அமெரிக்கன் கல்லூரி மொழிப்போர் வீர்ர்கள் – (தொடர்ச்சி)
நான் இன்றைய பராசக்தி படம் பார்க்கவில்லை. ஆனால் அதுபற்றிய ஒரு காணொளி கண்டேன். அந்தக் காணொளியின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பாருங்கள்.
(நன்றி – தேமொழி – மின் தமிழ்)
நான் என் பதிவில் குறிப்பிட்ட நிகழ்ச்சி, மொழிப்போரின் முக்கியமான மூன்று நிகழ்வுகளில் முதல் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அங்குமிங்குமாக, சிறுசிறு சலசலப்புகளாக இருந்த மொழிப்போர், அந்த வடக்குமாசி நிகழ்வுக்குப்பின்னரே பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது என்று அதில் கூறப்படுகிறது.
நான் என் பதிவினை எழுதும்போது, அந்த வடக்குமாசிவீதி நிகழ்ச்சிதான் மொழிப்போரின் பெரும் திருப்பமாக அமைந்தது என்று குறிப்பிட விரும்பினேன். ஆனால், சற்று அடக்கிவாசிக்க எண்ணி, அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.
உண்மையில் அந்த மொழிப்போரினை வெடிக்கச் செய்தது (ignite பண்ணியது) மதுரையே, அதில் மதுரை மாணவர்களுக்கு – குறிப்பாக அரிவாள்வெட்டு வாங்கிய அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்குப் - பெரும் பங்கு உண்டு என்று இன்று பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
இந்தக் காணொளியில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
1. மதுரை வடக்குமாசிவீதி அரிவாள் வெட்டு
2. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்மீது துப்பாக்கிச்சூடு – மாணவர் இராஜேந்திரன் இறப்பு.
3. இந்திராகாந்தி தமிழகம் வருகை.
இதில் மூன்றாவதாக நடந்த இந்திராகாந்தி வருகை மொழிப்போரின் கடைசிக் காலங்களில் நடந்தது. அப்போழுது மத்தியில் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரா காந்தி. பிரதமர் லால் பகதூர் அவ்ர்களின் ஆலோசனைப்படி, தமிழக மக்களைச் சந்திக்க இந்திரா வருகிறார். அந்த நிகழ்வுகள் காணொளியில் கூறப்படுகின்றன. ஆனால் அதில் கூறப்படாத ஒரு முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு.
தமிழகக் காங்கிரஸ்காரர்களைச் சந்தித்துவிட்டு, இந்திரா காந்தி ஓய்வெடுக்கக் கொடைக்கானல் செல்கிறார். அப்போழுது, தமிழக இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் குழு ஒன்று அவரைச் சந்திக்க கொடைக்கானல் செல்கிறது.
இந்திரா காந்தி தன் பங்களாவின் வெளிப் புறத்தில் புல்வெளியில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
மாணவர் குழு அவரைச் சூழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறது.
இதை வேடிக்கை பார்க்க, மக்கள் கூட்டமாக, சுற்றுச்சுவருக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள். (அப்போது அவர் பிரதமர் இல்லை – ஓர் அமைச்சர் மட்டும்தான் – அதுவும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்)
மாணவர்கள், இந்தியை ஏற்கமுடியாது, ஆங்கிலம்தான் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்திரா கூறுகிறார்:
“Hindi is people’s language, But English is not”
அப்போது, இந்திரா வெளியிலிருக்கும் மக்களைச் சுட்டிக்காட்டி,
”Look here, I cannot talk to them in English” என்கிறார்.
சட்டென்று, ஒரு மாணவர்தலைவர் கூறுகிறார்: (Pat came the reply)
“You cannot talk to them in Hindi too, madam” என்கிறார்.
இந்திராகாந்தி வாயடைப்போனார் என்று அந்த பத்திரிகைச் செய்தி கூறியது.
பாருங்கள் : இந்தக் காணொளியை
https://www.youtube.com/watch?v=GWD6pT6e0RA
நன்றி – தேமொழி அம்மை – மின் தமிழ் மின்னிதழ்.
ப.பாண்டியராஜா