமார் 3 1/2 அடி நீளத்திலும் 3/4 அடி உயரத்திலுமுள்ள இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதன் மறு முனையில் சற்று ஒடுக்கமாகச் செதுக்கப்பட்டு செருக்குக்கல் அமைப்பைக் கொண்டிருக்கிறது.
தாமரைக்கரை நடுகல்
இந்த ஈரெட்டி மலையிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமரைக்கரை என்ற ஊரில் 1997 ம் ஆண்டில் ஈரெட்டி மலைக் கல்லைப் போலவே அமைப்புடைய ஒரு கல், எழுத்துப் பொறிப்புடன் கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள தாமரைக்கரை என்ற இந்த ஊரில் முனிவர் இருக்கை என்ற பொருளில் "முனிகெந்தை" என்னும் கன்னடப் பெயரில் அமைந்த சோலைக் கோயிலில் (காவு) கண்டறியப்பட்டது. இக்கல்லின் மேல்பகுதி உடைந்தும் ,
- - - (ம) கன் கரிமி / தச் சாத்த / ன் கல்
என்று அகலவாக்கில் கல்வெட்டுப் பொறுப்புடன் காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி. 4 - 5 நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் காணப்படுவதால் முதன்மை பெறுகிறது. இக்கல்வெட்டைக் கண்டுபிடித்த திரு . வெ. வேதாசலம், இது ஒரு பழம் நடுகல் என்று குறிப்பிட்ட போதிலும் வடக்கிருந்து உயிர் நீத்தோருக்கு எடுக்கப்பட்ட கல்லாகவே கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்லைக் குறிப்பிடுகிறார்.
(புலிமான் கோம்பை நடுகற்களை ஒப்பிட்டு) ஒற்றுமைகளை கொண்டு பார்க்கையில் ஈரெட்டி மாலையிலும் தாமரைக்கரையிலும் கிடைத்திருக்கின்ற கல்வெட்டுகள் துறவிலிருந்து உயிர் நீத்தாருக்கு எடுத்த கல் என்றோ, சாதாரண ஒரு நினைவு கல் என்றோ கொள்வதற்கு இடம் தரவில்லை. அவ்விரு கல்வெட்டுகளும் புலிமான் கோம்பையில் கிடைத்த கல்வெட்டுகளைப் போன்றனவே. அவை ஏற்படுத்திய வெளிச்சத்தின் காரணமாகவும் தாமரைக்கரை, ஈரெட்டி மலையில் கிடைத்த இரு கல்வெட்டுகளும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுகள் எனக்கொள்வது தான் சரியானதாக இருக்கும். மேலும் இவ்விரு கல்வெட்டுகளுமே கி.பி. 4 - 5 நூற்றாண்டு எழுத்தமைதியில் காணப்படுவதால் இவ்விரண்டும் சங்க மரபைத் தொடர்ந்து ஈமப்புறங்காட்டில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட களப்பிரர் கால நடுகற்கள் எனக் கருதுவதற்கு இடம் தருகிறது.
கல்வெட்டாய்வாளர் ஆ. பத்மாவதி, "சமுக விஞ்ஞானம்" என்ற இதழின் சூலை - ஆகத்து, 2016 வெளியீட்டில் "களப்பிரர் கால நடுகற்கள்" என்ற தலைப்பில் இலக்கித்த கட்டுரையின் சில பகுதி தான் மேலது.
இனி, என் கருத்து. ஈரெட்டி மலை கல்வெட்டுச் சொல் துற > தொற என்பதற்கு 'அதிக' என்னும் பொருளை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி தருகிறது. அதே போல் கை என்பதற்கு ஆற்றல் என்ற பொருளையும் தருகிறது. இப்பொருளை பொருத்திப் பார்க்கிறபோது " துற கய்யுள் / ளாரு கல்" என்பதற்கு அதிக ஆற்றல் உள்ளவர் நினைவில் நட்ட கல் என்று பொருட்படுகிறது. அதிக ஆற்றல் என்பது படை, அதிகார ஆற்றலைக் குறிப்பதால் இது படை சார்ந்தவர் பொருட்டு நட்ட வீரக்கல்லே என்பது உறுதியாகிறது. இக்கல்வெட்டில் உள்ள தமிழ்ச் சொற்களின் பொருள் அறிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரகரமுதலி http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm உதவியது.
தாமரைக்கரை கல்வெட்டுப் பாடம் " - - - (ம)கன் கரிமி / தச் சாத்த / ன் கல்" என்ற பாடத்தில் உள்ள "மகன்" என்ற சொல் நடுகற்களில் கீழ்நிலை வீரனைக் (subordinate warrior) குறிக்க ஆளப்பட்டுள்ளது. கரிமிதம் என்பது யானைமேல் அமர்பவன் என்று பொருள் படுமோ? சாத்தன் என்பது வீரச்சாவடைந்தவன் இயற்பெயர். எனவே இதுவும் போர் சார்ந்த ஒரு நடு கல் தான். ஆதலால் இவை சமணர் நினைவுக்கல் அல்லன வீரச்சாவடைந்தவர் நினைவுக்கு கல் என்ற ஆ. பத்மாவதியாரின் நிலைப்பாடு சரியானதே. ஆனால் இவை 4 - 5 நூற்றாண்டை சார்ந்ததாலேயே அவற்றை களப்பிரர் கால நடுகல் என்று கொள்வது தான் தவறு என்கிறேன். ஏனென்றால் இக்கல்வெட்டுகளில் களப்பிர அரசர் பெயர்க் குறிப்பு ஏதும் இல்லை.
மாரக்கல்